செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

விடுதலை...!
 

வெள்ளையனே வெளியேறு என
வீறுகொண் டெழுந்து வீதிதனில் 
இந்தியாவின் விதி மாற்றப்
போராடிய  விடுதலை வீரர்கள்...
அறிவார்கள்....!

நெஞ்சுக் கனலுள் சுதந்திரக்
காற்றை அடக்கி வைத்து
அடிமைச் சங்கிலி ஆள
குருதிச் சகதிக்குள் இறந்தவர்கள்
அறிவார்கள்..!

உடல் பொருள் ஆவியாவும்
ஆனந்த விடுதலை காண
சங்கே முழங்கென  ஆவேச
அறைகூவல் விடுத்தத் தியாகிகள்
அறிவார்கள்...!

அடிமை விலங்கை அறுத்தெறிந்து  

மூவண்ணத்தை உயர்த்திப் பிடித்து
விடுதலையின் சக்தி கண்டு
அள்ளிக் கொடுத்துச் சென்றவர்கள்
அறிவார்களா?

ஆண்டுகள் அறுபத்தேழு கடந்ததுமே
மறந்ததேனோ  அடிமை வாழ்வு..?
விடுதலை...விடுதலை..ஏன்,,,,
மறந்து போயின அடிமைத்தளை
என்பதை அறிவார்களா?

தலைமுறைகள் கடந்து வந்து
சுதந்திரம் மறைந்து எங்கும்
வெறும் தந்திரம் மட்டும்...!
விலை போகும் அவலநிலை
அறிவார்களா?

சுயநல நாற்காலிகள் ஒவ்வொன்றும்
செய்யும் பெருச்சாளி வேலைகளைக்
கேட்கும் போதே எரிகிறது மனது
இந்தியாவின்  நிலையைத் தந்தவர்கள்
ஏனென்று அறிவார்களா?

பெற்ற சுதந்திரம் இன்னும்
சதம் கூடக் காணவில்லை
பொறுப்பாக நடக்க  வேண்டிய
எதுவும்  வெறுப்பாகிக்  கொண்டிருக்க
அறிவார்களா?

எதிர்காலத்தைத் மறந்து போன
வருங்காலத் தலைவர்கள் எங்கே?
நிகழ்காலத்தைத் தொலைத்து
கேளிக்கைகளில் அமிழ்ந்து போனதை
இதையாவது அறிவார்களா?

மெல்ல மெல்ல மீண்டும் 
சுதந்திரத்தில் அடிமைப்  பட்டுப்
பட்டுப் போவதைப் பார்த்திட
நல்லவேளை, இங்கே.. எந்த
நல்ல தலைவனு மில்லை...!
இன்றாவது அறிவோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக