செவ்வாய், 14 ஜனவரி, 2014

அனைவரின் மகள்....!
சூரியன்  எம்பி நின்று 
முகம் காட்டிச் சிரித்த  போது 

பச்சைப் புடவையில் மஞ்சள் தலை குனிந்து 
வெட்கித்த போது 

குருத்து இஞ்சி கூடவே கை பிடித்து 
அணைத்த போது 

எண்ணங்க ளெல்லாம் வண்ண உருவெடுத்து 
வாசலில் நின்று கோலமான போது 

மாவிலைத் தோரணங்கள் காற்றிலாடி 
உறவை வரவேற்றபோது  

கரும்புக் கண்கள் கட்டவிழ்ந்து 
கடைத்தெருவில் காத்தருந்த போது 

மடிகனத்த காராம் பசுக்கள்  
மனம் நுரைத்துப் பொங்கிய போது 

வெற்றுக் காகிதங்கள் வண்ணக் காகிதங்களாக 
வால் வைத்து சிறகுகட்டிப் பறந்த போது 

பச்சரிசியும் மணக்கும் பாகும் ஏலரிசியோடு  
ஒன்றாய்க் கொதித்து வழிந்த போது 

பொங்கலோ பொங்கல் என்று 
வீதி வரை கரகோஷம் கேட்ட போது

அவரவர் கண்களில் நம்பிக்கை நட்சத்திரம் 
மின்னி ஜொலித்த போது.....

வழி வழியாய் வந்த நல் வார்த்தையை 
மனமும் சொல்லும் சேர்ந்து சொன்ன போது..

அனைவரின் மகளாகத்  "தை பிறந்தாள் " 

1 கருத்து:

  1. கவிதை வரிகள் அருமை...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு