வியாழன், 13 அக்டோபர், 2016

உயர்வே உயிர்...!

அனுபவ ஜோதி...ஆனந்த ஜோதி..!

கண்கள் இமைக்குள் புதைய 
உள்ளம் உருக் கொணர்ந்து 
திறக்க.....முன் வினைகள் பறக்க 
ஒளியின் கண்கள் திறக்க 
பிரகாச ஒளி  சித்திக்க 
சித்த சுத்தி யொடு எந்தன் 
மனம் மாளிகைக்குள் நுழைய 
உலகம் மறந்து போனது 
உயிரும் உயரப் போனது...!

ஆயிரம் வாசல்கள் 
அதற்கும் மேல் 
ஆழ்மனக் கொந்தளிப்பு 
அதுவும் அமைதியானது.....
தீபத் துளிகள் அண்டத்தைப் 
பிளக்க விலங்குகள் வெடித்து 
சிதற... அதிவேகமானது..
ஜீவப் பிரயாணம்....!

குளிர் கூடிப் போர்த்த
கருநிழல் உடன் ஓடிவர 
செல்லாத உயிர்க்  கோட்டைத் 
தாண்டி கோட்டையை அடைய 
முறைத்து நின்றா னவன்...
கருத்த உயிர்...! 
பயத்தைத் துறந்து..வேகத்தில் 
திரும்பித் தரையோடு முட்டி நிற்க..!
மீண்டும் விழித்தது உயிர்.....!

விழித்தன இமைகள்....காலம் 
மறந்தது....காட்சியும் மறைந்தது..
கண் போன இடமெ ல்லாம் 
வெற்றிடத்தில் பேரொளியே...!
அஞ்ஞானம் விலகி ஞானம் விழித்திட 
தைரியம் ...நம்பிக்கை...
இரண்டையும் விழுங்க...!

நரம்புப் பாம்புகள் பின்னி இறுக 
குருதி இறுகி, குரலை இறுக்க
செவிக்குள் ரீங்காரம் ஓங்காரமாய்..
ஓசையது உயிரின் மொழியாய் ..!...!
கண்களைத் தழுவிய உறக்கம் 
விலாசம் தெரியாமல் 
வெளியேறிய ..நாள்முதல் 
உறக்கயிமை மூட மறுக்க 
எண்ணங்கள் யாவும் 
சொர்ணக் குவியல்கள் ..!

எடுக்க எடுக்க ஊறும் கேணியாக 
ஞானம் பெருக்கெடுத்து உயிரை 
ஆட்கொள்ள எழுதி வைக்கிறேன் 
வார்த்தைகளை ...அனுபவ ஜோதியாய்..!

உயிர் குடிக்கும் காலன் கூட 
'பேரொளி' கண்ட ஆத்மாவை 
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை...
இறையுலகைக் கண்ட மனம் 
பூவுலகை நினைப்பதில்லை..!
ஆன்ம சாதகம்...எதுவும் சாதகம்..!
இருண்டு கழித்து வீணான நாட்களாய் 
கழண்ட பருவங்களைப் 
பேரொளி அனுபவம் புதுப்பிக்க..!
இன்று...புதிதாய்ப் பிறந்த உடல்..!

கண்களுள் சிக்கிய பேரொளி 
இருண்ட மனத்தை மின்னலென 
மாற்றிவிட...தூக்கி எறியப்பட்ட 
வித்தாக...!

புரிந்து கொண்டதும், வேர் விடுதலும் 
கிளை பிரிதலும்....கால் உயர்தலும் 
கனி விழுதலும்....!
இயற்கைக்குப் புறம்பான நிலையொடு 
எங்கெங்கும் காணினும் உயர்நாடகம்...!
அதிலும் உயிர்நாடகம்...!
கோடியில் சில ஜீவனுக்கே சிக்கும் 
ஆண்டவனின் அருட்பரிசு..!

பெற்று விட்டேன்....உயர்ந்து விட்டேன்...!
சகஸ்ரார அந்தஸ்தை அடைந்தும் விட்டேன்..
ஜென்ம சாபல்யம் எட்டி விட்டேன்..!
உயிரை ஒளியெனக்  கண்டவள்..
உயிரே ஒளியாய் உணர்ந்தவள் ..
ஒளியை ஜோதியாய் உள்ளுக்குள் 
ஏந்திக் காக்கும் ஜீவக்காற்று..!
ஐம்புலனும் ஐம்பூதமும் ஒன்றோடொன்று 
அடித்துக் கொண்டு நுழையும் வேளை ....
ஜோதியும் மாறிடும் நட்சத்திரம்..!

மௌனம் மௌனத்துள் 
மௌனமே சாட்சியாய் 
தெரிந்த மொழிகளும் 
விலகிச் செல்ல 
தெரியாத மொழிகள் 
வசப்பட...!
அடங்கிய பாம்பு நெளிந்து நிமிர..!
நாடி தாண்டிச் சீறிப் பாய..
அடக்கத் தெரியாத ஜீவன் 
சீற்றத்தில் நிமிர்ந்த நாகம் 
நாகமணி கண்டு நடுங்கி ஒடுங்க 
ஆன்மிகம் கூட அர்த்தமற்றதாக..!

அண்ட சராச்சரமும் 
மாயையாய்  ஆவியாய்..
வெட்டவெளியில் பாதையறியாத 
பயணத்தில் வந்த இடம் அறியாமல் 
சென்று சேரும் ஜீவன்...!
எழுதிய சிந்தனைகள் 
இதயத்தின் வைர மணிகள் 
எளியோர்க்கும் எளிமையாய் 
எடுக்கவும்  தொடுக்கவும் 
உயிரின் லீலைகள் காண்பாய்..
உயர்வே உயிர்...!

--------------------------------------------------------------------

ஜெயஸ்ரீ ஷங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக