வெள்ளி, 23 மே, 2014

என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

வாணியைச் சரண்புகுந்தேன்
-ஜெயஸ்ரீ ஷங்கர்kannadasan - jayasri

முன்னுரை
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.
எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.
அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!
கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக்
 கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”
என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?
ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.
எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.
’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!
ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!
ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.
அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.
கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.
சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.
கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.
காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!
காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!
’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’
இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.
உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!
அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,
உங்களுக்காக நானே சொல்வேன்உங்களுக்காக நானே கேட்பேன்,
தெய்வங்கள்
 கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”
இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
சொல்லாத
 சொல்லுக்கு விலையேதும் இல்லை
அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.
கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.
அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
  இதைத் தான் கேட்கிறேன்
இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.
இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.
அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.
அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.
குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.
அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.
பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.
மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.
கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.
ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.
முடிவுரை
அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக