வியாழன், 7 ஜூன், 2012

கண்ணன் பிறந்தான்...


துருவங்கள் இரண்டும் 
அவன் அசைப்பால் 
ஒன்றை ஒன்று 
இழுத்தணைத்து...
உச்சி முகரும் வேளை..
வேரில் பன்னீர் பாய்ந்தது..!

மகிழ மர...காற்றில்..
குறிஞ்சி மர அடியில்..
ராஜவிருச்க்ஷ  வேரின் 
வீரியம் என்னுள் 
சொத்தாக..முத்தாக 
விதை விதைக்க....!

கதிரொளி ஏந்திக் 
களிக்கும் தாமரையாய்..
விதை ஏந்தி வளர்த்தது..
பொய்கைத் தாமரை..!
கண்ணன் வரும் நாள்
எண்ணி எண்ணியே...
கண்ணிமைக்காமல் 
காத்துக் கடந்தது..
திங்களை நாட்களாய்..!

தந்தவனைத் தொழுது
நித்தம்  கண் பார்த்து
சிப்பி வளர்த்த 
ஒற்றை நித்திலமாய்..!
சுபநேரம் தாங்கிக்
காக்கும் பஞ்சாங்கமாய்..!
காத்து தவமிருந்தது..!

மடி நிறைத்தான்....
மடி முட்டினான்...
மனம் கட்டினான்....
வந்துதித்தான் ...
இனிய புத்தாண்டுப்
பரிசாய்...கண்ணன்..!

நெஞ்சம் இனிக்க..
தாம்பத்திய ஜெயத்தின்
உயர்ந்த பரிசாய்..நம்... 
கண்களில் நழுவி..
உயிரைத்  தழுவி...
ஆனந்த முத்திட..
உந்தன்  பெயர் 
சொல்லி பண்பாட ..!

பன்னீர் விட்டு 
வளர்த்த வேரின் 
புனித விதையவன்..!
நம் கண் முன் 
நம் சின்னக் கண்ணன்.
கவிதையாய்...
கண் நிறைய....!

நம் அன்பின் ஒரே..
அடையாளமாய்...
நம்  முகவரியாய்..
உனது  பிரதியாய்....
நமது உயிராய்....!


தினம் ..உச்சி முகர்ந்து..
முத்திட்டு கொண்டாடி 
திண்டாடி ..பூங்குழலைத்
தந்த மன்னன் உந்தன் 
தோள் சாய்ந்து 
ஆனந்தமாய்..கண்ணமூட..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக