சனி, 17 மே, 2014

தக்ஷிண காசி கோலாப்பூர் மஹாலக்ஷ்மி






வரலாற்றுக் கூற்றின்படி கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சக்தி மிகுந்த காசியை விடவும் புண்ணியத்தில் அரிசி எடை (அதற்கும் புராணங்கள் உண்டு) அதிகமுள்ள க்ஷேத்ரம் கோலாப்பூர் .இந்தக் கோவிலும் மகாராஷ்ட்ரத்தில் தான் உள்ளது. கோலாப்பூரேஸ்வரி சாக்ஷாத் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தான். நாங்கள் பண்டர்பூரிலிருந்து மீரஜ் சென்றோம் . அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி , அடுத்தநாள் விடியற்காலை மீரஜிலிருந்து நேராக பாண்டிச்சேரிக்கு செல்லும் இரயில் ரிசர்வ் செய்திருந்தோம். அப்போது தான் அந்த ஹோட்டலில் மஹாலக்ஷ்மி யின் புகைப்படத்தைப் பார்த்து, இந்தக் கோவில் எங்கே இருக்கிறது என்று விசாரித்ததும், அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோலாப்பூர் மஹாலக்ஷ்மி இங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் தான் என்றார் அவர்.


ஏற்கனவே சீரடி, பண்டர்பூர் என்று சென்றபின் அதிக அலைச்சலில் என் அக்காவும் அம்மாவும் எங்களால் இனி எங்கும் அலைய முடியாது என்று அறையிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள, நான் மட்டும் கிளம்பி விட்டேன். அங்கிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரப் பிரயாணம் செய்து கோலாப்பூர் அடைந்தேன் . மீரஜ் ஒரு சின்ன டவுன் தான். ஆனால் கோலாப்பூர் நமது சென்னையைப் போலவே இருந்தது ஆச்சரியம் தான்.அனைத்து ஊர்களிலிருந்தும் ரயில் வசதி இருக்கிறது குறிப்பிடத் தக்கது.
மீரஜிலிருந்து தனியாகச் செல்வதால் பஸ் பிரயாணம் தான் உசிதம் என்று பஸ்ஸிலேயே சென்று விட்டேன். கோலாப்பூரில் இறங்கியதும் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு கோவில் அருகே சென்று இறங்கினேன். கோவில் வாசல் அருகில் பூக்கடைகள்....அத்தனை பூக்களா?
குமிந்து கிடந்தன பூக்கள் வித விதமாக, ரோஜா, முல்லை, மல்லிகை. செந்தாமரை, தாழம்பூ, சம்பங்கிப் பூக்கள், என்று பூ வாசனை வரவேற்க கோவில் வளாகத்துள் நுழைந்தேன். இனம் புரியாத இன்பம் இதயம் முழுதும் பரவியதை எந்த வார்த்தையால் இங்கு எழுத?


கோவிலின் வெளிப் பிரகாரமும், உட்பிரகாரமும் நமது சிந்தையின் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது. அந்தக் காலத்துச் சிற்பக்கலை எங்கு சென்றாலும் சிலிர்க்க வைக்கும். இது தான் பிரம்மாணடம் என்பதன் அடையாளமோ என்றும் சொல்லாம். உள்ளே வீற்றிருக்கும் நாயகி மஹாலக்ஷ்மி. குஞ்சலம் போன்ற தோற்றம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி வானளவு என்பதற்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டு எனலாம். கோவிலின் நிலைகள் கண்களுக்கு வெறும் ஆச்சரியத்தை மட்டுமே நிலையாய் நிறுத்தி வைக்கிறது. தூண்கள் தூண்கள்...தூண்கள்....கருங்கல்லாலான வழு வழுவென்று மின்னும் தூண்கள்....உள்ளே...உள்ளே..உள்ளே...என்று வளைந்து நெளிந்த பாதையாக பிரகாரத்தைச் சுற்றும் போது தூண்கள் தான் மனத்தை நிறைக்கிறது. வேறெங்கும் கண்டிராத வண்ணம் ஒரு அம்சம். அத்தனைக் கலை நயம்.அழகு மிளிரும் சிற்பம். வாயடைத்துப் போய் மௌனமே உள்ளுக்குள் பேசிக் கொண்டு வந்து அம்மனைத் தொழும் போது கண்கள் கலங்கி கன்னம் நனைகிறது. இது எந்த ஜென்மத்துப் புண்ணியம் என்று அந்த ஆனந்தக் கண்ணீர் தெய்வத்தை மனத்தின் உள் வாங்கும் போது ...இதோ..இதை எழுதும் போது கூட அதே எண்ணம் தான் இதயத்தில் முட்டிக் கொண்டு நிற்கிறது. முடிந்தவர்கள், விரும்புபவர்கள், யாவரும் ஒரு தடவையாவது அந்த பேரானந்தத்தை அடைய வேண்டும் என்பதே எனது ஆவல். அதனால் தான் என்னாலும் கோலாப்பூரை பற்றி எழுதத் தவிக்கிறது. கோலாப்பூர் சுரங்கம் "மஹாலக்ஷ்மி" தான் . அவளது அற்புத தரிசனம் தான். வேறென்ன வேண்டும்? என்று அவள் கேட்க.....வேறென்ன வேண்டும்...? என்னுள் கேள்வியே பதிலாகிப் போகிறது. இதோ கோவிலின் தலவரலாறு.



இந்தத் திருத்தலத்தை மஹாலக்ஷ்மி தனது கைகளால் தூக்கி நிலப்பரப்பில் வைத்து கோயில் கொண்டதால் இவ்வூர் 'கரவீர்' என்றும் அன்னை ' கரவீர நிவாஸினி ' என்றும் அழைக்கப் படுகிறாள். இன்றும்  இந்த ஆலயம் உள்ள இடம் பள்ளமாகவே உள்ளது. மேலும் இந்த ஆலயம் 108 கல்ப காலத்திற்கும் முந்தையது எனப் புராண நூல்களில் காணப் படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நைமிசாரண்யத்தில் வசித்த காச்யபர், கௌதமர், காக்கியர், ஆங்கிரஸர் , பிருகு, வசிஷ்டர், முதலான 80,000 ரிஷிகள் ஒன்றுகூடி சுதமுனியாய் காசி, கங்கை,பிரயாகை, கோகுலம் இவை அனைத்தும் இணைந்த ஓரிடத்தைக் காட்டும்படி கூற, அவரும் கோலாப்பூரே அவற்றுக்கு இணையானதொரு புனித க்ஷேத்திரம் என்று உரைத்தார். 

அச்சமயம் அடர்ந்த பயங்கரக் காடுகள், மலைகளால் சூழப்பட்ட இவ்விடத்தில் பல அரக்கர்களும், யட்சர்களும், துவம்சம் செய்து வந்தனர்.அவர்களின் தலைவனான கோலாசுரன் முனிவர்களுக்கும், தவத்திற்கும், இடையூறு செய்ய , முனிவர்கள் மகா லட்சுமியிடம் அவனை அழிக்க வேண்டினார். தேவியும் 9 கோடி சைனியத்துடன், நவ துர்கைகளுடனும், பைரவர், வீரபத்திரர், சித்த பாதுகேஷ்வர், சோதியா, காத்யாயினி, ஆகியோருடன் இணைந்து போர் செய்து கோலாசுரனை அழித்தாள் . இறக்கும் சமயம் அவன் வேண்டிக்கொண்டபடி இவ்வூர் கோலாப்பூர் ஆயிற்று. தேவர்களும், முனிவர்களும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தேவியும் அந்த ஊரிலேயே கோவில் கொண்டாள் என்கிறது புராணம். கோலாசுரனுக்கு பயங்கரியான தேவி தன்னை வணங்கும் பக்தர்களின் பயங்களை போக்கும் ஆபத்சகாயி ஆனாள் .

இவ்வாறே ஒரு சமயம், சிவபெருமானுக்கும், மகாலட்சுமிக்கும் பூலோகத்தில் புனித தலங்களுள் சிறந்தது, காசியா? கோலாப்பூரா ? என்ற தர்க்கம் ஏற்பட்டது.கோலாப்பூர் இருந்த தட்டு தாழ்ந்தே இருக்க, அம்பிகை வாரணாசி இருந்த தராசுத் தட்டில் ஒரு அரிசியை வைக்க இரண்டும் சமமானதாம். அதனால் தான் வாரணாசியை விட கோலாப்பூர் ஒரு அரிசி அளவு அதிக புண்ணியம் கொண்டது கோலாப்பூர் என்று புராணங்கள் கூறுகின்றன. அது முதல் சிவபெருமானாலேயே இது 'தக்ஷிண காசி' என்று போற்றி அழைக்கப் பட்டது.

அகத்திய முனிவர் காசியில் வாழ்ந்து கொண்டிருந்த போது , ஈசனிடம் ஏதோ ஒரு காரணத்தால் கோபம் கொண்டு அவ்வூரை விட்டு வெளியேறினார். பல இடங்கள் சுற்றி வந்தும், அவரால் ஈசனைப் பிரிந்து வந்த துக்கம் கூடியிருக்க, திரும்பவும் காசிக்குச் செல்லவும்  மனமில்லாமல் குறுமுனி மனம் நொந்து ஈசனிடம் காசிக்கு இணையான ஓரிடத்தை காட்டும் படி கண்ணீர் மல்க வேண்டி நின்றார். அப்போது, காசியைப் போலவே தான் நித்திய வாசம் செய்யும் தக்ஷிண காசியாம் கோலாப்பூரில் சென்று தங்குமாறு பணித்தார்.அகத்தியரும் தன் மனைவி லோபாமுத்திரையும் பல காலங்கள் கோலாப்பூரில் வாழ்ந்ததாக 'கரவீர் மகாத்மியம்' உறைக்கிறது .

முனிவர் ஒரு முறை மும் மூர்த்திகளில் சாத்வீக குணமுடையவர் யாரென்று அறிந்து கொள்ள விரும்பி, பிரும்ம லோகம், கைலாசம், வைகுண்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். சிவபிரானும் பிரம்மனும், அவரை அவமதித்து கோபப்பட, வைகுண்டம் வந்த முனிவர் விஷ்ணுவும் தன்னை அவமதிதத்தால் வெகுண்டு அவரது திருமார்பில் உதைத்தார், திருமாலோ சற்றும் கோபப்படாது, 'என்னை உதைத்த கால்கள் வலிக்குமே' என்று கூறி அந்த முனிவரின் காலைப் பிடித்தார். தான் வாழும் மார்பை உதைத்த முனிவரின் காலைப் பிடித்ததற்காக வெகுண்ட மகாலட்சுமி, கோபத்துடன் புறப்பட்டு கோலாப்பூர் சென்று விட்டாள் .அம்பிகை  அங்கு 200 வருடங்கள் வாழ்ந்ததாக வெங்கடேச புராணம் கூறுகிறது. இன்றும் நவராத்திரியின் போது அன்னைக்கு திருப்பதியிலிருந்து புடவை சீராக வரும் வழக்கம் உள்ளது.

சிவபெருமான், மகாலட்சுமி இருவரின் அருளாட்சி நிறைந்த இவ்வூர் செல்வச் செழிப்பாக இருப்பதில் என்ன வியப்பு? இன்னும் கேளுங்கள்.

ஆலயத்திற்கு நான்கு வாயில்களும், ஐந்து கோபுரங்களும், ஏழு உயர்ந்த தீபஸ்தம்பமும் உள்ளன. ஆலயத்துள் நுழைந்ததும், ஒளி நிறைந்த கண்களுடன் கம்பீரமாக அமர்ந்து காட்சி தரும் கணபதியை வணங்கி விட்டு உள்ளே செல்ல வேண்டும்.இது நியதி தான்.

இரண்டு துவார பாலகர்கள் காவல் புரியும் தேவியின் சன்னதிக்கு நுழைந்தால்,அன்னையின் தரிசனம் தூரத்திலிருந்தே நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அளவு பெரிய கர்ப்பகிரகத்தில் உள்ள மகாலட்சுமியின் விக்ரஹம் 6000 ஆண்டுகள் பழமையானது. 40 கிலோ எடையுள்ள மிக உயர்ந்த ஒளி பொருத்திய கல்லும், வைரமும் கலந்து செய்யப்பட சிலா ரூபத்தில் காட்சி தரும் அன்னை, அதே போன்று ஒளி பொருந்திய சதுர வடிவ கல்லின் மீது நின்றபடி அருள் செய்கிறாள். கீழுள்ள கல் ஆவுடையாகவும், மேலே நிற்கும் அன்னை சிவலிங்கம் போன்ற தோற்றம் தருவது சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது.

அம்பிகையின் சிரத்தில் ஆதிஷேஷம் குடையாக விளங்க, சிம்ம வாகனத்தில் முன்பு தாமரையின் மீது மனித சிருஷ்டிக்கு ஆதாரமாக விளங்கும் வடக்கு திசை நோக்கி நின்றபடி காட்சி தருகிறாள். சதுர்புஜதாரியாக மேலிரண்டு கைகளில் கேடயமும், வாளும் , கீழ் வலக்கையில் ஒருவகை கனியும், இடது கையில் பாத்திரமும் கொண்டு அன்னபூரணியாக காட்சி தருகிறாள்.உட்பிரகாரம் சுற்றும் போது சுவர்களில் லக்ஷ்மி மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி யந்திரமும் பொறிக்கப் பட்டுள்ளது. 

அன்னை மகாலக்ஷ்மியின் தோற்றம் நம்மை அகலவிடாது செய்கிறது. மனம் குழைந்து தொழுது அங்கு நேர் எதிரில் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்து தேவியிடம்  கண் மூடி தியானம் செய்யும் போது ஏழுலகமும் மறந்த நிலையில் அவளின் அருட்சக்தி நம்மை ஆட்கொள்ளுவதை நம்மால் உணர முடியும்.

காசி அன்னபூரணியைப் போலவே இங்கும் தேவஸ்தானத்தில் முன்னமே சொல்லிவைத்து, அவர்கள் தரும் மடி உடைகளை உடுத்திக் கொண்டு கருவறைக்குள் சென்று அன்னைக்கு நாமே அபிஷேகம் செய்து புடவை அணிவிக்கலாம். மாதுளம்பழம் இந்த ஊரில் விசேஷமாகக் கருதப் படுகிறது. பூஜையில் வைத்த மட்டை தேங்காயைப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

அங்கு ஒரு தூணில் அழகா செதுக்கப் பட்டிருக்கும் ஸ்ரீ தன்வந்தரி சிலையை பக்தர்கள், கால்களைப் பிடித்து விட்டு, கொஞ்சி  செல்கின்றனர். சிலர் அந்தச் சிலை முழுதையும் மெதுவாகப் பிடித்து விட்டு வலியை இறக்கி விட்டுச் செல்கின்றனர். மிகவும் பழமையான அற்புத சக்தி வாய்ந்த இந்தக் கோவிலுக்கு தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வருவதை நமது பாக்கியமாகக் கருத வேண்டும். 

நான் சென்றிருந்த போது , ஒரு தமிழ் குரல், யாரோ அவரது உறவினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ' இதோ....இங்கே தான்..அந்தப் பெரிய எழுத்தாளர்..அந்தக் காலத்து எழுத்தாளர் திரு.காண்டேகர் அவர்கள் அமர்ந்து கொண்டிருப்பார். அவருக்கு இந்தக் கோவில் ஒண்ணு தான் ஆதாரம், '.காதில் விழுந்ததும் எனது பார்வையும் அங்கு சென்றதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

கோயிலை விட்டு வெளியே வரவே மனமில்லாமல், மீண்டும் ஒரு முறை உந்தன் தரிசனம் வேண்டுமம்மா என்ற கோரிக்கையை அங்கேயே வைத்துவிட்டு.வெளியேறினேன்.

ஜெயஸ்ரீ ஷங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக