ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நரகம் பக்கத்தில்

"கல்யாண மாலை" க்கு வலைவீசித் தேடித் தேடி உள்ளூரில் மருமகள் வேண்டும் என்ற ஆசையை மட்டும் கனவாக வைத்து, திவ்யாவை கண்டுபிடித்தனர் ராஜேஷின் பெற்றோர். ராஜேஷ் ஒரு தனியார் கம்பெனியில் முக்கிய பதவியில் இருப்பவன்."மனதைப் படிக்கும் கலை அறிந்தவன்". கோபமும், குணமும் சேர்ந்து குடிகொண்டிருக்கும் நல்லவன்.

ஆரம்பத்தில், தனக்கு இப்போ கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்த ராஜேஷ், திவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் கோயில் புறாவாக மாறி அமைதிச் சிறகை அடித்து சமாதானப் புறாவாக மாறினான்.

குடும்பத்தில் ஒரே பெண்ணான திவ்யாவை , தங்களின் ஒரே மகன் ராஜேஷுக்குப் பேசிமுடித்துக் கல்யாணம் வரை இழுத்துச் சென்று
'ஹனிமூனுக்கு' ஊட்டிக்கு அனுப்பி வைத்து, இன்று அவர்களின் வரவுக்காக ஆரத்தி கரைத்து வைத்துக் காத்திருந்தனர் ராஜேஷின் பெற்றோர்.

'ஹனிமூன்' முடித்த கையோடு மனைவி திவ்யாவுடன் நேராக அவளது பிறந்த வீட்டுக்குச் சென்று இறங்கினான் ராஜேஷ். சிறிது நேரத்தில் பால்கனியிலிருந்த தொங்கு ஊஞ்சலில் அமர்ந்து லேசாக ஆடியபடியே திவ்யா கொடுத்து விட்டுப் போன ஆவி பறக்கும் நரசுஸ் காப்பியை ரசித்து உறிஞ்சிக் குடித்துக் கொண்டே கைபேசியில் அப்பாவை அழைத்து , 'ப்பா .....நாங்க நேரா இவாத்துக்கு அதான்....அண்ணா நகருக்கு வந்தாச்சு.....திவ்யா அவ அம்மாவைப் பார்த்துட்டு அப்பறமா நம்மாத்துக்கு போலாம்னு சொன்னாளா, அதான்..சரின்னு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுலேர்ந்து நேரா கால் டாக்ஸி பிடிச்சு இந்தாத்துக்கு வந்துட்டோம்.

"............"

ஹலோ....அப்பா....என்னப்பா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறேள்.....?

நாங்க இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில அங்கே வந்துடுவோம். சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கடமை முடிந்த எண்ணத்தில் கைபேசியை மூடி ஷர்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு தொங்கு ஊஞ்சலிலிருந்து எழுந்தவன், பெருமூச்சு விட்டபடி பால்கனி பக்கம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே கையிலிருந்த காப்பியை கடைசி சொட்டு வரை உறிஞ்சிக் குடித்துவிட்டு , தம்ளரை தரையில் வைத்த கையோடு சிகரெட்டுக்கு உயிர் கொடுத்தான். ராஜேஷோடு கூடவே சிகரெட் பாக்கெட்டும், லைட்டரும் நிழல் போல பயணம் செய்யும். அதை அப்பப்போ தொட்டுப் பார்த்து நிம்மதி அடைந்து கொள்ளும் ஜாதி அவன்.

முதல் இழுப்பில் மனசும் உடம்பும் அப்படியே இன்பமயமாய் மிதப்பது போலிருந்தது. வாய் வழியாக விட்ட வளையத்தில் தானே மாட்டிக் கொண்டு விழிப்பது போலிருந்தது ராஜேஷுக்கு. அத்தனை நேரம் அந்த இடத்தில் பரவிய நரசுஸ் காப்பியின் மணம் அவன் விட்ட புகைக்குள் கலந்து சுயமிழந்தது.

யாரோ... வரும் சந்தடி கேட்டதும், சற்றுத் தயங்கியவனாக கையை பின்னால் கட்டிக் கொண்டு ஓரக் கண்ணால் பக்கவாட்டில் திரும்பி வந்தது யாரெனப் பார்க்கிறான். அவனது திவ்யா தான் வந்து நின்றிருந்தாள். கண்களில் லேசான அன்பு கலந்த கண்டிப்போடு அவனைப் பொய் கோபத்தோடு முறைத்துப் பார்த்தவள்,

என்ன ராஜ்.....இது...இங்க வந்து 'சிகர் ஸ்மெல்" .....? பத்த வெச்சியா...? இந்தக் கொமட்டு கொமட்றது.....எங்கம்மாக்கு இதெல்லாம் அலர்ஜி...தெரியாதோ ? அப்பா வேற இருக்கார்..நான் போனாப் போறதுன்னு சகிச்சுக்கறேன். இங்க வேண்டாமே...ப்ளீஸ்.....முகவாயை
த் தொட்டுக் கொஞ்சிய திவ்யாவைப் பார்த்ததும் பின்புறம் கைகளில் சுடர் விட்டுக் கொண்டிருந்த உயிர்த் துண்டு லேசாக அழுது கொண்டே காலடிச் செருப்பில் அழுந்தி அழுந்தி உயிர் விட்டது.

கால் செருப்பு அழுத்தித் தேய்ப்பதைத் தெரிந்து கொண்டவள்......சமத்துக் கண்ணன்...சொன்னபடில்லாம் கேப்பானாம்....கன்னத்தில் உதட்டைப் பதித்து உசுப்பேத்தி விட்டவள் " ஹேய்....நில்லேன்.." என்று இவன் மென்மையாக அழைத்ததும்,

என்னவாம்.....? கொஞ்சும் குரலில் குழைந்தாள்.

ம்ம்ம்ம்ம்...இப்போ சொல்லு..? உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே? என்று அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டே கேட்ட ராஜேஷ் திவ்யாவின் கைகளைப் அழுத்தமாய் பிடித்துக் கொள்கிறான்.

அய்யோடா......இத்தோட ஒரு ஆயிரம் தடவை கேட்டிருப்பியா? நானும் அதையே தான் சொல்றேன்....நான் கேட்க வேண்டிய கேள்வியை நீயே கேட்டுண்டு இருக்கே....! என்றவள்...சரி..சரி...இப்பக் கையை விடு...! என்று குழைந்தவள், தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டு , திரும்பி நடக்கையில்..."ஐயய்யோ... ஐயய்யோ ...பிடிச்சிருக்கு....எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு....என்னமோ..என்னமோ..பிடிச்சிருக்கு...ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு..." என்ற பாடலை முணுமுணுத்தபடியே அவள் சுற்றியிருந்த தலைத் துண்டை விருட்டென்று அவிழ்த்து விட்டுத் திரும்பி அவனைப் பார்த்து ஒரு மின்சார ஈட்டியை வீசிவிட்டு பால்கனியை விட்டு மின்னலென மறைந்தாள் திவ்யா.

இந்த திவ்யா......எப்பவும் இப்படித் தான்...கொஞ்சினா மிஞ்சுவா.....! மனசுக்குள் நினைத்துக் கொண்டவனாக, இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்க எண்ணி செயலில் இறங்கினான். இருந்தாலும் என்னால அவளைக் கொஞ்சாமல் இருக்க முடியாதோ....?
அவள் மிஞ்சுவதும் ஒரு அழகு தான்...திவ்யா...திவ்யா....என்று மனத்தொடு பேசிக் கொள்கிறான்.

அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பாளோ, அவள் வந்து போனபின்பும், சந்தன சோப்பின் மணமும் , 'லாவெண்டர்' பவுடரின் கம கமவும் ராஜேஷை திணறடித்தது. அவள் அப்படித் திரும்பியதால் நுனி முடியிலிருந்து தெறித்துச் சிதறிய நீர்த் துளிகள் இவன் முகத்தில் பன்னீர் துளியாக பட்டுச் சிலிர்க்க, கண்களை மூடிக் கொண்டவன்.'இதெல்லாம் கூட சுகம் தான்' என்று நினைத்துக் கொள்கிறான்.

சட்டைப் பையிலிருந்த கைபேசி அழைத்தது.
'அம்மாயென்றழைக்காத உயிரில்லையே....
அம்மாவை வணங்காது உயர்வில்லையே" என்று பாடி அழைத்தது..

கைபேசியை எடுத்தவன்,ஹலோ......ம்மா..சொல்லும்மா....!

ஏண்டா......நேரா அங்க போயிட்டியாக்கும்? நல்லாருக்குடா...நீ பண்றது இப்பவே தராசு தட்டு அந்தப் பக்கமா சாஞ்சுடுத்தா?

என்னம்மா....ஏன் இப்படில்லாம் பேசறே? திவ்யா அவ அம்மாவைப் பார்த்துட்டு போகலாம்னு சொன்னாளேன்னு இங்க வந்தோம். ஆச்சு டிபன் சாப்ட்டுட்டு நேரா அங்க தானே வருவோம். அதுக்குள்ள நீ....அதான்...அப்பவே அப்பாட்ட இங்க வந்த விஷயத்தைச் சொன்னேனே, அவர் சொல்லலையா?

ம்...எல்லாம் சொன்னார்...! சுரத்தேயில்லாமல் வந்து சேர்ந்தது அம்மாவின் பதில் வார்த்தைகள்.பையனுக்கு கல்யாணம் பண்ணினோம்னு தானே நீ நினைச்சிட்டு இருக்கே.....தப்பு கோகிலா....பையனைத் தத்து கொடுத்துட்டோம்னு நினைச்சுக்கோன்னு சொன்னார். அதான்டா ராஜூ நேக்கு மனசே கேட்கலை. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்துடுங்கோடா..அம்மாவின் கெஞ்சும் குரல்.அவனைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது..

ம்ம்ம்...வரோம்மா......என்று அழுத்தமாய்ச் சொன்னவன். ச்சே...என்ன அம்மா, இப்படில்லாம் பேசிண்டு....நானா எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யின்னு கேட்டேன். நான் தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேனே , நீங்க ரெண்டு பேரும் தான் நான் என்னைக் கம்பெல் பண்ணி.....என்று அவன் பேச்சை முடிக்கும் முன்னே எதிர் முனையில், "சரிடா....தப்பு...தப்பு.....நீ வரும்போது வா...போதும், நான் வெச்சுடறேன் என்று இணைப்பைத் துண்டித்தாள் கோகிலா.

அதுக்குள்ளே அவங்களுக்கு அடுத்த கவலை வந்தாச்சு என்று நினைத்த ராஜேஷ்,, நாம தான் தப்பு பண்ணிட்டோமோ...என்று நினைத்தவன்...கூடவே...இதுல என்ன இருக்கு...? இவ்ளோ கவலைப் படறதுக்கு என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவனாக, 'திவ்யா.....திவ்யா...'என்று மெதுவாக அழைத்தபடியே ஹாலுக்குள் நுழைகிறான்.

"முத்தமிட்ட மூச்சுக் காற்றில்
பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் என்னை நீ
சிதைத்தாய் போதும்....
ஏதோ ..
எண்ணம் திரளுது கனவில்......"

சோபாவில் ஹாயாக சாய்ந்து படுத்தபடியே டிவியில் 'கோ' படப்பாடல் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டே தானும் அதோடு கூடவே ஹம் செய்தவளாக. அங்கு வந்த ராஜேஷைப் பார்த்ததும், லேசாக நகர்ந்து எழுந்து கொண்டு 'ம்ம்...உட்காரு...ராஜ்.....என்று சிறிது இடத்தை விட்டுத் தரவும்,

இல்லே நாம கெளம்பணும்....அங்க...அம்மா...கூப்பிட ஆரம்பிச்சாச்சு....என்று தயங்கினான்.

எல்லாம் போலாம்...இங்க இன்னும் டிபனே ரெடி ஆகலை. அம்மா இப்பத் தான் செய்ய ஆரம்பிச்சுருக்கா. சாப்டுட்டு சித்த நேரம் இருந்துட்டு போலாமே. இப்பவே என்ன அவசரம்? அங்க போயாச்சுன்னா...அப்பறம் நான் கேட்டாலும் உன்னால உடனே கொண்டு வந்து விட முடியாது. ஆபீஸ்...ஆபீஸ்னு பறந்துண்டு இருப்பே. எனக்கு இங்கே என்னொட திங்க்ஸ் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கணம். ரிமோட்டை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.

திவ்யா....நீ எப்டி போஸ் கொடுத்தாலும் அழகு தாண்டி.....மனசு மேலும் மேலும் அவளது அழகில் மானசிகமாகச் சரண் அடைந்தது.

அம்மா....டிபன் ஆயாச்சா? ராஜ் சீக்கிரமாப் போகணுங்கறான். என்று கணவனிடம் தான் ஏற்படுத்திக் கொண்ட ஏகப்பட்ட உரிமையைப் பறைசாற்றும் விதமாக சந்தோஷமாக கிட்சனைப் பார்த்து குரல் கொடுகிறாள் திவ்யா.

இதோ....ஆயிண்டே இருக்கு.....! அம்மாவின் குரல் மட்டும் வெளியில் வர, ,

அடுத்த அறையில் இருந்து திவ்யாவின் அப்பா தூக்க முடியாத கனத்தில் பெரிய பெரிய சைஸில் இரண்டு கல்யாண ஆல்பங்களைக் கொண்டு வந்தவர்....."மாப்ளே.....இதையும் ஜாக்ரதையா எடுத்துண்டு போங்கோ....வீடியோக் காரன் இதைக் கொண்டு வந்து கொடுத்து ரெண்டு நாளாச்சு. நீங்க வந்ததும் தந்துடலாம்னு வெச்சிருந்தோம். ஃபோட்டோல்லாம் பிரமாதமா வந்திருக்கு. எங்க கண்ணே பட்டுடும் போலிருக்கு ...கொள்ளை அழகு....! என்று பிரமிப்புடன் சொல்லிவிட்டு, எங்களுக்கு ரொம்ப திருப்தி மாப்ளே.எல்லாம் 'அவன்' செயல்.என்று கண்களை மூடித் திறக்கிறார் திவ்யாவின் அப்பா.

கனத்தைக் கையில் வாங்கியவனாக, வாவ்...என்ற ராஜேஷ் ஆவலோடு திறந்து பார்க்கையில் , திவ்யாவின் விரித்து வைத்திருந்த கரங்களில் உள்ளங்கை இரண்டிலும் அழகாக சிவக்கச் சிவக்க மருதாணி மயில்தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது.

எங்கே...திவ்வு.....உன் கையைக் காமியேன்...இன்னும் இருக்கா பார்க்கறேன்....எங்கே...இன்னும் அப்படியே இருக்கா? என்ற ஆவல் ததும்பும் குரலில் கேட்க,

அதென்ன பெயிண்டா அப்படியே ஒட்டிண்டு இருக்க...? மருதாணிப்பா .....ரெண்டு குளியல்ல காணாப்போச்சு...!.அட...போச்சுடா...இப்ப நீ இதைத் திறந்துட்டியா.....? எப்டியும் இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும்.....பாரு...பாரு...அதுவரை எனக்கு ஜாலிதான் என்றதும், பட்டென்று ஆல்பத்தை மூடியவன், நோ...நோ.....அந்தாத்துக்குப் போய் அப்பா அம்மாவோட சேர்ந்துண்டு பார்த்துக்கலாம். என்றதும்,

ரெண்டு பேரும் வாங்கோ சாப்பிட.....டிபன் ரெடி என்ற திவ்யாவின் அம்மா வேக வேகமாக டைனிங் டேபிளைத் துடைத்ததும் ,

என்னம்மா ஸ்பெஷல்.....? கேட்டுக் கொண்டே சோபாவிலிருந்து எழுந்த திவ்யாவைப் பார்த்து ராஜேஷ் சிரித்தபடி.

ஏன்.....திவ்யா? நீ அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா? சாப்பாட்டு ராமி....வாசனை அடிச்சதும் வந்து உட்கார்ந்துட்டா பாரேன்...என்று ராஜேஷ் கிண்டல் செய்ய ஆரம்பித்ததும்,

அங்கே ஒரே சிரிப்பலை. அதைத் தொடர்ந்து, நீ மட்டும் என்னவாம்...? அங்கேர்ந்து பறந்து வரலையா? என்று கையசைத்து சைகை காண்பித்த திவ்யா, அம்மா.....ராஜேஷுக்கு என்னை கேலி பண்ணாட்டாப் பொழுதே போகாது..என்று வெட்கம் கலந்த புன்னகையோடு சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்து அவனை ஓரப் பார்வை பார்க்கிறாள்.

அட....ஆச்சரியமா இருக்கே.......மேடம்...நீங்க நல்லா வெட்கப் படறீங்களே? .என்ற ராஜேஷைப் பார்த்து அவனது அருகில் அமர்ந்திருந்த திவ்யா...."இரு...இரு.....எனக்கும் ஒரு நேரம் வரும்....அதுவும்....இன்னிக்கே வரும்....அப்போ கவனிச்சுக்கறேன் சாரை..." என்று சிணுங்கும் குரலில் காதோடு சொல்கிறாள்.

சாப்பாட்டு மேஜை முழுதும் சுடச்சுட வெண் பொங்கல், ரவா கேசரி, மெது வடை, பில்டர் காப்பி..என்று நிரம்பி வழிந்தது, கூடவே திவ்யாவின் அப்பா அம்மாவின் அன்பான உபசாரங்கள்.

அளவுக்கு மீறி சாப்பிட்டது போலிருந்தது ராஜேஷுக்கு. அவனையும் மீறிக் கொண்டு ஏப்பம் வந்து அவனுக்கு.

சாப்பாடு ராமன்...என்று சிரிக்கிறாள் திவ்யா.

மாமி....பில் எவ்ளோ..? என்று வேடிக்கையாகக் கேட்டுவிட்டு திவ்யாவைப் பார்க்கிறான் ராஜேஷ்.

உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ...ஆனால் நாங்க 'வெறும் 'டாலர்' தான் அக்செப்ட் பண்ணுவோம்.....நோ....இன்டியன் ருபீ...இல்லியாம்மா... என்று திவ்யா சொல்லிச் சிரிக்கிறாள்.

ஆஹா....கொடுத்துட்டாப் போச்சு...என் கிட்டே ரெடியா ரெண்டு திருப்பதி டாலர் இருக்கே....டு வைட் ஒன் ரெட்..என்று ராஜேஷும் சளைக்காமல் பதில் சொல்ல,

திவ்யா....கிர்ர் ர் ர் ர் ர் ......என்று குரல் கொடுக்கிறாள்.

இவர்களது சந்தோஷத்தில் அந்த வீடே கலகல வென்றாகிறது.

மாமி.....ஜோக்ஸ் அபார்ட்...நிஜம்மா......ஸ்டார் ஹோட்டல் தோத்தது போங்கோ....கை மணம்னு இதைத் தான் சொல்வாளோ. சூப்பர்ப் ...என்றவன், எங்கம்மா கூட இப்படித் தான் ரொம்ப நன்னா சமைப்பா.

அப்டியா...? திவ்யா தான் இனிமேல் அவர்ட்டேர்ந்து எல்லாம் கத்துக்கணம் என்று அவளது அம்மா சொன்னதும்,

திவ்யாவின் மனம் ஒரு நிமிடத்தில் சுருங்கியது. முகத்தை சிரித்தபடி வைக்க முயற்சி செய்து தோற்றவளாக, உங்க அம்மாட்ட சொல்லி இனிமேல் எனக்கு சமையல் கத்துத் தரச் சொல்லேன் ராஜேஷ்...குரலில் சற்று கண்டிப்பை வரவழைத்துக் கொள்கிறாள் திவ்யா,

நான் இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோட இருக்கேனே....நீ உப்பள்ளிப் போட்டா எனக்கு பிரஷர் வந்துடும், நீ சக்கரை அள்ளிப் போட்டால் எனக்கு சுகர் வந்துடும்...நீ காரமள்ளிப் போட்டா.....எனக்குப் ப்ளீஸ்....வந்துடும்....!

இதைக் கேட்டதும் கொல்லென்று சிரித்தவள்.....உன்னை......ஏய்.....என்று....! சமயத்துல நல்லாவே கடிக்கிறே நீ...!

சரி சரி ...கிளம்பு...கிளம்பு அங்க அம்மா எதிர்பார்த்துண்டு இருப்பா. அப்பவே ஃபோன் பண்ணியாச்சு... ஆமா திவ்யா, நீ ஊர்லேர்ந்து வாங்கின புது டிரெஸ்ஸை உன் அம்மாகிட்ட காமிச்சயா?

இப்பத்தானே திவ்யா கல்யாணத்துக்கு நிறைய புது டிரெஸ் வாங்கினே....? ஊர்லயும் போய் வாங்கினியா? என்ற திவ்யாவின் அம்மா....இவ சரியான டிரெஸ் பைத்தியம்.....வாங்கிண்டே இருக்கணும்....இவளுக்கு....! அப்பாடா.....உன்னை ஒரு வழியா இவர் தலையில ஏத்தி விட்டாச்சு.....இனி....நீயாச்சு....அவராச்சு...! என்று வேடிக்கையாக சொன்ன அம்மாவைப் பார்த்து.

அம்மா....என்று சத்தமாகக் கத்தியவள்..உங்க திட்டம் புரிஞ்சு போச்சு...! நான் உங்களுக்கு பாரம்...! அப்டித்தானே.....? நான் பாட்டுக்கு வேலைக்குப் போயிண்டிருந்தேன்.....உங்களைக் கல்யாணம் பண்ணி வைங்கோன்னு கேட்டேனா? நீங்களாத் தானே...என்று ஆரம்பிக்கவும்.

அதனால் என்ன மாமி....நாங்க ஊட்டி போன ஞாபகார்த்தமா ஒரு புது டிரஸ். திவ்யா ஆசைப் பட்டாள். எனக்கும் பிடிச்சிருந்தது. அதான் வாங்கினோம், ராஜேஷின் சமாதானக் குரல் அந்த சூழ்நிலையை சுமுகப் படுத்தியது.

அதுக்கில்லை....மாப்ளே...! நாங்களும் அவளுக்குச் சொல்லி சொல்லி தான் வளர்த்திருக்கோம். இப்ப ட்ரெண்டே மாறிப் போச்சு. திவ்யாவுக்கு புதுசு என்ன வந்தாலும் அதை முதல்ல வாங்கியாகணும். ஒரே பொண்ணுங்கற செல்லம் வேற....ஷேரிங்கற பேச்சுக்கே இடமில்லை, அதனால.......தொடர்ந்து சொல்ல முடியாமல் எதுவோ தடுக்க திவ்யாவைப் பார்க்கிறாள் அவளது அப்பா.

அதனால என்னப்பா....? கம் அவுட்.....!

அதுக்கில்லை....சரிம்மா...விடு....பை காட்ஸ் க்ரேஸ்....நீங்க ரெண்டு பெரும் மேட் ஃபார் ஈச் அதர்....! யூ ஆர் லக்கி டு ஹேவ் ராஜேஷ்...!

அப்போ....ராஜேஷ்....? என்று புருவத்தைத் தூக்கிய திவ்யாவைப் பார்த்து சிரித்த ராஜேஷ்..."மீ....டூ.......ஈக்வலி லக்கிடி...போதுமா ?.." என்றதும் தான் திவ்யாவின் பட்டு முகத்தில் புன்னகை சிட்டாக வந்து உட்கார்ந்தது.

சரியான தொட்டாச் சிணுங்கி.....அனிச்ச மலர் மாதிரி....எங்க டாட்டர்...திவ்யா...! இனிமேல் தான் நீ உன்னோட ஆட்டிட்ட்யூட கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும்.

அம்மா.....! நான் நானாக இருக்கும்போது தான் அது ' நான்'....! நான் ஏன்...என்னை யாருக்காக மாத்திக்கணும்? எனக்காக வேற யார் அவாளை மாத்திக்கப் போறா..? ஐம் ஆல்வேஸ் ரிமெயின்ஸ் தி சேம்....!

அம்மா.....ஊட்டில....ஒரு ஷாப்...அங்க ரொம்ப அழகான இயர் ரிங் பார்த்தேன்....வாங்கிருப்பேன்.....ஐயா... பாவம்...! போனாப் போறதுன்னு விட்டுட்டேன்..இல்லாட்டா....அங்கே ஒரு இருபதாயிரம்...ஊதிருப்பேன்...! எமெரால்ட் ஸ்டோன் வெச்சது...அப்படியே கண்ணுல நிக்குது..!

அதுக்கென்ன, நெக்ஸ்ட் டைம் வாங்கினாப் போச்சு...நான் ஒண்ணும் இதுக்கெல்லாம் அசர்ர ஆளில்லை மேடம்....! என்கிறான் ராஜேஷ்.

அடுத்த தடவை ஹனிமூன் போனாவா?

போச்சுடா...இப்ப நீ பதிலுக்குக் கடிக்கிறியா? ஒரு தடவை ஹனிமூன் போயிட்டு வந்தே....இங்க நான் பாதி தேஞ்சி போயாச்சு.

நல்லாத்தானே இருக்கே கண்ணா....இன்னும் கொஞ்சம் பூசினாப்பல...

அதைச் சொன்னேனா......என்னோட கார்டு தேய்ஞ்சு தேய்ஞ்சு .....! ம்....அதெல்லாம் உனக்குப் புரியாது. நான் சொன்னது அடுத்த தடவை எமெரால்ட் ஸ்டோன் தோடு வாங்கிக்கலாம்னு சொன்னேன்...சரி....கிளம்பும்மா..போலாம்.

அம்மா...அம்மா...மறந்தே போயிட்டேன். அந்த மெரூன் "சாட்டின் சுடிதார்" புதுசா தைச்சதா சொன்னியே அதை... எடுத்து வெச்சுட்டியா?

இப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது...திவ்யா அந்த சாட்டின் சுடிதாருக்காகத் தான்..முதல்ல இங்க வரணும்னு சொல்லிருப்பா....ராஜேஷின் மனசுக்குள் ஒரு குரல் ஒலித்தது.

ம்ம்....நீ கேட்ட என்னோட ரூபி நெக்லஸ் செட்டைக் கூட எடுத்து வெச்சுட்டேன்..இதோ இந்தப் பையில தான் இருக்கு. மறக்காமே பத்திரமா எடுத்து வை. ஜாக்கிரதை.

மனசு நிறைஞ்ச சந்தோஷத்துடன் ஒருவழியாக வீட்டை விட்டு கிளம்பினார்கள் இருவரும்.

கார் ஒவ்வொரு சிக்னலுக்கும் கட்டுப்பட்டு நின்றது. திவ்யா அவளது தோழிகளுக்கு போன் செய்து அவளது அனுபவத்தை ஆங்கிலத்தில் அளந்துகட்டிக் கொண்டிருந்தாள்.. கூடவே கல கலவென்ற சிரிப்பும் கலந்து கொண்டது. ராஜேஷ்....இது என்னோட பெஸ்ட் பிரெண்ட்
பிரியங்கா....டி.சி.எஸ். ல இருக்கா. என்றவள்....ராஜேஷ் பேசறியா? என்றவள்..அவன் ஆவலுடன் கையை நீட்டியதும்,.....ஓகே....நெக்ஸ்ட் டைம்....என்றவளாக....ஸீ யூ டி....என்று இணைப்பைத் துண்டித்து விட்டு அவள் சரியான இது....ரொம்பக் கடிப்பா...! என்று சொல்லி ராஜேஷின் தோளில் சாய்ந்து கொள்கிறாள்.

இட்ஸ்.....ஓகே....! என்ற ராஜேஷ்....நாளைக்கு ஆபீஸ் போகணும்....வேலை பின்னி எடுத்துரும்,என்று சொல்லிக் கொள்கிறான்.

நான் எவ்ளோ கஷ்டப் பட்டு....எத்தனை ரவுண்ட் க்ரூப் டிஸ்கஷன்ஸ் முடிச்சு இந்த வேலை எனக்கு கிடைச்சது தெரியுமா? உங்க அம்மா தான் என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னாளாம். நான் ஒண்ணும் வேலையை ரிஸைன் பண்ணலை...தெரியுமா? .சும்மா லாங் லீவ் தான் எழுதிக் கொடுத்திருக்கேன். எனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்ததே பிரியங்கா தான்...என்றவள்,.அச்சச்சோ.....சீக்ரெட்ட லீக் பண்ணிட்டேனே....என்று நாக்கைக் கடித்தவள், இந்த விஷயம் என் பேரெண்ட்ஸ்கு கூடத் தெரியாது.. நான் சொல்லவேயில்லை. என்றவள்....நீயும் மனசுல வெச்சுக்கோ...ஒகே...என்றவள் ஜன்னல் வழியாக வெளியே பார்வையைத் திருப்பினாள் .

அநேகமா இன்னைக்கு நாம என் ஃபிரெண்டு அரவிந்த் வீட்டுக்கு ஈவினிங் போயிட்டு வரலாம்.டின்னருக்கு கூப்பிட்டான். உனக்கு முடியுமா? என்று அக்கறையோடு கேட்கும் ராஜேஷைப் பார்த்தவள்,

இன்னிக்கா....? வேண்டாம் ராஜ் ...நெக்ஸ்ட் வீக் பார்த்துக்கலாம்...நீ அவங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு..இன்னிக்கி வேண்டாம்னு நான் ரொம்ப டையர்ட்....நீயும் தானே?

ம்ம்ம்...ஓ கே...டன்....! என்றவன், கைபேசியைத் தேடினான் ராஜேஷ்.

நீ ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்......ஐ லவ் யூ சோ மச்.....! என்று அதிரடியாகச் சொன்னவளை, மின்னலோடு பார்க்கிறான் ராஜேஷ்.

அதற்குள் வீடு வந்துவிட, காரின் தலையைக் கண்டதும், ஆரத்தித் தட்டோடு ஆவலாக வந்து நின்ற ராஜேஷின் அம்மாவும், அப்பாவும்...."வாங்கோ...வாங்கோ...என்று மகிழ மிகிழ அழைத்து ஆரத்தி சுற்றிக் கொட்டி..வலது கால் எடுத்து வெச்சு வாம்மா திவ்யா...பிரயாணம் நன்னா இருந்ததா? அங்க உங்க அப்பா, அம்மா சௌக்கியமா? என்று சௌஜன்யமாகக் கேட்டுவிட்டு....திவ்யாவை மென்மையாகக் கட்டிக் கொண்டு கேட்கவும்.

ம்ம்ம்.....எல்லாரும் சௌக்கியம் என்றவள்..நீங்கள்லாம் சௌக்கியமா? இருங்கோ...இப்ப வந்துடறேன் என்றவள் ..ராஜ்.....ஆல்பத்தை அம்மாட்ட கொடுத்துடு....என்றவளாக நேராக அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

என்னடா....ராஜு....? எதுவும் பிரச்சினையா ? திவ்யா சாதாரணமாத் தானே இருக்கா? என்று தயங்கிக் கேட்ட கோகிலா...எங்கே ஆல்பத்தைத் தா,,,பார்க்கலாம்...நீங்க ரெண்டு பேரும் இல்லாத வீடு வீடாவே இல்லை....ரொம்ப வெறிச்சோடி இருந்தது..எப்படா வருவேள்னு பார்த்துண்டு இருந்தோம்....சொல்லிக் கொண்டே ஆல்பத்தைப் புரட்டுகிறாள்.

என்ன அழகா படம் பிடிச்சிருக்கான் பாரேன்....! நீங்க ரெண்டு பேரும் நல்ல பொருத்தம்...!

அதான் அவளோட அப்பாவும் சொன்னார்...என்ற ராஜேஷ்...அப்பா....இந்தாங்கோ...இந்த ஆல்பம்...! என்று கையில் கொடுக்கவும்.

அவர் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டு மென்மையாகச் சிரித்தார். அதில் வருத்தமோ கோபமோ இல்லை என்பதறிந்து நிம்மதி அடைந்தான் ராஜேஷ்.

அறைக்குள்ளிருந்து வெளி வந்த திவ்யா, மெரூன் கலரில் புது சாட்டின் சுடிதாரும், கழுத்தில் ரூபி நெக்லெஸுமாக வந்து நின்று , அம்மா.....இது இப்போ எங்கம்மா வாங்கித் தந்தது....நன்னாருக்கா?என்று கேட்டுக் கொண்டே ராஜேஷின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறாள்.

ம்ம்ம்ம்....அழகோ அழகு..!ரொம்பப் பொருத்தமா இருக்கே....! என்ற ராஜேஷின் அம்மா, வேறு எதுவோ சொல்ல வாயெடுத்தவள், இப்போது வேண்டாமே...என்று மனம் தடுக்கவும், இருங்கோ காபி கலந்துண்டு வரேன் என்று சொல்லி விட்டு .அடுக்களைக்குள் செல்கிறாள்.

காப்பி குடிக்கும் போதே..திவ்யாவின் அறைக்குள்ளிலிருந்து கைபேசி அவளை அழைத்ததும், எழுந்து ஓடுகிறாள். அதன் பின்பு அரை மணி நேரமாகியும் வெளியே வராமல் இருந்தது கண்டு ராஜேஷ் எழுந்து உள்ளே போகிறான். அங்கே....

திவ்யா, படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து...பாவம்...கார்ல வரும்போதே....சொன்னாளே ரொம்ப டயர்டா இருக்கேன்..இன்னிக்கு டின்னருக்குக் கூட அரவிந்த் வீட்டுக்கு வர முடியாதுன்னு..நான் தான் மறந்துட்டேன்...என்று நினைத்தவன்..
அம்மா...திவ்யா ரொம்ப டயர்ட்டா தூங்கறா. தப்பா நினைச்சுக்காதே.

என்னடா...நீ இனிமேல் அவள் நம்மாத்துப் பொண்ணுடா.....அவ இஷ்டப் படி இருக்கட்டும். நாங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டோம்...சொல்லிவிட்டு கல்யாண பட்சணம் எடுத்துண்டு வரேன்....நீயாவது சாப்பிடு..என்று ஒரு தட்டை முன்னே வைத்து விட்டு மகனின் முகத்தைப் பார்க்கிறாள் கோகிலா. அதில் அவனாவது ஏதேனும் பேச மாட்டானா என்ற ஏக்கம் ரொம்பி வழிந்தது.

அம்மா...நாளைக்கு எனக்கு வழக்கம் போல வேலைக்குப் போகணும்...அவாத்துலயே ரொம்ப நாழியாயிடுத்து...இப்போ கொஞ்சம் மெயில் பார்க்கணும்..என்று தட்டை எடுத்துக் கொண்டு நகர்கிறான் ராஜேஷ்..

இரவு எட்டு மணியாகியும், திவ்யா இன்னும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததைக் கண்ட கோகிலா...ராஜேஷ்...அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ன? ஜுரமா பாரேன்....! இன்னும் எழுந்திருக்கலையே என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொல்ல,

நான் வேணா நம்ம கிருஷ் டாக்டரை அழைச்சுண்டு வரட்டுமாப்பா....என்று அப்பா அவர் பங்குக்கு பாசத்தைப் பங்கு வைக்கிறார்.

இல்லப்பா....அலைச்சலா இருக்கும். தூங்கினா சரியாயிடும்..என்றவன்...அம்மா...எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு....குட் நைட்...என்று சொல்லிவிட்டு மறக்காமல் ஃ பிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன்....திரும்பிப் பார்க்கிறான்.

சரிடா......போய் படுத்துக்கோ...மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்....என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த அன்றைய செய்தித் தாளை எடுத்து மீண்டும் புரட்டிப் படிக்கிறார் அவர்.

என்னன்னா.....அவன் முகமே சரியில்லை....நானும் வந்ததுலேர்ந்து பார்க்கிறேன்...ஒரே வாட்டமா இருக்கான். திவ்யாவும் என்னமோ போல இருக்காளே....? இவன் ஏதாவது ஏடாக்கூடமா அவங்க வீட்டுல நடந்து கிட்டு இருந்திருப்பானோ....நான் வேற போனில் ஒரு மாதிரி பேசித் தொலைச்சிட்டேன்...அவனுக்கு நம்ம மேலே கோபமோ என்னவோ..?

அதெல்லாம் ஒண்ணும் இருக்காது....நீயும் போய்த் தூங்கு..சின்னஞ்சிறுசுகள்...நீ தான் இல்லாததுக்கெல்லாம் கண்ணு மூக்கு காது வெச்சுப் பார்ப்பியே........என்று மனைவியின் எண்ணத்தை அடக்கி விட்டு...வாசல் கதவைப் பூட்டுவதற்காக வெளியில் போகிறார் அவர்.

வாசல் கேட்டைப் பூட்டிவிட்டு உள்ளே நுழையும் போது , ராஜேஷின் அறையிலிருந்து வந்த திவ்யாவின் கணீரென்ற குரலைக் கேட்டதும், புரிந்தும் புரியாமலும் எதையோ இனம்கண்டு தனக்குள் சிரித்துக் கொள்கிறார் அவர்.

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப்போகிறேன்”

அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில் இனிமையான பாடல் கணீரென்று ஒலித்து கதவையும் தாண்டி எட்டிப் பார்த்தது.

கோகிலா…நம்ம திவ்யாவுக்கு ரொம்ப நல்ல குரல்வளம்…நன்னாப் பாட்டுப் பாடறா… நம்ம ராஜேஷ் பாடச் சொல்லியிருப்பான் போல….புதிதாக வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் ராஜேஷின் அப்பா.

நீங்க ஒட்டுக் கேட்டீங்களா….? இந்த வயசில் நீங்க இப்படிச் செய்யறது கொஞ்சங்கூட சரியில்லை…ஆமா…..என்று இழுக்கிறாள் கோகிலா.

பக்கத்து வீட்டுக்கு கூட அவ பாடின பாட்டு ஓடிப் போயிருக்கும்…உனக்குக் கேட்கலை பாரேன்…உன் காதை கவனிக்கணும் என்றவர் , நீ முதல் முதல்ல ஒரு பாட்டு பாடினியே…”மல்லிகை என் மன்னன் மயங்கும்…பொன்னான மலரல்லாவோ….” என்று ஹம்மிங் செய்தவர் ..ஆளுக்கொரு நினைவு..யாரை விட்டது…? ம்ம்ம்ம்….நீ நிம்மதியாத் போய்த் தூங்கு…நீ நினைச்சது நடந்தாச்சு. நாளையிலேர்ந்து உனக்கு கூடமாட ஒத்தாசைக்கு உரிமையா மாட்டுப் பொண்ணும் வந்தாச்சு..என்று சொல்லிச் சிரிக்கிறார்..

அதிருக்கட்டும். எனக்கும் கேட்டுது அவ பாடற சத்தம்…ம்கும்…என்ற கோகிலா….அவா ரெண்டு பேரும் சௌஜன்யமா, சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம்.. திவ்யா ரொம்ப தைரியசாலிங்க. யாருக்கும் பயப்பட மாட்டா..அவங்க அம்மா கூட என்கிட்டே சொன்னாங்க,.பார்ப்போம். இருந்தாலும் இந்தக் காலப் பெண்கள் எங்க காலம் மாதிரி இருக்க முடியாது. எங்க காலத்து மரியாதை..என்ன? பண்பு என்ன? அடக்க ஒடுக்கம் என்ன…?

என்ன நீ பாட்டுக்கு என்ன என்ன என்ன….ன்னு கே பி சுந்தராம்ம்பாள் ஸ்டைலில் பாட ஆரம்பிச்சுட்டே….எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு படத்தோட இருக்கற முருகன் முழிச்சுண்டு.வந்து “அழைத்தாயா…அவ்வையே?” ன்னு வேலும் கையுமா நிக்கப் போறான்……

நீ தான் பாவம்…நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்ன்னு நினைக்கிறேன்…சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தார்.

அடுத்த சில நிமிடத்தில் அவர்களது அறையில் ஆழ்ந்த குறட்டை ஒலிகள் நீயா… நானா… என்று போட்டி போட ஆரம்பித்தது.

வழக்கம் போல இன்று வெள்ளிக்கிழமை என்ற நினைப்பு வந்ததும், போர்வையை உதறி விட்டு எழுந்த கோகிலா, காலை வேலைகளுக்குப் பரபரத்தாள். அவள் எழுந்து இரண்டு மணி நேரமாகியும், திவ்யாயின் திவ்ய தரிசனம் காணாது மெல்ல முணு முணு த்துக் கொண்டாள். வயசாக வயசாக தனியா எந்தக் காரியமும் பண்ண முடியலை, பையனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டால் வரும் மாட்டுப்பொண்ணு வீட்டை, சமையலைப் பார்த்துப்பாள்னு நான் கனவு கண்டா, வந்தவளுக்கும் நான் தான் பண்ணிப் போடணும் போலருக்கே…மனத்தின் ஏமாற்றம் பாத்திரங்களோடு சேர்ந்து ஒலித்தது.

அன்றைய செய்தித்தாள் செய்திகளில் மூழ்கிப் போன கணவரிடம், “என்ன பரிச்சைக்கு படிக்கறேளா ….?’ நான் ஒருத்தியா இன்னும் எத்தனை காலம் தான் இப்படி தனியா அடுக்களையைக் கட்டிண்டு அழணுமோ தெரியலை. அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா இருக்கு.

காப்பியை விட மனைவியின் வார்த்தைகள் சுடச்சுட இருப்பதாகத் தெரிந்தது அவருக்கு.

குளித்துவிட்டு வந்த ..ராஜேஷ்…..”மா….காஃபி ரெடியா’ ? வழக்கம் போலத் தான் கேட்டான்.

தயாராக காப்பியை ஆற்றிக் கொண்டே வந்தவள், ‘இந்தா.’ என்று நீட்டிவிட்டு ,திவ்யா இன்னுமா எழுந்திருக்கலை ? இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற.

ம்ம்ம்.,….எனக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான வேலை, ஒரு ப்ராஜெக் விஷயம் இருக்கு….அது என்னவாச்சோ தெரியலை…நான் சீக்கிரமாக் கிளம்பணும். அவள் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்னு சொன்னாளேன்னு சரின்னேன்.. இதோ எழுப்பறேன்….என்றவனிடம்,

பரவாயில்லை….விடு….நீ கிளம்பு…இன்னிக்கு நான் பார்த்துக்கறேன்…அம்மாவின் குரலில் தெரிந்த விரக்தியை கவனிக்கத் தவறவில்லை ராஜேஷ்..

அதற்குள் திவ்யா எழுந்து விட்டதன் அடையாளமாக பாத்ரூம் கதவு சாத்தப்படும் ஓசை கேட்கிறது.

சிறிது நேரத்தில் அவனுக்காக கட்டி வைத்த டிபன் டப்பாவை எடுத்துக் கொண்டு, பாத்ரூம் கதவைத் தட்டி…தான் கிளம்புவதாகச் சொன்னபோது ,

“இன்னிக்கு வெளிய போறோம்….ஞாபகம் இருக்கு தானே..சீக்ரம் வந்துரு…’ அவளது குரல் மட்டும் வெளியே வந்தது.

சரி சரி…என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போகிறான் ராஜேஷ்.

* * * * * * * * *

ஆபீசில் அவனது தலை தெரிந்ததும், அத்தனை பேர்களின் முகத்திலும் புன்னகை..ராஜேஷுடன் நெருங்கிப் பழகும் அரவிந்த் மட்டும் கூடவே ஓடி வந்தான்…….என்ன ப்ரோ …இவ்ளோ சீக்கிரம் ஆபீஸ் வந்துட்டீங்க….எல்லாம் நல்லாப் போச்சு தானே..குனிந்தபடியே .ரகசிய குரலில் கேட்டுவிட்டு நிமிர்ந்து பதிலுக்குக் காத்திராமல் ராஜேஷின் அறைக் கதவைத் திறந்து கொண்டு தானும் அவனோடு சேர்ந்து உள்ளே நுழைந்து ஏஸி யைப் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ம்ம்ம்ம்…எனிதிங் ஸ்பெஷல்…..? இது என்ன ஃபைல்….? என்று அதை எடுத்துத் திறந்து பார்த்தவன்….அதிர்ச்சியுடன்,
என்னப்பா…..என்று அரவிந்தை கேள்விக் குறியோடு பார்த்தவன் ….ஹேய்….இது எப்ப வந்தது….? இது தான் நம்ப கம்பெனியோட தலையெழுத்தை மாத்துற மேட்டர் இப்போ…என்று ஆச்சரியம் கலந்த குரலில் ராஜேஷ் பதறிப் போய் கேட்கிறான்..

எஸ்….பாஸ் …….! அந்த பெங்களூர் ப்ராஜெக்ட்….கை விட்டுப் போறாப்பல இருக்காம்.. அதோட ரிபோர்ட். தான் இது.

ஹெட் ஆபீஸ் சொல்லிட்டியா?

ம்ம்….மெயில் போட்டாச்சு…ஃ போனும் பண்ணி சொல்லியாச்சு….உங்களுக்கும் ஃ போன் பண்ணிப் பார்த்தோம்….சுவிட்சுடு ஆஃப் தான் வந்தது..

நம்ப குல்கர்னி மேடத்துக்குத் இந்த விஷயம் தெரியுமா? பதறினான் ராஜேஷ்.. எத்தனை கஷ்டப்பட்டு இந்த ஆர்டருக்காக லைன் போட்டு வெச்சிருந்தேன். இப்படி …அநியாயமா..? என்றவன்….ஒரு நாலு லட்சம் தள்ளிவிட்டிருந்தால் போதும் ஆர்டரை தள்ளிடலாம்….
பின்னே…இந்த ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு கவலையில்லை. முப்பது கோடி ஒரே இடத்தில். எப்டி தவறிப் போச்சு..

சின்ன ஹோல்….!

என்னது…எப்படி….எங்கே….?

நீங்க தான்…..உங்க கல்யாணம்….லீவு…..நீங்க பேசி வெச்சிருந்ததை அடுத்தவங்களால பேச முடியலை….நான் கூட உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணேன்….முடியலை.

இது எப்போ?

நேத்து தான் வந்திருக்கு…எனக்கும் இந்தப் ப்ராஜெக்ட் கை விட்டுப் போனதில் ரொம்பவே வருத்தம் தான் ப்ரோ.

சர்ஜாப்பூர்ல முப்பது கோடிக்கு ‘வில்லா’ஸ் கட்டற ப்ராஜெக்ட். எத்தனை மாதங்களாகப் போட்ட பிளான்……ரொம்ப ‘ப்ரெஸ்டிஜியஸ் ப்ராஜெக்ட்’ அது….அது எப்படிப்பா…..கை நழுவிப் போக விடறது… டெண்டர் ஓபனிங்குக்கு கூட நான் போயிருந்தேனே..

மேடம் என்ன சொன்னங்க….? ஆவலானான் ராஜேஷ்.

ரொம்ப அப்செட் ஆனாங்க…..மற்றபடி…அர்ஜெண்ட் மீட்டிங் ஒண்ணு இருந்தது…உடனே கிளம்பிப் போயிட்டாங்க…ப்ரோ..

சரி…விடு..நான் உடனே பெங்களூர்க்கு பேசறேன்…ஐ வில் கெட் பேக் திஸ்….! சொல்லிக் கொண்டே கைபேசியை எடுத்து எண்ணை தட்டி…..ஹலோ….திஸ் இஸ் ராஜேஷ்….ஹியர்…”

அடுத்த சில வார்த்தைகளில், ராஜேஷின் முகம் பிரகாசமடைந்து…..கைபேசியை அணைத்துவிட்டு, ஹேய்…ப்ரோ….ஒன் மோர் சான்ஸ்…
நான் இன்னிக்கே பெங்களூர் போறேன்…..உடனே ஒரு டிக்கெட்டுக்கு சொல்லிடு…ஈவ்னிங் ப்ளைட்….ஒகே .

இப்பத் தான் கல்யாணம் ஆகியிருக்கு…வீட்டில்..என்ன சொல்வாங்களோ..?.தயங்கினான் அரவிந்த்.

நோ..வே…..இதை விட எதுவும் பெரிசு இல்லை. இது தான் நம்ப லாங் டைம் கோல் …..நீங்க டிக்கெட் பாருங்க ப்ரோ.

டன் ….என்றவன்…அதானே..நீங்க இருந்திருந்தா… இப்ப வேற மாதிரி இருக்கும்….அதான் மேடமும் சொன்னாங்க…!

எனி…வே…இந்தத் தமிழ் வருடப்பிறப்புக்கு அந்த ஆர்டர் நம்ப கைக்கு வந்துடும்னு சொல்லுங்க.ப்ரோ…

எஸ்….ஜய வருடத்தின் ஆரம்ப வெற்றி நமக்குத் தான். ராஜேஷா கொக்கா….எப்டியாவது காக்கா பிடிச்சு கொண்டு வந்துட மாட்டேன்.

அது சரி…அதான் நீங்க அங்கே…நான் இங்கே…!

ஐ….நீட் ஆல் த ரிலேடட் ஃ பைல்ஸ் இன் திஸ் மேட்டர்
….ப்ளீஸ்…!

ஓகே…பாஸ்…..என்று அரவிந்த் நகர்ந்தான்.

வீட்டுக்கு ஃபோன் போட்டு…..சொல்ல வேண்டும்…நினைத்துக் கொண்ட ராஜேஷ் ,..அடுத்தடுத்த வேளைகளில் மறந்தும் போனான்.

மாலையில் அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்ற ராஜேஷ், “திவ்யா…..இன்னைக்கு இப்போ நைட் ஃபிளைட்’ ல நான் பெங்களூர் போகணும்……அங்கேர்ந்து சர்ஜாப்பூர்….நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்….இருக்கு…கோவிச்சுக்காதே….ப்ளீஸ்…என்றதும்,

எனக்குத் தெரியும்……உங்களுக்கு மட்டும் ஆபீஸ்…..!வேலை எல்லாம் இருக்கலாம்…கல்யாணம் எந்த விதத்திலும் உங்களுக்கு பாதிப்பைத் தந்து விடக் கூடாது…ஆனால் நான் மட்டும் வேலையை ரிஸைன் பண்ணிட்டு கல்யாணம் ..பண்ணிக்கணும்…என்ன நியாயமோ? வெளில போகலாம்னு இருந்தேன்….இப்போ எனக்கு மூடி அப்செட்.. சரி..எப்போ வருவே ராஜ்…நீ ? முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் திவ்யா. அதின் ஏமாற்றம் டன் கணக்கில் கொட்டிக் கிடந்தது.. ஒற்றைத் தாமரையாய் முகம் மலராமல் போகன் வில்லா மலர்கள் போல விரக்தியோடு இருந்தது..

ரொம்ப முக்கியம் திவ்யா. நம்ப கல்யாணத்தால தான் இப்படி ஒரு நிலை….நீ வருத்தப் படாதே….உனக்கு என்ன வேணும் கேளு….வாங்கிண்டு வரேன். தினம் ஃபோன் பண்றேன்.ரெண்டு நாளாகும்…திவ்யா…..என்றவனை
ப் பார்த்தாள்.அப்போ….நானும் வேலைக்குப் போறேன்….சரின்னு சொல்லு….எனக்கும் என்னோட ‘ ஜாபை’ விட்டுட்டோமேன்னு ஒரே ஃபீலிங்கா இருக்கு. இப்படி ரூமில் அடைந்து கிடக்கப் பிடிக்கலை.. நானும் போகட்டுமா? சந்தர்ப்பம் பார்த்து கேட்டுப் பார்த்தாள் திவ்யா.

அப்டியா……உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா கிளம்பு…நீயும் வேலைக்குப் போகலாம்…அதுக்காக வருத்தப் படாதே.
நான் அம்மாகிட்ட சொல்லிக்கறேன்…ஓகேயா….? அப்போ , நான் கிளம்பட்டா….

அவள் முகத்தில் ஒரு மின்னல் வெளிச்சம்…மெல்ல ஏர் பேக்கில் இதையும் வைக்கட்டுமா என்று கேட்டுக் கொண்டே இரண்டு ஷர்ட்டை எடுத்து வைத்தவள், தாங்க்ஸ் ராஜ்…இந்த சந்தோஷத்தை நிச்சயமா நான் அம்மாகிட்ட சொன்னால் ரொம்ப சந்தோஷப் படுவா.என்றாள் .

சொல்லிடு…சொல்லிடு….என்ற ராஜ்… கிளம்பினான். பின்னாலேயே வந்த திவ்யாவின் முகத்தில் ஏகப்பட்ட பிரகாசம். விஷயம் புரியாமல் கோகிலா விழித்தாள் .

ஹாலுக்கு வந்தவன், அம்மாவிடம்..அப்பா வந்ததும் சொல்லிடும்மா என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறான்..திவ்யாவைப் பார்த்து தலைசைத்ததும்…..

அவள்…அம்மா….நானும் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்….எனக்கு இப்படி இங்கே தனியா இருக்கப் பிடிக்கலை . ஒரே போரிங் . எப்டித் தான் நீங்க, அம்மால்லாம் வீட்டில் அடைந்து கிடக்கறீங்களோ…என்று சிலிர்த்துக் கொண்டவளாக தோளைக் குலுக்கிக் கொள்கிறாள்.

வாசலில் ராஜெஷுக்காக வந்து நின்ற ஆபீஸ் காரில் ஏறியதும், கார் கிளம்பியது. ராஜேஷின் முகத்தை கண்ணாடி மறைத்து மூடியது.

அவன் சென்ற அரை மணி நேரத்தில் வாசலில் இன்னொரு கால்டாக்சி வந்து நின்று ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திவ்யா அவசரமானாள்.

கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே ,….அறையிலிருந்து வெளிப்பட்டு, வாசலில் எட்டிப் பார்த்தவள்…..வேகமாக உள்ளே சென்று….ஒரு ஷாப்பர் பேக்குடன் வெளிப்பட்டு,’அம்மா நானும் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்…ராஜ் கிட்ட சொல்லியாச்சு…..என்று சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டு படி இறங்கி காரில் ஏறிக் கொண்டாள்.

கார் போவதையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கோகிலாவுக்கு,.என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபமும், ஆற்றாமையும், எரிச்சலும் சேர்ந்து கொண்டு அழுகையே வந்தது. இதற்காகவா கல்யாணம் செய்தோம்….? தப்புப் பண்ணிட்டோமோ.? ராஜேஷ் தங்கமான பையனாச்சே….கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்துட்டோமோ…? வீடு சொர்கமா மாறும்னு நம்பி நரகத்துக்குப் பக்கத்தில் வந்துட்டோமே….கன்னாப் பின்னாவென்று மனம் கலங்கித் தான் போனாள் கோகிலா.

இவர் வந்தால் என்னவென்று சொல்வது? யோசித்துக் கொண்டிருக்கும் போதே கணவரின் ஸ்கூட்டர் தூரத்தில் தெரிந்தது.

கோகிலா,விஷயத்தைச் சொல்லத் தயாராகக் காத்திருந்தாள். மனம் எரிமலையொத்த அழுத்தத்தில் கனன்றது.

ராஜேஷ் நிம்மதியாக பெங்களூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்தான். அவன் மனதில் வேறு கவலைகள். திவ்யாவை சமாதானம் செய்து விட்ட திருப்தி.

திவ்யா, தன் பிறந்த வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்…அவளது மனத்துள் ராஜேஷிடம் தனது ஆசையைச் சொல்லி சம்மதம் வாங்கிக் விட்ட நிறைவும், மகிழ்வும்.நிரம்பி வழிந்தது.

கோகிலா ஏன்..இன்னிக்கு வாசல்ல வந்து நிக்கறா…? அப்போ.,.வீட்டில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கு….என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டே , வாசலில் வந்து ஸ்கூட்டரை நிறுத்தினார் ராஜேஷின் அப்பா.
* * * * * * * * *இரண்டு நாள் கழித்துத் தான் வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ராஜேஷ் அடுத்த நாளே வந்து விட்டான்.

வீட்டுக்குள் நுழையும் போதே…அம்மா…அம்மா…..போன காரியம் சக்ஸஸ் ….. எந்தப் பிரச்சனையும் இல்லாமே முடிஞ்சது..இனிமேல் தான் இருக்கு…வேலை பெண்டு கழண்டுடும். அடிக்கடி நான் பெங்களூர் போக வேண்டி வரும்…என்று ஷீ வைக் கழட்டியபடியே சொன்னவன், ஆமா…திவ்யா வந்தாச்சா? என்கிறான்.

என்னடா ரெண்டு பேருமா சேர்ந்து நாடகம் போடறேளா?.தமிழ் .வருஷப்பிறப்பும் அதுவுமா அவள் வீட்டிலயே இல்லை..நீ போன கையோட அவளும் பையைத் தூக்கிண்டு கிளம்பிட்டா……நான் ஒண்ணு நினைச்சேன் அது ஒண்ணு நடக்கறது.

எதும்மா…? அவ வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப் படறா. போயிட்டு வரட்டுமே. அவளோட செலவுக்கு ஆச்சு.

வேலைக்குன்னு போகாமலே அவளுக்கு ஒரு பொறுப்பும் தெரியலை. பெரியவாகிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட சொல்லித் தரலையா? ன்னு சந்தேகமா இருக்கு. ஆரம்பமே இப்படி இருந்தா…அடுத்தது எப்படிப் போகும்னு சொல்லியா தெரியணும் ? என்னமோ போ…எதுக்கும் நீ கொஞ்சம் ‘இது’வாவே இரு. ஆரம்பத்தில் குனிஞ்சா அப்பறம் வாழ்நாள் பூரா குட்டுப் பட வேண்டியது தான்.

நம்ப அப்பா மாதிரியா?

அதைச் சொல்லலை…..நீ தான் ஆபீஸ் விஷயமா பெங்களூர் கிளம்பினே. கூடவே அவளும் கிளம்பிட்டா….எல்லாம் உன்கிட்ட சொல்லியாச்சாம். குரலும் , தொனியும் வேறு விதமாக ஒலித்ததைக் கண்ட ராஜேஷ்….மனசுக்குள் ‘கல்யாணத்துக்கு முன்னால இருந்த அம்மா வேற….இப்பப் பேசற அம்மா வேற..’ என்று தோன்றியது/

இதை , இந்த எண்ணத்தை வளர விடக் கூடாது. அப்பறம் வீடே நரகமாயிடும். நான் மத்தளமாயிடுவேன் …அவன் .நினைத்ததும்
”தொம்’ மென்ற சத்தத்துடன் வந்து விழுந்தது அடுக்களையில் சாமான்கள்.

அம்மா…என்னாச்சும்மா…? இப்போல்லாம் கிட்சன் உனக்கு குருக்ஷேத்ரம் நடக்கற இடமாட்டமா இருக்கா….? சமையலுக்கு ஆள் போட்டுடவா.

நன்னாப் போடுவே….இத்தனை காலம் கண்ணுக்குத் தெரியாதது இன்னைக்கு தெரிஞ்சுடுத்தா? நான் ஒண்ணும் உன் பொண்டாட்டியை சமைக்கச் சொல்லிட மாட்டேன்…பயப்படாதே…..ஒரே நாள்ல இப்படிச் சாய்ஞ்சு போகும் என்னோட படின்னு யார் கண்டா?

ஐயோ….அம்மா…..அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா…நான் வரும்போது என்னையும் அங்கே வந்து அவளை அழைச்சுக்கச் சொல்லி ஃ போனில் சொன்னாள் . நான் தான் உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்னு இருந்ததா, நேரா இங்கே வந்துட்டேன்.

கோகிலாவின் முகத்தில் லேசான மாற்றம்…மனம் தடுமாரியதற்கான அறிகுறி அதில் தெரிந்தது.

அப்படி என்னடா விஷயம்…? என்கிட்டே தனியாப் பேசற அளவுக்கு…..ஏகப்பட்ட சந்தேகத்துடன் பார்த்தாள் அம்மா.

அம்மா…..ஒரு சாதாரண நிலம் இருக்குன்னு வெச்சுக்கோ….அது பூரா என்ன இருக்கும்…? சொல்லு பாப்போம்.

என்னடா விளையாடறியா? எனக்கே பாடம் சொல்லித் தர வந்தியா….? சாதாரண நிலத்தில் கல்லும் மண்ணும் தான் இருக்கும்..வேறென்ன? அதுக்கு.

ம்ம்ம்ம்…..அதே நிலத்தைப் பச்சைப் பசுமையா விளையும் பூமியா நினைச்சுப் பாரேன்….!

கற்பனையிலா…..? கஷ்டம்டா….அதே தரிசாத் தான் தெரியும்.

ம்ம்…தரிசா இருக்குற நிலத்தை பொன் விளையற பூமியா பதப்படுத்த என்ன செய்யணும்..?

மண்ணோட மண்ணாக் கிடந்து கஷ்டப் படணும் …காத்திருக்கணும். பொறுமையா…!

கரெக்ட். அது மாதிரி தான்….நமக்கு ஒண்ணை நமக்கு சாதகமா மாத்தணும்னா அதோட நாமும் போராடணும் இல்லையா..?

ம்ம்…அதுக்கென்ன இப்போ…? இதச் சொல்லத் தான் தனியாப் பேசணும்னு சொன்னியா….யாராவது கேட்டால் சிரிப்பா.

நான் சொல்ல வந்ததை அமைதியாய் முழுசாக் கேளேன்.

ஒரு பேச்சுக்கு சொல்றேன்…..ஆபீஸ்ல ஒரு ப்ராஜெக்ட் கிடைக்க நாங்க எப்படில்லாம் குட்டிக் கரணம் போடறோம்…எத்தனை விஷயங்களை யோசிக்கறோம்…அமைதியா காயை நகர்த்தறோம்….முதல்ல நஷ்டம் அடைஞ்சாலும்…பின்னால வரப் போற நிம்மதியான லாபத்து மேல கண் வைச்சுண்டு ஒரு சேல்ஸ் க்ளோஸ் பண்ண மனசுக்குள்ள கணக்கு போட்டுண்டே வெளில ஒண்ணுமே தெரியாமல் சாயற பக்கம் சாஞ்சுண்டு கவளைஞ்சு கொடுத்துண்டு போகலையா?

எனக்கும் ஆரம்பத்துலேர்ந்து ‘லேடி பாஸ்’ தான் இருந்தாம்மா ..உனக்கே தெரியுமே…..அவாள்லாம் எடுக்கும் அதிரடி முடிவுகளை நன்னாப் புரிஞ்சுண்டு என்னையே நான் இவ்வளவு தூரத்துக்கு வளர்த்துண்டு வந்திருக்கேன். ஸோ ….இந்தக் காலத்துப் பெண்களுக்கு சுயமா சிந்திக்கிற தன்மை அதிகமா இருக்கறதால சுதந்திர உணர்வும் நிறையவே இருக்கு , கூடவே ஈகோவும் வந்துடுது..திவ்யாகிட்டயும் ‘ஈகோ’ இருக்கு. அவளுக்கு இருக்குற ஈகோவை நான் தப்பும் சொல்லக் கூடாது. அதுவே அவளோட சுபாவமும் இல்லை.

முதல்ல…அவள் வழிக்கே தான் இனி நான் போகப் போறேன். நீ என்னோட அம்மா…உனக்கு என்னைப் புரியும். நீ தான் இப்ப எனக்கு சப்போர்ட்டா இருக்கணும். இந்தக் காலத்தில் கணவன் மனைவிங்கற உறவுகள்ல கிடைக்கும் பரஸ்பர மரியாதையை விட நண்பர்களா இருந்துண்டு கிடைக்கிற உரிமை தான் குடும்பத்துக்கே நல்ல அஸ்திவாரமா அமையறது..அவளும் நன்னா படிச்சிருக்கா. அவள் வேலைக்குப் போகட்டும். அங்கேர்ந்து கூட பொறுப்புகளைக் கத்துக்கலாம் இல்லையா?

திவ்யாவுக்கு வேலைக்குப் போகணும்னு தான் ஆசை. அப்படித்தான்.அவளோட சுதந்திரத்தை அவள் ரொம்ப விரும்பறா…..அதில் யாரும் புகுந்து விடக் கூடாதுன்னு கவனமா இருக்கறதா நினைச்சுக்கறா. ஒரே பெண்ணா இருந்திருக்கா இல்லையா?

அவளோட சுதந்திரத்தில் நாம தலையிட்டால் அவள் உள்ளுக்குள்ளே உடைஞ்சு போவாள். இந்த ஒரு சின்ன விஷயம் தான் நாளைக்குப் பூதாகாரமா உருவெடுக்கும்.ஒரு பெரிய கப்பல் மூழ்கறதுக்கு ஒரு சின்ன துளை போதுமில்லையா.? அதனால தான் சொல்றேன்., அவளை நீ ஆரம்பத்திலயே உனக்கு ஏத்தவளா திருத்தணும்னு , மாத்தணும்னு நினைக்காதே.

அவளே ஆசைங்கற நரகத்துக்குள்ளே சிக்கித் தவிக்கிறாள். அதையும் நான் தப்பாச் சொல்லலை. . அப்படிப் பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு நரகத்துக்கு பக்கத்துல தான் தெரியாமல் உழன்றுண்டு இருக்கோம். இதோ…எனக்கு இருக்கு பாரு…இந்த சிகரெட். பழக்கம்…..உங்களுக்கெல்லாம் பிடிக்கலை..ஆனால் எனக்கு இதை விட முடியலை..ம்ம்ம்.

சொல்லுடா…நான்…இல்லையில்ல....நீ என்ன சொல்ல வரே…..நாங்க தான் என்ன செய்யனும்னு..பொறுமை இழந்து பேசினாள் கோகிலா.

இரும்மா….அதான் சொல்லிண்டு வரேனே..

இந்த நேரத்தில் தான் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையும் அமைதியுமா இருந்து ஓவர் ஆக்ட் கொடுக்காமே என்னோட ஒத்துழைச்சால் போதும்….திவ்யா,,,நம்ம திவ்யாவா ஆயிடுவா.

நீ சுத்தப் பைத்தியக்காரனா இருக்கியே…..அவ மாறுவாள்னு தோணலை.

அவளுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆசைங்கர நரகம் இருக்கு. அதைத் தான் அவ சொர்கமா நினைக்கறா…நினைச்சுட்டுப் போகட்டும்..எனக்கு அது புரியலைன்னா தான் கஷ்டம். எனக்கு அது புரிஞ்சு போச்சு. அதை அவளுக்கும் புரிய வைக்கறது தான் என்னோட கடமை. அதுக்கு ஆகும் நேரம் காலம் வருஷம் எல்லாம் நான் அனுபவிச்சுத் தானே ஆகணும்.
அப்போ புதுச் செருப்பு கடிக்கும்னு உனக்கும் தெரியும்…அப்படித்தானே.
அம்மா….நானும் என்னோட கோப தாபத்தை வெளிய கொட்டினால்…வீணா வீடே கெட்டுப் போய்டும். இத்தனை படிச்சு சம்பாதிச்சு என்ன உபயோகம்னு நீயே சொல்லு,? அவள் வீட்ல இருந்துண்டு நாள் பூரா என்ன செய்யப் போறா…? அட்லீஸ்ட் அவளோட செலவுகளை அவள் ஆசைப் படறதை அவளே வாங்கிக்கட்டுமே…அந்த உரிமையைக் கூடவா நான் தரக் கூடாது…?
இல்லடா…வீட்டில் கூட மாட எனக்கு உதவியா….

நீயும் இத்தனை காலமா இந்தக் குடும்பத்துக்கு சமைச்சுப் போட்டு பாத்துண்டு….உனக்குன்னு என்ன வாழ்க்கை வாழ்ந்தே…நீ?
கொஞ்சம் உனக்காக யோசி…உன் இஷ்டப்படி இரு..! சமையலுக்கு ஆள் போட்டுக்கலாம்.
எப்பவும் அதே மாதிரி கட்டுக் கோப்பா…இருக்கணும்னு நினைக்கறதை விடும்மா…புதுமையான உலகத்துக்கு ஏத்தாமாதிரி உன் மனசைப் புகுத்திக்கோ.திவ்யா, . அவாத்துல எவ்ளோ சந்தோஷமா இருந்தா தெரியுமா? அதே சந்தோஷத்தை அவளுக்கு இங்கேயும் கொடுக்கணும்னு நினைக்கறேன்.
உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா…? இந்த ஆசைக்கு வில்லனே….எதிர்ப்பு தான்.
யாராவது அந்த ஆசையை எதிர்த்தா மட்டும் தான் அதுக்கு வீம்பு அதிகமாகும்….வேண்டாததை செய்யத் தூண்டும்.
ஆசையை எதிர்க்காமல்….கேட்டதை கொடுத்துண்டே இருந்து பாரு…எதிர்ப்பில்லாத ஆசை….! சப்புன்னு போகும்..
ஆசையே…….இது நரகம்னு. அங்கேர்ந்து ஒடிடும்….எல்லாமே எந்த எதிர்ப்புமே இல்லாமல் கிடைச்சாச்சுன்னா அங்கே ஆசைக்கு என்ன வேலை சொல்லு..அவளோட இந்தச் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்தறதுல எனக்கும் சந்தோஷம் நிச்சயமா இருக்கும்மா.சரி…நீ இவ்வளவு சொல்றே…நான் கேட்டுக்கறேன்….ஏன்னா எனக்கும் திவ்யாவை பிடிக்கும். அவ இஷ்டப் படி வேலைக்குப் போகட்டும்.

அப்போ….நீயும் கிளம்பு. நாம ரெண்டு பேருமே அவாத்துக்குப் போய்ட்டு திவ்யாவை கையோட அழைச்சுண்டு வந்துடலாம். அவள் ரொம்ப சந்தோஷப் படுவா..

மகன் சொல்லும் நியாயத்துக்கு கொஞ்சம் மனசுக்குள் இடம் கொடுத்துத் தான் பார்ப்போமே ….என்று கணக்குப் போட்ட கோகிலா…..சரி வா என்று கிளம்புகிறாள். அச்சாரமாக ராஜேஷின் முதல் ஆசை எதிர்ப்பில்லாமல் நிறைவேறி பிள்ளையார் சுழி போட்டது..

இந்த தமிழ் வருஷப் பிறப்புலேர்ந்து நான் மகன் மெச்சும் மாமியார் என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டே கிளம்பினாள் கோகிலா..

----------------------------------------------------------------------------------------------------

7 கருத்துகள்:

  1. தெளிந்த நீரோட்டம் போன்ற அருமையானதோர் கதை. மிகப் பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. தலைப்புத் தேர்வும் சற்றே வித்யாசமாகக் கொடுத்துள்ளீர்கள். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. இன்றைய மருமகள்கள் பொதுவாக இந்தப்படைப்பில் வரும் திவ்யாவைப் போலவே தான் இருக்கிறார்கள் + இருப்பார்கள். அதில் தப்பேதும் இல்லை என்பதையும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை என்பதை வெகு அழகாக, வெகு யதார்த்தமாக, தங்களின் எழுத்துத் திறமையில் ஒளிரச்செய்துள்ளீர்கள். :)

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பத்தில் ஹனிமூன் போய் வந்த புதுமண தம்பதியினர் நேராக கணவர் வீட்டுக்கு வராமல் மனைவியின் வீட்டுக்குச்செல்வது, இங்கு இவர்கள் ஹாரத்தித்தட்டுடன் எதிர்பார்த்து ஏமாறுவது என அனைத்து மிகவும் யதார்த்தமாக ஆங்காங்கே நடப்பதை சும்மாப் புட்டுப்புட்டு வைத்து அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். இதனால் மேற்கொண்டு என்னென்ன பிரச்சனைகள் வர உள்ளதோ என படிக்கும் வாசகர்களுக்கு ஓர் ஆர்வத்தைக் கூட்டவும் செய்துள்ளீர்கள்.

    அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நடக்கும் சின்னச்சின்ன கேலிகள் கிண்டல்கள், பேச்சுக்கள் எல்லாமே வெகு அருமையான எழுதியுள்ளீர்கள். அதற்கு ஓர் தனி சபாஷ் ! :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. பொதுவாக அம்மாக்கள் சமையலில் எக்ஸ்பர்ட் ஆக இருந்தால், அவர்களின் பெண்கள் நேர் விரோதமாகத்தான் இருப்பார்கள் / இருக்கிறார்கள், என்பதை என் அனுபவத்தில் நான் பல இடங்களில் கவனித்துள்ளேன். சில விதிவிலக்குகளும் உள்ளன என்பதும் மறுப்பதற்கு இல்லை.

    அதையும் இந்தத்தங்களின் படைப்பினில், தாங்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதைப் பார்த்து, எனக்குள் நான் சிரித்துக்கொண்டேன். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. எதிர்பார்ப்புகளை அதிகமாக வளர்த்துக்கொள்பவர்களுக்கு, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பதையும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    //மனசுக்குள் ”கல்யாணத்துக்கு முன்னால இருந்த அம்மா வேற….இப்பப் பேசற அம்மா வேற..” என்று தோன்றியது. இதை, இந்த எண்ணத்தை வளர விடக் கூடாது. அப்பறம் வீடே நரகமாயிடும். நான் மத்தளமாயிடுவேன் …அவன் நினைத்ததும் ”தொம்’ மென்ற சத்தத்துடன் வந்து விழுந்தது அடுக்களையில் சாமான்கள்.

    “அம்மா…என்னாச்சும்மா…? இப்போல்லாம் கிட்சன் உனக்கு குருக்ஷேத்ரம் நடக்கற இடமாட்டமா இருக்கா….? சமையலுக்கு ஆள் போட்டுடவா.”

    ”நன்னாப் போடுவே…. இத்தனை காலம் கண்ணுக்குத் தெரியாதது இன்னைக்கு தெரிஞ்சுடுத்தா? நான் ஒண்ணும் உன் பொண்டாட்டியை சமைக்கச் சொல்லிட மாட்டேன்… பயப்படாதே….. ஒரே நாள்ல இப்படிச் சாய்ஞ்சு போகும் என்னோட படின்னு யார் கண்டா?” //

    அதை எடுத்துச்சொல்ல கையாண்டுள்ள மேற்கண்ட வரிகள் ஜோர் ஜோர் !
    சூப்பர் ! ஸ்பெஷல் பாராட்டுகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. தன் புது(மை) மனைவியின் ஆசைக்கும் விட்டுக்கொடுத்து, தன் அம்மாவையும் விட்டுக்கொடுக்காமல், தலைமுறை இடைவெளிகளில் உள்ள பிரச்சனைகளை அழகாக தன் அலுவலக அனுபவங்களுடன் எடுத்துச்சொல்லி, தன் அம்மாவுக்கு புரிய வைத்த ராஜேஷ் என்ற கதாபாத்திரம் மிகச்சிறப்பாக உள்ளது.

    கடைசி இரண்டு பத்திகள் சற்றும் எதிர்பாராத பாஸிடிவ் அப்ரோச் ஆக அமைந்துள்ளதும் தாங்கள் அவ்வாறு அமைத்துள்ளதும் மிக அருமை.

    நல்ல புரிதல் உள்ள தங்களை மாமியாராக அடையப்போகிற மருமகள் நிச்சயம் கொடுத்து வைத்தவளாக இருப்பாள் என நம்புகிறேன்.

    அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் .... சீக்கரம் மகனும், மருமகளும் மெச்சும் மாமியாராக தாங்கள் பிரமோஷன் அடைய ! :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு