குற்றாலத்தின் முருகன் இருக்க அகத்தியர் வாராதிருப்பாரோ...? அப்படி அகத்திய முனிவர் நித்தம் பூஜை செய்த முருகன் இலஞ்சி குமாரர்.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்தது இந்தத் திருக்கோயில். முருகன் அடிமைகள் இருப்பார்கள் என்னைப் போன்ற சிலர். அவர்களுக்கு உள்ளச் சிலிர்ப்பை உண்டாக்கும் அற்புதக் கோயிலிது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் திருக்குமரன் அவரது இந்தக் கோயில் தனி சக்தி வாய்ந்தது எனலாம். நமக்கு வேண்டியதைக் கேட்கவே வேண்டாம். அவர் தரிசனம் மட்டும் போதும்.
நமக்கு வேண்டாததைத் தவிர்த்து விடுவார் ,இது ஐதீகம் மட்டுமல்ல. உண்மையும் தான்.
அம்மை அப்பனின் திருமணத் திருக்கோலம் காண யாவரும் இமயம் சென்ற போது பாரம் தாங்காமல் வட திசை தாழ்ந்த கதையும் அதனால் சிவபிரான் குறுமுனி அகத்தியரை தென்னாடு செல்லப் பணித்த செய்தியும் நம் யாவருக்கும் தெரியும். ஆதலால் நான் கொல்லம் பட்டறையில் ஊசி விற்கும் நிலை வேண்டாம் என்று கருதி மேற்கொண்டு இந்தக் கோயில் சம்பந்தமாய் சொல்கிறேன்.
அகத்திய முனிவர் திரிகூடத்தைச் சார்ந்து திருக்குற்றாலக் குழகனை வழிபட விரும்பினார். அப்போது திருக்குற்றாலம் விஷ்ணு கோயிலாய் விளங்கியது. இவர் வடதிசை வாயில் வழி கோயிலுக்குள் வரவும் அங்கிருந்த காவலர் சிவனடியார் உள்ளே போகக் கூடாது என்று தடுத்தனராம். உடனே அங்கிருந்த இலஞ்சி முருகக் கடவுளின் சன்னதிக்கு வந்து குற்றாலக் கோயிலுக்குள் சென்று வர வேண்டும் என்று வரம் கேட்டாராம். முருகனும் அகத்தியரிடம் வைஷ்ணவ கோலத்தோடு கோயிலுக்குள் சென்று திருமாலை சிவனாக்கி வழிபடுமாறு பணித்தாராம். சிவார்ச்சனை செய்ய 28 ஆகமங்களையும் அகத்தியருக்குச் சொல்லி மறைந்தாராம். இந்த ஆகம விதிகளின் படி பூஜை செய்யுங்கால் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்றும் வரம் தந்தானாம் கந்தன்.
அகத்தியரும் சிற்றாற்றின் கரையில் வெண்மணலை இழிந்கமாகப் குவித்துச் சிவபூசை செய்தார்.அவ்வாறு பூஜித்த மணல் லிங்கத்தைத்
தமது யோக சக்தியை நிறுத்தி வைத்துச் சிவாலயமாக்கிச் சென்றனர். இம்மூர்த்திக்கு 'இருவாலுக நாயகர்' என்ற பெயர் .ஏற்பட்டது. இன்றும் இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. அதன் பின்பு முனிவர் குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு பரம பாகவதராய்ச் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பணிவாரைப் போலக் கோயிலுக்குட் நுழைந்து வேட்டுவத் தியானத்தால் அரியை அரனாக்கி வழிபட்டார்.
முருகன் சொன்னதால் நடந்த நிகழ்வு இது. இதை அனைத்தையும் சிவபெருமானுடைய அனுக்கத் தொண்டராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருநின்யூர் தேவாரப் பதிகத்தில் எடுத்தெழுதியுள்ளார். வெற்றிவேல் முருகன் விரும்பி அமர்ந்த தலம் இலஞ்சி.
இந்த இலஞ்சி முருகன் கோயிலில் மட்டும் தான் வித்தியாசமான முறையில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். இங்குள்ள முருப் பெருமானை பிரார்த்திக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
இங்கு பிரம்மனும்,இந்திரனும்,அருணகிரிநாதரும் அர்ச்சித்து வழிபட்டு வாழ்ந்த இடம். கோயிலைச் சுற்றி எழில் நிரம்பிக் கிடக்கும் மனம் மனத்தைக் கடக்கும் வண்ணம் இயற்கையால் சூழ்ந்த திருக்கோயில்.தற்போது வரையில் திருப்பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றது. திருமணம் செய்து வைக்க இந்தத் தலம் சிறப்புடையதாகும்.
கோயில் வரலாற்றைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் விசேடமாகக் கிடைக்கவில்லை. ஆனால் ,திருக்குற்றாலத் தல புராணம், திருச்செந்தூர் புராணம், சுப்பிரமணிய பராக்கிரமம், இலஞ்சி முருகன் உலா இன்னுஞ் சில தனிப்பாடல்கள் மூலமாக அநேக செய்திகள் வெளிவருகின்றன.ஞாபகத்துக் கெட்டாத காலத்து முன்பிருந்த கோயில் என்ற பெருமை உண்டு. இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர், கட்டிளமைக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.
பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவம் கொண்டு அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு முருக பக்தர்களால் வேண்டிக்கொள்ளப்படுகிறது.பழங்காலக் கோயிலைக் காண ஆவல் கொண்டவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வரலாம். அருள் பெறலாம்.
நாங்கள் சென்றிருந்த போது கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு பெரிய பாம்பின் புற்றுக்குள்ளிருந்து ஒரு கருநாகம் ஒரு அடி உயரத்திற்கு தலையைத் தூக்கி எழுந்து நின்றதைப் பார்த்து திடுக்கிட்டோம். அது மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது.
பொதிகையின் தென்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லால் மூடப்பட்ட குகை ஒன்று உள்ளதாம்.. அகத்தியர் ஏடுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொதிகைக்கு 1 கிலோ மீட்டர் மேற்கே பாறையில் முகக்க குறையாத நீர் ஊற்றும் உள்ளதாம் . அது அகத்தியர் தாகசாந்திக்காக அமைந்த ஊற்றாம். கோடையிலும் அந்த ஊற்று வற்றுவதில்லை. சங்குமுத்திரை பகுதியில் மூலிகைகளை அரைக்கும் பழங்கால ஆட்டு உரல்கள் பல இன்னும் காணப்படுகின்றன. இது போன்ற பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டு இயற்கையின் எழிலோவியமாகவே விளங்குகிறது பொதிகை மலை.
இதுவும் பொதிகை மலை மீது அகத்திய மலை அருகே இருக்கிறதாம்.
இச்சிறு முருகனின் வரலாற்றைப் படிப்போர் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது இலஞ்சி முருகனைக் கண்ணாரக் கண்டு திருவருள் பெற்று எண்ணிய பயன்களைப் பெற வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
வருடா வருடம் குற்றாலம் செல்லும் போது இலஞ்சி முருகனை தரிசிக்காமல் வருவதில்லை... ஆனால் இவ்வளவு சிறப்புகள் இந்த பகிர்வின் மூலம் தான் தெரியும்... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமுடிவில் உள்ள படம் வியப்பு தான்...