வியாழன், 27 பிப்ரவரி, 2014

பூமிநாதசுவாமி கோயில் , திருச்சுழி


 
 
 

திருச்சுழி என்ற பெயரை கேட்க நேர்ந்தால்..நம்மையும் அறியாமல் நம் மனம் "பகவான் ஸ்ரீ ரமணர்" பிறந்த இடமல்லவா அது? என்று நினைக்கும் அல்லவா?. பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீட்டுக்கு மிகவும் அருகில் அதுவும் ஒரு திருப்பத்தின் எதிரிலேயே அமைந்து அருள்பாலிக்கும் பூமிநாத சுவாமி ஆலயம். மிக மிகப் பழமையானது. இந்தப் புனிதத் தலத்தில் அமைந்துள்ள கோயிலின் அருமையை இன்றைய தினமான மஹா சிவராத்திரி எனும் புனித நன்னாளில் ஒரு கட்டுரை வாயிலாக தெரியப் படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சுழி என்ற இந்தச் சின்ன ஊர் பிரபலமாக இருந்தாலும் கூட இந்தக் காலத்திலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான கிராமமாகவே 'திருச்சுழி'விளங்குகிறது .சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டவும். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்"' ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. நாளடைவில் 'திருச்சுளி' என்று மாறி தற்போது அப்படியே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது..

மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்துகள் நிறையவே இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து காரில் செல்வதானால் ஒரு மணி நேரத்தில் கோவிலைச் சென்றடையலாம்.

பூமிநாத சுவாமி கோயிலும், பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீடும் மட்டும் தான் இந்தக் கிராமத்தின் இரண்டு கண்கள். அமைதியான கோவிலின் நுழை வாயிலிலிருந்து உள்ளே செல்லச் செல்ல பழமையின் சாநித்தியம் நம்மைச் சூழ்ந்து கொள்வதை மனத்தால் உணர முடிகிறது. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தாராம்.


இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது..சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர். பராக்கிரம பாண்டியன் காலத்திய கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் கருவறை அவனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. பிற்காலத்தில் நகரத்தார், கருவறை நீலங்கலான பிற பகுதிகளைப் பிரித்துப் பல நிலைகளில் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயில் கோபுரத்தின் எதிரே கோயிலின் குளம் பெரியதாக மதில் சுவற்றோடு இருந்தாலும் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதைப் பார்க்க மனம் ஏனோ "சீர்காழி கோவிலை" ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தது. அங்கு கோவிலுக்குப் பாதி பெரிய குளம். குளம் நிரம்பி வழிய அலை அலையாய் நெளிந்து நிறைத்த நீரும், நீந்தும் மீன்களும் கண்களுக்கு விருந்தாக இருந்ததை மறக்க முடியவில்லை.அந்தக் கோவிலின் தல வரலாறும், திருச்சுழி கோவிலின் தல வரலாறும் ஒன்றோடு ஒன்று இணைந்தது போலத் தான் இருந்தது.. பிரளய காலத்தில் சீர்காழியில்.'ஈசன்' தோணியப்பராக எழுந்தருளி இருப்பார்.

திருச்சுழி என்னும் இந்தப் புண்ணிய தலத்தில் இறைவர் அருள்மிகு திருமேனிநாதர் பூமிநாதசுவாமி , இறைவி.சகாயவல்லி, துனைமாலை நாயகியும் ஆவார். பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் ஒன்றான பெருமை கொண்டது. இந்தத் தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.. முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் தற்போது கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைமை இன்னும் மாறாமலே இருக்கிறது. அழகழகான அனேக சிற்பங்கள் காலத்தைக் கடந்தும் கலையைச் சொல்கிறது.ஒரு தூணில் அழகான ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.சண்டேசுவரருக்கு எதிரில் மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கருங்கல்லில் குழாய் அமைந்திருப்பது காணத்தக்கது. பிராகாரம் விலாசமானது. மேற்புறத்தில் சித்திர வேலைப்பாடுகள் அழகாக காணப் படுகிறது.

ஏழுநிலை கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது/ கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கி விட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராஜர் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராஜர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.அருமையாக கிடைத்தது.

சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துணைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் சாநித்தியம் ஒவ்வொரு நிமிடத்திலும் உணர முடிகிறது.

சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன..

கோவிலின் சிறப்பு :மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத பெருமை இந்தக் கோவிலுக்கு உள்ளது என்பார்கள். அதாவது இறந்தவர்களுக்கு இந்த ஒரு கோவிலில் மட்டுமே அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவார்கள். அப்படி இறந்த நம் உறவுகளுக்கு அர்ச்சனை செய்வித்து மோட்ச தீபம் ஏற்றினால் உடனே அவரது பாவங்கள் கழிக்கப்பட்டு 21 பிறவியை அவர்கள் கடந்து விடுவார்களாம். யார் அவர்களுக்காக அர்ச்சனை செய்கிறாரோ அவர் முதலில் தனக்கு வேண்டப்பட்ட இறந்தவர்களுக்கு முதலில் அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, அதன் பிறகு மீண்டும் இன்னொரு முறை சென்று தனது பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாம். 21 ஜென்மங்களைக் கடந்து போவது என்பது பெரிய வரம் அல்லவா? இது மட்டுமா...? இந்தக் கோயிலில் கால் பட்டால் வேண்டிக்கொள்ளும் போது நிலம் வேண்டுவோர், வீடு வேண்டுவோர், வீடு கட்டுவதற்கு முயற்சி செய்பவர் அனைவருக்கும் எந்தத் தடங்கலும் இன்றி நினைத்தது போலக் நடக்குமாம்.. இதுவும் ஐதீகம். சமீபத்தில் இசையமைப்பாளர் திருவாளர். இளையராஜா அவர்களின் மகள் பாடகி பவதாரிணியின் நடன அரங்கேற்றம் இந்தக் கோயிலில் வைத்து நடைபெற்றது.

இதெல்லாவற்றிற்கும் மேலாக ,இந்தக் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு தானே அமையுமாம்.நம்மோடு கூடவே வாழ்ந்தவர் திடீரென்று இறந்து விட்டால் அந்த சோகத்தைத் தாங்கி வாழும் நிலை வரும். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து விட்டால் நம் மனத்துக்குள்ளும் ஒரு வித நிம்மதி ஏற்படுவது உறுதி.இது யாருக்கு வாய்க்குமோ அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்.

நான் பல தடவைகள் திருச்சுழி சென்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு இந்த விஷயம் எதுவுமே அப்போது அறிந்திராத படியால் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. இந்த மாதம் மீண்டும் செல்லும் வாய்ப்பு கிட்டியது. மேலும் இது போன்ற விஷயங்களை அங்கிருப்பவர்கள் சொல்லக் கேட்டதும், எனது தந்தை, எனது மாமியார், மாமனார் என்று மோட்ச தீபங்கள் ஏற்ற வைத்து அர்ச்சனை செய்து வந்தேன். அதுவே ஒரு நிம்மதியான அனுபவமாக இருந்தது வியப்பு.

கோவிலிலிருந்து வெளியேறி வழக்கம் போலவே நேராக பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த இல்லத்திற்கு சென்றால், அங்கு எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு வருடங்கள் முன்பு இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு முழுதுமாக இடிக்கப்பட்டு புத்தம் புதிதாக பள பள கிரானைட் கற்களால் இழைத்து அந்த கிராமத்திற்கும் அந்த வீட்டிற்கும சம்பந்தமே இல்லாதது போல ரொம்ப ரொம்ப கம்பீரமாக அந்தப் பெரிய நவீன பாணியில் கட்டப் பட்ட வீட்டுக்குள் நுழைந்ததும், வித்தியாசமான உணர்வு எழுந்ததில், அங்கிருந்த அந்த இல்லத்தைப் பராமரிப்பவரிடம், "ஏன் மாமி....? அந்தப் பழைய வீடு தான் அழகு...அந்த வீட்டுக்குள் நுழையும் போது இருந்த சாநித்தியமும், ஒரு பௌயமும் இந்த வீட்டுக்குள் நுழையும் போது கிடைக்கவில்லையே என்றேன்.


அந்த அறை அப்படியே தான் இருக்கு..என்றவர், உள்ளே வாங்கோ என்றார். புத்தம் புதிய வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு மட்டுமே என்னுள் எழுந்தது. அனால் அதே பகவான் ரமணரின் படங்கள். அவரது தாய் அழகம்மையின் படங்கள்..ஆள் உயரக் குத்துவிளக்கு. கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள்..காலை வழுக்கும் மிளிரும் தரை, பாலீஷ் போட்டுப் பள பள க்கும் கதவுகள்...ஜன்னல்கள்...! இதையெல்லாம் மனம் ஏற்காமல்....ஐந்து வருடங்கள் முன்பு வந்த போது இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு, காரை பெயர்ந்த சுவர்கள், சொர சொர வென்று காலில் நெருடும் சிமெண்ட் தரை....பழங்கால இரும்புப் பூண் போட்ட கதவு....அதற்குள் ரமணரின் இதே படங்கள்.

சில இடங்களில் புதுமையை மனம் ஏற்க மறுக்கிறதே....ஏனோ? எனக்குள் கேட்டுக் கொண்டவளாக, அன்று தொட்டுப் பார்த்து சிலிர்த்த சுவர்கள் இன்று வண்ண டிஸ்டெம்பரில் விரல் வைக்கவே தயக்கத்தை உண்டு செய்தது தான் உண்மை. இருந்தும், தியானம் செய்ய அமர்ந்த போது அதே அமைதி....முன்பிருந்த அதே ஆன்மீக உணர்வுகள் மேலோங்கியது. கொண்டு சென்ற நல்லெண்ணையை விளக்கில் ஊற்றி விட்டு, திரியை சரி செய்து விளக்கேற்றி, பகவான் ரமணருக்கு மாலையைப் போட்டு அழகு பார்த்து, உள்ளே சென்று அவர் பிறந்த அறையைத் திறக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதும், அவர்களும் திறந்து விட்டார்கள்.

பகவான் அவதரித்த அறை.உள்ளே நுழையும்போது உடலில் சிலிர்ப்பு, கம கம வென்ற சந்தன மணம் .. அவர் அணிந்த பாதுகை..தொட்டுத் தொழுததும், இது கனவா.?..நிஜமா ?என்று என்னையே கேட்டுக் கொண்டேன். மௌனத்தில் கரைந்தது மனமும், ஷணமும்..


தியானம் முடித்து வெளியே வந்ததும், "மாமி....இந்த வீட்டை புதிசாகக் கட்டியதும், நம்ம இசைஞானி இளையராஜா அவர்கள் வந்தார்களா? என்று என்னையும் மீறி கேட்டுவைத்தேன்.

ஒ.....அவர் வராமல் இருப்பாரா? மூன்று தடவை வந்து சென்றார். இதோ நீ உட்கார்ந்த இடத்தில் தான்...இங்கு தான் உட்கார்ந்தார்....அவர்கள் சொன்னதும், மீன்றும் எனது கண்கள் அந்த இடத்தை நோக்கியது.

யார்கிட்டயும் சொல்லாதேங்கோ...நான் நாளைக்கு வந்துட்டு இருக்கேன்னு..சொல்லி ஃபோன் செய்வார். நானும் யாருக்கும் சொல்ல மாட்டேன். ஆனாலும்....எப்படியே அவரோட காரை கண்டு பிடிச்சுண்டு ஒரு நூறு பேராவது சேர்ந்துடுவாளாக்கும் , நான் என்ன பண்ண முடியும்..? என்னால முடிஞ்சது சுடச் சுட கேசரி கிளறிக் கொடுத்தேன்...சாப்டார்...என்று சொன்னார் அந்த மாமி.பின்பு வீட்டுக்குப் பின் புரத்திலிருந்த மருதாணிச் செடியிலிருந்து நிறைய மருதாணி கொம்பொடு எடுத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்தார்கள். மனம் முழுக்க மகிழ்வோடு எனது இரண்டு தோழிகளுடன் நானும்.சேர்ந்து மதுரையை நோக்கி பிரயாணித்தோம். மனத்தின் அமைதியை எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த ‘ஸ்ரீ ரமண நாத அமுதம்’ என்ற குறுந்தகடு சுழல இசைஞானியின் பாடல்கள் மென்மையாக ஒலிக்க , ஒரு நிறைவான பயணத்தை விவரிக்க வார்த்தைகளைத் தேடாமல் கண்களை மூடிக்கொண்டே இசையில் தொலைந்தேன்..

நன்றி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.

ஹைதராபாத்.



3 கருத்துகள்:

  1. விளக்கமான கோயிலின் தகவல்களுக்கு நன்றி...

    சிறப்பான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  2. இருவிழி நிறைக்க
    இறைவன் காட்சி
    திருச்சுழி காதை
    திறம்பட உரைத்த
    மருள்விழி மங்கை
    மறையுரை ஆக்கம்
    அருள்மொழி வேதம்
    அழகே வளர்க! - திருமாலவன்

    பதிலளிநீக்கு