சனி, 27 அக்டோபர், 2012

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்பும்..!


"தீபாவளி...... தீரா வலி.....


"அக்னி வெடிகள் & பட்டாசுகள்"  இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும்  ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும். 

பட்டாசு ஆலைக்குள் இருக்கும் அறைக்குள்ளே தொழிலாளர்கள் வெகு மும்முரமாக இயந்திர கதியில் பட்டாசுகளை அடுக்கி அட்டைப் பெட்டிக்குள் திணித்து லேபிள்  ஒட்டி, டேப் போட்டு மூடி விற்பனைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அவ்வளவு துரிதமாக வேலை செய்ய ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தது 
அங்கிருந்த ஒருவரின் கைபேசி வானொலிப் பாடல்.

"கன்னித் தீவு பொண்ணா...கட்டெறும்புக் கண்ணா....
கட்டுமர துடுப்பப் போல இடுப்ப ஆட்டுறா...இவ..
கள்ளுப்பான உடம்பக் காட்டி கடுப்ப ஏத்துறா...மத்தாப்புப் போல...."  என்று அலறி ஆடவருக்கு சூடேற்றிக் கொண்டிருந்தது.

டேய்...வேலு..இன்னும் முத்து வரலியாடா வேலைக்கு..? நானும் பார்க்கறேன்..ஒரு வாரமா லேட்டா தான் வரான், வெள்ளென  போயிற்றான்..பெரியையாவுக்குத் தெரியுமாடா இது...? தெரியாதுன்னு வெச்சுக்க...தெரிஞ்சுச்சுன்னா அம்புட்டுத்தேன்...மாப்ளைக்கு மஞ்சத் தண்ணி ஊத்திறுவாரு...! ஒரு குரல் சந்தோஷித்தது.

ஆமாடா மச்சி...! பக்ரித் பக்ரியோட சேர்த்து நிக்க வெச்சுருவாருல்ல. ஆனாலும் இந்த முத்துவுக்கு இம்புட்டு தெகிரியம் எங்கிட்டிருந்துதான் வந்திச்சோ. அவன் பாட்டுக்கு வாரான்...அவன் பாட்டுக்குப் போறான். நம்மால முடியுமா..? பெரிசு சிம்ம அவதாரம் எடுத்து தலைய தரையில உருட்டிருமே. இது  வேலு...!

ஏய்.....வேலையைப் பாருடா...அதான் நல்ல பாட்டு ஓடுதில்ல...இப்பப் போயி என்னாத்துக்கு அந்த முத்துப் பயலோட பேச்சு. பாவம்..அதுவே அனாதை...நம்ம மாதிரி மேஜரா..? தெகிரியமா வேலை பார்க்க...பயந்து பயந்து ரூமுக்குள்ளே அடைஞ்சு கெடக்கோணம் . இது இன்னொரு குரல்.

அதெல்லாம் உள்குத்து...இருக்குற சமாச்சாரம்....நமக்கெதுக்குங்கறேன்....இது வேலு.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியே வந்து நின்ற டாட்டா சுமோவின் ஹாரன் சத்தம் முதலாளி வந்துவிட்டார் என்ற அபாய சங்கை ஊதியது.

டேய்...டேய்...பெரியையா...வந்துட்டாரு...மொதல்ல பாட்ட அமர்த்துடா.....டேய்...! ஒரு குரல் பரபரத்தது.

அடுத்த நொடி அந்த அறை ஆடி அடங்கி  நிசப்தத்தில் மயான மௌனம் கடைப்பிடித்தது. 


வண்டியிலிருந்து இறங்கிய பெரியய்யா  பாண்டியன் பெருமிதத்தோடு தனது கத்தி  மீசையை நீவி விட்டுக் கொண்டே "ய்க்கு ...ய்க்கு .ய்க்கு ...."என்று  கனத்த கனைப்பு  சத்தம் கொடுத்த படியே கம்பீரமாக அவரது பட்டாசு ஆலைக்குள் பாதம் வைத்து பணியாளர்கள் வேலை செய்யும் அறைக்குள் நுழைகிறார்.

இந்தா....வேலு...! போன வாரம் சரவெடி லோடு போச்சே....சேர்ந்ததாத்  தகவல் வந்துச்சா? இன்னைக்கு லோடுக்கு எல்லாம் ரெடியா இருக்கா? எம்புட்டு தரம் சொல்றேன்..எனக்கு ஒரு ஃபோனைப் போட்டு எந்நேரம் ஆனாலும் சொல்லுடான்னு...! 

ஆமாங்கய்யா...."இப்பத் தான் சொல்லணும்னு நெனைச்சேன்...அதுக்குள்ளாற  நீங்களே வந்துட்டீங்க...! அந்த லோடு போயி டெலிவரி ஆயிடுச்சிய்யா. இப்போ புது லோடு ரெடியாயிட்டிருக்கு. மதியம் போயிடும்யா . கணக்குப் பிள்ளகிட்ட கணக்கைக் கொடுத்திருக்கேன்யா.

அட...ஆமா..எங்கடா அந்த முத்துப் பயலக் காணோம்..நான் வரும்போதெல்லாம் இருக்க மாட்டேங்கறான். போன லோடு சரவெடி எல்லாம் அவன் தான செஞ்சது...? செக் பண்ணித் தான அனுப்பின..?

ஆமாங்கய்யா...இங்க சீக்கிரமா வேலைய முடிச்சுபோட்டு பைண்டிங் பிரஸ்ல பார்ட் டைமா வேலை பண்றா ப்புலய்யா...நோட்டுப் புத்தகம், டயரி எல்லாம் பண்றதா சொன்னான். நான் சொன்னதா சொல்லிப்புடாதீங்க. 

எங்கிட்டுப் போறான்....?

நம்ம பெரிய தெரு படையாச்சி அண்ணனில்ல...அவரோட புத்தக பைண்டிங் பிரஸ்க்கு...போறான்யா.

அம்புட்டுத் தூரம் தெனாவெட்டாகிப் போச்சா....அவனுக்கு. எம்புட்டு நாளா இது நடக்குது?

ஒரு வாரமாத்தேன் பெரியையா.

அட நீயுமாடா களவாணிப் பயலே....ஒரு வாரமா முழு பூசணிக்காய சோத்துல மறைச்சி வெச்சுருக்கே...வாயில என்ன உருளைக்கிழங்கா வெச்சிருக்கே . கூட்டுக் களவாணிப் பயலுவளா...அவரு பார்ட் டைம் பாக்குறாராம்.இவரு அவரு வாயைப் பார்குறாராம்....இருங்கடா...நா் பார்ட்டு  பார்ட்டா  டைம் பாம் வெச்சா எல்லாத் தெனாவெட்டும் தவிடு பொடியாயிடும் . கருவிக் கொண்டே ஆவேசத்துடன் வெளியில் வருகிறார்.

அங்கு முத்துவின் பூட்டிய அறையைப் பார்த்து..."இருடா...உன்னிய கொத்தாப் புடிச்சாந்து இந்த ரூமுக்குள்ளே 
போட்டு மூடறேன். பெறவு தான் உனக்கு புத்தி வரும். நினைத்த வேகத்தில் கிளம்பினார். அவர்  மனதுக்குள் முத்து ஆலையில் இட்ட கரும்பாகப் சக்கையாகிக் கொண்டிருந்தான்.அவரது  அறிவுக்குள் முத்து விஸ்வரூபமாகத் தெரிந்தான். எலேய்...முத்து....உன்ன....உன்...என்று பல்லை நற ... நற .. வெனக் கடித்துக் கொண்டே பழி வாங்கத் துடித்தார்.

நீ என் கைக்குள்ளார  இருக்குற வரைக்கும் தானடா நான் நிம்மதியா கவலையில்லாம இருக்கலாம். உன்  வேகம் இங்கன எவனுக்கு இருக்கு?  அதானே நானே அடக்கி வெச்சுருக்கேன். அவரது மனசு உண்மையை சொல்லிப் பார்த்தது.O    O     O    O    O    O    O    O   O   O   O   O  பெரியகடைத் தெரு படையாச்சி  புத்தக பைண்டிங் பிரஸ் அறையில்....

கட்டுக் கட்டாக கட்டிங் மெஷினில் வெட்டி வந்த வெள்ளைக் காகிதங்களை எண்ணிக்கையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்..முத்து.

அருகில் இருந்த ராமன், கட்டிங் மெஷினுக்குள் வெள்ளைத் தாள்களை நுழைத்து சீராக்கிய படியே, முத்து...உனக்குத் தான் படிப்புன்னா உசிருன்னு சொல்றியே பெறவு உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம் பேசாமப் பள்ளியோடம் போயி படிக்கிற வழியப் பார்ப்பியா....இந்த வயசுல இங்க வந்து நின்னுக்கிட்டு...எனக்கெல்லாம் படிப்பே வராது....அதான் நான் காகிதம் கிழிக்கிற உத்தியோகம் பார்க்கறேன்..!
என்று விரக்தியில் சிரிக்கிறார்.

ராமண்ணே, நான் எட்டாப்பு படிக்கேலத் தான் கட்டிக் குடுத்த எங்கக்கா புருஷன் மேற்கொண்டு தொழில் தொடங்கப் ஒரு லட்சம் பணம் கொண்டுட்டு வந்தாத்தேன்  என் கூடச சேர்ந்து  வாழலாமுன்னு சொல்லிட்டு எங்க ஊட்டாண்ட  கொண்டுட்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு.செண்பகக்கா அளுதுகிட்டு  நின்னுச்சு. எங்கம்மாவும் அப்பாவும் என்ன செய்யுறதுன்னு வெளங்காம பெரியையாக்கிட்ட பேசி என் அக்காவையும் அங்கனயே வேலைக்கு சேர்த்து விட்டாக. பெறவு நீ மட்டும் என்ன படித்து அரசு வேலைக்கா போவப் போறேன்னு சொல்லி, பெரியையாக்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அவர்கிட்டயே எனக்கும் வேலைக்குக் கேட்டாக. அவரு பையன் வயசு கம்மி..வேலை தரமாட்டேன்னு சொல்லி பிகு பண்ணிக்கிட்டாரு. பெறவு அம்மா கூலியைக் கம்மியாத் தந்தாப் போதும்னு சொல்லவும் வேலை கொடுத்தாரு. அன்னிக்கு வெடி மருந்தைத் தொட்டவன் தான்..ஆனால் சரவெடி செய்யுறதுல எண்ணிய அடிச்சிகிட ஆளே இல்ல தெரியுமா? இப்போ இங்க செவவகாசில சும்மாக் கில்லி விஜய் மாதிரி..பிரிச்சி மேய்ஞ்சிடுவேன். ஆனா...என்ன ஒரு ஆசை...படிப்பு போயிடுச்சேன்னு அதான் இப்படி பிரஸ்ல வேலை செஞ்சாச்சும்  நோட்டுப் புத்தகத்துக்கும் எனக்கும் ஒரு உறவு வெச்சுக்கிடலாம்னு தான் அண்ணாச்சிகிட்ட கெஞ்சி இங்க வேலைக்கு சேர்ந்தேன்.

2005 யிலண்ணே ....பெரியையாவோட பழைய பட்டறையில வேல பார்த்துக்கிட்டிருக்கும்போது நான் லோடு புக்கிங் பண்ணப் போனவரோட கூடப் போயிருந்தேன்....அந்நேரம் பார்த்து பெரிய வெடி விபத்து..அம்மா..அப்பா அக்கா மூணு பேருமே செத்துப் போயிட்டாக. மொத்தம் எழுபது பேரு.அதுல இவைகளும் சேர்ந்தது...கரிக்கட்டையாத்  தான் அவுங்கள பார்க்க முடிஞ்சிச்சி. பெறவு வவுத்துப் பசி...படிப்பும் வேணாம் மண்ணும் வேணாம்னு எனக்குத் தெரிஞ்ச புரிஞ்ச தொழில் இது மட்டும்தான்னு என்னை அனாதை ஆக்கிய அதேத்  தொழில் கிட்டயே நானும் அடைக்கலம் ஆகிட்டேன்...அதெல்லாம் ஒரு கதைண்ணே . பெரியையா மூணு வேளையும்  வவுறு பசிக்காம சோறு போட்ருவாரு. அந்த விசுவாசம் தான்....இன்னும் அங்கனயே கெடக்கேன்.அதையும் மீறி அங்கிட்டிருந்து "செத்த பணம் " வரவேண்டியதிருக்குண்ணே .

அப்பிடியாடா....ஏண்டா முத்து....அதுக்குதேன் அரசு அதுல செத்த அம்புட்டு பேத்துக்கும் லட்ச லட்சமா பணம் தந்துச்சே. அவரைக் கூட அரெஸ்ட் பண்ணி  ஜெயிலுக்கு அனுப்பி வெச்சு கொஞ்ச நாள் களி  துன்னாரே ? அப்பவாடா....அதையாடா சொல்றே நீயி...!

ஆமாண்ணே...அதே தான்..! ஜெயில்லேர்ந்து வெளில வர்ரதெல்லாம்அவுகளுக்கு சினிமாத் தியேட்டர்லேர்ந்து வெளிய வர்ரது மாதிரி தாண்ணே .

நான் அப்போ மைனர்...மேஜாரான பெறவு பாஸ் புக்குல வரும்னு சொல்லிட்டாரு.அதும் இல்லாம செண்பகம்  அக்கா அங்கன வேலையே செய்யலையின்னு ஒரே போடா போட்டுப்புட்டாரு. கலியாணம் கட்டிக் கொடுத்த உன் அக்கா  இங்க எப்படிடா வேலை பார்பாள்னு என்னை மடக்கிப் போட்டாரு. "நீயும் இங்க வேலை பார்க்குறேன்னு யாருகிட்டயாச்சும் சொல்லி வெச்சா...பெறவு...உன்னையவும் மண் சட்டிக்குள்ளாரதான் அடைச்சி வெச்சிருவேன்னு சொல்லி பயமுறுததினாரு .

நான் செத்தா அளுகக் கூட யாருமில்லாத அனாதை  தான்..அதான் அவுராப் பார்த்து என்ன தாராரோ தரட்டுமுன்னு 
அவர் காலடியில நாயா சுத்திகிட்டு இருக்கேன். அவருக்கு இருக்குற பண பலம்...இன்சூரன்சு எல்லாம் வெச்சு வேற புதுக் கம்பெனி ஆரம்பிச்சுட்டாரு. இப்போ பிசினெஸ் ஓஹோன்னு போகுதுண்ணே ..ஏற்றுமதி கூட ஆகப் போகுதாம்..சின்னய்யா சொல்லுவாரு. 

பயங்கரப் பார்ட்டிண்ணே ....டேஞ்சரான ஆளு..! அதாண்ணே  நான் மொத்த பட்டாசுப் பட்டறைக்கே ஆப்பு வைக்கோணமின்னிட்டு  போன வாரம் நான் செஞ்சு  பார்சல் கட்டின 2000 வாலா சரவெடி டப்பாக்குள்ளார....!

என்னடா சொல்றே முத்து...அதுக்குள்ளார...எதுனா அணுகுண்டு வெச்சு அனுப்பிட்டியா....நீ பாட்டுக்கு அந்தாளு மேல இருக்குற கடுப்புல ஏடாக் கூடமா எதுனா செஞ்சு கடைசீல மாமியார் வீட்ல நிரந்தரமா மாட்டிக்கிடாதடா..!

அடப் போண்ணே....நீ வேற...ஒரே நேரத்துல என்னப்  பெத்தவங்கள , கூடப் பொறந்தவள கரிக்கட்டையாப் பார்த்தவன்  நான்.அப்பிடியெல்லாம் ஒரு நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாதுன்னு நினைப்பேன்.
இது முத்து வழி....! தனி வழி..! பொறுத்திருந்து தான் பாருங்களேன்...என்னிக்காச்சும் நான் நினைக்கிறது நடக்காட்டி என்  பேரு.....

டேய்...டேய்...நிப்பாட்றா....யாரோ வராப்புலத் தெரியுது...என்று அவசரகதியில் ராமன்  முத்துவுக்கு பிரேக் போடும் அதே சமயம்....!

பின்னாலிருந்து எலேய்...முத்துவாடா நீயி...! இங்கிட்டு உட்கார்ந்து என்னத்த வெட்டுற....? ஈடுபட்ட பயலே...என்னியவே   ஏமாத்தப் பாக்குறியா? தொலைச்சுப் புடுவேன்...நடடாப் பட்டறைக்கு...! பளார்...பளார் என்று முதுகில் விழுந்த அரையில்  திணறி, திமிறிக் கொண்டு எழுந்த முத்து சிறிதும் எதிர் பாராமல் தன முதலாளியை அங்கே பார்த்ததும்.... ஐயா...மன்னிச்சுகிடுங்கய்யா...ன்னிக்கு ஒரு நா மட்டும் பைண்டிங் ஓட்டிட்டு வந்துடறேங்க....வேலை முடிஞ்சிரும்.....என்று  முதுகைத் தடவியபடியே நெளிகிறான்  முத்து.

எதுத்தாப் பேசுறே...அனாத நாயே....உனக்கென்னாத்துக்கு இம்புட்டு ஏத்தம்...மூணு வேளை  சோறு போட்டு இருநூறு ரூபா என்கிட்டே வாங்கிட்டு எனக்கேத் துரோகம் பண்றியா.விளங்காத பயலே..!

தன்னோட முதலாளிக்கும் மனிதாபிமானத்திற்கும் இருக்கும் இடைவெளியை முத்து நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான்.

ஐயா...நான் அண்ணாச்சிகிட்ட சொல்லிபோட்டு சம்பளத்த வாங்கியாறேன்....நீங்க போங்க..நான் வந்திர்றேன்.

என்னடா சம்பளம் பிசாத்து  சம்பளம்..இது பெரிய ராஜராஜ சோழனோட அரண்மனை கஜானா  இருக்குற எடம் பாரு....! அவரு அப்பிடியே வாரிக் கொடுத்துடுவாரு....இவரு வாங்கி அயல்நாட்டுல கம்பெனி தொறக்கப் போறாரு....அப்பிடியேப் போட்டேன்னா....என்று சொல்லிக் கொண்டே ஓங்கித் தலையில் ஒரு தட்டு தட்டவும்,
தடுமாறினான் முத்து.  போறேங்கய்யா ....என்றபடியே  விருட்டென்று வெளியில் ஓடுகிறான் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூடத் ததும்பாமல் வறண்டு கிடந்தது. அவன் மனம் முழுதும் வலித்தது.

முத்து பெரியையாவின் கையால் அடிபட்டே வளர்ந்தவன் தான் இருந்தாலும் இப்போதெல்லாம் அடி வலிப்பதில்லை.அது நேராக அவனது இதயக் கல்வெட்டில் ஆணிபோல நிகழ்ச்சியைச் செதுக்கி வைக்கிறது .இப்படிச் செதுக்கிச் செதுக்கியே அவனது இதயம் ஒரு இரும்புக் கோட்டையை உருவாகிக் கொண்டிருந்தது.

விறு விறு வென்று ஆத்திரத்துடன் பட்டறைக்கு நடந்தவன் பெரியையாவின் அறையைத் தாண்டி தனது தனி  அறைக்குள் போய்  முடங்கிக் கொள்கிறான். அவனைச் சுற்றிலும் வெடி மருந்துகள், பாக்கிங் தாள்கள், பசைகள் என்று நெடி அவனது குடலைப் பிரட்டி எடுத்தது.பழக்கப் பட்ட வாசனை தான்...ஏனோ... இன்றைக்கு 
அதே வெடி மருந்தின் வாசம் அவனை பின்னோக்கி விரட்டியது.

ஆரம்பத்தில் அவனது  அம்மா..."இதப் பாருங்க தெனம் என் மவன் மாவுமில்லுக்காரன் மாதிரி வாரான்...வாடா ராசா தண்ணியூத்தி களுவி  விடறேன்....என்று வாஞ்சையாக கூப்பிட்டு நன்கு தேய்ச்சு குளிப்பாட்டி விடுவாள்.

ஆத்தா...இம்புட்டுக்கும் நீ தான் காரணம் . நான் பாட்டுக்கு பள்ளியோடம் போய்க்கினு இருந்தேன். என்னிய நீ தான் இப்படி வேலையில சேத்து விட்டு இப்போ வேடிக்கை  பார்க்குறியான்னு  கத்துவான்.

என் ராசா...உன்  அருமை பெரியையாவுக்கு நல்லாவே வெளங்கும் . என்ன வெளிய காட்டிகிட மாட்டாரு...அம்புட்டுத்தேன். நான் சொல்லுதேன் கேளு உனக்கு ராசாக் கெணக்கா எதிர் காலம் காத்துக் கெடக்கு.
அம்புட்டு ஏன்...நம்ம பெரியையாக் கூட சின்னப் புள்ளையா இருந்தப்ப உன்ன மாதிரி வேலை பார்த்தவிருதேன்.
சின்ன வயசுல கஷ்டப் பட்டா பெருசானதும் ஒக்காந்து துண்ணலாம் ..!

அப்போ...நீங்க ரெண்டு பெரும் சின்ன வயசுல கஷ்டப் படாம ஒக்காந்து தின்னீங்களா ? சாதாரணமாகக் கேட்டு விட்டு வெளியில்  போய்  வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பான்.பின்பு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஆத்தா,....இதைப் படிக்கிறேன்...புரியுதாப் பாரேன்...என்பான்...!

டேய்...என்னடாது....நேரமாச்சுடா ஓடுடா பட்டறைக்கு...லேட்டாப் போனா முதலாளி முதுகைப் பேத்துருவாரு ..என்ற அம்மாவின் பயமுறுத்தல் குரல்...அவசரப் படுத்தும்.

இவனும் தான் எழுதிய கவிதையை சுருட்டி வீசி எறிந்து விட்டு பட்டறைக்குப் பறப்பான்.

"நரகாசுரனை ஒரு நாள் 
நீங்கள் நினைப்பதால் 
உங்களுக்கு ஒரு நாள் தீபாவளி...
உங்களையே நரகாசுரனாய் 
நாங்கள் தினமும் நினைப்பதால் 
தான் எங்களுக்கு தினம்
தினம் பட்டாசுடன்  தீபாவளி...
உங்க சந்தோசம் எங்க துக்கம்..."


அவன் எழுதிய கவிதை காற்றில் சுருண்டு புரண்டு குப்பைத் தொட்டியை எட்டிச் சிரிக்கும் !


பெரியையா அடித்து அனுப்பிய ஆற்றாமையில் பழைய நினைவுகளும் நெஞ்சத்தை கனமாக்க முத்து வைராக்கியத்தோடு ஆபத்தான இரசாயனப் பொருளை எடுத்து அவசர அவசரமாக இன்னைக்கு எப்படியும் நூறு வெடி தயார் செய்து அந்தாளு முன்னாடி காட்டறேன்...நாளைக்கு ஆரம்பிச்சுக் கிடலாமின்னு நெனச்சேன்......என்று எண்ணியவன்...விறு விறுவென்று  லாவகமாக வேலையில் இறங்கினான் முத்து. இந்த ரசாயனத்தின் நெடி அதன் அபாயத்தை அவனுக்கு பயமுறுத்தியது.

திடீரென வாசலில் நிழலாடவும்...முகத்தை நிமிர்த்திப் பாத்தா முத்து....அவன் வயதை ஒத்த முதலாளியின் மகன் அங்கே ஜீன்ஸ்  பாண்ட்டும்  டீ  ஷர்ட்டுமாக சினிமாக்காரன் கணக்கா நிற்பதைப் பார்த்ததும்...மனசுக்குள் லேசாக ஒரு பொறாமை எட்டிப் பார்க்க மீண்டும் தலையைக் குனிந்து வேலையில் மும்முரமானான்.

டேய்...முத்து....நான் மேலப் படிக்க சிங்கபூரு போகப் போறேன்....இந்தா இந்த ஃபைலப்  பிடி..ஓடிப் போயி இதுல இருக்குறத ரெண்டு காப்பி செராக்ஸ் பண்ணிட்டு வந்துரு. சீக்கிரம் ஓடு .

சின்னையா....உங்கப்பா நான் இந்த எடத்த விட்டு நவுந்தா என்னிய  வைவாரு. அதும் இந்த இரசாயனத்தை இப்பத் தான் எடுத்தேன்....முடிக்க அரைமணி நேரமாகும்.

டேய்....அப்பா இங்கன தான் இருக்காரு...நீ போயிட்டு வா நான் சொல்லிக்கிறேன்..எனக்கு சீக்கிரம் போகணும்டா..! குடுடா நான் வேணா மீதியை  அடைக்கிறேன்...!

அய்யய்யோ...வேணாம் சின்னையா....ரொம்ப டேஞ்சர்.

அடப் போடா...! எங்க பட்டறையில வேலை செஞ்சுட்டு எனக்கே நீ இல்லன்னு சொல்வியா..?

வேணாம்ணே ..இது டேன்ஜர் ...அதான்....இந்த எடத்துல தப்பித் தவறிக் சிகரெட்டுப் பிடிக்கக் கூடாது....உங்களுக்குத் தெரியாததா..? நீங்கள் இங்கிட்டு வாசல்ல நில்லுங்க..நான் ஓடிப் போயிட்டு ஓடியாந்துறேன்......கொடுங்க அதை என்று ஃ பைலை வாங்கியவனை....
டேய்...நீ ரொம்ப ஓவராப் போய்கிட்டு இருக்கே...என்கிட்டே மிதிபடுவே...என்கிட்டயே உன் ஷோக்கைக்  காமிக்கிறியா? ஓட்றா ....மடையா....! 

சின்னையாவின் எகத்தாளமான குரலுக்கு அடங்கிய முத்து ...நேராக பெரியையா அறையை நோக்கி 
விரைகிறான். சின்னையா சொன்னால் கேட்க மாட்டாரு ரொம்பவும் பிடிவாதக் காரர் . எதுக்கும் ஒரு வாரத்தை பெரியையாகிட்ட சொல்லிட்டு போவலாம்.

ஐயா...சின்னய்யா வந்திருக்காரு...இதக் கொடுத்து எல்லாம் நகல் எடுத்தாரச் சொல்றாரு..நான் போகவா...?

எலேய்.....இந்த லொள்ளு தானே வேணாங்கறது...பிரஸ்சுக்கு சொல்லாமக் கொள்ளாமப் போகத் தெரியிது...
இதுக்கு என்கிட்டே என்ன வந்து கேட்டுகிட்டு நிக்கிற. போ...போ...சொன்னத செய்யி....எல்லாம் நான் போயி பார்த்துக்கறேன்...என்ற பெரியவர் தோளில்  இருந்த துண்டை உதறியபடியே எழுந்தார்.  வேலு.....லோடு கிளம்பிருச்சா...? என்ற  அவரின் குரல் கணீரென ஒலித்தது.

ஆச்சுங்கய்யா.....இப்பத்தான் வண்டி கிளம்புது...நானும் லாரி எடை மேடை வரைக்கும் போயிட்டு வந்திறேன்யா...!
என்று குரல் கொடுத்தான் வேலு.

சின்னையாவின் "அப்பாச்சி பைக்" அவன் உள்ளிருப்பதற்கு சாட்சியாக ஒரு மரத்தடியில் சாய்ந்து நின்று காத்துக் கொண்டிருந்தது.  

தூரத்தில் காலில் செருப்புக் கூட இல்லாமல் முத்து "நகல்" எடுக்க எட்டி நடை போட்டுக் கொண்டிருந்தான்.O   O   O    O   O    O    O    O    O    O    O    O   Oசென்னையில் பிரம்மாண்ட பில்டிங்கில் பத்தாவது மாடியில் இயங்கும் பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் முனைவர் ராஜேஷ் தனது டேபிள் மேலிருந்த 2000 வாலாக்கள் சரவெடிப் பாக்கெட்டை தட்டியபடியே...அவரது அசிஸ்டன்டிடம்  "லுக் திஸ் சந்துரு....இந்த தீவாளி செலெபிரேஷனுக்கு  நம்ம ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் ஒரு கிலோ ஸ்வீட்டும் இந்த மாதிரி ஒரு சரவெடி டப்பாவும் தரலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்....இது ஜஸ்ட் சாம்பிளுக்கு வாங்கியது. நல்லா வெடிக்குதான்னு டெஸ்ட் பண்ணணும் . எதுக்கும் பிரிச்சு ஒரு ஒன் ஹவர்    வெய்யில்ல வைக்க சொல்லி சொல்லுங்க ஹவுஸ் கீப்பிங் கிட்ட...இதுக்கு ஒரு பட்ஜெட் தயார் பண்ணி கொடுங்க  ஆர்டர் கொடுக்கணும்....தீவாளிக்கு இன்னும் டூ வீக்ஸ் தானே இருக்கு....என்றார்.

குட் ஐடியா சர்...நானே ஓபன் பண்ணிப் பார்க்கிறேன் என்று சொன்னதோடு  அந்த அட்டைப் பெட்டியில் மேலுறையைக்  கிழித்துத் திறக்க அங்கே....ஒரு செந்நிற  நாகக் குட்டிப் பாம்புகள்  அடங்கிக் கிடப்பது போல சரவெடிகள் சுருண்டு கிடந்தன. அதன் நடுவில் துருத்திக் கொண்டு ஒரு நான்காக மடிக்கப் பட்ட  வெள்ளைத் தாள்...என்னவாக இருக்கும் என்று அதை உருவிப் பிரித்ததும்....முத்து முத்தான கையெழுத்தில் நீண்ட கடிதம்...மேற்கொண்டு படிக்கும் ஆவலைத் தூண்டியது.

ஸார் ...! என்று சந்துரு அந்தக் கடிதத்தை முனைவர் ராஜேஷிடம் நீட்ட...அவர் அதை அலட்சியமாக வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறார்.


அன்புள்ள அண்ணனுக்கு,


இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது அனேகமா நான் உயிரோடு தான் இருப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதுக்குக் காரணம் பட்டாசுத் தொழிலில் வேலை செய்யுற யாருக்குமே வாழ்க்கை நிரந்தரமில்லை. என்றாவது ஒருநாள் அந்த உடல்கள் எரிந்து சாம்பலாகிப் புகைந்து போகும் !  நீங்க லக்ஷ்மி வெடியில் நெருப்பு பத்த வெச்சிட்டு விலகி நின்னு அது எப்போ வெடிக்கும்னு காதைப் பொத்திக்கிட்டு காத்துக்கிட்டு நிப்பீங்க....அதிலிருந்து தீப்பொறி உங்களை பயம் காட்டிகிட்டே இருக்கும்..அதுபோலத் தான் எங்க நிலைமையும்.

இதே தொழிலில் 2005 ஆம் ஆண்டு நடந்த வெடி விபத்துல என் அம்மா, அப்பா, ஒரே அக்கா ன்னு என் குடும்பமே ஒரே நேரத்துல எரிந்து கருகிச் செத்துப் போனாங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அதிர்ஷ்டவசமாப் பொழைச்சிருக்கேன். அதோட காரணம் இப்போ எனக்குப் புரியுது. ஒரே நாளில் அனாதையான எனக்கு இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் உறவுக் காரங்க மாதிரி தான் நினைக்கத் தோணுது.

என்னை மாதிரி எத்தனையோ பேர்களின்  வயித்துப் பசியைப் போக்குவது இந்தப் பட்டாசுத் தொழில் தான்.வெடி செய்து வெடி செய்து நாங்களும் வெடி மருந்து கணக்காத்தேன் இருப்போம். அதுதான் விதின்னு என்னால இருக்க முடியலைண்ணே .நான் ஏழாப்பு வரிக்கும் படிச்சவன். விதி என்னும் தெரு என்னை இழுத்துக் கொண்டு வந்து நிப்பாட்டின எடம் தான் இதுன்னு நான் ஏன் அங்கனயே நிக்கணும்.? ஏன் புடிக்காத இந்தத் தொழிலில் உழன்று உயிர் விடணு ம் . இந்தப் பட்டாசு பண்றதை விட நோட்டுப் புத்தகம் செய்யும் பொது மனசு சந்தோஷப் படுது.

இந்த வெடியை, பட்டாசை புஸ்வானத்தை நீங்க ஏன் வாங்கோணம் ..? நீங்க யாருமே வாங்கலீன்னா இதை யாருமே தயாரிக்க முன்வர மாட்டாங்க.ஆயிரக்கணக்கா நாங்க தொழிலாளிங்க இங்க முதலாளிங்க கிட்ட அடிமையாய் கிடந்தது செய்யும் பட்டாசுங்க இதெல்லாம். அதுல பூரா பூரா...எங்க ஆற்றாமை, இயலாமை,கஷ்டங்கள்,வெறுப்பு, துயரங்கள்,இதெல்லாம் தான் நாங்க.. மருந்தா...அடைத்து வைக்கிறோம்.
அதெல்லாம் தான் உங்க வீட்டு வாசலில் வெடிக்கும் போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கு...! 

இதுல ஒரு வருஷம் வித்தாலே போதும்  மூணு வருஷம் உட்கார்ந்து திங்கிற அளவுக்கு லாபம் கிடைப்பது எங்க முதலாளிக்குத் தான்.ஆனால் தொழிலாளியான எங்களுக்கு நோய், நொடி, அல்லது வெடிப்பில் உயிரிழப்புதான்..!இந்தத் தொழில் இல்லையினா இன்னும் வேற நல்ல தொழிலே எங்களுக்குக் கைகொடுக்கும். இங்கே இருந்து 
செத்துப் போனா அரசு ஒரு லட்சம் , ரெண்டு லட்சம்னு நஷ்ட ஈடு வழக்கமா தரும். அந்தப் பணத்தை வாங்கும்போது "செத்தப் பணம்" ன்னு தான் மனசுக்கும் தோணும். அதே...அவங்க உயிரோடு இருக்கறப்ப எங்கள மாதிரி ஏழைங்களுக்கு பண உதவி கிடைத்தால் ஒரு இட்டிலிக் கடை வைச்சாவது நிம்மதியாப்  பொழைப்போம்.

நாங்க யாருமே இந்த அபாயத் தொழில் பக்கம் போக மாட்டோமே.

எங்கள மாதிரி எத்தனை பேர் படிக்கும் ஆர்வம் இருந்தும் படிக்கச் முடியாமல் தவிக்கிறோம். நீங்க கஷ்டப் பட்டு உழைத்த பணத்தைக் கொண்டு வெடி வாங்கி அதை ஒரு நிமிஷத்துல குப்பையா மாத்தாமல் ஒரு ஏழைச் சிறுவனை தத்தெடுத்து அவன் படிக்கவும், நன்கு உடுத்தவும் வழி செய்து தீபாவளி வாழ்த்து சொல்லிப் பாருங்கள்.
அவன் உயிர் சிரிக்கும் ஓசையில் உங்கள் மனம் ராக்கெட் போல சந்தோஷத்தில் எகிறும்.

இங்கிருக்கும் அனைத்துப் பட்டாசுப் பட்டறையும் மூடி எல்லாம் கல்வி பயன்பாட்டு தொழிலாக மாறினாலும் எங்கள் கஷ்டங்கள் தீரும்.அதற்கு உங்களைப் போன்றோர்கள் தான் பட்டாசு வாங்காமல் உதவ வேண்டும்.
பட்டாசுகளை வாங்கவே வாங்காதீங்க..இனிமேட்டு வெடியே வெடிக்காதீங்க...!யாருமே ஏறெடுத்துப் பார்க்காத ஒரு விஷயம்..மண்ணோடு அழிந்து போகும்.ஒவ்வொரு தீபாவளியின் போதும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள்...அதனால் எத்தனை உயர் வலிகள் ..! இன்னும் நடந்துக்கிட்டுத் தானே இருக்கு.


சாவுக்கும் எனக்கும் அதிக தூரமில்லை.   நித்தம் என் அருகில் எமதர்மன் காத்துக் கிடக்கிறார்ன்னு தான் சொல்லணும் .

உங்களுக்கெல்லாம் நரகாசுரன் இறந்ததை மகிழ்வாகக் கொண்டாடும் திருநாளாக...தீபாவளி..! ஆனால் எங்களுக்கோ...நீங்களே நரகாசுரன்களாக ...! (அண்ணே...என்னை மன்னிச்சுக்கங்க..!)


தயவு செய்து எனது இந்த ஆசையை செய்தியாய்  மக்களிடம் பரப்புங்கள்.

என் நியாயமான கோரிக்கையை நிறைவேத்துங்கண்ணே.

உங்க அன்புத் தம்பி.
முத்து.


படித்து முடித்ததும் அந்த ஜில்லென்று இருந்த அறையிலும் கூட ராஜேஷுக்கு வியர்த்து வழிந்தது.தான்  வெறும் பட்டாசு என்று நினைத்திருந்த ஒரு சாதாரண விஷயம் எவ்வளவு பெரிய விஷயத்தை அந்த சிறுவன் மூலம் உணர்த்தியிருக்கு.தன்னையும் மீறி அவர் கண்கள் பனித்தது. ஒரு சின்னக் கடிதம் ஒரு பெரிய பன்னாட்டு வர்த்தகத்துக்குள் இருக்கும் செல்வந்தரின் மனதுக்குள் நுழைந்து மனிதாபிமானத்தை பல மடங்கு விஸ்வரூப மெடுக்க வைக்குமா ?அங்கு தான் பணமும், பதவியும் பல விதங்களில் பேசும்.


வீ ஷால் டூ சம்  திங்....அண்ட் ஃ ப்ரம்  திஸ் டைம் ஆன்வர்ட்ஸ்  தேர் வில் பீ "நோ கிராக்கர்ஸ்".தீர்மானமாகச் சொல்லிக் கொண்டவர்....அருகிலிருந்த சந்துருவிடம்....

சந்துரு..இந்த லெட்டரை அப்படியே ஸ்கான் பண்ணி எல்லோருக்கும் ஈமெயில் பண்ணிடுங்க அண்ட் லெட் மீ நோ த ஃபீட்பேக்...க்விக்...க்விக்...என்று கடிதம் கைமாறியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ஒரு சலசலப்பு. விஷயம் வந்த இடம் பெரிய இடம்..அதனால் "நோ கிராக்கர்ஸ்" வைரஸ் மாதிரி பரவிக் கொண்டு போனது. 

அடாப்ட் சம் ஸ்கூல் அண்ட் வீ வில் கிவ் ஸ்வீட்ஸ் டு தி சில்ட்ரென். லெட்  அஸ்  செலேபெரேட் திஸ் தீவாளி 
ஃபெஸ்டிவெல் இன் எ டிஃபரென்ட் வே ....அண்ட் லெட்  திஸ் இஸ் தி பிகினிங் ஆஃப்   "முத்து'ஸ்  ஐடியா.."
அப்டியே இந்த லெட்டரை ப்ரெஸ்ஸுக்கும்  மீடியாவுக்கும் நம்ம சார்புல கொடுத்து பப்ளிஷ் பண்ணச் சொல்லுங்க.
பப்ளிக் அவேர்நெஸ்  கிடைக்கும்..சொல்லிக் கொண்டே இந்த வெடியை அப்படியே....பக்கெட் தண்ணீல போட்டு ஊறவெச்சு...ட்ராஷ் ல போடுங்க சந்துரு.

ராஜேஷுக்குத் தான் ஏதோ நல்ல காரியம் செய்வது போன்ற நிம்மதியை உணர்ந்தார்.

ஆம்...அங்கே...முகம் தெரியாத புரட்சி முத்து ஜெயித்துக் கொண்டிருந்தான்.O   O   O   O   O   O   O   O   O   O   O   O   O   O   O   Oமுத்துவை அனுப்பிவிட்டு யாரும்  வரமாட்டார்கள்  என்ற தைரியத்தில்  ஒரு உதட்டில் சிகரெட் துண்டைக் பிடித்துக் கொண்டே கைகளால் இரசாயனத்தை நீண்ட உருளைக் குழலுக்குள்ளே  அடைத்துக் கொண்டிருந்தான் சின்னையா. 

முத்துவின் அறைக்குள் தன்  மகன் என்னதான் செய்கிறான் என்று பார்க்க அந்த அறைக்குள் நுழைந்த பெரியையா...அந்தக் காட்சியைக் கண்டதும் ஒரு நொடி நெஞ்சு அடைத்து. பக்கென நின்றது...அவருக்கு.

டேய்...என்ன காரியம்டா பண்றே....நாசமாப் போறவனே.....அவரது இறுதி வார்த்தையும் அதுவாகவே நின்றது.
அடுத்த நொடியில் எது நடந்து விடக் கூடாதென உள்ளம் பதறியதோ .... எது நடக்காது என்று சின்னய்யாவின் அசட்டு தைரியம் சொன்னதோ....எதற்காக முத்து முன் ஜாக்கிரதையாக இருக்கப் பயந்தானோ...அது நடந்தது !  பட்டாசுகள் பட்பட்டென்  வெடித்தன தீபாவளிக்கு முன்பே பட்டறையில் !   எங்கும் கூக்குரல் !   தீ வெள்ளம் வேலை செய்த மக்கள் அலறிக் கொண்டு ஓடினர் !  பட்டறைக் கூடாரம் வெடித்து மேற்தளம் தூளானது !  அதெல்லாம் கரும்புகையாய் நெருப்பு ஜ்வாலையாய் கொழுந்து விட்டெறிந்து பலரது ஓலங்களைத் திரட்டிக் கொண்டிருந்தது.

திரும்பிக் கொண்டிருந்த முத்து அதிர்ச்சியில் உறைந்து அப்படியே கற்சிலையாய் நின்று கொண்டிருக்க...எங்கிருந்தோ ஓடி வந்த ஒருத்தி..."அடே....முத்து நீ இங்கனையா இருக்கே.... உன் ஆத்தா தான் உன்னியக் காப்பாத்திபுட்டாடா....இப்பத்தாண்ட பெரியையா அந்த ரூமுக்குள்ளார போறதைப் பார்த்தேன்....நீதானோன்னு  நெஞ்சு நின்னே போயிருச்சு ராசா என்று கட்டிக் கொண்டு கதறினாள் .

பெரியையா கொடுத்த ஆக்ரோஷம், கோபம், வெறுப்பு, எகத்தாளம் எல்லாம் வளர்ந்து உருவெடுத்து அவரைப் பார்த்துத் திரும்பியது .   அதே ஜ்வாலைக்குள் அவரும் அவர் மகனும் கருகிப் போனார்கள்.

தனது கை காலிலிருந்த விலங்குகள் தகர்க்கப் பட்டு முதுகில் கிடந்த பாறாங்கல் உருண்டை கீழே விழுந்து உருள்வதைப் போல நிமிர்ந்தான் முத்து. பின்பு " ஒழியட்டும்..இந்தத் தொழில்..இத்தோட ஒழியட்டும்.." என்று கதறியபடியே தன்னோட மேல்சட்டையைக் கழட்டி வீசி எரிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் விரைவாய் நடந்தான்.


கனன்று கொழுந்து விட்டெறிந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த அறைகளில்  தீயணைக்க வண்டிகள்  அதி வேகமாக மணி அடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது.மனித அலறல்கள் அடங்கி அங்கே சுடுகாடு போல் புகையும், கரித்தூள்களும் மேல் எழுந்து மயான அமைதி தவழ்ந்தது. 

தீபாவளி நினைவாய் செத்துப் போன நரகாசுரன் பூதாகரமாய் உயிர் பெற்று அங்கு நின்று சிரித்துக் கொண்டிருந்தான் !========================================================================================================

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நவராத்திரி....முப்பெரும் சக்தியில் புவனபுரி..!சிறப்புக் கட்டுரை:பொதுவாக நவராத்திரி தீபாவாளிக்கு முன்னம் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச் சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல வாழ்வையும் அருளச் செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது.

நவராத்திரி வந்தாலே போதும்...பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும் கொண்டாட்டமும் தான். வித விதமாக பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து நிறைய ஜொலிக்கும் நகைகளும் போட்டுக கொண்டு அசல் அம்மனாகவே தங்களையும் அலங்கரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வார். அங்கும் அலங்கார தேவிகளைக் கண்டு தொழுது வீட்டுக்கு கை நிறைய சுண்டல் கொண்டு வரும் மகிழ்ச்சி.....வேறு எந்த விழாவில் சுண்டல் கிடைக்கும்.? ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகள் தெய்வ அம்சமாகவே பாவித்து..பாட்டும், சிரிப்பும், சிலிர்ப்பும்...வேறு எந்த பண்டிகையும் இத்தனை நிறைவைத் தருவதில்லை. பத்து பதினைந்து குழந்தைகள் ஒன்றாகக் கூடி கோல்களை எடுத்துக் கொண்டு கொலு வைத்திருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு கோலாட்டாம் ஆடி....மகிழ்ந்தபடியே...இறுதியாக தமது வீட்டுக்குள் நுழையும் போது கை கொள்ளாது...எடுத்து செல்லும் பையும் கொள்ளாது... அவ்வளவு தாம்பூலம்...சுண்டல்...குங்குமச் சிமிழ்...கண்ணாடி என்று மனசும் நிறையும். இதெல்லாம் நாற்பது வருடங்கள் முன்பாக நியதியாக இருந்தாலும் இன்றும் இது போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுவது தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது. இதற்கு தொலைக்காட்சியும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

நவராத்திரி என்னும் பெருவிழாவானது புரட்டாசியில் வரும் மாதப் பிரதமை முதல் நவமி வரை ஆக... ஒன்பது நாட்கள் காலமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தியே.முத்தொழில் புரியும் முமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வணங்கும் பரம்பொருள் அன்னை பராசக்தி அம்பிகையே.

நாம் அனுதினமும் அம்பிகையைத் தொழுதாலும் இந்த நவராத்திரி சமயங்களில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் அனைவரும் தெரிந்து கொண்டாடுவது சாரதா நவராத்திரிக்கு மட்டும் சிறப்புகள் அதிகம்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூவரும் மகிஷாசுர மர்த்தினி சக்தியாக உருவெடுத்து மகிஷனை வதம் செய்து அழித்ததையே "சாரதா நவராத்திரியாக" இன்றும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

நவராத்திரி காலம் முழுதும் பெண்களை சக்திஸ்வரூபங்களாகவே பாவனை செய்து மகிழ்விப்பது தேவியை ஆராதிப்பதற்கு ஒப்பானது. அதுவும் பெண் குழந்தைகளை "கன்னியாப் பெண்கள்" பாலா திரிபுர சுந்தரியாகவே பாவனை செய்தலும் கன்னியா பூஜை செய்வதும் மிகுந்த நற்பயனையும் இகபர சுகத்தையும் தரும். அதே போல இந்த ஒன்பது நாட்களிலும் அன்னதானம் செய்விப்பது தேவியை குளிர்வித்து சகல நன்மைகள் பெற வழி வகுக்கும்.

சில இக்கட்டான சூழ்நிலையால் நவராத்திரிக்கு ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாத நிலை வந்த போதும் 8 வது நாளான அஷ்டமி,அன்று ஒரு நாள் மட்டும் மனதார அம்பாளை வேண்டிக் கொண்டு ஆராதனை செய்தால் கூடப் போதும்; அவள் அருளைப் பெற்றிடலாம்.

இந்த ஒருநாளில் கூட சுமங்கலிகளுக்கும், கன்னியாப் பெண்களுக்கும் தாம்பூலம் தருவித்து தந்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நவராத்திரி அத்துணை விசேஷமானது.

இந்தியா முழுவதும் இந்த நவராத்திரி பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அதே சமயம் பல விதக் காரணங்களும் சொல்லப் படுகிறது.

கர்நாடகாவிலும், வங்காளத்திலும் வெகு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தசரா என்னும் நவராத்திரி தான்.மஹாராஷ்டிரா பகுதியில் தசரா சமயங்களில் "தாண்டியா ரஸ் .." என்னும் நமது கோலாட்டத்தை மிகவும் உற்சாகமாக பெண்களும் ஆண்களும் தாளத்தோடு ஆடிப் பாடுவது மிகவும் இனிமையாகவும், ரசிக்கும் படியாக இருக்கும்.

ஆந்திராவில் ஒரு பழக்கம் உண்டு.சிலரது வீடுகளில் சுமங்கலிப் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கஷ்டமான ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு "ஒக்கப்போது " என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை மட்டும் உணவு. அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி என்று இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள். அதை விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால்..., "ஒக்க லக்ஷ பசுப்பு.." அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது இரு கைகளின் முழங்கை வரைக்கும் எத்தை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்...அள்ளி அள்ளித் தருவார்கள்.

இந்த ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள் கிழங்குகள் வரைக்கும் கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர். இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்
இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
அதே போல விடியற்க்காலையில் நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரைக்கும் கூட நீண்ட வரிசையில் இந்த மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே "லலிதா சஹஸ்ரனாமத்தைப்" பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கும் இந்த சுகமான அனுபவம் கிடைத்ததை நான் பெற்ற வரமாகவே நினைக்கிறேன்.

தமிழகத்தில் எப்படி "கொலு" வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று "கொலு பார்க்க வந்திருக்கோம்" என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ...அதே போல ஆந்திராவிலும் "லட்சப் பசுப்பு" என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்

மதுரையிலும் சம்பிரதாயம் எதுவும் மாறாமல் ஒன்பது படிகள் கொலு வைத்து பெண் குழந்தைகளை அழைத்து "கோலாட்டம்" வைத்துக் கொண்டு ஆடியும்...அந்தந்த நாளுக்கான ராகத்தைப் ..பாடிக்கொண்டே கும்மியடித்தும் அம்பாளை சந்தோஷப் படுத்துவார்கள்.ஒன்பது நாட்களும் நித்தியம் வந்து பாடிவிட்டு மகிழ்வோடு தாம்பூலம் வாங்கிக் கொண்டு செல்வதைக் காணும்போது தான் கொலு வைத்தவர் மனதில் அந்த அம்பிகையே...பராசக்தியே நேரில் வந்திருந்து ஆசீர்வாதம் செய்த திருப்தி இருக்கும்.

அத்தனை கோயில்களிலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ அலங்காரமும் ஆராதனையும் நடக்கும். கோயில்களில் கொலு பார்க்க வேண்டியே தினமும் கூட்டம் கட்டுக்கு அடங்காது. மீனாக்ஷி அம்மன் கோவிலில் அம்பிகையைக் கொலு மண்டபத்தில் நவ வித பூஜையோடு நவ வித அலங்காரத்தோடு வீற்றிருக்கும் அன்னையைக் காண ஜென்ம பலன் கிட்டும். மண்டபத்தின் வழியெங்கும் இருபக்கமும் ஆறடி உயரத்தில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட...யானை,மயில்,கிளி,அன்னம்,காமதேனு,கருடன்,சிம்மம்,மூஞ்சூறு,கடோத்கஜன்,நந்தி ..ஆகிய வாகனங்கள் தக தகவென்று மின்னிக் கொண்டு நிறுத்த வைக்கப் பட்டிருக்கும் அழகு அபாரமானது.
ஒரு முறை கண்டால் போதும்...என்றென்றும் நெஞ்சத்தை விட்டு அகலாது. பொற்றாமரைக் குளம் முழுதும் விளக்கொளியில் அலங்கரிக்கப் பட்டு ஜகஜ் ஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் அழகு. சித்திரைத் திருவிழாவைப் போலவே "நவராத்திரிக்கும்" மதுரையே ஜே...ஜே.. என்று மல்லிகை, பிச்சி,ஜாதி முல்லை,தாழம்பூ,பன்னீர் ரோஜா ஆகிய சுகந்த மலர்களின் இனிய மணத்தை தாங்கி மணத்துக் கொட்டும்.இதுவரை ஒரு முறை கூட கண்டிராதவர்கள் அவசியம் ஒரு முறையேனும் கண்டு வரவேண்டும். அந்த சுகமே அலாதியானது.

தேவி பாகவதத்தில் கூறப் பட்டுள்ள படியே இந்த நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடும் மற்றோர் இடம் சிதம்பரம் ஆகும். கோயிலின் பிரகாரத்தின் உள்ளே பிரமாண்டமான முறையில் பொம்மைக் கொலு...! நீளத்திலும் அகலத்திலும் அந்தப் பிரகாரத்தையே சிறப்பிப்பதாக அமையும் வகையில் இருக்கும். ஆயிரக் கணக்கில் மிகவும் புராதனக் களிமண் பொம்மைகள் கூட வீற்றிருக்கும்.நித்தம் சாஸ்திர சம்பிரதாயப் படியே ஹோமங்களும், நித்தியா அன்னதானமும், சுவாசினி பூஜையும், 1008 கன்னியா பூஜை மற்றும் ஒரு லக்ஷத்தி எட்டு ரவிக்கைத் துண்டுகள் ஒன்பது வண்ணங்களில் அர்ச்சனை செய்வித்து பாலாம்பிகையை வணங்கும் விதத்தைக் காண மனம் நெகிழும்.
இந்த ஒன்பது நாள் பூஜையின் இறுதியில் மகா சண்டி யாகம் நூற்றி எட்டு குருக்கள் இணைந்து கலந்து கொண்டு வேத கோஷம் முழங்க பூர்ணாகுதி நடக்கும் போது அம்பிகையே நேரில் வந்து ஆசீர்வதிப்பது போல இருக்கும்.

விஜயதசமி அன்று நடராஜர் முன்பு இருக்கும் மண்டபத்தில் பரதம் அறிந்த குழந்தைகளும் , பெரியவர்களும் பரதம் ஆடுவார்கள். அன்று பல கோயில்களில் அக்ஷராப்பியாசம்..என்னும் முதன் முதலில் குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருவது வழக்கம். இந்த நாளில் செய்யும் அனைத்துக் காரியமும் நம்மை வெற்றியோடு விளங்கச் செய்யும் என்ற நம்பிக்கை என்றும் உண்டு.புதிதாக வீடு கட்டப போவதன் முன்பு வாஸ்து பூஜையும் இந்த நல்ல நாளில் செய்தால் எவ்விதத் தடங்கலும் இன்றி ஜெயம் உண்டாகும் என்பதும் வழக்கத்தில் உள்ளது.

கும்பகோணம் அருகில் தமிழ்நாட்டில் இருக்கும் சரஸ்வதிக்கென்று தனிக் கோயில் பூந்தோட்டத்தில் இருக்கிறது.ஒட்டக்கூத்தருக்கு அன்னை அருள் பாலித்த திருத்தலம் அதனால் கூத்தனூர் சரஸ்வதி என்றே அழைக்கப் படுகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது எனபதை உணர்த்தும் வண்ணம் அன்னை கலைகளுக்கரசி...வீணையோடு வீற்றிருக்கும் எழிலைக் காண கண் கோடி வேண்டும். இத்தகைய ஞான சக்தி வழிபாடு நமது நமது அறியாமையை அகற்றி அறிவையும், சத்துவ குணத்தையும் வளர்க்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிலேட்டு, நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் இவற்றை அம்மனின் காலடியில் சமர்பித்து எடுத்து வருவது நல்லது உத்தமம். குழந்தைகளுக்கு கொல்லூர் மூக்காமிபை கோயிலில் மற்றும் கேரளக் கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் அக்ஷராப்யாசம் வெகு விமரிசையாக நடை பெரும்.

பூந்தோட்டதிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது திருமீயச்சூர்..இங்கு அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கிறார். தேவியின் லலிதா சஹஸ்ரநாமம் தேவியே சொல்ல இங்கு தான் அகஸ்த்தியரால் பாடப் பெற்றது. அமைதியும், எழிலும், கலைவண்ணமும் கொண்ட திருக்கோவில். அம்பாளைக் காண மதி மயங்கும்.
ஒவ்வொரு நவராத்திரி சமயத்திலும் வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு தான் அம்பாளின் முன்பு சக்கரைப் போன்களைப் பரப்பி, தில் குளம் வெட்டி அது நிறைய ததும்பு ததும்ப நெய்யை ஊற்றி அதில் லலிதாம்பிகாவின் பிம்பம் உருகிய நெய்யில் விழுந்து காட்சி தருமாறு சேவிப்பார்கள். நெய்விளக்கின் ஒளியில் அம்பாளின் உருவம் கண்ணாடியாக மின்னும்...அழகே அழகு. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். மாதா ஜெயா ஓம் லாலிதாம்பிகையே ...என்ற நவரத்னா மாலையில் பாடுவது போல "காணக் கிடையா கதியானவளே .." என்ற வரியை உணர்த்தும் அனுபவம்..நிச்சயம் கிடைக்கப் பெறும்.

நவராத்திரியில் நவாட்சரி மந்திரம் செய்வது 24 அக்ஷரங்கள் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். சகல காரிய சித்திக்கும் அற்புத மந்திரம். இந்த மந்திரத்திற்கு மகா லட்சுமியும் , மகா சரஸ்வதியும் சக்தி தேவியர்களாக அருள் பாலிக்கிறார்கள். "நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி "ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே" என்று 108 முறை ஜபம் செய்து பால் பாயசம் நைவேத்யம் செய்தால்
தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

இச்சா சக்தி அதாவது துர்க்கை வீரத்தின் தெய்வம், சிவப் பிரியை, வெற்றியின் தேவதை, எருது உருவம் கொண்ட மகிஷன் எனும் அரக்கனை ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். அவனை வதம் செய்த நாளே "விஜயதசமி". மகிஷனை வதைத்ததால் "மகிஷாசுர மர்த்தினி" . நவ துர்க்கை வழிபாடு நவராத்திரியில் சிறப்பானது.கொல்லூர் செல்லும் வழியில் தான் கட்டில் வன துர்க்கை (துர்கா பரமேஸ்வரி ) அருள் பாலிக்கிறாள். மிகவும் சாநித்த்யம் படைத்த கட்டில் துர்க்கைக்கு நிமிஷா நிமிஷம் சூட்டைத் தணிக்க இளநீர் அபிஷேகம் செய்வதைக் கண்கூடாகக் காணலாம் .

கிரியா சக்தி செல்வத் திருமகள், லட்சுமி. மலரையொத்த மென்மையான அழகு நிரம்பியவள். செல்வத்தின் உறைவிடமே இவளின் இருப்பிடம், விஷ்ணுப் பரியை, பார்க்கடலில் அமுதத்துடன் உதித்தவள். சமுத்ரராஜனின் குமாரி. செந்தாமரையில் வீற்றிருப்பவள். திருச்சானூர் நாயகி. நவராத்திரியில் நாகாவது நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலக்ஷ்மிகளின் தரிசனம் அனைத்து கடாக்ஷத்தையும் நல்கும்.

ஞான சக்தி, ஆயக் கலைகளுக்கும் சகல கல்விக்கும் அதிபதி சரஸ்வதி..! வைரத்தின் பிரகாசம் கொண்ட ஸ்படிகம் போன்ற அறிவின் தன்மையைக் கொண்டவள். பிரம்மாவின் பிரியை.அஷ்ட சரஸ்வதியின் தரிசனம் பெற்று கடைசி மூன்று நாட்களும் வழிபட்டால்...கலைமகளின் பூரண கடாக்ஷத்தைப் பெறலாம்.

கூத்தனூர் சரஸ்வதியைத் தவிர ஆந்திராவில் இரண்டு இடங்களில், பாசார் மற்றும் பாசரா என்ற இடங்களில் மலை மீது சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகையும், ஸ்ரின்கேறி சாரதாம்பிகையும், கூட சரஸ்வதி தான். நவராத்திரியில் நீல சரஸ்வதியைத் தொழுதால் ஞானம் பெறலாம்.

கலைகளைத் தரும் தேவிக்கு சிலைகள் பஞ்சலோகத்தில் மூர்த்தம் வடிக்கும் சில்பிகளைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அத்தனை நேர்த்தியான வேளைகளில்....மெய்மறந்து ரசித்துக் கொண்டே நின்றவள்..அவர்களிடம் கேட்ட கேள்வி...எப்படீங்க எல்லாம் ஒரே மாதிரி அச்சில் வார்த்தாலும்..மேற்கொண்டு உளியின் செத்துக்கியும்...அதே நயத்தோடு வருகிறது..ஒவ்வொன்றும் ஒன்றை விட இன்னொன்று என்று கச்சிதமாக சிலா ரூபம் எடுக்கிறது என்று ஆவல் மேலிடக் கேட்டேன். அவர்கள் சொன்ன பதில்..." எல்லாம் அந்த சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் தாங்க...."என்று பதிலாகக் கேட்டதும்...."ஆம்..அவளின்று எது கலை...?" இதோ எழுத ஆரம்பிக்கும் போது அவள் நினைவால் தொடங்கினேன்..எண்ணமெல்லாம் எழுத்தாக அவளே முடிவு வரை நடக்கிறாள்.

வீரமும், கல்வியும், செல்வமும் ஆக இந்த முப்பெரும் சக்திகள் தான் இந்த புவனைதையே ஆளுகிறது...அதற்காக வருடத்தில் ஒரு ஒன்பது இரவுகள் இந்த மூன்று தேவிகளை ஒவ்வொரு நவராத்திரியிலும் மனம் நிறைந்த பக்தியோடும் கருணையோடும் துதித்து வரம் பெறுவோம்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

பஸ் ரோமியோக்கள்


Inline image 1

லேசாக தாமரையின் மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின் சுடர் தள்ளாடித் தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

மெழுகு திரியின் ஒளியில் தாமரை குனிந்து உட்கார்ந்து கொண்டு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த பக்கவாட்டு முகம் அந்த ஒளியில் தங்க நிலவாக தக தக வென்று மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி.

காந்தி ஜெயந்தின்னு இன்று காலேஜ் லீவு.அதனாலத் தான் இந்த ஒருநாளாவது அந்த பஸ், அந்தக் கண்டக்கரோட ஜொள்ளுப் பார்வையிலிருந்து தப்பினோம்...எங்க உட்கார்ந்தாலும் வந்து நின்னு பார்த்துக்கிட்டு, காரணம் இல்லாமல் சிரிச்சுக்கிட்டு, வேணுமுன்னே தினம் வந்து பஸ் பாஸை வாங்கிப் பார்த்து திருப்பிக் கொடுப்பது கொடுக்கும்போது வேண்டுமென்றே விரலைத் தொடுவது.. உற்றுப் பார்ப்பது, .அந்தாள் பண்ற லொள்ளுக்கு அளவே இல்லை. அம்மாகிட்ட மட்டும் வந்து சொன்னேன்....அம்புட்டு தான். சரோஜாவா.... கொக்கா...ன்னு அம்மா வந்து பஸ்ஸில் ஊடு கட்டிடும் பெறவு அந்த ஆள் நான் இருக்கும் பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டான்.நினைத்தவுடன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள்.

எப்படியோ இன்னைக்கு தப்பியாச்சு...மறுபடி நாளைக்கு அதே பிரச்சனை தானே இருக்கும். அதுக்குத்தான் இந்த அம்மா கிட்ட ஒரு ஸ்கூட்டி வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கேன், நினைக்கும்போதே மனத்தால் ஸ்கூட்டியை ஒட்டிக் கொண்டு காலேஜ் வரைக்கும் போனாள்..அங்கிருந்த தன் தோழிகளுக்குபெருமையுடன். கையசைத்தாள். எப்படியாவது அம்மா ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துச்சுன்னாப் போதும். யோசித்துக் கொண்டே இருந்தவள். அச்சச்சோ...தப்பாப்போச்சே....என்று நாக்கைக் கடித்து கொண்டு அழிரப்பரை எடுத்து நோட்டில் எதையோ அழிக்கிறாள்.

வெளியில் அந்தி சாய்ந்து வானம் சிவந்து கொண்டிருந்தது.....மாடுகளுக்கு புல்லுக் கட்டை பிரித்து வைத்து விட்டு அங்கிருந்தபடியே தன் மகளின் அழகை ரசித்த சரோஜா . மனதுக்குள் "தாமரை நல்லாக் குதிரை மாதிரி வளர்ந்திருச்சு....கலியாணத்துக்கு நிக்கிது.... என் வவுத்துல வந்து பொறந்த தங்கம். ஆண்டவனா பார்த்துப் போட்ட பிச்சை.இது மட்டும் இப்ப இல்லையின்னா நான் பொறந்த இந்தப் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போயிருக்கும்..என்று நினைத்துக் கொண்டாள் .இந்த எட்டுப்பட்டி கிராமத்திலயும் என் மவ தாமரைக்கு ஏத்தவன் எவனுமில்லை. இங்க இருந்துக்கிட்டு நான் இவளுக்கு மாப்பிள்ளை தேடினால் சுத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு பய தேறமாட்டானுவ .இன்னும் எம்புட்டுப் பணம் சேக்கணுமோ...?

மோட்டார் ரிப்பேர் மெக்கானிக்கு, பஞ்சர் ஒட்டறவன், எலெக்ட்ரீசியன், காய்வண்டி தள்ளறவன்....இவனுவ தான் வந்து சிக்குவானுங்க.குடிகாரப் பயலுக,இவங்க கண்ணுல இருந்து நழுவி மவள நல்லாப் பெரிய படிப்பு படிக்க வெச்சி... பெரிய ஊருக்குப் போயி ஒரு மாட்டு லோன் தர பாங்கு மேனேஜரா பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுப்பேன். அதுக்குத் தானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி பணத்தை குருவி சேக்கிராப்பல சேதது வேச்சுக்கிருக்கேன். மொதல்ல படிப்பு முடியட்டும்.பெறவு தான் கல்யாண வேட்டை..!

நினைத்துக் கொண்டே முந்தானையால் முகத்தைத் துடைத்தபடியே வந்து தாமரை அருகில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டு இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்த வெத்தலையை எடுத்து மடியில் துடைக்கிறாள்...சரோசா.


தாமரை...உன் மேல அவுகளுக்கு...அதான் உன்னோட அப்பாருக்குத் தான் எம்புட்டு ஆசை தெரியுமா? நீ இப்படி வளர்ந்து இளங்குமரியா நிக்கிறதப் பார்க்க நான் தான் கொடுத்து வெச்சிருக்கேன். இப்படி அல்பாயுசுல போயி நம்மள அல்லாட வெய்ப்பாகன்னு கனவு கூடக் காணலியே.

தாமரை அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு....ம்ம்...இன்னிக்கு .நீ சொல்லு நான் கேட்கிறேன்...என்று சொல்லிக் கொண்டே எழுதலானாள் .

என் ஆத்தா அன்னிக்கு என் மவ சரோசாவுக்கு டவுனுல தான் மாப்பிளை பார்ப்பேன்னு செவகாசிக்கு இட்டுட்டு வந்து அங்க ஒரு காலண்டர் கம்பெனி அய்யாதுரை கிட்ட சொல்லி வச்சு உன் அப்பனுக்கு என்னிய கட்டி வெச்ததுக்குப் பெறவு தான் முடியாமே....கொள்ளாமே... ஆத்தா மாரடைப்புல செத்துப் போச்சு . சேர்ந்தாப்போல இவிகளும் சிவகாசி வெடி விபத்துல எப்படியோ சிக்கி சாம்பலாகிப் போயிட்டாரு .. அன்னிக்கே என் வாழ்க்கையும் கருகிப் போச்சுது. என்னமோ அன்னிக்கு நீ பச்சக்கொளந்த. இன்னிக்கும் என் கண்ணுக்குள்ளியே நிக்கிறவ.

அதுக்குப் பெறவு தான் அந்த ஊரே வேண்டாம்னு என் அம்மா ஊட்டுக்கே வந்து கெடந்தேன். தெரிந்த சாதி, சனங்க மத்தில கஞ்சித் தண்ணி குடிச்சாக் கூட ஒரு கெவுரவம் தான். என்ன சொல்றே....இப்போ... ..இந்த குச்சு வீடும், கொட்டகையும், பத்து மாடுகளும் ஆடுகளும் தான் நம்ம சொத்தும் சுகமும்...எல்லாமும்...ஒத்தையாளா இப்படி நிமிர்ந்து நிக்கையில மனசுக்குள்ள ஒரு கருவம் வரத்தேன் செய்யிது .என்னாங்கரே ..? என்று வெத்தலையை மடித்து வாய்க்குள் திணித்துக் கொள்கிறாள் சரோசா.

செவகாசியில இருந்து வந்தேனே...இங்க அக்கம் பக்கத்துல ஒருத்தங்களுக்குத் தெரியாது. உங்கப்பாரு செத்துப் போன வெசயம் .எனக்கு நானே போட்டுக்கிட்டேன் முள்ளுவேலி.என் வாயும் வார்த்தையும் தான் என்னோட முள்ளுவேலி.என்னைச் சுத்தி எப்பவும் நெருப்பு கங்கு மாதிரி வார்த்தையை மூஞ்சீல வீசத் தயாரா வெச்சிருப்பேன். ஒரு பய நெருங்க மாட்டான் என்னிய .!

இப்போ நீ....இந்த சரோசா மவ தாமரை..தாமரைப் .பூ கெணக்கா நிமிர்ந்து நிக்கிற..ஊருல இருக்குற கருவண்டு எல்லாம் வந்து காவாலித் தனம் பண்ணி மொய்க்க ஆரம்பிக்கும்...சாக்கிரத...இப்பமே சொல்லிப் புட்டேன். காலேசுக்குப் போனமா..வந்தமான்னு இருக்கோணம். எதாச்சும் வில்லங்கத்தை கொண்டுட்டு வந்து வீட்டாண்ட நிருத்தினே...அம்புட்டுத் தான். பெறவு...ஆத்தாளும் மவளும் ஆவியா அலையுறாங்கன்னு ஊரெல்லாம் கதை சொல்லும்படியா ஆயிறும் .

இதைக் கேட்டதும்..தாமரை நிமிர்ந்து அம்மாவை முறைத்து ஒரு பார்வை பார்க்கிறாள்..!

என்னாத்துக்கு இப்போ அப்படி ஒரு பார்வை பார்க்கிறே.?

ம்ம்....ஒரு தாய் பேசுற பேச்சா பேசுற நீ...?

அடிபோடி....பட்டவளுக்குத்தேன் தெரியும்...தேள் கொட்டின வலி . என் ஆசையை நீ அணைச்சீன்னா....உன்னியவும் நான் அழிச்சுருவேன்னு சொல்ல வந்தேன். எப்படியோ உன் தலைக்குள் இது ஏறணம் ......அம்புட்டுத்தேன்...சொல்லிக் கொண்டே எழுந்தவள்...."இப்படி கரண்டு கொடுக்காம சத்தியாக்கிரகம் பண்ணுறாவுளே .."படிக்கிற புள்ளைங்க எப்படி படிக்கும்? ஒத்தை ஒத்தையா மெழுகு வர்த்தியை எம்புட்டு தான் ஏத்துறது. நேத்துக் கூட நூத்துக் கெணக்கா சனங்க ஒத்தை மெழுகு வர்த்தியை எரியவிட்டுத் தூக்கி புடிச்சுக்கிட்டு "போராடுவோம்...போராடுவோம்" ன்னு கத்திக்கிட்டே போனாங்க....என்ன போராட்டம் நடந்தால் என்ன நிலைமை என்ன மாறியாப் போச்சு.? அங்கன புயல்,இங்கன வெள்ளம் ன்னு சொல்றாப்பல இல்ல இருக்கு இங்க இப்ப இப்படி கரண்ட்டு கட்டு.இந்த இருட்டுக்குள்ளார என்னத்த சமையல் செய்து ....என்னத்த சாப்பிட்டு..! அலுத்துக் கொண்டே போகிறாள் சரோசா.

யம்மாவ்....அம்மா......யம்மாவ்....! என்று தாமரை போனவளைச் சத்தமாக அழைக்கிறாள்.

என்னாடி..இம்புட்டு நேரம் அங்கன தான உட்கார்ந்திருந்தேன்...அப்போ என்ன வாயில கொழக்கட்டையா வெச்சிருந்தே....இங்க வந்ததும் இந்தக் கத்து கத்தறே...!என்னா ...வேணும் .?நானே இந்த இருட்டுக்குல்லாற தடவிகிட்டு நிக்கிறேன்...இதுல இவ வேற...என்று சலித்துக் கொள்கிறாள்.

ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே....பட்டுன்னு கிளம்பிப் போயிட்ட...அதான் கூப்பிட்டேன்...!

அதான்...நீயும் ரோசாத்தோட்டமா வெளியில் நடந்து போறே....உன்னையே நீ பாதுகாத்துக்க வேணும். எவனையும் ஓரக்ககண்ணாலக் கூட ஏறெடுத்துப் பார்த்துப்புடாதே..போக்கிரிப் பயலுக...சாக்கிரத..!..எவன் எந்தக் கேள்வி கேட்டாலும் வாயே தொறக்காதே ...வெளங்குதா? பொழப்பத்தவனுங்க.....அலைவானுங்க....எவ கெடைப்பாள்னு ..! மாட்னா.அம்புட்டுத்தேன் ..ஏப்பம் விட்ருவானுங்க . பொழுதோட வீடு வந்து சேரு ...தெனம் என் அடி வவுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டுத்தேன்....அம்மாந் தொலைவுக்கு உன்னிய படிக்க காலேசுக்கு அனுப்புறேன்.வெளங்குதா.?

போதும்...போதும்....இப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்து என்ன செய்யப் போறே....உனக்குப் புடிச்ச ஒருத்தனுக்கு என்னிய கட்டி வெக்கப் போறே...அந்தாளு மட்டும் என்ன செய்யப் போவுது...? மூணு முடிச்சுப் போட்ட தெம்புல என்னிய அடக்கி வைக்கும்...உன்ன மாதிரியே பொத்திப் பொத்தி வீட்டுக்குள்ளாறயே வைக்கும்..அப்போ நான் எப்போ தான் இந்த உலகத்தைப் பாக்குறது? உன்னிய மாதிரி ரெண்டே ஊரு....குறிஞ்சிப்பாடியும் செவகாசியும் தான் உலகம்னு சொல்ல முடியும்.

எனக்கு நெறைய இடம் பார்க்கணும். நிறைய ஊரைப் பார்க்கோணும்.பலபேரோட பழகணும் ..! இதெல்லாம் என் ஆசை..!

வாயைக் கொஞ்சம் மூட்றியா ..! இந்த ஆசை வந்துச்சுன்னாலே பொட்டப்புள்ள சீரழிஞ்சுதேன் போவா...மொத்தல்ல உன் ஆசையை அடக்கு. அப்பத்தேன்...அம்புட்டும் சரியாவும். பெத்தத் தாய் சொல்லும் சொல்லுல இருக்குற நியாயம் அப்பப்ப வெளங்காது....! என்னிக்காவது அனுபவப்பட்டு அழுகும்போது மனசு இடிச்சு இடிச்சு சொல்லும்...!

ம்ம்ம்...எனக்கு நல்லா வெளங்கிருச்சு...! உன்னோட கூட்டு சேர்ந்தால்...இந்தப் பொட்டல் காட்டைத் தாண்ட மாட்டேன்னு..சொல்லியபடியே...கோபத்தோடு நோட்டை மூடி வைக்கிறாள் தாமரை.

சும்மாப் போனவளை இழுத்து வெச்சு வாயைப் புடுங்கி...இப்போ நீ வம்பு வழக்குறியே..சரோசா இப்போது தாமரையை அதட்டுகிறாள் . என்னமோ சொல்லப் போகுதாக்கும்னு பார்த்தால்...வம்புக்கு நிக்குது...!


யம்மா....நான் ஸ்கூல் படிக்கும்போது அரசு சைக்கிள் கொடுத்துச்சில்ல . உனக்கு தையல் மெஷின் கொடுத்துச்சி ! அதுல தானே நான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்தேன். இப்போ அரசு...லாப்டாப் கொடுத்துச்சு இல்ல... ஆனால் அதுக்கு இப்போ கரண்டு தான் இல்ல ! தையல் மெஷின் தூங்குது ! லாப் டாப் மேஜைக் கடியில் கிடக்குது. எனக்கு இப்ப ஒரு ஸ்கூட்டி தான் வேணும்......நீ இந்த ரெண்டு மாட்டை வித்துட்டா எனக்கு ஒரு ஸ்கூட்டி வண்டி ரெடி.

என்னத்த விக்க சொல்லுத....மறுபடியும் சொல்லு...கேப்பம்...

அதோ...அந்த ரெண்டு பசு மாட்டையும்...தான் .!சொன்னதும் அவள் மேல் எதிர்பாராமல் சுளீரென்று வந்து விழுந்தது....முருங்கைக் கொம்பு..

முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்த சரோசா....ஆத்திரத்தில்....இலையை உருவியபடியே..."இதுக தான் இப்போ நம்மக் காப்பாத்துதுக...இத்த வித்துப் போட்டு உனக்கு வண்டி...வாங்கி அதுல நீ ஏறி ஒட்டி எங்கே போயி பிச்சை எடுக்கப் போறேங்கறேன்..? பசுவ விக்கணுமாம் . நல்லா வக்கணையா சொல்லுறதப் பாரு..!

நான் தான் காலேஜே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன்...நீ தான் பிடிவாதம் பிடித்து சேர்ந்துக்கிட்டே . உனக்கு வர ஆசைக்கெல்லாம் நான் அகலக்காலு வைக்க முடியாது. அதான் பஸ் பாஸ் வாங்கி தாரேனில்ல.... அது போதும் போ. நான் என்ன வண்டியா ஒட்டிக்கிட்டு இருக்கேன்...எங்கிட்டுப் போனாலும் நடந்து போறேன்...தெரிஞ்சுக்க வண்டி வேணுமாம்...வண்டி..பெரிய ஜமீன் வீட்டு வாரிசு....!ஆனையைக் கூட வாங்கிறலாம்...அங்குசம்...அதான் வேளா வேளைக்கு பெட்ரோல் எவ ஊத்தறது...? கொஞ்ச விலையா விக்கிறது பெட்ரோலு . நம்ம வீட்டுல ஒத்தயாளு அதும் பொம்பளயாளு சம்பாத்தியம்டி....அதப் புரிஞ்சுக்கிட்டு பொழப்பைப் பாரு போ...

யம்மா....உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?

வரும்...வரும்...சமஞ்ச பொண்ண உலக வாட்டமே அறியாத மவளை வீட்டுல வெச்சுக்கிட்டு என் மொகரக் கட்டைக்கு நல்ல வார்த்தை அதான்...விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனாப்பல ...! என்று எரிந்து விழுகிறாள் சரோசா.

அடச்சை.....ஆண்டவனுக்குக் கண்ணில்லை...இப்படி திகில் பிடிச்சவ மடியில் என்னைக் கொண்டாந்து போட்டார் பாரு...தாமரை திட்டிக் கொண்டே எழுந்து வாசல் திண்ணைக்கு சென்று உட்காருகிறாள்.

அடியே....வேணும்னா மைசூர் மகாராஜாவுக்குப் பேத்தியா பொறந்திருக்க வேண்டியது தானே....நானா வேணாம்னு சொன்னேன்.....சரோஜாவின் குரல் பின்னாலிருந்து வந்து தாமரையின் தோளைத் இடித்தது..

கிராமத்துக் காற்று...இதமாக குளிர்ச்சியாக வந்து தாமரையின் முகத்தை தடவிச் செல்கிறது....அன்பாக.

தென்றலுக்கு அசைந்து ஆடும் அங்கிருந்த வேப்பமரத்தைப் பார்த்து ...."எனக்கு ஒரு வண்டி வேணும்னு கேட்டதுக்குப் பார்த்தியா....என்ன மாதிரியெல்லாம் பேச்சுக் கேக்க வேண்டியிருக்குதுன்னு .இந்த அம்மாவுக்கு என் மேல பாசமோ, அன்போ இல்லை....எப்பப் பாரு சிடு சிடுன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க....பேசாமல் உன்ன மாதிரி மரமா நின்னிருக்கலாம்...எங்கியும் போகாம ஒரே இடத்தில் நின்னாப் போதும்..." என்று முணுமுணுத்தாள்.

மரமும் சந்தோஷமாகத் தலையாட்டியது. திடீரென்று இரண்டு பச்சைக் கிளிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே...கீ... கீ... கீ... என்று சந்தோஷமாகப் பறந்து சென்றது.

இந்தப் பறவைகள் கூட அது இருக்கும் இடத்தில் எவ்வளவு சந்தோஷமா இருக்கு. எனக்கு மட்டும் ..இந்த வெறிச்சோடிக் கெடக்கும் கிராமம் அலுத்துப் போச்சு...மனசுக்குள் ஒரு தேடலோட எங்கியாவது போயிறலாம் போல இருக்குது.!..அதனாலத் தான் அம்மா மேல கூட கோவம் கோவமா வருது..பாவம் அவுங்க தான் என்ன செய்வாங்க....என்று நினைத்துக் கொண்டே...அம்மா ...அம்மா.....எனக்குத் தூக்கம் வருது..நான் தூங்கப் போறேன். என்று சொல்லிக் கொண்டே பாயை உதறி விரிக்கிறாள் தாமரை.

அவள் அம்மா வாங்கித் தராத ஸ்கூட்டியில் அவள் இரவு முழுதும் ஒய்யாரமாக ஒட்டிக் கொண்டிருந்தாள் கனவில்.

பறவைகளின் ஒலியோடும், சேவலின் "கொக்கரக்கோ" வும்...பசு மாட்டின் கழுத்து மணியின் "கிணி கிணி ..." சப்தமும்.....கூடவே..."ம்ம்மா...ம்ம்மா...என்று கத்தும் குரலுமாக கிராமத்துப் பொழுது புலர்ந்தது.

அவசர கதியில் காலை வேலைகளை முடித்துக் கொண்டு...காலேஜுக்கு கிளம்பும் மகளைப் பார்த்து வெள்ளன வந்துரு.. ..என்று குரல் கொடுக்கிறாள் சரோஜா.

ம்ம்...சரி...சரி..வந்திர்றேன்...தோளில் ஊஞ்சலாடும் புத்தகப் பையோடு கைகடிகாரத்தைப் பார்த்தபடியே "அச்சச்சோ நேரமாயிட்டுதே....பஸ் போயிருச்சோ?...மனம் பரபரத்தபடியே...இந்த ஒரு பஸ் தான் இந்த கிராமத்துக்கு உள்ளே வந்து போகுது. இத்தை விட்டா ரெண்டு மயிலு நடக்கணும்...அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு.இதெல்லாம் ஒரு ஊரு...இதெல்லாம் ஒரு பொழப்பு...இந்த நூற்றாண்டில் கூட இந்த கிராமம் எதுவும் மாறவே இல்லை..இன்னும் என் பாட்டி காலத்து போக்குவரத்து தான்.இங்க இருக்கற வயசானவங்க இன்னும் ரயில் வண்டியைக் கூட பார்த்ததில்லையின்னு சொல்லுவாங்க.எல்லாத்துக்கும் அஞ்சு மயிலு நடக்கணும்....நினைத்துக் கொண்டே எட்டி நடை போடுகிறாள். பனை மரம் தான் பஸ் ஸ்டாப்பு. அதன் அருகில் வந்து நின்று கொண்டு..." ஏய்..உன்னைத் தான் பஸ்சு போயிடுச்சா? என்று கேட்கிறாள்..

பின்பு அண்ணாந்து பார்த்துவிட்டு...இதுக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு...?பண மரமா வளர்ந்து நிக்கிறியே தவிர வாயத் தொறந்து பதிலா சொல்ல மாட்டேங்குற.... என்று அந்த மரத்தை ஒரு தட்டு தட்டுகிறாள் தாமரை.

அவளுக்கென அந்த கிராமத்தில் மரங்கள், குட்டிச் சுவரு, கல்லு மண்ணு, குளம், குருவி..குட்டை..இதெல்லாம் தான் தோழிகள்..அவள் வீட்டு வாசல் மரம் தான் அவளது ஆத்மார்த்தமான தோழி.சந்தோஷமோ , துக்கமோ...அவள் அந்த மரத்தோடு நின்று பேசிக் கொள்வாள்.அதை விட்டால் இந்த பஸ் ஸ்டாப்பு பனை மரம் தான்.

அவசர அவசரமாக இன்னும் சில தெரிந்த முகங்கள்.வருவதைப் பார்த்ததும்..அவளுக்கு ஒரு நிம்மதி..ம்ம்..இன்னும் பஸ்ஸே வரலை...நினைத்தவுடன்...தூரத்தில் உறுமிக்கொண்டு பஸ் வரும் சத்தம் கேட்டதும்..இவளும் ஏறுவதற்குத் தயாரானாள் .

பூதாகாரமாக வந்து இவள் அருகில் உரசிக் கொண்டு நின்றது பஸ்.

இவள் படி ஏறும் போதே..."ம்ம்..ஏறு...ஏறு...ஏறு...என்று சொல்லிக் கொண்டே இவளுக்கு நேராக எதிரே வந்து நின்று கொண்டான் அந்த கண்டக்டர் கமலக் கண்ணன்.அவன் முகத்தில் இவளைக் கண்டதுமே ஒரு பிரகாசம்.ஒரு மந்தகாசப் புன்னகை.

தரையிலிருந்து தாவி வானுக்கு ஒரு வெண்ணிலா ஏறியது போலிருந்தது அவனுக்கு.

பின்பு "போலாம்... ரைட் " என்று நீண்ட விசில் அடித்தவன்..கையோடு சென்று அங்கிருந்த டேப் ரெக்கார்டரை போடுகிறான்...அதிலிருந்து அவளுக்காக அவன் முன்பே செட் பண்ணி வைத்திருந்த பாடல் பஸ்ஸை ஒரு உலுக்கு உலுக்கியது..

"சௌக்கியமா கண்ணே...
சௌக்கியமா....சௌக்கியமா...கண்ணே...
சௌக்கியமா...சௌக்கியமா..."

என்று உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தது. அதன் பின்பு அந்த பஸ் யாருடைய அவசரத்துக்கும் ஓடவில்லை...நடந்து போனது போலிருந்தது அவளுக்கு.

"போச்சுடா...இந்த ஜொள்ளுப் பார்டி கிட்ட இருந்து தப்பிக்கணும்...இவள் இடம் பார்த்துக் கொண்டு நிற்க...உள்ள போ...உள்ள போ..என்று கடமைக்காக குரல் கொடுத்தாலும்...கண்களும், கைகளும் சாடையாக அவளுக்கான அந்த முன்பக்க சீட்டைக் காண்பித்து அங்கே உட்காருங்க...என்றது.

சரி..போனால் போகட்டும் என்று அவன் கை காட்டிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டவள்.ஜன்னல் வழியாகப் பார்வையைத் திருப்பி...இன்னைக்கு என்ன ஆனாலும் இந்தப் பக்கத்தை விட்டுத் முகத்தைத் திருப்பக் கூடாது. ஆளப் பாரு...பாட்டுப் போடறான்...சௌக்கியமா?ன்னு கேட்டு...நேத்து ஒரு நாள் வரலையின்னா...இப்படியா? எல்லாம் குசும்பு.

ஒரு மனது திட்டிக் கொண்டிருந்தது.இன்னொரு மனமோ...


சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி..!

கூடவே பாடிக்கொண்டிருந்தது.

திரும்பவே கூடாது என்ற வைராக்கியம் இருந்தாலும்....பொறுமையை இழந்து...கொஞ்சம்...சீக்கிரமாப் போங்க....காலேஜுக்கு லேட்டாகுது...என்று டிரைவரைப் பார்த்து சொல்கிறாள்.


"சீக்கிரம் போயி எங்க முட்டணும்...காலேஜு தானே எல்லாம் போகலாம்...என்கிறான்...அவன் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு.

திரும்பியவள்..நினைத்துக் கொள்கிறாள்.."இந்நேரம் நம்மகிட்ட மட்டும் ஒரு ஸ்கூட்டி இருந்துச்சுன்னா.. காலேஜுக்கு ரெண்டு வாட்டி கூட போயிட்டு வந்திருப்பேன்...என்ன ஜொள்ளுப் பார்ட்டி இது....வேணுமின்னே பண்ணுதுங்க.

தங்கச்சி........என்ன படிக்கிறாப்புல...? டிரைவர்...ஓட்டிக் கொண்டே இவளைப் பார்த்துக் கேட்க.

நான் தங்கச்சியா இவனுக்கு ? இவன் எப்போ பிறந்தான் என் கூட ?

இவள் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி..."ம்ம்ம்...ஏன்..?" என்று பதில் கொடுக்க.

அருகில் வந்து நின்ற கண்டக்டர் " பாஸ்..பாஸ்...எடு.."என்று அவளிடம் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறான்

இவளும்...குனிந்து புத்தகப் பையில் கையை விட்டுத் தேடும் போது ...

"தலையைக் குனியும் தாமரையே...
உன்னை எதிர்பார்த்து...உள்ளங்கைகள் வேர்த்து..."

என்று ஆரம்பிக்கிறது பாடல்...

அடப்பாவி...இதுக்கும் ஒரு பாட்டா...?அவளுக்குள் பொங்கி வந்தது கோபம்...இருந்தாலும்..அடக்கிக் கொள்கிறாள்.

சே....இன்னும் எத்தனை தூரம் போக வேணும்..அதுக்குள்ளே இவன் பாட்டுப் போட்டே என்னைப் பைத்தியமாக்கிடுவான்..நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு பாட புத்தகத்தை எடுத்து அதில் பார்வையை ஓட விடுகிறாள்..இருந்தும் மனசு அவளை விட்டு வெளியே குதித்து நிற்கிறது.


"பூவாடைக் காற்று...ஜன்னலைச் சார்த்து...
உத்தரவு தேவி...தத்தளிக்கும் ஆவி..."

பாடலோடு சேர்ந்து அவனின் குரலும்...ஒலிக்க.....ஜன்னலருகில் அமர்ந்த இவளுக்கு கோபம் கோபமாக வருகிறது.
"இவன....என்று நற நற வென்று பல்லைக் கடித்துக் கொண்டு "இன்னும் கொஞ்சம் சீக்கிரமாப் போங்க...நேரமாகுது..." என்கிறாள்.

உடனே...கண்டக்டர்...."நீயும் நானும் தான் காலேஜு வாசலை மிதிக்கலை....நீ வண்டி ஸ்டியரிங்கைக் கட்டிக்கிட்ட..நான் தோல்ப் பையைக் கட்டிக்கிட்டேன்...சீக்கிரமாப் போப்பா....என்று குரல் கொடுக்க...பஸ்சுக்கும் ரோஷம் வந்தது போல வேகமாகிறது.

பஸ்ஸில் அமர்ந்த சிலர்...விடலைப் பசங்க கையில் பஸ்ஸைக் கொடுத்தால்....என்னமா.... லூட்டி அடிக்குறானுங்க பாரேன்....இவனுங்க இப்படி இருந்தா....எப்படி விபத்து நடக்காம இருக்கும்..என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

எங்கே கண்டக்டர் காதில் விழுந்துவிட்டால்...பிறகு "எறங்குய்யா..." என்று வனாந்திரத்தில் எறக்கி விட்டுப்புட்டா என்னாவது.. என்ற பயம் தான்.என்ன செய்ய.?..அமைதியாக பஸ் சென்று கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப்பு காலேஜு..வாசல்.....எறங்கு...என்று சத்தம் கொடுத்தபடியே நீண்ட விசிலை அடித்து இவளை ஆசையோடு பார்க்கிறான் அவன். கூடவே பாடலும் மாறி ஒலிக்கிறது.


காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து -
கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்...


அடுத்து....வந்தப் பாடலைக் கேட்டபடியே...எப்படியெல்லாம் மெசேஜ் கொடுக்கிறான் பார்...என்றெண்னியவள் அவளது காலேஜு ஸ்டாப் வந்ததும் இறங்கி நடக்கிறாள்...மனதுக்குள்.."காத்திருப்பானாம்..கமலக் கண்ணன்...."என்று சொல்லிக் கொண்டே பஸ்சின் உள்ளே பார்வையை கொண்டு செல்ல...அந்த ஜன்னல் வழியாக அந்த கண்டக்டரின் கண்கள் இவளையே மொய்த்துக் கொண்டிருந்தது.அவனது ஒரே பருந்துப் பார்வையில் இவள் மனம் பல விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு இதயத்தை இழுத்து இடம் மாற்றி விடுவது போல திடுக்கிட்டாள் தாமரை. இவள் நடக்க நடக்க...இவளது மனத்தைத் தூக்கி கொண்டு அந்த பஸ் தூரத்தில் புள்ளியாக மறைந்தது.

காலேஜுக்குள் நுழைந்ததும்..தோழிகளின் அரட்டை, பாடத்தில் கவனம் என்று பஸ்ஸை சுத்தமாகவே மறந்து போயிருந்தாள். தாமரை. மாலையில் வீடு திரும்பும் நேரம் வர வர....பஸ்ஸின் நினைவும் வந்தது.கூடவே அவனது நினைவும் மெல்ல வந்து எட்டிப் பார்த்தது. "காத்திருப்பான்..கமலக் கண்ணன் ." என்ற பாடல் வரிகள் நெஞ்சோடு வந்து நின்றது.

இப்போ அவருக்கு ட்ரிப் டூட்டி இருக்குமோ.? ..இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் தாமரை.

இன்று காலை வரை கூட அவனது பார்வையில் எரிச்சலானவள்....அவன் அவளைக் பார்வையால் தொடருகிறாள் என்பதை உணர்ந்தவள்....இனிமேட்டு பஸ்சிலே ஏற மாட்டேன்...இந்தக் கண்டக்டர் ஆள் மோசம்....யாரை...யார் பார்த்து ஜொள்ளு விடுவது.? அம்மாகிட்ட சொன்னா அம்புட்டுதேன் பல்லைப் பேத்துருவாங்க...என்றெல்லாம் மனசில் கரித்துக் கொட்டியவள் இன்று மெல்ல மெல்ல அவன் பெயர் என்னவாயிருக்கும்...ஒருவேளை கமலக் கண்ணனோ...? என்று யோசிக்கும் வரை சென்று விட்டாள் .

நாள் ஆக நாள் ஆக இவளின் மனத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே அவனும் இவள் ஏறும் போதெல்லாம் இவளுக்காகவே பதிவு செய்த பாடல்களை ஒலிக்க விட்டு இவளது முக பாவனையை பல பேர் பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான் இவள் முகம் பஸ் ஏறும் போதே பிரகாசத்தை முகத்தில் மாட்டிக் கொள்ளும்..

ஓரக் கண்ணால் பார்ப்பதும்..தலையைக் ...குனிந்து சிரிப்பதும், கொஞ்சல் பார்வை பார்ப்பதும், பஸ் பாஸ் கொடுக்கும் சாக்கில் சாக்கிலட்டு கை மாறுவதுமாக இவர்களது "காதல் கொண்ட மனம்" படும் அவஸ்தைகளை முகம் எழுதி எழுதி அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தது.

இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இதை கவனித்தாலும் கவனிக்காதவர்கள் போலவே ஜாக்கிரதையாக தெரியாமல் கவனிக்கத் தொடங்கி விட்டனர்.அவர்களுக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு.

வழக்கம் போலவே வீட்டுக்குள் வந்து விட்டாலும்...இவள் மனம் மட்டும் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.இரவும் பகலும். இன்றும்..அவள் இறங்கும் போது ஒலித்த பாடல் வரிகள் வீட்டுக்கு வந்தும் .....

"மனசு தடுமாறும்...அது நெனச்சா நெறம் மாறும்....
பாறையில.... பூ மொளைச்சு பார்த்தவுக யாரு,,,,?
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..."

என்று வீடு வந்ததும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள் தாமரை.

என்னாதுடி பாட்டு இது.....சாயங்கால வேளையில....வெளக்கு வச்சி சாமிக்கு நாலு பாட்டு பாடாம....எதுக்கு ஆயுசு நூறு...? என்ற சரோஜாவின் கேள்வி தாமரையின் வாய்க்குப் பூட்டு போட்டது.

ஒரு விதத்தில் இந்த இரண்டு வாரத்தில் இவள் மறுபடியும் வண்டி வாங்கித்தா என்று கேட்கவே இல்லை நல்ல வேளை ..

ஒரு வேளை மறந்து போச்சா? இல்ல...அம்மா கஷ்டப் படுதே...ன்னு புத்தி வந்து பேசாமல் இருக்காளா...எது எப்படியோ நாமாக வாயைத் தெறக்க வேண்டாம். இப்பப் போறபடி போகட்டும்...தாமரை இப்பல்லாம் சந்தோஷமாத்தேன் இருக்கா. என்கிட்டக் கூட எந்த வம்பும் வளர்க்கல .அடியேய்.....தாமர.....நேத்து என்ன நடந்துச்சுன்னு நீ சேதி கேட்டியா..?


என்னவாம்..நான் எதையும் கேட்கலை...சொல்லிக் கொண்டே வேப்ப மரத்தின் அருகில் சென்று நின்று கொண்டாள் . இன்று அவளுக்கு அதோடு பேச நிறைய விஷயங்கள் இருப்பது அம்மாவுக்கு எப்படித் தெரியும்?

உன் வயசு தான் இருக்கும் அந்தப் பொண்ணுக்கு.ராத்திரி கரண்டு வேற இல்லயா... வேலைக்குப் போயிட்டு பஸ்ஸை விட்டு எறங்கி தனியா ஊட்டுக்கு வார வழியில, இருட்டுல ..யாரோ நாலு பயலுவ அவளை மடக்கி கடத்திக் காருல தூக்கிப்போட்டுகிட்டு....வயக்காட்டுக்கு போயி நாசம் பண்ணிட்டானுவுங்க....அத்தோட நிக்காம..இன்னும் ரெண்டு பேரு ஆட்டோல வந்து படு பாவிங்க...ஆறுபேரு சேர்ந்து இந்தப் பச்சை புள்ளைய துவைச்சுப் போட்டுட்டு...வெளில சொன்னே....குடும்பத்தோட வெட்டிப் போடுவேன்னு பயமுறுத்திட்டு போயிருக்கானுங்க..நாசமாப் போறவுனுங்க ...! அந்தப் பொண்ணு வெள்ளன கருக்கலோட வீட்டுக்குப் போயி அழுதிருக்கு...ரெண்டு நாள் செண்டு தான் போலீசுக்குப் போயிருக்கு....எவ்வளவு கொடுமை...பெத்த வயிறு எப்படி துடிக்கும் ?பொம்பளப் பிள்ளைங்கன்னா கிள்ளுக் கிரியாப் போச்சு இவனுங்களுக்கு....என்று ஆத்திரத்தை கொட்டிக் கொண்டிருந்தாள்.

அடியே....நீ சாக்கிரதையா சூதனமா இருந்துக்கடி....உலகம் கேட்டு நாசமாப் போச்சு....பொம்பளப் பிள்ளைக்கு பாதுகாப்பே இல்லை...பெறவு போலீசு வந்து என்னத்த நொட்ட ..?வவுத்துக்கு சோறு போடற எடம் வயக்காடு....அந்தப் புனித பூமியையும் சேத்து சிதைச்சிருக்கானுங்க ....காவாலிப் பசங்க..!பூமாதேவி சும்மா விடுவாளா?


அந்தம்மாவுக்கு என்னா...? தோட்டத்துல வாக்கிங்கு போவும்...இங்க எவ மக சீரழிஞ்சா என்னா..எவன் எவளோட தாலிக்கொடியை அறுத்துக்கிட்டுப் போனா என்னா...இருட்டுல தானே இம்புட்டுக் களவாணித் தனமும் நடக்குது...
ஆனாக் கூட கரண்டு தராம சத்தியாகிரகத்தப் பாரு....எங்க காலத்துல இப்படியா இருந்துச்சு...? படிக்கிற புள்ளங்க அம்புட்டும் ஃபெயிலாயிடும் பாரேன்....!சொல்லிக் கொண்டே மகளைப் பார்க்கவும்...தாமரை வேறு ஏதோ நினைவில்....மரத்தோடு சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

நீ என்னாடி...நான் இம்புட்டு சொல்லுதேன்.....நீ எத்தையோ பறி கொடுத்தவ மாதிரி அங்கன என்னத்த பார்த்துக்கிட்டு நிக்கிறவ ?

மிக அருகில் வந்து அதட்டிய குரலைக் கேட்டு ஆடிப் போனாள் தாமரை...

ம்ம்ம்....சுயநினைவுக்கு வந்தவளாக.....சொல்லுங்க மிஸ்...என்று உதறலோடு சுதாரித்துக் கொள்ள.

அடடா.....காலேசு நியாவவமா...இல்ல அங்கியும் இப்படித்தேன்.....கவனிக்காம இருந்துபுட்டு டீச்சரம்மாட்ட திட்டு வாங்குவியா?

ஒரு ப்ராஜெக்ட் வேலை..ம்மா..உனக்கு சொன்னாப் புரியாது.அத்தப் பத்தி தான் யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். ச்சே....இப்போ அதெல்லாம் மறந்து போச்சு எல்லாம் உன்னால..!

ம்குக்கும்....இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை...ஆ...ஊ...நா என் தலையில கல்லை ஏத்து.....வயசுப் புள்ளைக்கு என்னாத்துக்கு மறதியும்...சோம்பலும்ன்னேன்.

சரி..நாளைக்கு நானும் டவுனுக்குப் போவோணம்....மாட்டு லோனுக்குப் பணத்தைக் கட்டிப்போட்டு புண்ணாக்கு வாங்கியாரோணம் ...கருக்கல்ல கெளம்பிருவேன்...இப்பமே சொல்லிட்டேன்.

இவளுக்குத் திக்கென்றிருந்தது....என்கூடவா நீ வரப்போறே ? உள்ளுக்குள்ளே திக் திக் என்றது...

வந்தாத்தான் என்னவாம்...? ஆத்தான்னு சொல்ல வெக்கமாருக்காமா..?என்றவள் மேற்கொண்டு பேசாமல் உறங்கிப் போனாள்அடுத்த நாள் சொன்னது போல பஸ் வந்ததும்...சரோஜா பஸ்ஸில் ஏறும்போது...

ஏய்....கெளவி...சீக்கிரமா ஏறு.....காலேஜு பொண்ணுங்க ஏற வேணாம்...இப்படி எடத்தை அடைச்சுக்கிட்டு ...கண்டக்டரின் குரல்....தாமரைக்கு திடுக்கிட வைத்தது..

க்கும்....கோடாலிக் கொண்டையும்....வாயில வெத்தலையும் கண்டா...உன் கண்ணுக்கு கெளவியாத் தெரியரனாக்கும்....

அச்சச்சோ ..இது என் அம்மா....ன்னு இவருக்குத் தெரியாதே.......! போச்சுடா....இன்னைக்கு இந்த பஸ்சுல என்னக் கூத்து நடக்கப் போவுதோ... பேசாமல் பின்னாடி போயி உட்கார்ந்திரலாம்...என்று எண்ணி நகர்ந்தவளை....

அடியே...தாமரை...இங்க வந்து உடகார்ந்தா என்னா ? என்ற சரோஜாவின் குரலில் கண்டக்டர்..எப்புடி கூப்புடுது பாரு...என்னவோ இது தான் பெத்துப் பேருவச்சா மாதிரி..என்று முணுமுணுக்க ...

இந்தா ....டிக்கெட்டு எடு ...என்று சரோஜாவை அதட்டிவிட்டு அவனின் கண்கள் தாமரையை மொய்த்தது.

இது தான் சாக்கு என்று...தாமரை...இந்தாங்க...இது என் பஸ்பாஸ் ...அப்படியே என் அம்மாவுக்கும் ஒரு டிக்கெட்டு...என்று சொல்லிக் அருகில் சைகை காட்டி காசை நீட்ட...!

ஷாக் அடித்த கண்டக்டர் தூக்கி வாரிப் போட...அன்று தன் "காதல் வாகனத்தை" ரேஸ் குதிரையைப் போல பறக்க வைத்தான்.

பாட்டெல்லாம் பத்திரமாப் போட்டான்..ஜாக்கிரதையாக சரோஜா கண்ணில் பட்டுவிடாமல் தன்னை மறைத்துக் கொண்டான் கண்டக்டர்.கமலக் கண்ணன்.சிறிது நேரத்துக்கு முன்னால் இருந்த சவுடால் எல்லாம் அவனை அம்போ அரோகராவென்று விட்டு விட்டுப் போயிருந்தது .

நிம்மதிப் பெருமூச்சில் தாமரை காலேஜு ஸ்டாப்பில் இறங்கினாள் .அத்தனை நேர இறுக்கம் வெளியில் வந்ததும்....பறந்தது. உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தாள்.சரோஜா பாங்கு வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டமே இல்லை. என்ன வெய்யில்...என்ன வெய்யில்...இந்தாத்தா கொஞ்சம் நவுந்து தான் உட்காரேன்...அருகில் உட்கார்ந்திருந்தவளை நகரச் சொல்லி நன்றாக உட்கார்ந்து கொண்டவள்...ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்க முடியாமல்...."இந்தப் பாட்டும் பவுசும் யாரு கேட்டா உங்க கிட்ட...அணைங்க தம்பி..பஸ்ஸை விட்டு இறங்கும்போது தலைவலியோட இறந்கோணமாக்கும் ...! சலித்துக் கொள்கிறாள்.

இதுங்களுக்கெல்லாம் பிரச்சனை ஜாஸ்திடா....அதுங்க டேஸ்டே....தனி.என்று டிரைவர் மெதுவாகச் சொல்லவும்...பாட்டு நிறுத்தப் படுகிறது

நீண்ட நேரம் காலியாகக் கிடந்த டிரைவர் அருகில் இருக்கும் எதிர்புற சீட்டில் அடுத்த ஸ்டாப்பில் ஒரு இளவயது பெண் ஏறி அமரவும்...பஸ் வேகத்தை விடுத்து மிதந்தது . சிறிது நேரத்திலேயே அந்த காதல் வாகனத்தில் அவர்களுக்கு மட்டும் புரியும் மௌன பாஷைகள்...அங்கிருந்த சிலருக்கும் புரிய ஆரம்பித்தது.

தனக்கு அருகில் அமர்ந்திருந்தவள் இதை நோட்டம் விட்டு "என்ன ஜன்மங்கள்..பொது இடம்னு கூடவாப் புரியாது....வீட்டில் அம்மா அப்பா கஷ்டப் பட்டு வயசுப் பொண்ணுகளை வேலைக்கும், படிக்கக் காலேஜுக்கும் அனுப்பினா....இதுங்க வசதியா டிரைவர் சீட்டுப் பக்கம் உட்கார்ந்துகிட்டு அவன் இவளைப் பாக்குறதும்...சைகையில பேசுறதும்.ஒரே அலம்பல் பண்ணுதுங்க..அவனுங்களும் பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு கடைசீல ஆளக் கவுத்துருவானுங்க...!

போன மாசம் எங்கூட்டு பக்கத்து ஊட்டுல அவுங்க மக இப்படித் தான் ஒரு கண்டக்டரோட ஓடிப் போயி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிச்சு நல்லாப் படிக்கிற பொண்ணும்மா.இந்தப் பயலுவ.....படிக்காமக் கொள்ளாம....பஸ்ஸை ஒட்டிக்கிட்டு கன்னாப் பின்னான்னு பாட்டைப் போட்டு பொண்ணுங்கள சைட் அடிச்சு, கரெக்ட் பண்ணி...சொகுசா பெரிய எடத்துப் படிச்ச பொண்ணுகளா பார்த்து காதல்...ன்னு சொல்லி ஏமாத்தி கலியாணம் கட்டிக்கிறானுங்க...

இல்லாக்காட்டி எவ இவனுங்களுக்கு படிச்ச பொண்ணக் கொடுப்பா...? ஒழுங்காக் காலேஜுக்குப் போன பொண்ணு நேரா சுவாமி மலையில போயி கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நின்னுச்சாம்..அந்தம்மா ஒரே அழுது புலம்பல்..பாவம் பின்ன கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி இல்ல ஆவுது...இப்போவே இங்க பாருங்க...என்று கண்ணைக் காட்டினாள் .

சரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...யாரோ தன் தலையில் ஆணி அடித்து இறக்கியது போலிருந்தது....கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்...இப்படியா நடக்குது கதை. என்று அந்தப் பெண்ணையே மெளனமாக பார்க்க ஆரம்பித்தவள்...பக்கத்தில் அமர்ந்தவள் சொன்னது சரி தான் என்று புரிந்ததும்...

." இந்தாப்பா...கண்டக்டர்....ஏன்னா டிரைவர் பா இவன்...வண்டில ஏறின பொண்ணப் பார்த்து இந்த சிரிப்பு சிரிக்கிறான்...வண்டியை ஒட்டாமே உருட்டுறான்...என்னாது...லவ்வா..?

நாங்க வயித்தக் கட்டி வாயை கட்டி பொண்ணுங்கள கெராமத்தில இருந்து டவுனுக்கு படிக்கவோ வேலை பாக்கவோ அனுப்பினா போற வழியில இந்த மாதிரி பண்ணி அதுங்க மனசைக் கலைச்சு...பாட்டுப் போட்டு பாட்டுப் போட்டு பயித்தியக் காரியாக்கி...கட்டுனா இவனைத் தான் கட்டுவேன்னு சொல்ல வெச்சு... தலையில் பாறாங்கல்லைப் போட வெக்கிறீங்களே ...

உன் பஸ்ஸு ஓனர் யாரு சொல்லு..அங்கிட்டு போயி புகாரு கொடுக்கறேன்.நானும் வயசுப் பொண்ணு வெச்சிருக்குறவ ... என்று பொல பொல வென்று பிடித்துக் கொண்டு சத்தம் போடுகிறாள்.

பயந்து போன டிரைவர் வண்டியை வேகப் படுத்த...அந்தப் பெண் ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டிக் கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்து கொள்கிறாள்.

பார்த்தீங்களாம்மா..கொடுமையை...நல்லாக் கேட்டீங்க நீங்க இப்படித் தான் கொடுக்கணும் இவனுங்களுக்கு....என்று இவளை மகிழ்வோடு பார்க்கிறாள் அருகில் அமர்ந்தவள்.சரோஜா பஸ்ஸை விட்டு அவள் இறங்குமிடத்தில் இறங்கி...வீட்டுக்கு நடந்து போகையில் " தாமரை கேட்ட வண்டியை...எப்படியாவது ரெண்டு மாட்டை வித்தாவது வாங்கித் தரோணம்....அவளும் இப்படி பஸ்ஸில் போயி ஏதோ ஒரு தருதலை கண்ணுல பட்டு மனசு கலங்கிப் போவதற்குள் நம்ம மவளைக் காப்பாத்தியாவணும் ..எந்த மாட்டை விக்கலாம்.என்று யோசனையில் நடந்தாள் .

வீட்டுக்குள் நுழைந்ததும்...அவள் போட்டக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று ஒரு நோட்டில் கிறுக்கி வைத்துக் கொண்டாள் .

மாலையில் தாமரை வீடு வந்ததும்...அடியே.உனக்கு ஒரு சந்தோஷமான சேதி....நீ கேட்டாப்புல வண்டி வாங்கி தந்திறலாம்னு முடிவு செஞ்சிட்டேன் கடைக்கு எப்போ போகலாம். ரெண்டு மாட்டை வித்தாப் போதுமில்ல..என்று சந்தேகமாகக் கேட்கவும்...

அதெல்லாம் வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்...நான் பஸ்பாஸ் எடுத்தாச்சு...இனிமேட்டு பஸ்சுல தான் போவேன்.எனக்கு பஸ் தான் பிடிச்சிருக்கு ...! யானையைக் கூட வாங்கிறலாம் .அங்குசம் தான் வாங்க காக்கோணம் ....அதான்..பெட்ரோல்...பெட்ரோல்....! என்று தான் சொன்னதையே திருப்பி தனக்கே சொல்லிவிட்டு புழக்கடை பக்கமாக சென்று விட்டாள் தாமரை.

சரோஜாவின் மனதுக்குள் ஒலித்த அபாய சங்கின் ஒலி அவளது இதயஅறையைக் கிழித்துக் கொண்டு செவிப்பறையைத் தாக்கியது. "எந்த பஸ்ஸில் எவன்..?" என்று.

==========================================================================================

திங்கள், 8 அக்டோபர், 2012

ஆண்மீக இச்சை..!


(இது எழுத்துப் பிழை அல்ல....மனத்துப் பிழை...)

வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி தண்ணீர் தழும்பி விழவும்...மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க ..சுதாரித்தவள்....என்னாச்சு...இன்னைக்கு காலங்கார்த்தால இப்படியொரு தடைச் சகுனம்.."இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகப் போணுமே.."

சகுனமே சரியில்லையே....என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க...கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

அழித்து...அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய....கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே...கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே....அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்...என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்... "அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா..." என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன் சொல்கிறான்.

என்னடா பிரவீன் ?...இப்பப் போய் இப்படிச் சொல்றே....இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ....நீ சரியா எழுதணும்..கண்ணா.....இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை....பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப் படி...எல்லாம் மனசில் ஏறும் ....என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற....எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்....! எனக்கு என்னாகுமோ...? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து நடக்க ஆரம்பித்தது...சந்திராவுக்கு.

நல்ல வேளை....நான் .கீழே விழலை...பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே...பால்..."புஸ்" என்று பொங்கிப் படமெடுத்தது.

டேய்..பிரவீன்....சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்....என்று குரல் கொடுத்தவள்....சித்ரா...சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்...ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்...பயப்படறான்.....நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே ... என்றவள்....பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே...? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.

படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா....என்னக்கா...பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? ...என்ன ஐ.ஏ.எஸ்'க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே....டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே...சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..

"ம்ம்ம்...உனக்கும் இந்த சொகுசெல்லாம் இந்த மாசத்தோட கடைசி.... அடுத்த மாசமே...நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்...சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்...நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்...என்னை மாதிரியே...கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ...." சொல்லிக் கொண்டே.

நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்...உரிமையா...அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா....நம்ப அம்மா...பாட்டி பண்ணாததையா நீ பண்றே...?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.

"ஏன்னா.....இங்க கொஞ்சம் வரேளா....இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா...? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

இதோ பாருடா....வேலைக்காரி வீட்டுக்காரரை...வேலை வாங்கறதை...என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.

என்ன சந்திரா...இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்... அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா....? அட....இங்க பாரேன்...நம்ம ரவீந்திர பாரதியில்.இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்.. ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே....இன்னைக்குப் போலாம்'ன்னு நினைக்கிறேன் ? வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் ! கண்கள் சந்திராவை நோக்கவில்லை. ! மனசு ...நீ வரமாட்டே...எனக்கேத் தெரியும் என்றது.,

நானா....? என்ன விளையாட்டா...பிரவீனுக்கு நாளையிலிருந்து கால் பரீட்சை ஆரம்பம்... நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா...? நான் எங்கேயும் வரலை...நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ...நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்...பீன்ஸையும் கத்தியும் கொண்டு வந்து "டொக்கென்று" வைத்தாள்.

ஒ.. ..பரிட்சை இருக்கா....சரி. நான் மட்டும் தனியா எப்படிப் போறது ? அப்போ .... நான்.... சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்...அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்...என்றவர்...கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.

சந்திராவுக்கு நெஞ்சு திக்கென்றது ! என்ன சித்ராவா ? அவள் கல்யாணப் பெண், என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ? இதென்ன அல்பமான ஆசை....இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை...இவருக்கு....கஷ்டம்...கஷ்டம்...என்றது அவளின் மனது.

கல்யாணம் ஆகப் போறவள்....இப்போதான் .நிச்சயம் ஆயிருக்கு...இப்ப வெளியில்...கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?

அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்...எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ...?..எதுக்கெடுத்தாலும்....எப்பப் பாரு...சகுனம்...நாலுபேரு....அது இதுன்னு...சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா இதுக்கெல்லாம் நேர்மாறு.நீயே பாரேன்....நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா...நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்...ஆமா....கொடு...கொடு...பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்...என்று அவசரப்பட்டார்...சபாபதி.

சித்ரா செதுக்கி வைத்த சிலை. பளிங்குப் பதுமை ! பேரழகி ! சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.

சந்திராவுக்குக் கோபம் பொங்கியது. எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன். சித்ரா வேண்டாம். கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.

ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்'ன்னு எனக்கு ஆசை சந்திரா. நீ வர வேண்டாம், அவள் வரட்டும். தப்பா நினைக்காதே !

என்னவோ செய்யுங்கோ ...நீங்களாச்சு...உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?...நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ...அது போதும் நேக்கு.என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா.உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்....கன்னமெல்லாம் வடுக்கள்...இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை...பாவம்..அவர்...! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்...விதி...என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு....என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.

பீன்ஸை நறுக்கிக் கொண்டே...அப்போ...இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்....என்ற மிதப்பில் கிறங்கியபடியே.."பார்த்த முதல்நாளே....உன்னைப் பார்த்த முதல் நாளே..." என்று சீட்டியடித்தபடியே...மனமெல்லாம் சித்ரா வர சம்மதிப்பாளா...? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.

என்னதான் இருந்தாலும்...ஆண்மனம் சபலம் அடையும், மரத்துக்கு மரம் தாவும். கையில் கொய்யாப் பழமிருக்க மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் ! பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு...இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும் நின்றார், பெண் குழைந்தைகளுக்குத் தகப்பனா யிருந்திருந்தால் கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது. வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.

கண்ணருகில்....இளவயதில்....மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்...அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே ஒரு கண்சித்ராவையே தொட்டு விட வட்டமிடும்.

சித்ராவுக்கு "ஹை-டெக்" சிட்டியில் வேலைக் கிடைத்ததும்...அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே...அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்....சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா....இவள் ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்... கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற...அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்...என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள் முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.

அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்...சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம சந்தோஷம்.

டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்... சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.

இல்லக்கா...அவரோட அம்மா...சொன்னாளாம்...அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது...இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம். என்னவோ... பெரிசா....இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா. இவரும்...அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா...? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க...கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே....இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே... எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

அக்கா...உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்... பாரேன்... எனக்குத் தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!.."என் அம்மா சொல்லிட்டாங்க....." என்று வக்களித்துக் காட்டியபடியே....இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்....அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ...?என்றாள் சித்ரா.

அப்படியெல்லாம் சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு...அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்'னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்...எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல் சொல்ல மாட்டா.

அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா...நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்....அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்....அவர்களால் தாங்க முடியாது...எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.

ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ.. அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும் ஒரு பற்றும்..பாசமும்...மதிப்பும் உண்டாகும். எப்பவுமே...உரிமைகளை யாருமே இந்தா... எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில் தருவதில்லை...அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா...? இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.

அக்கா...போதும்...உன் "சந்திரோபதேசம்....". இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ்.
ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்...வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.
அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.

ஆமாம்மாம்...வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே...என்னை மாதிரி "அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல"...இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்...ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்...எப்படி உங்க டப்பா....டான்ஸ் ஆடும்னு...!

சித்ரா...இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்...உன்னையும் அழைச்சிண்டு...போயிட்டு வா.

என்னக்கா...நீ போறது தானே...? நான் என்னத்துக்கு...? நான் அத்திம்பேரோட எங்கியும் போகலை.

பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்...நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்....? அவரே சொன்னார்...சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு...போயிட்டு வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.

ஐயய்யோ... இது என்ன? இல்லக்கா....நான் இவரோட தனியால்லாம் போகலை...சரிபட்டு வராது.

எது சரிபட்டு வராது......? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா...சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட் அப்டீன்னு பெருமை பேசறார்...நீ இப்படி சொல்றே...நானே போயிட்டு வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை...இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி...ரொம்ப நன்னாருக்கும்...மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்...என்று சந்திரா சொன்னதும்..

அம்மாடி...அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்...நானே போறேன்.... நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு...அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.

நேரம் ஆக ஆக...சித்ரா...போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே...போய்ட்டு வரலாம்...என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.

அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்...மணக்க தயாரா வந்து நின்றபோது சந்திராவே அசந்து மயங்கிப் போனாள்.

என்ன அத்திம்பேர்...அசத்தலா கிளம்பிட்டேள்...சுதா ரகுநாதன்னா.... அவ்ளோ இஷ்டமா?...அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க...நினைவு வெச்சுக்கோங்க...என்று கிண்டல் செய்தாள் சித்ரா.

இவரும் சிரித்துக் கொண்டே...மனசுக்குள்....அடி அசட்டுப் பெண்ணே...."மனசுலோனி மர்மம்....தெலுசுகோ....." என்று ராகம் இழுத்தார்..

ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும் ஏறியாச்சு...!

முன்புற கண்ணாடியை சரி செய்தவர்...அப்போ...போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்க,

இவளும்...கண்ணாடியைப் பார்த்தே..."ம்ம்ம்...ம்ம்ம்" என்று பதில் சொன்னாள் சித்ரா."சிரிப்பைப் பாரு..." என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.

ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். "சே...சே...என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி.."நல்லதும்..கெட்டதும் ...நெஞ்சுக்குள்ளே. ." அதை மீறி வெளியே வரவேண்டும்...என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்...சித்ராவின் "யௌவன கர்வம்" பார்ப்பவர்கள் எல்லாம் தவறுபவனாகவே....ஆள்காட்டிக் கொண்டிருந்தது.

அங்கங்கே...சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்...சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்........இதுல...இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா...அட பகவானே...தெரியாமல் போச்சே....என்று தடுமாறி எண்ணியவள்...

அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில் அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.

நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்...இந்த சந்திரா கேட்டால் தானே...போயிட்டு வா....போயிட்டு வான்னு...கட்டாயப் படுத்தி அனுப்பினாள்...இருக்கட்டும் அவளை...வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்....என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்....

அத்திம்பேர்....உங்களுக்கு தான் சிரமம்....இத்தனை தூரம்...ரவீந்திர பாரதி..."சலங்கை ஒலி " சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா...டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே...என்று கேட்க..

ஆமாம்...அதே தான் சித்ரா...அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ...நான்...என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்....இதோ வந்தாச்சு...பிடிச்சுக்கோ....என்று "விர்ரென்று" அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது...அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.

சித்ராவின் மனசுக்குள்....சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும் பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்....என்றும் எண்ணிக் கொண்டாள்.

உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்...அந்த பிரம்மாண்டமான ஹாலில் "ஜில்லென்ற" குளிரில்...மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே....அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.

திடீரென கோரஸாக குரல்கள்....ஏய்...சித்ரா...."ஏன்ட்டி....நூவு...இக்கட....! இதநேனா....நீ காப்போயே... வாரு.."
(என்ன...நீ... இங்க...! இவரா...உனக்கு வரப் போறவர்...?) என்று அருகில் அமர்ந்திருந்த சபாபதியைப் பார்த்து...சிரித்தபடியே கேட்க.....அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.

(இதைக் கேட்டதும் சபாபதி...கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்....அவருக்கு மனசுக்குள் ஆஹா...என்று இச்சையை அதிகமாக்கியது....)

அவர்கள் கண்களில் குறும்பு...ஹேய்...நோ...நோ...நோ..நோ....ஹி இஸ் மை சிஸ்டர்'ஸ் ஹஸ்பெண்ட்" என்று அவசரமாக சொல்ல...!

சாரி...சாரி....வெரி சாரி....ஏமி அனுகக்கு... (ஒன்றும் நினைச்சுக்காதே...) என்று கலைந்து போனார்கள்.

சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க...! என்ன சித்ரா.....தப்பா நினைக்காதே...தெரியாமல் கேட்டிருப்பா....உன் கொல்லீகா...? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே....சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..

அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா....என்னன்னா.... அங்கே பாருங்கோ...அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே....சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..

அட...ஆமாம்...சித்ராவே தான்...அவர்....அவர்....ஏய்...அவர் சபாபதிடி....அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!

இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்...இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது...!
என்ன பழக்கம் இதெல்லாம்...! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல் தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ...?

நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்....தப்புப் பண்ணிட்டோமோ...வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து...என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.

என்ன இது கற்பகம்?....கண்ணால் காண்பதுவும் பொய்...காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..

எனக்கு மூட் போச்சு...கிளம்புங்கோ...ஆத்துக்குப் போவோம்...கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்....என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா...இவர்களை கவனிக்கவும்..... .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து , வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து.....சந்தோஷமாக பேச...அங்கிருந்த மூவரும்...சபாபதியை நோக்கி வர......!

சந்தோஷின் அப்பா...தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்...." இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை...."என்று சீண்டியது.

இவரும் எழுந்து...கைகுலுக்கி....நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை...சர்ப்ரைஸ்...!
என்று சிரிக்க.

சந்திரா வரலையா..?

பையனுக்கு பரிட்சை சார்... சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா...நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு...வந்தோம்...

குட்...நாங்களும்...அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்...அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்...!

சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்...என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல...

கூப்பிடலாமா அவனையும்...என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..

அதற்குள்...நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை...விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க...அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.

அம்மா...நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.

சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்...அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்...என்று நினைத்துக் கொண்டார்.

மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்...சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு "புரிதல்" ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது...சித்ரா தனது கைபேசியை எடுத்து...."உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்...நாம் தான் எடுத்துக்கணும்..." என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
"அம்மா...நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா..." என்று பணிவோடு கேட்கிறாள்.

"சொல்லேன்....அவனும் சந்தோஷப் படுவான்...." என்கிறாள் அம்மா.

இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா...நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்...என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து...அம்மா... அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.

தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.

ஆர்வத்தை அடக்க முடியாமல்...சித்ரா, சந்திராவுக்கும் ஃ போன் செய்து "அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு....இங்கே யார் வந்திருக்கா...தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்...இதோ என் பக்கத்தில் தான்...இருக்கா...பேசறியா...இரு தரேன்..என்று சொல்லி..."அம்மா...சந்திரா....லைன்ல இருக்கா...பேசுங்கோ..." என்று கைபேசியை தரவும்.

"கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா....கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.." என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.

குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல...இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.

சுதா ரகுநாதனின்...வெண்கலக் குரல்...அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.

"நீ....ரஜ...ரமணீ....ய கிருஷ்ணா......தேஹி.....ஜெய...ஜெயா......மாம்பாஹி...."

கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,

ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.

சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி...பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இரண்டு மனங்களோ....இரண்டு குணங்களோ...சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு...அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.

சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி....தெளிவானது.

சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்...கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்...அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சந்திராவின் கணவருக்கும்...தனது உறவின் பங்கும்...பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.

நிகழ்ச்சி முடிந்து அரங்கம் கலைந்ததும்...வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்..." அம்மா...அப்பா...நாங்க போயிடு வரோம்...என்று சொல்லவும்.

எங்கம்மாக் கிளம்பறே...இரு...இரு....எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்...சரியா..என்றனர்.

சபாபதியிடம்...எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்...
இப்போது அவன் அம்மாவே..."சித்ரா...நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்...வந்தாலும் வருவான்...கிரிகெட் முடிஞ்சிருக்கும்.." என்று சொல்லவும்..

அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.

தான் நினைத்தது ஒன்று...நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்....சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள் மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்...மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை உருவாக்கி அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும் அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு ஃ போன் செய்து...அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி....சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி...தன்னுடைய சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

இரவு டின்னர் "கிராண்ட் மினர்வா"வில் பேசியபடியே...இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.நேரம் போவதே தெரியாமல் சிரிப்பும்... மகிழ்வுமாக.

வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்...சந்திரா, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே...குழம்பித் தவிக்க...என்னைக்கும் இல்லாத திருநாளா...இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்.....என்னவாயிருக்கும்...இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?

"சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்... இவர் ஏதாவது அவளிடம் ஏடாக் கூடமாக பேசி இருப்பாரோ...? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ...? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை...? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது...? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே.... இன்னைக்கு கார்த்தால ...கால் இடறியது..."இடறிய கால் இடரும்" ன்னு சொல்லியிருக்கு...அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப் போறதோ...? இன்னும் வரலையே...இத்தனை லேட்டாகிறதே....இன்னைக்கு சகுனமே சரியில்லையே....என்றெல்லாம் கவலைப் பட்டவள்...

வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்

தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத் தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்....போல.....பளிச்சென "நட்சத்திரமாக" மின்னி "நல்லதே நடக்கும்" என்று சொல்வது போலிருந்தது.

அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை எல்லா சகுனங்களையும் புறந்தள்ளி விட்டு வெளியேறியது . அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா ! தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.