ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சகலகலாவல்லி



ஹம்ஸ வாகனத்து வேணி நிந்தன்
கமலபாதத்திலே சிரசு வைத்தேன்..

ஆடி நடுங்குதடி உயிர் ஓசையுடன்
நிந்தன் பாதப் பதமலர் பற்றிவிட்டேன்

நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்

நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி   
அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி

பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது

மரகத வல்லியே மனங்கமழும் அல்லியே ...
சகலகலா வல்லியே மனமிரங்கென் அன்னையே..!


திங்கள், 7 அக்டோபர், 2013

சக்திரதம்






உக்ரஸ்வரூபிணி  சரத்கால நாயகி 
மகிஷனை வதமிட்ட  ஸ்ரீமஹாகாளி ....நீ..!

நவவித பூஜையும் நவவித அலங்காரமும் 
வன்னி இலைகளில் ஸ்வர்ணஸ்வரூபிணி..நீ 

விழிகள் நனைந்திட தேவியுனைத் தொழுதேன்...
தாள்பணிந்தேன்  நிந்தன் கருணை எனக்கென்ன, நீ 

எட்டாத வானமோ....?  கிட்டாத  வரமோ?
தட்டாதே....தந்திடுவாய் ..ராஜநாக ஆசனத்தில், நீ  

அலங்கார பவனி வரும் பாவானியே -பொன்வீணை 
மீட்டிடும் ராஜமாதங்கியே -  மரகதமே, நீ 

மன வீணையினை உறங்காது நீலாம்பரி 
மீட்டிடவே விரைந்தென் அகம் வாருமே..நீ 

ரக்த பீஜனை வதமிட்ட ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி 
உன்மத்தங்கள் அழித்து உன்னதம் தாருமே, நீ 

வித்தைகள் நல்கும் நாயகியே சிவதூதியே 
உனைக் காணக் கோடிக் கண்கள் ஒளிருமே, நீ 

நவராத்திரி நாயகியாய் உந்தன் தேவி மாகாத்மியம் 
போற்றித் துதி செய்தோம் நலங்கள் நல்கிடவே, நீ 

இணையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்திடவே 
சக்திரதம் பிடித்திழுத்தோம் சடுதியில் இறங்குவாய், நீ.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நித்யகல்யாணி










வெற்றி நல்கும் நாயகியே - பயமில்லா 
நெஞ்சத்து மணிபூரகமே - அம்பா 

ஒளிலோகங்களில் கோலோட்சி 
ஆளும் ஜெகதாம்பிகே..ஜெகதம்பே 

மின்னல் கொடியே  காருண்யமே 
பவதாரிணி நீயே - ஸ்ரீதளா தேவி  

ரத்னாபரணங்கள் பூண்டு இந்த்ர 
தனுஷும் ஏந்திய பரிபூரணியே..!

பூலோக ஜ்வாலையில் பூவாகச் 
சொரிந்து கருணைக் கண்களால் 

ஈரேழு லோகங்கள் ஆள்பவளே - 
சுகானுபவத்தில் ஆனந்தலஹரி நீயே..!

சக்தியே... ஸ்ரீசக்ர நாயகியே - நித்யகல்யாணி 
சுதர்சன ஜீவத்துள் வர்ஷிக்கும் வசுந்திரியே  

யாவர்க்கும் அருளும் பங்கயவல்லி 
யாதுமாகிக்  காக்கும் சௌதாமினி 

வாக்தேவி யே நீலாக்னி நீல சரஸ்வதி..!
நமஸ்தே நமஸ்தே நமோஸ்துதே..!






வெள்ளி, 4 அக்டோபர், 2013

நவராத்திரி ரதமேறி

Inline image 2

மேகத்துள் மழைநீராய் உறைகின்றாள் - சக்தி
மும்மாரி பொழிந்து பயிர்காப்பாள் - அவளே...
விண்ணுக்கும் மண்ணுக்கும் கற்கண்டாய் - ஒளி
விருந்தளித்து ரக்ஷிக்கும் ரஞ்சிதமே...!


ஆயிரம் நாமங்களை உணர்த்துபவள் - தேவி
கடைக்கண்களால் ஏழுலோகம் காத்தருள்வாள் - அவளே
மலரினுள் மகரந்தமாய் சிரித்துடுவாள் - அலைமகளே
தும்பிசூழும் பங்கயத்து நாயகி..!


மஞ்சளிலே நிறைந்திருப்பாள் மங்களவல்லி - மங்கலக்
குங்குமத்தில் குதூகலிப்பாள் கோமளவல்லி - அவளே
செவ்வரளிப் பூவனத்தில் கொலுவிருப்பாள் - மலைமகளே
வரமளிப்பாய் மங்கலங்கள் தங்கிடவே..!


மனோலயத்துச் செல்வங்களைக் கடாக்ஷமாய் - சொரியும்
வாக்தேவியவள் பூவுலகின் பூஷணி - பரிபூரணி
பிரம்மனுக்கு நாயகியே வேதாந்தரூபிணியே - கலைமகளே
நவராத்திரி ரதமேறி பெருந்தேவியர் வாருமே...!