சனி, 1 மார்ச், 2014

சொரிமுத்தையனார் கோயில், கல்யாணி தீர்த்தம்

சொரிமுத்து அய்யனார்

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. உடனே புறப்பட்டு வாயேன்....எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. இது அன்றைய கைபேசியின் அவசர அழைப்பு. இந்த அழைப்பிற்கு முன்பு நான் இருந்த நிம்மதியான மன நிலைமை வேறு. இந்த அழைப்பைக் கேட்டதும் எனது மன நிலைமை வேறு. ஒரே கவலையும், பயமும் என்னையும் தொற்றிக் கொண்டது தான் நிஜம். உடனே செல்ல வேண்டும் என்ற என் மனம் அன்றைய தினமே டிக்கெட் வாங்கி பாண்டிச்சேரி கிளம்பத் தயாரானேன். நினைத்தபடியே பஸ்ஸும் கிளம்பியாச்சு. மனம் மட்டும் பின்னோக்கி நகர்ந்தது. அம்மா...இப்போது 74 வயது நிறைந்து, வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அனுபவ பூர்வமாகக் கண்டு கர்மயோகியாகத் தான் பெற்ற ஐந்து குழந்தைகளுக்காக தன்னை உருக்கிக் கொண்ட மெழுகுவர்த்தி. அந்த அறிவும், அனுபவமும்,சொன்ன பாடங்கள் எங்களுக்கும் சின்ன வயதிலிருந்து கையில் உருட்டிப் போட்ட தயிர் சாதமும், வடு மாங்காய் நீருமாக ஊறிப் ஊறிப் போயிருந்தது. அந்த அம்மாவுக்கு வயதானாலும் , நானும் ஒரு அம்மா என்ற ஸ்தானம் அடைந்த பின்பும் கூட என் அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத மனோபாவம்...என்னுடனேயே எல்லோரையும் போலவே வளர்ந்து நின்றது. அம்மாவுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது.....என்று ஒவ்வொரு கடவுளாக வேண்டிக்கொண்டே கன்னத்தில் வழியும் கண்ணீருடன்...தான் பிரயாணம் செய்தேன்.
அம்மாவை நான் இழந்து விடக் கூடாதே என்ற பயம் என்னுள் ஷணாக் ஷணம் பயணமானது. இறுதியில் இறைவன் இருக்கிறான்....அம்மாவுக்கு உயிர் பிச்சை இடுவான் என்று சமாதானமானேன். அதே போல் அம்மா ஒரு பெரிய உயிர் கண்டத்தில் இருந்து பிழைத்தது போல நல்ல நிலையில் எழுந்து உட்கார்ந்து பேசிய அம்மாவை நான் பார்த்த போது மனம் நிம்மதியைக் கடந்து ஆண்டவனுக்கு நன்றி சொல்லியது.

அம்மாவுக்கு என்னைக் கண்ட மகிழ்ச்சி. இருந்தாலும் சொல்லிக் கொண்டார்கள் இரண்டு முழங்காலும் ஒரே வலி....இரண்டு காலும் நடக்க முடியவில்லை....கால் நடக்க முடியாதது மனமே நொண்டியானது போல இருக்கிறது....மன பலம் குன்றிவிட்டது என்றெல்லாம் சொல்லி வருத்தப் பட்டார். அம்மா....கால் தானே பார்த்துக்கலாம்...காலுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக்கலாம் என்றெல்லாம் என் அக்காவும் சொல்ல அம்மா சமாதானம் அடைந்தார். என் மூத்த அக்கா திருநெல்வேலியில் இருப்பவர், என்னை ஒரு மருந்து பண்டாரவளையிலிருந்து வாங்கித் தருகிறேன் அம்மாவுக்கு, நீ வந்து வாங்கிக் கொண்டு செல் என்றாள் . அதற்காக உடனே அன்று இரவே திருநெல்வேலிக்குப் பயணமானேன். அடுத்த நாள் காலையில் அவள் வீட்டு முன்பு ஆஜர். பின்பு அங்கிருந்து பண்டாரவளையில் மருந்தை வாங்கிக் கொண்டவள், இத்தனை தூரம் வந்துவிட்டோம் திருச்செந்தூர் முருகனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று அங்கும் சென்று முருகனுக்கு நன்றி செலுத்திவிட்டு வரும்போது என்றுமே பேசாதே என் தோழி எனக்கு போன் செய்து பேசினாள் . அவள் சொன்னது
சொரிமுத்தையனார் கோவிலுக்கு சென்று வா..அவர் பார்த்துக் கொள்வார். அதிகம் பேசாமல் இதை மட்டும் சொல்லிவிட்டு அதன் பின்பு கைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. டவர் சிக்னல் கிடைக்காமல்...."ஹலோ....ஹலோ....என்று வைக்கப் பட்டது..." இது தான் தெய்வ வாக்கு. நிமித்தம் என்பார்களோ என்று எண்ணி.....அடுத்தது சொரிமுத்தையனார் ஆலயம் என்று மனசுக்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டேன். அதே நேரம் பஸ்ஸில் என் அருகில் அமர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு அம்மையாரிடம் "சொரிமுத்தையனார் கோவில் எங்கிருக்கு" என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது.

அது பாபநாசம் கோயில் தாண்டி மலையில போகணும்....அங்கிட்டு ஆடி அமாவாசையில் லட்சக் கணக்குல ஜனங்க படையலுக்கு வருவாங்க..காலு வலி இருக்குறவுக செருப்பு வாங்கி படைப்பாங்க ...அங்க கோவில்ல பூஜை செய்து அங்கயே செருப்புகளக் கட்டிப் போட்டுட்டு வந்துரணும் ....பட்டவராயன் அந்த செருப்புகளை மாட்டிக்கிட்டு ராத்திரி பூரா மலையில் வேட்டைக்குச் சுத்துவாராம்...புதுச் செருப்பா நாம கட்டிட்டு வந்தா அது அப்படியே நடந்து நடந்து தேய்ஞ்சு போயிருக்குமாம்..அதை யாரும் தொடுறதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண ஆச்சரியமா இருக்கும். இதெல்லாம் பல காலமா இருக்கும் ஒரு நம்பிக்கை தான். .அது போல செருப்புக் கட்டினவுக கால்வலியும் காணாமே போயிருமாம்....சொரிமுத்தையனார் கோவில் மிகப் பழமையானது.ஐயப்பனின் ஆதி அவதாரம். இதெல்லாம் அனைவருக்குமே தெரிந்த விஷயங்கள் தான். தங்கள் குல தெய்வம் யார் என்று அறிந்திராதவர்கள் இவரிடம் சென்று முறையிட்டால் போதுமாம். குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய பூஜைகளை இவருக்குச் செய்வித்தால் போதுமாம். சகல குல தெய்வத்தின் பட்டயத்தையும் இவர் கையில் வாங்கி வைத்திருப்பதாகவும் பட்டவராயன் என்று இவரது சன்னதியில் பூஜை போட்டு பொங்கலிட்டால் குல தெய்வத்திற்கு செய்த அத்தனை பலன்களையும் இவர் தருவார் என்பது நியதி. இதுவே வழக்கத்தில் இருக்கிறது. வழக்கமாகவும் இருக்கிறது. எப்பேர்பட்ட தகவல்கள்....எனக்கு இறைவனே வந்து சொன்னது போலிருந்தது. தெய்வம் மனுஷ்ய ரூபேண...இந்த வாக்கு பொய்ப்பதில்லை.

அக்காவிடம் சொன்னதும்....முதலில் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்..பின்பு சரி போகலாம் என்று ஒத்துக் கொண்டாள்
அங்கிருக்கும் இன்னொரு தம்பியோடு ஞாயிற்றுக் கிழமை காலை கிளம்பினோம். அதற்குள் ஏற்பட்ட தடையைச் சொல்லி மாளாது.
கார் திருநெல்வேலியைத் தாண்டி பாபநாசத்தை அடைந்து. மறக்காமல் எல்லோருக்குமாக பேர் பேராக எண்ணி அவரவர் கால் எண்கள் படி செருப்புகள் வாங்கிக் கொண்டோம். கோவிலுக்கு வெளியே செருப்பைப் போட்டுவிட்டுப் பழக்கப் பட்டவள் இப்போது கோவிலுக்குச் செருப்பு வாங்கிக் கொண்டு போகிறேனே என்ற புதுமை புல்லரித்தது. இதெல்லாம் கனவா? இதெல்லாம் இறைவனின் ஆணையா?
இரண்டொரு நாளில் எத்தனை நிகழ்வுகள்...எதிர்பாராமல் நடந்து விடுகிறது. எதுவுமே நம்மிடம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கார் பொதிகை மலை மேல் செல்ல ஆரம்பித்தது. "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் " என்ற இந்தப் பாடலை முணுமுணுக்காமல் பொதிகை மலையைக் கடக்க முடியாது..மலை அழகோ அழகு அத்தனை அழகு.தமிழ்நாட்டில் ஒரு கேரளா என்பது போல, திருநெல்வேலி மண்ணையும், மரத்தையும், தென்றலையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு எழிலாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு நிமிடமும் ஜன்னல் கண்ணாடி வழியாக இயற்கை கையசைத்து ஓடும்போது மனசு லேசானது. அங்கங்கே குரங்குகள், மயில்கள் காண மகிழ்வாக இருந்தாலும் புலிகள் காப்பகங்கள் என்ற பலகை மட்டும் அச்சுறுத்தியது. அங்கங்கே குழாயில் தண்ணீர் அப்படியே ஐஸாக வந்தது.ஜிலீர் என்று கையேந்தி குடித்ததும்....மழைத் தண்ணீர் தாமிரபரணி மூலிகைத் தண்ணீர் தொண்டையை நனைக்க அப்படியே இந்தத் தண்ணீருக்கு எந்த 'பிஸ்லெரி மினரல் வாட்டர்' பதில் சொல்ல முடியும் என்று சவால் விடுவது போலிருந்தது. செல்லும் போதே அகத்தியர் அருவி...அகத்தியர் தவம் செய்யும் கல்யாணி தீர்த்தம் என்ற பெயர் பலகையைப் பார்த்ததும்...சித்தர்கள் மேல் சமீப காலமாக பலத்த ஈடுபாட்டுடன் இருக்கும் எனக்கு உடனே அங்கும் செல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிட அப்போதிருந்தே 'இங்கயும் சென்று பார்க்க வேண்டும் ' என்று அனத்த ஆரம்பித்தேன். இதற்கு முன் சில வருடங்கள் முன்பு பாண தீர்த்தம், குற்றாலம், எல்லாம் பல தடவைகள் சென்று வந்தவள் தான் இருந்தாலும் இப்போ இந்த ட்ரிப்பில் கண்டிப்பா அகத்தியர் ஃபால்ஸ் பார்க்கணும் என்றேன்.

'போச்சுடா....'என்ற எனது அக்கா, அரை மனசுடன் நேரமிருந்தால் பார்க்கலாம் என்று முற்றுப் புள்ளி வைத்தாள்.

கார் மலையேறியது....வளைந்து நெளிந்த பாதை. இரண்டு பக்கமும் பசுமையாக உயர்ந்த மரங்கள். காரின் கதவைத் திறந்து விட சிலீரென்ற தென்றலுடன் மூலிகை வாசம்...பரிசுத்தமான காற்றில் மனமும் பறந்தது.தென்றலுக்கு முன்பு இசை கூட இரண்டாம்பட்சமாக விலகிக் கொண்டது..காரையார் வளைவு கடந்து சொரிமுத்தையனார் கோவில் வாசலில் சென்று நின்றது. கூட்டமான கூட்டம். எங்கு நோக்கினாலும் வித விதமான வாகனங்கள். அமைதியான மலையில் திடீர் திருப்பமென பக்தர்களின் கூட்டம். கோவிலின் தொன்மையையும், சக்தியையும் சொல்லாமல் சொல்லியது.வயதானவர்கள், கைக்குழந்தையோடு வருபவர்கள், நேர்த்தி கடன் கழிக்க வருபவர்கள், அடிக்கடி வருபவர்கள், என்னைப் போல முதல் முறையாக வருபவர்கள் என்று பக்தர்கள் அலைமோத உள்நோக்கிச் சரிந்த படிகளைக் கடக்கும் போது , "நினைத்ததை நடத்தி வைத்தார் ஐயனார்'என்ற நன்றிப் பெருக்கு எனக்குள். உள்ளே நுழையும் போதே பயமும், பக்தியும் தானாகத் தொற்றிக் கொண்டது.

கீழே நதி ஓடிக் கொண்டிருந்தது. நிறைய பேர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஓரமாக ஆடுகள் பலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.ரத்த ஆறுகள் ஆற்றோடு கலந்து ஓடிக் கொண்டிருந்தது. அங்கேயே பெரிய பெரிய அண்டா வைத்து விறகு வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். சமைத்ததைப் பேச்சியம்மனுக்குப் படையல் கொடுத்து விட்டு எல்லோருக்கும் அன்னதானம் வழங்க ஒரு இடத்திற்குள் வெளியில் தூக்கிச் சென்று மீந்து போனது என்று தெரிந்ததும் அதை அப்படியே கொண்டு வந்து ஆற்றில் கொட்டி விட்டு அங்கேயே பாத்திரத்தைக் கழுவி கமுத்தி வைத்தனர். இதெல்லாம் சம்பிரதாயமோ என்று நினைத்துக் கொண்டேன்.

எல்லா சந்நிதானத்திலும் கூட்டமிருந்தது. நாங்கள் சென்றிருந்த வேளையிலே அய்யனாருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று எண்ணியபடி திவ்விய தரிசனம் செய்தோம். அருகில் இருந்த சங்கிலிக் கருப்பன் சன்னதியில் பெரிய நீளமான இரும்புச் சங்கிலிகள் குவித்து வைக்கப் பட்டிருந்தது. சங்கிலி கொண்டு அடித்துக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவார்களாம். இன்னும் சற்றுத் தொலைவில் பட்டவராயன் சந்நிதானம். அங்கு சென்று வழிபடும்போது ஒருவருக்கு சுவாமி வந்து குறி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து சிலர் ஆவேசமாக கத்தியபடி இருந்தார். சுவாமி மிகவும் உக்கிரம் என்று நினைத்துக் கொண்டோம். அங்கு தான் செருப்புகள் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது. பூசாரியிடம் விஷயம் சொன்னதும், அவர்கள் ஒரு தாம்பாளத்தை நீட்டினார்....மிகுந்த பயத்தோடு வாங்கிய செருப்புகளை அதில் வைத்தோம். சிறிது நேரத்தில் அந்தப் பித்தளைத் தாம்பாளம் ஏழு ஜோடிச் செருப்புக்களுடன் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி முன்பு ஒவ்வொன்றாக பரத்தி வைக்கப்பட்டு அதில் சந்தானம், குங்குமம் இடப்பட்டு வெளியில் வந்து அத்தனை பேர்களின் நட்சத்திரம், கோத்ரம் கேட்டுச் சென்று பூஜை செய்வித்தார். பின்பு அந்த செருப்புகளை எடுத்துக் கொடுத்து கயிற்றில் கட்டி விட்டுச் செல்லுங்கள் என்றார். தீர்த்தத்தை முகத்தில் தெளித்து உளுந்து வடை பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

நாங்கள் பக்தியோடு வேண்டுதலும் வைத்து ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் காணிக்கையாக கயிற்றில் கட்டி விட்டு ஒரு பிரதட்சிணம் செய்து விட்டுக் கோவிலை விட்டுக் கிளம்பினோம்.அதை யாரும் தொடுவதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண வியப்பாக இருக்கும். அந்த செருப்புகளை பட்டவராயர் அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

சொரிமுத்தையனார் கோயில் வரலாறு

உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி அகத்தியர் பொதிகைக்கு வந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார். அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து தன்னை மறந்து நெக்குருகிப் போனார். தீர்த்தத்தின் விசேஷமும், தலத்தின் சாந்நித்தியமும் இத்தனை மகாசக்தி வாய்ந்ததாக உள்ளதே என்று ஆச்சரியப்பட்டார். உடனே அகத்தியர் இந்த தீர்த்த கட்டத்தில் யார் நீராடி, இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல சாம்பலாக வேண்டும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து அவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமென்று ஈசனை வணங்கி நின்றார். ஈசனும் இசைந்து அந்த வரத்தை அருளினார். தேவர்கள் அனைவரும் இத்திருக் காட்சியை கண்டனர். மெய்சிலிர்த்தனர். மலர்களை மழையாகப் பொழிந்தனர். இவ்வாறு பூக்களை தேவர்கள் சொரிந்ததால் அத்தலத்தில் உறைந்து ஈசனையும் பூஜித்து வரும் அய்யனாரையும் (மலர்ச்)சொரி முத்து அய்யனார் என்று பிற்காலத்தில் அழைத்தனர். அவரின் அருள் விலைமதிக்க முடியாத முத்தாக இருப்பதால் சொரி என்பதோடு முத்தையும் சேர்த்து ஏற்றம் கொடுத்து வணங்கினர். அகத்தியரால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு மெல்ல பூமிக்குள் மறைந்தது.

மக்கள் பண்டமாற்று முறை மூலம் பொருட்களை வாங்கி, கொடுத்து வாழ்க்கை நடத்திய காலம். பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி வந்து பொதிகை மலை உச்சியில் சேரநாட்டவர்களுடன் பண்ட மாற்றம் செய்து வந்தனர். திருடர்கள் பயம் மிக அதிகமாக இருந்தது. எனவே மாட்டு வண்டிகள் கூட்டம் கூட்டமாகத்தான் வரும். அப்படி வந்த வண்டிகளில் முதல் வண்டி சொரிமுத்து அய்யனார் இருப்பிடம் வந்தபோது அந்த அற்புதம் நடந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. வண்டியோட்டி அதிர்ச்சியில் அலறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். செய்வதறியாது திகைத்தனர். வானத்தில் மின்னல் வெட்டியது. கூடவே அசரீரி ஒலித்தது. ‘‘இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞானதிருஷ்டி மூலம் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடை சூழ இருந்ததை தரிசித்த இடம். ஆகவே இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிகச் சிறப்பான புண்ணிய தலமாக விளங்கும்’’ என்று ஓங்கி ஒலித்தது. அன்றே கோயில் அமைத்தனர். சிவநேச செல்வர்களும், பக்தர்களும் இன்றுவரை பல திருப்பணிகளை செய்து அய்யனார் கோயிலை செப்பனிட்டு வருகின்றனர்.

பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட தாமிரபரணி சதங்கைகள் ஒலிப்பதுபோல சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் அந்த மொத்த அழகின் மையத்தே சொரிமுத்து அய்யனார் ஆலயம் அழகுற அமைந் துள்ளது. அகத்தியர் அனுபவித்த அதே உணர்வை நாமும் அடைய முடிகிறது. காட்டு பகுதியான இவ்விடத்தில் கொடிய விலங்குகள் இருந்தும், அவை எதுவும் பக்தர்களைச் சிறிதும் துன்புறுத்தியதாக தகவலே இல்லை. இக் கோயிலில் மகாலிங்கம், சொரி முத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நதிகள் உள்ளன. சொரிமுத்தையனார் கோவில் மிகப் பழமையானது.ஐயப்பனின் ஆதி அவதாரம்.

சொரிமுத்தையனார் கோவிலை தரிசித்து விட்டு வரும் வழியில் அகத்தியர் அருவி அருகில் காரை நிறுத்தி விட்டு அருவிக்கரை அருகே நடந்தோம். எத்தனை விதமான குரங்குகள்...கூட்டம் கூட்டமாக பொதிகை மலையை ஆளும் அரசர்கள் என்பதை அவைகள் நம்மைப் பார்த்த பார்வையில் புரிந்து கொண்டு பயந்து ஒதுகினோம். ஒரு மூட்டை கடலை கூட பத்தாது என்று தோன்றியது. இவற்றிற்கெல்லாம் யார் பசியைப் போக்குவது? கொண்டு சென்ற எதுவும் எடுத்துப் போட்ட சில நொடியில் காணாமல் போனதும் இல்லாமல், அவைகள் நம்மைப் பார்த்த பார்வை....சே...உன்னால் ஒரு குரங்குக்கு கூட பசியை ஆற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மனதை வதைத்தது. சில பெரிய குரங்குகள் பயத்தை வரவழைத்தது.

அகத்தியர் அருவிக்கு அருகே கல்யாணி தீர்த்தம் செல்லும் வழி என்ற பலகை இருந்தது. மேலே பெரிய பெரிய கருங்கல் படிகள்....அண்ணாந்து பார்த்ததும் மனத்தின் ஓரத்தில் ஒரு திகில் குரல்.....உன்னால் இதில் ஏற முடியாது..சும்மா படியைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்பிப் போ...என்று. கூட வந்த அக்காவும் அதையே தான் சொன்னாள் . வேண்டாம் இந்த ரிஸ்க்...உன்னை அங்கே தனியே அனுப்பி விட்டு நான் இங்கு நீ எப்போ வருவேன்னு பார்த்துண்டு பயந்து உட்கார்ந்திருக்க முடியாது.

இல்லை...கண்டிப்பா ஏறுவேன்....பார்த்துட்டு தான் வருவேன். மனசுக்குள் அகத்தியரை நினைத்துக் கொண்டே...நான் ஏற மாட்டேன்....நீங்கள் ஏற்றி விடுங்கள்....நான் கல்யாணி தீர்த்தம் பார்த்து அதில் காலை நனைத்துக் கொண்டு ஒரு பாட்டிலில் தீர்த்தமாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கொரு பழக்கம்..எந்தக் கோவில் சென்றாலும் புண்ணிய நதியின் தீர்த்தமெடுத்து வருவேன்.ரிஷிகேஷ் மலை மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கிருந்தும், காசி, கயா ,திருச்செந்தூர்,நூபுர கங்கை, ராமேஸ்வரம்,தேவி பட்டினம் என்று எங்கு சென்றாலும் தீர்த்தம் எடுத்து சுவாமி அறையில் சேகரித்து வைத்துக் கொள்வேன்.

என்ன அதிசயம்....! என் அக்காவும் சரி வா....கஷ்டப்பட்டாவது ஏறலாம் என்று கூட வர ஆரம்பித்தாள் . என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மேலே ஏறும் போது வழியெல்லாம் மூலிகைகள். அதில் மஞ்சனத்தி மரம் அதிகம்.

படி ஏற ஏற மேலே போய்க் கொண்டே இருந்தது. குத்துப் படிக்கட்டு...கொஞ்சம் மூச்சு வாங்கினாலும், ஒரு ஆர்வமும் "ஓம் நமசிவாய....அகச்தீஸ்வராய நமஹ..."சொல்லச் சொல்ல இருநூறு படிகள் மேலே ஐம்பது படிகள் கீழே மேலும் அறுபது படிகள் மேலே என்று ஏறி ஏறி கல்யாணி தீர்த்த கட்டத்திற்கு வந்துவிட்டோம். அங்கு ஒரு கோவில். அதன் பின்பு பெரிய மலை. அந்த மலையில் அழகாக சிவன் பார்வதி கல்யாணக் கோலம் சிற்பமாகச் செதுக்கி இருந்தது. இன்னும் விஷ்ணு, பிரம்மா என்று அழகாக மலையிலேயே செதுக்கி இருக்கிறார்கள். அதன் அருகில் அகத்தியர் தனது மனைவி லோபாமுத்திரையுடன் காட்சி தருகிறார்.

இந்த இடத்தில் தான் அகத்தியருக்கு தனது கல்யாணத் திருக்கோலத்தில் சிவனும் பார்வதியும் காட்சி தந்தார்கள் என்ற அந்த நிகழ்ச்சி நடந்த இடம் என்று பார்த்த போது மனம் சொல்ல முடியாத ஒரு பரவசம் அடைந்தது. நான்கு புறமும் வானளாவ உயர்ந்த மலை....பாறைகள்....கீழே ஒரு இருபத்தைந்து அடியில் பசுமையைத் தெரிந்தது கல்யாணி தீர்த்தம்.

யாரோ நான்கு பேர்கள் அங்கு ஏதோ பரிகாரம் செய்து கொண்டிருந்தார்கள். இத்தனை மேலே ஏறி வந்து விட்டோம்..நாமும் கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே இறங்க ஆரம்பித்து விட்டேன். பயமாக இருந்தாலும் ஒரு துணிச்சலும் கூடவே கை கொடுத்தது. அகஸ்தியர் என்னை வழி நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டே இறங்கி விட்டேன். அங்கு பார்த்தால், குளம் முழுக்க மீன்கள்...! மீன் குளத்தில் பாசி இருக்காதோ என்று பயமின்றி ஒவ்வொரு காலாக நனைத்துக் கொண்டு நீரை முகந்து தலையில் தெளித்துக் கொண்டு நான் கொண்டு சென்ற பாட்டிலில் நீரைப் எடுத்து சூரியனிடம் காட்டினால் பச்சையாகத் தெரிந்த நீர் ஸ்படிகமாக மின்னியது. அத்தனை தூய்மை.

அங்கு தான் தாமிரபரணி நேரிடையாக வந்து விழுகிறது என்று சொன்னார்கள். அங்கிருந்த மலையில் அழகான நின்ற நிலையில் ராமன் சீதா நின்ற கோலத்தில் ஆஞ்சனேயர் என்று அற்புதமான சிலை இருந்தது. தொட்டுத் தொழும் பாக்கியம் கிடைத்ததே என்று நினைக்கும் போது இப்போது கூட மனத்துள் ஒரு பரவசம்.

அதை விட ஒரு சந்தோஷம். மிகவும் பரிசுத்தமான இடத்தில் தூய்மையான நாயுருவி வேர் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். நானும் மலை ஏறும் போதே எனது அக்காவிடம் சொல்லி வைத்தேன், எனக்கு இங்கு நாயுருவி வேர் கிடைத்தால் நல்லது. பார்க்கலாம்...கிடைக்கிறதா என்று...? சந்தேகமாகத் தான் சொன்னேன்..வரும் வழி எங்கும் என் கண்ணில் படவில்லை.ஆனால் அப்படி ஒரு இடத்தில் கிடைப்பது ரொம்ப அரிது. ஆனால் இந்த இடத்தில் கல்யாணி தீர்த்தம் அருகில் ஒரே ஒரு செடி மட்டும் இருந்தது. மானசிகமாக உத்தரவு கேட்டுவிட்டு அதைப் பறித்து நீரில் அலம்பிக் கொண்டு எடுத்து வந்தேன். அகஸ்தியர் அருகில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு மன நிறைவோடு படி இறங்கினோம். நிச்சயமாக கால்வலி என்ற பேச்சுக்கே இடம் இல்லை .

கீழே இறங்கியதும் அருவியில் குளியல். பின்பு இதமாக சுடச் சுட சுக்கு மல்லி காப்பி வாங்கி குடித்து விட்டு பாபநாசம் சிவன் கோவிலையும் தரிசனம் செய்து விட்டு கிளம்பினோம். மலையை விட்டு இறங்கியதும், மலை மனதுக்குள் ஏறிக் கொண்டது தான் நிஜம். அத்தனை நினைவுகளைக் கொடுத்தது பொதிகை மலை. அடுத்தது எப்போது? என்ற எண்ணத்தில் மீண்டும் அன்றே பஸ் ஏறி பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன். அங்கு சென்று வந்ததிலிருந்து நாளுக்கு நாள் முன்னேற்றம் தான்.

அந்தப் படிகளையும், ஏற்றத்தையும், இறக்கத்தையும் இப்போது மனக்கண்ணில் பார்த்தால் கூட நாமா ஏறினோம் என்று மலைப்பாக இருக்கிறது. வாழ்வில் ஒரு முறையாவது இது போன்ற அனுபவம் கிடைக்கப் பெற வேண்டும்.

வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த மனநிலைமையை இப்போது எண்ணிக் கொண்டாலும், இறைவன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தார் என்று எண்ணும் போது மனம் சரணாகதி அடைகிறது மானசிகமாய்.

நன்றி.சொரிமுத்தையனார் கோயில் வரலாறு மட்டும் (கோவில் புத்தகத்திலிருந்து .)


ஜெயஸ்ரீ ஷங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக