வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஸ்ரீ பாலா பீடம், நெமிலி



2002 ஆம் ஆண்டு புட்டபர்த்திக்கு செல்லும் பாக்கியம் அமைந்தது. அங்கு அன்று மாலை பஜனையின் போது அனைவரும் பாடி முடித்ததும், "பாலா திரிபுர சுந்தரி" என்ற அம்பிகையின் மேல் ஒரு இனிமையான பாடலை ஒரு அம்மையார் பாடினார். அதைக் கேட்டதும்,எனக்குள் அந்த அம்பிகையின் மீது ஆழ்ந்த பக்தி உருவானது. பாலா திரிபுர சுந்தரி என்னும் அம்பிகையை தரிசிக்கும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அப்போது தான் நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. நெமிலி எங்கு இருக்கிறது? என்று மனதுக்குள் நினைத்தபடியே "பாலா" எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் என்றாவது ஒருநாள் என்னை நெமிலிக்கு நீயே அழைத்துசெல் என்ற எனது கோரிக்கையை வைத்து விட்டு மறந்து போனேன். எப்படியாவது சில சந்தர்ப்பங்களில் நாம் எப்போது நெமிலிக்கு செல்ல முடியுமோ ? என்றும் நினைத்துக் கொள்வேன். சில தெய்வங்களை நாம் எத்தனை நினைத்தாலும் சென்று பார்த்து விட முடியாது. அவள் அங்கிருந்து அழைக்க வேண்டும். அதற்கும் நேரம் வர வேண்டுமல்லவா...நானும் காத்திருந்தேன். இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்தும் போயின.

பூர்வ புண்ணியத்தால் சிதம்பரத்தில் வசிக்கும் வாய்ப்பும் உண்டானது. அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் சித்தாந்த ரத்னம் அவர்கள் ஸ்ரீ பலமஹா திரிபுர சுந்தரி தேவிக்கு நவ வித அலங்காரங்கள் செய்து பெரிய பெரிய யாகங்கள் செய்து அந்த ஒன்பது நாட்களையும் பெரிய திருவிழாவாக எடுத்துக் கொண்டாடுவார்.அந்த பாலாவும் ஒரு சிறிய பெண் வடிவச் சிலா ரூபம் தான். அழகென்றால் அழகு..கொள்ளை அழகு. அந்த நவராத்திரி நிகழ்சிகளில் ஒன்பது நாட்களும் நானும் கலந்து கொண்டு பாலாஷ்டகம் படிப்பதுண்டு. அப்போது கூட அந்த பூஜைக்கு வந்த ஒருவர என்னிடம் கேட்டார்..."நீங்க நெமிலி போயிருக்கேள் தானே?" என்று..எனக்கு உடனே தூக்கி வாரிப் போட்டது. நான் போகவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனாலும் இது வரை அந்த ஊர் இங்கிருக்கிறது என்றே தெரியவில்லை...உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் போவது ? என்றும் கேட்டேன். அவர் சொன்னார்...அரக்கோணம் பக்கத்தில் என்று நினைக்கிறேன்...நானும் போனதில்லை...ஆனால் பாலா என்றாலே நெமிலி தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார் அந்த அம்மையார். இது நடந்தும் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது. இரண்டு ஆண்டுகள் முன்பு பாண்டிச்சேரியில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் நெமிலி பாலா என்ற ஒரு சின்ன போட்டோவை பெரிது பண்ணச் சொல்லி வாங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு சந்தோஷம். எனக்கும் ஒரு பிரதி வேண்டுமே என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் என்னிடம், மேடம்...அவர் ஒரு காப்பி தான் வேணும்னு சொன்னார்..நான் தவறாக இரண்டு பிரதி எடுத்து விட்டேன்...நீங்க ஒண்ணு எடுத்துகிறீங்களா? என்று கேட்டாள் . இதெல்லாம் 'அவளின்' அருள் என்று நினைத்துக் கொண்டே அந்தப் படத்தை வாங்கிக் கொண்டேன். மனசுக்குள் 'பாலா' என்கிட்டே வந்து விட்டாள் என்ற மகிழ்ச்சி இருந்தது. அத்தோடு இல்லாமல் அந்த புகைப்படத்தின் கீழே, 'ஸ்ரீ பாலா பீடம்' நெமிலி என்ற சரியான முகவரியும், கோவில் திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண் என்று அனைத்தும் எழுதி இருந்தது. அடுத்த நாளே அவர்களுக்குப் பேசி, சரியான வழியைத் தெரிந்து கொண்டேன். இருந்தும் செல்ல முடியவில்லை. இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தது. அதற்குள், ஸ்ரீ பாலா, திருக்கோயில் இரும்பை என்ற ஊரில் பாண்டிச்சேரி அருகில் ஒருவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார். அதற்குப் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பாக்கியமாக எண்ணினேன். அன்றைக்கும், நெமிலி செல்ல வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை அவள் முன்னே வைத்தேன். ஆழ் மனதின் ஆசைகள் என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன்...அனுபவத்தில் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இருந்தாலும், தெய்வங்கள் கண் பார்க்காமல் நமது எந்த ஆசையும் அத்துணை எளிதாக நிறைவேறி விடாது என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஜென்ம சம்பந்தம் இல்லாமல் நம்மால் ஒருவரிடமும் பேசி விட முடியாது..ஒரு இடத்திற்கும் சென்று விடவும் முடியாது. அது போன்ற ஓர் இடம் தான் ஸ்ரீ பாலா பீடம். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து அழுதால் அந்தக் குழந்தையின் அருட் கடாக்ஷம் கிடைக்கும்...வா என்று அழைப்பாள் ..தரிசனம் தருவாள்..நம்மோடு கூடவே வீடு வரை வருவாள் ..நம்மோடு தங்குவாள்...நமது நல்லது, கெட்டதை அவளே பார்த்துக் கொள்வாள். இது அனுபவ உண்மை.

நானும் நினைத்து நினைத்து இறுதியில் 1.2.2014 அன்று காலையில் எனக்கு நெமிலிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. எனது அக்காவின் பெண் காயத்ரியை கூட அழைத்துக் கொண்டேன். அவளுக்கு ஒன்பது வயது. இது வரை எந்த வெளியூருக்கும் அவளைத் தனியாக நான் எங்கும் அழைத்துச் சென்றதில்லை.

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலை விலும் அமைந்துள்ளது நெமிலி.

பாண்டிச்சேரியிலிருந்து நேராக காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து நெமிலிக்கு சென்றுவிட்டேன்.
ரொம்ப சின்ன கிராமம். அங்கிருந்து அரக்கோணம் பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்கள்.
அரக்கோணத்திலிருந்து அரைமணி நேரம் தான். இந்த கிராமத்தில் அடிக்கடி பஸ் வசதி கிடையாது. ஒரு ஆறு ஓடுகிறது. எங்கும் பசுமை நிறைந்த இடம் , சுத்தமான காற்று, ஊருக்குள் கொஞ்சம் நெருக்கடியாகத் தான் இருந்தது. நிறைய வீடுகள் ஒட்டி ஒட்டி இருந்தது.
நிறைய ஒட்டு வீடுகள். அதன் எதிரில் பெரிய மூன்று மாடிக் கட்டிடம்....ஸ்ரீ பாலா பீடம் என்று பளிச்சென்று எழுதி இருந்தது. வாசலில் பெரிய பெரிய கார்கள் வரிசையாக நின்றிருந்தன. தயக்கத்துடன் உள்ளே நுழைந்ததும், கேட்ட முதல் வார்த்தை...."கோவில் சார்த்தியாச்சு" நாங்க இப்போ வெளியூர் கிளம்பிண்டு இருக்கோம்....அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் கிளம்பிப் போனது. அடுத்த காரில் செல்பவர்கள் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். என்னுடன் இருந்த காயத்ரியைப் பார்த்தவர், குழந்தையோட வந்திருக்கேள்...திரும்ப அனுப்ப மனசு வரலை....நான் கோவிலைத் திறக்கறேன். ஒரு நிமிஷம் தான்...பார்த்துட்டு கிளம்புங்கோ....என்றவர் பெரிய மனசு பண்ணி நீங்க பக்கத்து கேட் வழியாக உள்ளே வாங்கோ..என்றார். மனசுக்குள் ஒரு குழந்தை தெய்வத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்னொரு குழந்தையால் முடிந்தது...என்ற எண்ணம் தானே வந்தது. உள்ளே செல்லும் வழியில் இருந்த குழாயில் கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே நுழைந்ததும்....ஜெகஜ் ஜோதியாக அலங்காரம் செய்து வைக்கப் பட்டிருந்த மண்டபம்....முற்றிலும் நவ ரத்தினங்கள் பள பளக்க முத்தால் அலங்காரம் செய்யப் பட்ட கட்டை விரல் அளவே இருந்த ஸ்ரீ பாலா விக்ரகம்...கண்டதும் கண்கள் பனித்தது . எத்தனை ஆண்டுகள் ஆசை...நிறைவேறிய நிஜ நிமிடங்கள். ஒரு அருள் கடாக்ஷம் ஆட்கொண்ட நிமிடங்கள். தெய்வத்திடம் கேட்க ஒன்றுமே இல்லை.....பார்த்துப் பார்த்து உள்வாங்கிக்கொண்டு கண்களால் படம் பிடித்துக் கொண்டு...மனத்தால் சரணாகதி அடைந்து ஒரு நிமிடம் தானே.....என்ற அவசரம் எனக்குள்.


அதற்குள்...இன்னொரு குடும்பமும், உள்ளே வர....ஒரு நிமிடம் என்பது அரை மணி நேரமானது.இதெல்லாம் கூட அம்பாளின் அனுக்கிரகம் தானே. வாங்கிக் கொண்டு சென்ற சாக்லேட், பூக்களை தட்டில் வைத்து விட்டு அந்த வாலைக் குமரி ஸ்ரீ பாலா வை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

"இங்கு வர வேண்டும் என்று நினைத்ததும் வந்து விட முடியாது...அவள் கூப்பிடணும். யாரை இன்று அவள் அழைப்பாளோ அவர்களுக்குத் தான் இங்கு என்ட்ரி...சிலர் பத்துப் பதினோரு வருடங்கள் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வர முடியாமல் போனவர்கள் இங்கு வந்ததும் சொல்வார்கள்...என்றதும்...என் மனதை அவர் பேசியது போலிருந்தது.

ஆறாவது தலைமுறையாக இப்போது இந்த நெமிலி ஸ்ரீ பாலா பீடம்....பூஜை செய்யப்படுகிறது.குழந்தை பாலா விரும்பிக் குடி கொண்ட இடம்...அவர் சொன்னதைக் கேட்க கேட்க மனசு பூரிப்பு அடைந்தது தான் நிஜம்.
கும்ப ராசிக்கார்கள் அவசியம் அங்கு சென்று தரிசிக்க வேண்டும்..என்பது விதியாகும் என்றும் சொன்னார்கள்.

பாலா_ உச்சரிக்கும்போதே உள்ளத்தில் உவகை பொங்கச் செய்யும் உன்னத திருநாமம்! 'பாலாதிரிபுரசுந்தரி' என்றும் 'ஸதா நவவர்ஷா' என்றும் வேதங்கள் போற்றும் இந்த தேவி, தன் திருக்கரங்களில் ஏடும் அட்ச மாலையும் ஏந்தி ஞான தேவதையாகக் காட்சி தருபவள்.
'பண்டாசுரன் எனும் அசுரனை வதைத்த பிறகு பாலா, தன் அன்னையான லலிதாம்பிகையிடமே ஐக்கியமானாள்!' என்று இந்த தேவியின் மகாத்மியங்களை விவரிக்கிறது லலிதோபாக்யானம். தன்னைத் தேடி வருவோருக்கு, கல்வி, செல்வம், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி என்று சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்தி இவள்!
உருவிலும் வயதிலும் சிறியவளாக புராணங்கள் குறிப்பிடும் இந்த தேவியை தரிசிக்க, வேலூர் மாவட்டம்- நெமிலி திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.

இந்தத் தலத்தில் பாலா எழுந்தருளியது எப்படி?!

வேலூர் மாவட்டம், தாங்கி எனும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி ஐயர். வேத வித்தகரான இவரின் மனைவி சாவித்திரி. ஒரு முறை, குடும்பச் சூழலின் காரணமாக ராமசுவாமி ஐயர் ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. எனவே, மனைவி மற்றும் குழந்தைகள் மூவருடனும் நெமிலியை வந்தடைந்தார் ராமசுவாமி ஐயர்.
அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், 'ஒரு வீடு கிடைக்கும் வரை, இங்கேயே தங்கலாம்' என்ற முடிவுடன் உள்ளே நுழைய முற்பட்டனர். ஆனால் திண்ணையில் அமர்ந்திருந்த சிலர், ''இங்கேயா தங்கப் போகிறீர்கள்? இது, பேய்கள் நடமாடும் இடமாயிற்றே! வேண்டாம், இங்கிருந்து போய் விடுங்கள்!'' என்று எச்சரித்தனர். மௌனமாக கேட் டுக் கொண்ட ராமசுவாமி, குடும்பத்துடன் அந்தச் சத்திரத்திலேயே தங்கினார்.


உள்ளே நுழைந்ததும் சாவித்திரி அம்மாள், சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்தார். இரவு வேளை வந்தது. அனைவரும் உறங்கினர். ஆனால் ராமசுவாமி, விடிய விடிய சூக்தம், புருஷ சூக்தம் ஆகிய வற்றை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இதனால் தீய சக்திகள் அங்கிருந்து விலகின.பொழுது விடிந்தது. அசம்பாவிதம் எதுவும் நேராமல், ராமசுவாமியின் குடும்பம் பாதுகாப்பாக இருந்ததைக் கண்ட ஊரார் வியந்தனர். 'இவர்களி டம் தெய்வ சக்தி குடிகொண்டுள்ளது!' என்று கருதிய ஊர்மக்கள் மளிகைப் பொருட்கள் உட்பட பல்வேறு உதவிகளையும் செய்து தந்தனர். ராமசுவாமியின் குடும்பம் மகிழ்ச்சியுடன் புது வாழ்க்கையை ஆரம்பித்தது.
காலங்கள் ஓடின. தன் மூத்த மகன் வீரராகவனுக்கும் இரண்டாவது மகன் சுப்ரமணியனுக்கும் திருமணம் செய்து வைத்தார் ராமசுவாமி. இவர்கள் இருவரும் தங்கள் தந்தையைப் போலவே வேதங்களைக் கற்று, இறை சிந்தனையுடன் வாழ்ந்து வந்தனர்.
அந்தக் குடும்பத்துக்கு அருள்புரிய திருவுளம் கொண்டாள் பாலாதிரிபுரசுந்தரி.


ஒரு நாள் இரவு! சுப்ரமணியனின் கனவில் சுமார் ஒன்பது வயதுள்ள சிறுமி தோன்றினாள். அவள், ''அன்னை ராஜராஜேஸ்வரியின் அறிவுரைப்படி, பாலாவாகிய நான் ஆற்றில் மிதந்து வருகிறேன். என்னை, உனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே அமர்த்திக் கொள்'' என்று அருளி மறைந்தாள்.


விழித்தெழுந்தார் சுப்ரமணி. அன்னை பராசக்தியே பாலாதிரிபுராசுந்தரியாக தனது இல்லம் தேடி வரப் போகிறாள் என்பதை எண்ணி பேரானந்தம் அடைந்தார்! விடிந்ததும் தனது கனவு பற்றி குடும்பத்தாரிடம் விவரித்தார் சுப்ரமணியன். அத்துடன், உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குசஸ்தலை ஆற்றுக்குச் சென்றார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தனது கனவில் வந்த சிறுமியைத் தேடினார் சுப்ரமணி. ஆனால், வெகுநேரம் ஆகியும் சிறுமி கிடைத்தபாடில்லை. ஒரு கட்டத்தில், சுப்ரமணியன் ஆற்றில் மூழ்கும் நிலை! உடன் வந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள்... எவரும் துணைக்கு வராத நிலையில் தனியாகப் புறப்பட்டார் சுப்ரமணி. குசஸ்தலை நதிக்குச் சென்று தனது தேடுதலைத் தொடர்ந்தார். இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.


மூன்றாம் நாள்! மிகுந்த நம்பிக்கையுடன் ஆற்றில் மூழ்கித் தேடிக் கொண்டிருந்தார் சுப்ரமணியன். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் பல பாகங்களுக்கும் சென்று தேடியும் எதுவும் புலப்படவில்லை..
எனினும் நம்பிக்கை இழக்காத சுப்ரமணி அன்னையைப் பிரார்த்தித்த வாறு... ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார். அப்போது அவர் கரங்களில் சுண்டுவிரல் அளவிலான சின்னஞ் சிறிய விக்கிரகம் தவழ்ந்தது! சிற்றாடை இடை உடுத்தி மின்னலெனச் சிரிக்கும் பாவனையுடன் காட்சியளிக்கும் அந்த விக்கிரகத்தை உற்றுக் கவனித்த சுப்ரமணியத்தின் முகத்தில் மலர்ச்சி.
'தனது கனவில் சிறுமியாக வந்த பாலாதிரிபுர சுந்தரியே, சிறு விக்கிரமாக தன் கரங்களில் தவழ் கிறாள்!' என்பதை உணர்ந்தார். பரவசம் பொங்க அந்த சிறிய விக்கிரகத்துடன் வீடு வந்து சேர்ந்தார். ஆம், சுப்ரமணியின் இல்லத்தையே கோயிலாகக் கருதி அங்குக் குடியேறினாள் பாலா.


நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில்... நெமிலியில் பாலா குடியேறிய செய்தி கிராமம் முழுவதும் பரவியது. பிறகென்ன?! நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கிராமத்தாரது உதவியுடன் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டன. அனைவரும் பாலாதிரிபுர சுந்தரியை வணங்கிச் சென்றனர். விரைவில், அனைவருக்கும் வரங்களை வாரி வழங்கும் நெமிலி பாலாவின் மகிமை எங்கும் பரவியது. சுப்ர மணியனின் வீடு பாலா பீடமானது.
இப்படி, கலியுகத்தில் பாலா தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார் கருவூர்ச் சித்தர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர்... 30 கண்ணிகள் கொண்ட தனது, 'கருவூரார் பூஜாவிதிகள்' என்ற நூலில், 'ஆதியந்தம் வாலையவன் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு! சோதியந்த நடுவீடு பீடமாகி...' _ எனத் துவங்கும் வரிகளில் பாலா மற்றும் பாலா பீடம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கருவூராரின் வாக்குப் பலித்தது போலும்! ஆம், அகிலம் காக்கும் அன்னையாக நெமிலியில் இன்றும் கோலோற்றுகிறாள் பாலா.
நாமும் அவளை தரிசிக்கலாமா...?

நெமிலி கிராமத்தில் உள்ள பெரிய கடைத் தெருவில் இருந்து பிரியும் சத்திரத் தெருவில் அமைந்திருக்கிறது பாலாவின் ஆலயம். இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. முதல் வாயில் வழியாக பாலா குடிகொண்டிருக்கும் உள்கூடத்துக்குச் செல்லலாம். இரண்டாவது வாயில், பாலாவை ஆராதிக்கும் குடும்பத்தினர் வசிக்கும் இல்லத்துக்குரியது. நாம் முதல் வாயில் வழியாக நுழைகிறோம்.
முதலில் நீண்டதோர் தாழ்வாரம். இங்கு வலப்புறத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாயைத் திறந்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து பெரிய கூடம். இங்குதான், மணிமண்டபம் ஒன்றில் கொலுவீற்றிருக்கிறாள் பாலா. மணிமண்டபத்தின் எதிரில்


இருக்கும் அகன்ற பகுதியில் நாம் அமரவேண்டும்.


நமக்கு எதிரில் பெரிய திரை ஒன்று தொங்கவிடப் பட்டுள்ளது. அங்கு, நம் செவிகளில் விழும் பாலா திரிபுர சுந்தரியைப் போற்றும் பக்திப் பாடல்கள் நம் சிந்தையை நிறைக்கின்றன.


சில நிமிடங்களில் திரை விலக்கப் பட... அழகிய சிறு பீடத்தில் விரல் அளவேயான திருவடிவில் காட்சி தருகிறாள் அழகு பாலா!
இந்த அம்பிகை, நவ சக்திகள் (த்ரிபுரா, த்ரிபுரேசி, த்ரிபுர சுந்தரி, த்ரிபுர வாசினி, த்ரிபுரா, த்ரிபுரமாலினி, த்ரிபுர ஸித்தா, த்ரிபுராம்பா, மகா திரிபுர சுந்தரி), நவ யோகங்கள் மற்றும் நவ சக்கரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கூறுவர்.
பாலாவின் மகாத்மியங்களுக்கு எல்லையே இல்லை என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.
ஒருமுறை, பாலாவுக்கு மண்டபம் எழுப்புவதற்காக நிதி திரட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது, கவிஞர் எழில்மணியின் (ராமசுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர்) தாயாரது கனவில் தோன்றிய பாலா, 'நிதி கேட்டு அலையாதீர்கள். உங்கள் குடும்பம் மட்டுமே இதைச் செய்யட்டும்!' என்று அருளினாளாம். அதன்படி இவர்களே மண்டபத்தை எழுப்பினராம். இங்கு, உண்டியல் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது!


காஞ்சி மகாப் பெரியவாள், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி ஸ்வாமிகள், வள்ளிமலை சுவாமிகள், மயிலை குருஜி சுந்தராம ஸ்வாமிகள், கொடுவிலார்பட்டி சச்சிதானந்த பரஞ்ஜோதி சுவாமிகள் என்று மகான்கள் பலரும் இங்கு வந்து பாலாவை தரிசித்துள்ளனர். காஞ்சிப் பெரியவாள், நெமிலி சந்நிதியில் சில நாட்கள் முகாமிட்டு சந்திரமௌலீசுவரர் பூஜைகள் மேற் கொண்டுள்ளாராம்!


ஆண்டுதோறும் பாலாவின் சந்நிதியில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நவ ராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு பிரம் மோற்சவம் என்றே கூறலாம். பிரதமை திதியில் கலச ஸ்தாபனம் செய்வதுடன் ஒன்பது நாட்களும்... காலையில் மஹன்னியாச பூர்வக ருத்திராபிஷேகம், சூரிய நமஸ்காரம், தேவி பாகவதம், சப்தசதி பாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியன நடைபெறும். மாலை வேளையில்- குங்குமார்ச்சனை நடைபெறும். ஒன்பது நாட்களும் மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் அலங்காரத்தில் காட்சி தருகிறாள் அன்னை. நவமி அந்தியத்தில் நிகழும் 'மகிஷாசுர வதம்' வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். விஜயதசமியன்று இங்கு நடைபெறும் அன்னதானம் வெகுப் பிரசித்தி.

விழா நாட்களில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். டாக்டர் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உட்பட முக்கிய கலைஞர்கள் பலரது இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றுள்ளன! நவராத்திரி தவிர, புத்தாண்டு, மாதத்தின் முதல் ஞாயிறு, தை மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகள் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நெமிலி பாலா பீடம், தினமும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். சுப்ரமணியனின் கைகளில் கிடைத்த குழந்தை பாலாவை இப்போதும் அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரே பூஜித்து வருகின்றனர்.
பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற் கொள்வதால், பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்.


"தேன் பாகும் சக்கரையும் சுவைத்தால் தான் தித்திக்கும்
தென்பழனி முருகன் பெயரைச் சொன்னாலே தித்திக்கும் '

'தணிகை மழைப் படிகள் எல்லாம்
திருப்புகழ் பாடும்..! அங்கே தன்னை மறந்து
மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்.."

இந்த முருகன் பாடல்களை கேட்டு தனை மறக்காத முருக பக்தர்கள் தமிழ் நாட்டில் யாருமே இருந்திருக்க முடியாது. அத்தனைப் பிரபலமான பாடல்களை நமது திரையிசைப் பாடகர்களான டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலிலும், இரண்டாவது பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலிலும் கேட்டு மகிழ்ந்திருப்போம்.
என்ன...தலைப்பிற்கும் ஆரம்பத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைப்பது புரிகிறது.
இந்த இரண்டு பாடலையும்...இன்னும் இது போலப் பல பிரபலமான முருகன் பாடல்களை எழுதியவர் எழில்மணி, நெமிலி. இது அநேகமாக நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும் விஷயம் தான். அதில் விசேஷமாக ஒன்றும் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற முருகன் பாடல்களையே அதிகம் ரசித்து விரும்பிக் கேட்பேன். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்..." இந்தப் பாடலின் வரிகளில் அந்தச் சின்ன வயதிலேயே மிகுந்த பற்று கொண்டவள்.

இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் தான் இந்த பீடத்தின் நெமிலி எழில்மணி என்பவர். ஸ்ரீ பாலாவின் திருவருளால் தான் நமக்கும் அத்தனை இனிய பாடல்கள் கிடைத்தது என்றே சொல்லலாம்.


தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,பல வருடங்களாய் மனத்தில் தோன்றிய எண்ணத்தை குழந்தை பாலா நிறைவேற்றி வைத்த மகிழ்வும் நிறைவும் என்னோடு வந்தது.

நன்றி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஹைதராபாத்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

பூமிநாதசுவாமி கோயில் , திருச்சுழி


 
 
 

திருச்சுழி என்ற பெயரை கேட்க நேர்ந்தால்..நம்மையும் அறியாமல் நம் மனம் "பகவான் ஸ்ரீ ரமணர்" பிறந்த இடமல்லவா அது? என்று நினைக்கும் அல்லவா?. பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீட்டுக்கு மிகவும் அருகில் அதுவும் ஒரு திருப்பத்தின் எதிரிலேயே அமைந்து அருள்பாலிக்கும் பூமிநாத சுவாமி ஆலயம். மிக மிகப் பழமையானது. இந்தப் புனிதத் தலத்தில் அமைந்துள்ள கோயிலின் அருமையை இன்றைய தினமான மஹா சிவராத்திரி எனும் புனித நன்னாளில் ஒரு கட்டுரை வாயிலாக தெரியப் படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சுழி என்ற இந்தச் சின்ன ஊர் பிரபலமாக இருந்தாலும் கூட இந்தக் காலத்திலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான கிராமமாகவே 'திருச்சுழி'விளங்குகிறது .சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டவும். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்"' ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. நாளடைவில் 'திருச்சுளி' என்று மாறி தற்போது அப்படியே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது..

மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்துகள் நிறையவே இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து காரில் செல்வதானால் ஒரு மணி நேரத்தில் கோவிலைச் சென்றடையலாம்.

பூமிநாத சுவாமி கோயிலும், பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீடும் மட்டும் தான் இந்தக் கிராமத்தின் இரண்டு கண்கள். அமைதியான கோவிலின் நுழை வாயிலிலிருந்து உள்ளே செல்லச் செல்ல பழமையின் சாநித்தியம் நம்மைச் சூழ்ந்து கொள்வதை மனத்தால் உணர முடிகிறது. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தாராம்.


இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது..சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர். பராக்கிரம பாண்டியன் காலத்திய கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் கருவறை அவனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. பிற்காலத்தில் நகரத்தார், கருவறை நீலங்கலான பிற பகுதிகளைப் பிரித்துப் பல நிலைகளில் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயில் கோபுரத்தின் எதிரே கோயிலின் குளம் பெரியதாக மதில் சுவற்றோடு இருந்தாலும் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதைப் பார்க்க மனம் ஏனோ "சீர்காழி கோவிலை" ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தது. அங்கு கோவிலுக்குப் பாதி பெரிய குளம். குளம் நிரம்பி வழிய அலை அலையாய் நெளிந்து நிறைத்த நீரும், நீந்தும் மீன்களும் கண்களுக்கு விருந்தாக இருந்ததை மறக்க முடியவில்லை.அந்தக் கோவிலின் தல வரலாறும், திருச்சுழி கோவிலின் தல வரலாறும் ஒன்றோடு ஒன்று இணைந்தது போலத் தான் இருந்தது.. பிரளய காலத்தில் சீர்காழியில்.'ஈசன்' தோணியப்பராக எழுந்தருளி இருப்பார்.

திருச்சுழி என்னும் இந்தப் புண்ணிய தலத்தில் இறைவர் அருள்மிகு திருமேனிநாதர் பூமிநாதசுவாமி , இறைவி.சகாயவல்லி, துனைமாலை நாயகியும் ஆவார். பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் ஒன்றான பெருமை கொண்டது. இந்தத் தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.. முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் தற்போது கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைமை இன்னும் மாறாமலே இருக்கிறது. அழகழகான அனேக சிற்பங்கள் காலத்தைக் கடந்தும் கலையைச் சொல்கிறது.ஒரு தூணில் அழகான ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.சண்டேசுவரருக்கு எதிரில் மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கருங்கல்லில் குழாய் அமைந்திருப்பது காணத்தக்கது. பிராகாரம் விலாசமானது. மேற்புறத்தில் சித்திர வேலைப்பாடுகள் அழகாக காணப் படுகிறது.

ஏழுநிலை கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது/ கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கி விட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராஜர் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராஜர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.அருமையாக கிடைத்தது.

சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துணைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் சாநித்தியம் ஒவ்வொரு நிமிடத்திலும் உணர முடிகிறது.

சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன..

கோவிலின் சிறப்பு :மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத பெருமை இந்தக் கோவிலுக்கு உள்ளது என்பார்கள். அதாவது இறந்தவர்களுக்கு இந்த ஒரு கோவிலில் மட்டுமே அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவார்கள். அப்படி இறந்த நம் உறவுகளுக்கு அர்ச்சனை செய்வித்து மோட்ச தீபம் ஏற்றினால் உடனே அவரது பாவங்கள் கழிக்கப்பட்டு 21 பிறவியை அவர்கள் கடந்து விடுவார்களாம். யார் அவர்களுக்காக அர்ச்சனை செய்கிறாரோ அவர் முதலில் தனக்கு வேண்டப்பட்ட இறந்தவர்களுக்கு முதலில் அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, அதன் பிறகு மீண்டும் இன்னொரு முறை சென்று தனது பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாம். 21 ஜென்மங்களைக் கடந்து போவது என்பது பெரிய வரம் அல்லவா? இது மட்டுமா...? இந்தக் கோயிலில் கால் பட்டால் வேண்டிக்கொள்ளும் போது நிலம் வேண்டுவோர், வீடு வேண்டுவோர், வீடு கட்டுவதற்கு முயற்சி செய்பவர் அனைவருக்கும் எந்தத் தடங்கலும் இன்றி நினைத்தது போலக் நடக்குமாம்.. இதுவும் ஐதீகம். சமீபத்தில் இசையமைப்பாளர் திருவாளர். இளையராஜா அவர்களின் மகள் பாடகி பவதாரிணியின் நடன அரங்கேற்றம் இந்தக் கோயிலில் வைத்து நடைபெற்றது.

இதெல்லாவற்றிற்கும் மேலாக ,இந்தக் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு தானே அமையுமாம்.நம்மோடு கூடவே வாழ்ந்தவர் திடீரென்று இறந்து விட்டால் அந்த சோகத்தைத் தாங்கி வாழும் நிலை வரும். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து விட்டால் நம் மனத்துக்குள்ளும் ஒரு வித நிம்மதி ஏற்படுவது உறுதி.இது யாருக்கு வாய்க்குமோ அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்.

நான் பல தடவைகள் திருச்சுழி சென்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு இந்த விஷயம் எதுவுமே அப்போது அறிந்திராத படியால் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. இந்த மாதம் மீண்டும் செல்லும் வாய்ப்பு கிட்டியது. மேலும் இது போன்ற விஷயங்களை அங்கிருப்பவர்கள் சொல்லக் கேட்டதும், எனது தந்தை, எனது மாமியார், மாமனார் என்று மோட்ச தீபங்கள் ஏற்ற வைத்து அர்ச்சனை செய்து வந்தேன். அதுவே ஒரு நிம்மதியான அனுபவமாக இருந்தது வியப்பு.

கோவிலிலிருந்து வெளியேறி வழக்கம் போலவே நேராக பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த இல்லத்திற்கு சென்றால், அங்கு எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு வருடங்கள் முன்பு இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு முழுதுமாக இடிக்கப்பட்டு புத்தம் புதிதாக பள பள கிரானைட் கற்களால் இழைத்து அந்த கிராமத்திற்கும் அந்த வீட்டிற்கும சம்பந்தமே இல்லாதது போல ரொம்ப ரொம்ப கம்பீரமாக அந்தப் பெரிய நவீன பாணியில் கட்டப் பட்ட வீட்டுக்குள் நுழைந்ததும், வித்தியாசமான உணர்வு எழுந்ததில், அங்கிருந்த அந்த இல்லத்தைப் பராமரிப்பவரிடம், "ஏன் மாமி....? அந்தப் பழைய வீடு தான் அழகு...அந்த வீட்டுக்குள் நுழையும் போது இருந்த சாநித்தியமும், ஒரு பௌயமும் இந்த வீட்டுக்குள் நுழையும் போது கிடைக்கவில்லையே என்றேன்.


அந்த அறை அப்படியே தான் இருக்கு..என்றவர், உள்ளே வாங்கோ என்றார். புத்தம் புதிய வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு மட்டுமே என்னுள் எழுந்தது. அனால் அதே பகவான் ரமணரின் படங்கள். அவரது தாய் அழகம்மையின் படங்கள்..ஆள் உயரக் குத்துவிளக்கு. கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள்..காலை வழுக்கும் மிளிரும் தரை, பாலீஷ் போட்டுப் பள பள க்கும் கதவுகள்...ஜன்னல்கள்...! இதையெல்லாம் மனம் ஏற்காமல்....ஐந்து வருடங்கள் முன்பு வந்த போது இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு, காரை பெயர்ந்த சுவர்கள், சொர சொர வென்று காலில் நெருடும் சிமெண்ட் தரை....பழங்கால இரும்புப் பூண் போட்ட கதவு....அதற்குள் ரமணரின் இதே படங்கள்.

சில இடங்களில் புதுமையை மனம் ஏற்க மறுக்கிறதே....ஏனோ? எனக்குள் கேட்டுக் கொண்டவளாக, அன்று தொட்டுப் பார்த்து சிலிர்த்த சுவர்கள் இன்று வண்ண டிஸ்டெம்பரில் விரல் வைக்கவே தயக்கத்தை உண்டு செய்தது தான் உண்மை. இருந்தும், தியானம் செய்ய அமர்ந்த போது அதே அமைதி....முன்பிருந்த அதே ஆன்மீக உணர்வுகள் மேலோங்கியது. கொண்டு சென்ற நல்லெண்ணையை விளக்கில் ஊற்றி விட்டு, திரியை சரி செய்து விளக்கேற்றி, பகவான் ரமணருக்கு மாலையைப் போட்டு அழகு பார்த்து, உள்ளே சென்று அவர் பிறந்த அறையைத் திறக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதும், அவர்களும் திறந்து விட்டார்கள்.

பகவான் அவதரித்த அறை.உள்ளே நுழையும்போது உடலில் சிலிர்ப்பு, கம கம வென்ற சந்தன மணம் .. அவர் அணிந்த பாதுகை..தொட்டுத் தொழுததும், இது கனவா.?..நிஜமா ?என்று என்னையே கேட்டுக் கொண்டேன். மௌனத்தில் கரைந்தது மனமும், ஷணமும்..


தியானம் முடித்து வெளியே வந்ததும், "மாமி....இந்த வீட்டை புதிசாகக் கட்டியதும், நம்ம இசைஞானி இளையராஜா அவர்கள் வந்தார்களா? என்று என்னையும் மீறி கேட்டுவைத்தேன்.

ஒ.....அவர் வராமல் இருப்பாரா? மூன்று தடவை வந்து சென்றார். இதோ நீ உட்கார்ந்த இடத்தில் தான்...இங்கு தான் உட்கார்ந்தார்....அவர்கள் சொன்னதும், மீன்றும் எனது கண்கள் அந்த இடத்தை நோக்கியது.

யார்கிட்டயும் சொல்லாதேங்கோ...நான் நாளைக்கு வந்துட்டு இருக்கேன்னு..சொல்லி ஃபோன் செய்வார். நானும் யாருக்கும் சொல்ல மாட்டேன். ஆனாலும்....எப்படியே அவரோட காரை கண்டு பிடிச்சுண்டு ஒரு நூறு பேராவது சேர்ந்துடுவாளாக்கும் , நான் என்ன பண்ண முடியும்..? என்னால முடிஞ்சது சுடச் சுட கேசரி கிளறிக் கொடுத்தேன்...சாப்டார்...என்று சொன்னார் அந்த மாமி.பின்பு வீட்டுக்குப் பின் புரத்திலிருந்த மருதாணிச் செடியிலிருந்து நிறைய மருதாணி கொம்பொடு எடுத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்தார்கள். மனம் முழுக்க மகிழ்வோடு எனது இரண்டு தோழிகளுடன் நானும்.சேர்ந்து மதுரையை நோக்கி பிரயாணித்தோம். மனத்தின் அமைதியை எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த ‘ஸ்ரீ ரமண நாத அமுதம்’ என்ற குறுந்தகடு சுழல இசைஞானியின் பாடல்கள் மென்மையாக ஒலிக்க , ஒரு நிறைவான பயணத்தை விவரிக்க வார்த்தைகளைத் தேடாமல் கண்களை மூடிக்கொண்டே இசையில் தொலைந்தேன்..

நன்றி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.

ஹைதராபாத்.