ஞாயிறு, 25 ஜனவரி, 2015

கல்பனா என்கின்ற காமதேனு...!








"இசையால் வசமாக இதயமெது..?" இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு இசைவது தான் நமக்கு இறைவன் அளித்த பேரருள். மன ரணங்களுக்கும், மனத்தின் சுகங்களுக்கும் ஆண்டவன் அளித்த கொடை இசை. அந்த இசையை ரசித்து மகிழாதவர் எவரும் மனிதனாக வாழும் தகுதி அற்றவர் எனலாம். மனத்துக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போதே தமை மறந்து பரவசமாகி ஆனந்தக் கண்ணீரை அர்ப்பணிக்கும் இசைப்பிரியர்களும் இவ்வுலகில் சகஜமாக இருப்பதும் உறுதி. 

இசை எந்த மொழியானாலும் மனத்தைக் கவரும் காந்தம் தான். கர்நாடக சங்கீதமாகட்டும், திரையிசைப் பாடலாகட்டும், தெய்வீகத் துதிகள் ஆகட்டும் ராகம் பிரதானமாகும் போது அதுவே ஆன்மாவிற்கு பிரசாதமாகின்றது. உலகம் முழுவதும் பல பாடகர்கள் அவதானித்து இசைக்காகவே தங்களது ஜீவிதத்தையும் சமர்ப்பணம் செய்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அந்த வகையில், பல முன்னணி பாடகர்கள் இருந்த போதிலும், தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்த கல்பனா அவர்கள் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாக கால்பதித்து, திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராக திரை மறைவில் பணிபுரிந்து, பல பிரபல திரையிசைக் குழுக்களில் மேடைப் பாடகியாகி தனக்குதொழில் "பாடுவது" என்று இறைவன் கொடுத்த அந்த உன்னதப் பரிசை உயரிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் அத்தனை முயற்சியையும் தொடந்து செய்து வருபவர். 

எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் சரி, இசை மொழிகளைக் கடந்து செல்லும் சக்தி கொண்டது என்பதற்கேற்ப அவர் பாடும் பாடல் ஒவ்வொன்றும் உயிர்ப்போடு இருகின்றது. இவருக்குத் தெரியாத பாடலே இருந்திட முடியாதோ என்று நினைக்கும் வண்ணம் அத்தனை பாடல்களையும் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.எந்தப் பாடலைப் பாடச் சொன்னாலும் அதை அப்படியே பாடி அசத்துவது தான் அவரது தனித்திறமை.திரையில் பல முன்னணி பாடகியர் பாடிய பாடல்களை அந்தந்த பாடகர் பாடும் விதத்தில் பாடுவதில் கல்பனாவுக்கு நிகர் அவரே. கேட்டதும் அப்படிப் பாடல்களைச் சொரிந்து தருபவர் கல்பனா என்ற காமதேனு தான்.

அவர் ஒருவருக்குள் அத்தனை பாடக, பாடகிகளும் அடக்குமோ என்று வியக்கும் வண்ணம் குரல் தனை மாற்றி அவர் பாடும்போது இசையுலகுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாகவே இவர் திகழ்கின்றார். கர்நாடக சங்கீதத்தில் வரும் மிகக் கடினமான ஆலாபனைகள் கூட மலைமீதிருந்து நழுவி விழும் அருவி போல பொங்கிப் புரண்டு சங்கதிகள் விழ, கேட்பவர்களின் காதுகள் கூட பாடுபவர் யார் எனக் காணக் கண்கள் வேண்டும் என்று வேண்டும். இன்னும் இப்பேர்பட்ட ஒரு இசைக்கலைஞரான கல்பனாவுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது.


' மாதவம் செய்து பிறந்திட்ட மங்கையாய்' கண்முன்னே நமக்குக் காணொளியில் காட்சி தரும் கல்பனாவின் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, ஒருமுனைப்பு ஆகியவை இவரது உடன்பிறப்புகளோ என்ற எண்ணம் இவரை சந்திக்கும் ஒவ்வொருவரின் மனத்திலும் நிச்சயம் எழும். பெரிய பிரபலங்கள், இசை வல்லுனர்கள், பிரபலப் பாடகர்கள் நிரம்பிய அரங்கிலும், திறமைகள் தனக்குள் ஓங்கி இருந்தாலும் மேடையில் அவரது பணிவும், யதார்த்தமாக அவர் பாடல்கள் பாடும் நேர்த்தியும் பிரமிக்கத் தான் வைக்கிறது.கேரளாவில் நடந்த ஏசியாநெட் ஐடியா சீசன் 5 போட்டியில் 2010-இல் கலந்து கொண்டு முதல் பரிசாக 1 கோடி வென்று தனது திறமையால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். தமிழ்த் திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருந்தாலும் அவருக்கு இன்னும் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தோன்றுகிறது. குறிப்பாக 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' என்னும் 'மாயாவி' படத்தின் பாடலைக் கேட்ட யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திட முடியாது. 

சங்கீத வரங்கள் பெற்று வந்த கல்பனாவின் உடலுக்குள் குருதிக்கு பதிலாக சுருதி தான் ஓடுகிறதோ என்று நம்பும் அளவுக்கு இசையோடு இணைந்த உயிராகவே உலா வருகிறார் என்றாலும் தகும். பிரபல இசைக் குழுவினர் சென்னையில் லக்ஷமன் ஸ்ருதி இவருக்குத் தகுந்த வாய்ப்பு அளிப்பதால் அவர்கள் உலகம் முழுதும் சென்று நடத்தப்படும் பல்வேறு இசை நிகழ்சிகளினால் மட்டுமே அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்திருக்க முடியும், மற்றபடி அசாதாரணத் திறமைகள் கொண்ட இவருக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் கௌரவப் படுத்தி இருக்க வேண்டும் என்பதே அவரது விசிறிகளின் எண்ணம். முன்னணி இசையமைப்பாளர்கள் இவருக்குத் திரைப்படங்களில் பாட அதிக அளவில் வாய்ப்புகள் தந்து கல்பனாவின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே என்னைப்போன்ற இசைப்பிரியர்களின் அவா. 

எந்தப் பாடலானாலும்,பக்தியோடு அவர் பாடத் துவங்கும் போது கேட்பவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் நேர்த்தி அவரை ஒரு பரிபூரண பாடகியாக் காண்பிக்கும். இந்தப் பிரபஞ்சத்திலேயே இவரைப் போன்று இசைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்து அதை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் நிருபணம் செய்யும் பாடகி வேறு எவரும் இல்லை என்றே கூறலாம். இருந்தும் இவரைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்ற வாரம் வரையில் எனக்கும் இவரைப் பற்றி ஒன்றும் அதிகம் தெரியாது. காணொளியில் ஒரு பாடல் கேட்க முற்படும்போது எதிர்பாராது கிடைத்த காணொளி அறிமுகம் தான், அவரை வாழ்த்தி இந்தக் கட்டுரையும் எழுத வைத்து என்னைப் போலிருக்கும் இன்னும் சிலருக்கு என்மூலம் கல்பனாவை அறிமுகப் படுத்தும் வாய்ப்பாக அமைந்தது. அவரது ஒரு மேடை நிகழ்ச்சியின் காணொளி ஒன்றை இணைத்து அத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்..பாடலை இறுதி வரையில் கேட்ட பின்பு , இதை எழுதத் தூண்டிய உணர்வை நீங்களும் உணருங்களேன்..
https://www.facebook.com/video.php?v=651243908316055