அகண்ட எல்லைகள்
கடைந்த வெண்ணையாய்
கமண்டலத்துள்..!
விஞ்ஞான அறிவும்
மின்சாரக் குப்பைகளும்
திருநீற்றுள் அடக்கம்..!
கண்மூடிக் காட்டில்
கைகட்டிக் காட்டி
காண்போம் ஒளி ..!
கண்களுக்குள் மை
சுழுமுனையில் தீ
பெறுவாய் பெரும் பொருள்..!
ஆயிரம் நாக்குகள்
ஆனந்தக் கூத்துகள்
ஆடாது மனம்...!
அற்புத அருவிகள்
மனத்துள் மாயமாய்
மறைந்து சுவாசிக்கும்..!
சுகம் தரும் மனோன்மணி
பரஞ்சுடர் அருள் தந்து
சிந்தையை மாற்றும் சிவம்..!
சீரான ஓங்காரம்
உயரக் காண்பாய்
ஆதார ஞானம்...!
விளக்கு வெளி வெளியே
பரம வெளி புகுந்து
பூக்கும் பேரொளி...!
தானே யானே நானே
காணேன் நின்னைக்
காணும் கணம்...!
உடல் பூரணம்
உயிர் பூரணம்
மனம் பூதிசாதனம்....!
குறி இட்ட நெற்றியும்
நெறி விட்ட வழியும்
தறி நீக்கும் திரிமலம்...!
கறையற்ற கரங்களில்
கரையெனக் கரங்களும்
காக்குமே கரைக்குமே
கர்மங்களை....!
நிழல் வரும் நெடும் பகை
வரும் அழல் கெடும்
குழல் கூடி நின்றால்....!
அகண்ட வாய் மனத்தினுள்
திருவடி சிரம் வைத்தால்
அற்றுக் கடப்போய் கருவழி..!
பிறவிகள் தந்திரம்
பிச்சைப் பாத்திரம்
செல்வம் சுமக்கச் சுகம்....!
பரந்த பசும்பொன் மாடம்
மணிக் கூடம் பஞ்சுக்குள்
பாய்ந்திடும் சூலம்...!
சமாதி கூடில் சவம்
சவம் கூடில் சிவம்
அவம் ஆவம் அகம்..!
சாதலும் ஓதலும் ஓங்கும்
காதலும் ஈதலும் ஏங்கும்
உயிர்க்கு உயிர் போதல்...!
நூல்கண்டு சிண்டு முண்டு
தவம் கண்டு சடை பிரான்
உண்டு பல்கால் உண்டு...!
இணையடி துணையடி
அவனடி நாடிக் கிட
நாடித் துடிக்கும் வரை..!
பேயொன்று உள்ளே
கள்ளிப் பால் போல்
தெளிப்பாயோ நீ தீ...!
அற்புத சாதகம் ஆராதனை
இப்பத பரமனின் பொற்பதத்தில்
சொற்பதம் சிந்தைக்குள் சிக்குதையா..!
அகார ஆகாரக் குவலயமே
உகார ஊசிக்குள் ஒதுவமே
மகார மணியே மாணிக்கமே
லகார இலிங்கத்து தத்துவமே...!
குளியல் குழியல் குவியல்
குவளைக் குவழைக் குவழி
உண்டுயென் உள்ளத்து வழி...!
யாவர்க்கு ஆகும் குரு
தேவர் தரும் அரும்
பாதப் பரம் பராபரன்...!
நந்தி முந்தி டமரு
உறவாகிப் பிந்தி வந்து உரு
உறவாகி வந்து புகு...!
அன்பு அடியார் அருள் வேண்டார்
பொருள் வேண்டார் பூவுலகு வேண்டார்
உச்சியம் உணரப் பிச்சைக் கேட்பார்..!
வேண்டாம் தெள்ளமுது
வேண்டும் மென்று கண்டால்
தித்திக்கும் சுண்டல் நமச்சியாவமே...!
தீவினை உள் நிற்க
தீண்டாதே சித்தி
ஓங்காரம் உட்புக
ஓங்குமே சக்தி...!
சிவானந்த சித்தத்தில்
கூடிய கோலம்
திருமேனி காண்பாய்
சிதம்பரத்தில்...!
ஒருத்தியாய் உடளுள்
சிவமாய் உள்ளேனே
ஆளாய் எனை ஆட்கொள்
ஜோதியே சுடரே நீ...!
ஓசை தரும் ஒரேழுத்து
நாடி உயரும் ஒரேழுத்து
ஓங்கி நிற்கும் ஒரேழுத்து
ஓம் எனும் உன்னெழுத்து..!
தத்துவச் சுடர் தலைக்கு மேலே
ஏத்துவம் ஏதுமில்லை ஐயனே
தேக்கிடும் பிறப்பனைத்தும்...!
அகத்தினுள் அகத்தியம்
இயம்பியக் கலம்பகம்
இகத்தினில் நானும் சிவம்...!
கண் நிறைக்க கை குவிக்க
ஊன் உருக அகம் ஒளிர
உனைக் காணேன்
வாராய் சித்தா,,,!
சிக்கும் எழுத்துக்கள்
சிகாமணியின் முத்துக்கள்
உதிர்க்க உலுக்கியது
உள்ளுக்குள் அகத்தியமே....!
சொல் வேண்டா செயல் வேண்டா
சும்மா இரடா மனமற்று
கூடாதே நாடாதே தேடாதே
சித்திக்கும் செய்தி வரும்..!
மூடி வைத்தேன் அகத்துள்ளே
புலன்வழி போகாது அந்தமே
ஆதி அடிகள் வைத்தே யான்
கடந்தேன் கடவாக் கடல்...!
சிரமிறங்கிக் காக்க கதவுகளை
கரமிரங்கிக் கழலார் நிழல் தொட்டு
அடி சேரும் இன்பப் படி சேரும்
முன்னை முனிவர் குடி..!
கமலத்து நீட்டம் உயிர் நாட்டம்
பரமபத பாம்பும் ஏணியுமாய்
விழுந்து எழுந்து விழுந்து காண்
கமலங்கள் கோணிக் குள்ளே...!
வேரோடு தண்டும் இலையும்
மொட்டும் பூவும் காயாகிப்
பழமாய் விழுந்த விதை
வேரை விழுங்க வேறு மரம்...!
நாடித் துடிப்பு நரம்புகளில் நாதமென
மூலாதார சுருதியை வீசிப் பிடிக்கும்
வழியென ஆண்டுகள் கடந்த யோகம்
வலைக்குள் சுருண்டு விட்டானே...!
பழம் பதினாறும் பாலும் பாகும்
வல்லானின் கரம் கொடுக்க
இல்லான் நிலை மாறும் கேளிர்
எல்லாம் நின் வெள்ளியம்பலம்....!
மலையருவிப் பொங்கிப் பாறை தனில்
உருள்நதியாய் நெளிநதித் தேனாரு நீ
அறியாயோ வெண்ணருவி சேரும்முன்னே
காத்திருப்பது உப்புக் கடல்...!
சிறுவுளி சிற்றெரும்பு சிறுதீ சினம்
மயங்கிய வேளையில் சிலையதைச்
கடித்துச் சிதைக்கலாம் புகைந்து பொசுங்கலாம்
சிறிதெனப் பாராதே அஞ்சு...!
ஈசனின் முட்டையிது யாக்கைக் குள்ளே
இலக்கு நோக்கிக் காக்கைக்குள் இட்டகுயில்
விரிப்பது காக்கைக்குள் கருங்குயில் சிறகு..
யாசித்தான் ஈசனும் நந்தலாலா...!
/// அகத்தினுள் அகத்தியம்
பதிலளிநீக்குஇயம்பியக் கலம்பகம்
இகத்தினில் நானும் சிவம்...! ///
பல வரிகள் முத்துக்கள்... வாழ்த்துக்கள்...
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி திரு தனபாலன் அவர்களே.இதுவரையில் தங்களது எந்தக் கருத்தும் உடனடியாக நான் பார்க்கவில்லை.அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நீக்குஜெயஸ்ரீ ஷங்கர்.