திங்கள், 1 ஜூலை, 2013

அழுகைச் சத்தம்....!
நான் உறங்க வேண்டும் 
மனது தவித்தது...!

இரவின் தனிமையில் 
சுவர்க் கோழிகளின்  
தொண  தொணப்பு..!
தூக்கத்தைக் கலைக்கவென்றே 
செய்து கொண்ட ஒப்பந்தம் போல்...!

பகலில் படித்த செய்திகள் 
இரவில் விஸ்வரூபமாய் 
மனத்திரையில் சிவப்பாக...!
ஆயிரம் குரல்கள் 
அவலங்களாய் அலற....

கரைபுரண்ட கங்கைக்குள் 
கைகள்...கைகள்....கைகள்...
இமயம் பாறையாக
இதயம் கங்கையாக 
தொலைந்தவர்களும் 
தொலைத்தவர்களும் 

புண்ணிய யாத்திரையில்  
பாவங்களைத் தொலைக்க 
தொலைக் காட்சியில் 
அருகே கண்ட கண்கள்...! 

என்றோ தானும் இதே போலத் 
தவித்த நேரத்தை நினைவு கூர்ந்து 
அன்று இறைவன் இருக்கிறான் 
என்று நிம்மதி அடைந்த மனம் 
இன்று இறைவன் எங்கே போனான்?

எண்ணங்களில் மூழ்கும் வேளை 
கண்கள் பனித்தது....
உறக்கம் மறந்தது..
நிரந்தரமில்லாத உலகத்தில் 
உயிர்ப்பூக்கள் உதிர....உதிர 
மீண்டும் மீண்டும் 
மொட்டுக்கள் துளிர்த்தபடி
நம்பிக்கையை நிரந்தரமாக்கியது  
அழுகைச் சத்தம்....!

நான் உறங்க வேண்டும்..
மனது தவித்தது..!
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக