வெள்ளி, 12 செப்டம்பர், 2014

அச்சமில்லை அச்சமில்லை

 
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது?
உனது வீர வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
தமிழகத்தின் நீங்காத வரலாறாக
வாழும் போது ...!

நின் எண்ணங்கள் யாவும் இளமைக் 
கவிதையாய் நித்தம் உலா வரும்
ஒளி வெள்ளமாக ஒய்யாரம்
பெறும் போது ...!

உன்னைச் சிறப்பித்து ஆனந்தமடையும் 
தமிழ் நெஞ்சங்கள் துடிப்புடன்
தமிழைத் தாலாட்டிய தலைவன்
உனை நேசிக்கும் போது ..!

வண்ண மலர் மாலைகளிட்டு
உனை வணங்கிப் பாராட்டி
போட்டிகள் பல வைத்து
சந்ததிக்குச் சொல்லும் போது ..!

பிறந்த குழந்தைகட்கு
ஆணென்றும் பெண்ணென்றும்
பாராமல் ஆனந்தத்தில்
உன் பெயரே வைக்கும் போது ..!

உலகத்தின் இறுதி எல்லையிலும்
தமிழ் வாழும் எந்த மூலையிலும்

உன்னைச் சொந்தம் கொண்டாடி
அழைக்கும் போது ..!

நீ தந்த படைப்புகள் யாவுமே
நீ விட்டுச் சென்ற வெறுமையை
விரட்டி 'பாரதியென' 
என்றும்  உயிர் வாழும் போது ..! 

முண்டாசுக் கவி உன்னைக்
கொண்டாடிப் பார்க்கும்
திருநாள்  என்றென்றும்
"தாயின் மணிக்கொடி" பாடும் போது ..!

தாய்ப்பாலோடு தாரக மந்திரமாம்
"அச்சமில்லை அச்சமில்லை"
என்றூட்டி தலைமுறை
வளர்க்கும் போது ..!

ஆண்டுகள் உருண்டோடினாலும்
உந்தன் கவிதைப் பொக்கிஷங்களை
தூசி தட்டத் தேவையில்லை...நித்தம்
தங்கமுலாம் பூசும்போது..!
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக