"நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
ஏனிந்த சிரிப்பு?"
இந்தப் பாடலை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி மனதையும் பறிகொடுத்திருப்பார்கள். அப்படி என்ன ஒரு விசேஷம் இந்தப் பாடலில்.?...அதெல்லாம் தெரியாது...ஆனாலும் ஒரு முறை கேட்ட பின்பு இதயத்தில் நாள்பூரா எதிரொலிக்கும் வரிகள் அனேகமாக எத்தனையோ பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
அப்போது, என் உலகம் சிறியது. வெளிஉலகத்தைப் பற்றி எதுவும் அறியாத சின்னஞ்சிறு வயது எனக்கு. கூடவே, சிறுமிகளுக்கே உரித்தான இருட்டென்றால் அதீத பயம். இரவு நேரத்தில் பயத்தில் உறக்கம் வராது அடம் பிடிக்கும் வேளையிலே 'டிக் டிக் டிக்' எனும் கடிகாரமுள் நகரும் சத்தம் கூடப் பெரிதாகக் கேட்டு எனது சின்ன இதயத்தை 'பயம்' விடாது பிறாண்டும்.அப்போதெல்லாம் 'முருகா...முருகா....முருகா' என்று இடைவிடாது மனத்துள் மந்திரம் ஓதும். அது போன்ற பருவத்தில், சில உணர்வுகள் மனத்தை எளிதாகப் பிடித்துக் கொள்ளும்.
அன்றும் அப்படித்தான், ரேடியோவில் ஒலித்த பலமான சிரிப்புச் சத்தம்..அதை தொடர்ந்து ஒலித்த அந்தப் பாடல். சில வினாடிகள் அப்படியே பாடலோடு ஒன்றிப்போய் சலனமே இல்லாத மனத்துள் ஒரு எதிரொலி. கணீரென்ற குரல்...இறுக்கமான ஒரு மௌனத்தில் புரியாத அர்த்தங்கள் கொண்ட பாடல். ஒலித்து முடிந்த பின்பும் கூட காதுக்குள் அதே ராகம். அன்று முழுதும் திரும்பத் திரும்ப என்னோடு பயணித்த அந்த முதல் வரி....'நதியினில் வெள்ளம்' முதல் நான்கு வரிகள் உள்ளத்தோடு வந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற நிலை. வாய் ஓயாது அதையே முணு முணுத்தபடி நடந்து கொண்டிருப்பேன். அப்படி ஒரு ஆளுமை கொண்ட பாடல் வரிகள். என்னெவென்றே சொல்ல இயலாத ஒரு பிடிமானம் எனக்கும் அந்த இசைக்கும் இடையில் நடந்து கொண்டிருந்தது ஏன் என்று இன்றுவரையில் ஏன் என்று புரியவில்லை எனக்கு.
பாடலைப் பாடியவர் யார் என்றும் தெரியாது, இந்தப்பாடல் எந்தத் திரைபாடப் பாடல் என்றும் தெரியாது, யார் எழுதியது? யார் நடித்தது? என்னும் விவரங்கள் கூடத் தெரியாத, சொன்னாலும் புரியாத வயது. அதிலெல்லாம் அவ்வளவு விருப்பமும் கிடையாது. ஆனால் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் மனத்துள் இருந்து கொண்டே இருந்தது. அந்தக் காலத்தில் பாட்டுப்புத்தகம் வெளிவந்து கொண்டிருந்த நேரம். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வருகிறது என்று மிகவும் கஷ்டப்பட்டு..! கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பாட்டுப் புத்தத்தை வாங்கிப் படித்துப் பாடிப் பார்த்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் பெரிய விஷயமாகவே இருக்கிறு. ஒருவேளை அதுவே எனக்கும் திரையிசைப் பாடலுக்குமான ஒரு பாலமிட்ட நேரமாகக் கூட இருந்திருக்கலாம். அதன் பின்பு சரியாக தமிழ் படிக்கவே தெரியாத வயதில், பள்ளிக்கூடப் புத்தகப் பையில் 'தேனும் பாலும்' பாட்டுப் புத்தகத்தைப் பார்த்த என் அம்மா 'அடியும் உதையும்' கொடுத்து நான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த பாட்டுப் புத்தகமத்தைக் கிழித்து வென்னீர் அடுப்பில் தூக்கிப் போட அது சாம்பலானதும், நான் அழுது கொண்டு நின்ற போதும் கூட என் ஆழ்மனத்துள் 'நதியினில் வெள்ளம்' பாடல் தான் ஆலய மணி போல ஒலித்தது. இதோ.....இன்றும் நாற்பது வருடங்கள் கழிந்தும் நடந்து கடந்த அந்நிகழ்வு அப்படியே நினைவில் நீங்காது உள்ளது.
காலங்கள் பல கடந்த பின்னருமிந்தப் பாடல் வரிகள் மட்டும் படத்தைத் தாண்டியும் வாழும் வரிகளாகவே இருப்பதற்குச் சாட்சியாக
சமீபத்தில் நான் வடலூர் வள்ளலார் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம், யாரோ இருவர் தெருவில் மிகவும் சத்தமாக இந்தப் பாடல் வரிகளைத் தான் பாடிக் கொண்டு சென்றனர். அதே வரிகள்...மீண்டும்...நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு...!
ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதுக்குள் இன்னும் வாழுந்து கொண்டிருக்கும் பல பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர்.கண்ணதாசன் அவர்களை மனதார நினைத்து பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த விஷயத்தில் இந்தப் பாடல் திரைப்படத்தையும், காலத்தையும் வென்ற பாடலாகவே நான் நம்புகிறேன். இந்தப் பாடலை ரசித்தவர்கள் என் கருத்தையும் ஏற்றுக்கொள்வார்கள்.
இணையம் வந்த பிறகு காணொளி கிடைத்த பிறகு, நினைத்தபோது நினைத்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு அதிகமான போது ,
இந்தப் பாடல் காட்சியைப் பலமுறை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஒன்று மட்டும் புரிந்தது, எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் நாற்பது வருடங்கள் முன்னமே உள்ளத்தின் உணர்வுகளை பக்குவமாக, ஆழமான வரிகளால் எடுத்துச் சொல்லி அதை காலகாலத்திற்கும் உயிர்ப்போடு வாழவைக்கும் கவிஞர் அவர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டே இருக்கலாம்.
அந்தப் பாடலில் ஒரு வரி வரும். 'தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு ' என்ற அந்த வரிக்கு ஏதுவாக கவிஞரின் பாடலுக்குக் கட்டுரை எழுதும் இந்த சமயத்தில் நானும் அதே எறும்பின் நிலை போலத் திணறுவதாகத் தான் உணர்கிறேன். எதைச் சொல்ல எப்படிச் சொல்ல.....! திகைப்பு தான்..! எத்தனை அழகான வரிகளுக்குச் சொந்தக்காரர் அவர். கவிதைக்கடல் தான் அவரின் அறிவு.
அந்தக் கடல் எத்தனை ரசிக நதிகளுக்கு கவிதை ஆற்றை வாரி வழங்கி இருக்கிறது. அத்தனை பேர்களும் அந்த இன்ப வெள்ளத்தில் நினைத்த பொழுதெல்லாம் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்பட்ட வரப்பிரசாதம் இது, எனக்கு மட்டுமில்லை....தமிழறிந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், கவிஞர் ஒரு வரம் தான்.
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களும் இந்த பூமிக்கு அவர் பொழிந்த அம்ருதவர்ஷிணி மழை தான். அவரது வரிகளால் தான் திரையுலகமமே பிரகாசமானது. அந்த இசைமழையில் நனைந்த என் மேல் விழுந்த மழைத்தூறல்கள் தான், எனது இதயநதியினில் ஆனந்தவெள்ளமாகப் பெருக்கெடுத்த இந்த உணர்வை இங்கு பதிக்கிறேன்.
உடல், பொருள் , ஆவி என்பது போல...கவிஞர் கண்ணதாசன் எழுதிய எழுத்துக்கெல்லாம் , நடிகர் சிவாஜி கணேசன், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் என இவர்களின் சங்கமத்தில் உயிர் கொடுத்து ரசிகர்களின் உயிர்களைப் இசையால் பிடித்திழுத்த அதிசயமும், அதுவே காலத்தைக் கடந்தும் கேட்கும் போதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆளுமை. எத்தனையோ மனதை நெகிழ்த்தும் பாடல் இருந்தும், எனது இதயம் வருடும் பாடல் என்பதால் இதைக் குறித்து எழுதினேன். நெஞ்சிருக்கும் வரை இந்த வரிகள் நினைவிலிருக்கும், அத்தனை மெல்லிய உணர்வுகளை அமைதியின் ஆழத்தை உணரச்செய்ய இந்தப் பாடல் எவர் எப்போது எங்கு கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும். இதுவே இந்தப் பாடலும் அதன் வரிகளும் பெற்ற வெற்றி. வாழ்கிறார் கவிதைக்கடல் கண்ணதாசன், நதியினில் வெள்ளமாக..!
உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள் இதோ:
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏணிந்த சிரிப்பு....
ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...
தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு
இறைவனின் சிரிப்பு...
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது இதில்
தர்மம் எங்கு போனது?
ஒரு பக்கம் இருட்டு
ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு
இறைவனின் சிரிப்பு...
கவி:கண்ணதாசன்...
படம்: தேனும் பாலும்
பாடியவர்: டி .எம்.சௌந்தரராஜன், அவர்கள்.