திங்கள், 20 ஜனவரி, 2014

இன்று போய் நாளை வா...!





ஜன்னல் வழியாக அவன் முகத்தைப் பார்த்ததுமே, கமலாவின் கை ஜாடையைப் புரிந்து கொண்டு அவன் அந்த வீட்டைத் தாண்டி வேகமாக நடந்தான்.

யாரது? சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர், 'பதில் தேவையே இல்லை' என்பது போல உப்புச் சப்பிலாமல் ஒரு கேள்வி கேட்டு விட்டு தான்பாட்டுக்குச் சாப்பிடலானார்.அவரது ஆபீஸ் போகும் அவசரம் அவருக்கு.

இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை....பேப்பர்காரன். ஒற்றை வரியில் அவரது கேள்வியை அமுக்கிவிட்டு "ஜீ தமிழில்" பாரம்பரிய சமையல் நிகழ்ச்சியாக அன்றைய 'அஞ்சறைப்பெட்டி' யை ஆவலுடன் பார்க்க சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள் கமலா..

பேப்பர் காரன் என்றால்...."பே.....ப் ....ப.....ரே........ய் ...." ன்னு ஒரு டிரேட் மார்க் சத்தம் வருமே என்ற சந்தேகம் கூடவா வராது இவருக்கு? நினைத்ததும் நமுட்டுச் சிரிப்பு வந்தது அவளுக்கு. நான் என்ன சொன்னாலும் இப்படி நம்பி விடுகிறாரே....எம்புட்டு நல்லவர்...! என்ற சந்தோஷமும் ஒரு பக்கம் கூடவே குதியாட்டம் போட்டது.

அவன் மறுபடியும் வருவானோ? என்று பயந்த கமலா, ஒருவேளை வந்து நின்றால்.....இவர் கண்ணில் பட்டுவிட்டால்...? தனது குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற சந்தேகத்தோடு, ஜன்னல் பக்கமாகப் பார்வையை ஓட விட்டவள்.....இந்நேரம் நாலு வீடு தாண்டி போயிட்டிருப்பான் என்று தனக்குள் சமாதானமடைந்தாள். கூடவே இன்னொரு மனது "சீ....நீ பண்றது ரொம்ப தப்பு.....இத்தனை வயசாச்சு உனக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்..." என்று இடித்தது. 'ப்ச்' என்று கோவை சரளா ஸ்டைலில் மனசாட்சியை உதாசீனப் படுத்திவிட்டு 'அஞ்சரைப்பெட்டிக்குள்' தன்னைத் அடக்கிக் கொண்டாள்.

"முதலில் அடுப்பை ஏற்றி, அதில் வாணலியை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ..." என்று சமையல் குறிப்புகள் வீடெங்கும் கேட்டது.

டீ ......கமலா.....உனக்கென்ன சமையல் தெரியாதா? இனிமேட்டா இதைப் பாத்துக் கத்துக்கிடப் போறே நீ ? எனக்கு இன்னும் கொஞ்சம் பீன்ஸ் கறி போடு. அப்டியே இன்னும் கொஞ்சம் தண்ணி எடுத்து வை. தயிர் சாதம் பிசைந்த கையை விரல் விரலாக வாய்க்குள் விட்டு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அவர்.

நான் ஒண்ணும் பார்த்துப்புடக் கூடாதே...உங்களுக்கு. நான் எதைப் பார்த்தாலும் பொத்துக்கிட்டு வந்துரும் . இத்தை ஏன்...பாக்கறே...? அத்தை ஏன் பார்க்கறேன்னு......இந்த டிவி பெட்டியும் அதுல வர நூறு சானலும் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் சாசனம் எழுதிக் கொடுத்திருக்குறாப்பலல்ல கேட்குறீங்க?

கல்யாணமாகி இந்த இருபத்தைஞ்சு வருஷத்துல எப்பவாச்ச்சும் நான் நினைக்கறதை நீங்க ஏத்துக்கிட்டு இருக்கீங்களா? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். என்னமோ நீங்க மட்டும் கவச குண்டலத்தோட பொறந்த கர்ணன் மாதிரி ரிமோட்டும் கையுமா பொறந்தாப்பல உள்ளங்கைக்குள்ள வெச்சுகிட்டு உங்க நாட்டாமையை நடத்துங்க. கோபத்தோடு எழுந்து டிவியை அணைத்து விட்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

கோபத்தோடே வந்து அவரது தட்டில் 'சொத்' தென்று விழுகிறது பீன்ஸ் கறி. 'டொக்' கென்று பக்கத்தில் தண்ணீரை வைத்து விட்டு அதுவும் பத்தாது என்று பார்வையால் அவரைக் வெடுக்கென்று கொத்திவிட்டு நகர்கிறாள் கமலா.

இந்தா கமலா....இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு நீ இம்புட்டு டென்ஷன் ஆகுற? நாங்க தொலைஞ்ச பொறவு பகலெல்லாம் நீ தானே வீட்ல தனியா இருக்கே. களுத கெட்டாக் குட்டிச் சுவருங்கறாப்பல பொழுதன்னைக்கும் நீயும்...அழுமூஞ்சி .சீரியலுமாத் தானே கும்மியடிப்பீங்க என்கிறார்.

என்னங்க நீங்க...? அப்ப நான் வீட்ல வேற ஒண்ணுமே செய்யுறதில்லையின்னு முடிவு பண்ணி சொல்ல வாரீங்களா? இந்தாங்க பிடிங்க....உங்க டிபன் பாக்ஸு ....என்று கையில் வைத்து அழுத்தித் திணித்து விட்டு. உங்க மூணு பேத்தையும் ஆபீசுக்கு அனுப்பி வெக்கிறதுக்குள்ள நான் படுற பாட்டைத் தான் "அவ்வை சண்முகி" படமாவே பிடிச்சிக் காமிச்சிட்டாங்கல்ல.

ப்ரியா இங்கேர்ந்து அம்பத்தூர் போகணும்.....அதுக்கு ஏழு மணிக்கே கால்ல சக்கரத்த மாட்டிக்கிறணும். நம்ப பிருத்விக்கி வடபழனி போகணும்....அவன் எட்டு மணிக்கி ரெக்கையைக் கட்டிக்கிருவான். நீங்க ஒம்போது.

அடியேய்.........!

இல்ல....ஒன்பது மணிக்கிக் கிளம்பற பார்டின்னு சொல்ல வந்தேன். உங்கள வேற எதாச்சும் சொல்லிப்புட்டு நான் நிம்மதியா இங்க மூச்சு விட்டுற முடியுமா? என்று பெருமூச்சு விடுகிறாள் கமலா. உங்க மூணு பேத்து வயித்துப் பாட்டைப் பாக்குறத்துக்கு நான் நாலு மணிக்கேவுல்ல எழுந்து 'அடுக்குளை நாட்டியமாட' வேண்டியிருக்குது. எனக்கு மட்டும் என்ன மாசம் பொறந்தா சொளையா யாரு அள்ளிக் குடுக்குறா? அன்புக்கு நான் அடிமைன்னு....பெத்ததுங்களுக்கு அடிமையாக் கெடக்கேன்....சலித்துக் கொண்டு சொல்லும் நேரத்தில்,

வாசலில் கேட்டைத் தட்டும் சத்தம் கேட்கிறது.

மூடிய வாசற்கதவுக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னலைத் தள்ளி விட்டு யாரென்று பார்க்கிறாள்.

பால் காசும்மா......! பால்காரப் பையன் பாண்டி நிற்பதைப் பார்த்ததும்.

"நாளைக்கி வாப்பா" சொல்லிவிட்டு ஜன்னலைச் சார்த்துகிறாள் கமலா.

"அம்மா.....நேத்துக் கூட இதே தான் சொன்னீங்க..." அவன் கேட்பது அவனுக்கே போய் சேர்ந்திருக்கும்.

"நாலு தரம் அலைஞ்சா என்ன...? நீ வந்து நின்னதும் நான் எண்ணிக் கொடுத்திடணுமா? மனசுத்துள் சொல்லிக் கொண்டாள்.

கமலா...அப்ப நான் கெளம்பறேன்....கதவை தாழ் போட்டுக்க. ஊரு கெட்டுக் கெடக்கு. எவன் வந்தாலும் தெறக்காத. ஆமாம்...சொல்லிப்புட்டேன். ஆமா....இந்த மாசம் பால்காசு, பேப்பர் காரன் காசு, கூர்க்கா காசு...பூக்காசு எல்லாம் கொடுத்திட்டியா? பொங்கல் காசு கூட ஆளுக்கு நூறு ரூபாய் எக்ஸ்ட்ராவா தரச் சொல்லி கொடுத்தேனே ..குடுத்தியா? என்று கேட்டவர், நான் தான் அம்புட்டு பேத்துக்கும் ஏற்கனவே சொல்லி வெச்சனே.....காசுக்கு காலை வேளையில மட்டும் வாங்கன்னு..? எப்ப வந்தானுங்க....? நீ எப்பக் குடுத்தே?.

எல்லாம் வந்தானுங்க....எல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாச்சு...என்று இவள் அவசரமாகச் சொன்ன அழுத்தமான பதிலைக் காதில் வாங்காமல்,

படியிறங்கி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறார். ஹெல்மெட்டை சரி செய்து விட்டு லேசாக திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ரோபோ மாதிரி விரைத்து உட்கார்ந்து கொண்டவர்.....அடுத்த நிமிடம் காணாமல் போகிறார்.

அவர் தலை மறைந்ததும், டிவியின் குரல் வீடெங்கும் சுதந்திரமாக ஒலித்தது.

வீடு அலங்கோலமாய் அவளை பயமுறுத்தியது. ஒரு நாள் போல தெனம்.....இதே வேலை. அலுத்துக் கொண்டவளுக்கு,
எரிச்சலூட்டுவதாக வந்தான் கேபிள் டிவி காரன்.

"இன்னிக்கி இல்லப்பா...நாளிக்கி வா..."அவனையும் திருப்பி அனுப்பிய திருப்தி கமலத்தின் முகத்தில் அச்சடித்தது போலத் தெரிந்தது.

இப்படித்தான்..மாதத்தின் முதல் தேதியில் கொடுக்கப்பட வேண்டிய தொகையை தெரிந்தே "இன்னிக்கில்ல நாளைக்கி வா.." என்று சொல்லி வந்தவர்களை குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக்கி கொண்டது அவளுக்குள் இருந்த வில்லித்தனம்.

மாலையில் வழக்கத்துக்கு மாறாக கணவனும், மகனும், மகளும் கூட வீடு திரும்பவில்லை. நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது.
கமலாவுக்கு வயிற்றில் புளி கரைத்து கொதிக்க ஆரம்பித்தது.

அவள் பார்க்கும் வழக்கமான சீரியல்கள் கூட முடிந்து கொண்டே வந்தன. இந்நேரம் மூணு பேருமே வந்திருக்கோணமே,,,.ஏன் இன்னும் காணலை....யாருக்காச்சும்...ஏதாச்சும் ...? நெஞ்சு படபடத்தது. பூஜை அறையில் காசு எடுத்து முடி போட்டு வைத்து கும்பிட்டு விட்டு வந்து, கைபேசியில் தொடர்பு கொள்ள நினைத்தவள், எண்ணைத் தட்டவும்..."தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்" என்று சொன்ன தகவலையே சொல்லிக் கொண்டிருந்த பெண்ணைத் திட்டித் தீர்த்து விட்டு....வாசல் படியிலேயே காத்திருந்தாள்.


"ஷஷ்டியை நோக்க சரவணா பவனார் " என்று மனசு கவசம் பாடியது.

மணி ஒன்பதை நெருங்கும் வேளையிலே "ஹேய்....நான் தான் ஃபர்ஸ்ட்..என்ற ரீதியில் ..ப்ரியாவின் ஸ்கூட்டி வீட்டைத் தொட்டது.

வாடி.....வயித்துல பால வார்த்தே....என்றவள்....இன்னிக்கி என்னாச்சு..இம்புட்டு சீக்கிரமா வந்துட்டே...என்று கிண்டல் தொனிக்கக் கேட்டவள்,.ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டே....? நான் எம்புட்டு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா? இன்னும் ப்ருத்திவியும், அப்பாவும் கூட வரக் காணோம். அடியே....நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே நிக்கிறேன்...ஒம்பாட்டுக்கு போயிகிட்டே இருக்கியே....என்னாச்சு சொல்லுடி...!

உள்ளே சென்ற ப்ரியா, நேராகச் சென்று பிரிட்ஜைத் திறந்து பாட்டிலை எடுத்து மடக் மடக் கென்று தண்ணீரைக் குடித்துவிட்டு 'அம்மாடி....இப்பத் தான் நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே நேராக இரு வரேன்...வந்து சொல்றேன்...என்று பாத்ரூம் சென்று 'டப்'பென்று கதவை அடைத்துக் கொள்கிறாள்.

அப்போது, வாசலில் கணவரின் ஸ்கூட்டர் உருமும் சத்தம் கேட்கவும், கமலா வாசலுக்கு ஓடுகிறாள்.

என்னங்க...வந்துட்டீங்களா.....? இப்பத்தான் பாப்பா வந்துச்சு. இன்னும் பிருத்வி வரவேயில்லை. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருச்சோன்னு நான் பதறிப் போயிட்டேனில்ல என்கிறாள்.

உள்ளே வந்தவர், ஷர்ட்டைக் கழட்டி கோட் ஸ்டாண்டில் மாட்டியபடியே, "பதறிட்டே கெடக்காத , சூடா காப்பி கொண்டா...." என்றவர் வாஷ்பேஸின் குழாயைத் திறந்து 'சளக் ...சளக் ' என்று தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டு, துண்டால் துடைத்தபடியே.....'ஒரு பார்ட்டிக்கு ரெண்டு மெஷின் சப்ளை பண்ணி...ஆறுமாசமாச்சு...ரெண்டு டியூ தான் கட்டியிருக்கான்....நாலு மாசமா பணமே வரலை....எப்பக் கேட்டாலும், அடுத்த மாசம் சேர்த்துத் தாரேன்னு சொல்லிச் சொல்லி மாசத்தைக் கடத்திட்டு போயிட்டே இருந்தான்....' அதான் இன்னிக்கி எங்க முதலாளி என்கிட்ட 'அங்க போயி பணத்தை வாங்கிட்டுத் தான் நீங்க வீட்டுக்கே போகணுமின்னு சொல்லிட்டார். அதுக்குப் போனவன் தான்...அந்தப் பார்ட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டேன். "நாளிக்கி வாங்க...செக் தரேன்னு சொல்லிப் பார்த்தான்..." செக்கு தானே தரபோறீங்க ,அதை இப்பவே தர வேண்டியது தானேன்னு, நானும் விடாக் கொண்டனா நின்னு அவன்கிட்ட செக்கை வாங்கிட்டு வாரதுக்குள்ளார தாவு தீந்து போச்சு. அதான் லேட்டு. பணம் என்ன கொஞ்சமா? அம்பதாயிரம்....காசோலை...இதுவும் செல்லுமோ செல்லாதோ...! என்றவர் காசோலையைக் காண்பித்து விட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஏன்...பாப்பா...உனக்கு இன்னிக்கி இம்புட்டு லேட்டாச்சு? என்று ப்ரியாவை கேட்டுக் கொண்டே சூடான காப்பியை உறிஞ்சினார்.

ஆசுவாசமாக சோபாவில் சாய்ந்து கொண்ட மகள் பிரியா, "இன்னிக்கி கம்பெனில செமக் கடுப்புப்பா. மூணு மாசம் முன்னால நான் ஒரு 'பிராடக்ட் லாஞ்சு'க்கு ஒரு ஈவென்ட் கான்ட்ராக்ட் ஆர்டர் க்ளோஸ் பண்ணினேன். அவங்களுக்கு நல்ல படியா செஞ்சும் கொடுத்தாச்சு. பாலன்ஸ் பேமெண்ட் இன்னும் அவங்க கிட்டேர்ந்து வரலை. எப்பக் கேட்டாலும், நாளைக்கி...நாளைக்கின்னு சொல்லிக்கிட்டே இழுத்தடிக்கிறாங்க. அதான் இன்னிக்கு நேரா அவங்க கிட்டப் போயி உட்கார்ந்து
பார்த்தேன். கடைசி வரை, வாங்க முடியலையே.நாளைக்கி வாங்க, பார்க்கலாம்னு சொல்லியனுப்பிட்டார். இவனுங்கல்லாம் எதுக்கு பிரமாண்டமா பிராடக்ட் லான்ச் கொடுக்குறாங்க ..?.கெட்ட கேட்டுக்கு ...'ஈவண்ட் ஆர்கனைசிங்' வேற....வரும்போது ரொம்ப பவ்யமா வருவாங்க.....பேமென்ட் கேட்டா மட்டும் காலண்டரைக் காட்டுவாங்க. சலிப்புடன் சொன்னவள்...அம்மா..ரொம்பப் பசிக்குது, சாப்பாடு எடுத்து வெய்யுங்க என்கிறாள்.

'பிருத்திவியும் வந்துடட்டும் என்று சொல்லப்போன கமலா, வாசலில் அவனது 'அப்பாச்சி பைக்,அப்பாடா என்று கண்ணை மூடியதும்'...இதோ அவனே வந்துட்டான்....அவன் என்ன கதை சொல்லப் போறானோ? என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் ஓடினாள் தட்டுக்களை எடுக்க.

என்னாச்சுண்ணா......நீயும் லேட்டு...? நாங்க ரெண்டு பெருமே இப்பத் தான் வந்தோம் என்கிறாள் ப்ரியா.

'கலெக்சன் விஷயமா போயிருந்தேன்..மறுபடியும் நாளைக்குப் போவணும் ....இவன் இருந்தா அவன் இல்ல....அவன் இருந்தா இவன் இல்லன்னு....சாவடிக்கிறானுங்க, லோன் வாங்கும்போது நெறைய பீலா விட்டு வாங்கிட்டு ஓடிடுறாங்க, பணம் திரும்பக் கட்டும்போது மட்டும் என்னவோ மாமனார் வீட்டுலேர்ந்து சீதனம் வந்தா மாதிரி மறந்து போயிறுவாய்ங்க. இன்னிக்கிப் போயி ஒரு பிடி பிடிச்சேன்....எப்டியும் நாளைக்கி பைசல் பண்ணிருவேன். காரணத்தைச் சொல்லி விட்டு 'ம்மா...வெளிலயே நான் புரோட்டா சாப்டேன். படுக்கப் போறேன்....பொதுவாகச் சொல்லிவிட்டு கைபேசியுடன் அவனது அறைக்குள் சென்றான் பிருத்வி.

சாப்பாட்டுக் கடை முடிந்து, அவரவர் படுக்கையில் விழுந்தனர். அலைச்சலும், அலுப்பும் ஒன்று சேர கணவரின் மெல்லிய குறட்டையொலி அவரது தூக்கத்திற்கு தாளம் போட்டது. சுவர்க்கோழி இரைச்சல் போட்டது. கமலாவுக்குத் தூக்கம் வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் காதுக்குள் 'ஊய்ங்....' என்று கேட்டுக் கொண்டிருந்தது. நானும் தான் அம்புட்டு வேலை பண்ணேன் இன்னிக்கு. படுத்தா இப்படித் தூக்கம் வரலியே....ஏன்? பசங்க பாவம்.....வண்டியில நாயாப் பேயா அலையுதுங்க...இந்த வயசுல இவருக்கும் இம்புட்டு அலைச்சல் உடம்புக்கு ஆவாது...தான்...என்ன செய்ய..? மனத்தின் எண்ண ஓட்டத்தை தட்டி நிறுத்தியது 'சத்தம்'.


மேலும் ஒரு முறை கேட்டில் பலமாக இன்னொரு அடி....! 'படீர்' என்று சத்தம்...!

வாசலில் கூர்க்கா.......இவர்களது இரும்பு கேட்டை தனது கட்டையால் ஓங்கித் தட்டிவிட்டு நீண்ட விசில் ஒன்றை அடித்து விட்டு தான் இரவில் ஒழுங்காக டூட்டி பார்க்கிறேன் என்ற அடையாளத்தைச் சொல்லிவிட்டு நகர்கிறான்.

கமலா, காலையில் ஜன்னல் வழியாக அவன் முகத்தைப் பார்த்ததுமே, "நாளைக்கி வா" என்று கை ஜாடை காட்டி அவனை விரட்டியது இப்போது நினைக்கையில் மனதை என்னவோ செய்தது.

பாவம் அவன்.....இரவெல்லாம் தூங்காமல் நடந்து நடந்து 'காலனியைக் காவல்' காத்து விட்டு, காலையிலும் ஒவ்வொரு வீடாகப் போய் நின்று, அத்தனை வீட்டிலும் மாதாந்திரப் பணம் வசூலிக்க மாதம் முழுதும் பகலிலும் நடந்து கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறாள் கமலா.

இனிமேட்டு பால்காரன், பேப்பர்காரன், கேபிள்காரன், காவல்காரன்...என்று யாரையும் 'நாளைக்கி வா" திருப்பி அனுப்பக் கூடாது என்று நினைத்துக் கொண்ட கமலா அப்படியே அமைதியில் உறங்கிப் போகிறாள்.

======================================================================================================================






-

3 கருத்துகள்:

  1. கமலா மாறினது மிகவும் மகிழ்ச்சி... நல்லதொரு கதைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை தோழி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என்னவோ ஏதோவென்று விறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் படிக்க ஆரம்பித்த கதையில் கடைசியில் ஓர் அழகான பாஸிடிவ் ஆன ட்விஸ்ட்.

    //கமலா அப்படியே அமைதியில் உறங்கிப் போகிறாள்.//

    இதுவரை மூன்று கதைகளைப் படித்து முடித்துவிட்ட திருப்தியில் நானும் இப்போ கமலாவைப் போல நிம்மதியாக உறங்கப்போகலாமா அல்லது அடுத்த நாலாவது கதையைப்படிக்கலாமா என யோசித்து வருகிறேன். :)

    பதிலளிநீக்கு