புதன், 14 மே, 2014

சித்திரைத் திருவிழா



சித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது ,மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம் தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு தான் சென்று சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ , சிதம்பரமோ, அந்தக் கோவிலின் சாநித்தியம் சொல்லி விடும். அந்தத் திருவிழாக்களில் பக்தர்களின் அலைமோதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம். மதுரைச் சித்திரைத் திருவிழாவில், பெரிய பெரிய தேர்கள் நான்மாடக் கூடலின் நான்கு வீதிகளிலும் ஆடியாடி உலா வரும் காட்சியும், கிருஷ்ண பொம்மைகள் பூச்சொரியும் காட்சியும், திருவிளையாடல் காட்சிகள் ஒவ்வொரு நாளாக நடைபெற்று, தினம் தினம் திருவிழாவாக பிரம்மாண்டமாக இன்று வரை நடைபெற்று வருவதைக் காணும் போது , நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் அந்தப் புண்ணிய பூமியின் திருவிழாக் கோலத்தைக் கண்டே வளர்ந்தவள் என்ற ஒரு ஏகாந்தம் மனதில் நிறைய உண்டு. திருக்கல்யாணமாகட்டும் , நவராத்திரி உற்ச்சவமாகட்டும் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

வழி நெடுக தண்ணீர் பந்தல் என்ற பெயரில், பெரிய பெரிய அளவில் நீர் மோர், பானகம், என்று அந்த அடிக்கும் வெய்யிலுக்கு தாக சாந்திக்காக அங்குள்ளவர்கள் வாரி வாரி வழுங்கும் நிகழ்ச்சி மனதைக் குளிரச் செய்யும். பனையோலை விசிறிகளைப் பரிசாதத் தருவர் பலர், மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணத்தில் மஞ்சள் தாலிச் சரடும், விரளி மஞ்சளும், தாழம்பூ குங்குமமும், வந்தவர்களுக்கெல்லாம் கருணையோடு அளித்த தந்து ஆசீர்வாதம் செய்வாள் அன்னை மீனாக்ஷி. அன்னையின் திருக் கல்யாணம் முடிந்த கையோடு கள்ளழகர் புறப்பாடு. இந்த வெகு விமரிசையான புறப்பாட்டில், அத்தனை மண்டபபப் படிகளும் கடந்து ராமராயர் மண்டபம் சேர்ந்து அழகர் பச்சைப் பட்டுடுத்திக் கொண்டு, தங்கக் குதிரையில் குலுங்கிக் குலுங்கி ஆடி வந்து, வைகையாற்றில் இறங்கும் அற்புதக் காட்சியைக் காண கண் இரண்டு போதாது. வருடத்திற்கு வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணலாம். பக்தர்கள் வெள்ளம், அலையலையாக கிட்டத் தட்ட 18 கிலோமீட்டர் தூரம் நடந்தே அழகர் கோவிலிலிருந்து மதுரை வைகை ஆற்றங்கரை வரையில் வந்து அழகரின் 'ஆற்றில் இறங்கும் "வைபவத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் பக்தர்கள். விடிய விடிய மக்கள் திரள் திரளாக நடந்து வரும் அழகு, வழியெங்கிலும் அன்னதானம் நடைபெறும். எந்த ஒரு பக்தரும் பசியோ தாகமோ அறியாத வண்ணம், வித விதமான சித்ரான்னங்களும், நீர்மோர், பானகம் என்று சிறிது கூட முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மதுரை மக்கள். எங்கிருந்து, எப்படி இத்தனை மனித அலைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணும் போது ஆச்சரியம் மேலிடும். சித்திரா பௌர்ணமி அன்று அன்னதானம் அளித்தாலும், கள்ளழகர் தரிசனம் கண்டாலும் பல கோடி புண்ணியம், அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்ற மதுரை வாழ் மக்களின் நம்பிக்கை கண்கூடாக காட்சி தரும் நன்னாள் அது, விஞ்ஞானம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் என்ன..? இந்த மெய்ஞானத்தின் முன்னே விஞ்ஞானம் பொய்த்துப் போவது போல ஒரு அபார ஆன்மீக நம்பிக்கை உருவாவதை காண முடிகிறது.

காலின் சதங்கை, தலையில் கிரீடம், சிவப்பில் ஆடைகள், தண்ணீர் பையை முதுகில் கட்டிக் கொண்டு, காண்பவர் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வருவோரை அழகராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். எத்தனை நம்பிக்கைகள் காலத்தால் சிறிதும் சிதையாமல் காக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு, நான் கூட சாட்சி தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து (அதற்கும் பல காலங்கள் முன்பிருந்து வருவதை எனது பாட்டி கதை கதையாகச் சொல்லுவார் ) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் திருவிழாக்கள் இந்த பூலோகம் உள்ள காலம் வரையில் ஆன்மீக பக்தர்களுக்கு மதுரை போன்ற திருத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக