வியாழன், 11 டிசம்பர், 2014

பூவுலகு பெற்றவரம்....!

 



பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
ஒய்யார முண்டாசுக்குள்
ஓயாத  எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால் வானத்தில்
கார்மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல் கவிதை
ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப்போட்டு நகைப்பவன் 

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
சங்கம் முழக்கியவன்

இறுக்கிச் சுற்றிய முண்டும்
கரு மீசையும் கனல் கண்களும்
கன ஆடையில் அச்சத்தின்
முகவரி  தந்தாலும் அச்சமில்லை
என்று இச்செகத்திற்கு
கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் ஒடுங்கிக் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டெழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன் பாதை மாறாமல்
கவிதை போதைக்குள் மூழ்கியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்தும்
எண்ணத்திலிருந்தும் விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி வணங்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்ன தீ ..!
பாரதி உந்தன் பார்வை தீ...!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விடவா பிறந்து வந்தாய்...!
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயன்றோ பூவுலகு பெற்றவரம்....!


ஜெயஸ்ரீ ஷங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக