வியாழன், 11 செப்டம்பர், 2014

பாரதிக்கு ரதம்...!

 
இந்த வையம் செழித்திட
கனவு கண்டார் அவர்

பாரத சுதந்திரத்

தாகம் கொண்டார்

பெண் விடுதலை
வேண்டு மென்றார் -

செய்வோம் தருவோம்
வருவோம் பெறுவோம்

என்றும் ஓமென்று
அல்லாது வேறில்லை

நின்றார்..நிமிர்ந்தார்
சிரித்தார் சிலிர்த்தார்..

வில்லென மீசையும்
அம்பெனப் பார்வையும்

இலக்கே நெற்றிக்கு வட்டப்
பொட்டாகக் கொண்டு...

யாவர்க்கும் வீரத்தை
அங்கிருந்து பகர்ந்தார். 

அறிவை இயக்கியவர் 

அள்ளித்தந்த பாடல்கள்

புவியில் இலக்கிலாமல்
நெஞ்சங்களில் வலம்வர

காணி நிலம் கேட்ட உமக்கு
இக்கோளமே உரிமையாக 

மனத்தால் சுமக்கும்
ரதங்களைப்  பாரேன் பாரதி...

மலர்மனப் பெண்டிர்
மகிழ் மணப்பூச் சொரிந்து

நீ அன்பு செய்து அருளிய
பாடல்கள் அனைத்தும்

ஆழப் கற்று இன்னும்
மனம் கரைந்து நீயும்

எங்களுடன் இணையத்தில்

வாழ்திருக்கக் கூடாதா..?

ஏக்க மூச்சுகள் பெருகிச் சிதற
எதைச் சொல்லாமல் விட்டாய்..?

சொல்லிச் சென்ற அத்தனையும்
 
உனக்கே சமர்ப்பணமாகி

நிந்தன் சொப்பனங்கள்
உன்னோடு உறங்கிடாமல்

ஏற்றி வைத்த விளக்காக
சென்றதினி மீளாது என

ஞான விளக்கேற்றினாலும்
இன்று புதிதாய்ப் பிறந்தாய்

என நித்தம் உம்மை
தமிழால் வாழ்த்த

எங்கெங்கும் காணினும்
நீ கண்ட சக்தியே உருவெடுக்க

நீ விதைத்த எண்ண வித்துக்கள்
வீரத்தை  ரசவாதமாக்கி

வெற்றிகள் குவிந்து கொள்ளும்
புதுமை ஆரணங்குக் குழுமி

இழுக்கும் பரவச ரதத்தில்
பெருமிதத்தில் நீவிர் ...!

உமைக்கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர்  கண்களுடன்.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக