புதன், 5 மார்ச், 2014

விதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா

www.trinethram-divine.com

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே 'விதி இருப்பின்' மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மை.

இந்த ஆலயத்தை சில வருடங்களுக்கு முன்னே முதன் முதலாக நாங்கள் சென்று வந்த போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவமும் அதன் பின்பு பல முறைகள் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் தானாக அமைந்ததும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நிகழ்வு மனதை விட்டு நீங்காமல் இருப்பதும் தான் குருவின் திருநாளாகிய இன்று எனக்குத் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா கோவிலைப் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அமைந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் நாங்கள் சென்றிருந்த போது 'திருப்பட்டூர்; ஏனோ யாருக்கும் அவ்வளவு தெரிந்திருக்க வில்லையோ என்று தான் தோன்றியது. கூட்டமே இல்லாத கோயில். நாங்கள் மட்டுமே கோவிலுக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. கோவில் வாசலிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தால் ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை கண்நிறையக் கண்டு கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று மனதில் நினைத்துக் கொண்டோம். சுற்றிலும் மிக உயரமான மதில் சுவர்கள். வேத மண்டபம், நாத மண்டபம், சப்தஸ்வரத் தூண்கள் என்று அனைத்தையும் கடந்து 'சிவ சிவ ' என்று சொல்லி உள்ளே சென்று பிரம்மனுக்கு அருள் புரிந்து அவரின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்து வரம் அருளிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரைக் கண்டு தரிசித்தோம்.

நாத மண்டபத்தின் தென்திசையில் தான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பிரம்மாவின் சன்னதி. பிரம்மாண்டமான பிரம்மா..இதோ மேலே படத்தில் இருப்பவர். அற்புதமாக திருமஞ்சள் காப்புடன், தாமரைப் பூ மாலைகளுடனும் திவ்வியமாக தரிசனம்.
அவருக்கு நேர் அருகில் மிக அருகில் நிற்க அனுமதிப்பார்கள். அவரது காலடியில் நமது பிறந்த ஜாதகத்தை எடுத்துச் சென்றால் அதை பாதங்களின் சமர்பித்து அர்ச்சனை செய்து தருவார்கள். கண்களை மூடாது அவரைப் பார்த்தபடியே நின்றிருத்தல் தான் நலம். நம்மையும் மீறி நம் மனம் கசிந்து விழிகள் நனையும். 'திருப்பட்டூரில்' இருக்கும் ஸ்ரீ பிரம்மாவால் மட்டுமே அங்கு வருபவர்களின் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தியைக் கொண்டவராம். ஈசன் பிரம்மாவுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைத்து அவரது தேஜஸையும், படைப்பாற்றலையும் மீண்டும் வழங்கி கூடுதலாக 'இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவருடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக' என்று வரமளித்து 'விதியிருப்பின் விதி கூட்டி அருள்க' என்றும் வரம் வழங்கினாராம்.

அது போல யாருக்கெல்லாம் தலை விதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவர்களே ஸ்ரீ பிரம்மாவை வந்து பார்த்து தங்கள் எழுத்தை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகி இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் உருவாகும் என்பது நிஜம்.

சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற குருவுக்கு அதிதேவதையாக விளங்கும் பிரம்மனின் அருட்பார்வை
ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. நாம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து இன்னும் சிறப்பாகவும், ஆரோக்கியத்துடனும், வாழ இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவின் அருட்கடாக்ஷம் அனைவருக்கும் அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இது ஒரு சர்வ தோஷ பரிகாரஸ்தலமாகும். சிலர் 36 தீபமிட்டு 9 முறை வலம் வந்து வேண்டுதல் செலுத்துவார்கள். இங்கு முக்கிய அபிஷேகப் பொருள் கற்கண்டு. வெண்ணிற கற்கண்டால் பிரம்மாவை அலங்கரித்திருப்பார்கள்.அருகில் சரஸ்வதிக்கு தனிக்கோயில் உள்ளது.

ஸ்ரீ பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் பதஞ்சலி முனிவரின் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில் இருக்கும் திருவுருவப் படம் ஒன்று நமது பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதன் எதிரில் அமர்ந்து தியானம் செய்து விட்டு வந்தால் மனம் பெரும் அமைதி அடைவதை உணர முடியும். இதை இந்த சன்னதியில் அனுபவ பூர்வமாகவே உணரலாம்.

யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்'. அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர் என்பது புராணம்.இவரது சன்னதியையும் சேர்ந்து தரிசிப்பது சிறப்பு. சப்த மாதாக்களும் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகிலேயே உள்ளது. சப்த மாதாக்களில் 'வராஹி' யைத் தொழுவது விசேஷ நலம் பெறலாம். மிகவும் தொன்மைகிக்க கோயிலில் குடி கொண்டிருக்கும் சப்த மாதாக்கள் மிகவும் சாநித்தியம் படைத்தவர்கள் என்பது அனுபவ பூர்வமாக உணர்ந்தவள். சப்த மாதாக்களின் சன்னதியில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வந்தால் போதும்.

அனேக கோயிலில் இருப்பது போலவே இங்கும் அனைத்துப் பிற தெய்வங்களுக்கும் தனித் தனி சன்னதியும் அம்பிகைக்குத் தனி சன்னதியும் இருக்கிறது.

நாங்கள் முதலில் சென்றிருந்த போது நடந்த ஒரு நிகழ்வு. இன்னும் மனசுக்குள் சிலிர்க்கும் நினைவு. கோவிலின் வடபுறத்தில் தனி சன்னதியாக பிரம்மனின் சம்பத்தாகிய தேஜஸை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று பெயர். அம்மனைத் தொழுது விட்டு வெளியில் வரும்போது அருகில் ஒரு சின்ன இரும்புக் கதவு மூடி இருந்தது. அதன் உள்ளே புதராக மண்டிக் கிடந்தது செடி கொடிகள். ஒரு சின்னப் பலகையில் பிரம்மா தீர்த்தம் என்று எழுதி இருந்ததைப் பார்த்ததும், நான் அதனுள் சென்று பார்த்து விட்டுத் திரும்பும் ஆசையில் உள்ளே நுழைய அந்த இரும்புக் கதவை லேசாகத் தள்ளினேன். ஒரு கிரீச் சென்ற சத்தத்துடன் அது திறந்து கொள்ள நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். இது முற்றிலும் உண்மையான ஒரு நிகழ்ச்சி. அந்த சம்பவத்தை இன்று நினைத்தால் கூட மனசுக்குள் சிலிர்ப்பு ஏற்படும் அற்புதம். எனக்குக் காசி போகவேண்டும் என்ற எண்ணம் என்றும் உண்டு. ஆனால் எப்படிப் போவது வீட்டை விட்டு விட்டு யார் சரி போயிட்டு வா என்று அனுப்புவார்கள். இது போல சில மணி நேரப் பிரயாணம் செய்து செல்ல வேண்டிய கோயிலுக்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டுமே.

நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும், என் அம்மாவும் என் மகனும் அங்கே போகாதே...வேண்டாம்...பாம்பு இருக்கும் என்றெல்லாம் அபாயக் குரலெழுப்பி என்னைத் தடுத்தனர். நான் அதுக்கெல்லாம் பயப்படாமல் முன்னேறி அங்கு இருந்த பெரிய கிணறு ஒன்றை எட்டிப் பார்த்தேன். மிகவும் பழமையான ஒரே புதர்கள் நிரம்பிக் கிடக்க, கவனிப்பார் இன்றி இருக்கும் பாழடைந்த கிணறு தான் நினைவுக்கு வந்தது. சிறிது பயம் தொற்றிக் கொண்டது உண்மை தான். இருந்தும் மெல்ல மேற்கொண்டு அடி மேல் அடி வைத்து நடந்தேன். அதற்குள் என் பையன் அரவிந்தும் மெல்ல உள்ளே வந்தவன் வேண்டாம்மா...போகாதே என்று சொல்லிக் கொண்டே அவனும் பின்தொடர்ந்தான்.
மகிழ மரம் பூத்துச் சொரிந்திருந்தது. மகிழ மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில் மிக அபூர்வம் என்பது மட்டும் தெரியும்.

மெல்ல முன்னேறி இன்னும் என்ன இருக்கிறது பார்ப்போம் என்று நடந்தேன். சிறிது தூரத்தில் ஒரு தனி சன்னதி...ஸ்ரீ கைலாசநாதர் என்று எழுதி இருந்ததைப் படித்து சில படிகள் இருந்ததால் அதனைக் கடந்தும் உள்ளே சென்று விட்டேன். சிவலிங்கம் மிகப் பெரியது.மிகவும் பழமையான லிங்கம் என்பது அந்தச் சின்ன அறையிலிருந்து வந்த ஒரு வாசனையிலிருந்து உணர்ந்து கொண்டேன். இலிங்கத்தைச் சுற்றி வர சிறிது இடம் இருந்தது. ஆனால் சுற்றி வரும் முன்னர் லிங்கத்தைத் தொட்டேன் . அவ்வளவு தான்...ஒரு மின்சாரமா...அது காந்தமா....இல்லை ஒளியா ஒன்றும் புரியாத நிலை..கையை சட்டென எடுக்க முடியாமல் ஒரு இழுக்கும் உணர்வு. கூடவே ஒரு பயம்..ஆனந்தம் இரண்டும் கலந்த நிலை என் மனதை ஆட்கொள்ள அந்த இழுக்கும் சக்தியிலிருந்து விடுபட்டு படிகள் இறங்கி வேகமான நடையில் வரவும், வேண்டாம் வா என்று என் மகனின் கையைப் பிடித்து இழுக்க...இரு நானும் பார்த்துட்டு வரேன் என்று என்னை விலக்கி விட்டு அவனும் சென்று அந்த லிங்கத்தைப் பார்த்து பிரமித்து கையால் தொட்டானாம்....அதே உணர்வில் இழுக்கப் பட்டு ஓடி வந்து என்னிடம் சொன்னான்..அவனது குரலில் பதற்றம்.சரி, வா போய்டலாம் என்று சொல்லி வெளியே வர, இனம் புரியாத உணர்வு எங்கள் மனத்திலும் முகத்தில் கண்ட என் அக்கா என் மகன் சொன்னதைக் கேட்டு தானும் உள்ளே சென்று வந்து ஆமாம்..ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி ....! ஆனால் இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்று அவனிடம் சொல்லிக் கொண்டே வந்து விட்டாள். வந்தவள் என்னிடம் கேட்கவும், நானும்...ஆம் முதல் முறையாக இப்படி உணர்கிறேன் என்றேன். ஒரு மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது மூவருக்குள்ளும் ஏற்பட்டது நிஜம். அங்கு நான் வேண்டிக் கொண்டது காசி விஸ்வநாதரின் தரிசனம் இந்த ஜென்மத்தில் கிட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதற்கு அடுத்த மாதமே காசிக்குச் செல்லும் வாய்ப்பும் தரிசனமும் கிட்டியது.

இதைப் பற்றி எனது அனுபவங்களை ஒரு ஆன்மீக பத்திரிகைக்கு இதைப் எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எழுத முடியாதபடி பல தடைகள் வரவும் அந்த என்னத்தைக் கை விட்டேன்.ஆனால் உண்மை உறங்கவில்லை.ஆனால் சில மாத இதழ்களில் அவ்வபோது இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வர ஆரம்பித்தது. "திருப்பட்டூர் அதிசயம்"திருப்பட்டூர் அற்புதம்' என்றெல்லாம் வரும் அனைத்து விஷயங்களையும் நானும் மிக ஆவலுடனும் பக்தியுடனும் படித்துத் தெரிந்து கொள்வேன்.

மேலும் சில வருடங்கள் கழித்துச் சென்ற போது , அன்று பார்த்த கோவில் போல இல்லாமல் நிறைய பக்தர்களின் வரவும், நிறைய கடைகள், ஏகப்பட்ட கார்களின் போக்குவரத்துக்கள் என்று கோவிலே களை கட்டியிருந்தது. பிரம்மாவைப் பார்க்க சில அடிகள் தடுப்பு வேறு அமைத்திருந்தார்கள். பதஞ்சலி முனிவர் அருகே கண்ணாடியால் அறை என்று கோயில் மாறியிருந்தது. வெளியில் அன்று பார்த்த செடி கொடிகள் நன்கு சீரமைக்கப் பட்டு, கிணறு தூர்வாரப்பட்டு அந்த இடமே அழகிய நந்தவனமாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு சன்னதிக்கும் அழகான விளக்குடன் பெயர்ப் பலகை.....மண் தரை கூட மாறி நடை பாதையில் அழகான டைல்ஸ் பாதை அமைக்கப் பட்டிருந்தது. இதெல்லாவற்றையும் விட அந்தப் பெரிய கைலாச நாதர் சன்னதி அருகே ஒருவர் அமர்ந்தபடி உள்ளே போக விடாமல் கீழேயே நின்று தொழுதுவிட்டுச் செல்லுங்கள்..என்றார். நான் சிரித்தபடி சிவனைப் பார்த்தேன்.அன்று நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு காசி சென்று வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு மனமேயில்லாமல் வெளியேறினேன். அன்று கிரீச்சென்ற இரும்புக் கதவு பெரிதாக அழகாக புது பெயிண்டால் பளபளப்புடன் திறந்து கிடந்தது. அதன் பின்பு அடுத்தடுத்து ஸ்ரீ பிரம்மனைப் பார்க்க அங்கு சென்று வந்தாலும் அந்த முதலில் நான் உணர்ந்த சிலிர்ப்பு மட்டுமே மனதோடு நின்று விட்டது.

திருப்பட்டுர் ஒரு அற்புதத்தலம் .அவசியம் நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள். தெய்வீகத்தை உணருங்கள். இது எனது வேண்டுகோள்.


நன்றி.


ஜெயஸ்ரீ ஷங்கர்.

9 கருத்துகள்:

  1. நேட்ரு சென்று வந்தேன் அருமை

    பதிலளிநீக்கு
  2. நேட்ரு சென்று வந்தேன் அருமை

    பதிலளிநீக்கு
  3. We went to this temple last month. we reached around 1 p.m. unfortunately the temple was closed and would open only after 4 p.m. since i had to go to Coimbatore (8 hours travel by car), we returned without seeing Brahma but we saw all other shrines which are outside temple. The temple is very very old (around 2000 years ago). everyone must visit this temple. if possible, try to keep this temple visit as separate trip and do it at least in Saturdays & Sundays. Its worth visiting it. I just entered the main temple (not the main shrine) and worshipped other deities, for this itself, i have seen a dramatic change in my personal characters; i have gained lot of confidence, i have got lots of courage now. if i had seen Brahma (the main shrine & god), i would have got my life totally changed. I have planned to go there again next week to get 'dharshan' of main God. If you go, please go prepared with food & water which are rare there to buy though few shops are available. the ambience of the temple is so quiet and calm that you can meditate without disturbance.

    பதிலளிநீக்கு
  4. naan poi eruka i changed lot thanks a lot for bramha and sivan
    om bramha pottri om sivane pottri

    பதிலளிநீக்கு
  5. Lord, please give a chance to visit and blessed with your holy, divine cosmic power.

    பதிலளிநீக்கு
  6. மிக விரைவில் நானும் சென்று வருகிறேன்...ஏதாவது மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு..

    பதிலளிநீக்கு