அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஒரு பழைய ஆன்மீகப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் வணங்கும் காமதேனுவைப் பற்றியும், அதன் மகள் நந்தினி பசுவைப் பற்றியும், நந்தினி பசு தான் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலில் சாபம் பெற்றதால் நதியாக மாறி கோவிலைச் சுற்றி ஓடுகிறாள் என்ற புராணக் கதையைப் படித்ததும், உடனே அங்கு சென்று காண வேண்டும் என்ற ஆவல் என்னுள் உருவானது. உடனே எப்படிச் செல்வது? அந்தக் கோவில் எங்கே இருக்கிறது? எந்த விபரமும் தெரிந்து கொள்ளாது எப்படிச் செல்வது? மனத்தின் கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், என் தம்பியிடம் சொல்லி வைத்தேன். இன்று மாலை, நான் மங்களூர் போகிறேன், அங்கிருந்து உடுப்பி, அங்கு கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, நேராக கட்டீல் , மூகாம்பிகா, தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா தரிசனம் செய்து விட்டு வரப் போகிறேன்...நீயும் வந்தால் நலம். சொன்னதும் கிளம்பி விட்டான். துர்கா பரமேஸ்வரியை மானசிகமாக வேண்டிக் கொண்டேன்..நாளை நான் இதே நேரத்தில் உந்தன் சந்நிதியில் இருக்க வேண்டும்....இந்த வேண்டுதல் பல இடையூறுகள் இருந்த போதிலும், பிரயாணம் சரியான படி அமைந்ததால். அடுத்த நாள் நான் நினைத்துக் கொண்ட அதே நேரத்தில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலுக்குள் இருந்தேன். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன்...காரணமாகத் தான். அந்த சாநித்தியம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்து உணரத் தான் முடியும்.
ஹைதராபாத்திலிருந்து மங்களூர் விடியற்காலை சென்று சேர்ந்தது.மங்களூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கட்டீல் என்னும் தேவியின் க்ஷேத்ரத்தை நோக்கி புறப்பட்டோம். வழி நெடுக இயற்கை அன்னையின் எழிற்கோலங்கள் வாரிச் சொரிந்து ஒரு அற்புத பிரயாணம், மனதுக்கும் கணங்களுக்கும் பசுமை விருந்து. இடையிடையே அமைதியான கடல் வேறு..மனத்தைக் கொள்ளைக் கொண்டது.
கட்டீல் செல்லும் வழியெங்கும் ஒரே காடு போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடமாக இருந்தாலும், அந்தச் சின்னஜ் சிறிய கிராமத்து தேவதை போன்ற கோவிலில் அத்தனை கூட்டம். கார்களும், வாகனங்களும், நெருக்கிக் கொண்டு நின்றன. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர் பெற்றதாம்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி அருணாசுரன் என்னும் அரக்கனால் மிகக் கடுமையான பஞ்சத்தில் முழுகித் தத்தளித்து வந்ததாம்.அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்த ஜபாலி முனிவர் வறுமையால் மக்கள் படும் துன்பத்தை தன் ஞானக் கண்ணால் கண்டு வருந்தினார். எப்படியாவது அவர்களின் துயரை துடைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் யாகம் வளர்த்து தெய்வப் பசுவான காமதேனுவை தருவிக்க எண்ணினார்.அந்த நேரத்தில் காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால் அதன் மகளான நந்தினியை எடுத்துக் கொள்ளுமாறு தேவர்களின் தலைவனான இந்திரன், ஜபாலி முனிவரிடம் கூறினான். ஆனால் நந்தினி ஜபாலியுடன் செல்ல மறுத்துவிட்டது. பூலோகத்தில் பாவிகள் மலிந்து கிடப்பதால் தான் அங்கு வர முடியாது என்று நந்தினி முனிவரிடம் தெரிவித்தது. எனினும் அங்கு மக்கள் படும் துயரத்தை எடுத்துக் கூறியும், நந்தினி அங்கு வந்தால் மட்டுமே அவர்களின் வறுமை ஒழியும் என்றும் ஜபாலி முனிவர் தயவு கூர்ந்து கேட்டுக் கொண்டார். முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபித்து விட்டார்.. மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போதுதேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர்
தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும், தான் நந்தினிக்கு மகளாகப் பிறந்து நந்தினியின் சாபத்தை போக்குவதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.
அன்றிலிருந்து நந்தினி, கனககிரி குன்றிலிருந்து நதியாக விழுந்து கட்டீலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு நந்தினி ஆற்றின் கரையில் யாகம் வளர்த்த ஜபாலி முனிவர் மழையை வரவழைத்து மக்களின் துயரை போக்கினார் என்பது புராணம் நமக்கு சொல்லும் செய்தி.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அருணாசுரன் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் முன்பாக தோன்றிய பிரம்ம தேவன், இரண்டு மற்றும் நாலு கால் பிராணிகளால் அருணாசுரன் உயிருக்கு ஆபத்து நேராது என்றும், எந்த ஆயுதத்தாலும் அருணாசுரனை கொல்லமுடியாது என்றும் வரங்களை வழங்கினார். இதன் பின்னர் தேவர்களை போரில் வீழ்த்திய அருணாசுரனின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் போகவே தேவர்கள் துர்கா தேவியிடம் முறையிட்டனர்.
உடனே அழகிய இளம் மங்கையாக உருமாறிய துர்கா தேவி அருணாசுரனின் முன்பாக தோன்றினாள். அவள் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்ற அருணாசுரன் ஒரு கட்டத்தில் வந்திருப்பது யாரென அறிந்து , துர்கா தேவியை கொல்ல முயன்றான். அப்போது திடீரென துர்கா தேவி கல்லாக மாறினாள். பின்னர் கல்லிலிருந்து வெளிப்பட்ட தேனீக்களின் கூட்டம் அருணாசுரன் சாகும் வரை அவனை கடுமையாக கொட்டித் தீர்த்தது.
அதன் பின் தேனீக்களின் ராணியான பிரம்மராம்பிகாவை சாந்த நிலைக்கு திரும்புமாறு தேவர்கள் வேண்டிக்கொண்டனர். அதன் படியே நந்தினி ஆற்றின் நடுவிலே தோன்றி அழகிய வடிவத்தில் துர்கா தேவி காட்சியளித்தாள். அதோடு தான் மகளாக பிறந்து நந்தினியின் சாபத்தை போக்குவதாக சொன்ன வாக்கையும் நிறைவற்றினாள் துர்கா தேவி.
துர்கா தேவி வெளிப்பட்ட சிறு திட்டே இன்று கட்டீலாக அறியப்படுகிறது. அவள் எழுந்தருளிய இடத்தில் தான் இன்று துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளது. நவராத்திரி போன்ற திருவிழாக்களும் இப்பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும். துர்கா தேவிக்கு இடைவிடாமல் இளநீர் அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கின்றது. அன்னையின் உக்கிரதத்தைக் குறைக்கவே இவ்வாறு இளநீரால் அபிஷேகம் செய்யப் படுகிறதாம்.
கோயில் கேரள பாணியில் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் முழுதும் அலையலையாகக் பக்தர்களின் கூட்டம்.. ஆகவே தரிசனம் செய்து முடிக்க சற்று நேரமானது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம்.
இந்தக் கோவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் புராதானமானது என்று கோயில் புராணம் சொல்கிறது. அன்னையின் கருணைக்கு
எல்லையே இல்லை. சங்கரபுரம் மல்லிகையால் அலங்காரம் செய்யப் பட்ட அம்மன் அற்புதமாகக் காட்சி புரிகிறாள். வாரத்திற்கு கிட்டத்தட்ட 3000 இளநீரால் அபிஷேகம் நடை பெறுமாம். அம்மனின் கருணையே கருணை. எந்த ஒரு வேண்டுதலும் உடனே நிறைவேற்றி வைப்பதில் அம்பிகைக்கு நிகர் இல்லை எனலாம். அம்பாளைப் பற்றி அறிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் கட்டீல் சென்று துர்கை அம்மனை சேவிக்கும் வாய்ப்பு அமையப் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக