அன்பு நண்பர்களே,
இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி” முடிவுகள் இதோ
போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு வ.வே.சுப்பிரமணியம்அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் திகழும் நம் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.
தீர்ப்புக் கட்டுரை- நடுவர் வ.வே.சு
ஒரு முக்கியமான சேதியை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
கவியரசரின் பெயரைச் சொல்லி எது கேட்டாலும் நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டு விடுவேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது, காவிரிமைந்தன் கேட்ட உடனேயே கட்டுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக இருக்க நான் ஒத்துக் கொண்டதிலிருந்து நிரூபணமாகிவிட்டது..
அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த பிறகே நான் இந்தப் பணிக்குத் தகுதியானவனா என்ற ஐயம் வலுத்தது. இந்தத் தன்னிலை விளக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை என்னை அறிந்தவர்கள் நன்றாகவே அறிவார்கள்.
பிறகு என்னதான் பிரச்சனை? கவியரசரின் வரிகளுக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டதுதான் பிரச்சனை. ஒரு புறம் அவருடைய ஒற்றைச் சொல்லை ஒருவரியில் பாராட்டி எழுதினாலே எங்கள் சொத்தை எழுதி வைக்கும் கூட்டம் நாங்கள். இன்னொரு புறம் அவருடைய ஒருவரியைப் பத்து பக்கங்கள் எழுதிய பின்னாலும் இன்னும் நூறு பக்கங்கள் ஏன் எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கூட்டம் நாங்கள். இதில் எப்படி நடுவராக இருந்து இது முதல் இது அடுத்தது என்று தேர்வு செய்ய..? கவியரசரின் இரசிகனாக, அனுப்பப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் முதலிடம் என் நெஞ்சில் கொடுக்கப்பட்டுவிட்டதை அறிவிப்புச் செய்கிறேன்.
கவியரசரை எழுத்தெண்ணிப் படித்தும் கேட்டும் இரசித்த என்னை போன்றவனுக்கு, பிறர் அவரை இரசிப்பதை அருகிருந்து பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பை வழங்கிய எனது இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும், போட்டியை நடத்தும் வல்லமை குழுவுக்கும் ஆசிரியர் பவளசங்கரிக்கும் நிரம்ப நன்றி.
இனி கட்டுரைப் போட்டியின் நடுவராக என் பணி முடிவுகள்:
மொத்தம் வந்த கட்டுரைகள் முப்பது. அத்தனையும் முத்துக்கள்; இரத்தினங்கள். காரணம் அனைவருமே கண்ணதாசனென்னும் ஆழ்கடலுள் மூழ்கி முக்குளித்து எழுந்தவர்கள். யாரும் சோடை போகவில்லை. கவியரசரின் வரிகளை இடைகட்டித் தொடுத்த பிறகு எந்த மாலைதான் மணம் வீசாதிருக்கும்? எனில் தரம் பிரிப்பது எவ்விதம்? எல்லார் கைகளிலும் ஆணிப்பொன் தான். ஆனால் அதை எப்படிப்பட்ட ஆபரணமாக ஆக்கியிருக்கிறார்கள்? அங்குதான் கொஞ்சம் வேறுபாடு. அதற்குக் காரணம் அணுகுமுறை.
சிலர் கவியரசரின் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளனர்; சிலர் அதில் தம் வாழ்க்கை பிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் பொது வாழ்க்கைத் தத்துவமே அதில் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். சில கட்டுரைகளில் இலக்கிய ஊடாடல்களும் ஒப்புமைகளும் அதிகம் இருந்து சுவை கூட்டின; சிலவற்றுள் கவியரசரின் வரிகள் கண்ட வாழ்க்கை அனுபவங்கள் அருகு நெருங்கி அரவணைத்துக் கொண்டன. சிலவற்றில் கண்ணதாசன் மீது காதல்; சிலவற்றில் பக்தி; இன்னும் சில கட்டுரைகள், கவிதை வரிகளின் இடைபயிலும் மோனத்திற்குக் கூட மெட்டமைத்துப் பார்த்துள்ளன.
அணுகுமுறை,.கருத்துத் தெளிவு, மொழி ஆளுமை, போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுரை நீளம் ஆகிய துணை அலகுகளைக் கொண்டுதான் கட்டுரைகளை வரிசைப்படுத்தியுள்ளேன். ஆனால் இதையும் தாண்டி ஒரு பரவசத்தையும், துள்ளலையும் உயிரோட்டத்தையும் எந்தப் படைப்பில் பார்த்தேனோ அதைத்தான் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
மூன்று முதலிடங்கள்
- 1. விசாலம்” அற்புதமான கற்பனை நேர்காணல். இரவு எட்டு மணிக்குக் கவியரசரோடு பேசத் தொடங்கி அருகிலுள்ள கோயிலின் இரவு மணியோசை மறையும் வரை பேசியதைப் பதிவு செய்துள்ளார். எடுத்த உடனேயே கவிஞரின் அழகு முகத்தைப் படம் பிடித்து நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறார். வான்நிலா என்று தொடங்கி, கவிஞரின் வாழ்க்கைப் பாதையோடும் அவர் படைப்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கிறார். இதற்குக் கண்ணதாசனே சாட்சி.! தெரிந்தாலும் பலர் வெளிச்சம் போடாத சேதி. நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி முனிவரோடு கவிஞருக்கு நிகழ்ந்த சந்திப்பைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையைக் கற்பனையிலேனும் அருகே கண்டு பேசுவதுதான் கட்டுரைக்கு உயிர் கொடுக்கும் என்ற இவரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பொதுவாக நேர்காண்பவர் குறைவாகவும் பதிலளிக்கும் பிரபலம் அதிகமாகப் பேசுவதும் மரபு. இங்கே அது தலைகீழ்; காரணம் கவிஞரின் மவுன சம்மதத்தில் இவரே அவர் சார்பில் பதில்களைக் கொடுத்துள்ளார். இந்த நெருக்கம் கட்டுரையின் உயிர்ப்புக்கு அடித்தளம் அமைக்கிறது.
- 2. அருமையான இன்னொரு கட்டுரை; ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ளார். கண்ணதாசனை எப்போது நினைத்தாலும் இவர் பரவச உணர்வில் ஆழ்ந்துவிடுவார் என்ற அறிவிப்பினை அவர் எழுத்துக்களே செய்துள்ளன,, உதாரணம்: ”ஆம். அவரது எண்ணங்களே வளைந்து வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும் பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது; கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது” இனியும் மேம்படுத்த இயலாத எல்லைச் சொல் ஓவியம். “’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’
இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.” எப்படி இரசித்திருக்கிறார் பாருங்கள். வாணி ஜெயராம் குரலில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு கோப்பை அமுதக் குழம்பைக் குடித்தவர்கள்.
- 3. அடுத்து பாண்டியன்.ஜி ( வில்லவன் கோதை) படைத்த கட்டுரை. அவரே இது வித்தியாசமான பார்வை எனக் குறிப்பிட்டிருக்கிறார். கவியரசரின் வாழ்க்கையை மிகச் சரியாக, ஓர் எழுத்தோவியமாகக் கொண்டு வந்துள்ளார். அநாவசிய மாலை சூட்டல்களும் , சிக்கித் திணறும் பாராட்டு மொழிகளும் இன்றி, ஒரு மாபெரும் கவிஞனை, அவன் வாழ்ந்த வாழ்க்கையின் போக்குகளைக் கொண்டும் எழுத்துகளைக் கொண்டும், கொண்ட கொள்கைகளை வைத்தும் தன்னுடைய அளவுகோலால் உண்மையாக எடை போட்டிருக்கிறார். உதாரணம் காட்டாமல் இருக்கமுடியாது.
“ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள். கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.”வாசிப்பு திறன் மங்கிப்போன இந்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.
”கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல. கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.”
ஆக (27)விசாலம், (1) ஜெயஸ்ரீ ஷங்கர், (13) பாண்டியன்.ஜி ஆகிய மூவரையும் முதல் பரிசுக்குரிய இடத்தில் வைக்கிறேன். மூவரும் சமமே.
இரண்டாவது இடம்: ஷைலஜா (6)
ஆயிரம் சொற்களுக்குக் குறைந்திருந்தாலும் அர்த்தமுள்ள கண்ணதாசனைக் காட்டுவதில் எந்தக் குறையுமில்லாத கட்டுரை. இலக்கிய ஒப்புமைகளும் , கவியரசரின் கவிதைக் களங்களின் இடம் சுட்டிகளும் இவரது ஆழமான அணுகுமுறைக்குச் சான்றாகின்றது.
“அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
என்கிறார் நம் கவிஞர்!
“தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது” என்று திரையிசை தாண்டிய கவிதை வரிகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்திலுள்ள இட நெருக்கடியால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
மூன்றாவது இடம்: கீதா மதிவாணன்(7)
இலக்கியத் தரம் வாய்ந்த இனிய கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றவதாக உள்ளது.
கவியரசரின் கவிதை வரிகளினாலேயே கட்டப்பட்ட ஒரு கட்டுரை மண்டபத்தைக் காகிதத்தில் வரைந்து, முன்னுரையிலிருந்து முடிவுரைவரை பல உரைகளை உள்ளடக்கி நம்மை இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள திரு சத்தியமணி (23) அவர்களுக்கும்
”அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:
சுடுகாட்டு எலும்புகளை
சோதித்து பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்த எலும் பில்லையடி!
தென்னாட் டெலும் பென்று
தெரிந்த எலும் பில்லையடி
எந்நாட் டெலும் பென்றும்
எழுதிவைக்க வில்லையடி
ஒரு நாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி
சோதித்து பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்த எலும் பில்லையடி!
தென்னாட் டெலும் பென்று
தெரிந்த எலும் பில்லையடி
எந்நாட் டெலும் பென்றும்
எழுதிவைக்க வில்லையடி
ஒரு நாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி
என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!”
என்ற வைர வரிகளையும், கவியரசரின் வசனங்களைப் பற்றியும் சிறப்பாக எழுதி, நம் மனதில் இடம் பெறும் எஸ். கிருஷ்ணசாமி (24) அவர்களுக்கும்
என் மனத்தில் ஒதுக்கப்பட்ட சிறப்பிடங்களைப் போட்டி அமைப்பார்களும் ஒதுக்க வேண்டுமென்று , பரிந்துரை செய்கிறேன்.
இதைத் தவிர,
சொந்த வாழ்க்கை அனுபவத்தையே கவிஞர் வரிகளோடு பிணைத்துவிட்ட ஞா.கலையரசி, (2)
அறிவு பூர்வமாகக் கவியரசரை அணுகியுள்ள ஜெயராம் சர்மா,(3)
இயல்பு வாழ்க்கையோடு இணைந்த கவிஞர் வரிகளின் நயம் பாராட்டியுள்ள ராஜலட்சுமி பரமசிவம், (11)
“கடவுளின் செல்லப் பிள்ளையோ” ”என்ன தவம் செய்தனோ”, “கற்பனையில் முளைத்த காதலோ”என அற்புதமான துணைத்தலைப்புகள் கொடுத்து அசத்தியுள்ள ஸ்வேதா மீரா கோபால்,(12)
கவிதைக்கும் கடலுக்கும் சிலேடை எழுதிக் கலக்கியுள்ள எஸ்.பழனிச்சாமி,(21)
நான் போகுமிடமெங்கும் போற்றிப் பேசுகின்ற “பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்” என்ற அட்சர லட்சக் கவிதையைக் குறிப்பிட்டுள்ள மேகலா இராமமூர்த்தி,(20)
கவியரசரின் கோடானுகோடி இரசிகர்களைக் கவர்ந்த வாடாமலர்க் கவிதைகளை இரசனையோடு அளித்துள்ள தமிழ்முகில் நீலமேகம்(26)
ஆகியோரின் கட்டுரைகள் பாராட்டுக்குரியவை.
பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் கவியரசரை இதயத்தால் இரசிப்பவர்கள் என்ற உண்மையைக் கட்டுரையின் ஒவ்வொரு ஒற்றைச் சொல்லும் உறுதி செய்திருப்பதைக் காணும் போது
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளின் ஆழம் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன.
வவேசு
03/07/2014
சென்னை-83
இந்தப் போட்டியை அறிவித்த கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள கவிஞர் திரு வவேசு அவர்களுக்கும் எனது நன்றிகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்
அண்ணாகண்ணன்
வல்லமை குழுவினருக்கு நன்றி
கவிஞர் வவேசுவுக்கு நன்றி
கண்ணதாசன் பித்தர் காவேரி மைந்தனுக்கு நன்றி
இனிய இணைய வாசகர்களுக்கு நன்றி
வில்லவன் கோதை
தெரிவித்துக்கொள்கிறேன் . அவர் என்னுடைய கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி . மற்ற என் சகோதரிகள் திருமதி ஜெயஸ்ரீ , திருமதி ஷைலஜா திருமதி கீதா , அன்பு திரு. பாண்டியன் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்
மேலும் பரிசு பெற்ற திரு சத்யமணி, எஸ்கிருஷணசாமி , கலையரசு திரு பரமசிவம் ஸ்வேதா ,எஸ்பழனிசாமி தோழி மேகலா தமிழ் முகில் யாவருக்கும் என் அன்பு கனிந்த வாழ்த்துகள் , என் அன்னை மீராம்பிகாவுக்கு என் நன்றிகள் பல
காவிரிமைந்தன்