என் மனம் நிறைந்த மணிமொழிக்கு,
ஆச்சரியப்படாதே…நான் தான்…!
உனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….! மொதல்ல இதைப் படியேன்.
இது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’.
மாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான்
‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட்.
இந்த லெட்டரை நீ ரசிச்சுப் படிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு பரிசை அனுப்பி வை.. பின்னே…..’சும்மா கிடைக்குமா சந்தோஷம் ?’ உன்னோட இந்த நேரம் கண்டிப்பா உன்னை கொஞ்ச நிமிஷம் நாம பழகின அந்தக் நாட்களுக்கு ‘விசா இல்லாமே இலவசமா’ கூட்டீட்டு போகுமே. அதுக்கு தான் நான் கேட்கிறேன் பரிசு.
இதுக்கெல்லாமா பரிசுன்னு முணுமுணுக்காத. ! கஞ்சூஸ்….! இணையத்துல போயி பாரு…இதுக்கெல்லாம் தான் ஆயிரம் ரூபாயைப் பரிசா அள்ளித் தராங்களாம்.
அதுக்குன்னு இந்த லெட்டரை அப்படியே ஜெராக்ஸ் பண்ணி அவுங்களுக்கு அனுப்பி வெச்சுடாதே . இது நமக்கே நமக்கு மட்டும்.
பரிசுப் பணத்தை விட பெரிசு…. இல்லையா? நமது நட்பு.
எனக்குப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மணிமொழி….இப்போ நீ மகிழ்வா இருந்தா அதுவே போதும். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன?
ம்ம்ம்…தலைய தலைய ஆட்டு…! ஆமாம்….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையைப் பத்திப் பேசிப் பேசி நாமளும் தான் நாளைத் தள்ளறோம். இன்னிக்காவது எந்தப் பிரச்சனையைப் பத்தியும் நினைக்காமே இப்படியே சந்தோஷமா நீயும் நானுமா கொஞ்ச நேரம் ‘போவோமா…..ஊர்கோலம்…..’ ன்னு ஊர் சுத்தலாம் வா..மணிமொழி.
ஹையா…நான் ரெடி…!
நீ ரெடியா….. அப்ப ஜூட்…..கதவைச் சார்த்து…நல்ல திண்டுக்கல் பூட்டாப் போட்டு வீட்டைப் பூட்டிட்டு ‘சிறகை’ எடுத்து மாட்டு.. !
‘இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ….இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்….
அதோ..அதோ..என் பாட்டில் ஒரே ராகம்…
கொடி நீ கிளை நான்
மலர் போல் வாழ்வோம்
துணை…நீ…..ஈ ஈ ஈ ஈ !
பார்த்தியா….பார்த்தியா…..மணிமொழி…..நமக்காகவே ரேடியோல கூட நம்ம பாட்டையே போடறான் கேளு…!
ஏய்…..இந்த ஆலமரம் எப்பிடி சூப்பரா இருக்கு பாரேன் ஜெயா …..! கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்லாம்டி.
அந்த விழுது பாவம்டி…பச்சைப் புள்ளயாட்டம்….அதுல போயி இந்தத் தொங்கு தொங்குறே..நம்ம சைஸுக்கெல்லாம் இந்த ஆசை வரலாமா…?.விழுதுகள் கையை வாரி விட்டா, நமக்கு இடுப்பு எலும்பு நகுந்து போகும்…ஜாக்கிரதை…!
கனவு தானே…..சும்மா நீ கண்ணை மூடு…! கண்டுக்காத…!
“ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா”………
என்னமா….பாடல் வரி எழுதிருக்கார்ல….சரி இங்கயே இப்படி உட்காரலாம்.
சரி…கொஞ்ச நேரம் நீ பேசாமே இருப்பியாம்….நான் மட்டும் கடிதத்தைப் படிப்பேனாம் …முடிஞ்சா நீ “ம்ம்ம்..” கொட்டு….! இல்லாட்டியும் பரவால்ல.
ஆனாத் தூங்கிடாதடி….என்னாலெல்லாம் உன்னைத் தூக்கிட்டுப் போக முடியாது. தாஜ்மகால் சைஸ்ஸுக்கு இருக்கே. பார்க்குறவுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா?
மிலிட்டரி டிரக்குல தாஜ்மகால் திருட்டுப் போகுதுன்னு சொல்லுவாங்க…! ஹ் ஹ் ஹஹஹா ..!
சரி..நீ சிரிச்சது போதும்..இடி சத்தமா…கேக்குது .மழை வரும் போலிருக்கே…..? நீ .சீக்கிரமா மேல படிடி. பையன் காலேஜுலேர்ந்து வர்ற நேரம்.
போச்சுடா……ஆரம்பிச்சுட்டியா…! அந்த இடத்தை கொஞ்சம் விட்டுட்டு வரமாட்டியே….! இரு..! க் க்க்க்க் கும்..!
மணிமொழி…இதைக் கேளேன்…!
நாம் சந்தித்துக் கொண்டு ஆறு வருடங்கள் கழிந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. ஏதோ நேற்று தான் இரயில் ஏறி “காசி யாத்திரைக்கு” கூட்டத்தோட கூட்டமாப் புறப்பட்டது போலிருக்கிறது எனக்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு மணிமொழி என்ற உந்தன் பெயர் கூட எனக்கு அந்நியம் தான். ஆனால் இன்று அப்படியா ….? கால்கள் இல்லாமல் ஓடும் காலத்துடன் யாரும் போட்டி போட முடியாது. ஆறு ஆண்டுகளை ஓரந்தள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது காலம். இருப்பினும்,என் மனம் மட்டும் ஐம்பது வயதை விழுங்கி வெறும் நாலு வயதாகப் பொய்க் கணக்கு சொல்லிச் சமாளிக்கிறது தெரியுமா உனக்கு?
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …..!
சிரிக்காதே. அது தான் நிஜம்.
நாம் சந்தித்ததும் பிரிந்ததும் இரயிலில் தான். இடைப்பட்ட பதினைந்தே நாட்களில்,’ஆன்மீக சுற்றுலா’ என்று எண்ணிக் கொண்டு நூறு பேர்களில் ஒருத்தியாக கலந்து கொண்ட நாம் மட்டும் நம்மில் வளர்த்துக் கொண்ட நட்பு தான் நாம் வாழ்ந்த காலங்களுக்கு ஈடானது. இல்லையா?
“ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே”
ஷ்….ஷ்….ஷ்….! கொஞ்சம். லெட்டரைப் படிக்க விடேன்.
அன்று,இரயிலில் உனது ஊர் வந்துவிடும் அவசரத்தில் எனது கைகளை இறுக்கிப் பற்றிய வண்ணம் ….”இன்னும் இரண்டு நிமிடங்களில் நான் ‘கடலூரில் ‘இறங்கிடுவேன்…நீ உன் வீட்டுக்குப் போனதும் என்னை மறந்துடாதே….நினைவு வெச்சுக்கோ ஜெயா..என்ன..இந்த காசியாத்திரை பயணத்துல உனது நட்பும் பாசமும் தான் இறைவன் தந்தது “இறைவன் இதயங்களை இணைப்பதில் இணையற்றவன்…” நீ கடைசியாகச் சொல்லிச் சென்ற வாக்கியம் இன்னும் முற்றுப்புள்ளி இன்றி உனது அடுத்த வாக்கியத்திற்காக காத்திருக்கிறது மணிமொழி.
‘திருப்பாதிரிபுலியூர்” மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துக்கள் என் கண்களை மறைத்தது. நீ இரயிலை விட்டு இறங்கியதும் உன் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்துத் திரும்பவும், உனது குழந்தைகளும் கணவரும் ஓடி வந்து உன்னைக் கட்டிக் கொண்டதும், அதைப் பார்த்த என் மனம் ஆனந்தம் அடைந்ததும், ஏதோ நினைவுக்கு வந்து மறந்ததைச் சொல்ல வந்தவளாக நீ திரும்பும்போது பிளாட்பாரத்திலிருந்து ஊர்ந்து வேகம் பிடித்தது ரயில்..என்ன சொல்ல நினைத்து திரும்பியிருப்பாள்? . விடை தெரியாத கேள்விகள் என்னுள் இன்றுவரையில்.
நீ இறங்கிச் சென்றபின், நீ அமர்ந்த இருக்கை காலியாகி எனக்குள் எதையோ உணர்த்தியது. முகத்தைத் ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அருகில் இருந்த சக பயணி அம்மையார் என் கவனத்தைக் கலைத்து , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க இல்லையா…..? நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் …? என்று கேட்கவும், ….எனக்குள் பெருமை பொங்கியது.
நாங்க இதே இரயிலில் பதினைந்து நாட்கள் முன்பு காசி யாத்திரைக்காக போனோம்.. அவங்க ரயில் சினேகிதி தான் . ஆனால் பதினைந்து நாட்கள் கூடவே வந்தவங்க…என்றேன். மனம் ஏனோ துணுக்குற்றது.
கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியாது. நீயும் சொல்லிக் கொள்வாயே….அதெப்படி….பிரம்மன் ஒரே அச்சை பயன்படுத்தி .என்னையும் உன்னையும் அடுத்தடுத்துப் படைச்சாராடி….?
என்று கேட்டு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருப்பாய்.
பதில் சொல்லத் தெரியாத நானும், அதை விட அதிசயம்…..உன்னையும் என்னையும் இப்படி இரயில் சினேகிதமாக்கி திருவிளையாடல் பண்றாரே அதை என்னன்னு சொல்வது? என்பேன்.
நாம் சிரித்துக் கொள்வோம். வாழ்வின் அதிசயத்திற்கு அளவேயில்லை மணிமொழி என்பேன். நீயும் “தலையை ஆட்டி ஆமாமாமாம்’ என்று ஆமோதிப்பாய்.
இன்னும் சிதம்பரம் சென்று சேர ஒரு மணி நேரம் இருக்கும். கண்கள் ஜன்னலின் வழியாக வெளியே நோக்கியது. பூமி தனது பச்சைப் பட்டுப் புடவையை வெய்யிலில் காய வைத்திருப்பது போல பசுமை கண்களைத் தாலாட்டியது. இளந்தென்றல் முகத்தைத் தடவிச் சென்றது. கனத்த மனம் இலவம் பஞ்சானது..
ஆச்சு…..இன்னியோடு யாத்திரை முடிந்து வீட்டுக்குச் சென்று பழையபடி அதே..சமையல் பாத்திரத்தைக் கையிலெடுக்க வேண்டியது தான்…நானும் வீட்டைக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து விடை தெரியாத வீட்டுக் கணக்கைப் போட்டுப் போட்டு அழிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கூடவே நடந்து வந்த உனக்கும் அங்கே உன் வீட்டில் அதே நிலை தான். எனக்கும் தெரியும்..
ஆனால் என்ன, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைய இந்தப் பதினைந்து நாட்களில் எத்தனை விஷயங்கள் விஸ்வரூபமாய்….வாழ்கையை, உயிரை, அன்பை பாசத்தை, வாழ வேண்டும் என்ற வெறியை, உயிர் மீது மரியாதையை , மரண பயத்தை, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வை….ஏழ்மையை இயற்கையை,இயற்கையின் சீற்றத்தை, அதன் ஆளுமையை நமக்கு நாம் வாழும் உலகத்தில் மறு பகுதியை நம் கண் முன்னே அனுபவமாய் உணர்வு பூர்வமாக காண்பித்து புத்தி சொன்னது. இந்த அனுபவம் நமக்கு இந்த யாத்திரை சென்றிராவிட்டால் என்றைக்குமே கிடைத்திருக்காது.இல்லையா மணிமொழி.
நடந்ததெல்லாம் கடந்து போய் பல வருடங்களானாலும் என்னுள் அந்த நினைவுகள் இன்று வரை அகலாமல் இருப்பதை நீ இந்தக் கடிதம் மூலம் படிக்கும் போது, எனது நினைவுப் படுகையுள் புகுந்திருக்கும் அத்தனை நிஜங்களும் உனக்குள்ளும் பதிவாகியிருக்கும் அல்லவா அதனால் தானோ என்னவோ உன்னைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் நாம் சேர்ந்து கடந்த அந்த நிழல் நாட்களும் நம்முடன் நினைவுகளாக மீண்டும் பயணிக்குமே என்பதால் இதையெல்லாம் இப்போது இங்கே எழுதுகிறேன்.
எதிரெதிரே உட்கார்ந்திருந்தும் நாம் ஓரிரு முறைகள் மட்டும் பார்வைகள் பரிமாற்றத்துடன் ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. நீ தான் முதலில் பேசினாய் “அந்த புத்தகத்தைத் தரீங்களா கொஞ்சம்..பார்த்துட்டு தரேன்” கொடுத்ததும் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டாய்.
ஏன்….? என் மௌனமான கேள்வி உனக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
அந்தப் புத்தகத்தில் ஒன்றும் இல்லை….என்றாய்.
என்ன எதிர்பார்க்கிறீங்க? என்றேன்.
காசிக்குப் போறமே…ஏதாச்சும் தேவாரம்..திருவாசகம்…என்று அடுக்கியவளை….இந்தாங்க….தேவாரம்…! என்று என் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.
சிரித்துக் கொண்டே வாங்கியவள்..உங்க பேரு ? என்றதும்….நமக்குள் பரஸ்பர பரிமாற்றம். கேள்வியும் பதிலுமாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சில நொடிகள் போதுமானதாக இருந்ததே.
ரயிலின் தாளஜதி காதோடு பேசிக் கொண்டே இருந்தது. எனது கண்கள் ஜன்னல் வெளியே தூரத்து மேகங்களை அளவெடுத்தது. திடீரென்று உனது கைபேசி பாட ஆரம்பித்தது.
‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
இனம் காண முடியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப்போல
நட்பை எண்ணுவோம்”
நான் சிரித்ததை நீ பார்த்துவிட, என்னாச்சு? என்ற உனது கேள்விக்கு…கொஞ்ச நேரம் முன்னாடி ‘தேவாரம்’ கேட்டதை நினைச்சேன்….சிரிச்சேன். என்றேன்.
‘தேவாரம்’ படிச்சா இந்தப் பாட்டு கேட்கக் கூடாதாக்கும்…நீங்க போட்ட சட்டமா? என்று கூலாகக் நீ கேட்டதும்.
அட….இது நன்னாருக்கே…..! என்ற நான்…ஆமாம்…நான் சட்டம் போட்டா நீ கேட்டுடப் போறியாக்கும்…என்றேன் உரிமையோடு.
அதன் பின்பு நமக்குள் ஒரு புரிதலும் கூடவே நடந்ததை நமது பேச்சுவார்த்தைகள் பிரமாணம் செய்து கொண்டே வந்தது.
இரயிலில் சள சள வென்று பலரும் பேசிக் கொண்டே வந்தார்கள். நீயும் நானும் மட்டும் பல வேளைகளில் ஒன்றும் பேசாமல்…! மௌனம் நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தது. இரவு ஓடிப் போனது. வாரணாசியில் சென்று நம்மை இறக்கி விட்ட இரயிலைத் தட்டி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
நூறு பேர்களோடு இருந்தாலும் கூட…அதில் நாம் இருவர் மட்டும் தனியாகிப் போனோம். ‘மந்தைகளோடு சேராத ஆடுகளா நீங்க ரெண்டு பேரும்’ என்று நம் குழுமத் தலைவர் கேலி செய்ததும் நீ அவரைப் பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டதும், இதோ இவ இருக்கா மாமா…ஹிந்தி தெரியுமாம்….பார்த்துப்பா…ச்சே..இங்கயும் நமக்கு சுதந்திரமே இல்லையா …என்றதும் அவர் ‘துண்டைக் காணோம்….ரகத்தில் ‘அம்மா…மணிமொழி, உங்க ரெண்டு பேர் வம்புக்கே நான் வரலை….பத்திரமா வந்து சேருங்க என்று சொல்லிவிட்டு நம்ம திசைக்கே கும்புடு போட்டுட்டுப் போனதை இப்போ நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.
நம்மைக் ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் விடியும் முன்னமே கிளம்பி கங்கைக் கரைப் படித்துறைக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். உன் கைபேசியில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்க, மூடிய கண்களுக்குள் கிருஷ்ண பகவான் எங்கேயோ குழலூதுவது போல கற்பனை செய்ய வைத்தது. குளிர் காற்று மெல்ல வீச, இருள் விலக விலக கண்முன்னே பரந்து விரிந்த கங்கை மெல்ல மெல்ல கண்விழிப்பது போல அலையலையாய் ஒளிக்குள் சிக்கிக் கொள்ளும் இனிமையை கண்கள் இரண்டும் நிழற்படம் எடுத்துக் கொண்டது.
ஆங்காங்கே படகுகள் ஆயத்தமாக நாமும் அந்த இளங்காலைப் பொழுதில் படகு சவாரி செய்தோமே…நினைத்தே பார்த்திராத திவ்ய தருணம் அது. அதிகாலை நேரத்தில் கங்கையில் படகு சவாரி நினைத்த போதேல்லாம் கிடைத்து விடுமா என்ன?
எனக்கு மிகவும் பிடித்தமான
“கங்கே……
துடியில் உணரும் த்ரிபுட கேட்டு
துயிலுணர்னு வா…..டி எண்டே…..
நடன மண்டபம் துறந்து வா…..
கங்கே…..கங்கே……!
பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மந்திரக் குரலில் வடக்குநாதன் படப்பாடலை மானசிகமாக மனதுக்குள் இசைத்து லயிக்கிறேன்..
எத்தனை அருமை….எத்தனை இனிமை…என்று அமைதியை உள்வாங்கிக் கொள்ளும்போது தானே வாழ்வின் அர்த்தம் புரிகிறது.
அரைமணிநேரப் படகு சவாரி அதுவும் இயற்கைச் சூழலோடு இனிமையான இசையோடு அன்றைய பொழுதின் ஊக்கபானம் நமக்கு.
மெல்ல இறங்கி அப்படியே கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினோமே ஞாபகம் வருதா?
காலையில் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நம் எல்லோரையும் அழைத்துச் செல்ல, சின்ன சந்துகள், முட்டுச் சந்துகளை கடந்து தெருக்களைத் தாண்டி நடந்தே சென்றதும் ஒரே கால்வலி நாம இங்கேர்ந்து ஒரு சைக்கிள் ரிக்சா வெச்சுண்டு போயிடலாம் என்று சொன்னதும், இருவரும் ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறி ‘மந்திர் ஜானா ஹை ‘ என்று ஏறி உட்கார…அவனும் மெல்ல ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தவன் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ” எனும் ஸ்டைலில் மெல்ல ஓட்ட …..பொறுமை இழந்தவளாக “ஜல்தி ஜானா ஹை ….தோடா ஜல்தி சலோ..” என்று அவசரப்படுத்த…அவன் வேகமாக சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வந்து நம்மை இறக்கி விட்டு விட்டு “பீஸ் தேதோ….என்றான்.
இருபது ரூபாயாம்…என்று கொடுத்துவிட்டு இறங்கினதும் அவன் ஏனோ தலை தப்பியது என்பது போல விருட்டென்று பறந்தான். பிறகு தான் தெரிந்தது நாம் இருவரும் எங்கு ஏறினோமோ அதே இடத்திலேயே வந்து இறங்கினோம் என்று. கண்முன்னே….சிறு சந்து..அதன் உள்ளே தான் கோயில்.என்ற விஷயம் புரிந்ததும் நம் இருவர் முகத்திலும் ஈயாடலை. அரைமணிநேரம் வேஸ்ட் என்று சொல்லி என்னை அடிக்க வந்தாயே….உன்னை நம்பினேன் பாரு…..ஹிந்தி தெரிஞ்சுமா உன்னை ஏமாத்தினான்…என்று நீ கேட்டதும். இல்ல பக்கத்தில நீ இருந்ததால தான் ஏமாத்தினான் என்று நானும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன்.
டீ …ஏமாத்துறாங்க…ஏமாந்துடாதே….ஜாக்கிரதை….இப்படிச் சொல்லிக் கொண்டே நாம் ஏமாந்த இடங்கள் தான் ஜாஸ்தி…!
ஹரித்வாரில், பதஞ்சலி ராம்தேவ் பாபா ஆஷ்ரம் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்த கடையில் இரண்டு பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வரும் என்னைப் பார்த்து, அது என்ன என்று துளைத்தெடுத்தாய். உனக்கு மட்டும் கேட்கும் குரலில் “கோமியம்” என்றேனே..உடனே நீ அடிப்பாவி அதை ஏண்டி பணத்தைக் கொடுத்து வாங்கறே நம்ம ஊரு தெருவுலயே ஒரு நாளைக்கு ஓசிலயே ஒன்பது லிட்டர் பிடிச்சுக்கலாமேடி என்று நீ சொன்னதும் நம் அருகில் கூட இருந்த அத்தனை பேருமே சிரித்த சிரிப்பும் என் முகம் போன போக்கும் இன்னைக்கும் உனக்கு நினைவு இருக்கும் தானே?
ரிஷிகேஷில் சென்று லக்ஷ்மன் ஜூலாவில் ஆடி ஆடி நடந்து சென்று அந்தக் கடைசியில் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு பின்பு அதை அப்படியே மறந்து போய் திரும்பி வந்தபின் செருப்பின் நினைவு வர அந்தத் தொங்கு பாலத்தைப் பார்த்து மீண்டும் அது வரை சென்று வர பயந்து செருப்பையே நினைத்துக் கொண்டு வெறுங்காலில் ரிஷிகேஷ் முழுக்க நடக்க நடக்க…..”உனக்குப் புண்ணியந்தாண்டி …..” என்று நீ உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க….எத்தனை மறக்க முடியாத நிகழ்ச்சியை நாம அனுபவிச்சிருக்கோம் இல்லையா மணிமொழி?
நம்ம ரஜனிகாந்த் அவர்கள் வழக்கமாகத் தங்கும் அறையை நீ உனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போனதும் உனக்கொரு காப்பி தரேன்ன்னு சொல்லிவிட்டு இத்தனை வருஷமா நீ தரவேயில்லை…..என்று உன்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பேனே நினைவு இருக்கா…மொதல்ல ஒரு காப்பி போட்டு வை..! நரசுஸ் காப்பி இல்லடி….நன்னாக் காதுல வாங்கிக்கோ. ஃபோட்டோ காப்பி…அது..!
ரிஷிகேஷ் மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடத்திற்குப் போனதையும், அங்கிருந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்த ஸ்படிக நீரை பாட்டிலில் பிடித்துக் கொண்டு நாம் வருவதற்குள் நம்மை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட ரெண்டு பேரும் தனித்து விடப் பட்டு தவித்துப் போனோமே….அந்த சில நிமிடங்கள்…உனது கைபேசியில் சார்ஜ் தீர்ந்து விட, அந்தி மயங்கி இருள் சூழ, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட…நீ என்னை திட்டோ திட்டு திட்ட…நான் அழாத குறையா, ரஜனி ஸ்டைல்ல ‘கடவுளே…கடவுளே….கடவுளே….’ என்று படபடக்க…
எப்படி வந்து சேர்ந்தோம் என்றே இன்னும் புரியவில்லை..எல்லாம் அந்த ஈசன் செயல் தான். என்ன சொல்ற? திரும்பி வந்து ஆளுயர ஸ்படிக இலிங்கத்துக்கு அந்த சஹஸ்ராரத்தில் பிடித்த நீரை விட்டு வழிபட்டதும் பட்ட துன்பம் சட்டென மறந்து போனதே….!
பத்ரிநாத் பார்க்க கிளம்பியாச்சு. நூறு பேரும் இரண்டு சொகுசு பஸ்ஸில் பிரிந்து கல கலப்பாக ஏறி அமர்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக பஸ் கிளம்பியது. வெளியில் ஒரே மழை..குளிர்…அதிகமாக ரிஷ்கேஷில் மினெரல் வாட்டர் பிஸினெஸ் தான் இருந்தது . தண்ணீர் பாட்டில் ரெண்டு வாங்கிக் கொண்டோம்.அப்போது தெரியாது அந்தத் தண்ணீர் பாட்டிலின் எப்படி உதவும் என்பது..
நான்கு மணிநேரம் இமயத்தின் மலையில் பஸ் வளைந்து நெளிந்து நம்மை இழுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதள பாதாளத்தில் கங்கை கரை புரண்டு ஓடுகிறாள். காசியில் பார்த்த அமைதியான கங்கை ஆற்றிற்கும், ஹரித்வாரில் பார்த்த கங்கை நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியது ரிஷிகேஷ் மலையில்.
நம்மோடு வந்த ஒரு டாக்டர் அனைவரிடமும் சொல்லுகிறார்….”நான் இங்க ஒரு டாக்டர்…இந்த பஸ்ஸுல உங்களோட வரதுல உங்களுக்கெல்லாம் ஒரு சௌகரியம்…என்னன்னா…என்கிட்டே எல்லா விதமான மாத்திரைகளும், மருந்தும் இருக்கு…உங்க யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா உடனே என்கிட்டே சொல்லுங்கோ…” வாமிட் , தலை சுற்றல், மயக்கம்..என்று அடுக்கிக் கொண்டே போனார். கூடவே பெருமை பொங்கப் பார்த்தார் அவரது மனைவி.
நல்லவேளையா….நம் பஸ்ஸில் ஒரு டாக்டர் இருக்கார் இல்லையா? என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா? அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அடுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ….? தலையில் பாறாங்கல்லைப் போட்டார் என்று சொல்லுவோமே….என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம்.
முப்பது பேர்களின் முயற்சியால் கூட அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கிரேன் வந்து தனது இரும்புக் கையால் அலாக்காகத் தூக்கி அந்தப் பக்கமாக எறிந்ததே….பஸ் மீண்டும் விடாக் கண்டனாக மேலே கிளம்பியது. இன்னும் ஏழே கிலோமீட்டர் தூரம் தான். கௌரி குண்ட் வருவதற்கு. அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது…வண்டி இனிமேல் போகாது என்று சொல்லி நிறுத்தி விட்டானே.
அத்தனை பேரின் என்னாச்சு? என்ற கோரஸான ஆவலும்….அதோ மலையிலிருந்து சரிவு…..விழுகிறது….அவன் சொன்ன இடத்தில் செக்கச் செவேல் என்று செம்மண் குழம்பு அருவியாக வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு டையர் ஏறினாலும் அவ்ளோ தானாம்….பஸ் வழுக்கிக் கொண்டு அதள பாதாளத்தில் விழுந்து விடுமாம். அவன் சொல்லிவிட்டு எல்லாரும் ஜன்னலை இழுத்து மூடிக்கங்க . இனிமேல் நாளைக்கு காலை தான் வண்டி திரும்பும்..மேற்கொண்டு போகாது. பத்ரியும் இல்லை கேதாரும் இல்லை…என்று சொல்லிவிட்டான்.
அத்தனை மனங்களும் இருளில் மூழ்க பயத்தின் உச்சத்தில்…..மெல்ல மெல்ல சூழ்நிலையைப் புரிந்து கொள்ள எத்தனை சிரமப் பட்டோம் இல்லையா?
நாம் ஏறிவந்த பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரும் முதலில் சள சல வென்று பேசினார்கள்…பின்பு மெல்ல மெல்ல பேச்சு அடங்கியது…மௌனம்…..அமைதி….பயம்…..பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இமய மலை உச்சியில் ஒரே ஒரு பஸ் மட்டும் போகும் அளவுக்கு இருக்கும் இடத்தில் பஸ் நின்றுவிட, ஒரு பக்கம் உயர்ந்த மலை இந்தப் பக்கம் படு பாதாளம்….கீழே கரை புரண்டு ஓடும் நதி…எப்போ வேண்டுமானாலும் மேலிருந்து பாறை பெயர்ந்து பஸ் மீது விழலாம்…நிலச் சரிவு உண்டாகலாம்…..எதுவும் நடக்கலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
முதல்லயே கைபேசி எல்லாம் உயிர் விட்டது. உண்மையின் சாரம் நமக்குப் புரிந்த போது பயம் பற்றிக் கொண்டதே….நீயும் நானும்…..
கைகளைப் பற்றிக் கொண்டோம்….நான் என் குடும்பத்தையும், நீ உன் குடும்பத்தையும் மனசுக்குள் நினைக்க ஆரம்பித்தோம். இங்கெல்லாம் வந்திருக்கவே வேண்டாமோ…..என்று கூட முனுமுணுத்தோம் . அதற்குள் தானே அது நடந்தது..
அந்த டாக்டரின் மனைவி வீல் என்று கத்திக் கதற ……அய்யய்யோ…..என்னாச்சுன்னா….என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் ….அவருக்கு உடல் முழுதும் வியர்த்து விட, மூச்சுத் திணறல் எடுக்க…..மயக்கம் வர..மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததன் அறிகுறி அனைத்தும் தெரிய வந்தது. அத்தனை பேருமே நடுங்கிப் போனோமே…உடனே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்….மறுபடியும் மறுபடியும் சொன்னோமே…அத்தனை பேரின் பெட்டிகளும் அடுத்த பஸ்ஸில் வர, நாம் மட்டும் இங்கே மாட்டிக் கொள்ள…அந்த மாமி..இவரோட மாத்திரைகள் எல்லாம் அந்த பஸ்ல மாட்டிண்டுடுத்து….இப்ப நான் என்ன செய்வேன்..? .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா…? ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி? நம்ம உயிரே இங்க பெரிய கேள்விக்குறி மாதிரி இருக்கே…எப்படிச் சிரிக்கறது.
மணிமொழி…..!
ஜெயா….!
நமது குரல்கள் மட்டுமே நம்மை இங்கு இருக்கிறோம் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…..!
எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மலை, மரங்கள்.வானம்,பள்ளம்,ஆறு,பஸ்…என்று எதுவுமே அடையாளம் இல்லாத ஒரே கும்மிருட்டு…அசுரக் காற்று பஸ்ஸை அசைத்துப் பார்த்தது…..! காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்னென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி……! என்று சொன்னதற்கு…..அத்தனை பேரிடமும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன். நினைவிருக்கா…..?
ஐயோ….மணிமொழி…..வாழ்க்கையில் இந்த நிலை வேற யாருக்குமே வந்துடக் கூடாதுடி….பஸ் மேலே பாறை உருண்டு விழுமா? பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா….? எப்போ எது நடக்குமோ? என்ற கவலையில்…..வெறும் சப்தத்தை மட்டும் வைத்து திகிலோடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருந்தோமே நினைவிருக்கு இல்லையா?
பின்னே…மறக்க முடியுமா…?
நமக்கு பத்ரியும் வேண்டாம் கேதாரும் வேண்டாம்….வீட்டுக்குப் போனால் போதும்….! அதுவாவது நடக்குமா?
மழை விடாமல் பெய்தது…..! அருகில் அப்பப்போ டப்டப டப் டப என்று சத்தம் கேட்கும்…பாறைகள் எங்கோ உருளும் சப்தம்…நாம் திகிலுடன் கைகளைப் பற்றிக் கொள்வோம்…கண்களுக்குள் ‘ கமலும் ரேகாவும்’ “என்ன சத்தம் இந்த நேரம்” பாடிவிட்டு பயந்த நிமிடத்தை நினைவுக்கு கொண்டு வந்து நீட்டும். சீ…..போ….என்று துரத்தினாலும் மீண்டும் …ஒன் …டூ…த்ரீ….என்று காதுக்குள் கேட்கும்.
மணிமொழி…நெஜம்மா பயம்மா இருக்குடி….!
எனக்கும் தாண்டி…ஜெயா…!
அந்த நேரத்திலும் ஒரு பாட்டு…..சட்டி சுட்டதடா…கை விட்டதடா…..புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா…..! போனால் போகட்டும் போடா….!
என்னடி…..இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடறே….! வேண்டாம் ஜெயா…..பயமா இருக்கு….என்று எனது கைவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடுங்கினியே. அதை உணர்ந்ததும், நானும்….அச்சமில்லை….அச்சமில்லை….அச்சமென்பதில்லையே…உச்சி மீது இமயம் வந்து கல் சொரிந்த போதிலும்…அச்சமில்லை…அச்சமில்லை……என்று எனது நடுங்கும் குரலில் …….நா…நா….நான்….ப் ப் ப் ப் பா ட ….!
அப்படியே…கண்ணை மூடித் தூங்கிருவோம்….பொழைச்சுக் கிடந்தா நாளைக்குப் பார்ப்போம்…என்றபடி .பஸ்ஸுக்குள் நம்மையும் மீறி உறங்கிப் போனோம்…காலையில் கண்விழித்தபோது…..நாம் அனைவரும் உயிருடன்…இருக்கிறோம் !
எத்தனை சந்தோஷம் நம்முள்..!…மலைகளும், மரங்களும், பளிச்சென்று வண்ணப் படங்களாகத் தெரிந்தது.மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது..
இன்று பிழைத்தது இறைவன் நமக்குப் போட்ட உயிர் பிச்சை தான். நேற்று இரவு எதுவும் நடந்திருக்கலாம்….நமக்கு ! அது தான் நிஜம். இல்லையா?
ஒரு நாள் தூக்கம், ஒரு நாள் பசி, ஒரு நாள் எங்கும் இறங்கி நடக்க இடமில்லாமல்……..கண்ணாடி வழியாக ஒரே மலையைப் பயந்தபடி பார்த்துக்கொண்டு……”அந்த ஒருநாள் பீதியில் உறைந்தோம்…..இன்று நினைத்தால் என்னென்ன பயமோ”
பாதி விழிகள் மூடிக் கிடந்தே….நடுங்கும் வேளையிலே…நீ சாட்சியடி மணிமொழியே ….! அன்றொருநாள்….இமய மலையில்….
நீ இருந்தாய் என் அருகே…!
அந்தப் பொழுதிலும் நான் பாட….அதை நீ ரசிக்க…இன்னும் நாம மலை இறங்கலை நினைவு வெச்சுக்க…என்று நீ சொன்னது இன்னும் என்
நெஞ்சுக்குள் திக் திக் திக்..!
மீண்டும் ரிஷிகேஷ்…அங்கு ஒரு ஆஷ்ரம் அருகே….ஒரு பெரிய மரம்…இது நினைவு இருக்கா மணிமொழி…!
இந்த மரம் தான் ருத்திராட்ச மரம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொழவும், இன்னும் பலர் வேக வேகமாக வந்து அந்த மரத்தை கட்டித் தழுவி, அதற்கு நமஸ்காரம் செய்து, கண்ணில் ஒத்திக் கொண்டு …”இதுவா..இதுவா…ஹேய்…இது ருத்திராட்ச மரமாம்…” என்று இன்னும் சிலரை அழைக்க… நம் கண்கள் வேறு திசையில் பார்த்ததும், அங்கு சுற்றிலும் இரும்பு வலை போட்டு அதனுள்ளே ஒரு மரம்….’ருத்ராட்ச மரம்’ என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. அப்போ இந்த மரம் என்று நாம் தலையை உசத்திப் பார்க்கையில்…இது ஒரு காட்டு மரம்…என்று தெரியவர…..நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே. அதற்குள்..”நாம எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்..தெரியுமா….இப்படி ஒரு ருத்திராட்ச மரத்தையே கட்டிப்பிடிக்க…!” என்று பில்ட் அப் வேற..
ஹேய்….மணிமொழி….என்னாச்சு…இப்படிக் கொறட்டை விடறே…! ஹேய்…இப்பவே தூங்கிட்டியா? பாதி லெட்டர் தான் படிச்சேன்…இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா? அதுக்குள்ளே இப்டி தூங்கிட்டியே !….கண்டிப்பா…..என்னால.இந்தத் தாஜ்மகாலைத் தூக்க முடியாதுடி….என்று சொல்லிச் சிரித்தபடி தண்ணீரை எடுத்து மணிமொழி மீது தெளித்து எழுப்புகிறேன்..
“ஐயய்யோ …இடி….மழை…” என்று நாகேஷ் ஸ்டைலில் துள்ளி எழுந்து பேந்தப் பேந்த விழிக்கிறாள் மணிமொழி.
ஜெயா…மனியாச்சுடி….பையன் காலேஜ்லேர்ந்து வர நேரம்…என்றவள்…வீட்டுக்குப் போகணும்…..என்று சிறகை விரித்துச் சிட்டாகப் பறந்தாள் மணிமொழி. அவளது கைகளுக்குள் கடிதமும் பத்திரமாக.
மணிமொழி….கடைசி ஒரு வரியை வீட்டுக்குப் போய் படி….என்ன….?
எனது ஐம்பது வருட கால வாழ்வில் ஒரு பதினைந்தே நாட்கள் என் இதயத்தை விட்டு அகலாமல் பச்சைக் குத்திக் கொண்டது அந்த நாட்கள். உனக்குள்ளும் அந்தத் தாக்கம் ஏற்பட்டு இன்னும் அப்படியே இருக்கும் என்ற என் நம்பிக்கையை நீ புறந்தள்ள மாட்டாய் என்றறிவேன். இனிமேல் அடுத்த ஆன்மீகச் சுற்றுலா…..!
வாயை மூடு…நாம எங்கயும் இனிமேல் இப்படிப் போகவேண்டாம்……!
சரி…சரி…மணிமொழி…இந்தக் கடிதம் உன் கண்ணை நிறைத்தால் கண்டிப்பாக என் மனம் நிறைக்க பதில் போடுவாய் என்று நம்புகிறேன்.
என்றும் உனது நினைவாக,
ஜெயா….
மனம் நிறைக்க பாடல் வரிகளையும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு