.
என்…னா ..ங்க….! எ…ன்…ன ..ங்க .. எனக்கு வலி கண்டு போச்சு..பளீர் பளீர்ன்னு…காலெல்லாம் இழுக்குது. முதுகுல என்னவோ சுளீர்னு நெளிஞ்சு மேலுக்கு ஏறுது. இடுப்பு வெட்டி வெட்டி வலிக்குதுங்க…எ..ன …க் க் க் ..கு…எனக்கு ரொம்ப பயம்…மா இருக்குதுங்க. சீக்கிரமா வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்க….யம்மாவ் ….வலி தாங்கலியே…கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்து படுத்த வள்ளி, கண்ணீர் வழியும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு பிரசவ வேதனையில் துடிகிறாள்.
இன்னாடி இது….நேரங்கெட்ட நேரத்துல உன்னோட ரோதனை..இந்த நேரத்துல உன்னிய தூக்கிகிட்டு நான் எங்கிட்டுப் போறது..? திடுப்புமுன்னு என் தலையில கல்லைத் தூக்கி போடுறே..? கருக்கல்லயே கேட்டேனில்ல ….எப்ப வலி வருமுன்னு? அப்போல்லாம்…..இன்னிக்கி வராதுன்னு சொல்லிப்புட்டு இப்படி ராவுல வவுத்தப் பிடிச்சுக்கினு கத்துனா, நான் எங்கிட்டுப் போவேன்…மூதேவி…இது தங்கினா தங்கட்டும்…போனாப் போவட்டும் விடு..அடுத்தாப்புல பார்த்துக்கிடலாம்…சொல்லிக் கொண்டே சாவகாமாக ஒரு பீடியை எடுத்து பத்த வைத்தவன், நானே….கையில இருந்த காசெல்லாம் போட்டு ஒரு குவாட்டர் அடிச்சா…ஏறினது …அம்புட்டும் இப்ப எறங்கிப் போச்சுடி…என்றவன் பீடியை ஒரு இழுப்பு இழுத்ததும் என்ன தோன்றியதோ…வீட்டை விட்டு தடுமாறியபடியே வெளியேறி .அடுத்த வீட்டு கதவைத் தட்டினான் குமரேசன்.
எலே பாண்டி…..கதவைத் தொறடா …என்று பட படவென்று தட்டியவன், தான் ஸ்டெடியாக நிற்பது போலப் பார்த்துக் கொண்டான்.கதவு திறந்து பாண்டி எட்டிப் பார்த்ததும்,
வள்ளிக்கி வலியெடுத்துப் போச்சுது. எதுனா பண்ணனும் இப்ப.ஒரு மருத்துவச்சி வந்தாக் கூடப் போதும். எவளாச்சும் கெடைப்பாளுகளா ? இல்லாங்கட்டி, ஒரு நடை ஆசுபத்திரிக்கு போக உதவி செய்வியா பாண்டி…? உன் மூத்த மவன் பாபுவை உதவிக்கி இட்டுண்டு போறேன்….தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை…அவனையாச்சும் கொஞ்சம் எழுப்பி அனுப்பி வெய்யி , செய்வியா? குரலில் குழறல் இருந்தது. அந்த இடமே சாராய நெடியடித்தது.
ஏய்..குமரேசா…..என் மவன் பாபு நேத்து தாண்டா,,,அடகுக்குப் போயிருக்கான். .உனக்கு உதவிக்கு இப்ப நான் தான் வரோணம்..என்றவன் ஆணியில் மாட்டியிருந்த அவனுடைய அழுக்குச் சட்டையை எடுத்து ஒரே சுழற்றில் மாட்டிக் கொண்டவன், அடியே…வெள்ளையம்மா, குமரேசன் பொஞ்சாதி வள்ளிக்கி வலி கண்டுடுச்சாம்..எழுந்துரு புள்ள…என்று ஒரு உலுக்கு உலுக்கி இரண்டு தட்டு தட்டியதும்.
நல்ல தூக்கத்தில் இருந்த வெள்ளையம்மா. திடுக்கிட்டு எழுந்தவளாக, …அடியாத்தி..ஏன்யா….நானும் பிள்ளைத்தாச்சி தான….புத்தியில்ல ஒனக்கு….இப்படி அடிச்சி எழுப்பாட்டி என்னா ..? சரி…போவுது…உடு….இதோ..வென்னித் தண்ணி வெச்சி எடுத்தாறேன்…நீ போயி ஆகவேண்டியத கவனி……கோடிவீட்டு கோவிந்தம்மாளை அழைச்சீங்கன்னா போதும்..இங்கனயே பெத்துப் போட்டுடுவா வள்ளி…என்று தூக்கக் கலக்கத்திலும், சரியாகச் சொன்னவள், அடுப்படிக்கு சென்று பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. கையி மேல ஆளுங்கள வெச்சுக்கினு ஆசுபத்திரிக்கி அலைவானேன்…என்னா ..கோவிந்தம்மாளுக்கு கோணவாயி. வாயில வந்தத ஏசும். போவுது உடு. என்று அடுப்பை பற்ற வைக்கிறாள்..
அடுத்த அரை மணி நேரத்தில் வள்ளியின் அலறல் அதிகமாகி….பிரசவம் முடிந்த அறிகுறியாக குழந்தையின் அழுகைக் குரல் அந்த வீட்டை நிறைத்தது. வெள்ளையம்மாள் வாயெல்லாம் பல்லாக வெளியே வந்து….குமரேசா….உனக்கு இந்த வாட்டி லட்சுமியே வந்து பொறந்திருக்கு…என்கிறாள். அவளது கண்களில் கண்ணீர் பனித்துளியாய் ஒதுங்கி நின்றது.
பொட்டக் களுதையா ? அத்த வெச்சுக்கினு நான் என்னாத்த பண்ணுறது? . வவுத்துல ஈரத்துணி தான்.என்று சலித்துக் கொண்டே இன்னொரு பீடியை எடுத்து பற்ற வைக்கிறான். சீ…த்தூத்தேரி…என்று சொல்லிக் கொண்டே அதை அப்படியே தூக்கி எறிகிறான். குமரேசனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. ஏமாத்திட்டா….இது செலவுக்குப் பொறந்தது. இத்த எப்படி ஈடு செய்யிறது? அவனது மனதுக்குள் ஆயிரம் வட்டிக் கணக்குகள் வந்து போனது.
பிரசவம் முடித்துவிட்டுஅறையை விட்டு வெளியே வந்த கோவிந்தம்மா, ஆமா…குமரேசா…இத்தோட ஆறு புள்ள பெத்துப்புட்டாடா வள்ளி …..போதும்டா…..என்று கையைத் துடைத்துக் கொண்டே….இது பொட்டப் புள்ள….சாக்கிரத…என்று சொல்லிக்கொண்டே அந்த வீட்டை விட்டு வெளியேறியவள்…”கட்டேல போறவன்….எப்ப இங்கன வந்து பீடிக் கம்பெனியை ஆரம்பிச்சானோ” இந்த கிராமத்துக்கே கெரகம் பிடிச்சிப் போச்சு.அடேய்…பிரம்மா….உனக்கே அடுக்குமா இது? உன்னோட பார்வையை கொஞ்சம் வேற எடத்துல காமியேன். இங்கனயே பார்த்துக்கிட்டு, தந்துக்கிட்டே இருந்தா…இந்த சோமாறி நாயிங்க…..பொண்டாட்டியை மூலதனமா வெச்சி…..தூ…வெளங்காத நாயிங்க….! தூ..! என்று தெருவில் துப்பி விட்டு . இவனுகளுக்கு பொஞ்சாதியின்னா புள்ளப் பெக்குற எந்திரமாக்கும். இந்தப் புள்ளைய எடுக்கக்குள்ள நா பட்ட பாடு எனக்கும் அந்த ஆண்டவனுக்கும் மட்டும் தான் தெரியும். வள்ளி வவுத்துப் புள்ளையோட போய் சேர்ந்திருக்கும். அந்த மகமாயி தான் காப்பாத்தி குடுத்தா. என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே தெருமுனையில் இருக்கும் அவள் வீட்டுக்குள் நுழைகிறாள்.அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அந்த இரவின் நிசப்தத்தில் குமரேசன் காதுகளிலும் வந்து விழுந்தது.
ஆமா….இந்தப் பெரிசுக்கு பொறாமை…வேறென்ன? .கையில தெறமை இருக்காங்காட்டியும், அதைவிட வாயி சாஸ்தி..காசுக்கு வருமில்ல….அப்ப கேட்டுப்புடறேன். கருவிக் கொண்டு உள்ளே போனவன், ‘பொட்டச்சிக் களுத…தான..இதுக்கு என்ன இம்புட்டு அவசரம். நாளைக்கு காலேல பொறந்து தொலைச்சிருக்கலாமில்ல. என்று அலுத்துக் கொண்டே, வெள்ளையம்மாக்கா…கொஞ்சம் வள்ளியைக் கண்டுக்கிடுங்க…நான் இது தெரியாமே, ‘டாஸ்மாக்’ கடைக்குள்ளார நுழைஞ்சு தொலைச்சுட்டேன்…உச்சி கிர்கிர்ருங்குது., என்று சொல்லிக் கொண்டே கீழே துவண்டு விழுந்தான்.அந்தச் சின்ன அறையில் சாராய வாடையுடன், குமரேசனின் குறட்டை சத்தமும் சேர்ந்து கொண்டது.
வெள்ளையம்மாள் தலையில் அடித்துக் கொண்டாள். இதுங்களுக்கெல்லாம்…..குடும்பம், பொண்டாட்டி, பிள்ளை…குட்டி…! ம்கும்.. புள்ளையாவது குட்டியாவது…அம்புட்டும் இதுங்களுக்கு பொருளுங்க. ஆமா..பொருளுங்க தான்…!
சும்மாச் சொல்லக் கூடாது . இந்த ஊருல தான் குடும்பக் கட்டுப்பாடே கெடையாதே. வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்குதோ இல்லியோ..? வீட்டுக்கு வீடு புள்ளைங்க அடமானம் போயிருக்கும். அடகு வெச்சு தின்னே பழக்கப்பட்ட உசுருங்க. அஞ்சு வயசானதை வெச்சி, பத்து வயசை மீட்டெடுத்து, அந்த வட்டிக்கி இன்னொண்ணை வெச்சு…இதெல்லாம் ஒரு பொழைப்பு.. நினைத்துக் கொண்டே மயங்கிக் கிடந்த வள்ளியைப் பார்த்தவள், பிறந்த குழந்தையை கையிலேந்தியபடியே, ‘நல்லவேளை….பாப்பா….நீ வந்து பொறந்தே…இல்லாங்காட்டி…உன் அண்ணனுங்க மாதிரி உன்னையும்…எப்படா அஞ்சு வயசாகும்…பீடி சுருட்ட அனுப்பலாமுன்னு உன் அப்பன்காரன் அலைவான்’..ம்ம்ம். உன்னைச் சொல்றேன்…என் நெலமை மட்டும் என்னவாம்…? வித்தாரமெல்லாம் வாய்குள்ளார தான். கண்ணுக்குள் முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்…குழந்தையின் மீது விழ, மிதமான வெந்நீரில் குழந்தையைக் குளிப்பாட்டி எடுத்தவள்,எனக்கும் பாப்பாவே வந்து பொறக்கோணும். பொறக்குமா…ம்ம்…..நீ சொல்லு…என்று பிறந்த குழந்தையிடம் கேள்வி கேட்டு அதன் முகத்தையே பார்க்கிறாள் வெள்ளையம்மாள்.
எதுவோ புரிந்தது போல குழந்தையும் கையை முறுக்கி நெளிந்து நிமிர்ந்து சுருண்டு கொண்டது.
இந்தா…வள்ளி….ரோசாப்பூ மாதிரி அந்த லச்சுமியே வந்து பொறந்திருக்கு. இனிமேட்டு உனக்கு எந்தக் கொறையும் வராது. உன் அஞ்சு புள்ளைங்களும் மீட்டுக்கிட்டு வந்துரும் பாரேன்…என்கிறாள்.
வள்ளி அந்த மயக்கத்திலும் மென்மையாகச் சிரித்துக் கொள்கிறாள். பின்பு மெல்ல, அவுரு எங்கக்கா….? என்று ஈனஸ்வரத்தில் கேட்கிறாள்.
இந்தா….குடிச்சுப்புட்டு வந்து கமுந்தடிச்சு படுத்துக் கெடக்கு பாரு…அவுரு…! என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு…புள்ளைக்கு சக்கரைத் தண்ணி தாரேன். அப்பால பாலக் குடுக்கலாம்…என்றவள் வள்ளி உனக்கு சந்தோசம் தானே?
என்று கேட்டுவிட்டு அவள் முகத்தையே உற்றுப் பார்க்கிறாள்.
வள்ளி மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். இல்லங்கக்கா …..’இத்தை’ அஞ்சு வருஷத்துல கொண்டுட்டு போய் வெச்சா, ‘பெரிசை’ மீட்டுக்கிடலாம்னு நெனைச்சேன். என் நெனைப்புல மண்ணு தான் இது…” எனக்கு என் மூத்த மவென் பிரசாத்தைப் பாக்கவேணும் போல இருக்கு. பிரசாத்து….உனக்கு தங்கச்சி பாப்பா…இல்லேல்லே…… உங்கப்பாவுக்கு தேவையில்லாத பொருளு வந்து சேர்ந்திடுச்சு. என் நெனைப்புல்லாம் உன் மேலயே இருக்குதுடா..! கண்களை மூடிக் கொண்டே மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். கண்கள் சொருக அப்படியே உறங்கிப் போகிறாள்.
ஜன்னல் வழியே சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்ததும், கண்விழித்த குமரேசன், குழந்தையோடு படுத்துக் கொண்டிருந்த வள்ளியைப் பார்த்து, ‘அடியே….வள்ளி….எப்படி பெத்துப் போட்டே..?.ஒரே மேஜிக்கா இருக்குதே…யாருடி உனக்குப் பிரசவம் பார்த்தது? எனக்குக் கெரகம்…ஒரே கிறக்கமா இருந்துப்புட்டேன்….என்றவன், பாப்பாவைப் பார்த்துக்க…நான் ரிக்சா எடுத்தாறேன், ஆசுபத்திரி போயிட்டு வந்திரலாம். எந்திரி…கெளம்பு…சரியா…? அப்படியே உனக்கு
காப்பியோ சாயோ வாங்கிட்டு வந்திர்றேன்.சரியா…? விடுவிடென்று கைலியை இழுத்துக் கட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு, ஒரு பனியனின் தன்னை நுழைத்துக் கொண்டு கிளம்பினான். கையோடு பீடியும் தொற்றிக் கொண்டது.
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சுங்கறது சரியாத் தான் இருக்கு. இன்னிக்கி நேத்தா நான் உன்னிய இப்படிப் பார்க்கிறேன். கிருஷ்ணாபுரத்துக்குள்ளார நான் நுழைஞ்சதும் , உனக்குள்ளார சாராயம் நுழைஞ்சதும். பீடிக் கம்பெனிக் காரன், நம்பள மாதிரி இருக்கப்பட்ட ஏழை பாழைங்க நெஞ்சுல ஏறி மிதிக்கணுமின்னே இங்கன வந்து கம்பெனியை ஆரம்பிச்சு, பச்சைப் புள்ளைங்க தலையை அடகுக்கு எடுத்து உன்னிய மாதிரி குடிகாரனுங்களை வளத்து விட்டு, வெறும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு , மாசக்கணக்கில், புள்ளைங்களை பீடி சுத்தற வேலைக்கி வெச்சுக்கிட்டு…அநியாயம். அக்கிரமமும். இங்கன தானே தலைவிரிச்சி ஆடுது.
இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும். ஒவ்வொரு வாட்டியும் பொட்டப் புள்ள பொறந்தால், அடகுக்கு அனுப்ப மாட்டேண்டு சத்தியம் செஞ்ச குமரேசன். அவனுக்கு சாதகமா பொறந்ததெல்லாம் ஆம்பளப் பிள்ளைங்க தான்.
அவனுக்கு வட்டிக்கி ஈடு இவன்….இவனுக்கு முதலுக்கு வட்டி சின்னவன்…ன்னு ., அம்புட்டு பேத்தையும் கம்பெனிக்கு தாரை வாத்துட்டு வந்தாச்சு. இந்த வாட்டி….முருகன் புண்ணியத்துல பாப்பா….நான் பிழைச்சேன். இவளைக் கூட்டீட்டு போக மாட்டான். இனிமேட்டு எனக்குப் பிள்ளையும் வேணாம்…கொள்ளையும் வேணாம். பிரசாத்து…தம்பிங்களைப் பார்த்துக்கடா..நான் சீக்கிரமா வந்து உங்க எல்லாத்தையும் மீட்டுக்குவேன். நம்ப வீட்டுக்கு லச்சுமி வந்திருச்சுடா. மனசுக்குள் போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள் வள்ளி அம்மா. கழுத்தைத் தடவிப் பார்த்தாள் . நைந்து போன மஞ்சள் கயிறு….நெளிந்து கழுத்தை இறுக்கியது . ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை. பிளாஸ்டிக் வளைவி, பிளாஸ்டிக் முத்து மாலை, சுயமா எந்த வேலை செஞ்சு சாம்பாரிக்க முடியாமே எப்பப்பாரு கர்ப்பிணி வேஷம் கட்டிக்கிட்டு. தூ….இதெல்லாம் ஒரு பொழப்பு..இப்படியும் வாழணுமா ? அவனுக்கு என்ன? இந்தக் கம்பெனில வேலை செய்யுறேன்,,,அந்த கம்பெனில வேலை செய்யுறேன் ன்னு சொல்லிக்கிட்டு, சம்பாரிக்கிற காசை ‘டாஸ்மாக்கு’ கடைக்கு மொய் எழுதிவிட்டு வந்திருவாரு.
ஒவ்வொரு வீட்டுச் செலவுக்கும், பிரசவ செலவுக்கும்…பெத்த புள்ளைங்களை அடமானம் வைக்கிற பொருளாட்டமா , பள்ளியோடம் போகுற பிள்ளைங்கள ஆசையாப் பேசி கூட்டீட்டு போயி….நூத்துக்கும். ஐநூத்துக்கும், வட்டிக்கும், கணக்குக்கும் பீடிக் கம்பெனில விட்டுப்புட்டு ‘பீடிக்கட்டை ‘ பை நிறைய தூக்கிட்டு வந்துரும். இனிமேட்டு இப்படி நடக்க விடமாட்டேன். தீர்மானம் கொண்டவளாக எழ முடியாமல் எழுந்து நின்றாள். தலை சுற்றியது. கண் இருட்டியது.
தன் குழந்தைகளை நினைத்துப் பார்த்தாள். தான் பெத்த மகளைக் கண்கொட்டாமல் பார்த்தாள். பத்து மாசமா என் வயித்துல நீ பாரமாய் இருந்தே …இன்னிலேர்ந்து என் மனசுல…..’ நினைத்தவள் விம்மினாள். ஏழைங்க கலியாணத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதுவும்….இப்படிப் பட்டவனோட எந்த சென்மத்துக்கும் வாழவே கூடாது.மனம் கணவனைத் திட்டித் தீர்த்தது. என்கிட்டே மட்டும் இப்போ நாலாயிரம் இருந்திச்சின்னா , உன் அண்ணன்களை ஓடிப் போயி கூட்டியாந்துருவேன். இம்புட்டுப் பணத்துக்கு நான் எங்கிட்டுப் போவேன்.? கண்ணுங்களா என்னை மன்னிச்சுருங்க..’வள்ளி ன்னு பேரை வெச்சுக்கினு நான் வெறும் ‘சுள்ளியா’ கெடக்கேன். மவளே…உனக்கு நான் ‘ஜான்ஸிராணி’ன்னு பேரை வெக்கிறேன். நீ தான் இத்த கேட்கோணும்.இந்தச் சுத்துப்பட்டு ஊரையெல்லாம் நீ தான் கரை ஏத்தோணும் . செய்வியா…? செய்வியா ஜான்சிராணி.?..குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பற்றிக் கொண்டு இன்னும் வெளிச்சத்தையே பார்த்திராத பச்சைக் குழந்தையிடம் தனது ஆசையையெல்லாம் கொட்டித் தீர்க்கிறாள் வள்ளி.
வெளியே சென்ற குமரேசன், கையில் காப்பியோடு வருகிறான். ‘.இந்தா..நான் தான் உன்னைய ரெடியா இருன்னு சொல்லிட்டுப் போனேனில்ல’..என்றவன், பாப்பாவை இங்கே கொடு…இந்த காப்பியை குடி..சீக்கிரம் கிளம்பு. ரிக்சா வந்திருச்சி…ஆசுபத்திரி வரிக்கும் போயிட்டு வந்திரலாம்.
அதெல்லாம் ஒண்ணும் வேணாம். என்றவள்…எனக்கு எம் புள்ளைங்களைப் பார்கோணும். கூட்டீட்டு போ. என்கிறாள்.
உனக்குக் கொஞ்சமாச்சும் புத்தி இருக்குதா?…இல்ல உனக்கு புத்தி கித்தி இருக்குதான்னு கேட்குறேன். பெத்துப் போட்டு நாலுமணி நேரமாகலை…எங்கியோ…போகணுமாம். எரிந்து விழுந்து அவளை அடக்கினான்.
நாட்களும் வாரங்களும் மாதங்களாகி ஓடிக் கொண்டே இருந்தது. தூளியில் கிடந்த மகள், தரையில் தவழ ஆரம்பித்தாள். ‘ஜான்சிராணி’ என்று வள்ளி அழைத்ததும், கன்னங்குழிய சிரித்தாள். குழந்தையை நெஞ்சோடு வாரியணைத்துக் கொண்டாள் வள்ளி.
அன்று மாலை, அவனது வழக்கமான, கைநிறைய மல்லிகைப்பூவோடு வந்து நின்ற கணவன் குமரேசனை எரித்து விடுபவள் போலப் பார்த்தாள் வள்ளி.
இல்லடி…..வள்ளி..நாளைக்கி நம்ப பிரசாத்துக்கு அடகு முடியுது. அவனும் , தம்பிங்களும் அங்கன பீடி சுத்தி சம்பாரிச்ச காசு எல்லாம் சேர்த்து, பெரியவனை மட்டும் மீட்டுகிடலாம்னு சொன்னங்க. நாளைக்கிப் போயி ‘பொருளை மீட்டுக்கிடலாம்’…உனக்கு சந்தோசம் தானே. அதுக்குத் தான் இந்த மல்லியப்பூ…என்றவன், எங்கே….திரும்பு..திரும்பு..என் கையால..என்றவனைத் தடுத்தவள்,
என்னங்க.. நீங்களும் .நம்ப பிரசாத்தை ‘பொருளுன்னு’ சொல்லிப்பிட்டீங்க.? இன்னும் கொஞ்சம் மாசம் போச்சுன்னா….நம்ப பசங்களை நீங்க மறந்தே போயிருவீங்க. என்றவள், நாளைக்கி நானும் உங்க கூட வருவேன். நம்ப புள்ளைங்களை மீட்டெடுக்க..
ம்ம்…,,ம்ம்…வா..வா….கூட்டீட்டு போறேன். என்று சுரத்தில்லாமல் சொன்னவன்…பத்து ரூபா பாளாப்போச்சு என்று சொல்லிக் கொண்டே மல்லிகைப்பூவை தூக்கி சுவற்றில் எறிந்தான்.
நீ கேட்டதும் தலையாட்டணுமா..? நானும் உனக்கு அடமானம் வெச்ச பொருளா? வள்ளியின் மனம் கொதித்தது.. என்னென்னமோ யோசித்தது. இரவெல்லாம் தூக்கம் வராமல் பிள்ளைகள் நினைப்பு அவளை வாட்டியது. ஐந்து குழந்தைகளுடன் ஜான்சிராணியைத் தூக்கிக்கொண்டு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் போலத் தோன்றியது.
இரவு நீண்டுகொண்டே போவது போலத் தவித்தாள் வள்ளி.
அன்றைய பொழுது புலர்ந்ததும், அதற்காகவே காத்திருந்தவள், தயாரானாள் . குமரேசனுடன், குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரையில் நடந்தே சென்று மயங்கி விழும் நேரத்தில் பீடித் தொழில் நடக்கும் கம்பெனி கண்ணுக்குத் தெரிந்தது. அதன் வாசலில் சென்று நின்றதும், குப்பென்று வந்த அந்த நாற்றம் வள்ளிக்கு வயிற்றைக் குமட்டியது. உள்ளே நுழைந்ததும், வள்ளியின் கண்கள் பிள்ளைகளைத் தேடியது. ஒரு அறையில் சின்னப் பிள்ளைகள் பீடியின் நுனி மடித்து, லேபிள் ஒட்டிக் கொண்டே, அந்தப் பக்கமாக சென்ற
இவர்களை ஆவலில் வேடிக்கை பார்க்கவும், அவர்கள் முதுகில் சுளீரென்று விழுந்த அடியில், வள்ளிக்கு மனத்தில் வலித்தது.
வேலை செய்யும்போது என்ன பாராக்கு வேண்டிக் கெடக்கு? கவனம் சிதறாமல் செய்யணும்னு சொல்லிருக்குல்ல ..என்று பளீரென்று அடித்தான் அந்த முதலாளி.
கண்களில் பயமும், மனத்தில் தைரியமுமாக அந்த ஆபீஸ் அறைக்குச் சென்றவள்….அந்த முதலாளியிடம், காலைப் பிடிக்காத குறையாக அழுதபடியே பேசிக் கொண்டிருந்தாள். ஒருவழியாக அவர் சம்மதிப்பது தெரிந்ததும், ஆனந்தக் கண்ணீர் விட்டபடி வெளியே வந்தாள்.
அங்கே…பிரசாத்தும் கூடவே அவனது நான்கு தம்பிகளும் பிச்சைக்கார பிள்ளைகளாக பரட்டைத் தலையோடு நின்றிருந்த கோலத்தைக் கண்டு நெஞ்சே வெடித்து விட, கண்ணீர் பெருக குழந்தைகளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் .
என்ன குமரேசா? உனக்கு சம்மதம் தானே….உன் சம்மதத்தை யாரு கேட்டா…உன் பிள்ளைங்களை அம்புட்டு பேத்தையும் விட்டுடறேன். வள்ளி கெஞ்சுது. என்றார் முதலாளி.
முதலாளியை கும்பிட்ட குமரேசன் அப்போ பாக்கிப் பணம்…….ஈடு…? குழம்பினான். இருந்தாலும் அல்ப சந்தோசம். வள்ளி வந்து குழந்தைகளை பாசத்தால மீட்டுக்கிட்டா., கொஞ்ச நாளாவது பிள்ளைங்க வீட்டோட…இருக்கட்டுமே. .பெறவு பார்த்துக்கிடலாம்…என்று எண்ணிக் கொண்டான்.
அப்ப….வள்ளி…வந்து இந்த விண்ணப்பத்துல கைநாட்டு வெச்சுட்டு, புள்ளைங்களை மீட்டெடுத்துக்கிட்டு போ…இந்தா குமரேசா….அந்த பேப்பரை எல்லாம் குடு என்று அதிகாரமாகச் சொன்னார் முதலாளி.
ஐயா…..நான் கைநாட்டு இல்லீங்க…நல்லாவே கையெழுத்துப் போடுவேன்…என்றாள் வள்ளி. அந்த நிமிடத்தில் அவள் முகத்தில், கண்களில், மனத்துள் நம்பிக்கை வேர் விட்டது.
படிச்ச புள்ளையா நீயி…என்றவர், ம்ம்ம்…போடு….என்று அந்த நீண்ட விண்ணப்பத்தை அவளிடம் நீட்டினார்.
முதலாளியின் முகத்தை நன்றியோடு பார்த்தவள், குமரேசனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.
வள்ளி….இங்க என்னத்தடி பாக்குற? அதான் பெரிய படிப்பாளியாச்சே நீ…கையெழுத்தைப் போட்டுட்டு வா. பாப்பாவை எம்புட்டு நேரம் நானே தூக்கிட்டு நிக்கிறது. அது என் கையெல்லாம் ஈரம் பண்ணி அசிங்கம் பண்ணிருச்சி பாரு..அதட்டினான் அவன்.
“குமரேசன்” அடகுச் சீட்டு விண்ணப்பத்தில் அழுத்தம் திருத்தமாக எழுதிக் கொண்டிருந்தாள் வள்ளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக