வியாழன், 22 மே, 2014

அவள் மனது பூ..!



அதிகம் பரிச்சயமில்லாத ஒரு குரல், நான் இருக்கும் வீட்டிற்குக் கீழ் வீட்டிலிருந்து அடிக்கடி ஒலித்ததும், யாராக இருக்கும்? என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அதற்குக் காரணம் அந்தக் குரலில் இருந்த ஒரு வித்தியாசம் தான்.அந்தக் குரலைக் கேட்கும் போது ஏனோ மனசுக்குள் ஒரு சோகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.அன்று மதியமே அந்தக் குரலுக்குரிய பெண்ணைப் பார்க்கும் சந்தர்ப்பம் தானே நிகழ்ந்தது.


எனக்கு ஏனோ 'மாயாவி' என்ற தமிழ் படத்தில் வரும் பாடல், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு நினைவில் வந்து மோதியது. நான் இதுவரையில் சொல்லி வந்ததும், இப்போது சொல்வது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்.2006 -இல் பெங்களூருக்கு என் அக்கா, அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயத்ரி, நான் மூவரும் (என் அக்காவின் காலேஜ் விஷயமாக ஒரு மீட்டிங் சென்ற போது குழந்தையைப் பார்த்துக் கொள்ள நானும் ) சென்றோம். பெங்களூரில் இருக்கும் கிறிஸ்டியன் காலேஜ். அங்கு வளாகத்தில் இருந்த அறை எங்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. கையில் ஒரு சின்ன டேப் ரிகார்டர் மட்டும் எடுத்துச் சென்றிருந்தோம். கேசட்டுகள் ஒன்றுமில்லை. பெங்களூரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன். அன்று பகல் பொழுது முழுவதும் அறையில் அடைந்து கிடைக்காமல் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினேன். அருகில் இருந்த அய்யனார் கோயிலுக்குச் சென்று வரும்போது, ஒரு கடையில் கேசட் ஏதும் இருக்கா? என்று கேட்டதும், அங்கிருந்தவர் எடுத்து பட்டென்று வைத்தார்...அதில் 'மாயாவி' என்று எழுதி இருந்தது. வாங்கிக் கொண்டேன்.

அவ்ளோதான்..அந்த கேசட்டைப் போட்டதும், இந்தப் பாடல் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு...' கல்பனாவின் குரல்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..என்று நான் நினைத்துக் கொண்டேன். அத்தனை அற்புதமான வரிகள். மென்மையான இசை. இதைவிட என்ன வேண்டும். காட்சிகள் இல்லாவிட்டாலும் பாடல் இனிமை. அந்தப் பாடல் முடிந்து 'காற்றாடி...என்று வரும்...குழந்தை..உடனே..அந்தப் பழைய பாட்டை மட்டும் போடு என்று தொடர்ச்சியாக அடம் பிடிப்பாள். நானும் அந்த ஒரு பாட்டை மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த கிட்டத்தட்ட நான்கு நாட்களும் இந்த ஒரு பாட்டை மட்டும் தான் கேட்டபடி இருந்தோம். அப்படி என் மனசுக்குள் நுழைந்து கொண்ட பாடல். அதன் பின்பு பெங்களூரை விட்டு வந்ததும் அந்த இடத்தோடு அந்தப் பாடலையும் மெல்ல மறந்து போனேன்....காலங்கள் 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதன் பின்பு அந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இப்போது விஷ்ணுப் ப்ரியாவைப் பார்த்ததும் என் மனசுக்குள் அந்தப் பாடல் ஒலித்தது. 'பூமியில்..பூமியில்..எனக்கேதும் குறைகள் கிடையாது'...ஆஹா.....எவ்வளவு சந்தோஷமாக சிரித்துக் கொண்டு வளைய வருகிறாள்..என்றும் நினைத்துக் கொண்டேன்.


சின்னப் பெண்ணுக்குரிய தோற்றம்.அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். பார்த்ததும் நம்பவே முடியவில்லை. அவளே குழந்தை..அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளா? இறைவா....உனது கருணை தான் என்ன? உனக்குத் தெரியாதா?யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று. இந்தப் பெண்ணுக்கு நீ ஒருவேளை,பெண் குழந்தைகளைக் கொடுத்திருந்தால், அந்தக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் இந்தப் பாழும் சமூக அமைப்பிலும், சிந்தனையிலும் சங்கடங்கள் வந்து சேரலாம். அனைத்தும் அறிந்தவன் நீ..உனது தீர்ப்பில் நீ என்றுமே கெட்டிக்காரன்.

அவளது இரண்டு குழந்தைகளும், மணி மணியாக இருந்தனர். அவர்களது கொண்டே இருக்கலாம் போலிருந்தது. குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பூரா பூரா அவளது அம்மா தான். "அம்மம்மா..அம்மம்மா.." என்று இரண்டு பேரும் அவர்களைத் தொந்தரவு செய்யும் போதும் பொறுமையாக அவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் நேர்த்தி, எனக்குள்..இன்னும் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது இந்த உலகத்தில்...கற்றுக் கொள் ...இவர்களிடமிருந்தே ஆரம்பி...என்ற மனவொலி என்னுள் அதிகாரம் செய்யும்.

உங்க பேர்என்ன சொல்லுங்கோ....?

நான் பெரியவன்...என் பேரு அர்ஜுனா...
உடனே....
நான் சின்னவன், என் பேரு ஆர்யா...
குழந்தைகள் முந்திக் கொண்டு பேர் சொன்னது.
நான் சிரித்துக் கொண்டேன் ...'நல்ல நல்ல பேர் ரெண்டு பேருக்கும்'
எங்கம்மா பேர்...எங்களோட பேரை விட நல்ல பேர் தெரியுமா?
தெரியாதே....?
"விஷ்ணுப் ப்ரியா "
'ஓ ....ரொம்ப நல்ல பேரு தான்...எனக்கும் பிடிச்சிருக்கு'
அப்போ...உங்க பேரு என்ன சொல்லுங்கோ..." மழலைகள் கேட்டனர்.
"ஜெயஸ்ரீ"
நாங்க 'ஜெயா ஆன்டி 'ன்னு கூப்பிடறோம்...
ரொம்ப சந்தோஷம்....நிஜமாகவே ரொம்ப சந்தோஷமான தருணங்கலளாகத் தான் இருந்தது. அந்தக் கடந்து போன சில நிமிடங்கள். அதற்குள்,

'அர்ஜுனா.....ஆர்யா...என்ற குரல் கீழிருந்து வந்ததும், இருவரும் நான் கொடுத்த ஜூஸை வேகமாகக் குடித்து விட்டு மறக்காமல் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த 'ஹோலி கன் 'னை (அது ஒரு ஹோலி பண்டிகை சமயம்) எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

குழந்தையும் தெய்வமும், கொண்டாடும் இடத்திலே....ன்னு மனசுக்குள் ஒரு சந்தோஷம். அதே சமயம் குழந்தைகளின் தைரியம், சுறுசுறுப்பு இதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் எழுந்தது.
சிறிது நேரத்தில் அவள் என் வீட்டுக்கு வந்தாள் .
"குழந்தைகள் உங்களைப் படுத்தினார்களா"..? அவள் இந்த ஒரு வார்த்தையைப் பேசி முடிப்பதற்குள் எனக்குள் ஏகப் பட்ட வேதனை. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,அவள் இதைத் தான் சொல்லியிருப்பாள் என்று உணர்ந்து புரிந்து கொண்டு..'இல்லையே' என்றேன்.

அவர்களுக்கு இங்க வர ரொம்ப பிடிச்சிருக்காம்....மீண்டும் அதே வேதனை என்னுள். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் பேசுகிறாள். அந்த வேதனை அவளது தொண்டையின் அசைவில் தெரிகிறது. மேலும் அவ்வளவு கஷ்டப்பட்டு பாதி வார்த்தை தான் வெளியில் கேட்கிறது,. இது எவ்வளவு கொடுமை....தெரியுமா.

சரி..நீங்க கஷ்டப் பட்டு பேசாதீங்க...சொல்ல வார்த்தை துடித்தன..ஆனாலும் அவள் பேசட்டும்....அவளது உணர்வுகள் இங்கு வந்து கொட்டப் படட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

அடுத்தடுத்த அவளுடைய வருகையில், எனக்கு அவளது பேச்சை எளிதாகப் புரிந்து கொள்ள இயன்றது..ஒரே தடவையில் சற்றும் சிந்திக்காமல் அவளுக்கு பதில் சொல்ல முடிந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அதே சமயம், இது இறைவன் கொடுத்த வரம்...என்று நினைத்துக் கொண்டேன்.அவனை விட என்னை வேறு யார் புரிந்து கொள்ள முடியும்?

நானும் நிறைய விதமான மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துப் பழகி இருக்கிறேன்.
அப்போதெல்லாம் கூட மனதுக்குள் சோகம் எழும், அழும்.
அப்படி நான் நெருங்கி அமர்ந்து பேசிய மூவரில் மனதைப் பிழிந்து இறைவன் மேல் கோபம் வந்தது அந்த மூவரையும் பார்த்துத் தான் . முதலில், அம்ருதா ...(நாடோடிகளில் நடித்தவர்) நடிகர்.திரு.குமார் அவர்களின் புதல்வி.
அப்போது அவர் நாடோடிகள் நடித்து வெளிவந்த புதிது. அவருக்குத் தெரிந்த உறவினரும் எங்கள் குடும்ப நண்பரும் ஒருவரே என்பதால் அம்ருதாவின் அண்ணன் கல்யாண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். 2009 என்று நினைவு. ஹைதராபாத்தில் அவர்கள் 'தாரனாக்கா "என்ற பகுதியில் வசிப்பவர்கள். அங்கு ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அந்த விழாவில் ஓடியாடி ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் வீடியோப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் அம்ருதா . அவரை நான் அதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் பரிசு பெற்ற பெண் இவர்தான் என்றார்கள்..நான் அதிகம் தொலைகாட்சி நிகழ்சிகள் பார்ப்பதில்லை என்பதால் அதுவும் எனக்குத் தெரிந்திருக்க அன்று வாய்ப்பில்லை.இருந்தாலும் ,அவர்களிடம் சென்று வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வரலாம் என்று அருகில் சென்று, எனது வாழ்த்தைச் சொன்னேன். அவர்கள் பேசியது இன்றும் எனது காதில் ஒலிக்கிறது. அந்த மொழிக்கு வார்த்தை இல்லை.
அரை ஓசை தான். வெறும் காற்றோடு லேசான அதிர்வு. தனது பெயரை எனக்குப் புரிய வைக்க இயலாமல் திணறினார். ஆனால் நான் பேசுவதை எந்த பிரச்சனையும் இன்றி சரியாகப் புரிந்து கொண்டு சிரித்தார். அவர் சிரிப்பில் அத்தனை தெய்வீகம். அவர் முகம் சாந்தம் தவழும் நளின முகம். காது கேட்காது.வாய் பேச முடியாது என்ற உண்மை என்னுள் ஆயிரம் வாட்ஸ் ஆக அடித்தது.அன்று அங்க சாப்பிடவும் முடியவில்லை. அன்று உறக்கமும் வரவில்லை. இறைவா....உனது படைப்பின் ரகசியம் தான் என்ன? அத்தனை அழகைக் கொட்டிக் கொடுத்து விட்டு வேண்டியி இரண்டைப் பறித்துக் கொண்டாயே....என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..என்று வாதிட்டேன். வரை அவரைச் சுற்றியுள்ள சொந்தம் மொத்தமும் , இறைவனிடம் இப்படித் தான் சண்டை போட்டிருக்கும்.

இப்போது இரண்டாவதாக , ராஜி என்னும் ராஜேஸ்வரி. (இரண்டு கண்களும் தெரியாதவர்) வாழ்வது. திண்டிவனம். ஆசிரியை.

2012இல் நடந்த ஆசிரியர் தேர்வு எழுத அவர்களும் பாண்டிச்சேரி வெற்றி வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு நான் எனது அக்கா (அப்போது அவர் அங்கு முதல்வர்) வுக்கு உதவிக்குச் சென்றிருந்தேன். பரீட்சை துவங்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்த சமயம் பார்த்து , 'ஒரே ஒருத்தர் இரண்டு கண்களும் பார்வையற்றவர், தேர்வெழுத வந்துள்ளார்.அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என்றார்கள். என் அக்கா என்னிடம், நீ செய்கிறாயா? நீ கேள்வியை வாசித்தால் போதும், சிறிது நேரம் கொடுத்ததும் அவர் சொன்ன பதிலில் மை கொண்டு நிரப்பி விடு. வெறும் 100 கேள்விகள்...காலை மாலை இரண்டு வேளை மட்டும் தான் ஆசிரியர் பரீட்சை. என்றார்.நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.


தேர்வெழுத வந்திருந்தவர் ராஜலக்சுமி என்கிற ராஜி. அவர்களுக்கு கண்கள் தெரிவதில் மட்டும் தான் குறைபாடு. கற்பூர புத்தி. கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் டாண் டாண் என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல் பதில் சொன்னார் பாருங்கள். மனசுக்குள் மிகுந்த சந்தோசம் எனக்கு. நானும் கேள்வியைக் கேட்டுவிட்டு இதற்க்கு என்ன பதிலாக இருக்கும் என்று தெரியாமல் யோசிப்பேன். அவர் ஆணித்தரமாக பதில் சொல்லிவிடுவார். அது எனக்கு ஒரு புதுவித ஆபவமாக இருந்தது. அவரோடு அன்றைய நாள் முழுதும் கூடவே இருந்தேன். எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து ஒரு நட்பு எங்களுக்குள் உருவானது. 'எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு , இன்னும் குழந்தையில்லை...' என்று வருத்தப் பட்டார். கண்டிப்பா கூடிய சீக்கிரம் நல்ல தகவல் சொல்லுவீங்க...என்றேன்...அப்படியா? என்று சொல்லிவிட்டுப் போனார். நடுவில் அடிக்கடி என்னை அழைத்துப் பேசுவார்.அவரது கணவர் திரு.ரமேஷ் அவர்களும், லெக்ச்சரர் , வள்ளுவன்பார்வையில் (இணைய குழுமம்)இருப்பவர். ராஜி, அவர் எழுதிய பரிச்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப் படுத்தினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்லிச் சிரித்தார். பின்னொரு நாளில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அவர்கள் இருவருமே பார்வை இழந்தவர்கள் தான். என்றாலும் அவர்களது அகத்தின் பார்வை சூரிய ஒளியை மிஞ்சிவிடும் என்று தன சொல்ல வேண்டும். இன்றும் ராஜியின் குரல் எனக்கு ஒரு வைட்டமின் மாதிரி ஊக்கமளிக்கும்.


இப்போது இவர்..விஷ்ணுப்ரியா.:


இரண்டாவது முறை வந்ததும், தரையில் தண்ணீர் கொட்டிக் கிடந்ததைப் பார்த்து விட்டு தானே வேகமாக உள்ளே சென்று ஒரு துணியைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்தாள் .

ஹேய்...என்ன பண்றேள்? வேண்டாம்...நானே துடைக்கிறேன், என்று ஒரு பதட்டத்தில் நான் அவரது கைகளைப் பிடிக்க.


ஆன்டி ...உங்க பொண்ணா இருந்தா நீங்க இப்படிச் சொல்வேளா ?


எனக்கு ஒரு கணம்....என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனை நல்ல உள்ளம்....ஒரு சொந்தமாக என்னைக் கொண்டாடிய விதம் என்னை சிலிர்க்க வைத்தது.


சரி....நீயே துடை...என்று ஒருமையில் சொன்னேன். என் பெண்ணாக இருந்திருந்தால் இப்படி வாங்கோ போங்கோன்னு சொல்ல மாட்டேன் இல்லையா? என்றேன்.


அவளது மலர்ந்த சிரிப்பில் ஒரு நிறைவிருந்தது.


அதன் பின்பு தினமும் வரத் துவங்கினாள். அவளுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருப்பது போல பேசிக் கொண்டே இருப்பாள். நானும் அதற்கு சரியான பதிலைச் சொல்லிவிடுவேன். அப்போதெல்லாம் அவளது புத்திசாலித்தனம் வியந்திருக்கிறேன். நல்ல நல்ல விஷயங்களைப் பேசுவாள். கேட்டுத் தெரிந்து கொள்வாள்.


என்ன ஆன்டி ...ஜாஸ்தி நேரம் ..கணினி முன்னாடி தான் இருக்கேள்?


ஏதோ கொஞ்சம் எழுதுவேன். அதான்.


என்னவெல்லாம் எழுதுவேள் ? கேட்டுக் கொண்டே எனது மடல் பெட்டியைப் பார்த்தாள். எனக்குத் தமிழ் படிக்க வராது ஆன்டி ..வெறும் இங்கிலீஷ், ஹிந்தி தான்.நீங்க தமிழ் சொல்லித் தாங்கோ.


அதுக்கென்ன சொல்லித் தரேன். என்று நான் சொன்னதும் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு 'கொஞ்சம் இருங்கோ வரேன்' என்று கிளம்பிவிட்டாள்.


அடுத்த ஐந்து நிமிஷத்தில் கையில் ஒரு புத்தகம்...'இது என் தோழன் எழுதியது..குமரன்...நான் கும்கி ன்னு கூப்பிடுவேன்' இந்தாங்கோ..இதையும் படிங்கோ..சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள்.


அட்டைப் படத்தில் சக்கர நாற்காலில் குமரன். அந்தப் புத்தகத்துள் அவர் அதுவரையில் வாழ்ந்திருந்த வாழ்கையின் பதிவுகள், அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என்று...வாழ்கையின் புதிய கோணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.


ஆச்சு..அதன் பின்பு இரண்டு நாட்கள் அவள் மேலே என் வீட்டுக்கு வரவேயில்லை. அதன் பின்பு ஒரு நாள் வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனாள் . நானும் அவளது வரவுக்காக ஆவலுடன் காத்திருந்ததால் நிறைய பேசினோம்.

என்னிடம் சொன்னாள் , நீங்கள் என்னை பற்றியும் 'biography ' எழுத வேண்டும். எனது வேண்டுகோள் என்றாள்.

'சரி' என்று சொல்லி வைத்தேன்.


அந்தப் புத்தகம் படிச்சாச்சா? என்றாள் .



ஒவ்வொரு வரியும் அழகாக எழுதி இருக்கிறார் குமரன். பாதி படித்து விட்டேன்.இன்னும் பாதி இருக்கிறது..படித்து முடித்ததும் தருகிறேன். இன்று இரவு முடித்து விடுவேன் என்றேன்.


சரி..என்று சிரித்தாள். கிளம்பிச சென்றாள்.


அவள் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு சமயமும் ஒரு நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். தேவையான அத்தனை விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருந்தாள்.கணினி, மின் உபகரணத்தின் வேலைப்பாடுகள், ஐ பாட் , டேப்லெட், ஜூயூக் பாக்ஸ் என்று நிறையவே பேசினாள் ,

அன்றிரவு அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பாதியைத் தாண்டியதும் தான் அந்த ஆச்சரியம் காத்திருந்தது.


தான் 'கும்கி' என்று குமரன் எழுதிய புத்தகத்தில், விஷ்ணுப்ரியா தனது தோழி என்றும், 'மாயாவி என்ற திரைப் படத்தில், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு; பாடலில் புகழ்ந்து எழுதி இருந்தார். மேலும், ஐஸ்வர்யா என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்தவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. எனக்குள் ஆச்சரியம்.

ப்ரியா, சினிமாவில் நடித்தாளா...? திரைப்படம் பார்க்காததால் தெரியவில்லை.

மேலும்,அன்று அந்தக் கேசட்டின் அட்டைப் படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யாவின் படங்கள் தானே இருந்தது..என்று நினைவுக்குக் கொண்டு வந்தேன்.


இணையத்தில், மாயாவி என்ற தலைப்பில் யூ ட்யூப் போட்டுப் பார்த்ததில், அந்தப் பாடல் காணொளியாக விரிந்தது. நான் பல முறைகள் கேட்ட பாடலை முதல் முறையாக படமாகப் பார்த்ததும், அதில் விஷ்ணுப்ரியா..! ஆம்...அவளே தான்...!

அந்தக் குரலுக்கு நடித்துக் கொண்டிருந்தாள். எனக்குள் மௌனம் கரைந்தது.

கண்கள் பனித்தது. 'ஆம்......கடவுள் தந்த அழகிய வாழ்வு..." என் ஆத்ம கீதத்தின் கதாநாயகி, நான் ரசிக்கும் குரலுக்குச் சொந்தமான கல்பனா..என்று பாடல் மீண்டும் என்னைத் தொற்றிக் கொண்டது.


அடுத்த எனது சந்திப்பில், என்ன ப்ரியா....சொல்லலை...ரொம்ப இனிமையான அதிர்ச்சி தந்திருக்கே...என்றேன்.


மலர்ந்து சிரித்துக் கொண்டாள் .யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன் ஆன்டி என்றாள்.


எங்கள் நட்பு தொடருகிறது. இது தான் ஆண்டவனின் ஆசை என்பதும் புரிகிறது.

- ஜெயஸ்ரீ ஷங்கர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக