செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பெருமை




ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

நன்றி:தமிழ்த்தேர்,



"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...?" பல ஆண்டுகள் முன்பு பிரபலமான திரையிசைப் பாடல் வரிகளாய் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததைக் கேட்ட ஒவ்வொருவரின் இதயத்திலும் இசையைத் தாண்டி காலத்தைக் கடந்து அப்படியே செதுக்கி வைத்தது போல அச்சாகியிருக்கும்.

ஆம், வெறும் நாடு என்று சொல்லிவிடவில்லை கவிஞர். 'திரு நாடு' என்று பாரதத்தின் பெருமையை ஒவ்வொருவர் மனத்திலும் உயர்த்தி வைத்து அழகு பார்த்தார். ஒரு விதத்தில் பார்த்தால், இந்தியாவுக்கு என்றென்றும் பெருமை விவசாயிகள் தான். இந்தியாவை அலங்காரம் செய்து பார்க்கவென்றே அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் காய்ந்தும், நனைந்தும், நிலத்தோடு நிலமாக வெட்டவெளியில் கிடந்து தான் நம்பி விதைத்த பூமி பச்சைப் பட்டு உடுத்த ஆரம்பத்திலிருந்து, தன் மகளைப் போலப் பேணிக் காத்து 'வாரி வழங்கும் கருணைத் தாயாக்கி', உலக மக்களுக்குப் படியளக்கும் தெய்வமாக்கி , அதன் ஒவ்வொரு தருணத்திலும் தன் சுகம் பாராமல், நிலமகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமை பட்டு, விளைச்சல் நிலத்தின் மகசூல் கண்டு மகிழ்ந்து, தனது அத்தனை உழைப்பிற்கும் ஈடாக, வயல் தந்த பரிசை 'சூரியனுக்கு'ப் பொங்கலிட்டுப் படையல் தந்து அவர்தம் நன்றிதனை ஆண்டவனுக்கே அர்ப்பணித்தனர்.

எந்த ஒரு விதத்திலும் தங்களால் தான் என்று தற்பெருமை பட்டுக் கொள்வதில்லை விவசாயிகள். எளிமையும், வலிமையும் தந்த வல்லமை பெரிது. மனிதகுலத் தேடுதலின் 'அச்சாணி'யான பசிக்குப் பக்குவமாக ருசியோடு தந்து கொண்டிருக்கும் விவசாயிகள், கால காலமாக நமது இந்தியாவின் ஆணிவேராக விளங்குவதைக் கண்டு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படுதல் வேண்டும்.

மண்ணோடு மண்ணாக உழலும், பொன் மனிதர்கள், தங்களின் சுகம், சொகுசு,நாகரிக வாழ்க்கை என்று எதைப் பற்றியும் சிந்தனை செய்யாது, சேற்றோடு நடந்து நடந்து நமது பாரதத்தாயின் குழந்தைகளை கௌரவமாக பவனி வரச் செய்யும் 'தியாகிகள்'. வெற்றுப் பூமியோடு போராடி விளையச் செய்து வெற்றி கண்டு , நாட்டின் அந்நிய செலவாணிகளை உயர்த்தித் தரும் கண்ணுக்கு எட்டாத கணக்கர்கள். காலத்தின் எந்த மாறுதலையும் தனக்கென்று ஏற்றுக் கொள்ளாமல், தனக்கான கருமமே கண் எனக் கொண்டு செய்யும் தொழிலை சவாலாக ஏற்று சமுதாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தப் பகுதியின் முன்னேற்றமும் தன் உள்ளத்திலும், உணர்விலும், உடையிலும், வந்து விடாமல் நவீனத்தின் வாசனை எதையும் மனம் நுகராது தன்னைக் காத்துக் கொண்டு மண்ணையும் காக்கும் வீரத்திருமக்கள் இவர்கள். இவ்வாறு இவர்களது பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"...என்ற மஹாகவி பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, நாம் என்றென்றும் உழவுத் தொழிலையும், அதைக் கண்ணாகக் கருதும் விவசாயிகளையும் பெருமைப் படுத்தக் கடமை பட்டுள்ளோம். ஆனால், தற்போது நடப்பது என்ன? விளை நிலங்கள் விலை பேசப் படுகின்றது. விவசாயத்த்திற்குச் சாயம் பூசி அழகு பார்க்க முயன்று கொண்டிருக்கின்றனர் . இதன் விளைவு , உழவுத் தொழில் மெல்ல மெல்ல அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து செல்லும் அபாயம் காத்திருப்பதை உணராமல், நிலங்களுக்கு விதைநெல் இடுவதற்கு மாறாக 'எண்' இட்டு பிரித்து தரிசாக்கிக் காசு பார்க்கும் கனவு காண்கின்ற வேகம், அதிவேகமாகப் பரவுகிறதே. இதன் நிலை அறிந்து நாம் பெருமைப் படவா இயலும்? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்னும் நிலைமையை மாற்றி விடத் துடிக்கும் நவீன சமுதாயம் வெறும் நிலத்தை மட்டும் விலை பேசவில்லை விவசாயத்தையே விலை பேசுகிறார். காலகாலமாகச் செய்து பிழைத்து வந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலகி நகரங்களின் பளபளப்பில் சொக்கி நிற்க ஆரம்பிக்கும் போது, எந்தக் காலத்திலும் மாறாத மனிதனின் பசியைப் போக்கப் போவது இனி யார் என்று நாம் சிந்தித்துப் பார்த்திடல் வேண்டும்.

எந்தப் பெருமைக்கும் தலைநிமிராது, முதுகு வளைந்து குறைந்தாலும், நமது இந்தியாவின் முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கக் காரணமான விவசாயிகளை எண்ணிப் பெருமை கொள்வோம். அவர் தம் தொழிலை அழிந்திடாது காக்க ஆவண செய்வோம். விளை நிலத்தை விலை பேச விடோம். நாட்டில் எத்தனையோ 'பெருமைகள்' பெருமைப்பட வேண்டிய வகையில் இருந்தாலும், கண்ணுக்குக் கண்ணாக விளங்கும் உழவுத்தொழில் தாயகத்தின் உரிமைத் தொழில் என்று பெருமையோடு நிலைநாட்டப்பட வேண்டிய தருணத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

சுயநலப் பேராசையால் ....விவசாயிகளை ஆசைகாட்டி அடிமைகளாக்கி, ஆணிவேரில் வென்னீர் ஊற்றிப் பார்க்காமல்' , விவசாயத்தைப் பெருமை படுத்தும் வகையில், அந்தத் தொழில் புரிபவர்களுக்கு நவீன உதவிகள் செய்து தர வேண்டும். தாயகத்தில் விவசாயம் செழித்து, விவசாயிகளை உயர்த்துவதில் தான் இந்தியன் ஒவ்வொருவரின் கடமையும் அதனால் பெருமையும் .பொங்கி நிற்கிறது.

அருவி ...!

 
 

மலையரசி பெற்ற மகள்
பொங்கு மனம் கொண்ட மகள் 
ஆழ்கடலை ஆளவென்றே
கொஞ்சச்  சிலிர்த்தவள்
அன்னை மடி தழுவி
அன்பின் பிடி
நழுவிச்
சிரிக்கும் செல்வமகள்
தாயகம்  கடந்து
சிறுமலை பொழியும்
அருவியாய்
வனங்கள் கடந்து
வளங்கள் சுமந்து
தாயின் கனவை
நனவாக்கும் தேடலில்
தொலைந்து
தரை விழுந்து
துடித்து நெளிந்து 
ஆற்றின் வழி கண்டு
மகிழ்ச்சி வெள்ளமாகி
ஏற்றமும் தாழ்வும் இலக்கை அடைவதன்
இலக்கணத்தைச் சொல்லிக் கொண்டே
உயரத்தின் ரகசியத்தை
ஆழத்தில் பகரும் வேகம்
வரவேற்கும் கடலலைக்குள்
சங்கமித்தவள்
அன்பில் மூழ்கியே
ஓலைதனை அனுப்புகிறாள்...முத்துக் கடல் காண
வானம் விட்டு 
பொழிய வேண்டுமென

மேகத்திற்கு...!

----------------------------------------------


வெள்ளி, 12 செப்டம்பர், 2014

அச்சமில்லை அச்சமில்லை

 
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது?
உனது வீர வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
தமிழகத்தின் நீங்காத வரலாறாக
வாழும் போது ...!

நின் எண்ணங்கள் யாவும் இளமைக் 
கவிதையாய் நித்தம் உலா வரும்
ஒளி வெள்ளமாக ஒய்யாரம்
பெறும் போது ...!

உன்னைச் சிறப்பித்து ஆனந்தமடையும் 
தமிழ் நெஞ்சங்கள் துடிப்புடன்
தமிழைத் தாலாட்டிய தலைவன்
உனை நேசிக்கும் போது ..!

வண்ண மலர் மாலைகளிட்டு
உனை வணங்கிப் பாராட்டி
போட்டிகள் பல வைத்து
சந்ததிக்குச் சொல்லும் போது ..!

பிறந்த குழந்தைகட்கு
ஆணென்றும் பெண்ணென்றும்
பாராமல் ஆனந்தத்தில்
உன் பெயரே வைக்கும் போது ..!

உலகத்தின் இறுதி எல்லையிலும்
தமிழ் வாழும் எந்த மூலையிலும்

உன்னைச் சொந்தம் கொண்டாடி
அழைக்கும் போது ..!

நீ தந்த படைப்புகள் யாவுமே
நீ விட்டுச் சென்ற வெறுமையை
விரட்டி 'பாரதியென' 
என்றும்  உயிர் வாழும் போது ..! 

முண்டாசுக் கவி உன்னைக்
கொண்டாடிப் பார்க்கும்
திருநாள்  என்றென்றும்
"தாயின் மணிக்கொடி" பாடும் போது ..!

தாய்ப்பாலோடு தாரக மந்திரமாம்
"அச்சமில்லை அச்சமில்லை"
என்றூட்டி தலைமுறை
வளர்க்கும் போது ..!

ஆண்டுகள் உருண்டோடினாலும்
உந்தன் கவிதைப் பொக்கிஷங்களை
தூசி தட்டத் தேவையில்லை...நித்தம்
தங்கமுலாம் பூசும்போது..!
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது..?

வியாழன், 11 செப்டம்பர், 2014

பாரதிக்கு ரதம்...!

 
இந்த வையம் செழித்திட
கனவு கண்டார் அவர்

பாரத சுதந்திரத்

தாகம் கொண்டார்

பெண் விடுதலை
வேண்டு மென்றார் -

செய்வோம் தருவோம்
வருவோம் பெறுவோம்

என்றும் ஓமென்று
அல்லாது வேறில்லை

நின்றார்..நிமிர்ந்தார்
சிரித்தார் சிலிர்த்தார்..

வில்லென மீசையும்
அம்பெனப் பார்வையும்

இலக்கே நெற்றிக்கு வட்டப்
பொட்டாகக் கொண்டு...

யாவர்க்கும் வீரத்தை
அங்கிருந்து பகர்ந்தார். 

அறிவை இயக்கியவர் 

அள்ளித்தந்த பாடல்கள்

புவியில் இலக்கிலாமல்
நெஞ்சங்களில் வலம்வர

காணி நிலம் கேட்ட உமக்கு
இக்கோளமே உரிமையாக 

மனத்தால் சுமக்கும்
ரதங்களைப்  பாரேன் பாரதி...

மலர்மனப் பெண்டிர்
மகிழ் மணப்பூச் சொரிந்து

நீ அன்பு செய்து அருளிய
பாடல்கள் அனைத்தும்

ஆழப் கற்று இன்னும்
மனம் கரைந்து நீயும்

எங்களுடன் இணையத்தில்

வாழ்திருக்கக் கூடாதா..?

ஏக்க மூச்சுகள் பெருகிச் சிதற
எதைச் சொல்லாமல் விட்டாய்..?

சொல்லிச் சென்ற அத்தனையும்
 
உனக்கே சமர்ப்பணமாகி

நிந்தன் சொப்பனங்கள்
உன்னோடு உறங்கிடாமல்

ஏற்றி வைத்த விளக்காக
சென்றதினி மீளாது என

ஞான விளக்கேற்றினாலும்
இன்று புதிதாய்ப் பிறந்தாய்

என நித்தம் உம்மை
தமிழால் வாழ்த்த

எங்கெங்கும் காணினும்
நீ கண்ட சக்தியே உருவெடுக்க

நீ விதைத்த எண்ண வித்துக்கள்
வீரத்தை  ரசவாதமாக்கி

வெற்றிகள் குவிந்து கொள்ளும்
புதுமை ஆரணங்குக் குழுமி

இழுக்கும் பரவச ரதத்தில்
பெருமிதத்தில் நீவிர் ...!

உமைக்கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர்  கண்களுடன்.......!

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல்

திண்டுக்கல்தனபாலன்

இன்றைய உலகில் வலைப்பதிவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய உதவிக்குறிப்புகள், வலைப்பூக்களை முதன் நிலைக்கு உயர்த்த, வாசகர்களை தம் வலைக்கு இழுக்க என ஒரு Web Developer எமக்குச் சொல்லித்தரக் கூடிய எல்லாத் தகவலையும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார்.

வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோர் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டலாக இப்பதிவு அமையும் என்பதை விட, அவரவர் தமது வலைப்பூக்களை முன்னிலை வரிசைக்குத் தரமுயர்த்த உதவும் பயனுள்ள பதிவிது. எனது நண்பர்களே, இப்பதிவை உங்கள் தளங்களிலும் அறிமுகம் செய்து உதவுங்கள். அதனால் சிறந்த வலைப்பதிவர்கள் முன்னுக்கு வர உதவியதாக அமையும். http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதன் நோக்கம்; உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குப் பயனுள்ள தகவலை வழங்கியமையே! எனவே, இவரது பதிவைப் படித்துப் பயன்பெறுக; வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருக. எல்லோரும் ஒன்றிணைந்து வலைப்பூக்களூடாகத் தமிழ் பேணுவோம்; உலகெங்கும் தமிழை வாழவைப்போம்.