ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

டௌரி தராத கௌரி கல்யாணம்....!

















சித்ரா…சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்…இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார். என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் . அவாள்ளாம் வரும்போது நம்ம கௌரியை ரூமுக்குள்ள போய் உட்காரச்சொல்லு . நாம கூப்பிட்ட போது வந்தாப் போறும்ங்கிட்டியா ஈஸ்வரன் ஈனஸ்வரத்தில் சொல்லிவிட்டு போகிறார்.




ஒ……நான் அப்பவே சொல்லியாச்சு கேட்டேளா….நம்மாத்துல ..இதென்ன முதலாவதாவா நம்ம கௌரியைப் பெண் பார்க்கிற கோலாகலம் நடக்கறது. இத்தோட சேர்த்து மூணாவது .! எண்டே குருவாயூரப்பா….! இதாவது நிச்சயத்தில் கொண்டு போய் நிறுத்தேன்…உன் சன்னதில வந்து துலாபாரம் தூக்கறேன்.




அவரோட கவலை அவருக்கு….வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்ன்னு சொன்னாப்பல…இந்தாத்தை கட்டி முடிச்சு இப்பத் தான் ஒரு சாதியா வீட்டுக் கடனை அடைச்சி மூச்சு விட்டு நிமிர்ந்திருக்கோம். அதுக்குள்ள கல்யாணம்னா இன்னும் எங்கல்லாம் கடன் வாங்கணுமோங்கற பயம் உள்ளூர இருக்காதா என்ன? இந்த லட்சணத்துல கொடுக்க மாட்டேன் வரதட்சணைன்னு அப்பாவும் பொண்ணுமா… கொடியை மேலே தூக்கி கெட்டியாப் பிடிச்சுண்டு நிக்கறா..பெத்தவ என் வயித்துல புளியைக் கரைக்கிறது அவாளுக்கு என்ன தெரியும்? அங்கலாய்க்கிறாள் சித்ரா.




.சித்ராவுக்கு அம்பது வயசுன்னா யாரும் சத்தியம் பண்ணினாக்கூட நம்ப மாட்டா.அவ்வளவு இளைமைத் தோற்றம்..அதிலயே அவளுக்கு ஏக பெருமை.இதில் அவளோட ஒரே பொண்ணு கௌரி இருபத்தைந்து வயசாச்சு. இன்னும் சாண் ஏறி முழம் சறுக்கிண்டு, அவ சொல்ற ஒன்னொண்ணுக்கும் தலையாட்டற வரன் வர வேண்டாமா? அதுக்குள்ளே சித்ராவுக்கே வயசாயிடும்.




நேக்கு இந்தப் புடவை நன்னாருக்கா…..பாந்தமா இருக்கோ.? கழுத்து நெக்லஸை சரி செய்தவளாக லேசாகத் திரும்பியவள் கணவர் ஈஸ்வரனிடம் கேட்கிறாள். நிற்கும் தோரணையே ஏதோ நாடக நடிகையை ஞாபகப் படுத்தியது ஈஸ்வரனுக்கு.




ஏ ……..நோக்கென்ன குறைச்சல்ங்கறேன்…..உன்னப் பார்த்தால் பொண்ணுக்கு அக்காவான்னு கேட்பா,பாரேன்…அப்போ நான் பொண்ணோட அம்மாவுக்கு எங்கியாக்கும் போறது…?

போறும் போங்கோ…! தத்தக்கப் பித்தக்கான்னு உளரப்டாது .! கெடக்கறது கெடக்கட்டும்னு ஏதோ சொல்வாளே அதாக்கும்….இங்க நடக்கறது…இப்படியெல்லாமா மனசுக்குள்ள நினைப்பு ? எண்டே குருவாயூரப்பா….என்னே ரக்ஷிக்கனமே..! முதல்ல ஆத்துல திமிறிண்டு நிக்கறதை நல்லபடியா வெளிய அனுப்பற வழியைப் பார்க்கணுமாக்கும். ம்ம்ம்….ஏன்னா..? இந்த நெக்லஸ் நேக்கு எடுப்பா இருக்கோ? கல்யாணி கவரிங்குல நேத்து தான் புதுசா வாங்கினேன்.கௌரியோட கல்யாணத்துக்கு இதே மாடல்ல தங்கத்துல செய்யக் கொடுக்கணுமாக்கும்ஆமாம்…எதோ தங்கத்துல செய்யக் கொடுக்கணும்னு சொன்னியே….அது நோக்கா….இல்லை கௌரிக்கா ? சந்தேகமாகக் கேட்டார் ஈஸ்வரன்.




ஆமா…நான் நேக்குத் தான்னு சொன்னா உடனே வாங்கிக் கொடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பேளாக்கும் ..? இதுல குதர்க்கமா கேள்விக்கொண்ணும் குறைச்சலில்லை..

நான் கொடுத்து வெச்சது “கல்யாணி கவரிங்” தான்…எல்லாம் நான் வாங்கிண்டு வந்த வரம்.




.ஏண்டி இப்படி என் மானத்த வாங்கறே? இப்படி நீயே பள பள ன்னு நின்னா…மாப்பிள்ளையாத்துக் காரா…நம்மள நல்ல பசையுள்ள இடம்னு தப்பா நினைச்சுண்டு போட்டுத் தேய்க்கப் போறா..அப்பறம் இதுவும் தட்டிப் போனா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை…ஆமா ,.இப்பவே சொல்லிட்டேன்.




ம்கும்…என்ன பொண்ணைப் பெத்துட்டா பிச்சைக் கார வேஷம் தான் போடணுமா? அதெல்லாம் இங்க நடக்காதுங்கறேன். இந்த வாட்டியாவது அவா கேட்கறதுக்கு முன்னாடியே நாம நம்ம பொண்ணுக்கு என்ன செய்யப் போறோம்னு சொல்லிட்டாப் போறது…..நீங்க என்ன சொல்றேள்? எப்டி என் ஐடியா…சித்ராவா கொக்கான்னானாம்.




நீ உன் திருவாயை மூடிண்டு சும்மா இருங்கறேன். அவாளா நம்மகிட்ட என்ன கேட்கறான்னு முதல்ல பார்த்துக்கலாம்.நீயா எதையும் உளறிக் கொட்டாதே. நோக்கு ஏற்கனவே கை நீளம்…வாய் நீளம்…இப்போ பொண்ணோட கல்யாணம்னு நீயே என்கிட்டே மளிகை லிஸ்ட் எழுதித் தரா மாதிரி ஏகத்துக்கு இழுத்து விடாதே. அவஸ்தைப் படப் போறது நான் தானே?




ஐயே…பின்ன என்ன தான் பண்ணச் சொல்றேள் என்னை நீங்க? சும்மா டம்மி பீஸா வந்து உங்க பின்னாடி தலையாட்டீண்டு நிக்கச் சொல்றேளா?




அப்படி நீங்க சொல்றதைக் கேட்டுத் தான் ரெண்டு நல்ல நல்ல அலையன்ஸ் கை நழுவிப் போச்சு. அந்த டெல்லி வரனை விட்டது தப்பாப் போச்சு.

ஒரு லட்சம் தான் கையில கேட்டா….கொடுத்து தொலைச்சிருக்கலாம். உங்க கொள்கையைத் தூக்கி உடைப்புல போடுங்கோ.எந்தக் காலமானா என்ன கேட்கறவா கேட்டுண்டே தான் இருக்கா….கொடுக்கறவா கொடுத்துண்டே தான் இருக்கா…அப்போ தானே காரியம் ஆகும். இல்லாத போனா இப்படித் தான் ஆத்தோட பொண்ணை வெச்சுக்க வேண்டியது தான். வரவா போறவா எல்லாரும் கடைசீல என்ன சொல்வா தெரியுமோ? பொண்ணை அவளோட சம்பளத்துக்காக கல்யாணம் பண்ணாம வெச்சுண்டிருக்கான்னு வாய் கூசாம சொல்லிட்டுப் போவா.அது நன்னாவாயிருக்கும்?

அந்தந்த காலத்துல செய்ய வேண்டியதை செய்யணுமாக்கும் .ஆமா நானும் தெரியாமத் தான் கேட்கறேன்…அப்படி நீங்க என்ன தான் மனசுல நெனைச்சுண்டு இருக்கேள்? அதையாவது சொல்லுங்கோ…வெறுங்கையால் முழம் போட முடியாதோன்னோ ?




அடி அசடே….நாமென்ன ஒண்ணத்துக்கும் உதவாத பூச்சி கத்திரிக்காயா வெச்சுண்டு இருக்கோம்.? பி.டெக் முடிச்சுட்டு ‘விப்ரோ’வில் மாசம் சுளையா அம்பதாயிரம் சம்பளம் வாங்கற ஏ டி எம் மெஷினாக்கும் நம்ம கௌரி. இத்த விட என்ன வேணும்? வருஷத்துக்கு ஆறு லட்சம்….! வரதட்சிணையாவது….வெங்காயமாவது..ஒத்த ரூபாய் தரமாட்டேன்.




இப்ப உன்னையே எடுத்துக்கோ…அந்தக் காலத்துலயே உங்கப்பா, நயாப்பைசா வரதட்சிணை தர மாட்டேன்…அதுக்கு நேக்கு வக்கில்லைன்னு சொன்னார்.நானும் போனாப் போறதுன்னு….ஏய்….ஏய்….ஒரு பேச்சுக்குச் சொல்றேனாக்கும் அப்படி முறைக்காதே….! உன்கிட்ட தட்சிணையா முக்கியம் உன்னோட முக தாட்சண்யம் தான் முக்கியம்னு நான் ஒரு இளிச்சவாயன் உனக்கு கிடைக்கலியா? அதே போல கெளரிக்கும் ஒரு இ-ன்னா வா- ன்னா கிடைக்காமலா போயிடுவான்…? அது வரைக்கும் பஜ்ஜியும் சொஜ்ஜியும் பண்ணு நான் ஒரு வாய் பார்த்துடறேன்.




ம்கும்..நன்னாருக்கு உங்க வியாக்கியானம். மனசெல்லாம் திங்கர்த்துலயே வெச்சுண்டு இன்னும் வாயைக் கட்ட முடியலை உங்களால. போன வருஷமே அந்த டெல்லி பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா இந்த வருஷம் நீங்க தாத்தா ஆகியிருப் பேளாக்கும் . இந்த மூணாவது வரனையாவது ஒழுங்கா நழுவ விடாமல் முடிக்கிற வழியைப் பார்க்கணும் கேட்டேளா? ஜாதகம் கூட நன்னாப் பொருந்தி இருக்கு. கௌரிக்கு ஏத்த பிள்ளை. பெயர் பொருத்தம் கூட பிரமாதமா அமைஞ்சிருக்கு..பார்த்தேளா? ..’கார்த்திக்’ நன்னாருக்குல்லன்னா..?




நான் சொல்லிட்டேனாக்கும்….இந்த ‘கார்த்திக்’ தானாக்கும் நம்மாத்து மாப்பிள்ளை. அவாக் கேட்கறதைக் கொடுத்து வந்த வரனை சட்டு புட்டுன்னு பிடிச்சுப் போடுங்கோ சொல்லிட்டேன்…என்றவள் இருங்கோ ஒரு வாய் காப்பி கலந்து எடுத்துண்டு வரேன் என்று சமையலறை பக்கம் போகிறாள் சித்ரா.




இந்த நிமிஷத்துல இந்த வீடே எலிப்பொறி மாதிரின்னா நேக்குத் தோணறது…! அப்போ மசால் வடை தான் கௌரியா ? என்று கட கட வென்று சிரிக்க.




போதுமே நீங்களும் உங்க துப்புக்கெட்ட ஜோக்கும்…என்று எரியும் தணலில் தண்ணீர் தெளித்தது போலச் சொல்லிவிட்டு..”பொறுப்பா பொண்ணுக்கு அப்பா மாதிரி பேசுங்கோ…எப்போ தான் வரப் போறதோ அந்தப் பொறுப்பு.?..இதே உங்க அண்ணா…தன்னோட ரெண்டு பொண்களையும் சாமர்த்தியமா லண்டனுக்கும் , அமெரிக்காவுக்கும் பண்ணிக் கொடுத்துட்டு அக்கடான்னு செட்டில் ஆயாச்சு. நாம தான் இன்னும் குண்டுச் சட்டில குதிரை ஓட்டிண்டு நின்ன இடத்துலயே நிக்கறோம்.




எல்லாரும் குண்டுச் சட்டில குதிரை ஓட்டுவா …சரிதான்…ஆனால் நீ தான் கொட்டங்கச்சியிலயே குதிரை ஓட்டுவியே …எனக்கு நம்பிக்கையிருக்கு ..நீ அலுத்துக்காதேடி சித்ரா..கௌரிக்கு அருமையா வரன் அமையும் நான் நினைச்சா மாதிரி….!




அமைஞ்சாச் சரி…! சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….கௌரி அறைக்குள்ளிருந்து “அம்மா….அம்மா….இங்க வாயேன்..இந்தப் புடவையை கொஞ்சம் கட்டி விடறியா….ஐ ஜஸ்ட் ஃபர்கெட்…இந்த ஃபிரில் எப்டி பண்றதுன்னு/ ?




ஓ ..இதுக்குத் தான் சொல்றேன்…லீவு நாள்ல, நல்லநாள் கிழமைல புடவை கட்டிப் பழகிக்கோன்னு ….அப்போல்லாம் நைட்டியே கதின்னு கெடந்துட்டு அவசரத்துக்குப் புடவை கட்டத் தெரியலை நோக்கு . நாளைக்கே புக்காத்துல போயி யாரைக் கூப்பிடுவாய்..?சொன்னாக் கேட்டாத் தானே…நல்ல பொண்ணுடி…..இரு… இரு…. இதோ வரேன்…என்று அவசரகதியில் அறைக்குள் ஓடுகிறாள் சித்ரா.




மாம்….எதுக்கு இவ்ளோ ஃ பார்மாலிட்டி. ப்ளீஸ் லீவ் மீ…நான் எப்டி இருக்கேனோ அப்டி இருக்க விடேன்….ஐ ஆம் கம்ஃபர்டபிள் வித் சுடிதார்..அதைப் போட்டுக்கவா? வொய் திஸ் சாரி வெறி?




ப்ராந்தாட்டமா பேத்தாதே …….இப்ப வரவா….நல்ல ஆர்த்தடாக்ஸ் குடும்பமாக்கும்.. யாரெல்லாம் வராத் தெரியாது..பார்த்தவுடனே , உன்னைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் வரணும். அதுக்குத் தான்.. நோக்கும் இது ஒரு நல்ல அனுபவமா இருக்குமே..கௌரி.




என்ன இருந்து என்ன…? ஐ ரிமைன் தி ஸேம்…நான் யாருக்காகவும் மாற மாட்டேன்.




ஆமா..அப்படியே ஆகாஸத்துலேர்ந்து குதிச்சு வந்துட்டியாக்கும்…நல்ல படியா நடந்துண்டு எப்டியாவது இந்த வரனை முடிக்கிற வழியை பார்க்கணும்.இனியும் காலம் தள்ளக் கூடாது. நீ உங்கப்பா பேச்சைக் கேட்டியானா இந்த ஜென்மத்துல நீங்க சொல்ற மாப்பிள்ளை யாரும் நம்ம வீட்டுக் கதவைத் தட்ட மாட்டார். அதுவும் உங்கப்பா சொல்றாப்பல யாராவது ‘இ -னா வா -னா..’ வந்து மாட்டினாத் தான் உண்டு. அதுவும் இனிமேலாப் பொறக்கப் போறார்? வந்து எனக்கு டௌரி வேண்டாம்…கௌரி தான் வேணும்னு …? நீயா யாரையாவது லவ்வு கிவ்வு பண்ணித் தொலைச்சாத் தான் நடக்கும். ஆமா…அப்படி ஏதாவது இருக்கோடி .? இருந்தாச் சொல்லிடு.




அப்படி இருந்தா இப்படி வேஷம்லாம் எதுக்கு ? பாரெண்ட்ஸ்ங்கறது சரியாத் தான் இருக்கு…எல்லாத்துலயும் டௌட்….அம்மா….ஆபீஸ்ல ஒருத்தன் கூட என் பக்கத்துல கூட வந்து நிற்க முடியாது…தெரியுமா? நான் அவ்வளவு டெரர் . எல்லாம் நடிப்பு தான்…பட்…நான் மட்டும் அப்படி ஒரு இதைக் கிரியேட் பண்ணலையின்னு வெச்சுக்கோ ,

அவ்ளோ தான்..அவனவன் எடுத்த எடுப்புல “டேட்டிங் ” போகலாம் வரியான்னு கூப்பிடுவான்.

என்னது.டேட்டிங்கா ? சித்ரா ஆச்சரியத்துடன் கேட்கிறாள்.




ஆமாம்..அதெல்லாம் நோக்குப் புரியாதும்மா…!




நேக்கேன் புரியாது../ எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறேன்….!




அது சரி…சீரியல் பார்த்தால் போதுமே எதேஷ்டமாப் புரியும்….என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு…ஆமா….உன்னை அப்பா டேட்டிங் அழைச்சுண்டு போயிருக்காரோ?..




நன்னாக் கேட்டே போ….கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு…..ஒரு போட்டிங் கூட அழைச்சுண்டு போனதில்லை.




கட கட வென்று சிரித்த கௌரி…இன்னைக்கும் அப்பா அப்படியே தான் இருக்கார். கஞ்சூஸ்..!




அதான் நானும் சொல்றேன் கேட்டுக்கோ..! இப்ப வரவா ஏதாவது டௌரி கிவ்ரி கேட்டால் போனாப் போறதுன்னு நீ தலையாட்டிடு..புரிஞ்சுதா ?




நோ…நோ…நோ….அது மட்டும் நடக்காது.இது தான் சாக்குன்னு நீ சந்துக்குள்ள புகாதே….எனக்குன்னு சில வல்யூஸ் இருக்கு. !




மண்ணாங்கட்டி….இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது..என்று சொல்லிக் கொண்டே புடவைத் தலைப்பை கௌரியின் தோள் மேலே சார்த்தி விடுகிறாள் சித்ரா.




ச்சே…போம்மா…விடு..எனக்கு இந்த சாரி வேண்டாம்…. என்னமோ வெயிட்டைத் தூக்கீண்டு ரோபோ மாதிரி என்னால நிக்க முடியாது…அத்தனை நேரம் கஷ்டப் பட்டு கட்டி விட்டதை ஒரு நிமிஷத்தில் உருவிக் கட்டிலில் வீசி விட்டு அவளுக்குப் பிடிச்ச சுடிதாரை எடுத்து நிமிஷம் மாட்டிக் கொண்டு “ம்ம்ம்ம்…..நான் ரெடி ….எங்கே உன் மாப்பிள்ளை? என்று சிரிக்கிறாள் கௌரி.




இந்தா இந்தப் பூவை வெச்சுக்கோ….கழுத்தில இந்த செயினை போட்டுக்கோ…சித்ரா எடுத்துத் தருகிறாள்.




நத்திங் டூயிங்…..இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கெல்லாம் நீயே மாட்டிக்கோ….நான் இவ்ளோ தான்…! எதுக்கு இந்தப் புடவைக்கடை…பூக்கடை….நகைக்கடை எல்லாம்? நான் என்ன மரப்பாச்சி பொம்மையா.?.அலங்காரம் பண்ணீண்டு கொலுல உட்கார? சொல்லிக்கொண்டே “..சாஜ்ஜனா …. ஜூடோ ஜோ தேரே காப் ஸே…….. தூ சூட்டே ஹம் நீந்த் ஸே …ஏ கைஸா தேரா இஷ்க் ஹை …சாஜ்ஜனா … ஆ ஆஆ ஆ …ஆ ஆ ஆ ….” என்று அவளுக்குப் பிடித்த ஹிந்திப் பாடலை மெல்லப் பாடிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்து டச் அப் செய்து கொண்டிருக்கிறாள்.




நமக்காகத்தான் இதெல்லாம்…..வேறெதுக்கு ? இதெல்லாம் போட்டுண்டாத்தான் பொண்ணுக்கு அழகு. சரி.உன்னோட இப்போ என்னால மல்லுக்கு நிக்க முடியாது.. உன் இஷ்டப் படி செய்.என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போறியோ நேக்கு பயம்மா இருக்கு. எல்லாம் நல்லபடியா முடியணும் சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் போகிறாள் சித்ரா, தாய்மைக்குரிய தவிப்புடன்.




வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது. வீட்டுக்குள் ஒரு பரபரப்பு மின்னல் அடிக்குது. ஈஸ்வரன் வாயெல்லாம் பல்லாக வருபவர்களை வரவேற்க வெளியே ஓடுகிறார் . சித்ரா அவசர அவசரமாக எத்தனை பேர்கள் வருகிறார்கள் என்று தலையை எண்ணுகிறாள்.




காரை விட்டு இறங்கிய ஐந்து பேர்களும் புன்னகைத்தபடியே வீட்டுக்குள் நுழைகிறார்கள். மாப்பிள்ளை பையன் கார்த்திக் துரு துரு வென்று இருப்பதைப் பார்த்ததுமே சித்ராவுக்கு மனசுக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று..கௌரிக்கு பொருத்தமானவர் தான். என்று மனசு சொல்லிக் கொண்டது. ஆனால் கௌரிக்குப் பிடிக்கணுமே !




வந்தவர்கள் சௌகர்யமாக அமர்ந்து கொண்டு…அறிமுகப் பேச்சு முடிந்ததும்….. மாமி ஒரு தாம்பாளம் எடுத்துண்டு வாங்கோ….என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும்.. அருகில் தயாராக எடுத்து வைத்திருந்த பித்தளைத் தாம்பாளத்தை எடுத்து பௌயமாக நீட்டுகிறாள் சித்ரா.




அவர்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த மஞ்சள்,வெத்தலை,பாக்கு, பூ,பழம்,என்று அனைத்தையும் எடுத்து தாம்பாளத்தில் வைத்து விட்டு பொண்ணை அழையுங்கள்…என்று அன்பாக சொல்கிறார்.




இதோ…..என்று தாம்பாளத்தை எடுத்து ஸ்வாமி அலமாரியருகில் வைத்து விட்டு… அப்படியே கௌரியை அழைத்துக் கொண்டு வருகிறாள் சித்ரா. மனசுக்குள் ‘ச்சே..இன்னைக்குன்னு பார்த்து இவள் பட்டுப் புடவையைக் கட்டிக்கலை…எவ்வளவு சொன்னேன்…கொஞ்சம் பூவாவது வெச்சுண்டு நிற்கப் படாதா? என்ன அவ்ளோ அழிச்சாட்டியம்….மனசு கிடந்து தவித்தது…அவர்களுக்கு பெண்ணைப் பிடிக்க வேண்டுமே.. என்று கடவுளை வேண்டிக் கொண்டது. அவா என்ன பாடச் சொல்லப் போறாளோ….இவள் என்னத்தைப் பாடப் போறாளோ…இவளுக்குத் தான் வாயைத் திறந்தால் ஹிந்தி சினிமாப் பாடல் தானே வரும்….”இது சொதப்பாமல் இருக்கணும்”




தவிப்பாகவே இருந்தாள் சித்ரா.




சித்ராவின் பயந்த பார்வையைக் கௌரி படித்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .இதென்ன எனக்கு வாழ்க்கை பரிட்சையா..?.என்ன…அம்மா ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கா..? ஆபீசில் நான் எத்தனை பேரை இண்டர்வியூ பண்ணியிருக்கேன்…இதெல்லாம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போறது..பாவம்..நினைத்துக் கொண்டவளாக அம்மாவைப் பார்த்து கண்சாடை காட்டுகிறாள்…அது, நீ அமைதியா இரேன்….நான் பார்த்துக்கறேன்….என்று சொல்லியது.




கம கம வென்று வீடெல்லாம் பரவியது நரசுஸ் காப்பி மணம். எல்லோரது கையிலும் மணக்க மணக்க காப்பியும் தட்டில் டிஃபன் வகையுமாக நாவில் நீர் சுரக்க வைத்தன. கார்த்திக்கின் அம்மா வந்திருந்த ஒவ்வொருவரையும் இவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு….கௌரியைப் பார்த்த பார்வையில் திருப்தி தெரிந்தது.




அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர். அருமையான சொஜ்ஜிக்கும் பஜ்ஜிக்கும் அம்மாவை வாயாரப் பாராட்டினார்கள்..”இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் பண்றா ./ ..நீங்கள் ரொம்ப ஸ்ரமப்பட்டு செய்திருக்கேள் ..ஒரு காப்பி மட்டும் இருந்தாப் போறுமாயிருக்கும் .நாங்க இதெல்லாம் எதிர் பார்க்கவே இல்லை…என்று பேருக்கு சொல்லிக் கொண்டார்கள்.




எங்காத்துல இவளுக்கு எல்லாமே முறைப்படி நடக்கணமாக்கும்…இந்த சின்ன சின்ன சம்பிரதாயத்தை எல்லாம் விடப் படாதுன்னு அடிக்கடி சொல்லிப்பாள் என்று ஈஸ்வரன் மனைவியைப் பார்த்துக் கொண்டே பெருமையுடன் சொல்கிறார்.




ம்ம்…வாசல்ல போட்டிருந்த கோலத்தைப் பார்த்ததும் புரிஞ்சுண்டோம் என்ற மாப்பிள்ளையின் அம்மா, அதுவும் நல்லதுக்குத் தானே…ஒரு சந்தோஷம்..ஒரு நிறைவு… என்றவர்…கௌரியைப் பார்க்கிறார் .




கோலமெல்லாம் நான் போடலை..நேக்கு அதெல்லாம் வராது…. இந்த டிஃபன் எல்லாம் அம்மா செஞ்சதாக்கும் …கோலம் கூட அம்மாவாக்கும் போட்டா …என்று சொல்லி விட்டு தன் அம்மாவைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் கௌரி.




லேசாக தொண்டையைச் செருமிக்கொண்டு ….”பெண்ணை எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு…என்று கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் “…பிறகு இல்லையோடா கார்த்திக்…நோக்கும் சம்மதம் தானே? என்று கேட்கவும்…கார்த்திக் தலை நிமிர்ந்து உட்கார்ந்தபடியே ஒரு ஆட்டு ஆட்டி பரம சம்மதம் சொல்கிறான்.




நிமிர்ந்த கௌரி தலை குனிந்து புன்னகை பூத்தாள் !




அரைக்கிணறு தாண்டியாச்சு….சித்ரா மனசுக்குள் மகிழ்ந்தாள்.




அப்போ…. மேற்கொண்டு பேசறதுன்னு ஏதாவது இருந்தால்..இப்பவே பேசி முடிச்சுக்கலாம்… .நாங்க மத்தவா மாதிரி ஆத்துக்கு போய் ஃபோன் பண்றோம் என்றெல்லாம் சொல்லிக்கலை என்று நாசூக்காக பேச்சை மாற்றுகிறார் கார்த்திக்கின் அப்பா. ஆமாம் ஆமாம் என்று அங்கிருந்த மீதி தலைகளும் ஆடின.




அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் தனியா இவர் கிட்ட பேசிக்கலாமா? என்று கௌரி “கார்த்திக்கைக் காட்டி “கேட்டது தான் தாமதம்…அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி, ..ஆச்சரியம்…குழப்பம்…சித்ராவுக்கும் அதே கதி தான்.




ஓ …பேஷா……என்று தடுமாறிக் கார்த்திக் அப்பாவின் குரல்…சம்மதத்தை தெரிவித்தது. ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு திக்கென்றது ! பெண்ணிய வாதியா இவள் ? கார்த்திக் எழுந்து நின்றான்.




மொட்டை மாடிக்கி அழைச்சுண்டு போயேன்…ஈஸ்வரன் சொல்ல…”அங்க வேண்டாம்பா…. என் ரூமுக்கு..என்று சொல்லிவிட்டு…”வாங்க மிஸ்டர்.கார்த்திக்…என்று அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்று…உட்காருங்கோ…”என்று சொல்லிவிட்டு அங்கு தயாரா இருந்த இன்னொரு சேரில் இவளும் உட்கார்ந்து கொள்கிறாள்.




மிஸ்டர்.கார்த்திக்….உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடலாம் இல்லையா? அழகாக ஆங்கிலத்தில் கேட்கிறாள் கௌரி.




மை ப்ளெஷர் ….மென்மையாகச் சொன்னார் கார்த்திக்.




நான் இப்படி தனியாப் பேசணும்னு சொன்னதை உங்காத்து மனுஷா எப்படி எடுத்துப்பான்னு தெரியலை. நான் பெண்ணியவாதி அல்ல ! நீங்க அப்பறமா உங்காத்து பெரியவாட்ட சொல்லி புரிய வெச்சுக்கோங்கோ.




இட்ஸ்….ஆல் ரைட்…அதை நான் பார்த்துக்கறேன்…இப்போ நீங்க சொல்லுங்கோ…என்ன பேசணும்னு கூப்பிட்டேள் .? என்னை என் பெயர் சொல்லி ஒருமையில் கூட நீங்கள் அழைக்கலாம்..புன்னகை மாறாத முகத்துடன் சொல்கிறார் கார்த்திக்.




ம்ம்ம்…தெரியும்.!




இதுக்கு முன்னாடி ரெண்டு அலையன்ஸ் வந்து விட்டுப் போச்சு. எல்லாம் டௌரி விஷயமாத்தான்…யு நோ எனக்கு டௌரி தந்து என் கல்யாணம் நடப்பது பிடிக்கலை.




ஃபைன்…எனக்கும் டௌரி வாங்கி என் லைஃப் ஆரம்பிக்கப் பிடிக்கலை. ..சொல்லும்போது கார்த்திக்கின் முகத்தில் குறும்பு இழையோடுவதைக் காணத் தவறவில்லை கௌரி.




கௌரி தொடர்ந்தாள்.




மூணு வருஷமா ‘விப்ரோ’ வில் இருக்கேன். ரொம்ப சாலேன்ஜிங் சீட்….ரெஸ்பான்சிபிளிட்டி ஜாஸ்தி. என் கல்யாணம் என்னோட ப்ரொபெஷனலை பாதிக்காமல் இருக்கணும்…. என்னால வேலையை விட முடியாது. அதே சமயம்….வீட்டையும் என்னால நெக்லெக்ட் செய்ய முடியாது. ஸோ .. எனக்கு ஒரு ஹெல்தி டிஸ்டன்ஸ் அதே சமயம் புரிஞ்சுக்கற ஒரு ஃ ப்ரெண்ட்லி லைஃப் பார்ட்னர் வேண்டும்…….அது நீங்களா இருந்தால் ஐ ஆம் வெரி ஹாப்பி..இன் கேஸ்..இல்லாவிட்டாலும் ….. பரவாயில்லை…ஐ கேன்.




தென்….இம்பார்டண்டா இதைச் சொல்ல மறந்துட்டேனே…. நான் ஆத்துக்கு ஒரே பெண்ணாக இருக்கறதால என் அம்மா அப்பாவுக்கு என்னோட துணை, பண உதவி எப்பவாவது தேவைப் படலாம்…இப்போ இல்லாட்டாலும் எதிர்காலத்தில் என் உதவி முழுவதும் தேவைப் படலாம்….அப்போ நான் வருவதைப் போவதை …அல்லது அவர்கள் நம்மோட இருப்பதை நாம எல்லாரும் ஒரே குடித்தனக் கூட்டுக் குடும்பமா இருக்க முடிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம் …..அது இல்லாத பட்சத்தில் அவர்களைப் வந்து பார்த்துக்க வேண்டி வந்தால் தடுக்காமல் இருக்கணும்….இது ஒரு ரெக்வெஸ்ட்.. அப்போ நம்மளோட ஸ்ரிங்க்கான ஃபாமிலி கண்டிப்பா எலாபரேட் ஆகும்..




அதே மாதிரி…கல்யாணம் என்ற பேரில் ரொம்ப செலவு செய்து தாம் தூம்னு கஷ்டப் பட்டுசம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமா செலவு செய்றதில் எனக்கு உடன்பாடே இல்லை. அதற்கு ஆகும் செலவை சேமிப்பில் போட்டு வெச்சா நம்ம ஃபுயூச்சருக்கு ஆகும்..கஷ்டப் பட்டு கடன் வாங்கி கல்யாணம் பண்ணீண்டு அப்பறம் வாழ்நாள் பூரா வட்டி கட்டி கடன் கட்டிண்டு இருக்கற எத்தனை ஃபாமிலி இருக்கா தெரியுமா? இதெல்லாம் என்னோட வியூஸ் தான்…உங்களுக்குன்னு ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்கோ…நாம வெளிப்படையா பேசி ஒர் மண ஒப்பந்தம் செய்து கொள்வோம்.. என்று சிறிது நேரம் அமைதியானாள் . பின்பு , உங்களைச் மீட் பண்ணி பேசினதில் நான் ரொம்ப ஹாப்பி. என்று நிறுத்துகிறாள் கௌரி.




ஸேம் ஹியர் ..கௌரி…உங்க தாட்ஸ் ரொம்ப சரி தான். வெரி நைஸ்…..ஐ அப்ரிஸியேட் யுவர் வால்யூஸ் . யூ ஆர் ரைட் அண்ட் குட்..எனக்கும் அதே போலத்தான். உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். ஈவன் ஐ லைக் யூ ..என்று தங்கு தடையின்றிக் கம்பீரமாகச் சொல்லி நிறுத்துகிறான் கார்த்திக்.




ஐ கேரண்டி…தாங்க்ஸ் என்று நாணத்துடன் சொல்லிவிட்டு அப்போ நாம் ஹாலுக்குப் போகலாமா என்று எழுந்து கொள்கிறாள் கௌரி…!




இருவரும் வெளியில் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க நினைத்துத் தோற்றுப் போகிறார்கள் அங்கிருந்த பெரியவர்கள்.




இவள் என்னத்தத் தனியாப் பேசறேன்னு சொல்லி காரியத்தைக் கெடுத்து வெச்சிருக்காளோ ..என்று பயந்த படியே மகளின் முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.




பேசியாச்சா? என்று கார்த்திக்கின் அப்பா மகனைப் பார்த்துக் கேட்க்கிறார்…அவனும் “ம்ம்…ம்ம்…” என்று தலையாட்டுகிறான்.




அப்போ நாங்க பெரியவா….பேசலாமோன்னோ..என்று அவர் கேட்கவும்….ஈஸ்வரன் குறுக்கிட்டு ” பேசலாம்….கேளுங்கோ..என்ன கேட்கப் போறேள் ? என்று பீடிகையோடு ஆரம்பிக்க.




“எங்களுக்கு இருப்பது கருவேப்பலை கொத்தாட்டமா ஒரே பையனாக்கும்…அவனோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை…அதனால கல்யாணத்தை மட்டும் கொஞ்சம் கிராண்டா பண்ணிடுங்கோ…நாங்க வேற ஒண்ணும் அது வேணும்..இது வேணும் ன்னு டிமாண்ட் பண்ணலையாக்கும். உங்களுக்கும் ஒரே பொண்ணு தானே…இதே ஆசை உங்களுக்கும் இருக்காதா என்ன…? என்று கார்த்திக்கின் அப்பா பேசிக் கொண்டே போக, அம்மா…ஆமாம்..அதை நாம சொல்லணுமா என்ன? அவா பொண்ணுக்கு அவா நன்னா செய்வா….இல்லையா? நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம். அவாளுக்கே தெரியும். எங்களோட ஒரே டிமாண்ட் கொஞ்சம் தடபுடலா, கச்சேரிக் காட்சியோடு மாரேஜ் நடக்கணும், அவ்வளவுதான். அதுக்கப்பறம் நீங்க செய்றதெல்லாம் உங்க பெண்ணுக்குத் தான். என்று நிறுத்துகிறாள்.




கார்த்திக் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிவதை கௌரி பார்க்கிறாள். அவனது கண்கள் கௌரியை கெஞ்சுவது போலப் பார்த்து விட்டு நகருகிறது.




ஈஸ்வரன் மனசுக்குள் கணக்குப் போட ஆரம்பிக்கிறார்…இந்தக் காலத்தில் டீசண்ட், க்ராண்ட் கச்சேரி மேரேஜ் எல்லாம்…குறைந்தது பத்து லக்ஷத்தில் கொண்டு போய் நிறுத்தும். இத்தனைக்கும் ரெண்டு பேருமே ஐ.டி யில் வேலை பார்க்கிறவா…கூட்டத்துக்குக் கேட்கணுமா? நம்மால தாங்குமா ? விரலை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறார்.இந்த வீக்கத்தை இந்த விரல் தாங்குமா? மனசு கால்குலட்டரை நீட்டுகிறது..




சித்ரா அங்கிருந்து..கணவரின் காதருகில் வந்து “சரின்னு சொல்லுங்கோன்னா….இந்த சம்பந்தம் போனால் வராது…..வீட்டை அடமானம் வெச்சுடலாம்..தேவையானால் வித்துடலாம்…..” என்று சமாதானப் படுத்தும் வகையில் ஈஸ்வரனின் காதில் கிசு கிசுக்கிறாள்.




இந்த நேரம் பார்த்து கௌரியின் கைபேசியில் ஆங்கிலப் பாடல் அலறுகிறது…..




Tonight we dance,

I leave my life in your hands.

We take the floor,

Nothing is forbidden anymore.




Don’t let the world in outside.

Don’t let a moment go by.

Nothing can stop us tonight!




[Chorus]

Bailamos! – We Dance

Let the rhythm take you over…

Bailamos!




இந்தப் பாடலைக் கேட்டதும் கார்த்திக்கும் கால்களால் தாளம் போட ஆரம்பிக்கிறாரன் …




அதைப் பார்த்துக் கொண்டே கௌரி புன்னகைத்தபடியே மொபைலை எடுத்து சர்வ சாதாரணமாக பேச ஆரம்பிக்கிறாள்.




” ஹலோ ரேவ்ஸ்….ஹௌஸ் லைஃப்? எனி இம்ப்ரூவ்மெண்ட்…..?




“………………….” அந்த பக்கம் சொன்ன பதில் ஒன்றும் இவர்கள் காதில் விழவில்லை.




வாவ்….தட்ஸ் குட் ஐடியாடி…..செப்பரேடா போறேளா? வீடு பார்த்தாச்சா? ம்ம்…தனிக் குடித்தனமாக்கும்….! கடைசீல நினைச்சதை சாதிச்சுட்டே…பின்ன உன் ஹஸ்பண்டை டென் லாக்ஸ் கொடுத்து வாங்கிருக்க….பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டோட டாட்டர்…..ம்ம்ம் நீ இழுத்த இழுப்புக்கு வந்து தானே ஆகணும்….? எனிவே கங்க்ராட்ஸ்…..பை தி பை இங்க இப்போ வீட்டில் என்னைப் பார்க்க வந்திருக்கார் மாப்பிள்ளை வீட்டார் ஃபாமிலியோட….!




“……………………….…………”

அஃப் கோர்ஸ்…ஐ பிரிஃபர் அண்ட் ஐ லைக் ஜாயிண்ட் ஃ பாமிலி ஒன்லி…!










“……………………….…………”




நாட் யெட் ரேவ்ஸ்….ஸீ யூ…பை…பை..என்ஜாய் .! என்று கைபேசியை மூடினாள் கௌரி.




யார் முகத்திலும் ஈயாடவில்லை…..சித்ரா ஓரமாக உட்கார்ந்து கொண்டு கௌரியைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்…”இந்த நேரத்தில் இப்படி ஒரு ஃபோன் பேசலைன்னு யாராக்கும் அழுதா? காரியத்தைக் கெடுதுண்டுடுத்து …தவளை தன வாயால கெடுமாம்…..! என்று என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பிக்கிறாள். மனம் பூரா “வட போச்சே…” சோகம் கப்பியது.நேரங்காலம் தெரியாமல் ரேவதி ஏன் தான் போன் செய்தாளோ ? என்று அவளை சபித்தது.




அப்போ நாங்க புறப்படறோம்…அதான் பேச வேண்டியதைப் பேசியாச்சே…மேற்கொண்டு ஆத்துக்குப் போய் கலந்து பேசீண்டு ஃபோன் பண்றோம் என்று அரை குறையாக “மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ” அதிகம் நாட்டம் காண்பிக்காதபடி கிளம்புகிறார்கள்.




கார்த்திக்கின் பார்வை கெளரியின் கண்களைத் தொட்டுச் சென்றது. அதில் “நீதானே எந்தன் பொன்வசந்தம்..” என்ற காதல் தூது இருந்தது.




அதைப் புரிந்து கொண்டு கௌரி நிமிர்ந்து மென்மையாகச் சிரிக்கிறாள். அதில் சம்மதம் என்று எழுதி இருந்தது.




காரில் ஏறும்போது கௌரியின் கண்ணோடு கார்த்திக்கின் கண்கள் ஆழமாகப் பார்த்தது. அப்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட கௌரி கார்த்திக்கின் கல்யாணம் ….. நடக்கப் போவதற்கு அச்சாரமாக அந்தப் பார்வை அவர்களுக்குள் “காதலை” ஆரம்பித்தது.




சித்ராவுக்குப் புரிந்து போனது இந்த வரனும் ‘ கோவிந்தா’ என்று. அதனால் வந்த கோபத்துடன் அறைக்குள் ;நுழைந்து கதவை டமார் என்று அறைந்து சார்த்திக் கொள்கிறாள்.




ஈஸ்வரனோ மனதுக்குள் “…நன்னாச்சு”….இதில்லைன்னா இன்னொண்ணு என்று சமாதானமாகி எதுவுமே நடக்காதது போல தட்டு நிறைய பஜ்ஜியை எடுத்து வைத்துக் கொண்டு ”ஜீ தமிழ்’ சானலில் ஜான்சி ராணி சீரியல் பார்க்க உட்கார்ந்து கொண்டார்.




கௌரியின் மனம் மட்டும் எதையோ இழந்தது போல வலிக்க ஆரம்பித்தது.. அப்போ என்னையும் மீறி நான் அவரை….1 நினைக்கும் போதே சிலிர்த்துப் போகிறாள்..




கூடிய விரைவில் ‘டௌரி தராத கௌரி கல்யாணம்’ கார்த்திக்கோடு தான் நடக்கும் என்று. அவளுக்குப் புரியவும் வெட்கப்பட்டுச் சிரித்துக் கொள்கிறாள்.







பெண் பார்த்த படலம் முடிந்து இரண்டு நாளாகியும் வீட்டில் ஒரே மௌன போராட்டம் தான். ஏதோ கடமைக்கு சமைத்து வைத்துவிட்டு டைனிங் டேபிள் மீது "எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும்."..என்று ஒரு பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து விட்டு கோவிலுக்குப் போய் விடுவாள் சித்ரா.







ஏன்மா...? ஏன் பேசமாட்டேங்கறே? கௌரி சத்தமாக அம்மாவின் முகத்தைத் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்கிறாள். அவா வேண்டாம்னு சொல்லிட்டு போனதுக்கு உனக்கெதுக்கு என் மேல தேஷியம் ? இப்போப் புரிஞ்சு போச்சு நோக்கு என்னை சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணி இந்தாத்துலேர்ந்து தொலைச்சுக் கட்டணும் ..அது ஒண்ணு தான் உன்னோட அம்பிஷன்..அப்படித்தானே? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ....நன்னா ரெண்டு பேருக்கும் தான்...சொல்றேன். "இனிமேல் இந்தாத்துல என்னைக் கேட்காமல் பெண் பார்க்கறேன் புண்ணாக்குப் பார்க்கறேன்னு.." யாரையாவது கூப்டேளானாத் தெரியும் சேதி. அப்பறம் யாருமே நம்மாத்துக்கு வராத மாதிரி பண்ணிடுவேனாக்கும்..அடுப்பில் போட்ட கடுகாக பட பட வென்று பொரிந்து தள்ளிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொள்கிறாள் கௌரி.







சித்ரா வாயடைத்துப் போய் ஈஸ்வரனைப் பார்க்கிறாள்..."பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்கான கதையான்னா இருக்கு " இவளோட கதை. யானை தன தலையில் தானே மண்ணை வாரி தூத்திக்குமாம்...அதே மாதிரி பேசிட்டுப் போறதைப் பாருங்கோ. இவ்ளோ படிக்க வெச்சதுக்கு வாய் மட்டும் தான் வளர்ந்திருக்கு.இந்தக் கத்து கத்தறா ...இதுல நான் வேற பேசணுமாம்.....நானும் சொல்லிட்டேன்....இன்னிலேர்ந்து நான் மீண்டும் மௌன விரதம்.




அவளுக்காச்சு...நேக்காச்சு..யாருகிட்ட....என்கிட்டயேவா? சித்ராவின் அத்தனை ஆற்றாமையும் வார்த்தைகளில் வெடிக்கிறது.







ஈஸ்வரன், தன மனைவி சித்ராவைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியில் போகத் தயாராக ஷர்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்புகிறார்.







ஏன்னா...நீங்க எங்கே கம்பி நீட்டறேள்? ஆண்களுக்குத் தான் உள்ளதா....ஆ...ஊ...ன்ன ஷர்ட்ட மாட்டிண்டு கிளம்ப..? நாங்க மட்டும் என்னவோ சாஸ்வதமா அடுக்களையை சாசனம் எழுதி வாங்கீண்டா மாதிரி எப்போப் பாரு உங்க வயித்தை எல்லாம் நான் கட்டீண்டு அழறேன்.....அதும் இந்த வேகாத்த வெய்யில்ல.! சித்ரா எரிந்து விழுகிறாள்.







பின்ன உன்னோட சேர்ந்து என்னையும் அடுக்களையில் வேகச் சொல்றியாக்கும்....நான் ரெடி...! நான் சமையல் செய்ய ஆரம்பிச்சா அவ்ளோதானாகும்..நேக்கு மவுசு கூடும்...ஆனா நீ தான் புவ்வாவுக்கு என்ன செய்வே? மாசா மாசம் யாராக்கும் படியளப்பா ..இதெல்லாமாக்கும் நீ சோதிக்கணும, கேட்டியோ. சும்மா வாய்க்கு வந்ததோ மாங்காய் புளிச்சதோன்னு பேசப்படாதுங்கிட்டியா...சொல்லிக் கொண்டே கேட்டைத் தாண்டி சென்று விட்டார்.மனசுக்குள் "எஸ்கேப்".







அறையிலிருந்து அப்பா பேசுவதைக் கேட்டபடியே வெளியில் வந்த கௌரி "அம்மா, நோக்கு பாட்டியாத்துக்கு போகணுமானாப் போய்க்கோ....கொஞ்ச நாள் உங்கமாவாத்தில் போய் ஜாலியா இரேன்..யார் உன்னத் தடுக்கறா ? நான் எங்க கேண்டீன்ல பார்த்துக்கறேன்...இந்த அப்பாவுக்குத் தான் இருக்கவே இருக்கே...."கிருஷ்ண விலாஸ் " இட்லியும் கொத்தமல்லி கொத்ஸும் ...நீயும் கம்பிநீட்டு....கதவை நீட்டு..!







ஓ ...அதாக்கும் தைரியம்...! நீ சொல்லாட்டாலும் நான் போகத் தான் போறேன். நான் இல்லாட்டாத் தான் உங்க ரெண்டு பேருக்கும் என்னோட அருமை புரியுமாக்கும். .உனக்குக் கார்த்தால டிரெஸ் பண்ணிக்கவே நேரம் பத்தாது. கார் வந்து வாசல்ல ஹாரன் அடிச்ச பிறகு தான் உன் உடம்புல சுறுசுறுப்பு வரும். நான் மட்டும் இல்லையானாத் தெரியும் சேதி...இப்போ நோக்கெதுக்கு என்னோட கவலை...? வாசல்ல ஹாரன் சத்தம் கேட்கிறது பாரேன்..உன்னோட ஆபீஸ் கார் வந்தாச்சு நீ போய்க்கோ. சித்ரா கௌரியைப் பார்த்து சொல்லிக் கொண்டே தனது புடவையை ஓங்கி உதறி மடித்துக் வைக்கிறாள்.







கௌரி கிளம்பி காரில் ஏறியதும் கார் உறுமிக் கொண்டு கிளம்பியது.







இடி இடிச்சு நின்னாப்பல இருக்கு...! கிளம்பற வரைக்கும் ஒரே தடால் தடால் தான்.....என்று அலுத்துக் கொண்டே கதவைச் சார்த்தி விட்டு உள்ளே வந்தவளுக்கு ஆச்சரியமாக அழைப்பு மணி அடிக்கவும்...திகைப்புடன்..."இதோ வரேன்" என்று குரல் கொடுத்தபடியே வாசல் கதவைத் திறக்கிறாள் சித்ரா.







கதவருகில் பார்த்த முகங்கள்...! இரண்டு பெரும் சிரித்தபடியே பெட்டியோடு நிற்பதைக் கண்டு சட்டென்று நினைவுக்கு வராமல் திகைப்புடனும், குழப்பத்துடனும் "நீங்கள் யாராக்கும்?" என்று இழுக்கிறாள் சித்ரா.







போன வருஷமாக்கும் நாங்கள் இங்க வந்தோம்..உங்காத்து பொண் கௌரியைப் பொண் பார்க்க....ஓர்மையில்லையா ? ....வயசாச்சோன்னோ....நம்மளக் கேட்டா மறதி வரது ..! நேக்கும் இப்படித் தான்....நேத்துப் பாத்தவாளையே ஓர்மையிருக்கறதில்லை இதாக்கும் என்னோட ஒரே பிள்ளை பிரசாத்....டெல்லிலேர்ந்தாக்கும் வரோம். என்றதும்....எங்கிருந்தோ ஒரு துடிப்பு சித்ராவை ஒட்டிக் கொண்டது.







ஓ ...நீங்களா...நன்னாச்சு .வாங்கோ...வாங்கோ.....முகமெல்லாம் மின்னலடிக்க மனசில் திடீரென்று தீபாவளி வந்து போக வாயெல்லாம் சக்கரைப் பொங்கலாக...கண்கள் கார்த்திகையாக ஒளிர ஒரே நொடியில் பல பண்டிகைகள் செலவில்லாமலே கொண்டாடினாள் சித்ரா.!இவர்கள் போன வருஷம் பெண் பார்த்துட்டு ஒரு லட்சம் வரதட்சணை கேட்டவர்கள்.மனது மணி அடித்தது.







உட்காருங்கோ....உட்காருங்கோ.....முந்தாநாள் தான் உங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோமாக்கும் .




என்ற சித்ரா அவர்களை தடபுடலாக வரவேற்று "இந்த நேரம் பார்த்து அவர் கூட ஆத்துல் இல்லை...வெளில போயிருக்கார்...சித்த நாழியாச்சு..கௌரியும் ஆபீஸ் போயாச்சாக்கும்...நீங்க வருவேள் ன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்திருந்தால் நன்னாருந்திருக்கும்...இருங்கோ காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்.அவளது படபடப்பு மொத்தமும் பேசித் தீர்த்து மூச்சு வாங்கியது சித்ராவுக்கு.










ரொம்ப தாங்க்ஸ் மாமி....நாங்களும் யோசிக்கவேயில்லையாக்கும் ...இவன் தான் பிரசாத் கண்டீஷனாச் சொன்னான்..."டௌரி எல்லாம் ஒண்ணும் வேண்டாம் கௌரி மட்டும் போதும் " ன்னு பேசி முடியுங்கோன்னு..அதான்..உடனே மெனக்கெட்டு இதுக்காகவே கிளம்பி வந்தோம்.ஒரு வேளை கௌரிக்கு வேற இடம் தகையலைன்னா பார்க்கலாமே, இல்லையா? நீங்க கௌரி ஆபீஸ் போயிருக்காள்னு சொன்னதைக் கேட்டதும் தான் நேக்கு நிம்மதியாச்சு....அவளுக்கு இன்னும் வரன் தகையலைன்னு..தெரிஞ்சது ...என்று பிரசாத்தின் அம்மா சொல்லி வாய் மூடவும்.







ஓ ...பேஷா...பேஷா....நானும் நினைச்சுண்டு தான் இருந்தேன்...என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போது கௌரியின் அப்பா உள்ளே நுழைகிறார்.







இவர்களைப் பார்த்ததும், ஓ ....நீங்களா? டெல்லியிலேர்ந்து எப்போவாக்கும் இங்க எத்தினேள் ? உங்க புள்ளைக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா? கல்யாணப் பத்திரிகை கொடுக்க எங்க வீடு தேடி வந்தேளாக்கும்? அதப் பாருங்கோ...இது வரைக்கும்...பெண்ண பார்த்துட்டுப் போறவா ஏதோக்




காரண த்தால அந்த வரன் தகையாமல் போனாலும் , அப்பறம் அவாத்துக்கு கல்யாணப் பத்திரிகையை கொண்டு வந்து தரும் உலகப் பெரிய மனசு உங்களுக்குத் தான் இருக்கு..!..அது புதுமையானது. பை த பை, எங்காத்து கௌரிக்கும் கல்யாணம் நிச்சயமாயிடுத்து தெரியுமோ? சித்ரா சொன்னாளோ ...என்றவர்..நான் சொன்னா மாதிரியே எந்த வரதட்சிணையும் தராமல் நடக்கப் போற கல்யாணம் தான் இது...எங்களுக்கெல்லாம் பரம சந்தோஷம் ..என்றவர்...எங்கே உங்காத்து கல்யாணப் பத்திரிகை..




இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வெச்சிருப்பார்னு சொல்வா....ஒருத்தர் பொணட்டாட்டியை இன்னொருத்தர் கல்யாணம் பண்ண முடியாதோன்னோ .....சொல்லிக் கொண்டே..சித்ரா...காப்பி ஆச்சா? எடுத்துண்டு வா...இவா சாப்ட்டுட்டுக் கிளம்பட்டும்..என்று குரல் கொடுக்கிறார்.







ஈஸ்வரன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா விக்கித்துப் போய், இவருக்கென்ன ஆச்சு? என்று எண்ணியவளாக ஏதோ புரிந்தபடி "அடப் பாவி மனுஷா ...! இப்படியா ஆட்டத்தை அம்பேல் பண்ணுவேள்?" உங்களை ஊரென்ன சொல்றது....? நானே சொல்வேனாக்கும்...பெத்த பெண்ணோட சம்பாத்தியம் மட்டும் தான் ஒரே குறி. அதான் வந்த வரனை நக்கலும் நையாண்டியும் கேலியும் கிண்டலும் பேசி ஓட ஓட விரட்டி விடறேள்....மனசுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டே இதோ...! வந்தாச்சுன்னா என்று சித்ரா குரல் கொடுக்கிறாள்.







அதற்குள் வந்தவர்கள் விஷயத்தை ஓரளவு கிரஹித்துக் கொண்டு நாங்களும் நினைச்சோம்...கெளரிக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கலாம்ன்னு....என்று இழுத்தபடியே..... முகத்தில் அறைந்தாற்போல பேசிய ஈஸ்வரனின் வார்த்தைகளைக் கேட்டதும் அங்கு மேலும் உட்காரப் பிடிக்காமல் இருவரும் சித்ராவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல்....எழுந்து சென்று விட்டனர்.







ஹாலுக்கு வந்த சித்ரா அங்கு யாருமில்லாததைக் கண்டதும், " நான் அப்பவே நினைச்சேன்...இப்படி மூஞ்சீல அறைஞ்சாப்பல பேசினா யாரு உட்கார்ந்து கேட்பா? அதான் போய்ட்டா...நேக்குத் தெரியும்..அதான் நான் காப்பியே போடலை...நேக்கு எங்கே மூஞ்சி இருக்கு அவாளப் பார்க்க? அதான் வெளிலயே வரலை..நீங்க தான் உங்களோட குத்தல் பேச்சுலயே வெளில தள்ளிட்டேளே ...பேஷ்..பேஷ்.....ரொம்ப நன்னாருக்கு....இத...இத...இதத் தான் நான் எதிர்பார்த்தேன்." என்று மூக்கு கோவைப் பழமாகச் சிவந்த சித்ரா "அப்பாவும் பெண்ணும் எக்கேடோ கெட்டுப் போங்கோ...பழம் நழுவிப் பாலில் விழறதேன்னு நான் நினைச்சு சந்தோஷப் பட்டேன்....நம்ம கௌரியை டௌரியே வேண்டாம்




நம்ம கௌரி மட்டும் போறும்னு...அந்த பிரசாத் சொன்னதும் ஃபிளைட் பிடிச்சு டெல்லிலேர்ந்து வந்திருந்தாளாக்கும் . அவாகிட்ட உங்களுக்கென்ன ஈகோ வேண்டிக் கிடக்கு...பொய் சொல்லி அனுப்பியாச்சு...அதிர்ஷ்ட தேவதை வந்து நம்ம வாசல் கதைத் தட்டியது ! ..அதான் அடிச்சு விரட்ட நீங்க இருக்கேளே....போதும்..போதும்.....என்று சலித்துக் கொண்ட சித்ராவைப் பார்த்து ஈஸ்வரன் பெருமையோடு சிரித்துக் கொள்கிறார்.







அடி போடி...நீ வேற...! இந்த ஒரு வருஷமா அவாளுக்கு வேற எந்தப் பொண்ணுமே கிடைச்சிருக்காது..அதான் சுவத்தில் எரிஞ்ச கீரையை வழிச்சுப் போடுங்கறாப்பல.... போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு வந்து நிக்கறா. இதைப் போய் நீ பெரிசா எடுத்துண்டு எங்கிட்ட கச்சம் கட்டி நிக்கற. இந்தக் காலத்துல பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக்கும். நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என்று பீடிகையோடும் நமுட்டுச் சிரிப்போடும் மனைவியின் முகத்தைப் பார்க்கிறார் ஈஸ்வரன்.







எண்டே குருவாயூரப்பா....இவரோட நேக்கு.....சொல்லுங்கோ என்னவாக்கும் விஷயம்?







நோக்கு கார்த்திக்கை ஓர்மையிருக்கோடி...? ரெண்டு நாள் முன்னாடி வந்தானே....!







ம்ம்ம் அதானே...அந்த வரன் தான் இல்லை ன்னு ஆயாச்சே...!







எவன் சொன்னான்..? நமக்குத் தெரிஞ்சது அவ்ளோ தான்.ஆனால்...கௌரி என்னமோ...இன்னைக்குக் கார்த்தால கூட அந்த கார்த்திக்கோடத் தான் சிரிச்சு சிரிச்சு பேசீண்டு இருந்தாளாக்கும்...நான் ஒட்டுக் கேட்டேன்....பெண் பார்த்துட்டு போனானே கார்த்திக் அவனே தான்.







அட...அப்படியா? இது எங்க கொண்டு போய் விடப் போறதோ..?







கண்டிப்பா டௌரி தராத கௌரி கல்யாணத்துல தான்....நேக்கு சந்தேகமே இல்லையாக்கும்..!







ஓ ..முடிவே பண்ணியச்சாக்கும் நீங்க...! அதனா...இன்னைக்கு கார்த்தால கௌரி அந்தக் கத்து கத்தினா...?







நீ கொஞ்சம் பேசாமல் இரு. இதை நான் சொன்னதா வெளில காட்டிக்காதே சரியா? எத்தனை நாள் இப்படிப் போறதுன்னு பார்ப்போம். இது தெரிஞ்சதாலத் தான் நான் அந்த டெல்லிப் பிள்ளை பிரசாத்தைக் கூட சாமர்த்தியமா அனுப்பிட்டேன்..நோக்கு அதாவது தெரியுமா ? ஈஸ்வரன் சொல்வதைக் கேட்ட சித்ரா..ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடியே நிற்கிறாள்.







அட...ஆமாம்னா....உங்க புத்தியே புத்தி.....உங்க சமத்து யாருக்கு வரும்...? நானும் இருக்கேனே.....மண்டூகமாட்டம் என்று தலையில் அடித்துக் கொள்கிறாள்.







அட சித்ரா நீ நன்னாயிட்டு அரசியலுக்குப் போகலாம் கேட்டியா? சூப்பரா கட்சி தாவறே...!







அதொண்ணாக்கும் இப்ப நேக்கு குறைச்சல்..?







பின்னே உன்ன மாதிரி பொம்மனாட்டி எல்லாரும் தான் இப்போ அரசியல்லே ஜெயலலிதா, குஷ்பு போல கொடி கட்டிப் பறக்கறா தெரியுமொன்னோ ?







அந்த இலட்சணத்தைத் தான் தெனம் பார்க்கறேனே டி வி ல...!என்னால வீட்டு அரசியலே சரியா நடத்தத் திராணி இல்லையாம்...இந்த லட்சணத்தில் நீங்களும் உங்கள் கிண்டலும் கேலியும்...ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசீல.....சித்ரா சொல்லிக் கொண்டிருந்த பொது....டெலிபோன் மணி அலறி அவளை அரசியலுக்கு "வா..வா..." என்று அழைத்தது.







ரிசீவரை எடுத்து ஹலோ...யாராக்கும்...உங்களுக்கு யாராக்கும் வேணம் ? என்ற சித்ராவின் கேள்விக்கு பதிலாக அடுத்த முனை கிசுகிசுத்தது.







."நானாக்கும்....மாமி....கார்த்திக்கோட அம்மா கல்யாணி பேசறேன்...ஓர்மையுண்டோ...?







சித்ராவுக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது...கையோடு சேர்ந்து ரிசீவரும் கூடவே குரலும் நடுங்கியது.







ஓ ......நீங்களா....இப்பத்தான் உங்கள நெனைச்சேன்.......உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள்.




அதொண்ணுமில்லை....உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான். அவனோட இஷ்டம் எதுவோ அது தான் எங்களோட இஷ்டமும்..நீங்க என்ன சொல்றேள்..? எதுவும் இப்போ நம்ம கையில இல்லையாக்கும்.இது எல்லாம் ஈஸ்வரன் கிருபை....நம்ம குட்டியள் இஷ்டம் தானே நமக்கு முக்கியம். அதான் நானே உங்க கிட்ட சொல்லிக்கறேன்னு சொல்லிட்டேன். கௌரி நல்ல பெண் குட்டி. எங்களுக்குப் பரம திருப்தி தான். என்ன செய்ய..வாழப் போறது அவா தானே? வேற நல்ல இடத்தில் வரன் அமையும்...எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை....தப்பா நினைக்கப் படாது....அப்போ நான் போனை வெச்சுடவா? என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல் ரிசீவரை வைத்து விட்டு "ஹப்பாடா...ஒரு வழியா சொல்லியாச்சு...அடங்காப் பிடாரி கௌரி கிட்ட இருந்து தப்பியாச்சு.....ஹப்பப்பப்பா இந்த மாதிரி மாட்டுப் பொண்கள் கிட்ட மாட்டிண்டு தவிக்க முடியாதுடா சாமி...இவா டௌரி தர மாட்டாளாம்.....கல்யாணம் மட்டும் நடக்கணுமாம் .....எப்டி? மந்திரத்துல மாங்காய் காய்க்குமா? கை நிறைய சம்பாதிக்கிறாளாம்....பெரிய சம்பாத்தியம்....அது முழுசும் அவளோட டிரஸ்,வித விதமா செருப்பு, ஹாண்ட்பாக், சென்ட் பாட்டிலுக்கே பத்தாதே....நேக்கு அதெல்லாம் தெரியாதா என்ன? இந்தக் காலத்துல சம்பாதிக்கறத விட ஹவுஸ் வொய்ஃப் தான் சேஃப் ... வேலைக்குப் போறவா கதி எல்லாம் வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா ....தான். எனக்கே அந்தக் காலத்துல ஐயாயிரமாக்கும் தட்சிணை கொடுத்து குடித்தனம் பண்ண அனுப்பிச்சா ..." என்று சொல்லிக்கொண்டே நிம்மதி பெருமூச்சு விட்டாள் கல்யாணி.




பேப்பர் படிக்கும் சாக்கில் முகத்தை மூடிக் கொண்டு தன் மனைவி பண்ணும் காரியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் அப்பா...பேப்பரை கீழே இறக்கி, " ஏன் இப்படி செய்தே ? என்பது போல ஒரு பார்வை தான்...அதற்குள்...




இந்தாருங்கோ இதிலயெல்லாம் நீங்க தலையிடாதேங்கோ....நானாச்சு. நேக்கு அந்தப் பொண்ணைத் துளிக் கூடப் பிடிக்கலை. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் நம்ம முன்னாடியே எப்டிப் பேசித்து பார்த்தேளா..? வாயாடி..துளிக் கூட பயமே இல்லை. நம்மாத்து கார்த்திக் அப்பாவி....அவனைப் போயி இப்படி மாட்டி விடக் கூடாதுன்னு தான் அவனுக்கே பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சு..ஒத்துக்கறேன்...நான் தான் இந்த அலையன்சை கொண்டு வந்தேன். நன்னாப் படிச்சிருக்கா, கை நிறைய சம்பளம் வாங்கறான்னு...இதெல்லாம் ஆத்துக்குள்ள வந்தா ஆத்து நிம்மதியே காணாப் போயிடும்...என்ன சொல்றேள்..? நம்ம ஆனந்து பெரியப்பா கதை தான் வீட்டில் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு தெனம் ஒரு சண்டை மண்டை உடையும்....நீயா நானான்னு? யாருக்கு இங்க திராணி இருக்கு சண்டை போட...என்னன்னா நான் சொல்றது சரி தானே?




ம்ம்ம்ம்....நீ சொன்னாச் சரியாத்தான் இருக்கும். இப்ப நான் இல்லையா? ஆத்துக்கு ஒருத்தர் தான் அப்படி இருக்க முடியும்....நம்ம கார்த்திக்குக்கு இவளை விட ஏற்ற ஜோடி கிடைக்காதுன்னு சொன்னா நீ எங்க ஏத்துக்கவா போறே? அப்பறம் நான் கேட்ட நேரத்துக்கு காப்பி கிடைக்காது. அதுக்கு ஒரே வழி...உன் வழி தான் என் வழின்னு தலையை ஆட்டிட வேண்டியது தான். மனசுக்குள் நினைத்தது வெளியே தெரியாமல் தலையை ஆட்டினார்.




ஏண்டி ஒண்ணு கவனிச்சியோ...இந்த கார்த்திக் பயல், இப்பல்லாம் சீக்கிரமா எழுந்துக்கறதென்ன ......வாக்கிங் போறதென்ன .....நம்மகூட சிரிச்சுப் பேசறதென்ன....ன்னு நீ கவனிச்சியோ? நேக்கென்னமோ தோண்றது , இதெல்லாம் நாம அந்தப் பொண்ணைப் பார்த்ததுக்கு அப்பறமாத் தான் இப்படி ஒரு சேஞ் ...சரி தானே?




மூஞ்சி....புத்தி போறதே உங்களுக்கு.....அவனுக்கா... தோணிருக்கும்... இதுக்கெல்லாம் அந்த வாயாடியை வம்புக்கு இழுத்து மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போடாதேங்கோ...அந்தப் பொண்ண நாம மறக்கறோம். கூடிய சீக்கிரம் வேற பெண்ணைப் பார்க்கறோம் கேட்டேளா.




நீ உன் புள்ளைக்கு பொண்டாட்டி தேடறியோ இல்லையோ நோக்கு ஆமாம் சாமி போடறா மாதிரி ஒரு அப்பாவி மாட்டுப் பொண்ணை சல்லடை போட்டுத் தேடிக்கறே....நீ தான் பிளவுஸ் எடுத்துண்டு போயி புடவை வாங்கற பார்டியாச்சே...நடத்து...நடத்து.. நான் உன் குறுக்கே வரலை.




அப்படிச் சொல்லுங்கோ. பின்னே...கொஞ்ச நஞ்சமாவா செலவு பண்ணி இவனை இஞ்சினீயர் படிக்க வெச்சோம். பத்து லக்ஷம் அட்மிஷனுக்கு .. ! ஃபீஸ் ஒரு லட்சம் வருசத்துக்கு .. ! இந்த மாப்பிள்ளையை சும்மா வாங்க வந்திருக்கா .. ! நாலு வருசமா எவ்வளவு செலவாச்சு.அதத் தவிர வேலை...காரு...பங்களா....சும்மா வருமோ சொர்க்க லோகம்? இந்த வீடு ஒண்ணே போதுமே..... இன்ன தேதிக்கு அம்பது லட்சம் போகும்... இத்தனை சொத்தும் அவளுக்குத் தான் போகப் போறது....ஒரே பிள்ளையோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திப் பார்க்க வேண்டாமா? அது கூட செய்ய முடியாதவா நம்ம சம்பந்தியா எப்படி ஏத்துக்க முடியும்....நான் பேசறதில் நியாயம் இருக்கு தானே? கல்யாணத்தை நன்னா நடத்திக் கொடுங்கோன்னு சொன்னதும் அவா மூஞ்சி போன போக்கைப் பார்த்தேளா? நான் என்னமோ கேட்கக் கூடாததை கேட்டா மாதிரி...இந்த லட்சணத்தில் அந்தப் பொண்ணுக்கு இவனோட தனியாப் பேசணுமாம்......? என்ன வேண்டியிருக்கு.... அதெல்லாம் நேக்குத் துளிக் கூடப் பிடிக்கலை..அதான்....நானே இந்த வரன் வேண்டாம்னு வெச்சேன்...நல்ல வேளையாக் கண்ணைத் தொறந்துண்டு படுகுழியில விழத் தெரிஞ்சோம். தப்பிச்சோம்.




சரி விடு.....சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதுன்னு சொல்வா....அது சரியாத் தான் இருக்கு....நம்ம கார்த்திக் விஷயத்துல.




அது சரி..நீங்க யாரை பூசாரிங்கறேள்? யாரை சாமி எங்கிறேள் ? சாமி நீங்களா ? நான் பூசாரியா ?



















நிச்சயமா நான் உன்னைச் சொல்லலை...அவாளைச் சொன்னேன்.... என்று சொல்லிக் கொண்டே..ஒரு வாய் காப்பி கலந்து தாயேன்....நீ பேசினதைக் கேட்டே என் தொண்டை உலர்ந்து போயிடுத்து.




வேளா வேளைக்கு ஏழு தரம் காப்பி குடிச்சே நீங்க இந்த சொத்தை அழிச்சுடுவேள்....சொல்லிட்டேன்..காப்பிப் பொடி கிலோ நானூறு ரூபாயாக்கும்....இனிமேல் ரெண்டாவது மூணாவது காப்பி எல்லாம் கட்டுப்படி ஆகாது..இப்பவே சொல்லிட்டேன்.....வந்தவா போறவா ளுக்கெல்லாம் இனிமேல் என்னால காப்பி போட்டு கொடுத்திண்டு இருக்க முடியாது....போனாப் போறதுன்னா ஒரு வாய் டீ தான்....ஆமாம்...உங்களுக்கும் வெறும் டீ தான்...சொல்லிக் கொண்டே அடுக்களை பக்கம் போகிறாள் கல்யாணி.




ஃபோனை வைத்து விட்டுத் திரும்பிய சித்ரா, ஏன்னா இந்தக் கூத்தைக் கேட்டேளா? இப்ப அந்த கல்யாணி மாமியாக்கும் பேசினா....அவாத்து பிள்ளை கார்த்திக்குக்கு நம்ம கௌரியைப் பிடிக்கலையாம்...அதனால வேற வரன் பார்த்துக்கோங்கோன்னு சொல்லிட்டு வெச்சா. நீங்க என்னடான்னா வேற கதை சொன்னேள்.....மொத்தத்தில் நேக்கு தலையை சுத்தறது. இந்தப் பொண்ணோட ஜாதகம் எடுத்த நேரமே சரியில்லையோ என்னமோ? பேசாமல் சுபதாம்பூலம்.காம்ல பதிஞ்சு வெச்சுட்டு காத்துண்டு இருக்க வேண்டியது தான். தானே நடக்கும்போது நடக்கட்டும்னு.நம்ம கௌரிக்கு என்ன குறையாம்.....? கொஞ்சம் கூட நாக்குல நரம்பே இல்லாமல் "சரிபட்டு வரலைன்னு "சொல்லிட்டு ஃபோனை வெச்சுட்டா. அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாப்பல டெல்லி வரனையும் தூக்கி வீசீட்டேள் நீங்க....இப்ப மோட்டுவளையைப் பார்த்ததுண்டு உட்காருங்கோ.வரன் கூரையைப் பிச்சிண்டு குதிக்கப் போறது..இந்த ஒரு பொன்னைக் கரை ஏத்தறதுக்குள்ள இன்னம் என்னவெல்லாம் படணுமோ ? ஒருவிதத்துல அவா வேண்டாம்னு சொன்னதும் நல்லது தான்...நேக்கும் அந்த மாமியப் பிடிக்கவே இல்லை....நம்ம கௌரி பையனோட கொஞ்சம் தனியாப் பேசணும்னு சொன்னதும் அந்த மாமியோட முகம் அஷ்ட கோணலாச்சு ...இப்ப என்னது ஊரில் நடக்காததை நம்ம கௌரி சொல்லிட்டாள். அந்த மாமிக்கு பையனைப் பெத்துட்டோம்னு ஒரே கர்வம்...அது அவா உட்கார்ந்த அந்த தோரணையிலயே தெரிஞ்சது.நான் மட்டும் என்ன இளப்பமா? கௌரிக்கு மட்டும் என்ன சும்மாத் தூக்கி கொடுத்தாளா கிராஜுவேட் பட்டம்..?அவன் பி ஈ ன்னா .....இவள் பி.டெக் ...இதுல பிள்ளை என்ன உசத்தி பொண்ணு என்ன தாழ்த்தி.....ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணனுமாம்.....! ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து செலவு பண்ணி பண்ணலாம்னு ஒரு வார்த்தை சொல்றது...நாமளே தான் எல்லாச் செலவும் பண்ணணும் .....இங்க நம்ம கிட்ட மட்டும் பொண்ணோட சேர்ந்து அட்சய பாத்திரமும் , காமதேனுவும்,கற்பக விருஷமும் இருக்கறாபோல...அவாளுக்கு நெனப்பு...




நீங்க சொல்றாப்பல நம்ம கௌரி அவாத்து கார்த்திக்கை காதலிச்சுக் கல்யாணம் பன்னீண்டா...அவ்ளோதான் தொலைஞ்சா....அந்த கல்யாணி மாமி உண்டு இல்லைன்னு பண்ணிடுவா...நேக்கென்னமோ அந்த மாமியாத் தான் ஃபோன் பண்ணி பிள்ளை பிடிக்கலைன்னு சொல்றான்னு சாக்கு சொல்லிட்டு வெச்சுட்டாள்னு தோணறது...இல்லையா? சித்ரா தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறாள்.




அப்டிப் போடு அருவாள...! நான் நெனச்சேன்.....நீயே சொல்லிட்டே... இதெல்லாம் அந்த மாமியோட திருவிளயாடலாக்கும் .நீ பேசாமல் இரேன்.....இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் வெளில வரும். என்னோட கணிப்பு தப்பாப் போகாது கேட்டியா...! எது என்னவானாலும் சரி....நம்ம கௌரி கல்யாணம் ஒத்த ரூபா செலவில்லாமல் அந்த கார்த்திக்கோடத் தான் நடக்கும்கறேன்.




அது தான் நான் வேண்டாங்கறேன்.....! ஆசையா பாசமா வளர்த்த பொண்ணைக் கொண்டுபோய் அவாத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தா அந்த மாமி மாமியார் கோதாவில் நம்ம கௌரியை சக்கை சாறாக்கிடுவாளாக்கும். நீங்க ஆயிரம் தான் சொல்லுங்கோ, நிச்சயமா இவளை அந்தாத்துக்கு நான் மாட்டுப் பொண்ணா அனுப்பவே மாட்டேன். அதுக்கு அவளுக்கு கல்யாணமே ஆகாட்டாலும் பரவாயில்லைங்கறேன்...சித்ரா ஈஸ்வரனைப் பார்த்து சொல்கிறாள்.




வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்க இப்போ நீ தயாரா நிக்கறியாக்கும். அதெல்லாம் அந்த மாமி கல்யாணம் ஆயாச்சுன்னா சரியாய்டுவா. நீயே பாரேன்.




அப்பறமா என்னத்தப் பார்க்கறது....பொண்ணு தினம் கண்ணைக் கசக்கிண்டு நிக்கறதையா? நீங்க சும்மாருங்கோ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாதாக்கும். நல்லவேளையா அவாளே வேண்டாம்னு சொல்லி யாச்சு....பேசாம வேற வரன் பார்க்க இன்னைக்கே இன்டர்நெட்டில் பதிய வேண்டியது தான். உங்கள நம்பினால் ஒண்ணும் நடக்காது. நானே பார்த்துப் பண்ணிக்கறேன்...சொல்லிவிட்டு சித்ரா கணினியை ஆன் செய்துவிட்டு அதன் முன்னே உட்கார்ந்து கொள்கிறாள்.










கிளையன்ட் மீட்டிங் முடித்துவிட்டு ஆயாசமாக தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து லேசாக ஆடிக் கொள்கிறாள் கௌரி.அவளது முன்னே இருந்த கணினியில் மின்சார எழுத்துக்கள் மின்னி மின்னி நடந்து கொண்டிருந்தது. பியூன் வைத்து விட்டுப் போன டீயை எடுத்து ஒரு வாய் உறிஞ்சி விட்டு மீண்டும் டேபிள் மீது வைத்து விட்டுத் திரும்பும் போது அவளது அரை வாசலில் நிழலாடுகிறது.




நிமிர்ந்து பார்த்து, ஹூஸ் திஸ்...? என்று குரல் கொடுக்கிறாள்.




மே ஐ கமின் மாம்..? மிகவும் பரிச்சயப் பட்ட குரலில் பதில் வரவும்.




நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டவள் , சுதாரித்து கொண்டு..அடுத்த நொடியே....ஹேய்.....வாட் எ சர்ப்ரைஸ் விசிட்.....? கம்...கம்....கம்...கம்...கம்....என்று எழுந்து நிற்கிறாள்.

ஒரு போன் கூட பண்ணாம நீ...?




ஆறு மிஸ்ட் கால் இருக்கும் பாரு....! பண்ணிப் பண்ணிப் பார்த்து நொந்து நூடில்ஸ் ஆகி சரின்னு நேரா இங்கியே கிளம்பி வந்துட்டேன்....பரவால்ல தானே?




நோ ப்ராப்ஸ்....என்று சொல்லிக் கொண்டே தனது மொபைல் ஃபோனை ஆன் செய்து கொண்டே நிமிர்ந்து கார்த்திகைப் பார்க்கிறாள்..அந்தக் கண்களில் அன்பு பொங்கி வழிந்தது.




ஓ ..ஐம் சாரி.....இப்போ தான் கிளையன்ட் மீட்டிங் முடிஞ்சது....என் மொபைல் சுவிட்ச் ஆஃப் மோட் .....அப்றம் எங்க ரொம்ப தூரம் வந்த்ருக்கே கார்த்திக்.....கூலா என்ன சாப்பிடறேள் ?




இங்க ஒண்ணும் வேண்டாம்...முடிஞ்சா வெளில வா.....லெட்ஸ் ஹேவ் சம்திங்.....!




ஓ ....போலாமே.....ஜஸ்ட் டென் மின்ஸ் ப்ளீஸ்....என்றவள் குனிந்து நிமிர்ந்து ஏறக்கட்டி கணினியை மூடி...யாருக்கோ இண்டர்காமில் தகவல் சொல்லிவிட்டு எழுந்து நிற்கிறாள்.....அப்போ...... போலாமா கார்த்திக் ?




முதல் முதலா கார்த்திக்கோட தான் வெளியில் போகிறோம் என்று உள்ளுணர்வு சொன்னாலும் அது எதையும் வெளியில் காட்டிக்காமல்.... .நான் உன்னோட வரும்போது ரொம்ப கம்ஃபோர்ட்டா இருக்கேன்...ஐ டோன்ட் நோ வொய் ? ஆமா.....எப்டி நீ இங்க வந்து என்னை வெளில கூப்பிட்டே...? என்று புன்னகைக்கிறாள்.




எஸ்......ஐ டூ ஃ பீல் லைக்...ஜாய்ஃபுல் ! ..என்னமோ உன்னோட பேசணும்னு தோணிண்டே இருக்கு..அதான்.....யு நோ சம்திங்.......இப்போல்லாம் சீக்கரம் ஏந்துக்கறேன் .....வாக்கிங் போறேன்.....நிறைய மெலோ சாங்க்ஸ் கேட்கறேன்.....!




வாவ்.....நானும்தான்...!




இதுல ஒரு ப்ராப்ளம் இருக்கு கௌரி...!




சொல்லு கார்த்திக்.....இது நம்ம லைஃப். அதுக்கு முன்னாடி நான் உன்னை ஒண்ணு கேட்கலாமா?




ம்ம்...கேரி ஆன்....ப்ளீஸ்...!




நீ கமிட் ஆயிட்டியா..? என்கூட...... நான் ஆயிட்டேன்....லேசாக வெட்கப் பட்டவள்.....தலை குனிந்து கொண்டு....வெரி நைஸ்...என்று மெல்லப் புன்னகைக்கிறாள்.




யா......மீ டூ....கௌரி...பட் எங்காத்தில் இதற்கு பெரிய தடா இருக்கும்னு நம்பறேன். உங்காத்தில் ?




டௌரி மட்டும் தான் தடா .....! ஆனா.....கார்த்திக் ஒ கே...! என்று சிரிக்கிறாள்.




அது சரி...எங்காத்தில் கௌரிக்கே தடா தான்....வா.. அப்டியே ஒரு "காப்பிச்சோனா" வுக்குள் நுழைகிறார்கள்.




பெரியவாளுக்கு நம்ம மனசு ஒண்ணும் அத்தரைக்கு புரியாதாக்கும். வெரி டிஃபிகல்ட் டு மேக் தெம் அண்டர்ஸ்டான்ட்...யூ நோ ...நாம பேசிப் பார்க்கலாம்....கொஞ்சம் டைம் தரலாம். எனக்கு ஒரு ப்ராப்ளமும் இருக்காது. அவா ஏற்கனவே பார்த்த வரன் தானே நீ...! இன்னைக்கே கூட அம்மாட்ட இதைப் பத்தி என்னால சொல்லிட முடியும்...உன்னால முடியுமா கார்த்திக்..? கேட்டுவிட்டு மெனுவைப் பார்க்கிறாள் கௌரி.




அஃப் கோர்ஸ் ஐ கேன் ஃபோர்ஸ் டு டேக் மை ஓன் டெஸிஷன்....ஆனா கௌரி.....அம்மா ரொம்ப கஷ்டப் படுவா..அதான்..கொஞ்சம் வெயிட் பண்ணி சொல்வேன் .




இட்ஸ் ஓகே...சொல்லும்போதே இரண்டு பெரிய கிளாஸ் டம்ப்ளரில் ஐஸ் கட்டிகள் மிதக்க லெமன் டீ மேஜையை நிறைத்தது .




கௌரி அந்த டீயை எடுத்து மெல்ல மெல்ல உறிஞ்சிக் குடிக்கிறாள்... கார்த்திக் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.




ம்ம்ம்ம்....பார்த்தது போதும்....நீயும் டீயைக் குடி....என்று லேசாக கிளாசை அவன் பக்கம் நகர்த்தி விட்டு......வெரி ஸ்ட்ரேஞ் என்று முணுமுணுக்கிறாள்.




சந்தோஷத்தில் கார்த்திக், "ஹமே தும் ஸே ப்யார் கித்துனா ஏ ஹம் நஹி ஜானத்தே....." என்று ஹம் செய்கிறான்.




ஹேய்....இப்பத் தான்பா....இப்பத் தான்பா....இதே பாட்ட நானும் நினைச்சேன்....ஹொவ் கம்....? என்று கண்கள் விரிய ஆச்சரியத்தில் மிதந்தபடி கௌரி கேட்கும்போது










அவள் பருகிய டீ புரையேறி அடுத்த நிமிடம்...."ஹச்......ஹச்........ஹச்.....ஹச்.....என்று இருமத் தொடங்குகிறாள்....




கார்த்திக் அவசரமாக அவளது தலையை லேசாகத் தட்டி தட்டி கூல் .....கூல்......யாரோ உன்னை நினைக்கறா.....ஒருவேளை என் அம்மாவாக் கூட இருக்கும் என்று சிரித்தபடியே சொல்கிறான்.




சுதாரித்துக் கொண்டவள்...தேங்க்ஸ் கார்த்திக்....ஸோ ....கைண்ட்.....! என்றவள்.... அவா சம்மதிக்கவே இல்லைன்னா.....இப்படியே ஒரு நாள் மாலையும் கழுத்துமா போய் வாசல்லே நின்னா எப்படி இருக்கும்....! என்று யதார்த்தமாகக் கேட்கிறாள் கௌரி.




வாவ்...வாட் எ ப்ரில்லியன்ட் ஐடியா ....கௌரி .! இட் வில் பி திரில்லிங் ! என்று யதார்த்தமாகவே சொல்லிக் கொண்டு ஹைஃபை செய்கிறான் கார்த்திக்.







இருவரும் சேர்ந்து மனம்விட்டு சிரிக்கின்றனர். அருகில் இருப்பவர்கள் இவர்களைப் வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்து சிரிப்பை அடக்கிக் கொண்டு "இனியும் தாங்காது.." நாம போகலாம் என்று எழுந்திருக்கின்றனர்.













நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ....இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறை தான்....எப்படிப் பேச்சாலயே உந்தித் தள்ளினார் பார்த்தியோன்னோ ...? நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? ரத்தம் கொதிச்சது...ஏற்கனவே நேக்கு ரத்தக் கொதிப்பு....இந்த மாதிரி அவமானமெல்லாம் என் வாழ்கையில வந்ததில்லை.நோக்கோசரம் நான் இப்போ இவர்கிட்ட இது மாதிரி அவமானத்தையும் தாங்க வேண்டியதாப் போச்சு....உன்னைச் சுமந்து பெத்தவளாச்சே......அதான் நேக்கு நெஞ்சு கிடந்து அடிச்சுக்கறது....அந்தக் கடமை இருக்கோல்லியோ. இன்னம் உன் கல்யாணத்துக்காக நான் எங்கெல்லாம் வந்து நின்னு அவமானப் படணு மோ......எண்டே குருவாயூரப்பா...! சலித்துக் கொண்டே தனது புடவைத் தலைப்பால் முகத்தை ஒற்றி துடைத்துக் கொள்கிறாள் பிரசாத்தின் அம்மா.




டேய்.....பிரசாத்.. ஜில்லுன்னு ஒரு லெமன் க்ரஷ் வாங்கிண்டு வா போ....நேக்கு தலையைச் சுத்தறது அவளின் குரலிலேயே அலுப்புத் தெரிந்தது.




இதோ...போய் வாங்கீண்டு வரேன்.....என்று விரைகிறான் பிரசாத்.




சிறிது நேரத்தில் கையில் கூல் ட்ரிங்கோடு வந்தவன்...."இந்தா குடி....சரியாயிடும்....." என்று நீட்டிக் கொண்டே....அம்மே....இதை நீ சகஜமா எடுத்துக்கோட்டியா என்ன இருந்தாலும் ....அவா பொண்ணப் பெத்தவாளாக்கும் ...அப்படித் தான் இருப்பா. நீ மட்டும் போன வருஷம் கௌரியப் பொண் பார்க்கப் போனப்போ நான் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் சும்மா இருக்காம ஒரு நீளமா லிஸ்ட் போட்டுச் சொன்னியே, இப்போ ஞாபகம் வரதோ ? பத்து பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், பாத்திரம் பண்டம்...சீர் செனத்தி..ன்னு அடுக்கீண்டே போனே...என் முகத்தை ஒரு தடவை மருந்துக்குக் கூட நீ திரும்பிப் பார்க்கலே....ஏதோ கொள்ளைக் கூட்டக்காரியாட்டமா நீ கெட்டதைப் பார்த்ததும் நேக்கே பகீர்னது.




அவாளுக்கு மட்டும் என்ன குறைச்சல்? எனக்கு சமமா பெண்ணை படிக்க வெச்சிருக்கா....நல்ல இடத்தில் வேலையும் பார்க்கிறாள்...கௌரிக்கு அழகு, அறிவு, அந்தஸ்துன்னு எல்லாத்துலயும் எனக்கு சமானமா இருக்கும் போது...அவாகிட்டப் போயி நீ காய்கறி மார்கெட்டுல பேரம் பேசறாப்பல பேசியே இருக்கப் படாது தெரியுமோ ? என்ன காலம் மாறினா என்ன, சட்டம் கிட்டம் வந்தாலும் தான் என்ன உங்களை யாராலும் திருத்தவே முடியாது. அதனாலத் தான் நிறைய பேர் இப்போ ஓடிப் போயி காதும் காதும் வெச்சாப்பல மாலையை மாத்தீண்டு வந்து அப்பா அம்மா முன்னாடி ஆசீர்வாதத்துக்கு மட்டும் வந்து நிக்கறா.







பெண்ணைப் பெத்தவா எல்லாரும் உங்களுக்கு கிள்ளுக்கீரையா..என்ன? ஒரு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னா நீங்க இப்படிக் கேட்டா அவா என்ன தான் பண்ணுவா? எல்லாரும் நம்மளைப் போலத் தானேம்மா? அவாத்தில் என்ன பண மரமா நட்டு வெச்சிருக்கா ? நீங்க ஓவியமா ஒரு பிள்ளையைப் பெத்துட்டேள்ன்னு கேட்ட பணத்தை பறிச்சுப் பறிச்சு தர?







அன்னிக்கு நீ கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் கேட்டே பாரு..அதுக்குத் தான் இன்னிக்கு இந்த வரவேற்பு...தானிக்கு தீனி சரிபோயிந்தி....!நீ கொஞ்சம் நேக்கோசரம் பொறுத்துக்கோ அம்மே...நான் எப்படியாவது கெளரியைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனாக்கும் .அதென்னமோ தெரியலை என்னால வேற எந்தப் பொண்ணையும் இனிமேல் எனக்கானவளா நெனச்சுக் கூடப் பார்க்க முடியலையாக்கும். நீ தப்பா எடுத்துக்கப் படாது கேட்டியா. எப்படியாவது கௌரியை நேக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடு. அது போறும் நேக்கு.அதுக்கோசரம் நான் இன்னும் எத்தனை வருஷமானாலும் கூட காத்துண்டு இருப்பேனாக்கும்.




லெமன் கிரஷ் உள்ளே போன தெம்பில் ஒரு "ஹஆ ....ஹஆ" என்று அடித் தொண்டையிலிருந்து ஏப்பம் விட்டுவிட்டு, பிரசாத்.....நன்னருக்குடா நீ சொல்றது. போதும் போ....இப்பவே அவாத்தில் நமக்கு கிடைச்ச மரியாதையைப் பார்த்தியோன்னோ...? இது போதாதா நோக்கு...! எப்போ நாம ரொம்ப இறங்கிப் போறோமோ அவா நம்ம தலை மேல ஏறி உட்காருவா! அது தெரியாதா? என்னால இனிமேல் அவாத்துக்கு வந்து பேசக் கீச முடியாது. நீ என்ன வேணா பண்ணிக்கோ....அந்த மாமியவாவது ஓரளவுக்கு ஏத்துக்கலாம்....ரொம்ப சாது பாவம்....அவாத்து மாமாவை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது...என்ன ஒரு கர்வம்...பிடிவாதம்....தைரியம்...ஆனாலும் பெண்ணைப் பெத்தவாளுக்கு இவ்வளவு அழிச்சாட்டியம் ஆகாதுடா சாமி. அந்த மாமாகிட்ட அந்த மாமி என்ன பாடு படறாளோ.....பாவம்.




அம்மே...அதப் பத்தி நோக்கென்ன ? நீ ஒண்ணு புரிஞ்சுக்கவே மாட்டேங்கறே. அந்தக் காலத்துல என்னோட அப்பாவாக்கும் உங்காத்துக்கு வந்து உன்னைப் பொண் கேட்டு உன்னை உபாயமா கல்யாணம் பன்னீண்டு வந்தார்ன்னு நீ அடிக்கடி சொல்லுவியே. அப்போ உங்காத்துக்கு அது எவ்வளவு பெரிய உதவியா இருந்ததுன்னு கூட நீ சொல்லியிருக்கே. இந்தக் காசு பணம் பங்களா எல்லாம் இப்போ வந்தது தானேம்மா...கார்த்தால ஆபீசுக்குப் போன அப்பா மாரடைப்புல உயிரை விடுவார்னு நீயோ நானோ கனவுல கூட நினைச்சோமா ? எப்பேர்பட்ட இழப்பு அது நமக்கு. பகவான் புண்ணியத்துல அவரோட கவர்ன்மெண்ட் வேலை எனக்குக் கிடைச்சது. அப்பா போயி இந்த அஞ்சு வருஷத்துல நாம ஓஹோன்னு அந்தஸ்துல உசந்துட்டோம் தான்...நான் இல்லேங்கல்லே....ஆனாலும் மனசுல காருண்யம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுண்டு வந்ததை நீ அவாத்தில் அது வேணம் இது வேணம்னு கேட்டபோது தான் புரிஞ்சுண்டேன்.




அன்னிக்கு நேக்கு ஒண்ணுமே வேண்டாம் உங்காத்து பொண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுங்கோ போதும்னு சொல்ல தைரியம் வரலை. எல்லாம் உன் மேல நான் வெச்சுருந்த நம்பிக்கை தான். அன்னிக்கு நீ தான் பேசிக் கெடுத்தே. இன்னிக்கு அத்தோட பலனைத் தான் நாம ரெண்டு பேருமே அனுபவிக்கறோம். சரி..போட்டும்....நான் அவாளுக்கு ஊருக்குப் போயி ஒரு லெட்டர் போடத் தான் போறேன். எதுல தடை அதிகம் இருக்கோ அதைத் தான் அடைய மனசு அதிகமா ஆசைப் படும்ன்னு சொல்லுவா..அது நிஜம் தான் இல்லையா...?




நீ இப்படி உயிரைக் கொடுக்கற அளவுக்கு அந்த பொண்ணு கிட்ட என்னத்தைக் கண்டியோ நேக்குத் தெரியலை...இப்படின்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கு நான் வாயையேத் திறக்காமல் இருந்திருப்பேன். ஏதோ ...ஆர்வக் கோளாறில் உளறிக் கொட்டிக் கிளறி மூடியாச்சு....உன்னோட பிடிவாதம்.....இப்போ இறங்கி வந்தேன்...இப்போ அவா உச்சாணிக் கொம்புல நிக்கறா. இந்தக் கல்யாணம் நடக்கும்னு நேக்குத் தோணலை....!




ம்ச் .....நீ உன் திருவாயை வெக்காதே.....! உன்னால முடிஞ்சா.... நேக்கு ஒரு நல்லது நடக்க ஆசைப்பட்டு ஆசீர்வாதம் பண்ணு..அதை விட்டுட்டு நடக்குமா....நடக்காதான்னு......உன்னை இப்போ யாராக்கும் கேட்டா..? நான் முடிவே பண்ணியாச்சாக்கும் கௌரியாக்கும் உன்னோட மாட்டுப்பொண்ணு.... நானாச்சு....அவாளாச்சு ...!




என்னமோ பண்ணுடா....எண்ணம் போல வாழ்வாம்.....உன் எண்ணம் உனக்கு அவளைக் கொண்டு வந்து சேர்த்தால் நானும் தான் சந்தோஷப் படுவேன். பாப்போம்....என்ன நடக்கப் போறதுன்னு....நாம ஒண்ணு நினைச்சால் தெய்வம் ஒண்ணு நினைக்குமே.




அப்போ ...இந்த விஷயத்துல தெய்வம் நினைக்கறதைத் தான் நானும் நினைக்கறேன்...கௌரி எனக்காக இண்டாக்கப் பட்டவளாக்கும் கேட்டியா?




போடாப் பைத்தியம்....நீ மட்டும் இதைச் சொல்லீண்டு இருந்தாப் போறாது....புரிஞ்சுக்கோ...எண்டே குருவாயூரப்பா.....இவனுக்கு புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சோ என்னமோ....நீ தன்னே ரக்ஷிக்கணும் ...! கிட்டாதாயின் வெட்டென மற....ன்னு சொல்லியிருக்கா....இவன் என்னடான்னா கிட்டாதுன்னு தெரிஞ்சும் அதையே கொண்டுவா....கொண்டுவாங்கறான்.......நான் என்னவாக்கும் பண்ணுவேன்...? யாராக்கும் இவனுக்கு புத்தி சொல்வா? இவனை இப்படி ஆட்டிப் படைக்கிற அந்த கௌரியை நேக்குத் துளி கூடப் பிடிக்கலை...அப்படி என்ன தான் எழுதி ஒட்டியிருந்ததோ அந்தக் குருவி மூஞ்சில .....இவன் இப்படிக் கிடந்து தவிக்கறான்.அலுத்துக் கொள்கிறாள் பிரசாத்தின் அம்மா.




டெல்லி வந்து சேர்ந்த அன்றே கையோடு தன் மன ஆதங்கத்தை கடிதமாக எழுதி கௌரியின் அப்பாவுக்கு அனுப்பி விட்டுத் தான் நிம்மதியாக மறுவேலை பார்க்கிறான் பிரசாத்.




நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கவும், தான் போட்ட கடிதத்துக்கு ஒரு பதிலும் இது வரை வராதது கண்டு விரக்தியில் பிரசாத் மனமுடைந்து போய் எதிலும் ஒரு பிடிப்பே இல்லாமல் இருப்பதைக் கண்டவள்..அன்று காலை டிபன் நேரத்தில் தட்டில் இட்லியை பரிமாறியபடியே இன்னும் எத்தனை நாள் தான் நானே உனக்கு சமையல் பண்ணி போட்டுண்டு இருக்கறது....நேக்கும் தள்ளலை....காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்காமல்.....நீ இப்படி ஒத்தச் சக்கையா நிற்கறதைப் பார்த்தால் நேக்கு மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா...பிரசாத்....அவா போனா போட்டும்....நான் வேற வரன் பார்க்கறேன்....நோக்கென்ன குறைச்சல்...? நீ அந்தாத்துக்கு மாப்பிள்ளையாக் கிடைக்க அவாளுக்குக் கொடுத்து வெக்கலையாக்கும்.....அவாளை மறந்து போ...! இனிமேல் நோக்கு அவாளோட சங்காத்தமே வேண்டாம் , நான் அம்மா , சொன்னாக் கேளு.




அதல்லா.....நான் இவ்வளவு தெளிவா கடிதாசி போட்டும் அவாளுக்குப் புரியலைன்னா எப்படியாக்கும் அது ? ஒரு வரி....பதில் போட்ருக்கலாமே....! இட்லியை விண்டு சட்னியோடு சேர்த்து வாயில் போட்டபடியே சொல்கிறான் பிரசாத்.




இதுலயே தெரிஞ்சுக்கோ அவாளோட புத்திய....என்றவள்...உன்னை இந்த நிலையில் என்னால பார்க்க முடியாது.....பேசாம இன்னொரு பொண்ணைப் பார்த்து நான் வேகம் உன்னோட கல்யாணத்தை முடிக்கத் தான் போறேனாக்கும். நீ என்ன வேண்டாங்கறது.




அதொண்ணும் என்கிட்டே நடக்காது. இனி நீ யாரையும் பார்க்கண்டாம். நேக்கு கல்யாணமும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்... அருகில் இருந்த டம்பளர் தண்ணீரை அப்படியே எடுத்து தட்டில் கொட்டி கையைக் கழுவிக் கொண்டு கோபத்தோடு கையை உதறியபடியே எழுந்து போகிறான் பிரசாத்.




என்னடா கோபம்....இப்போ உனக்கு? எதுவாயிருந்தாலும் எங்கிட்டக் காமி...போயும் போயும் அன்னத்துவேஷம் பண்ணி சாப்பாட்டில் உன்னோட கோபத்தைக் காண்பிக்காதே .....என்னைச் சொல்லணும், நீ பாதி சாப்டுண்டு இருக்கும் போது நான் தான் அதுகளைப் பத்தி பேச்சை எடுத்தேன்....வாடா...வந்து உட்கார்ந்து சாப்ட்டுட்டுப் போ.




நான் ஒண்ணும் சாப்பாட்டில் என் கோபத்தைக் கோவிச்சுக்கலை.....நேக்கு எறங்கலை .....மனசு வேதனிக்கறது....புரிஞ்சுக்கோ.....என்று சொல்லிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்று முகத்தில் சளக்...சளக்... என்று தண்ணீரை வாரி அடித்துக் கொண்டிருக்கும் போதே......அடுக்களையிலிருந்து தடா தடாலென்று பெரிய சத்தத்தோடு பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மோதி உருளும் சத்தம் கேட்கவும்......




அம்மே....அம்மே....என்னாச்சு அங்கே ? கேட்டுக் கொண்டே பதற்றத்துடன் பிரசாத் விரைந்து வந்து பார்க்கும் போது , அடுக்களைக்குள் கால் வழுக்கியோ, எப்படியோ, அவனது அம்மா கீழே விழுந்து மயங்கிக் கிடந்தாள்.....வேகமாக தன் இரு கைகளாலும் அம்மாவை அவன் தூக்கித் திருப்பும் போது......தலையில் அடிபட்டதற்கான அறிகுறியாக நெற்றிப்பொட்டிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பிரசாத்தின் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. மனசு பூரா ஹாஸ்பிடல்,டாக்டர்,மருந்து, எண்டே அம்மே ....அம்மே.....அம்மே...எண்டே அம்மையாக்கும் ...என்று அலறிக் கொண்டிருந்தது.....அத்தனை நேரம் அவனது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்த கௌரி எங்கோ பின்னால் தள்ளப் பட்டு மறைந்து போனாள். பிரசாத் சூழ்நிலைக் கைதியானான்.



















கண்ணாடி முன்பு நின்று உதட்டில் லிப் க்ளாஸை தடவிக் கொண்டே உதட்டைக் குவித்து அப்படியே தனக்குப் பிடித்த ஒரு பாடலை




"ஐசி திவானிகி ......தேகி நஹி கஹின்.....மேனே......இசிலியே ....ஜானே ஜானா.... தீவானா....தேரா நாம் ரக்தியா.....ஆ.....நாம் ரக்குதியா....!"







இதமாக விசிலடித்தபடியே வெளியே வரும் மகளைப் பார்த்த சித்ரா......" ஏண்டி நோக்கு எத்தனை தடவை சொல்றது.....இப்படி ஆம்பளையாட்டமா விசிலடிக்காதேன்னுட்டு.....தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.....போற இடத்தில் எங்களைத் தான் கோச்சுப்பா......பொண்ண வளர்த்த லட்சணத்தைப் பாருன்னு...."




ஆரம்பிச்சுட்டியா உன்னோட பிலாக்கணத்தை.....என்னை நீ சுதந்திரமாவே விடமாட்டியா....? நான் என்ன செஞ்சாலும் கூடவே வந்து ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சுச் சொல்லாட்டா நோக்குப் பொழுதே போகாதே....என்று எதையோ தேடிக் கொண்டே சித்ரா இவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும்




"மேரா நசீப் ஹைன்.....ஜோ மேரே யார் மேய்ன்....ஹஸ்கே....ப்யார் ஸே..பேக்குஃபீ மேன் தீவானா.....மேரா நாம் ரக்குதியா......ஆ நாம் ரக்குதியா....!

என்று சத்தமாகப் பாடிக் கொண்டே அங்கும் இங்கும் வேகமாக நடந்து கொண்டிருந்தாள் கௌரி. "இந்தாத்துல வெச்சது வெச்ச இடத்தில் இருக்காது.....எப்பப்பாரு.....தேடித் தேடி தான் எடுக்கணும்.....அதுக்குள்ள எங்க தான் கால் முளைச்சுப் போகுமோ தெரியலை...." என்று சலித்தபடியே சொல்லும் கௌரியைப் பார்த்து...




ஆமா...இப்போ இப்படி அவசர அவசரமா எதையாக்கும் தேடறே....?




நான் சொன்னாப்பல உடனே எடுத்து நீ கையிலே கொடுத்துடப் போறியாக்கும்....! இன்னும் வேகமாக விசிலடிக்கிறாள் கௌரி.




அந்த நாராசத்தைக் கொஞ்சம் நிறுத்தேண்டி ......காது ஓட்டையாறது ......அமைதியாத் தேடு கிடைக்கும். இப்படி அரக்க பரக்க ஓடினா ஒண்ணும் கிடைக்காது...மகளைப் பார்த்து நையாண்டியாக சொல்லும் அம்மாவைக் கண்ணால் ஒரு முறை விட்டபடியே.......நானே நாழியாச்சுன்னு அவதிப் படறேன்.....இதுல நீ வேற......நேக்கு...!




ஆமா.....இந்தப்பா எங்கயாக்கும் போயிருக்கார் இந்தக் காலை வேளைல ....வாக்கிங்கா? அதும் இத்தனை நேரமா? என்றவள் எதையோ கண்ட திருப்தியில்.....இதோ இங்க நீட்டீண்டு இருக்கு...என்னோட ஐடி கார்ட் ரோப்...! இதைத் தான் இத்தனை நேரமாத் தேடிண்டு கெடந்தேன்....என்று இழுத்தவள் அத்தோடு சேர்ந்து ஒரு புத்தகமும் கையோடு வர.....ஆஹா......படிக்கிற கதை புத்தகத்துக்கு என்னோட ஐ டி கார்டு தான் புக் மார்க்கா கிடைச்சுதா இந்த அப்பாவுக்கு....நல்லவேளை இங்க வந்து தேடினேன்......இவரை என்ன செய்தால் தேவலை....அம்மா இங்க பாரேன்.....இந்த அப்பாவை...."தான் படிஞ்சுண்டு இருக்கற கதைக்கு என்னோட ஐடி கார்டை எடுத்து புக் மார்க்கா வெச்சுருக்கார்....என்று சொல்லிக் கொண்டே அதை இழுத்து எடுத்துவிட்டு புத்தகத்தை தூக்கி அந்தப் பக்கமாக கீழே போடவும் அதிலிருந்து ஒரு கவர் தனியாக விழுந்தது.




ஐடி கார்டை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டபடியே புத்தகத்திலிருந்து வெளியே விழுந்த அந்தக் கவரைக் கையிலெடுத்துப் எங்கேர்ந்தாக்கும் இந்தக் கடிதம்? அப்பாவுக்கு யாராக்கும் எழுதி இருக்கா? என்று பார்க்கவும்...அதில் ஃப்ரம் பிரசாத், டெல்லி.....என்று இருந்ததைப் பார்த்ததும்....ஆச்சரியத்துடன் இவராக்கும் போன வருஷம் என்னைப் பார்த்துட்டு அத்தக் கொண்டா இத்தக் கொண்டான்னு ஒரு பட்டியல் போட்ட பார்டி.....என்று மனசுக்குள் எண்ணியபடியே, உள்ளிருந்து கடிதத்தை எடுத்துப் பிரிக்கிறாள் கௌரி. பத்து நாட்கள் முன்பு வந்திருந்த கடிதம் தனக்குத் தெரியவில்லையே...என்ற குழப்பத்தோடு....அப்படியே

"அம்மா.....அந்த டெல்லிக் காரார் கடிதம் போட்டிருக்காரே.....உனக்காவது தெரியுமா?" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அம்மா சித்ராவின் அருகில் சென்று நீட்டுகிறாள் கவரை....கடிதம் மட்டும் கௌரியின் கரங்களில்.




அப்பா இப்படி ஒரு ரகசியப் பேர்வழியா ? பிரசாத் கடிதத்தை மூடி மறைத்து என்ன கலாட்ட செய்றார் ? அப்பா எனக்கு அப்பாவா? வில்லனா ?

இருந்தாலும் எனக்கு முன்னாடி அப்பாவியா நிற்பாரே.....!




ம்ஹும்......நேக்குத் தெரியாதே.....என்று ஆச்சரியத்துடன் கேட்ட சித்ரா இது எப்ப வந்தது..? என்றபடியே எங்கிட்டத்தா... அந்த லெட்டரை நான் படிக்கட்டும்......என்று கௌரியைப் பார்த்து கேட்கவும்.




தந்தால் மட்டும் படிச்சுடுவியாக்கும்......எல்லாம் இங்கிலிஷில் எழுதியிருக்கார் ...நானே எதேச்சையாய் இப்பத்தான் கண்டெடுத்தேன்....இன்னும் என்னெல்லாம் மறைஞ்சுண்டு இருக்கோ? என்றவள் கடிதத்தை மடித்து தனது கைபையில் போட்டுக் கொள்கிறாள் ...வாசலில் காரின் ஹாரன் ஒலி கேட்கவும்...."மா....நான் கிளம்பறேன்.....சாயந்தரமா பேசலாம்" அப்பாட்ட இதைப் பத்தி நீ மூச்சுக் காட்டாதே......சொல்லிக் கொண்டே தனது ஷூவை மாட்டிக் கொண்டு வெளியேறுகிறாள் கௌரி.




கொஞ்ச நாளாவே இவரோட போக்கும் முகமும் சரியில்லையேன்னு நான் நினைச்சு பயந்தது சரியாத்தான் இருக்கு. அந்த டெல்லிக்காரா என்னவோ லெட்டர் போட்டு இவரைக் கன்னாப் பின்னான்னு திட்டியிருப்பாளோ ..அதான் இவர் முகத்தில் ஈயாடலை. லெட்டர் வந்ததையே யார்ட்டயும் சொல்லலை. எங்கிட்ட கூட சரியாப் பேசலையே...இன்னைக்கு கார்த்தால போகும்போது கூட நாம நினைக்கறதெல்லாம்மா நடக்கறது.....ஈஸ்வரோ ரக்ஷதோ...ன்னு சொல்லிட்டு வெளிய போனவர் உடனே உள்ளே வந்து...கொஞ்சம் வெள்ளம் கொடேன் சித்ரான்னு கேட்டு தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு போனார். நான் கூட சகுன தடையோன்னு நினைச்சேன். அவர் மனசுக்குள்ள இந்தக் கடிதம் ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்குமோ....கௌரி வேற அப்பாட்ட இதைப் பத்தி மூச்சு விடாதேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா....சாயந்தரம் வரைக்கும்.....என்னால தாங்குமா தெரியலை...அவர் வரட்டும்....ரகசியமாக் கேட்டுக்கலாம்...என்று தனக்குள்ளே சமாதானமாகிறாள் சித்ரா. அப்போது பார்த்து டிவி சீரியலில் ஐந்தாறு பெண்கள் அமர்ந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த காட்சி ஓடிக்கொண்டிருந்தது......நேரங்கெட்ட நேரத்துல இது வேற....எப்பப்பாரு வீட்டுல ஒப்பாரி சத்தம் தான்...என்ன எழவு சீரியல் எடுக்கறாங்க...பீத்தாராண்டி சீரியல் என்று கோபம் வந்தவளாக எழுந்து டிவியை அணைத்துவிட்டு வாசல் கதவை மூடச் செல்கிறாள்.













காருக்குள் ஏறி அமர்ந்ததும் அதீத ஆவலுடன்...அப்படி என்ன தான் எழுதி இருக்கும் இந்தக் கடிதத்தில்....என்று எண்ணியவளாக கைப்பையிலிருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கிறாள் கௌரி. கடிதம் அழகான ஆங்கிலக் கையெழுத்தில் எழுதப் பட்டிருந்தது.




மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு,




நமஸ்காரம்.




அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.




தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது தான். எனக்காக என் அம்மாவை மன்னியுங்கள். அவர்கள் சென்ற முறை நாங்கள் பெண் பார்க்க வந்திருந்த போது

எனது விருப்பம் அறியாமல் அவர்களாகவே அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அது இன்னும் தங்களின் மனதை விட்டு அகலவில்லை என்று புரிந்து கொண்டோம்.




அதனால் தான் நான் இந்த முறை...டௌரி எதுவும் கேட்கக் கூடாது என்று என் அம்மாவிடம் பேசி அழைத்து வந்தேன். அதற்கு காரணம் நான் உங்கள் மகள் கௌரியை மிகவும் நேசிக்கிறேன்.




யாரையும் பிடிக்காமல் போவதற்கு மட்டும் காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் ஒருத்தரை பிடித்துப் போவதற்குச் சொல்லக் காரணங்கள் இருக்காது.

அந்த விதத்தில் எனக்கு உங்கள் மகள் கௌரியைப் பார்த்ததும், அவளிடம் எதுவும் பேசாமலேயே அவளை மிகவும் பிடித்துப் போனது. எனது திருமணத்திற்காக நான் அம்மாவுடன் வந்து பார்த்த முதல் பெண் அவள். கௌரி என் வாழ்வின் துணையாக இருந்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்வேன். அந்த எண்ணத்தோடு தான் நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வந்தோம். ஆனால் உங்களுக்குத் தான் என் மனம் புரியவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி என்று புரிந்து கொண்டேன்.




எங்களின் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு மட்டும் கோர இயலும். மன்னியுங்கள். எங்களின் மனங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.




எதுவுமே முடிவு இல்லை. அது போலவே எந்த முடிவிலிருந்தும் ஒரு ஆரம்பம் உருவாகலாம்.




உங்களிடமிருந்து என் வாழ்வின் ஆரம்பமாக பதில் கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.




இப்போது என் வாழ்கையின் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது.




கெளரியிடம் என் அன்பைச் சொல்லவும்.




இப்படிக்கு

அன்புடன்

பிரசாத்.




கடிதத்தைப் படித்து முடித்ததும்......ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அறியாமல் திக் கென்று உள்ளுக்குள் உறைந்து அமைதியானாள் கௌரி.
















பிரசாத்துக்கு பதில் கடிதம் என்ன எழுதலாம் என்று யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராக, சரி இன்னைக்கு வாக்கிங் போயிட்டு அங்கேயே உட்கார்ந்து விபரமா ஒரு பதிலை எழுதி அப்படியே போஸ்ட்ல போட்டுட்டு வந்துடலாம். என்றெண்ணியவராக மறக்காமல் பேப்பர் பேனாவுடன் கிளம்பினார் ஈஸ்வரன். நடக்கும் போதெல்லாம் எதை எப்படி எழதலாம் என்ற யோசனையோடு வழியைக் கடந்து கொண்டிருந்தார்.




அமைதியான இடத்தைத் தேடி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிரசாத்துக்கு கடிதம் எழுதி முடித்து விட்டு. வழக்கமாக வாக்கிங் போகும் வழியைக் கடந்து அருகிலிருந்த போஸ்ட் பாக்ஸில் கடிதத்தைச் சேர்த்து விட்டு "ஈஸ்வரோ ரக்ஷதோ....! எதுவுமே நம்ம கையில் இல்லை....எல்லாம் விதிப்படி நடக்கட்டும் என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே நிம்மதியுடன் திரும்பும்போது.....சந்துக்குள்ளிருந்து வேகமாக வந்த தண்ணிலாரி ஒன்று ஈஸ்வரனை இடித்துக் கீழே தள்ளி அதுவும் பத்தாதது போல பின் சக்கரத்தையும் அவர் மேல் ஏற்றி நின்றது.




ஈஸ்வரன் துவண்டு விழுந்து இறுதியாகத் துடித்து துடித்து துடிப்பு அடங்கிக் கொண்டிருந்தார்.










அதே சமயத்தில், க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈச்ச்....! என்று எதிர்பாராமல் ப்ரேக் போட்டு நின்றது கார். சுற்றிலும் மற்ற வண்டிகளும் நின்றுவிட......நிமிடத்தில் கூட்டம் ரோட்டை அடைத்துக் கொள்ள......கௌரி அலுத்துக் கொள்கிறாள்...."என்னாச்சுப்பா....?" என்று டிரைவரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு தன கைப்பையில் பத்திரமாக மடித்து வைத்துக் கொள்கிறாள். மனசு மட்டும் "அப்பா....ஏன் இந்த விஷயத்தை என்னிடம் மறைத்தார்?" என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.




எதோ விபத்து போலத் தெரியுதும்மா.......தண்ணிலாரி நிக்குது.....அதுக்குக் கீழ தான்.....யாரையோ தூக்கிருச்சு போல......பொறம்போக்குப் பசங்க ஒழுங்கா ஓட்ட மாட்டானுங்க....தண்ணியப் போட்டுட்டு தண்ணி லாரி ஒட்டுனா வேற எப்படி போவும்.?...அவனும் தூக்கீட்டு நடக்கிறவங்களையும் தூக்கீடுவானுங்க......பரதேசிங்க அதுக்குள்ளார எங்கிட்டிருந்து தான் இம்புட்டு கூட்டம் வந்து சுத்தி வளைக்குமோ ....என்று சொல்லிக்கொண்டே பெரிதாக ஒரு ஹாரன் அடிக்கவும்.




ஹாரன் அடிச்சாப்புல போயிடுவியாக்கும்....ஒரு உசுரு அங்க ஊசலாடிக்கிட்டு கெடக்குது.....ஒனக்கு இன்னாத்துக்கு அவசரம் ?.இம்புட்டுப் பேரு நிக்கிறோமுல்ல.....வெளியிலிருந்து .ஒரு குரல் ஜன்னல் வழியாக டிரைவரைப் பார்த்துக் கேட்டது.




கௌரி மீண்டும் அந்தக் கடிதத்தை தனது கைப்பையிலிருந்து எடுத்து பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.




ரோட்டில் ஒரே சல சலப்பு......போலீஸ்காரர்கள் ......எங்கிருந்தோ எண் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கு விரைந்து வந்து தண்ணி லாரியின் அடியில் அடிபட்டுக் கிடந்த கௌரியின் அப்பா ஈஸ்வரனைத் ஸ்ட்ரெக்சரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து ஹாரன் அடித்தபடியே கிளம்பி விரைந்தது.




அந்த சப்தத்தைக் கேட்ட கௌரி தன்னையறியாமல் நடந்தது எதுவுமே தெரியாமல் " இப்போ இங்கே அடிபட்டவருக்கு உயிருக்கு எந்த ஆபத்துமில்லாமல் அவரைக் காப்பாத்திடு ஆண்டவா."...என்று மானசீகமாக வேண்டிக் கொண்டாள் .



















டிடிங்……ட்டிங்…….டிடிங்…….டிடிங்……ட்டிட்டிங்……ட்டிட்டிடிங்…….டிங்க்க்க்க்க்க்க்க்…….தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் அம்மா கல்யாணி, சற்றே பரபரப்பானவளாக……யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்…. அதுக்காக இப்படியா.. காலிங் பெல்லை….பூஜை மணி அடிக்கிறா மாதிரி அடிக்கறது……என்று கோபத்தோடு சொல்லிக் கொண்டே “வரேன்…..வரேன்….வரேன்…..வரேன்….” காலிங் பெல் ஒரு தடவை அடிச்சா போதாதா…இது வீடா இல்லை செவிட்டு ஆஸ்பத்திரியா…..இப்படி நூறு தடவை அடிச்சு சுவிட்ச்சை கைல பேத்து எடுத்துண்டு வரேன்னு யாருட்டயாவது சவால் விட்ட மாதிரின்னா இருக்கு….நல்ல கூத்து….சொல்லிக்கொண்டே கதவைத் திறக்கவும்…எதிரில் அழகான பெண் ஒருத்தி முகமெல்லாம் மின்னலடிக்க…..புயலாக நேரே ஓடி வந்து கல்யாணியை அப்படியே இறுக்கக் கட்டிக் கொண்டு …”அத்தை…..நான் லாவண்யா ….வந்திருக்கேன்…..” என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டே சொல்லவும்.




அடடா….லாவண்யாவா…கண் கண்ணாடியை கொஞ்சம் சரி படுத்திக் கொண்டு பார்த்துவிட்டு .வா…வா ….என்ன திடு திடுப்புன்னு வந்து நிக்கறே…. நீ மட்டும் தனியாவா வந்தே…? அப்பா…..அம்மா வராளோ ….? ஆள் அடையாளமே தெரியாத…நீ என்னமா அழகா சினிமாக்காரியாட்டமா வளர்ந்துட்டே.ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கப் படாதோடி…..கார்த்திக்கை அழைச்சுண்டு வர அனுப்பியிருப்பேனே….என்று தனது தம்பி மகளை அணைத்துக் கொண்டே…” டேய் கார்த்திக் யாரு வந்திருக்கா பாரேன்……நம்ம லாவண்யா தனியா வந்திருக்கா .சமத்து…எவ்வளவு உசரமா அழகா இருக்கா பாரேன்…. என்றவள்..




நீ தானா காலிங் பெல்லை இந்த அடி அடிச்சது. நான் யாரோன்னு நெனைச்சேன்….அப்பறம்….பரீட்சை எப்போ முடிஞ்சது..நன்னா எழுதியிருக்கியா? நல்ல வேளையா நீ இப்போவாவது அத்தையைப் பார்க்கணும்னு புறப்பட்டு வந்தே…..நேக்கு கூட மாட வீட்டு வேலை செய்ய ஒத்தாசையா இருக்கும்…என்று சொல்லிக் கொண்டே..சரி கையக் கால அலம்பீண்டு வா….சாப்பிடத் தரேன். அன்னிக்குப் கடைசியாப் பார்த்தப்போ நண்டு மாதிரி இருந்தே…. இப்போப் பாரேன்… பந்தயக் குதிரை போல், வாட்ட சாட்டமா வளர்ந்து நிக்கறே. சுய வரத்தில் எத்தனை ராஜகுமாரன் மயங்கி விழப் போறானோ ? பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? நேக்கு இந்தப் பாட்டு தான் ஞாபகத்துக்கு வரது….நீ அப்படியே அச்சு அசலா என் தம்பியையாக்கும் கொண்டிருக்கே….ஆத்துப் பொண்கள் அப்பாவை கொண்டிருந்தால் அதிர்ஷ்டமாக்கும்…தெரியுமா? என்று லாவண்யாவின் முதுகை லேசாகத் தட்டி விடுகிறாள் கல்யாணி.




வெட்கத்தில் கன்னம் சிவந்து போய் நெளிந்த லாவண்யா…..அத்தை….எங்கே கார்த்திக், அப்பறம் அத்திம்பேர்….? ரெண்டு பெரும் வீட்டில் தானே இருக்கா..? என்று கேட்கவும் கார்த்திக்கின் முகம் தெரிந்ததும்….ஹாய் என்று கையை அசைக்கிறாள்.




கார்த்திக் இதோ…இங்கே தான் இருக்கான்….அவனோட அப்பா தான் பெங்களுர் போயிருக்கார்…வர ரெண்டு நாள் ஆகும். டூட்டில போயிருக்கார். நீ வா உள்ளே.என்று சொல்லிக் கொண்டே குளியலைறையை நோக்கி விரைகிறாள் கல்யாணி.




கார்த்திக் அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்தவன்…..ஹாய்….பென்சில்…இப்போ நீ ஏணி மாதிரி இருக்கே….! எப்போ வந்தே..?




டேய்…கார்த்தி……இன்னுமாடா உன் குசும்பு போகலை…நான் பென்சில்னா நீ குண்டுப் பேனா…..! நான் ஏணி ன்னா …நீ ஸ்டூல்டா……ஸ்டூல்…! வாயைக் கோணி அழகு காமித்த படியே அழுத்தம் திருத்தமாகச் சொல்லவும். இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டனர்…..”வாயாடி…வங்கம்மா…..மாறவே இல்ல நீ…அதே வாய்…அதே திமிர்……ஆமா..என்ன திடீர்னு எங்க ஞாபகம் உங்களுக்கு? சாதாரணமா கூப்பிட்டால் பிகு பண்ணிக்குவே….இப்போ என்னடான்னா சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கறே? ஏதாவது பிளானா? சோழியன் குடுமி சும்மா ஆடாதே….இப்படி எதுவோ சொல்லுவா இல்ல….!




போடா லூசு…! என்றவள், அத்தை….இந்தக் கார்த்தியைப் பாருங்கோ கேலி பண்றான்….என்று சிணுங்கியபடியே உள்ளே போகிறாள்.




அத்தை மறுபடியும் குளித்து விட்டு வந்ததைப் பார்த்து…ஏன் அத்தை இப்போ தானே நீ குளிச்சுட்டு வந்தா மாதிரி இருந்தது…அதுக்குள்ளே .ஏன் மறுபடியும் குளிச்சே?




அடி அசடே…..நான் ஏற்கனவே குளிச்சாச்சு…..மடியாத்தான் வந்தேன்….நீ வந்து என் மேலே விழுந்து கட்டிப் பிடிச்சே…விழுப்பாயிடுத்து….இதுவே வேற யாராவதா இருந்திருந்தால் நடக்கறதே வேற…தெரியுமா சேதி…..உன்னை ஒண்ணும் சொல்ல முடியலையே….அதான் இன்னொரு குளியல். இப்போ போய் பூஜைல உட்காரணம்…அப்பறம்…. லாவண்யா…..கார்த்தியை வாடா போடான்னெல்லாம் நீ கூப்பிடக் கூடாது…. நாளைக்கு கலியாண மாப்பிள்ளை ஆகப் போறவன் ! அவன் இப்போ ஆபீசுக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சு…தெரியுமோன்னோ….மரியாதையா பேசணும்….புரிஞ்சுதா? என்று குரலில் குழைந்து குழந்தைக்கு சொல்வது போல சொல்லிவிட்டு “நாராயண நாராயண நாராயண நாராயண…நமோ நமஸ்தே…என்றபடியே பூஜை அறைக்குள் நுழைகிறாள் கல்யாணி.




சரி அத்தை….கார்த்தியைப் பார்த்தால் எனக்கு மரியாதையும் வரலை…பயமும் வரலை….சின்ன வயசுல விளையாடினது தான் ஞாபகத்துக்கு வரது…நான் என்ன செய்யட்டும், என்று லாவண்யா அத்தையிடம் உரிமையாகப் பேசிக் கொண்டு பூஜை அறையின் வாசலில் நின்றாள் .




கார்த்திக் மனசுக்குள் திக் திக் என்று இருந்தது.இந்த மாமா சும்மா இருக்காம தன்னோட சோட்டா பாமை அனுப்பி வெச்சிருக்கார்…..அது வெடிக்கறதுக்கு முன்னாடி அதை புஸ் புஸ் பண்ணிடணும்…நமக்கு வில்லிகள் எங்கேங்கேர்ந்தெல்லாம் வருவாங்கன்னு சொல்ல முடியாது போலிருக்கே….ஒருவேளை இது அம்மாவோட கைங்கர்யமாக் கூட இருக்கலாம்…யாரு கண்டா..? .எல்லாம் அழகா ஆஸ்கார் அளவுக்கு நடிக்க பழகிண்டு இருக்கா….ம்ம்….கிரேட்..! என்று நினைத்தபடி கார்த்திக் கிளம்பும்போது…அவனது ஐ ஃபோன் கதறியது…..




Oppa Gangnam Style

Gangnam Style

Najeneun ttasaroun inganjeogin

yeojaKeopi hanjanui yeoyureul

aneun pumgyeok inneun

yeojaBami omyeon simjangi

tteugeowojineun yeojaGeureon

banjeon inneun yeoja

Oppa Gangnam Style Gangnam Style

Op, op, op, op Oppa Gangnam Style

Gangnam Style

Op, op, op, op Oppa Gangnam Style..




கைபேசியின் அவசரம் தெரியாமல்..பாடலை ரசித்தபடியே அத்தோடு சேர்ந்து கூட பாடிக்கொண்டே,ஃபோனை எடுக்காமல் அதைத் தொடர்ந்து பாடவிட்டுக்கொண்டு இருந்தவன் கடைசியாக மெல்ல எடுத்து டிஸ்ப்ளேயைப் பார்க்கவும் அதில் கௌரி காலிங் என்று மின்னிக் கொண்டிருந்தது. அவனுக்குள் ஆனந்த அதிர்ச்சி.




ஹேய்……குட் டே…! என்ன ஆபீஸ் இல்லையா? நானும் லீவு போடவா ? எங்கியாவது ஜாலியா….ஒரு ரவுண்டு…..என்று கிசு கிசுக்கவும்…..

கார்த்திக்கின் குரலைத் தடுத்து பதட்டத்தோடும், அழுகையோடும் திக்கித் திணறி வந்தது கௌரியின் குரல்……




கார்த்திக்…….என்னோட அப்…..அப்பாவுக்கு விபத்து …..இன்னிக்குக் கார்த்தால ..ஆக்ஸிடெண்ட்டாகி அதுல தவறிப் போயிட்டார்……நீ….நீ…..உடனே வரணம்..உங்கம்மாட்டக் கூட சொல்லிடு. என்று மேற்கொண்டு பேசமுடியாமல் கதறி அழுகிறாள்.




அப்படியே அதிர்ச்சியில் உறைந்தவனாக. ….ஏய்…கௌரி…நீ என்ன சொல்றே ….மாமாவா? வாட்….?ஓ … மை காட்….என்னால நம்பவே முடியலையே….இரு… இரு.. .இதோ….கிளம்பிட்டேன்….இப்போ வரேன்….அவனையும் அவளது அதே பதற்றம் தொத்திக் கொண்டது.




அம்மா….அம்மா…நம்ம கௌரி இல்ல….அவளோட அப்பா இன்னைக்குக் கார்த்தால ஆக்ஸிடெண்ட்டுல செத்துப் போயிட்டாராம்….இப்போ தான் போன் பண்ணி தகவல் சொன்னா ….அப்படியே கிளம்பு போயிட்டு வந்துடலாம்…என்று சொன்னவனைப் பார்த்ததும்…




அச்சச்சோ….எப்படீடா……என்று ஆரம்பித்தவள் ….இவன் சொன்ன “நம்ம கௌரி ” நினைவுக்கு வரவும்…”அதுக்கு நீ ஏண்டா இந்த பதறு பதறரே …..அவா யாரோ….? நாம யாரோ? .நாம ஏன் போகணும்…..?அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்….அப்பறமா ஒரு நாளைக்கு அந்த மாமிக்கு ஃபோன் பண்ணி துக்கம் விசாரிச்சாப் போதும்…நீ உன் பாட்டுக்கு ஆபீசுக்குப் போ. அவா என்ன நமக்கு ஒட்டா…..உறவா….என்ன? நமக்கென்ன இப்போ அவாத்தில் ஜோலி……அவ என்னத்துக்கு நோக்கு போன் பண்ணி சொல்லணும்? ஆனாலும் அந்தப் பொண்ணு கௌரிக்கு இவ்வளவு திண்ணாக்கம் ஆகாது…..சர்வ சாதாரணமாக ஒரே வரியில் சொல்லி விட்டு தன் வேலையைப் பார்க்கிறாள்…




ம்ம்ம்மா…..கெளரிம்மா…! என்கிறான் தொடர்ந்து.




அதுக்கென்ன? மறுபடியும் சொல்றேன் நன்னாக் கேட்டுக்கோ….அவா யாரோ….நாம யாரோ? அங்கெல்லாம் நாம போயி நிக்கணும்னு ஒண்ணும் அவசியமில்லை தெரிஞ்சுதா…? பொண் பார்க்கப் போனோம்….சரிப்பட்டு வரலை…..அத்தோட முடிஞ்சது. லாவண்யா…..கார்த்திக்கோட டிபன் பாக்ஸை கொண்டு வா…மேடை மேலே வெச்சுட்டு வந்துட்டேன் கை மறதியா….பார்த்து எடுத்துண்டு வந்து கொடு அவன்கிட்ட……டேய்..கார்த்தி…லீவுக்கு இவ நம்மாத்துக்கு வந்திருக்கா…சாயந்தரம் கொஞ்சம் ஆபீஸிலிருந்து சீக்கிரமா வந்து எங்காவது வெளில வாசல்ல அழைச்சுண்டு போய்ட்டு வா…..அவள் கேட்டதை வாங்கிக் கொடு…என்ன….ஏன் இப்ப இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுண்டு போற….! சந்தோஷமா சிரிச்ச முகமா இரேன்….இங்க….நம்மாத்துலையா எழவு விழுந்திருக்கு…..உன் மூஞ்சி இப்படி அறுந்து தொங்கறதுக்கு ? என்று சொல்லும் அம்மாவை பார்க்க முதல் முறையாக வெறுப்படைந்தான் கார்த்திக்.




ச்சே…..என்ன மனசு இது…! எண்ணிக்கொண்டே…அருகில் வைத்த கண் எடுக்காமல் வந்து நின்ற லாவண்யாவிடம்…..நீயாவது என்னோட வரியா? ஜஸ்ட் பார்த்துட்டு வந்துடலாம். ப்ளீஸ்…என்பது போல ஒரு பார்வை பார்த்ததும்…..




அவள் துள்ளிக் கொண்டு கிளம்பினாள் ….அத்தை…நான் கார்த்தியோட போயிட்டு வரேன்…சும்மா ஒரு ரவுண்டு…என்றவள் …அத்தையின் பதிலுக்கெல்லாம் காத்திராமல் கார்த்தியோடு அவன் ஸ்டார்ட் செய்த பைக்கில் தொத்திக் கொண்டாள் .




ஹோண்டா பைக் பறந்தது. கார்த்திக்கின் மனசெல்லாம் கௌரிக்காக அழுதது. பின்னால் அமர்ந்திருந்த லாவண்யா சொர்க்கபுரில் மிதந்து கொண்டிருந்தாள்.




நீங்க ரெண்டு பேரும் எங்கயாக்கும் போறேள் ..? அவசரமாக வெளியே வந்த கல்யாணிக்கு தூரத்தில் மறைந்து கொண்டிருந்த பைக் மட்டும் கண்ணில் தெரிந்தது.




நடப்பது ஓன்றுமே புரியாமல் கார்த்திக்கின் பின்னால் அமர்ந்து கொண்டு தெருக்களை வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவள்…..”கார்த்தி….யாராத்துக்கு போறோம் இப்ப நாம? யாருக்கு என்னாச்சு…? என்று கேட்கிறாள்….லாவண்யா.




கௌரி…..ஆத்துக்குப் போறோம்…அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணுவதாக இருந்தது. இப்போ ஒரு திடீர் விபத்து. …..! அவளோட அப்பா இன்னைக்கு கார்த்தால ஒரு ஆக்ஸி டெண்டுல தவறிப் போயிட்டாராம்….பாவம்.




அப்படியா..அச்சச்சோ பாவமே…அதுக்குத் தான் அத்தை அப்படி கோச்சுண்டாளா…? இந்தப் பெரியவாளுக்கு எப்பவுமே ஐயோ பாவமே பார்க்கத் தெரியாது போல. நான் கூட நம்ம அத்தை ரொம்ப ரொம்ப நல்லவான்னு நினைச்சேன்.இந்த அத்தையும் பாட்டி மாதிரியே தான் இருப்பா போலிருக்கே.




ஏய்…வாயாடி …சந்தடி சாக்குல நீ சிந்து பாடாதே…உன்னோட அருமை அத்தைக்கிட்டே போட்டுக் கொடுத்துடுவேனாக்கும்.அப்புறம் என்னாகும் தெரியுமா? அடுத்த பஸ் எப்போன்னு கேட்டுண்டு ஓடுவே நீ….என்று சீரியஸாக சொல்லிக் கொண்டான்.




சரிடா நான் ஒண்ணும் உன்னோட அருமை அம்மாவை பத்திப் பேசலை இனிமேல்…..இன்னும் எத்தனை தூரம் இருக்கு அவாத்துக்கு..? என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் லாவண்யா.




இதோ வந்தாச்சு…..அங்க போய் அடக்க ஒடுக்கமா இரு….பல்லை இளிச்சு வைக்காதே என்ன? என்று அதட்டி வைக்கிறான்.




நேக்கு நீ சொல்லித் தரியாக்கும்…முத்தல்ல நீ தான் கௌரியைப் பார்த்து குழையாமல் இருக்கணும் தெரிஞ்சுக்கோ..என்று சிடு சிடுக்கிறாள்.




அம்மா தாயே….அமைதியா வாயேன்….பதிலுக்கு பதில் கொடுக்காட்டி உன்னால மூச்சு விடவே முடியாதோன்னு தோணறது…சொல்லிக் கொண்டே ஒரு பூமாலை கடையில் நிறுத்தி ரோஜா மாலை ஒன்றை வாங்கி லாவண்யா கையில் கொடுத்து இதை பத்திரமாப் பிடிச்சுக்கோ உதிரக் கூடாது…என்று சொன்னதும்….அவள் கார்த்தியை பார்த்த விதத்தில் எதோ புது மாதிரியாக இருந்தது.




நீ ரோஜா மாலை வாங்கி என் கையில் தந்த விஷயம் என் அம்மாவுக்குத் தெரிஞ்சால் அவ்ளோதான்…..உன் கதை கந்தலாயிடும்…என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள் லாவண்யா.




டீ … சீரியஸா இருக்கும்போது ஏண்டி உன் புத்தி இப்படி கோணலாப் போறது..?




ம்ம்ம்..இப்போ நீ நேரா வண்டியைப் பார்த்து ஓட்டு…பதிலை நான் அப்பறமா சொல்றேன்….என்று நொடித்துக் கொண்டாள் .




கௌரி வீடு வந்து விட்டதன் அடையாளமாக அங்கு ஒரே கூட்டமும், அழுகை சத்தமும்…கேட்டுக் கொண்டிருக்கிறது. கௌரியின் அலுவலகத்தில் இருந்து பலர் வந்து நின்று கொண்டிருந்ததால் ஒரே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.




ஸ்கூட்டரும்..காருமாக அந்தத் தெருவையே அடைத்து கொண்டிருந்தது…கார்த்திக்கிற்கு சோகம் மனத்தைக் கவ்விக் கொண்டது. பாவம் ஈஸ்வரன் சார்….எவ்வளவு பளிச்சென்று இருந்தார் என்று நினைத்துக் கொண்டான்.




அடுத்த சில நிமிடங்களில் கௌரியின் வீட்டு வாசலுக்கு சிறிது அருகில் இருக்கும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்தி விட்டு ரோஜா மாலையை லாவண்யாவின் கையிலிருந்து தான் வாங்கிக் கொண்டு மெள்ள மெள்ள நடந்து கூட்டத்தைக் கடந்து உள்ளே நுழைகிறார்கள்.




கார்த்திக்கின் முகத்தைக் கண்டதும் தான் தனக்கு உயிரே வந்தது போலே எழுந்து ஓடி வந்து ஓவென்று அழுது கொண்டு தயங்கியபடியே ஒரு கணம் நின்று விட்டு லேசாக கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கொண்டாள் கௌரி. அவள் உடல் குலுங்கி குலுங்கி பயத்தில் நடுங்கியதை கார்த்திக்கால் உணர முடிந்தது.




கையிலிருந்த ரோஜா மாலை உதிர்வதைக் கண்டு லாவண்யா அதை வாங்கிக் கொண்டவள் கௌரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் .

கௌரியின் கண்கள் லாவண்யாவை அந்த அழுகையிலும் கவனிக்கத் தவறவில்லை.




கார்த்திக்…..என்னோட அப்பா என்னோட அப்பா….பொட்டலமா….பொட்டலமா…கார்த்தால வாக்கிங் போனவர்…இப்படித் தான் வந்து சேர்ந்தார்….என்று கையைக் காட்டி அழுதபடி திக்கி திக்கி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கண்களும் முகமும் அழுது அழுது சிவந்து இருந்தது. திடீரென்று தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள் …அப்பா….என்று கத்திய அவளைச் சமாதானம் செய்ய அருகில் இருந்தவர்கள் இறுக்கப் பிடித்துக் கொள்ள….கார்த்திக் எதோ வார்த்தைகள் சொல்ல முயற்சிக்க அது அவனுக்கே கேட்காமல் வார்த்தைகள் வெளியேறாமல் நின்றது. தான் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தபடி நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.




கண்ணாடி பெட்டிக்குள் வெள்ளைப் போர்வையால் மூடி வைக்கப் பட்டிருந்த ஈஸ்வரனின் முகம் மட்டும் அப்படியே மாறாமல் தூங்குவது போலவே இருந்தது.




அதிர்ச்சியில் உறைந்து போய் அழக் கூட முடியாத நிலையில் கௌரியின் அம்மா சித்ரா அவரது முகத்தை மட்டும் வெறித்துப் பார்த்த படியே அமர்ந்திருந்ததைப் பார்த்து மெல்ல அங்கு சென்று அருகில் அமர்ந்து கொண்ட கார்த்திக், ஆன்ட்டி ….என்று மென்மையாகச் சொல்லி அழைக்கவும்…




திரும்பி ஒரு பார்வை பார்த்தவளாக, இப்படி தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரே…..கௌரிக்கு கல்யாணம் பண்ணி மாலையும் கழுத்துமா பார்க்கணும்னு துடியாய் துடிச்சாரே…. இப்போ அவரை மாலையும் கழுத்துமா பார்க்க வெச்சுட்டு போய்ட்டாரே ….நாங்க என்னத்தச் செய்வோம்….? என்று ஈனஸ்வரத்தில் அழுது கொண்டே நா தழு தழுக்க சொல்கிறாள் சித்ரா. ஈஸ்வரனின் அண்ணாவும், மன்னியும் அவளைச் சமாதானப் படுத்தியபடி தட்டிக் கொடுத்தனர்…




அழாதேங்கோ….அழாதேங்கோ…ப்ளீஸ்….தைரியமாயிருங்கோ …..யாருமே இதை எதிர்பார்க்கலே…..என்ற கார்த்திக் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் மௌனமானான்.




அங்கு வந்திருந்தவர்களில் சிலர் அந்த சோகமயமான சூழ்நிலையிலும் கூட ஒருவருக்கொருவர் கார்த்திக்கையும் கெளரியையும் பார்த்து ஏதோ கிசு கிசுத்துக் கொண்டிருந்தது போலிருந்தது அவனுக்கு.




அடுத்த சில மணி நேரத்தில் ஈஸ்வரனின் இறுதியாத்திரை துவங்கவும் அந்த வீடு கூட்டம் கலைந்து அழுகை சத்தம் ஓய்ந்து மௌனத்தில் மூழ்கியது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பும் முன்பு கௌரியை லேசாக ஒரு பார்வை பார்த்து விட்டு லாவண்யாவுடன் மெல்ல வெளியேறினான் கார்த்திக்.




கூட வந்த அந்தப் பெண் யாராயிருக்கும் ? நேரடியாகக் இப்போ கேட்கவும் முடியாதே என்று அழுகை நிறுத்திய கௌரியின் மனது அந்த இக்கட்டான நேரத்திலும் கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் ஏங்கித் தவித்தது.




0 0 0 0 0 0 0 0




நான் வரதுக்குள்ளே அப்படி என்ன தலை தெறிக்க ஓட்டம் இந்த கார்த்திக்கு….சரியாச் சொல்லாம கொள்ளாமல்….அவாத்துக்குப் போக வேகித்து….வரட்டும்…வரட்டும்…என்று கோபத்தோடு கல்யாணி மகனை மனசுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள். அதே சமயம், இன்னைக்கு இவன்கிட்ட நேரடியா என் மனசில் தோன்றியதைப் பேசிட வேண்டியது தான். லாவண்யா முறை பொண்ணு தான். பேசாமல் காதும் காதும் வெச்சா மாதிரி சிம்பிளா ஒரு கல்யாணம் பண்ணி வெச்சிட வேண்டியது தான். சொந்தம் விட்டுப் போகாது. சொத்தும் வெளிய போகாது. ஏகப்பட்ட சொத்து….சொந்தத்துக்குள்ள இருந்தால் தான் பாதுகாப்பு. லாவண்யாவும் என்கிட்டே அத்தை அத்தைன்னு ஆசையா அன்பா இருக்கா. அழகாவும் இருக்கா. இன்னும் என்ன வேணம்….வயசு வித்தியாசம்னு கூட ஜாஸ்தி இல்லை…வெறும் எட்டு வருஷம் தான்…எல்லாம் போதும் பார்த்துக்கலாம்…நான் எது சொன்னாலும் பொறுமையாக் கேட்டுக்கறா. எப்படியாவது இவர்கிட்டையும் பேசி ஒரு முடிவு எடுக்கணம்.

தம்பியும் , சுமதியும் கூட காரணமில்லாமல் பெண்ணைத் தனியே அனுப்பி இருப்பாளா…? அவாளுக்கும் மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருக்கணும். அவாளுக்கு வாய்விட்டு கேட்க தயக்கமோ என்னமோ? பாவம்…அதான் பெண்ணை அனுப்பி பார்த்திருக்கா…நானே இப்போ போன் பண்ணிப் பேசறேனே….நினைத்தபடியே கைபேசியில் தம்பி மனைவி சுமதியின் எண்ணை அழுத்திவிட்டு காத்திருக்கிறாள் கல்யாணி.




கல்யாணிக்கா….சொல்லுங்கோ நான் சுமதி தான் பேசறேன்…லாவண்யா என்ன பண்றா?




அவள் கார்த்தியோட எங்கியோ வெளில போயிருக்காள். என்று சந்தோஷமாக கல்யாணி சொல்வதை கேட்ட சுமதி.




ஏன்…? எதுக்கு? எங்கே போயிருக்கா ? என்று லாவண்யா அவனோட வெளியில் போவது பிடிக்காததைப் போல குரல் கம்முகிறது சுமதிக்கு.




அதைப் புரிந்து கொண்ட கல்யாணி, ஆமாம்…இப்போ வந்துடுவா…பக்கத்துல தான் போயிருக்கா…லாவண்யாவுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டியா? என்று கேட்கவும்.




ஆமாமா…பார்த்தாச்சு….என்னோடஒண்ணு விட்ட மாமா பையன் கிரீஷ், அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கான்…அவனுக்குத் தான் நம்ம லாவண்யாவைக் கொடுக்கலாம்னு நெனைச்சுண்டு இருக்கோம்…அவா வந்து இவளைப் பார்த்து பிடிச்சுப்போய் பேசியாச்சு. அதை உங்ககிட்ட சொல்லிட்டு ஒரு வாரம் இருந்துட்டு வா லாவண்யா அப்பறமா நாங்க வந்து அழைச்சுண்டு போறோம்னு சொல்லித் தான் அவளை அங்கே அனுப்பி வெச்சேன்..சொன்னாளோ ….எங்க ரெண்டு பேருக்குமே ஆபீசில் ஆடிட்டிங் வேலை ஜாஸ்தி..சரிக்கா… மத்ததை நான் அங்கு வந்து பேசிக்கறேன்….என்று போனை வைப்பதில் குறியாக இருந்தாள் சுமதி. அவளுக்கு என்ன அவசரமோ?




சுமதி சொன்ன விஷயம் கல்யாணிக்கு தன் எண்ணத்தில் மண் வீசியது போலிருந்தது….அப்போ நான் நினைச்சதெல்லாம் அவ்ளோ தானா? என்ற ஏமாற்றம்.




ஒரு வாய் வார்த்தைக்குக் கூட கார்த்தியை பற்றி சுமதி விசாரிக்காமல் இருந்தது கல்யாணியின் மனசுக்கு இன்னும் என்னவோ போலிருந்தது. அதைவிட லாவண்யாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு மனதை கவ்விக் கொண்டது. இவனுக்கென்ன குறைச்சல்.?..இந்த லாவண்யா இல்லாட்டா ஒரு சரண்யா பொறக்காமலா இருந்திருப்பா…பெரிய பீத்தல்…! அமேரிக்கா மாப்பிள்ளையாம்….! எனக்கும் ஆப்பிரிக்காவிலேர்ந்து மாட்டுப் பொண்ணு வருவாளாக்கும் என்று சொல்லிக் கொண்டவள்…கருமம்..கருமம்..நான் ஏன் இப்படி உளறரேன் என்று தலையில் அடித்துக் கொண்டே கல்யாணி எந்த வேலையிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மனசு பூரா வடபோச்சே….நிலைமை தான்.




எப்படியாவது இந்த லாவண்யாவுக்கும் முன்னாடி நம்ம கார்த்திக்குக்கு நல்ல இடத்தில் இது போல இல்லைன்னு ஒரு கல்யாணம் பண்ணி அவா மூஞ்சில கரியைப் பூசணம் .மனசுக்குள் சபதம் போட்டவளாக மீண்டும் சுமதிக்கு போன் செய்து, கார்த்திக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பொண்ணு பி டெக் , விப்ரோவில் நல்ல வேலை…பொண்ணுக்கு அம்பதாயிரம் சம்பளமாம்..கார்த்திக்கு அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு..அனேகமா கூடிய சீக்கிரம் இந்தாத்துலயும் கொட்டுமேள சத்தம் கேட்குமாக்கும் என்று இந்தக் க்ஷணத்தில் சுமதியிடம் நான் தோற்றுப் போகலை என்ற நிம்மதி பெருமூச்சு விட்டபடி பதிலுக்கு சுமதி பேசிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமலே போனை வைத்தாள் கல்யாணி.




அச்சச்சோ…இத்தனை நேரம் நாம அந்த கௌரியைப் பத்தி தானே சொல்லிண்டு இருந்தோம்…என்று தோன்றவும், இருந்துட்டுப் போகட்டும்…அப்பறமா பொண்ணு மாறிடுத்துன்னு சொன்னாப் போறது என்று சமாதானமானாள்.




வாசலில் கார்த்திக் வந்ததற்கு அடையாளமாய் பைக் உறுமி நின்றது. லாவண்யா வந்ததன் அடையாளமாக அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.




நாம போயிட்டு வந்த இடம் தெரிஞ்சா இப்போ அம்மா பத்திரகாளியாட்டம் போடுவா பாரேன்…..என்று கார்த்தி சொல்லும் போதே கதவு திறந்தது.




கல்யாணி கடுப்போடு நின்றிருந்தாள் …உங்க ரெண்டு பேரோட மூஞ்சிலயும் தான் நீங்க எங்க போயிட்டு வந்திருக்கேள்ன்னு எழுதி ஒட்டியிருக்கு..இவன் சொன்னால் கேட்க மாட்டான்….பின்புறமா வந்து குளிச்சுட்டு ஆத்துக்குள்ள வரணம்..தீட்டு…என்று சொல்லிவிட்டு படக்கென கதவைச் சாத்துகிறாள்.அதில் அத்தனை கோபமும் , ஏமாற்றமும் தெரிந்தது. அவளது மணக்கண் முன்பு கௌரி வந்து அழுவது போலவே இருந்தது. கல்யாணி எகத்தாளமுடன் முகத்தை நொடித்துக் கொண்டாள் .




அந்த பிரம்மாணடமான லட்சுமி பில்டிங்க்ஸின் ஆறாவது தளத்தில் கௌரி லிப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் முன்பாக அவள் போட்டுக் கொண்ட "ப்ளூ லேடி "சென்டின் மென்மையான மணம் அவளைத் தாண்டிக் கொண்டு அந்த நீள வராண்டா முழுதும் 'ஹலோ' சொல்லிக் கொண்டு பறந்தது..."டக் டக் " என்ற கௌரியின் செருப்பின் சத்தம் எதிரொலியாக கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது.





கௌரி வருவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்த 'குரூப்4 செக்யூரிட்டி' தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தபடியே, அவள் நெருங்கியதும்.....

மேடம்...குட் மார்னிங்...என்று தயங்கினான்.







ம்ம்....மார்னிங்...! ஏதாவது ப்ராப்ளமா? என்று கேட்டு விட்டு ஒரு நிமிடம் நின்றாள் கௌரி.







எஸ்....நோ....என்று தடுமாறியவனாக, ரெண்டு மாசமா எங்க கம்பெனி பேமெண்ட் பில் பெண்டிங் இருக்குதாம்....எங்க ஃபீல்ட் ஆபீசர் இன்னிக்கு உங்க கிட்ட சொல்லச் சொன்னார்....என்கிறான்.







ஓ ....நீங்க அவரை வந்து என்னை மீட் பண்ணச் சொல்லுங்க...பார்ப்போம் என்றபடியே கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு ஏதோ உரத்த குரலில் பேச்சு சத்தம் கேட்கவும், அந்தப் பெரிய அறை முழுதுமாக குளிரூட்டப்பட்டு சிறு சிறு கணினி தடுப்பான் அறைகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றுக்குள்ளும் ஒருவர் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது இது யாருடைய குரல்? என்றும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்? என்றும் அறியும் ஆவலில் தனது நடையை அமைதிப்படுத்திக் கொண்டு யாருக்கும் தெரியாதபடி அங்கிருந்த ஒரு காலியான தடுப்புக்குள் புகுந்து கணினி முன்பு அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டவளாக காதை மட்டும் தீட்டிக்கொண்டாள் கௌரி.







இங்காருடா மச்சி...புளிமூட்ட கோபால....தலைக்கு மேல இடியே விழுந்தாலும் எந்திரிக்க மாட்டாண்டா .....நானும் வந்த நாள் முதலா பாக்கறேன்...இவனுக்கு சம்பளம் கூடுதோ..... இல்லியோ..... கண்ணாடி பவர் கூடிக்கிட்டே போவுது...அதோட இல்லாம இடுப்பு சைஸ் வேற அநியாயத்துக்கு கூடிக்கிட்டே போவுதுடா.. அப்படியே அந்த கம்ப்யூட்டருக்கு மட்டும் கதவு இருந்துச்சின்னு வெய்யி கோபாலு அதுக்குள்ளாரத் தான் குடித்தனம் பண்ணுவான்....இதை ஜீவா தனது அடித் தொண்டையில் சொன்னதும் அதைக் கேட்ட மற்றவர்கள் கட கட வென்று சிரித்தனர்.







"பின்ன என்னடா மச்சி....கோபாலுக்கு கல்யாணம் ஆயிருச்சி.....நம்மள மாதிரியா 'வெந்தது போதும்'னு இருக்கறதுக்கு.....இதுவும் .வேலையின் நடுவே இன்னொரு குரல்...!










அதுக்குன்னு இப்பிடியாடா மாப்ள.....சைட் பிசினஸ் பண்ணிப் பண்ணியே பக்கத்துல ஒரு லட்சுமி பில்டிங் வெலக்கி வாங்கிருவாப்பல...கில்லாடிரா..கோபாலு ..பாரேன்...நான் இம்புட்டு சொல்றேன்....மவன்..முகத்தைத் திருப்பரானா பாரேன்....அம்புட்டு பெர்ஃபெக்டாம்...! வேலைல....வேலைல....! ஜீவா கிண்டலடிக்கிறான்.







டேய்...கோவாலு.....கோவாலு.....என்று வடிவேலு ஸ்டைலில் 'சந்திரமுகி எஃபெக்டில்' இன்னொருவன் கூப்பிட்டுப் பார்த்தும் தோற்றுப் போய் அவரவர் கணினியில் தங்களை புதைத்துக் கொள்கிறார்கள்.







யூ ...நோ.....காற்றுள்ள போதே தூற்றிக் கொள்னு, இவர் எந்த சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட மாட்டார்டா...எப்படியோ அந்த கௌரி மேடத்தை கைல போட்டுகிட்டு இந்த கான்டீன் கான்டிராக்ட்டை கூட அவர் தான் பண்றார் தெரியுமா? மாசா மாசம் சுளையா முப்பதாயிரம்.....ம்ம்ம்....எங்கிருந்தோ ஒரு குரல் ஆஜராகிறது.







அதுல என்னடா ஆச்சரியம்....தயிர் சாதமும்...தயிர் சாதமும்....எங்க போனாலும் ஒண்ணாயிரும்டா...!







ஹி ....ஹி ...ரியல் எஸ்டேட் பிசினஸ் பத்தி உங்க யாருக்கும் தெரியாதா? நம்ம கோபால் சார் தான் இந்த சிட்டில பாதிக்கு மேல பில்டிங்ஸ்ல ஃபிளாட்ஸ் புக் பண்ணியிருக்க பெரிய புள்ளி....யாருக்காச்சும் ஃபிளாட் வேணும்னா இவரைக் கான்டாக்ட் பண்ணினா போதும் எந்த ஏரியா ஆனாலும் கிடைக்கும்....இதுக்கெல்லாம் ஏஜெண்ட் இவருதான்.







முதல்ல புக்கிங் பிறகு செல்லிங் தென் லாபம் சுருடிங்....ன்னு கோபால் & கம்பெனிக்கு எப்பவும் சுக்கிர தசை தான்...! நமக்கு தான் எதுவுமே செட் ஆக மாட்டேங்குது...என்று ஜீவா பெருமூச்சு விடவும்.







டேய் ஜீவா...உன்னோட புதிய டெல்லி ப்ராஜெக்ட் என்னாச்சு...? இப்ப உக்காந்து கதை பேசிட்டு அப்புறம் மேடம் வந்ததும்.....தலையைச் சொறி.....அந்த டெல்லி ப்ராஜெக்டை சர்வே பண்ணிட்டியாடா... ஜீவா? அதப் பண்ணு முதல்ல...எவனுக்கு எங்க பேங்க் பேலன்ஸ்ன்னு பார்க்காதே..நீ விடற புகை இப்பவே என் கண்ணைக் கட்டுதே...! - இது கோபால்.







ஏண்டா...மச்சி..இப்படி பயமுறுத்திக்கிட்டு ..! நான் எப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசைப் பட்டேன் தெரியுமா? உன்ன மாதிரி இருவது பேரை எனக்குக் கீழ வேலைக்கு வெச்சி சொடக்கு போட்டு வேலை வாங்குறாப்பல ...! இப்பப் பாரு என் நிலமைய...ஆழாக்குக்கும், படிக்கும் பதில் சொல்லுற நிலைமை...! ஆனாலும் இந்த கௌரி ரொம்ப மோசம்டா...நெனைச்சா நடக்கணும்...சொன்னா முடிக்கணும்னு...ஒரு லேடி ஹிட்லர் கிட்ட மாட்டிக்கிட்டு நான் தவிக்கிறேன்டா....! .இத்த எல்லாம் எவன் கல்யாணம் கட்டித் தாலி..................!







அதற்குமேல் பொறுக்காமல் கௌரி டக்கென எழுந்து "ஸ்டாப் ஜீவா....கமின் " என்று கடுமையான குரலில் அழைத்துக் கொண்டே தன அறைக்குள் நுழைந்து அவளது சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு லேசாக ஆடிக் கொண்டே ஜீவாவுக்காக காத்திருந்தாள்.







தயங்கிய படியே உள்ளே நுழைந்த ஜீவா...."மேடம்...ப்ளீஸ் ஐம் சாரி..." என்று குரலில் நடுங்கினான்.







"இது உனக்கு டிரெனிங் பீரியர்ட் தானே " நினைவிருக்கா?







எஸ் மேடம்....!







அதுக்குள்ளே இத்தனை வாய்ஸா ..! இப்ப உன்னைப் பார்த்தால் எனக்கு அன்னிக்கு வேலைக்கு இண்டர்வியூ வந்த போது பவ்யமா நின்ன கோலம் தான் நினைவுக்கு வருது. என் மேல தான் மிஸ்டேக். ஒரு சான்ஸ் கொடுத்தேன். யூ ப்ரூவ்ட்....!. கதம்....கதம்....!.என்று சொல்லிக் கொண்டே இண்டர்காமில் யாரிடமோ பேசிவிட்டு..."ஜீவா இனிமேல் உங்க சர்வீஸ் எங்களுக்குத் தேவை இல்லை...கண்டிப்பான குரலில் சொன்னாள் கௌரி.







மேடம்.....ப்ளீஸ்...ப்ளீஸ்....!







நோ...எக்ஸ்க்யூசெஸ்...!







அட்லீஸ்ட்...இன்னும் ரெண்டு நாளில் வரும் " நண்பன் டே" வரைக்கும் இருந்துட்டுப் போயிடறேன்...அதுக்குள்ளார இருக்குற பெண்டிங் வொர்க்ஸ் முடிச்சு கொடுத்துடுவேன்...ப்ளீஸ்...ஜீவா கெஞ்சினான்.







ம்ம்...சரி...அது கழிஞ்சு நீங்க ரிலீவ் ஆகிக்கோங்க ஜீவா ....லெட்டெர் ஃபாலோஸ் என்று சொல்லிவிட்டு தன் இருக்கையை விட்டு எழுந்து வெளியேறினாள் கௌரி.







ஜீவா தான் செய்த தவறை நியாயப் படுத்திக் கொண்டே...."இரு...இரு...உன் திமிரை அடக்கறேன்.....எனக்கா இங்க வேலை இல்லை....உன்னை என்ன பண்றேன் பார் ." என்று கருவிக் கொண்டே தனது இருக்கையை நோக்கி நடக்கிறான்.







கௌரி தனக்குள்ளே..."நான் இவனை எப்படி வேலைக்கு செலெக்ட் பண்ணினேன்....வெறும் அவுட் லுக்கைப் பார்த்தா!.....தப்பு பண்ணிட்டேன்....நல்ல வேளையா இந்தப் புல்லுருவியை உருவியாச்சு...என்று நினைத்துக் கொண்டே "இடியட்....எங்கிட்டயேவா..." என்று எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.







கௌரிக்கு இந்த ஜீவாவா இப்படி....என்று அதிர்ச்சியுடன் வேறு எந்த வேலையும் ஓடாமல் மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது.







இந்த ஜீவாவால் தான் தன் வாழ்க்கை ஜீவன் இழக்கப் போகிறதென்று அறியாதவளாக அவனை மனசுக்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.







ராத்திரி பூரா கார்த்திக்கின் போன்காலுக்காக காத்து காத்து கடைசியில் அவனது போன் வந்து..." அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா அனேகமா நாளைக்கு உங்காத்துக்கு வருவா...அடுத்த மாசமே கல்யாணமாம்....உனக்கும் சம்மதம் தானே " என்று கேட்டது நினைவுக்கு வரவும், அந்த நினைவில் மனசின் தற்போதைய இறுக்கம் தளர்ந்து குளிர்ந்தது.







சீக்கிரமா வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொல்லியாகணும் ...மனம் அவசரப் பட்டது.







அதற்கும் முன்பு, "நண்பன் டே " க்கு கார்த்திக்கையும் கூப்பிடலாம்...கண்டிப்பா வருவான் என்று நினைத்தவள் தனது செல்போனில் கார்த்திக்கை கொஞ்சியபடி அழைத்தாள்.










0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0













"விளையாட இது நேரமா...?

என் வினையாலே படும்பாடு

தனை சொல்ல வரும்போது

விளையாட இது நேரமா? முருகா...

களைத்தேன் ஜென்மம் எடுத்து சலித்தேன்..

பொறுத்திருந்து உளமார

உன்னை நாடி வரும்போது

விளையாட இது நேரமா...?

முருகா...!







வாசல் வராண்டா வரையிலும் சித்ரா பாடும் குரல் கணீரென்று கேட்டது .







வீட்டிற்குள் நுழைந்தது கூடத் தெரியாமல் தனை மறந்து கண் மூடிப் பாடிக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தபடியே நின்றிருந்தாள் கௌரி.







பாடல் முடிந்து கண் விழித்துப் பார்த்ததும் அதில் வடிந்த கண்ணீரைப் பார்க்கத் தவறவில்லை கௌரி...







ஏன்மா...? இப்படி அழுதுண்டே இருக்கே....? மனசைத் தேத்திக்கோ...எங்கயாவது வெளில போயிட்டு வர வேண்டியது தானே....? கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும்.







வேண்டாம்...பிடிக்கலை...ஒண்ணுமே பிடிக்கலை...!விரக்தியோடு வந்தது சித்ராவின் குரல்.







டீ பாய் மேலிருந்த புத்தகத்தைப் பார்க்கிறாள் கௌரி...." மாற்றியது யாரோ...?" என்று தலைப்பிட்டு அட்டைப் படத்தில்அழகான பெண்...அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துப் பார்க்கிறாள்...ஓ அன்று இந்தப் புத்தகத்தைத் தான் அப்பா படித்துக் கொண்டிருந்தாரோ....அந்த டெல்லி பிரசாத் லெட்டர் இதுக்குள்ள தானே இருந்தது...அதைத் தான் இப்போ அம்மாவும் படிச்சிண்டு இருக்காளா? அப்படி இந்தக் கதையில் என்ன இருக்கும்.?...அதை கையில் எடுத்துக் கொண்டு தன அறைக்குள் நுழைகிறாள்.

கையில் காப்பியோடு வந்த அம்மாவைப் பார்த்து லேசான புன்சிரிப்புடன்....அவாத்தில் இருந்து இன்னைக்கு யாராவது வந்தாளா? என்று கேட்கிறாள்.







யாராத்திலிருந்து....அந்த கார்த்திக் ஆத்திலிருந்தா ..?







ம்ம்...ம்ம்...அவரோட அம்மா இன்னைக்கு வரேன்னு சொன்னாளாம்...கார்த்தியோட அம்மா சம்மதிச்சுட்டா ன்னு கார்த்திக் தான் சொன்னான்.....அதான் கேட்டேன்...! காப்பியை உறிஞ்சிக் கொண்டே சோபாவில் உட்கார்ந்து கொள்கிறாள் கௌரி. கையில் அந்தக் கதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே ஏதோ ஒரு வரியில் கண்கள் குத்திட்டு நிற்கிறது.







" ஆம்...வாழ்க்கைக்குத் துணை எந்த வயதிலும் அவசியம் தான்...ஒரு வயதுக்குப் பிறகு மனசுக்குத் துணை....அவசியத் தேவை தான்..." என்ற வரியைப் படித்ததும் அவள் மனம்....அம்மா...உனக்கென்ன வயதாகிறது? .வெறும் நாற்பத்தி ஐந்து தானே...? பாவம்மா நீ..! எனக்கு இது கூடப் புரியாமல் போச்சே...நினைத்துக் கொண்டே காப்பியை குடித்து விட்டு அந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு , சோபாவில் நன்றாக சாய்ந்து கொள்கிறாள்.







வாசலில் நிழலாடும் சப்தம் கேட்கிறது..எட்டிப் பார்க்கிறாள்....கார்த்திக்கின் அம்மாவும் அப்பாவும் நின்றிருந்தார்கள்.







துக்கம் கேட்க வந்திருந்தவர்களாக அவர்களும் சோகம் மூடிய முகத்தோடு உள்ளே நுழைய.....







உட்காருங்கோ...என்றதும் உட்கார்ந்தார்கள்.







சித்ராவின் அம்மாவைப் பார்த்து கல்யாணி ...மெல்லிய தொனியில்..." பாவம்..இப்படியாகும்னு நாங்க நினைக்கவே இல்லை....பாவம் சின்ன வயசுதான் அவருக்கு .சாகிற வயசில்லை தான்...இப்படியா விபத்தில் வாரிக் கொடுக்கணம் ? விதி....என்ன செய்ய? என்று சொல்லிக் கொண்டிருக்கையில்.







ஒரு சோகம் ஒரு கல்யாணத்தில் சரியாகும்னு சொல்வா...என்று கார்த்திக்கின் அப்பா ஆரம்பிக்கும் போது ...







மாமா....என்று குறிக்கிட்ட கௌரி..சரியாச் சொன்னேள்...நானும் அப்படித் தான் நினைக்கறேன்...என் அம்மா என் அப்பாவை மறக்கணும். மிச்ச வாழ்க்கையை நிம்மதியா வாழணும் ..அதுக்குத் தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகிறாள்.







அந்த மௌனத்தை கிழித்துக் கொண்டு எல்லோரது மனமும் ஒரே கேள்வியால் நிரம்பி வழிந்தது...என்னவாக்கும் அது?







எனக்கு இன்னொரு அப்பா....அதாவது என் அம்மாவுக்கு இன்னொரு கல்யாணம்...பண்ணனும்னு....அவள் முடிக்கவில்லை..







சித்ரா...கத்துகிறாள்..போதும் நிறுத்துடி.......ஏன்தான் என் மானத்தை நீ இப்படி வாங்கறியோ? குபுக்கென கண்களைக் கண்ணீர் ததும்பி வழிய சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை அழுத்திச் சார்த்தி எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள்.







இதென்ன புதுக் கூத்து...? கிணறு வெட்ட பூதம் கிளம்பற கதை தான்...! நீ எப்போ உங்கம்மாவுக்கு பிள்ளை பார்த்து......ம்ம்..இதெல்லாம் .நடக்கற காரியமா? கல்யாணி கேலியாக பட்டென சொல்கிறாள்.







ஏன் நடக்காது? நடந்ததுக்கு அப்பறம் உங்க பிள்ளை கார்த்தியை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்...என் அம்மாவுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? என்று ஆவலோடு அவர்கள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கும் போது .







வாங்கோன்னா...இதெல்லாம் நமக்கு சரிப் படாது...இந்தப் பொண்ணு தெளிஞ்ச வெள்ளம் குடிச்சவளாக்கும் ...நான் தான் புத்தி கெட்டுப் போயி இங்க வந்தேன்....நீங்களாவது சொல்லப் படாதோ...? என்று பழியைப் பக்கத்துத் தலையில் போட்ட கல்யாணி ...கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா...அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடித்தாம்..இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்....என்று பொரிந்து தள்ளியபடியே...நீங்க எழுந்திருங்கோ முதல்ல...வாங்கோ போலாம்....!







இவ பெரிய... முற்போக்குவாதி...! இந்த முற்போக்குவாதி இன்னும் என்னெல்லாம் செய்யுமோ? இதெல்லாம் பார்க்கற சக்தி நேக்கு இல்லடீம்மா....நீயுமாச்சு...உங்கம்மாவுமாச்சு...என்று கணவனின் கையைப் பிடித்து எழுப்பியப்படியே நடந்தவள்...."இவ நம்மாத்துக்கு சரிபட்டு வரமாட்டா" எனக்கு ஆத்துல ஆயிரம் வேலை இருக்கு.....என்று சொல்லிக் கொண்டே வெளியேறினாள்.







ரெண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறியாச்சு...! என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார் கார்த்திக்கின் அப்பா.







நான் தான் உங்களுக்குச் சரிப்பட்டு வருவேன்.....என்று அவர்களது முதுகைப் பார்த்து சொல்லியபடியே...."தான் மட்டும் நன்னா இருக்கணும்....மத்தவா எப்படிப் போனா என்ன?" ..இவா எல்லாம் தான் திருந்தாத்த ஜென்மங்கள்.....என்று சொல்லிக் கொண்டே அம்மா...அம்மா...கதவைத் திற அவாள்ளாம் போயாச்சு ....வெளில வா...என்று பட பட வென்று அறைக் கதவைத் தட்டுகிறாள் கௌரி.







கதவைத் திறந்த சித்ரா.....பெரியவா சின்னவான்னு பார்க்காமல் இப்படிப் போயி சம்பந்தி மாமிக்கு முன்னாடி என் மானத்தை வாங்கினியே... போதுமா? திருப்தியா? என்று கண்ணைக் கசக்கிக் கொண்டாள். எதை, எப்போ...யாருகிட்ட பேசணும்னு ஒரு விவஸ்தையே இல்ல உன்கிட்ட....! என்று பொருமுகிறாள் சித்ரா.







அம்மா......ஒண்ணும் தப்பு நடக்கலை.....நான் உனக்கு ஒரு துணையைத் தேடித் தந்துட்டாக்கும் அவாத்துக்கு மருமகளாப் போவேன். கார்த்திக் இதுக்கு சம்மதிப்பான்....இவாள்ளாம் சம்மதிக்கணும்னு ஒண்ணுமில்லை....எனக்கு வேண்டியது உன்னோட சம்மதம் மட்டும் தான்.







வாயை மூடு....! அப்பா போய் மூணு மாசம் கூட ஆகலை...அதுக்குள்ளே அசட்டுப் பிசட்டுன்னு நீ பண்றது கொஞ்சம் கூட ரசிக்கலை....கல்யாண வயசிலே பொண்ணை வெச்சுண்டு ...நோக்கு புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சா என்ன? நான் தான் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சுட்டேன்னு நினைக்கறேன்...என்று சித்ரா சொன்னதும்.....







நீ உன் மனதைத் திற...! இப்பப் பார்த்து அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணீடா போறது...நாளைக்கேவா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்....இந்த உலகத்தில் எதுக்குமே நீ மட்டும் முதலாவது கிடையாது...அதைப் புரிஞ்சுக்கோ , என்று சொல்லி விட்டு தனது மடி கணினியைத் திறந்து இணையத்தில் இணைந்தாள் .







அவள் தேடுதல் இணைய தளத்தில் "மறுமணம்" பக்கத்தை நோக்கி விரிந்து கொண்டிருந்தது.







நான் பாட்டுக்கு உன்னை இப்படியே விட்டுட்டு கார்த்திக்கோட கல்யாணமாகி போயிட்டேன்னு வெய்யி...நீ யாருமில்லாத்த இந்த வீட்டை சுத்தி சுத்தி வந்து நோக்குத் தான் பயித்தியம் பிடிக்கும்....ஒரு வயசுக்கப்பறம் பேச்சுத் துணை ரொம்ப முக்கியம்...அதைத் தெரிஞ்சுக்கோ..அதான் அந்த புத்தகத்தில் கூட படிச்சிருப்பியே....!







அதுக்குக் கல்யாணம் தேவையில்லை.....ஆன்மிகம்..கடவுள்...ஜபம்....தபம்.... போதும்...நான் பாட்டுக்கு கோயில் குளம்னு போயிண்டு.....!







சித்ரா பேசி முடிக்கவில்லை....கௌரி குறுக்கிட்டு......."ரெண்டு பேருமா சேர்ந்தே போங்கோளேன்....."







இவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று சித்ரா வாயை மூடிக்கொண்டாள் .







நீண்ட நிசப்தம் அவர்களுக்குள் நுழைந்து கொண்டது.































0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0







"நண்பன் டே" நினைவுடனே மனசெல்லாம் கோலாகலமாக அன்றைய பொழுது விடிந்தது. வழக்கத்துக்கு மீறிய சந்தோஷத்தில் கௌரி இருந்தாள் . கார்த்திக் தானும் வரேன் என்று சொன்னதால் தான் அவளுக்குள் அத்தனை சந்தோஷம் என்று அவள் உணர்ந்தாள் .







பார்த்துப் பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள் . அவள் பிறந்ததே அவனுக்குத்தானோ என்ற மனநிலையில் தனக்குள் தானே ரசித்துச் சிரித்துக் கொண்டாள் .

திரும்பத் திரும்ப கார்த்திக்குக்கு போன் செய்து கண்டிப்பா வந்துடுடா....இங்க சிலபேர் கிட்ட சொல்லியிருக்கேன்...நாம எல்லாரும் இ சி ஆர் ரோட்டில் முட்டுக்காடு போறோம்...அங்கே ஒரு ரிசார்ட்...ஒரு நாள் பூரா.....அங்க தான்....சரியா..டிரஸ் எடுத்துண்டு வந்துடு....என்ன.







ஆஹா ......கௌரி ஸோ நைஸ் ஆ ஃ ப் யூ ..! நானும் ரொம்ப நாளா அங்கல்லாம் உன்னோட போகணும்னு நினைச்சேன்....உனக்கும் வேலை...எனக்கும் வேலை....அட்லீஸ்ட் என்னால உன்னை அழைச்சுண்டு போக முடியலை...உன்னால எல்லாம் முடியறது. நீ கிரேட்....கௌரி...!







ரொம்ப ஐஸ் வைக்காதே...அப்பறம் நான் மூக்கைத் துடைச்சிண்டு மூலைல உட்கார்ந்துடுவேன்....!உன்னோட கோல்டன் வர்ட்ஸால எனக்கு கோல்ட் பிடிச்சிடும்...!ஆமா..உனக்குப் பிடிச்ச கலர் சொல்லேன்....!







ஆரஞ்ஜ் ....மிட்டாய் ரோஸ்...கிளிப்பச்சை...!







மாடு முட்டும்... பரவாயில்லையா?







இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். சரி..சரி...சீக்கிரம் கிளம்பி வா...நான் ஃபோனை வைக்கறேன்...என்றவள் கார்த்திக்கின் வரவுக்காக காத்துக் கொண்டே மனசுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். இது தான் சரியான தருணம்....இன்னைக்கே நம்ம அம்மாவுக்கு கல்யாணம் பண்ண நினைக்கறேன்னு கூட அவனுக்குத் தெரியப் படுத்தணம் . கார்த்திக் புரிஞ்சுக்குவான்..ரொம்ப நல்லவன்...!







ஒரு வழியா ஹைடெக் ஏசி பஸ்ஸில் "விப்ரோ நண்பன் டே குதூகலம் " என்று பெரிய பானர் கட்டிவிட்டு பஸ்ஸுக்குள் அனைவரும் அடைந்து கொண்டனர்.....சந்தோஷப் பேச்சும், சிரிப்பும்,களிப்புமாக பஸ் முட்டுக்காடு நோக்கி நகர்ந்தது.







'மச்சி ஓபன் த பாட்டில்' என்று ஒரு குரல் குஷியானது...அதைத் தொடர்ந்து கூடவே தொடர் விசில் அடிக்கும் சத்தங்கள். இதில் பெண்களும் அதிக கரகோஷத்தோடு விசில் அடித்து சிரித்துக் கொண்டதைப் பார்த்த கௌரி.....எல்லாருமே தெளிஞ்ச வெள்ளம் குடிச்சதுகள் தான் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். அவளது அருகில் இருந்த கார்த்திக் "ஹேய்....நீங்கள்லாம் நல்லாவே என்ஜாய் பண்றீங்கப்பா....என்று சொல்லி கௌரியின் தோளில் இடித்துச் சிரித்தான்.







முட்டுக்காடு போட்டிங், ரிசார்ட்டில் லூட்டி, பாட்டு, டான்ஸ்...என்று நேரம் ஜாலியாகப் போய்கொண்டிருந்தது....!







ஜீவா தான் கார்த்திக்கிடம் தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டு....ஜோக் அடிக்க இருவரும் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அது தனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட மரியாதை நிமித்தம் கௌரி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.







அந்த நேரத்தில் கௌரி...நானும் ஒரு பெக்... சோஷியல் டிரிங்க் ...ஓகேயா...என்று கண்ணால் கேட்டு சைகை காட்டிய கார்த்திக்கை கண்ணால் அதட்டி "உஷ் மூச்சு " என்று சைகை காட்டினாள் கௌரி....அவனும் பதிலுக்கு சரி சரி என்று அடங்கினான்...கௌரி "சமத்து" என்று சிரித்துக் கொண்டாள் .










ஐந்து மணிக்கு பஸ் திரும்பும் சமயம் பார்த்து கார்த்திக் தான் கேட்டான் "கௌரி இத்தனை தூரம் வந்தாச்சு அப்டியே எங்க ஆபீசுக்கு சொந்தமான 'சான்ட் ஃபீல்டை' ஒரு நடை பார்த்துட்டு வந்துடுவோம்..எனக்கும் ரொம்ப நாளா ஆசை...!










வேண்டாம் கார்த்திக்...நாளைக்கு நான் டெல்லிக்கு போகணும்....அந்த புது ப்ராஜெக்ட் கிடைச்சாச்சு..அதுக்கு கமிங் மண்டே சர்வே பண்ணி சிக்னேச்சர் போட டெல்லி பிராஞ்சில் கூப்பிட்டிருக்கா ....அம்மாட்ட இன்னைக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்...நெக்ஸ்ட் வீக் ப்ளான் பண்ணலாமே...என்ன சொல்றே..? என்று முகத்தை சாய்த்துக் கொண்டு பதிலுக்கு எதிர்பார்க்கிறாள் கௌரி.







நீ ஏன் டெல்லி வரை போகணும்...இதெல்லாம் உங்க ஹையர் பாஸ் பார்த்துக்க மாட்டாளா.....? வேண்டாத்த வேலை எல்லாம் இழுத்துப் போட்டுக்காதே...!







இல்ல கார்த்திக்...இது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி....பை தி பை....நீ இதெல்லாம் வேண்டாம்னு சொல்லாதே....'ஐ நோ வாட் நாட் டு டூ'...!







அப்போ....இப்போ 'வாட் டு டூ' ன்னு நான் சொல்றேன்....நீ கேளு....இவாள்லாம் பஸ்ல ரிடர்ன் போகட்டும்...நாம சான்ட் ஃபீல்ட்....ஓகேயா..?







கௌரிக்கும் தனிமை தேவைப் பட்டது....எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு அம்மா விஷயத்தை சொல்லிப் புரிய வைக்கணுமே..அதனால் .."சரி கார்த்திக் " என்றாள் .







அடுத்த சில நிமிடங்களில் கால் டாக்ஸி இசிஆர் ரோட்டில் இவர்களோடு விரைந்தது 'சான்ட் ஃபீல்ட்' நோக்கி. இரண்டு பக்க பசுமை கண்களையும் நெஞ்சத்தையும் நிறைத்தது. நாளைக்கு நைட் தான் டெல்லி ஃப்ளைட்.....ஒரே நாள் தான்...மண்டே ஈவினிங் நான் ரிடர்ன்...என்றாள் கௌரி.







சரி...சென்று வா...விடை கொடுக்கிறேன் என்று வழிந்தான் கார்த்திக்.







அவர்களை இறக்கி விட்டு விட்டு டாக்ஸி நகர்ந்தது.







வாவ்....கிரேட் ப்ளேஸ் யா...என்று ஆச்சரியமானாள் கௌரி...!







பெருமையில் மிதந்தான் கார்த்திக்.







அவர்களது ரிசார்டை திறந்து கொண்டு உள்ளே சென்றதும்...ஏதோ மாயா லோகத்தில் நுழைந்த உணர்வோடு மனது துள்ள ஆரம்பித்தது இருவருக்கும்..







ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தவர்கள்.....ஆஹா...வீடு கட்டினா கூட இப்படித்தான் கட்டணம்...இங்க பார்த்தியா கார்த்திக்..என்று கண்ணாடிச் சுவரை மறைத்த பெரிய ஸ்க்ரீனை விலக்கிக் காட்ட அங்கே கருநீல வானும்...தூரத்துக் கடலும்...பைன் மரங்களுமாக அட்டகாசமான ஒரு இயற்க்கை சூழலை கண்முன்னே நிறுத்தியது.







தனை மறந்து நின்ற கௌரியின் தோளில் கைபோட்டபடியே கார்த்திக் அருகே நின்று கொண்டான்.







ரொம்ப ரம்மியமா இருக்குல்ல...என்றவள்.....சரி பார்த்தாச்சு...போகலாமே என்றாள் .







உனக்குப் போக மனசு வருதா? எனக்கு வரலே....உன்னோட இருக்கணும் இந்த மாதிரி இடத்தில்.....பேசிண்டே...! என்று நிறுத்தினான்.







கார்த்தி...நானும் உன்னோட கொஞ்சம் பேசணும்...அதாவது...என்று இத்தனை நேரம் தனது மனதில் அரித்துக் கொண்டு நின்ற அம்மாவின் கல்யாணத்தைப் பற்றியும், அதனால் வரும் விளைவுகள், நன்மைகள், என்று அலசிப் பேசி முடித்தாள். கார்த்தி..இப்ப நீயே சொல்லு நான் நினைக்கறது சரி தானே?







ம்ம்ம்ம்...நீ சொல்றது சரி தான் கௌரி...உன் அம்மா சம்மதிச்சா .....நிச்சயம் உன் எண்ணம் ஈடேறும். இது எனக்கொண்ணும் இலலை. இந்த விஷயத்தில் உன்னை நினைக்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு தெரியுமோ? நீ கிரேட் தான் கௌரி....!







கார்த்திக்கின் கண்களை ஊடுருவிப் பார்த்தவளாக, நீ மட்டும் என்னவாம்....நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஏத்தா மாதிரி தான் நீயும் யோசிக்கிறே....நீ கூட கிரேட் தான்.







பின்பு இருவரும் வெளியில் கைகோர்த்தபடி நடக்கிறார்கள்.....'கேண்டில் லைட்டில்' ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கியபடி டின்னர் என்று பசிக்கு எதையோ கொரி க்கிறார்கள்.







இரண்டு மனமும் சந்தோஷ அலைவரிசையில் ஒன்றாக சேர்ந்து ராஜநடை போட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.







தனிமை, சந்தோஷம், சுதந்திரம், சூழ்நிலை இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் இருவரையும் சிறை பிடித்தது.







ஜீனே லகா ஹூன் பெஹலே ஸே ஜ்யாதா




பெஹலே ஸே ஜ்யாதா




தும் பர் மர்னே லஹா ஹூம்....! ,,




மேய்ன் மேரா தில் ஔர் தும் ஹோ யஹான்...

ஃபிர் க்யோன் ஹோ பலுகேன் ஜூகயேன் வஹான்...

தும் ச ஹசீன் மைனே தேக்கா நஹின்..

தும் இஸ் ஸே பெஹலே தி ஜானே கஹான்

ஜீனே லகா ஹூன் பெஹலே ஸே ஜ்யாதா....!







எல்.சி.டி யில் ஒரு புது ஹிந்தி படத்துக்காக ஸ்ருதிஹாசன் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். அதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கௌரி.







கௌரியைப் பார்த்து ..யூ லுக் கார்ஜியஸ்....என்ற கார்த்திக்கின் வார்த்தைக்கு மெழுகென உருகினாள் கௌரி.







கார்த்திக்கின் தைரியத்தில் கௌரியின் தயக்கங்கள் தளர்ந்து போனது.







"இந்த உலகத்தில் எதுக்குமே நீ மட்டும் முதலாவது கிடையாது...அதைப் புரிஞ்சுக்கோ என்று நேற்று அம்மாவுக்கு அறிவுரை சொன்னது நினைவுக்கு வந்தது". கௌரி கார்த்திக்கின் அன்புப்பிடிக்குள் பிடிவாதமாக நுழைந்து கொண்டு மயங்கினாள் .







காலைச் சூரியன் சுதந்திரமாக எழுந்தபோது தான் இருவருக்கும் சூழ்நிலையின் பிடிக்குள் இருந்து தாங்களும் விடுபட்டது போலிருந்தது.







சந்தோஷமாகவே இருவரும் அவரவர் வீட்டை நோக்கி விரைந்தார்கள்.







கௌரியின் மனம் ஊமையாக இருந்தது. "தப்புப் பண்ணிட்டேனோ .." வந்திருக்கக் கூடாதோ என்று ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. மெளனமாக கண்ணாடி வழியாக வெளியே பார்த்துக் கொண்டே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.







" கௌரி...நீ .ஒண்ணும் நினைச்சு குழம்பாதே....நீ எப்போ சொல்றியோ அன்னிக்கே நம்ம கல்யாணம்....ப்ராமிஸ் என்று சொல்லி கார்த்திக் அவளது கைகளை தனது கரத்தோடு இணைத்துக் கொள்கிறான். கௌரி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.







ஐ....நோ யூ டா.....என்றவள் அவனது கண்களைப் பார்க்க முடியாமல் முகத்தை தாழ்த்திக் கொள்கிறாள். அதில் கூடவே வெட்கமும் வந்து ஒட்டிக் கொள்கிறது.







ஒரு இடத்தில் இருவரும் இறங்கி வேறு வேறு வாகனத்தைப் பிடித்து அவரவர் வீட்டுக்குள் ஒன்றுமே நடக்காதது போல நுழைந்து கொண்டார்கள்.







இரவில் கிளம்பும் முன்பு 'கார்த்தி... அப்போ நான் டெல்லி கிளம்பியாச்சு ஏர்போர்டில் இருக்கேன் செக்- இன் ஆயிட்டேன்'...என்று தகவல் கொடுத்தாள் கௌரி.







சேஃப் ஜெர்னி....கீப் இன் டச்....கண்ணம்மா ...!. என்று கைபேசியில் முத்தமிட்டான் கார்த்திக்.







ஏர் இந்தியா விமானம் கௌரியை ஏற்றிக் கொண்டு டெல்லிக்குப் பறந்தது.







நேற்று நான் ஏன் இப்படி பண்ணினேன்...? ..அம்மாவுக்குத் தெரிந்தால் என்னவாகும்...? நான் நிஜத்தில் அவ்வளவு பலவீனமானவளா? நம்பவே முடியலையே...

கார்த்திக்கிடம் நான் உயிரையே வெச்சுருக்கேன்...அவனோட அன்புக்காக எதையும் செய்யத் துணிஞ்சுட்டேன்....ன்னு நினைக்கறேன்...இது தப்புன்னு தெரிஞ்சும் அந்த

எண்ணத்தை உதாசீனப் படுத்திட்டேன்....இதனால பெரிசா ஏதாவது நடக்குமா? என்ற மனசாட்சியின் குரலுக்கு ஒண்ணும் நடக்காது..கார்த்தி ரொம்ப நல்லவன் என்று மனசாட்சியே பதில் சொல்லியது.







ஜன்னல் வழியே பார்வையை அனுப்புகிறாள்.....பஞ்சுப் பொதியாக மேகங்கள் உலகத்திற்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது....இந்த மேகக் கூட்டத்துக்குள் இருந்து சினிமால வராமாதிரி நாரதர் வந்தால்...எப்படி இருக்கும்...? என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் .







மேடம்....'வெஜ் டின்னர்' என்று அவளது கைகளில் ஒரு ட்ரே திணிக்கப் பட்டது. அவளது பசி நிரம்பவும், டெல்லி ரன் வேக்குள் விமானம் இறங்கி ஓடி நின்றது.




கௌரி காலைவாரி விட்டதால் வந்த ஏமாற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தாள் கல்யாணி. "ஏன்னா, நீங்க முடிஞ்சா இன்னைக்கு மட்டும் உங்க ஆபீஸுக்கு லீவு போடுங்கோ .முதல் வேலையா கார்த்தியோட ஜாதகத்தை கையிலே எடுத்துண்டு கல்யாண மாலை கம்யூனிட்டி மீட் ஆனந்தா கல்யாண மண்டபத்துல நடக்கறதாம் ....நியூஸ் பேப்பர்ல இன்று வந்த விளம்பரம் பார்த்தேன் .அப்பாவா...லட்சணமா அந்த வேலையை உடனடியா பாருங்கோ...இல்லையானா விஷயம் நம்ம கைமீறி போயிடுமாக்கும்...வர வர கார்த்தியோட மூஞ்சியும் போக்கும் சரியில்லை. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்து வைக்கப் போறது. இந்த நேரம் பார்த்து நீங்க லாப்டாப்பை தோளில் மாட்டிண்டு ஊர் ஊரா வேலை வேலைன்னு டூர் போயிண்டு இருந்தால்...அவ்ளோ தான். என்னாலத் தான் இதெல்லாம் சமாளிக்க முடியலைன்னு ஆயாச்சு. நீங்களாவது இதை கவனியுங்கோ.இந்த வாரம் பதிஞ்ச வரனை அடுத்த மாசம் "சன் டிவி- கல்யாண மாலை நிகழ்ச்சில கூட அறிமுகம் பண்ணுவாளாம். என்ன சொல்றேள்? இதை விட்டால் நேக்கு.வேற வழியே தெரியலையாக்கும் என்று அங்கலாய்த்தாள் கல்யாணி.






உன்னை மாதிரி இருக்கப்பட்டவாளத்தான் வேதாளம் முருங்கை மரம் ஏறிச்சுன்னு சொல்வாளோ.. என்னவோ.....! எனக்கு இந்த வாரம் பூரா ஆபீஸ்ல ரொம்ப டைட் வொர்க்காக்கும்...தெரியுமா? ஐம்பது லட்சம் சேல்ஸ் டார்கெட் காமிக்கணும். சாதாரணமில்லை. நீ சும்மா இதுக்கெல்லாம் என்னைத் தொல்லை பண்ணாதே. என்னால கார்த்திக்குக்கு கூடப் பொண் பார்த்துட முடியும்..அது ரொம்ப ஈஸியாக்கும்...ஆனால் உனக்குத் தலையாட்டுற மாட்டுப் பொண்ணா தேடறது தான் ரொம்ப கஷ்டம். அது தான் என்னால ஆகாத்த காரியம்






ஹாங் ....மறந்தே போயிட்டேன் ....அதான் இன்னும் ரெண்டு நாளில் மதுரை கிளம்பறோமே ....லாவண்யா கல்யாணத்துக்கு...அங்க ஏதாவது பொண்ணு உன் கண்ணில் சிக்கும். கண்டிப்பா சிக்கும்.அதுவரைக்கும் என்னைக் கொஞ்சம் பிடுங்கி எடுக்காதே. எவன் தருவான் இந்த ஹெவி சீசன்ல எனக்கு லீவு...? என்னைக் கல்யாண புரோக்கர் ஆக்கிப் பார்க்கணும்னு வேற நோக்கு ஒரு ஆசையா? நன்னாருக்குப் போ....கல்யாணி, இந்த விளையாட்டுக்கு நான் வரலை....என்று நழுவினார் கார்த்திக்கின் அப்பா.










அட ஆமாம்னா .. நல்ல பொண்ணா கல்யாணத்துல பார்த்துக்கலாம் எதுக்கு இப்போ வீணா கல்யாண மாலைல ஒரு பதிவுச் செலவு....நீங்கள் தான் ஐடியா மன்னர்.உங்க ஒருத்தராலத் தான் உங்க கம்பெனியே ஓஹோன்னு நடக்கறதுன்னு நினைக்கிறேன்....உங்கள நேக்குத் தெரியாதா? நல்ல வேளை ....ஒருவழியா அந்த கௌரி கிட்ட இருந்து தப்பினோம்....எனக்கு இப்பவாவது புத்தி வந்ததே....அந்த மாமியே அந்த பொண்ணு கிட்ட மாட்டிண்டு தவியாய்த் தவிக்கறா....அவளுக்கு இந்த ஜென்மத்தில் மாங்கல்ய யோகமே அமையாது... நான் சொல்றேன்.என்று கௌரியின் மீதான தனது வெறுப்பை சாபமாக்கினாள் கல்யாணி.






உனக்கு வேண்டாம்னா விட்டுட்டுப் போயேன்...பெரிசா ரிஷி பத்தினியாட்டமா சாபம் தராதே...ஏதோ சின்னப் பொண்ணு....வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கற வயசும் அனுபவமும் போதாது அவளுக்கு.....நம்ம கார்த்திக் மட்டும் என்னவாம்?....சரியான எடுப்பார் கைபிள்ளை...நீ சொன்னா உனக்கும் தலையாட்டுவான்...நான் சொன்னால் எனக்கும் தலையாட்டுவான்....நடுப்பற வேற யாராவது நுழைந்தால் அவாளுக்கும் தலையாட்டுவான் தெரியாதா? சமயத்துல பெரியவா நாமளே அவனால தடுமாறறோம் இல்லையா? அதனால, இதெல்லாம் விட்டுத் தொலை.....அவாவாளுக்கு விதிச்சது தான் கிடைக்கும்.






ம்கும்......திடீர்னு பெரிய ஞானியாயிட்டேளாக்கும் ...பேச்செல்லாம் பந்தல் போட்டு வாழை மரம் கட்டறது என்று களுக்கென சிரித்தாள் கல்யாணி.






அது சரி....முதலில் மதுரைக்கு கிளம்ப கல்யாணத்துக்கு ஏத்தா மாதிரி எனக்கும் டிரெஸ்ஸை எடுத்து வைச்சுடேன் கல்யாணி....என்றதும்,






இந்தாங்கோ பெட்டி.....எனக்கு இன்னைக்கு தலைக்கு மேல டூட்டி இருக்காக்கும்...நானே..தலைக்கு 'டை' அடிச்சுக்கணும்... என்று பெட்டியைப் பொத்தென்று அவர் முன் வாய் பிளந்து சிரித்தது விஐபி பெட்டி.






சரியாப் போச்சுப் போ...என்றபடியே....இந்தப் பெட்டி சமாச்சாரத்தை சாயந்தரம் நானே வந்து கவனிச்சுகறேன்....என்றபடி "கார்த்தி...டேய் கார்த்தி மதுரைக்கு போக உன்னோட பெட்டில என்னோட ரெண்டு பட்டு வேஷ்டியை மட்டும் திணிச்சுக்கோடா " என்றபடி அங்கிருந்து மெல்ல நழுவினார் அவர்.






கார்த்தி தன்னுடைய டிராவல் பாக்கை எடுத்ததும் உள்ளிருந்து தொப்பென்று விழுந்தது லேடீஸ் ஹாண்ட்பாக்....! அதைக் குனிந்து கையிலெடுத்தவன் அதிர்ச்சியோடு அச்சச்சோ இது கௌரியோட ஹாண்ட்பாக் இல்லையோ ...? அன்னிக்கு கடைசியா 'சாண்ட் ஃபீல்ட்' போயிட்டு வரும்போது நான் தான் அவசரத்தில் என்னுடைய டிராவல் பாகில் வைத்தேன். கொடுக்க மறந்துட்டேனே...யோசித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணி அங்கு வந்தவள், அவன் கையிலிருந்த ஹாண்ட்பாகை பார்த்தவள் கண்கள் விரிய..டேய் கார்த்தி, என்னடா இது...அழகான ஹாண்ட்பாக்...எனக்காடா...இது ? என்றவள் அவன் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கியவள்....நல்ல வேளை.. ஊருக்குப் போக நல்லதா ஒரு ஹாண்ட்பாக் வாங்கணும்னு நினைச்சேன். நீ சமத்து...அமமாக்கோசரம் வாங்கி வெச்சிருக்கியே என்றபடி திறந்து பார்க்கிறாள். பொத்தென்று எதுவோ கீழே விழுந்து அங்கிருந்த டேபிளின் அடியில் சென்று மறைகிறது.






மா...அது கௌரியோட ஹாண்ட்பாகாக்கும் என்று சொல்ல வந்தவன் பல்லைக் கடித்துக் கொண்டு....வாய் வரைக்கும் வந்த வார்த்தையை அப்படியே முழுங்கியபடி....ம்ம்...ம்ம்ம்.. நீயே வெச்சிக்கோ.உனக்குத் தான் என்று சொல்லிவிட்டு கீழே விழுந்ததை தேடி எடுக்கிறான். ஓ ....இது கௌரியோட டேட்டா கார்டாச்சே...என்று சத்தமில்லாமல் அதை தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொள்கிறான்.






ஹாண்ட்பாக்கை எடுத்துக் கொண்டு நழுவிய கல்யாணி அதைத் துழாவிப் பார்க்கையில் அவளது கையோடு நான்காக மடிக்கப்பட்ட கடிதம் கூடவே டெல்லி ரிடர்ன்


ஃப்ளைட் டிக்கெட் ஒன்றும் சிக்கியது.....அதை எடுத்து கடிதத்தை படித்து விட்டு...."கல்யாணி லட்டு தின்ன ஆசையா? " என்று கண்கள் மின்ன இது ஒண்ணே போதுமே....என்றபடி டேய் கார்த்தி...கார்த்தி.... கார்த்தி ..கௌரிக்கு வந்த லெட்டெர் இந்தக் கைப்பையில் எப்படி? கூடவே ஏரோப்ளேன் டிக்கட் வேற. இந்தாத்துல எனக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடக்கறதோ...என்றவளாக. இந்தா நீயே படிச்சுப் பார்த்துக்கோ அந்த கௌரியோட யோக்கியதையை..எவனோ டெல்லி பிரசாத்தாம்....அவ அப்பாவுக்கு எழுதி இருக்கான். அதுவும் எப்போ..? நாம அவளைப் போயி பொண் பார்த்ததுக்கு அப்பறமா...? அந்த பிரசாத் அவளை லவ்வு பண்றானாம்....லவ்வு. ஏற்கனவே முற்போக்குவாதியாம்.....அந்தத் தைரியத்தில் இன்னும் என்னவெல்லாம் கண்றாவியோ? இந்தா நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ என்றவள்....நான் உனக்கு ரொம்ப சீரியஸா மதுரைல ஒரு பொண்ணைப் பார்த்து கால்கட்டு போட்டுடப் போறேன்... நீ தயாரா இரு...இப்பவே சொல்லிட்டேன்..என்று கோபத்தில் சீறிவிட்டுப் போகிறாள்.






அச்சச்சோ.....டெல்லி ரிடர்ன் டிக்கெட் கூட இதில்......ச்சே....என்ன முட்டாள்த்தனம்...என்று தலையில் தட்டிக் கொண்டவன், டிக்கெட் இல்லாமல் டெல்லியில் என்ன கஷ்டப் படறாளோ....பாவம் கௌரி.... என்ன லெட்டர் இது என்று எண்ணிக்கொண்டே கடிதத்தைப் படித்த கார்த்திக், இதைப் பத்தி சொல்லணும்னு தான் அன்னிக்கு 'சாண்ட் ஃபீல்ட்' க்கு அந்த லெட்டரையும் எடுத்துண்டு வந்திருப்பாளோ ...வேற ஏதேதோ பேசிவிட்டு சொல்ல மறந்து போயிருக்கும். பாவம் அவ அப்பா போன துக்கம், அம்மாவோட மன வேதனை....இதில் வேலை பளு...அன்னிக்குப் பார்த்து நான் வேற அவசரப்பட்டு....போச்சு எல்லாம் தப்புத் தப்பா....என்று நினைத்துக் கொண்டவன்..கௌரிக்கு ஒரு போன் பண்ணிப் பார்க்கலாம் என்று கைபேசியில் அழைக்க அது கௌரி அவுட் ஆஃப் ரீச்சில் இருப்பதாய் சொல்லியது. ஆமாம்...கௌரி இப்போ நீ எனக்கு அவுட் ஆஃப் ரீச் தான்...எனக்குத் தெரிஞ்சதைத் தான் இதுவும் சொல்றது....என்று உதட்டை பிதுக்கியபடி கைபேசியை மூடிவிட்டு மூட் அவுட் ஆனான் கார்த்திக்.







கல்யாணிக்கு இரண்டு நாள் போனதே தெரியவில்லை. தம்பி பெண் லாவண்யா கல்யாணத்தில் எப்படியாவது தன் மகன் கார்த்திக்குக்கு நல்ல பெண் அமைய வேண்டுமே என்று மானசீகமாக ஒரே எண்ணத்துடன் பிரயாணம் செய்தாள்.நல்லவேளையா அந்தக் கடிதம் என் கையில் சிக்கியது துருப்பு சீட்டு மாதிரி அது ஒண்ணே போதும்...இனி என்னிக்கும் அந்த கௌரி இந்த வீட்டு வாசல்படி மிதிக்க முடியாது என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மதுரை நெருங்க நெருங்க மனசு ரெக்கை கட்டிக் கொண்டது.


















மதுரையில் கால் வைத்ததும் மல்லிகைப் பூ வாசனை வந்து காலைக் கட்டிக் கொண்டது. அந்த மண்ணுக்கே ஒரு தனி வாசனையோடு அவர்களைச் சுமந்த கார் மிகப் பிரம்மாண்டமான "தி நார்த் கேட்" முன்பு கொண்டு சென்று நிறுத்தி மூச்சு வாங்கியது. காரை விட்டு இறங்கியதும் மதுரைத் தென்றல் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தழுவியது..






அவர்களை வரவேற்றவர்களின் மத்தியில் ஜீவாவைக் கண்ட கார்த்திக்,ஆச்சரியத்துடன் ஹேய் ...நீ...நீங்க ஜீவா.. தானே? நீங்க இங்க...உங்களை நான் இங்கே எதிர்பார்க்கவே இல்லை....ஹௌ நைஸ் .....என்றவன்...'ப்ரைட் என் மாமா பொண்ணு தான்'.என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான்.






ஓ... எனக்கும் சர்ப்ரைஸ் தான் எனிவே... நைஸ் மீட்டிங் யூ கார்த்திக் ...என்று கை குலுக்கிய ஜீவா.....நாங்க இவா ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டே அவனது தோளில் கை போட்டபடி ...அப்பறம் தலைவா...லைப் எப்டி போயிட்டிருக்கு? என்று சிரித்தபடியே கேட்டு கொண்டே இவர்களது அறைக்குள் அவர்களை விட்டு விட்டு...நாம அப்புறம் சந்திக்கலாம்....இதோ நானும் இந்த பக்கத்து அறையில் தான் இருக்கேன்...என்று தற்காலிகமாக விடை பெறுகிறான் ஜீவா.






கூல்.....ஜஸ்ட் ரெப்ஃரெஷ் பண்ணிண்டு வரேன் என்ற கார்த்திக் அம்மா அப்பாவுக்கு ஜீவாவை அறிமுகம் செய்து விட்டு அறைக் கதவைத் தாழ் போட்டுக் கொள்கிறான்.






அந்த கௌரியோட ஆபீஸ்ல வேலை பார்க்கும் ஜீவா....என்று கேள்விப் பட்டதுமே ...கல்யாணிக்குத் தூக்கி வாரிப் போட்டது.காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதோ? என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் உடனே கார்த்திக்கிடம் "டேய் கார்த்தி...இவன் கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு...ரொம்பப் பேச்சு வார்த்தை வெச்சுக்காத....பார்த்தால் மூஞ்சியே சரியில்லை இப்பவே சொல்லிட்டேன் என்று அபாயசங்கு ஊதியவளாக , சரி..சரி..கிளம்புங்கோ ...கல்யாண மண்டபத்துக்கு போய் எல்லாரையும் பார்த்து பேசிவிட்டு அப்படியே ஜானவாசம் முடிச்சுட்டு சாப்பிட்டு வரலாம் என்று அவசரப்பட்டாள் கல்யாணி.






ஆரம்பிச்சுட்டியா....நீயும் அப்பாவுமா முதலில் கிளம்பிப் போங்கோ...நான் பின்னாடியே வரேன் என்ற கார்த்தி சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பி நேராக ஜீவாவின் அறைக் கதவை தட்டுகிறான்..கல்யாணியின் அபாய சங்கு அவனைப் பொருத்த வரையில் செவிடன் காதுக்கு ஊதியது போலானது.


















அலங்காரம் செய்யப் பட்ட அந்த எழிலான திருமண மண்டபம் முழுதும்...."காசு...பணம்...துட்டு....மனி ....மனி ...." என்று செல்வாக்கை தண்டோரா போட்டது.






கல்யாணி பிரமிப்பு நீங்காதவளாக "என்னன்னா.....எவ்ளோ கிராண்டா கல்யாணம் பண்றான் என் தம்பி....மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப கொடுத்து வெச்சவர்.....எத்தனை வித விதமா கார்கள் வந்து நிக்கறது பார்த்தேளா? ரொம்ப ஹை கிளாஸ் மனுஷா...அங்க பாருங்கோ...இங்க பாருங்கோ..ஜானவாசத்துக்கு காரை எவ்வளவு அழகா அலங்காரம் பண்ணியிருக்கா என்று மூக்கின் மேல் விரலை வைத்து உற்சாகமானவள் "ஏன்னா...இங்கே கண்டிப்பா நம்ம கார்த்திக்கு நம்மள விடப் பெரிய பணக்காரப் பெண் கிடைப்பாள்ன்னு என் மனசாட்சி சொல்றது நீங்க வேணாப் பார்த்துண்டே இருங்கோ...நான் சொல்றது நிஜம்னு என்று பேராசை கண்களில் பளபளக்க சொல்கிறாள் கல்யாணி.






உன் நெனப்பு பொழப்பைக் கெடுக்காம இருந்தால் சரி...கொஞ்சம் அமைதியாத் தான் இரேன் கல்யாணி நீ நினைக்கறது எல்லாம் நடக்கும் என்று கல்யாணியை அமைதி படுத்தினார் அவர்.






கல்யாண மண்டபத்தில் தனது தம்பி அவர் மனைவி மணப்பெண் லாவண்யா என்று அனைவரிடமும் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி. உள்ளுக்குள் அக்கக்கூ என்று உள்மனசு கூவி அழுது கொண்டிருந்தது.






அமெரிக்கா சம்பந்தம் என்று அவ்வபோது அங்கு வந்து நின்ற பெண்களின் அழகும், நளினமும் உருளையில் ஊர்ந்து செல்லும் பெட்டிகளும் அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. அன்பைக் கடந்து வந்த அசூயை அவள் கண்களில் தெரிந்து விடாமல் கவனமானாள் கல்யாணி.


























வா...வா.....தலைவா.....என்று கார்த்திக்கை வரவேற்ற ஜீவா, என்ன கார்த்தி....நம்ம மேடம் வரலையா? என்று உரிமையோடு கேட்கிறான் ஜீவா.










உடனே என்ன பேசுவதென்று புரியாமல் தயங்கிய கார்த்தி , ஏதாவது பேச வேண்டுமே என்று , அந்த டெல்லி ப்ராஜெக்ட் உங்களுக்கு ஐ மீன்...உங்க கம்பெனிக்குத் தான் கிடைத்ததா? அதான்....என்று கொக்கி போட்டுக் கேட்கிறான் கார்த்திக்.






ஜீவாவின் மனசுக்குள் ஓடும் சந்தேகத்துடன்....."அப்போ கௌரி நம்மைப் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை " என்ற நிம்மதியில்......" ம்ஹும் இல்லை தலைவா...எங்களுக்குக் அந்த ப்ராஜெக்ட் கிடைக்கலை....கௌரி மேடம் சொல்லலையா? என்று கேட்டுக் கொண்டே, வாங்க கார்த்திக் மாப்பிள்ளையை உங்களுக்கு அறிமுகப் படுத்தறேன் இங்க தான் பிரின்ஸ் சூட்ல இருக்கார் என்று லிப்ட்க்குள் நுழைந்து நான்காவது தளம் அழுத்தவும் ,....லிஃப்ட் மேலே ஏறுகிறது.










வாட்......! டெல்லி ப்ராஜெக்ட் கிடைக்கலைன்னா ..கௌரிக்கு டெல்லியில் .. என்ன வேலை.? என்கிட்டே ஏன் காரணம் இல்லாமல் கௌரி பொய் சொல்லணும் ? போயிட்டு ஒரே நாளில் வந்துடுவேன்னு சொல்லிட்டு ரெண்டு நாளாகியும் இன்னும் வரலையே ....ஃபோன் செய்தாலும் அவுட் ஆஃப் ரீச் தான் கிடைக்குது.ஒரு மெயில் கூட இல்லை....அப்டியே அப்ஸ்கான்டெட்...அப்போ....அம்மா சொல்றதெல்லாம்....என்று கார்த்திக்கின் மனசுக்குள் கேள்விகள் மேலே மேலே ஏறுகிறது. எங்கிருந்தோ அவனுக்குள் எழுந்த ஆத்திரம் சந்தேகத்தை துணைக்கு அழைத்தது.






நான்காவது தளத்தில் 'பிரின்ஸ் சூட்' கதவை லேசாகத் தொட்டதும் திறந்து கொண்டு அழகிய பாடலோடு வரவேற்றது அந்த பெரிய அறை .சுவரில் மாட்டிய எல்.ஈ டி திரையில் ஏதோ ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருக்க அதில் சான்ட்ரா புல்லக் 'டக் டக் ' கென்று நடந்து கொண்டிருந்தாள். டேபிளில் திறந்து கிடந்த இணையத்தோடு இணைந்த லாப்டாப் எதையோ மெல்ல மெல்ல திரையிறக்கிக் கொண்டிருந்தது.






மாப்பிள்ளை பாத்ரூமுக்குள் இருப்பதன் அடையாளமாக அங்கிருந்து வந்த தண்ணீர் சத்தம்......அதைத் தொடர்ந்து கைபேசியில் "பிலீவ் மீ ப்ளீஸ் ஐ கான்ட் லிவ் விதௌட் யூ ஹனி " என்று கத்தும் சத்தம் விட்டு விட்டுக் கேட்டது.






இங்கிருந்து நாம போயிடலாமே... என்று கிளம்பிய கார்த்திகைத் தடுத்த ஜீவா..."நோ...நோ....ஹி இஸ் நைஸ்....நோ பிராப்ஸ் மச்சி...இரு...என்றவன்...ஹேய்..ஹேய்...என்று அதிர்ந்தவனாக லாப்டாப்பின் அருகே சென்று....அதை அப்படியே லபக்கென்று கையில் எடுத்துக் கொண்டு "கார்த்தி....ஹி இஸ் எ ஃப்ராட் ரா மச்சி..." என்று ஒரே நோடியில் மாப்பிள்ளையை தலை கீழாக மாற்றிச் சொன்னதோடு, கடுமையான குரலில் மவனே......நீ இன்னிக்கு ஃபினிஷ் ரா.. என்று வக்கிரமாகச் சிரித்தபடியே கார்த்திக்கின் கையைப் பிடித்து இழுத்தபடியே வெளியேறுகிறான் ஜீவா.






நடப்பது என்னவென்று அறியாத கார்த்திக் பின்னாடியே ஓடியபடி,என்னாச்சு ஜீவா...? வாட்ஸ் ராங் வித் ஹிம்.....? என்கிட்டே சொல்லுரா மச்சி....வெளிய கொண்டு போகாதே....நாமளே பேசி முடிச்சுக்கலாம்....டோன்ட் மேக் இட் ஹ்யூஜ். ப்ளீஸ் லிசென்...லாவண்யாஸ் லைஃப்ரா...என்று தாழ்ந்த குரலில் கேட்கிறான்.






புல் ஷிட்...! எப்டிரா கார்த்தி.....? எப்டி? இந்த ஸ்க்ரீன்ல பாரு... இவன் தான் அவன்...கிரீஷ் ...! ஏற்கனவே ஒரு வெள்ளக்காரியோட.... கூடவே ஒரு குழந்தை..! நம்ம தமிழ்நாட்டுப் பொண்ணுன்னா இவனுக்கு அவ்ளோ இளக்காரமா ? காதுல காலிஃப்ளவர் வைக்கிறான் ...காலிப்பய ..! அனேகமா இப்போ ஃபோன்ல கூட அவ கூடத்தான் பேசிட்டு இருக்கான். அங்க ஒருத்திய கல்யாணம் பண்ணியாச்சு....அப்பறம் எதுக்குடா இங்க ஒரு கல்யாணம்? மவனே.....வைக்கிறேண்டா ஒனக்கு இன்னைக்கு வேட்டு.. என்று கருவியவனாக நீ ஒண்ணும் பேசாத கார்த்தி ...எல்லாம் அங்கிள்...அதான் லாவண்யாவோட டாட் பார்த்துப்பாரு. இந்தக் கல்யாணத்துக்காக எவ்ளோ கஷ்டப் பட்டிருப்போம்..இதனால் எத்தனை பேரோட.நேரம்,பணம் உழைப்பு...வீணாப் போச்சு..! இதெல்லாத்தையும் விட லாவண்யாவை நினைச்சுப் பாரேன்....அவங்க கனவு எல்லாம் போச்சு....பொழுது விடிஞ்சாக் கல்யாணம்...எவ்ளோ தைரியம்.....ராஸ்கல்....அவனைப் பார்த்தால் அவ்ளோ நல்லவன்னாத் தெரிவான் மச்சி.....என்றவன் அவசரமாக பைக்கை ஓங்கி மிதித்து ஸ்டார்ட் செய்து ம்ம்ம்..ஏறி உட்காருங்க கார்த்தி என்றவன் கல்யாண மண்டபம் வாசலில் சென்று நிறுத்தினான். நடக்க போவதற்கு சாட்சியான லாப்டாப்பை மடியில் ஏந்தியபடியே கார்த்திக். அவன் மனசு மட்டும் திக் திக் திக் திக் கென்று பட படத்தது .






ஜீவா சொன்ன விஷயம் லாப்டாப் மூலம் வெட்ட வெளிச்சமானதும் கல்யாண மண்டபத்தில் விஷயம் காட்டுத் தீ போலப் பரவ , ஜானவாசம் நின்று போனது. நேரம் செல்லச் செல்ல அந்த இரவிலும் "பொழுது விடிஞ்சாக் கல்யாணம்" இப்போ கதை இப்படிப் போறதே..என்ற ஏமாற்றங்களும், கோபங்களும், ஆற்றாமையும், அழுகையும், துடிப்பும், வார்த்தை வாள்களாக வீசப்பட ஒரு போர்களமாய் உருவெடுத்த கல்யாண மண்டபம் அங்கே முடிவுக்கு வரும் வழியாக அமெரிக்கப் பெட்டிகள் ஒவ்வொன்றாக கனத்த இதயத்தோடும் ஏமாற்றத்தோடும் காருக்குள் ஏற்றப்பட அடுத்த சில மணி நேரங்களில் மயான அமைதி கண்டது அந்த மண்டபம்.






விடிய விடிய அங்கிருந்த பெண் வீட்டாருக்கு தாங்கள் பெரிய கண்டத்தில் இருந்து தப்பியதாக பேசி நிம்மதி பெருமூச்சு விட்டபடி , அடுத்தது என்ன? என்று ஆலோசனை


செய்ய, அத்தனை பேரின் கண்களும் மனசும் கார்த்தியை பார்த்து குறி வைத்தது.






பேசாம இந்த கார்த்தியை நம்ம லாவண்யாவுக்கு இதே முஹுர்த்தத்தில் வைத்து கல்யாணம் பண்ணிடலாம். வேற எதுவும் யாரும் பேச வேண்டாம்...என்று கல்யாணியின் தம்பி சொன்னதும் கல்யாணிக்கு தான் குற்றாலத்தில் குளிப்பது போலிருந்தது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து இந்தா வரங்கள் வாங்கிக்கோ என்று சொல்லி அள்ளி அள்ளித் தந்தது போலிருந்தது. ஏன்னா நான் அப்போவே சொன்னேனே கேட்டேளா...? என்று கண்களாலேயே கேட்டுக் கொண்டாள் இங்கிதம் தெரிந்தவளாகக் கல்யாணி.






இல்லை....நான் மாட்டேன்....என்று நழுவியவனை ஜீவா தடுத்து நிறுத்தி, உன்னை விட்டால் இப்ப லாவண்யாவுக்கு பொருத்தமா யாருமே இல்ல மச்சி...மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே. நீங்க கௌரி மேடம் தான் உங்க ஆளுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நிச்சயம் ஏமாந்து போவீங்க.....அவங்களப் பத்தி அவங்க கூடவே இருந்து வேலை பார்க்குற எனக்குத் தான் தெரியும். ஷீ இஸ் நாட் அட் ஆல் வொர்த்...!நான் எந்த நல்ல பொண்ணுக்கும் கெடுதல் செய்யணும்னு கனவுலயும் நினைக்க மாட்டேன். என்னை நம்புங்க கார்த்தி. இப்போ வந்திருக்குற இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாதீங்க...பாருங்க உங்க அம்மா அப்பா முகத்தில் இருக்குற நிம்மதியை.என்றவன் ஜீவாவின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.






நோ....ஜீவா...உங்களுக்கு ஒரு விஷயமும் தெரியாது...கௌரியைப் பற்றி நீங்க எதுவும் எனக்கு சொல்ல வேண்டாம்,..ஐ கான்ட் மேரி லாவண்யா..தட்ஸ் ஆல் ..என்னால முடியாது நான் இப்பவே ஊருக்குக் கிளம்பறேன் ஐ கான்ட் டாலரேட் திஸ் எனிமோர் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான் கார்த்திக்.






இதைக் கேட்டதும் நான்கு புறமிருந்தும் ஏதேதோ பேசிக் கொண்டு வந்த சொந்தங்கள் கண்ணீர் முனையில் கார்த்தியைக் கடத்திச் சென்று மிரட்டி உருட்டி ஒரு மூலையில் கொண்டு சென்று நிறுத்தி அவனது வாழ்கையையே உருவியது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கார்த்திக் அவர்களின் கலங்கிய கண்களின் கண்ணீரில் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தான்.






புதிதாகக் கிளம்பிய இந்தப் புயலுக்குள் கார்த்தி கிழிந்த காகிதமாகப் பறந்து கொண்டிருந்தான். அவன் மனசுக்குள் இப்போது கௌரியின் நினைவுகள் அடியில் சென்று மறைந்து கொண்டது.






லாவண்யாவின் கலங்கிய மனம் கார்த்திக்கின் சம்மதத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து மெல்ல "அத்தை, அவருக்கு முழு சம்மதம் தானே? என்று தயங்கித் தயங்கி கேட்டுத் தலை குனிந்து கொண்டு தனது சம்மதத்தையும் சொல்லிக் கொண்டாள். இந்த நேரத்தில் எப்படியாவது தனக்கு இந்த முஹுர்த்தத்தில் கல்யாணம் நடந்து விட வேண்டும் என்ற சுயநலமான சிந்தனையாலும் பிடிவாதத்தாலும் லாவண்யாவுக்கு கௌரியின் நினைவே வரவில்லை.






கார்த்தியின் அப்பா மெல்ல கல்யாணியைப் பார்த்து......இந்தக் காலத்துல சொந்தத்தில் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாதுன்னு ஒண்ணு இருக்கே.அதைப் பத்தி கூட நீங்கள்லாம் கொஞ்சம் யோசித்தால் தேவலை நாளைக்கு அவாளுக்கு ஒரு கஷ்டம்னா அது நமக்கும் சேர்த்துத் தானே? என்று கேள்விக் குறியை நீட்ட.






நீங்க சொல்றது எல்லாம் சரி தான். நானும் ஏத்துக்கறேன். ஆனால் இந்த விஷயத்தில் உண்மைன்னு ஒண்ணு இருக்கோன்னோ...இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்கோ என் அம்மா என்னைப் பெத்துப் போட்டுட்டு செத்துப் போயிட்டாளாம்..அதுக்கப்பறமா அப்பா ரெண்டாவதா கல்யாணம் பண்ணீண்டாராம். அந்தச் சித்தியோட பையன் தான் இந்தத் தம்பி. இதெல்லாம் எத்தனையோ வருஷங்கள் முன்னாடி நடந்து முடிஞ்ச கதை. இதெல்லாம் உங்களண்ட சொல்லி என்னாகப் போறதுன்னு நினைச்சேன். அதுக்கு இப்போ சொல்ல வேளை வந்திருக்கு.இதனால லாவண்யாவுக்கோ நம்ம கார்த்திக்கோ ஒண்ணும் ஆகாது. நாம தைரியமா கல்யாணம் பண்ணலாம் என்று சாமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.






கல்யாணி...நீ என்ன சொல்ல வரேன்னு புரியறது. இதுவும் தப்புன்னு நான் தர்க்கம் பண்ணினா நீ விடவா போறே? எல்லாம் குருவாயூரப்பன் பார்த்துப்பான். உன் இஷ்டப் படியே செய். உன் ஆசை நிறைவேறுதே அதுல நேக்கும் சந்தோஷம் தான்...எதுக்கும் கார்த்திக்கிட்ட நான் தனியா கொஞ்சம் பேசிப் பார்க்கவா? என்று கேட்கிறார்.






வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைச்ச கதையாய் நீங்க இப்போ அவன்கிட்ட எதையும் பேசி காரியத்தைக் கெடுக்காதேங்கோ. அவன் சம்மதம் எல்லாம் நாங்க வாங்கியாச்சு. நாளைக்கு மணைல நம்ம கார்த்தி தான் மாப்பிள்ளை....நம்ம லாவண்யா தான் நம்ம ஆத்துக்கு நாட்டுப்பொண்ணு.






அப்போ...நீ கேட்ட வரதட்சணை....அது...இதுவெல்லாம்...?






ஆத்துக்கு அவள் ஒரே பொண்ணாக்கும் ...நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம். நாம சொந்தத்துக்குள்ள சொந்தமாக்கும். அது போதாதா நமக்கு...என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள் கல்யாணி. ராத்திரி எப்போது விடியும் என்று மனசு காத்துக் கொண்டிருந்தது...அவளுக்கு.






கார்த்திக் மட்டும் மெளனமாக தவித்தாலும் கல்யாணம் நின்று போன ஒரு பெண்ணுக்கு தன்னால் வாழ்வு தர முடிந்ததை நினைத்து அந்தத் தவிப்பில் இருந்து மீண்டு கொண்டிருந்தான். இந்த விஷயத்தை கெளரியிடம் சொன்னால் அவளும் புரிந்து கொள்வாள் என்றும் தன் மனசாட்சியைத் தேற்றிக் கொண்டான் .ஜீவா கொடுத்த ஊக்கம் அதற்கு பெருமளவுக்கு உதவி செய்தது.






காலைப் பொழுது மெல்ல மெல்ல இரவோடு சேர்த்து நடந்த அத்தனை சோகத்தையும் தடம் தெரியாமல் கலைத்தது. கல்யாண மண்டபம் களை கட்ட ஆரம்பித்தது.






கணீரென்ற நாதஸ்வர ஓசை அனைவரையும் எழுப்பியது. வரவேற்பில் மாப்பிள்ளையின் பெயர் மாற்றம் அனைவரையும் வரவற்றது.






"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற பாடல் நாதஸ்வரத்தில் இசைத்து அனைவரின் மனசையும் சரி கட்டியது.






சுபயோக நாளில் சுபமுஹூர்த்த நேரத்தில் சுற்றம் சூழ்ந்து ஆசி வழங்க சூழ்நிலைக் கைதியாகி கார்த்திக் லாவண்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு அவளை மனைவியாக்கிக் கொண்டான்.






லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து முடிந்ததைத் தன் கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா ஜீவாவின் பொறுப்பைப் பாராட்டி அவரது கம்பெனியில் அவனுக்கு உயர்ந்த பதவி தருவதாகச் சொல்லி தோளைத் தட்டிக் கொடுத்ததும் ஜீவா பெருமையில் பறந்தான்.கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல கிடைத்த இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயாக அவனுக்குள் இனித்தது.






மனசெல்லாம் :ஏய்....கௌரி...உன் ஆட்டம் இத்தோட காலி.. நீ விரும்பிய கார்த்திக்கை வெச்சே உன் கழுத்துக்கு கத்தி வெச்சேன் பாரு...அங்க தான் இந்த ஜீவா ஜீவனோட இருக்கேன் ... என்கிட்டே மோதினா என்னாகும்னு புரிஞ்சுக்கோ" இது ஆண்டவனாப் பார்த்து எனக்குக் கொடுத்த வாய்ப்பு. நான் கரீட்டா யூஸ் பண்ணிட்டேன்.....உன் பதவித் திமிரை இனிமேல் நீ யார்க்கிட்டே காமிக்கும் போதும் உன் காதுல இனிமேல் மணி அடிக்கணும் என்று தனது பழிவாங்கும் படலம் இவ்வளவு எளிதில் நிறைவேறியதில் மகிழ்ந்து இப்ப ஐயாவுக்கு விருந்து சாப்பாடு தான் என்று சொல்லிக் கொண்டே சந்தோஷத்துடன் சாப்பாட்டு பந்திக்கு விரைகிறான் ஜீவா.






கார்த்திக்கும் லாவண்யாவும் மாலையும் கழுத்துமாக வீடியோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணி தலைகால் புரியாமல் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அருகில் இருந்த கணவனிடம் நான் சொன்னது பலித்தது பார்த்தேளா? என்று பெருமையில் மார்தட்டிக் கொண்டாள் . அவள் மனது மானசீகமாக "நல்ல வேளையா அந்த அமெரிக்கா மாப்பிள்ளையின் வேஷம் கலைஞ்சது..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் .






கல்யாண மண்டபத்தில் அடித்த புயலில் ஆதாயம் கிடைத்தது என்று மகிழும் கல்யாணிக்கு விரைவில் தன் வீட்டில் அடிக்கவிருக்கும் புயலுக்கான ஆரம்ப அறிகுறி தான் இப்போது நடந்த மகனின் கல்யாணம் என்று அறியாதவளாக இருந்தாள்.






அத்தனை சந்தோஷத்திலும் கார்த்திக்கின் உள் மனது விளக்கெல்லாம் அணைந்து கிடந்த இருட்டறை போல் இருந்தது. அதில் ஒரே கேள்வியாக "இந்த விஷயம் கௌரிக்குத் தெரிந்தால் என்று எதிரொலித்தது". உள்மனம் கௌரியை நினைத்து அழுதது. அசட்டு தைரியம் நிமிர்ந்து நின்று சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது .


















துர்வாஸா ஸீர வநிதாப்த திவ்ய மால்யம்


ஸகராய ஸ்வயம் உபதாய தத்ர பூய:


நாகேந்த்ர ப்ரதி ம்ருதிதே ஸஸாப ஸக்ரம்


கா ஷாந்தி: த்வத இதர தேவதாம்ஸ ஜாநாம்:






வீடெங்கும் ஸ்ரீமந் நாராயணீயம் ஒலித்துக் கொண்டிருந்தது. சித்ராவும் அதோடு கூடவே சொல்லிக் கொண்டே வீடே மணக்க மணக்க வெண்பொங்கல் செய்து கொண்டிருந்தாள். அவளது கையும் வாயும் இயந்திரப் தனமான பக்தியில் சிக்கி இருந்தாலும் மனம் அதை விட்டு விலகி, மகள் கெளரியைத் திட்டிக் கொண்டிருந்தது. திடுமென ஏற்பட்ட மின்வெட்டால் வீடே அமைதியாக ஆக, அடுக்களையை விட்டு வெளியே வந்து ஹாலில்.... மாட்டியிருந்த தன் கணவர் ஈஸ்வரனின் போட்டோ கண்ணில் படவும் அவரைப் பார்த்த சித்ரா வாய் விட்டே புலம்ப ஆரம்பித்தாள் .






ஒரே நாள்ல வந்துடறேன்னு போன பொண்ணு....இன்னியோட சேர்ந்து மூணு நாளாகப் போறது...அம்மான்னு ஒருத்தி தனியா இருப்பாளேன்னு ஒரு நினைப்பு வேண்டாமா? ஒரு ஃபோனும் இல்லை எந்தத் தகவலும் இல்லை.....நான் பண்ணினாக் கூட அதுக்கும் பதில் இல்லை...தனியா அதுவும் டெல்லில எங்கே போய் மாட்டிண்டு நிக்கறாளோ ?


மனசு என்னெல்லாம் நினைச்சு பயப்படறது....அவளுக்காத் தெரிய வேண்டாமோ? படிச்ச திமிர்...வேலை பார்க்கற திமிர்....சம்பாதிக்கிற திமிர்...அம்மான்னா சும்மான்னு நினைச்சுண்டு இருக்கா...எல்லாம் தான் வெச்சது தான் சட்டம், ஒண்ணு சொல்ல முடியலை.. எல்லாம் தனக்கே தெரியும்ங்கற நாட்டாமை....வரட்டும்...வரட்டும் இனி ...வேலைக்கே போகக் கூடாதுன்னு சொன்னாத் தான் சரிப்பட்டு வருவாள். தனக்கு வந்த வரனை நல்ல படியாப் பேசி பண்ணிக்கத் துப்பில்லை. கோணா..மாணா ...கோவிந்தான்னு...எங்கம்மாக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்னு வந்தவா கிட்ட என் மானத்த வாங்கி....அவளுக்கும் எனக்கும் நடுப்பற பெத்த பாசத்தைத் தவிர எல்லாமே இடைவெளில தான் தொங்கிண்டு இருக்கு.. எல்லாத்துக்கும் வேண்டாத்த விதண்டாவாதம் பண்றவளுக்கு, அம்மாவுக்குத் தகவல் சொல்லணும்ங்கற அறிவில்லையா?






சோபாவில் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு வாசலில் கேட் திறக்கும் சப்தம் கேட்டதும் உட்கார்ந்தபடியே வெளியே எட்டிப் பார்க்கிறாள்.






கௌரி தான் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தைக் கண்டதும் இத்தனை நேரம் திட்டிப் புலம்பிக் கொண்டிருந்தது அனைத்தும் பனி போல வழுக்கிக் கொண்டு ஓட...


சடக்கென்று எழுந்து வாசலுக்கு வந்தவள் என்னாச்சுடீ கண்ணம்மா....? உன் முகத்தைப் பார்த்ததும் தான் நேக்கு போன உயிர் வந்தது...நான் எப்படி கலங்கிப் போனேன்னு தெரியுமா? ஒரு ஃபோன் பண்ணியிருக்கப் படாதா? மூணு நாள்.....ஒரே நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனவள்.....இப்படி சொல்லாமல்....கொள்ளாமல்..என்னாச்சோ...ஏதாச்சோன்னு நான் இங்க பயந்து செத்தேன்..நல்லபடியாத் திரும்பி வரணமேன்னு நான் வேண்டாத்த தெய்வம் இல்லை....என்று உச்சச்த்தாயியில் .படபடப்புடன் பேசியபடியே மகளைக் கட்டிக் கொள்கிறாள் சித்ரா. கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்கிறது.






சாரிம்மா......வெரி சாரி.....நானும் எதிர்பார்க்கலை...போன இடத்தில் நான் பட்ட பாடு...என்னோட ஹான்ட்பாக் தொலைஞ்சு போச்சு....அதுல தான் என்னோட ரிடர்ன் டிக்கெட், 3G டேட்டா கார்ட் எல்லாம் இருந்தது..எனக்கு பயங்கர டென்ஷன்....எங்க தேடியும் கிடைக்கலையாக்கும். பின்னே அதுக்கு வேண்டி கம்ப்ளைண்ட் கொடுக்கப் போன இடத்தில் என் செல்ஃபோன் கூட தொலைஞ்சு போச்சு.எவனோ அடிச்சுட்டான்...எனக்கு எந்த நம்பரும் மைண்ட்ல இல்லை..எல்லாம் செல்ஃபோனோட கோவிந்தா என்னவாக்கும் பண்றது?..ரொம்பத் திண்டாடிப் போயிட்டேன். அது கழிஞ்சு பின்னே நல்ல வேளையா ஆபீஸ் போய்ட்டேன் . அங்கே வொர்க் ப்ரெஷர் வேற...இதோ இதோன்னு ஒவ்வொரு நாளாப் போயிடுத்து. அதான்...என்று சொல்லிக் கொண்டே ஷூவைக் கழட்டி விட்டு..என்ன ஒரே புழுக்கமா இருக்கு......என் செல்ல அம்மா...ரொம்ப பயந்துட்டியா? பார்த்தியா நான் இருந்தா ஏதாவது சொல்லி என்னைத் திட்டிண்டே இருப்பே... இப்பவாவது உனக்கு என் அருமை தெரிஞ்சுதா...அதோட தனியா இருக்கறது எத்தனை கொடுமைன்னு புரிஞ்சுதா?






போடி அசடு.....நீ இல்லாத போதும் உன்னைத் திட்டும்படியாத் தான் காரியம் பண்ணினே....எப்படி எல்லாத்தையும் தொலைச்சே...நீ தான் ஜாக்கிரதையா இருப்பியே...என்னாச்சு இப்பல்லாம் நோக்கு? கடைசீல என்னாச்சு...? கிடைச்சுதா இல்லையா? இப்படிப் போன இடத்தில் எல்லாத்தையும் தொலைச்சுட்டு திண்டாடினியா?


சீக்கிரம் கையைக் காலை அலம்பிண்டு வா. வெண்பொங்கல் பண்ணி வெச்சிருக்கேன்...இன்னிக்கு ஆபீஸ் இருக்கோ...இல்ல லீவு போடறியா? என்று கௌரியைப் பார்த்து கேட்கிறாள் சித்ரா.






எனக்கு எங்க லீவு...? இன்னிக்குத் தான் நான் கண்டிப்பா போயாகணும் ...சொல்லிக் கொண்டே அம்மா எனக்கு ஏதாவது ஃபோன்கால் வந்ததா? கேட்டுக் கொண்டே லாண்ட்லைன் ஃபோனில் கார்த்திக்கின் எண்ணைத் தட்டி ரிசீவரை காதில் வைத்துக் கொண்டே இருந்தவள்.....ச்சே...இந்த ஒரு மெசேஜை மட்டும் கேட்டுக் கேட்டு காது ஓட்டையாகிப் போச்சு. கார்த்தி...வாட் ஹாப்பெண்ட்டா? என்மேலே கோவமா? நான் உனக்கொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன்.ஆச்சரியப் படப் போறே.என்று மனதோடு பேசிக் கொண்டே தயாராகிறாள்.






வழக்கமான கௌரியோட ஹிந்திப் பாடல் எதுவும் காதில் விழாத சித்ரா..என்னாச்சுடி கௌரி...டெல்லிக்கு போயிட்டு நிறைய பாட்டு கத்துண்டு வந்து கத்துவேன்னு பார்த்தால் அமுக்கமா இருக்கியே..இந்த நாலு நாள்லே .உன் போக்கே மாறிப் போச்சுப் போ நீ ரொம்பவும் மாறிட்டே என்று சொல்லிக் கொண்டே வெண்பொங்கலை டைனிங் டேபிள் மீது வைத்தபடி சீக்கிரமா சாப்பிடு ஆறிடப் போறது..வந்து சாப்பிடு என்கிறாள் சித்ரா.






ம்மா...இன்னிக்கு நான் கொஞ்சம் லேட்டாத் தான் வருவேன்....கோச்சுக்காதே...என்று வெண்பொங்கலை வாயில் வைத்தவள் வாவ்....சூப்பர்..எப்டிம்மா...என்று ஆச்சரியத்துடன் ..நீ பண்ற டேஸ்டே தனிம்மா. நாலு நாளா நாக்கே செத்துப் போச்சு. எப்போ உன் கையால சாப்பிடுவோம்னு ஆயிடுத்து..என்றவள் அம்மா எனக்கும் இப்படியே வெண்பொங்கல் பண்ணச் சொல்லிக் கொடும்மா... ஐ லைக் திஸ்...கூல்....என்கிறாள் சப்புக்கொட்டிக் கொண்டு.






உன் அப்பாவும் இப்படித் தான் ரசிச்சு சாப்பிடுவார்....என்று சொன்ன சித்ரா இந்தா இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ என்று கரண்டி நிறைய பொங்கலை அள்ளி எடுக்கவும்...






கைகளால் மறைத்தபடி வேண்டாம் வேண்டாம் போதும் போதும்.....நன்னா இருக்குன்னு சொன்னதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என்ற கௌரி...மா...நீ சாப்பிடு...இந்த நாலு நாள்லே நீ ரொம்ப இளைச்சுட்டே.....என்கிற மகளை பாசத்தோடு பார்க்கிறாள் சித்ரா.






மகளின் தலையைக் கோதியவளாக "என் மேலே நீ வெச்சிருக்கும் பாசம் புரியறது...சீக்கிரமா உனக்கொரு கல்யாணம் பண்ணி நீ எனக்குப் பேத்தியோ,பேரனோ பெத்துக் கொடு அதுக்குத் தான் நான் ஆவலா காத்திருக்கேன்..நான் உடல் ஆரோக்கியமா இருக்கும் போதே இந்த மாதிரி நல்லதெல்லாம் வாழ்க்கையில் நடக்கணும்....ஏன்னா...நல்ல விஷயங்கள் நடக்கற காலங்கள் ரொம்ப வேகமா நம்மை விட்டுக் காணாமல் போயிடும்.புரிஞ்சுக்கோ.






ஆரம்பிச்சுட்டியா... நான் ஒண்ணு நினைச்சா நீ ஒண்ணு சொல்ற ....சரிம்மா...இப்போ நாழியாச்சு...ராத்திரி வந்ததும் பேசலாமே என்று தலையை சாய்த்து கெஞ்சியபடி கிளம்பத் தயாராகிறாள் கௌரி. டெல்லிலேர்ந்து உனக்கொரு அழகான உலன் ஷால் வாங்கினேன்.






நன்னாச்சு.... இன்னைக்கு நீ ஆபீஸ் போகாட்டா என்ன..?.உன்கிட்டப் பேச நிறைய விஷயம் இருக்கு..பேசாம லீவு போடு.. என்று அதே கெஞ்சல் பார்வையில் கௌரியைப் பார்க்கிறாள் சித்ரா.






கொஞ்சம் லேட்டா வேணாப் போறேன்.....என்ன பேசணுமோ பேசு....! அம்மா..நாம டெல்லில ஷிப்ட் பண்ணீண்டா என்ன? உனக்குப் பிடிக்குமா?






ஏண்டி....பிடிக்காது. நோக்குத் தான் அங்க நல்ல வரன் வந்தது..அந்தப் பிரசாத். அவருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் அங்கே தான் இருந்திருப்பே இந்நேரம்...என்று கண்களில் புத்தொளியோடு சொல்கிறாள் சித்ரா. எல்லாம் விதி.....உங்கப்பா தான் வந்தவாளைத் திரும்ப வெச்சார். நல்ல மனுஷாளா இருந்தா..குரல் குழைந்தது அவளுக்கு.






அதை விடும்மா...நான் கார்த்தியைக் கல்யாணம் பண்ணீண்டா உனக்கு சந்தோசம் தானே? சொல்லேன்....!






அதுக்கு அவாத்துல சம்மதிக்கணமே....! இனிமேல் அதுக்குச் சான்ஸே இல்லை.அன்னிக்கு அவா வந்தபோது நீ பேசின பேச்சில் அவா மனசுக்குள் சீ ன்னு துப்பீட்டு போயிருப்பா.நானா இருந்திருந்தாலும் அதைத் தான் செய்திருப்பேன்.பொண்ணை எப்படி வளர்த்து வெச்சிருக்கா பாருன்னு என் தலையை உருட்டியிருப்பா. இன்னுமா...உனக்கு அந்த நினைப்பு....கஷ்டம்...கஷ்டம்...!






ஆனால்...அம்மா...கார்த்தி அப்படியில்லை...என்னைப் புரிஞ்சுண்டவனாக்கும். அவன்ட சொல்லி, அவனும் எனக்கு ஆதரவா சரின்னு தான் சொன்னான் தெரியுமா?






அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தானே? நீங்கள்லாம் வேலை கிடைச்சு என்ன தான் கை நிறைய சம்பாதிச்சாலும் வாழ்க்கைப் பாடம்னு வரும்போது தோத்துப் போயிடுவேளாக்கும். நல்லபடியா வாழறதுக்கும் திறமை வேணும். கல்யாணம்ங்கறது மனதோடு வாழற உணர்வுகள் சம்பந்தப்பட்டது. இது உனக்கு இப்போ புரியாது.


இப்ப உன் மனசுக்குப் புரியறது எல்லாம் வெறும் வெளித் தோற்றம் மட்டும் தான். நாம வாழ்ந்துண்டே இருந்தாலும் வாழ்க்கை அனுபவம் தனி தான்.கல்யாணத்துக்கு ரெண்டு பேரோட மனசு தான் முக்கியமா ஒத்துப்போகணும் .






அப்போ....எங்க ரெண்டு பேரோட மனசும் ஒத்துப்போறது....ஹி இஸ் ஆல்சோ சேம் லைக் மீ...!






சந்தோஷம் ...அதே சமயத்துல நீ ரொம்ப ஜாக்கிரதையா இரு. மனசு ஒத்துப் போயிடுத்துன்னு உன் மனசு நம்ப ஆரம்பிச்சாச்சுன்னா...அப்பறம் வேறெதையுமே ஒத்துக்காது....அது வழிக்கு உன்னை இழுக்க ஆரம்பிச்சுடும். மனசு கள்ளனாக்கும். கெட்ட வழிக்கெல்லாம் கூட நல்லவிதமா வழி சொல்லும்.ஒரு மனசுக்குள்ள காதல் புகுந்துட்டால் கள்ளமும் புகுந்துடும் . உனக்குத் தெரியாததை நான் சொல்லலை..ஆனால் நான் சொல்ல வேண்டியதை நான் தானே சொல்லியாகணும். பேசிவிட்டு நிறுத்துகிறாள் சித்ரா.






அம்மா...உனக்கு ரொம்ப விஷயம் தெரிஞ்சிருக்கு...






பின்னே ...உன் அம்மா என்ன மக்குன்னு நினைச்சியா?






சிறிது நிமிட மௌனம்...கடந்த பிறகு மீண்டும் கௌரி






அம்மா...என்கிறாள் தயங்கியபடியே..






என்ன...?






ஒண்ணுமில்லை!






அந்த ஒண்ணுமில்லையில் ஆயிரம் இருப்பதாக மனசுக்குப் பட்டாலும் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தாள் சித்ரா.






பிறகு...மகளைப் பார்த்து....நீ இப்போ அப்பா இல்லாத பொண்ணு...ஜாக்கிரதையா இரு....குரல் கம்ம எச்சரிக்கையாக கௌரியைப் பார்த்து சொல்கிறாள்.






அஜாக்கிரதையா இருந்துட்டேனேம்மா....! எதுவோ வித்தியாசமாக தொண்டையை அடைத்தது கௌரிக்கு.



வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் "ஏன்மா....அப்படிப் பார்க்கறே?" அந்தப் பார்வையில் பல அர்த்தங்களை புரிந்து கொண்ட கௌரி நிதானமாகக் கேட்கிறாள்.






நீ ஏதோ சொல்ல வந்து வார்த்தையை முழுங்கின மாதிரி இருந்தது....அதான்.






அது....அது...அது வந்து, வேற ஒண்ணுமில்லை...இப்பத்தான் நேக்கு பொருளோட அருமையே புரிஞ்சுது. அப்பப்பா....முதல் தடவையா டெல்லில எல்லாத்தையும் தொலைச்சுட்டு நின்னதும்...நான் பட்ட பாடு...எப்படியாவது கிடைச்சுடாதான்னு தவிச்சுப் போயிட்டேன்மா. தேடி...தேடி..தேடி...தேடி...நான் தோத்தேன். கண்டிப்பா என் அஜாக்கிரதைக்கு கிடைச்ச அடியாக்கும் அது. இனிமேல் நான் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். மனம் ஒன்று நினைத்து வாய் ஒன்றைப் பேசி சமாளித்தது.






எதையாவது தொலைச்சால் தான் அதோட அருமை புரியும். அதனால் தான் எதையுமே ஜாக்கிரதையா வெச்சுக்கணும்னு சொன்னேன். சரி நீ ஆபீஸ் கிளம்பு. முடிஞ்சா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு. இப்போ உனக்கு நாழியாறது நானும் என் வேலையைப் பார்க்கிறேன்....என்று அங்கிருந்து நகர்ந்தாள் சித்ரா.






ம்மா.....இன்னைக்கு கொஞ்சம் வெளி வேலை....வர கொஞ்சம் லேட் ஆகும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இப்பவே சொல்லிட்டேன்...கௌரி தன் அறைக்குள் சென்று தாழிடும் சத்தம் கேட்டது சித்ராவுக்கு.






ம்கும்.....தெரியாதாக்கும்.....அந்த கார்த்தியைப் பார்க்க வேகித்துன்னு. நல்லவேளையா நான் சொல்ல வேண்டியதை முன்னாடியே உன்கிட்ட சொல்லியாச்சு.இனி மகளே உன் சமத்து, என்று அலுத்துக் கொண்டாள் .






திடீரென வந்த மின்சாரத்தில் அமைதியான வீடு மீண்டும் ஸ்ரீ நாராயணீயத்தைத் தொடர்ந்தது. சித்ராவின் மனசு பக்திக்குத் தாவியது.






















டெல்லி ப்ராஜெக்ட் வெற்றிகரமாக கிடைத்ததையும் அதற்கான பொறுப்புகளையும் பற்றி சக டீம் லீடர்களிடம் அன்றைய மீட்டிங்கில் சொல்லி விட்டு தனது மெயில் பாக்ஸைத் திறந்து பார்த்த கௌரிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவளை மூன்று மாதங்கள் லண்டன் பிராஞ்சுக்கு அனுப்புவதாகத் தெரியப்படுத்தி வந்த மடல் அது.






வாவ்....கிரேட்....! என்று சந்தோஷத்தில் மனம் துள்ள , தன் சம்மதம் தெரிவித்து அதை ஏற்கும் விதமாக உடனே பதில் மடலும் அனுப்பி வைத்தாள் ..கூடவே இதை கார்த்திக்கிடம் சொன்னால் என்ன சொல்வானோ? இங்க பக்கத்துல டெல்லிக்கு போனதுக்கே ஐயாவுக்குக் கோபம். தாங்கலை...பேச்சு மூச்சக் காணம் ...! என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும்.."எல்லாம் சாயந்தரம் நேரா பார்த்துப் பேசினால் சரியாயிடும்.....கூடவே அவனுக்கும் தரப் போறேனே சர்ப்ரைஸ்....! இட்ஸ் எ கிரேட் கிஃப்ட்


ஃப்ரம் மை சைட்...! என்றும் நினைத்துக் கொண்டாள் .






முதல் முதலாக கார்த்திக் அங்கு வந்து அவளது அறை வாசலில் நின்றது நினைவுக்கு வந்தது கௌரிக்கு. எப்படியாவது இன்னைக்கு கார்த்திக்கு போன் பண்ணி வரச்சொல்லி மீட் பண்ணியாகணும்.






இப்போல்லாம் நான் எப்பப்பாரு உன்னையே ரொம்ப நினைச்சுண்டே இருக்கேன்.... உனக்குத் தெரியுமா? அதான் டெல்லில போய் கூட உன்னை ரெகமண்ட் பண்ணி...இந்த கிஃப்ட் ...இந்தா.... ஆர்டர் .அதனால தான் ரெண்டு நாள் எக்ஸ்ட்ராவா தங்க வேண்டி வந்தது .ன்னு சொல்லி அவன் கையில் திணித்து அவனது ரியாக்ஷனைப் பார்க்கணும்..அப்பறம்...நான் லண்டன் போற சந்தோஷத்தைச் சொல்லணும் .






மாலையில் கார்த்தியைப் பார்த்ததும் பேச வேண்டியதை ஒவ்வொன்றாக மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள் கௌரி. டேபிள் மீதிருந்த தனது டைரியில் மனதில் நினைத்ததை கிறுக்கினாள்.






என்று நீ என்


இதயத்துள் நுழைந்தாய் ?


சரியாக நினைவில் இல்லை


ஏழு ஜென்மம் முன்பு


ஏற்கனவே இடம் பிடித்தாயோ?






எனக்கும் உனக்கும்


இடையே இருக்கும்


இடைவெளிதான்


நம் நெருக்கம்..!






என் கண்களில்


படாத உன் முகம்


கண்ணாடி பிம்பமாய்


என் இதயத்துள் எப்படி?






காலையில் நிமிர்ந்த சூரியன்


அலைந்து விட்டு கடலுக்குள்


கால் நனைக்கும் வரையில்.....


உன் நினைவுகளோடு


என் வாழ்நாளில் ஒருநாள்






அந்தி சாய்ந்து சந்திரன் சிரிக்க


உன் கனவோடு


என் வாழ்நாளின் ஒரு இரவு...!






இதயம் நிறைந்து


வழியும் நினைவுகள்


யாவும் வீணாகாமல்


கவிதைப் பாத்திரத்தில்


பிடித்து வைக்கிறேன்....!










எழுதியதைப் படித்தபோது அது கவிதையானது....எப்டீடீ...கௌரி..? என்று தன்னையே கேட்டுக் கொண்டவள் 'கிரேட்' என்று சொல்லிக் கொண்டாள். நான் ரொம்ப மாறிட்டேன். எனக்குள் கவிதை கூடப் பூக்கிறதே.எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள். மனதுக்குள் பூரித்துப் போன கௌரி இண்டர்காம் மணி அடித்து அழைத்தது. உணர்வுகளை ஓரமாக ஒதுக்கி விட்டு ரிசீவரை எடுத்து "கௌரி ஹியர் " என்றாள் மென்மையான குரலில்.கம்பீரமாக..வேலைகள் அவளை இழுத்தது. டிக் டிக் டிக் என நேரம் ஓடிக் கொண்டிருந்தது.








ஒரு வார லீவுக்குப் பின்பு கார்த்திக் உள்ளே நுழையும் போதே அங்கிருந்த அவனது நண்பர்கள்....."தொரகுனா இட்டுவன்டி..டும்...டும்...டும்.." என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.,


என்னாச்சுடா மாப்பிள்ளை.......கல்யாணம் பாக்கப் போன இடத்தில் மாப்பிள்ளையாயிட்டியாமே ...! கேள்விகள் ஒவ்வொரு டேபிளிலிருந்தும் கணினியைத் தாண்டி விர் விர்ரென்று அவனைத் தாக்கியது.



ஆனாலும் அதிர்ஷ்டம் தாண்டா......! என்று சில குரல்கள் கார்த்திக்குக்கு ஆதரவு ஓட்டுப் போட்டது.



லேசாகப் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்து விட்டு கார்த்திக் அவனது இடத்தில் சென்று அமர்ந்தான்.மனசெல்லாம் முதலில் கௌரிக்கு எப்படியாவது விஷயத்தைச் சொல்லிவிடு...என்று ஆணையிட்டது.



இவன் நினைக்கவும் கைபேசி பாடியது.



எடுத்து...ஆவலுடன் .ஹலோ...!



ஹலோ...நான் தான் லாவண்யா....!



ம்ம்....சொல்லு..என்ன விஷயம்...?



நான் கார்த்தாலயே உன் கிட்ட கேட்டிருக்கணும்...மறந்துட்டேன்.



என்ன?






இன்னிக்கு என்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு கூட்டிட்டுப் போறியா? நான் ரெடியா இருக்கேன். எனக்கு பீச்சுன்னா கொள்ளை ஆசை.



இன்னிக்கு என்னால முடியாது. ஒரு வார வேலை அப்படியே பெண்டிங்க்ல இருக்கு...நான் ஆத்துக்கு வரதுக்கே நாழியாகும். இன்னைக்கு பீச் வேண்டாம்..சண்டே போலாம்...நீ வேணா அம்மாவோட எங்கேயாவது கோவிலுக்குப் போய்ட்டு வா..சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் இணைப்பைத் துண்டித்து விட்டு வேலையில் மும்முரமானான்.






மீண்டும் கைபேசி பாடி அழைத்தது.






எரிச்சலுடன்....ம்ம்ம்.....ஹலோ...என்று சுரத்தே இல்லாமல் இயந்தரத் தனமாக கேட்கவும்.






ஹலோ...நான் கௌரி....அதுக்குள்ள மறந்தே போயாச்சா? இல்லை கோவமா? என்று கிண் கிணு க்கவும்.






முகமெல்லாம் பிரகாசத்துடன்.....ஹேய்.....கௌரி...நீ... எப்போ வந்தே...என்னாச்சு?.உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. குரலில் ஆனந்தம் தவழ்ந்தது. உண்மையான அன்பு கரை புரண்டு எழுந்தது. கண்களில் கண்ணீர் துளித்தது. உன்மேலக் கோபமா? எனக்கா? நோ வே....நீ தான் என் மேல் கொவிச்ச்க்கப் படாது...தென், உன்னோட இன்டர்நெட் டேட்டா கார்டு...டிக்கெட்ஸ் எல்லாம் என்கிட்டே மாட்டிண்டது...நீ எப்படி சமாளிச்சே.....ஃபோனில் கூட நீ கிடைக்கலை..


உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.






அச்சச்சோ...உன்கிட்ட தான் இருந்ததா? அதெல்லாம் ...முடிஞ்சுபோன எபிசோட் ...நேர்ல சொல்றேன்....ஈவினிங் ஷார்ப்பா அஞ்சு மணிக்கு பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்துடு. உனக்கும் நிறைய சர்ப்ரைசஸ் ...! மறந்துடாதே...சொல்லிவிட்டு கைபேசியின் இணைப்பைத் துண்டித்தாள் கௌரி.






என்னவாயிருக்கும்....? என்று நினைத்துக் கொண்டே , நாலு மணிக்கே கிளம்பியாகணும். அஞ்சு மணிக்கு கரெட்டா பெசன்ட் நகர் பீச்சுல நிக்கணும்....நல்லவேளையா லாவண்யா கேட்டபோது வேலை இருக்குன்னு சொல்லிட்டேன்..என்று நிம்மதியானான்.






டிக் டிக் டிக் டிக் என்று நேரம் மிகவும் மெதுவாக நகர்வது போலிருந்தது கார்த்திக்குக்கு.


























அத்தை....அத்தை.......இந்த கார்த்தியைப் பாருங்கோ...இன்னைக்கு பீச்சுக்கு அழைச்சுண்டு போ ன்னு சொன்னேன்....வேலை நிறைய இருக்கு..நீ அம்மாவோட எங்கேயாவது கொவிலுக்குப் போய்க்கோன்னு சொல்லிட்டார்..என்று எழுத்தம் திருத்தமாக அந்த 'ர் ' ரை கொஞ்சம் அழுத்தியே சொன்னாள் லாவண்யா.






ம்ம்ம்....எல்லாம் கேக்கறது.....கேக்கறது......நோக்கென்ன இப்போ பீச்சுக்குப் போகணும் அவ்ளோ தானே? நானே அழைச்சுண்டு போறேன்...பெசன்ட் நகர் பீச்..அங்கேயே அஷ்டலக்ஷ்மி கோவிலும் இருக்கு...ரொம்ப நன்னாருக்கும். நானும் பார்த்து ரொம்ப நாளாச்சு. அவரும் ஊரில் இல்லை....இவனும் வர நாழியாகுமா? அப்போ நாம வரும்போது சரவணபவன் ல சாப்பிட்டுட்டு வந்துடலாம்....ராத்திரிக்கு ஒண்ணும் சமைக்க வேண்டாம். சரியா..






அத்தை....அவர்ட்ட சொல்லிடவா...நாம போறோம்னு...?






வேண்டாம்...வேண்டாம்.....சும்மா வேலைக்கு போற புருஷாள தொல்லைப் பண்ணக் கூடாது...அவனுக்குத் தான் நிறைய வேலை இருக்குன்னு சொல்லியிருக்கானோன்னோ ..நாம ஒரு நாலு மணிக்குக் கிளம்பினால் சரியாயிருக்கும்....போய்ட்டு வந்துடலாம்.






அதுக்குள்ளே அவர் வந்துட்டா....






அதெல்லாம் வரமாட்டாண்டீ...அவன் சாதாரணமா சில சமயம் ஒன்பது மணி கூட ஆகும்..வேணும்னா அப்பறமா ஃபோன் பண்ணிக்கோ.....போகும்காலத்திக்கி.






அந்த மாம்பழ மஞ்சளில் பச்சை பார்டர் போட்ட பட்டுப் புடவை நோக்கு ரொம்ப நன்னாருக்கும்...அதைக் கட்டிக்கோ.






அத்தை...பீச்சுக்குப் போய் பட்டுப் புடவையா....? ஈரமாகாதா?






உன்னை யாரு தண்ணீல நிக்கச் சொன்னா.......நாம கோயிலுக்குப் போறோம்...அப்டியே சித்தநாழி பீச்சு கிட்ட உட்கார்ந்துட்டு வந்துடுவோமாக்கும். ராத்திரி வேளை கடல் காத்தெல்லாம் என் உடம்புக்கு ஆகாது. ஏதோ நான் நோக்கோசரம் வரேன். தெரிஞ்சுக்கோ.






சரி..சரி..கட்டிக்கிறேன். அரை மனதோடு சொன்ன லாவண்யா...எப்படியோ நான் ஆசைப் பட்ட படி இன்னைக்கு பீச்சுக்குப் போறேன் என்று மனசுக்குள் அமைதியானாள்.


























பெசன்ட் நகர் பீச்...! மிகவும் அழகான கடற்கரை. கரை ஓரத்தில் அழகான அஷ்டலக்ஷ்மி கோயில். மனதுக்கு ரம்மியத்தையும், பக்தியையும் ஒருசேர தரும் சமத்துவ இடம்.






வழக்கமாகவே . சோகங்களையும் சுகங்களையும் சுமந்து வந்த இதயங்கள் ரகசியமாக கடல் காற்றில் கரைத்து விட்டு லேசான மனசோடு திரும்பிச் செல்ல


ஏதுவாக சுமை தாங்கியாகக் காத்திருந்தது கடல்.






சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் முங்கிக் கொண்டிருக்க, கீழ்வானம் சிவந்து வானமும் கடலும் சிங்காரம் பண்ணிக் கொண்டிருந்தது.






நீல நிற ஜீன்சும் சந்தனக் கலரில் குர்தியும் அணிந்திருந்த கௌரி அடர்ந்த கூந்தலை அதற்கான ஸ்டைலில் அலங்கரித்திருந்த போதும் அது காற்றுக்கு அடங்காமல் தவழ்ந்து கொண்டிருந்தது. அங்கு முன்பே வந்து காத்திருந்த கார்த்திக்கை கண்டதும் மென்மையாகப் புன்னகைத்தவள் ரொம்ப நேரமாச்சா வந்து....காக்க வெச்சுட்டேனா ? வழில சிக்னல்ல மாட்டிண்டேன்...என்று தனது கூலிங் கிளாசை நெற்றிக்கு மேலே ஏற்றி நிறுத்தி வைத்தாள் . காதில் ஒற்றை வைரக்கல் பள பள வென்று மின்னியது. அவளிடமிருந்து பரவிய சென்டின் மணம் கார்த்திக்கை மனசுக்குள் எங்கேயோ கொண்டு நிறுத்தியது.






கௌரி.....நீ எவ்வளவு அழகு தெரியுமா? என்று கேட்கிறான்.






எவ்வளவு...? அவளும் வெட்கத்தோடு கேட்கிறாள்.






இதோ... இந்தக் கடலளவு....அவன் கடலைப் பார்த்துத் திரும்பிக் கையை நீட்டிக் காட்டுகிறான்.






உனக்கு நல்ல மனசு....பரந்த மனசு கார்த்தி....அதோ அந்த வானம் மாதிரி...என்று அவளும் பதிலுக்குச் சொல்கிறாள்.






இருவரும்..சிரித்தபடியே, மணலில் அமர்ந்து கொள்ள....பெரிய அலை ஒன்று எழுந்து அடங்கியது...நீர்த்துளிகள் இருவர் மீதும் சில்லென்று பட்டுத் தெறிக்க....


ஹா...ஹா......இந்தக் கடலுக்கு இணை வேற ஒண்ணுமே இல்லையில்லையா கார்த்தி....ஆமா...ஏதோ சர்ப்ரைஸ் னு போனில் சொன்னியே....? என்னது என்று வில் போன்ற அவளது புருவங்களைத் தூக்கி அவனைப் பார்க்கிறாள் கௌரி.






லேடீஸ் ஃபர்ஸ்ட்....என்கிறான் கார்த்திக்.






சூரியனை இழந்த வானம்......கடலுக்குள் தஞ்சம் அடைந்த தருணம் ரம்மியமான மாலை நேரம்...மெல்லத் தவழும் பூங்காற்றோடு மனதுக்கு இதமாக இருந்தது.






தூரத்தில் இருந்த பஜ்ஜிக் கடையிலிருந்து சுடச் சுட பஜ்ஜி வாசனையோடு " பூங்காற்றிலே...உன் சுவாசத்தைத் தனியாகத் தேடித் பார்த்தேன்....." என்ற பாடலும் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.






அதற்கும் பின்னே.....தூரத்தில் லாவண்யாவும், கல்யாணியும்...ஆட்டோவை விட்டு இறங்கியபடி.....முதல்ல கோவிலுக்கு போகணும்கிட்டியா ...நானும் இங்க வந்து ரொம்ப நாளாச்சு...என்றாள் கல்யாணி.






முகத்தில் சலனமே இல்லாமல்.....சரி....என்கிறாள் லாவண்யா.






கடற்கரையில் புயலுக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்தது.






கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை....கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை...மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது .






ஏண்டி...அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த விட அங்க ஆடி வீதில காலாற நடந்தா..எப்படி இருக்கும் தெரியுமா? இந்தக் கடலே அந்தக் காத்துக்கு வந்து பிச்சை கேட்டு நிக்கணுமாக்கும்...எங்க பாரு இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான் போ...! கல்யாணி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள்.






ஐயே...அத்தை...அதெல்லாம் உங்க காலத்துலயாக்கும்..! இப்போல்லாம் அங்க ஒரே கூட்டம் தான்.அப்டியே இருந்தாலும் உள்ளூருல இருக்கப் பட்டவா அங்கே போகவே மாட்டா. எப்பப்பாரு கோயில் தானான்னுட்டு.






பேசிக்கொண்டே இருவரும் கால்கள் மணலில் புதையப் புதைய நடக்கும் போது...அருகிலிருந்து பூக்காரியின் குரல் இவர்களைப் பார்த்து அழைக்கிறது.






ஏம்மா....கோயிலுக்கு பூ வாங்கிட்டுப் போம்மா....முழம் பத்து ரூவா....நல்லா இருக்கு...ஏம்மா...! நாள் முழுக்க கை வலிக்க கட்டிய பூவை எப்படியாவது இவர்கள் தலையில் கட்டி விடவேண்டும் என்ற ஆதங்கத்தில், இவர்கள் முகத்தைப் பார்த்தபடியே 'வாங்கிட்டுப் போங்கம்மா' என்ற வேண்டுதல் அவளது கண்களில் இருந்தது.






அத்தை...மல்லிகைப் பூ...! வாங்கிக்கலாம் என்று பூக்காரியின் அருகில் சென்று நின்று ரெண்டு முழம் கொடும்மா...என்கிறாள் லாவண்யா.






அஞ்சு முழம் வாங்கிக்கோ...சுவாமிக்கும் சேர்த்து என்று கல்யாணி தனது பர்ஸ் திறந்து ஐம்பது ரூபாய் பணத்தைத் எடுத்துத் தருகிறாள்.






பூக்காரி அந்தப் பணத்தை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு 'நீங்க நல்லா இருக்கோணம்' என்று வாழ்த்துகிறாள்.






என்னதான் சொல்லுங்கோ...மல்லிகப்பூன்னா....அது, மதுர தான்..! நூறு பூவை வாங்கி தலைல வெச்சுண்டா போதும் ..அதோட வாசனை கூடவே வந்துண்டு இருக்கும்...இங்க முழம் போட்டு வாங்கினாலும் திரும்பறதுக்குள்ள நாrரும் நூலும் தான் தலையில் தொங்கிண்டு இருக்கும்.






லாவண்யாவுக்கு தலையில் பூவை வைத்துவிட்டு அழகு பார்த்த கல்யாணி தன் தலையிலும் சிறிது கிள்ளி வைத்துக் கொண்டு....டீ ..லாவண்யா நோக்கு இந்தப் புடவை அம்சமா இருக்கு....இப்போ நீ அப்டியே அம்மன் மாதிரியேன்னா இருக்கே..என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. ஆத்துக்குப் போனதும் நோக்கு திருஷ்டி சுத்திப் போடறேன்....கார்த்தி பார்த்தால் ரொம்ப சந்தோஷப் பட்டுக்குவான்....!






தலையில் வைத்த மல்லிகைச் சரத்தை தொட்டு சரி செய்த படியே....அத்தை சொன்னதை கேட்டு பெருமை பட்டுக் கொண்டாலும் கூடவே...."போதும்....நீங்களும் உங்க கார்த்தியும்..." அவருக்குத் தான் என்னைக் கண்டாலே பிடிக்கலையே. என் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டேங்கறார். நீங்களே சொல்லுங்கோ...எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து நாளாயாச்சு. இன்னும் என்னை எங்கயும் கூட்டிண்டு போகலை....என்னை யாரோ மாதிரி தான் ட்ரீட் பண்றார்....லாவண்யாவின் குரலில் ஏகப்பட்ட ஏக்கம் இருந்தது.






என்னடி லாவண்யா...இது தலைல குண்டைத் தூக்கிப் போடறே நீ? லேசான அதிர்வோடு மருமகளின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள் கல்யாணி.






ஆமாம்....நான் ஒண்ணும் பொய் சொல்லலை....அந்த கெளரியைத் தான் இன்னும் மனசுல நெனைச்சுண்டு இருக்காரோன்னு ஒரு சம்சயம். யார் கண்டா? ...நான் நினைக்கறேன்.....நான் தோசைக் கல்லுலேர்ந்து எண்ணெய் சட்டிக்குள்ளே விழுந்துட்டேனோன்னு...!






அதெப்படி நோக்கு கௌரியோட சங்கதி தெரியும்?






எல்லாம் தெரியும். அன்னிக்கு அவளோட அப்பா தவறிப் போனாரே....அப்போ அவாத்துக்கு நானும் போனேனே....அன்னிக்கு கார்த்திக்கே சொன்னான்.....ர் ...என்று தவறைத் திருத்திக் கொள்வது போல நாக்கைக் கடித்துக் கொள்கிறாள்.






இருவரிடமும் சிறிது மௌனம்....நடையில் நிதானம்....!






லாவண்யா தொடர்கிறாள்.






இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சும் நான் இதை பெருசா எடுத்துக்கலை...ஏன் தெரியுமா? உங்களுக்குத் தான் அவளைப் பிடிக்கலையே....நீங்களும் மாமாவும் சம்மதிக்காம கார்த்தி எப்படி அந்த கௌரியை கல்யாணம் பண்ணிக்குவார்?...அதனால அவளை மறந்து போயிடுவார்னு நினைச்சேன்.






அதான்....நாங்க அதுக்கு சம்மதிக்கவே மாட்டோம்...அவனுக்கும்த் தெரியும்..அவன் அந்தப் பொண்ண என்னிக்கோ மறந்தாச்சு....அது ஒரு அடங்காப் பிடாரியாக்கும்.....ஓடுகாலி ...இவனை பொண் பாக்கப் போன எடத்துல எப்படியோ மயக்கி வெச்சிருந்தது....நானாக்கும் அவனுக்கு புரிய வெச்சு அவளை ஒதுக்கி வெச்சேன். இப்போ அவனே அவளை ஒதுக்கியாச்சு தெரியுமா?.






நீ தான் இந்தாத்துக்கு மருமகளா வரணம்னு நான் வேண்டாத்த தெய்வமில்லை. போகாத்த கோயில் இல்லையாக்கும். அந்த மதுரை மீனாக்ஷியாக்கும் உன்னை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்திருக்கா. வந்த இடத்தில் அவனுக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சோன்னோ அவனுக்கு...அதான்...அவனாலே அதை உடனே ஏத்துக்க கொஞ்சம் சமயம் வேண்டியிருக்கு. எல்லாம் போகப் போக சரியாகும்...நீ சமத்து...சக்கரைக்கட்டி...இன்னும் கொஞ்ச நாள்ல பாரேன் அவன் உன்னையே சுத்தி சுத்தி வரப்போறான் ...என்று தேனொழுகப் பேசி லாவண்யாவின் தலையில் ஐஸ் மழை பொழியச் செய்கிறாள் கல்யாணி.






நீங்க கவலைப் படாதேங்கோ அத்தை...அதை நான் பார்த்துக்கறேன். இன்னைக்கு நானே இதைப் பத்திப் பேசத் தான் அவரை பீச்சுக்கு கூப்டேன். அவர் தான் வரலை.






சொல்லிக் கொண்டே கல்யாணியின் கைகளைப் பிடித்தபடி பக்தியோடு கோவிலுக்குள் நுழைகிறாள் லாவண்யா.






உள்ளே தீபாராதனையின் அடையாளமாக மணி டாண்.....டாண்....என்று அடித்து இவர்களை அழைக்கிறது.










0 0 0 0 0 0 0 0 0






















லேடீஸ் ஃபர்ஸ்டா...? நாம கொஞ்சம் மாத்தி யோசிப்போமே...நீயே சொல்லேன்...என்ன சர்ப்ரைஸ்?


புருவங்களை உயர்த்தி அவளது அழகான கண்கள் இரண்டும் விரியக் கேட்கிறாள் கௌரி.






ம்ஹும்.....நீ தான் முதல்ல சொல்லணும். எங்கே.....சொல்லு...சொல்லு...சொல்லு...சொல்லு...! என்று இயல்பான சந்தோஷம் இல்லாமல் இயந்திரத் தனமாக கூறிய கார்த்திக்கை கூர்ந்து கவனித்தவளாக...






என்னடா...ஒரே வாரத்துல ரொம்பவே நீ மாறிட்ட....உன் முகமே பேசுதே. கண்ணுக்குள்ள ஒரு இருட்டு...! நான் டெல்லி போனதும் எதாவது திருட்டுத் தனம் பண்ணினியா? என்று கேட்கவும்...






அதெல்லாம் அப்பறமா சொல்றேன்...முதல்ல நீ...ம்ம்ம்....சீக்ரம்..தா..வார்த்தை அவசரப் படுத்தியது.






அஜக்ஜா.....இதோ..கார்த்தி....உன் லக்கி ப்ரைஸ் ....நீ வராமலேயே...உனக்காக ரெண்டு நாள் அங்கேயே டேரா போட்டு கையோட வாங்கீண்டு வந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.






வாட்....? கார்த்திக் ஆச்சரியத்தோடு கேட்கவும்.






ம்ம்....ம்ம்ம்....என் சாமானமெல்லாம் தொலைஞ்சது ஒரு பக்கம் இருந்தாலும்.....அந்த வருத்தத்தை இது தீர்த்துடுத்து. எல்லாம் உனக்காகத் தான். ..என்று கையில் வைத்து மெல்ல வீசிக் காட்டுகிறாள் கௌரி.






என்னன்னு உன் வாயால சொல்லேன்....!






எல்லாத்துலயும் உனக்கு ஷார்ட்கட்.....என்று பொய்யாக கோபித்துக் கொண்டவள், டெல்லி பிராஞ்சுல ஒரு வேகன்சி...என்கிட்டே யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோன்னு சொன்னார். டக்குன்னு உன்னை ரெபர் பண்ணி கையோட ஆர்டர் வாங்கிண்டு வந்தேன். வருஷத்துக்கு ஐம்பது லட்சம் சம்பளம். கார், பங்களா...அலவன்ஸ்....இந்தாப் பிடி.....! என்னை நம்பி கொடுத்திருக்கா...காலை வாராதே. நாம டெல்லிக்கு ஷிப்ட் பண்ணிக்கலாம். வாட் டூ யூ ஸே ? என்று ஆங்கிலத்தில் பட படக்க பேசியபடி அந்த ஆர்டரை அவனிடம் நீட்டி "இந்தா பிடி" என்றவள் ஆமா....எங்க என்னோட ஹாண்ட்பாக். 3G கார்டு கொண்டு வந்திருக்கியா...? அதானே நீ சொன்ன என்னோட சர்ப்ரைஸ்....ஐ நோ....என்கிறாள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஒளியுடன் கௌரி .






இதைக் கேட்டு சந்தோஷப் படவில்லை கார்த்திக். பிரமை பிடித்தவன் போல இருந்தவனைப் பார்த்த கௌரிக்கு காற்றுப் போன பலூனாக துவண்டு போனது மனது. " என்னாச்சு இவனுக்கு...? மனசு கேள்வி கேட்டது.






அதை வாங்கத் தயங்கிய கார்த்தி.....முகத்தில் கலவரத்தோடு...உன்னோட .ஹாண்ட்பாக்கை என்னோட அம்மா சுட்டுட்டா....இந்தா உன்னோட 3G .கார்டு ..என்று நீட்டியவன்....கூடவே இதோ..இந்தா என்னோட ...அந்த சர்ப்ரைஸ் என்று ஒரு ஃபோட்டோவையும் கூடவே நீட்டுகிறான்.நீட்டும்போது அவன் கை மெல்ல நடுங்குகிறது.






அவனது நடத்தையில் மாற்றத்தை எண்ணி வியந்தவளாக அவன் தந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்க்கிறாள்.






கார்த்திக்கும் லாவண்யாவும் மாலையும் கழுத்துமாக இருந்த அந்தப் புகைப் படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த கௌரி....


என்ன சொல்றே நீ கார்த்திக்...? அந்த லாவண்யாவை நீ.....நீ....க ....க...கல்யாணம் பண்ணீண்டியா....?எப்படி...வாட் டூ யூமீன் ?






எஸ்.....ஐ.....மீன் இட்..!






இடியட்.........எப்படி முடிஞ்சுது உன்னால...? நீ செய்த இந்தக் காரியத்தை அன்டூ பண்ண முடியாதே.......கார்த்தி...! கௌரி படபடத்தாள் .






கார்த்தி அவளது முகத்தைப் பார்க்காமல் பேசிக் கொண்டே போகிறான்.






கௌரி....என்னை மன்னிச்சுடு. அந்த நிமிஷத்தில் நான் ஒரு சூழ்நிலைக் கைதி...! என்னோட இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது. மனசுக்குள்ள உன்னையே நினைச்சுண்டு அதை யார்ட்டயும் தைரியமா வெளியே சொல்ல முடியாமல் பயந்துண்டு.....அம்மா....அப்பா....கூட இருந்தவா அத்தனை பேரோட வற்புறுத்தலுக்கும் கண்ணீருக்கும் முன்னாடி அடங்கிப் போய் பலியாடாகி....லாவண்யா கழுத்துல கட்டாயமா என்னை தாலி கட்ட வெச்சுட்டா. என்னோட இந்தக் கல்யாணம் என்னோட மனசுக்கு விரோதமா கண்ணீர் முனையில் நடந்தது. இதுக்கு உன் ஆபீஸ் கொலீக் ஜீவா கூட சாட்சி.






ஷிட்..........! ஜீவா....ஜீவா....ஜீவா...........அய்யோடா...! கௌரியின் முகம் மாறியது .






கார்த்தி அன்று நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு.....எனக்கு வேற வழி தெரியலை....பாவம் லாவண்யா....என்று சொல்லி முடிக்கவும்.






அதே சமயம் ,அவள் கையிலிருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் புகைப் படத்தையும் சேர்த்து கடல் காற்று இழுத்துக் கொண்டு சென்று கடலோடு சேர்த்தது.






அவள் மனது சிறிது சிறிதாக உண்மையை கிரகித்துக் கொண்டிருந்தது...அதையும் மீறி இதயம் சிதறிப் போவது போலத் தவித்தது. அவளுக்குள் இருந்த வேகமும் விவேகமும் ஒன்றை ஒன்று கட்டிப் புரண்டு சண்டை போட்டது. விவேகம் வெற்றியோடு மனதை ஆக்ரமிக்க , கௌரி பேச ஆரம்பித்தாள் .






நீ நல்லவன்டா கார்த்தி....உன்னால மட்டும் தான் இப்படி ஒரு காரியம் செய்ய முடியும். நீ மனசுக்குள்ள கோழையாவும், வெளியே ரொம்ப தைரியசாலியாவும் இந்தக் காரியத்தை பண்ணீட்ட. ஒரு விதத்துல நான் உன்னைப் பார்த்துப் பெருமை படறேன். உன் சொந்தக்காரப் பெண்ணுக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையில் அவளை காப்பாத்த நீ உன்னையே பணயமாக்கி சரி செஞ்சுட்டாய். அதே சமயம், உன்னையே நம்பி என்னையே இழந்த என்னை ஒரு இக்கட்டான இடத்தில் நிறுத்தி வெச்சுட்டே. இதுக்கு யார் தான் சாட்சி ?.






கனத்த இதயத்தோடு கௌரி குனிந்த படியே மணலைக் கிளறிக்.கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அனிச்சையாக அவனது பெயரை எழுதி எழுதி அழித்துக்கொண்டிருந்தது.






கார்த்தி எதையோ பேச ஆரம்பித்தான்.






கௌரி அதைத் தடுக்கும் விதமாக அவளது கைகளால் 'நிறுத்து' என்று சமிக்சை செய்து...கார்த்தி...நீ உன்னோட செய்கையால் என்னை அடித்து நொறுக்கி ட்ட..!


இப்போ...அல்லது எப்போதுமே என்கிட்டே நீ ஒண்ணுமேசொல்ல வேண்டாம். ஜஸ்ட்...இப்போ நான் சொல்லறதை மட்டும் கேட்டுக்கோ...நிமிராமலேயே கௌரி பேசிய வார்த்தைகள் தெளிவாக கேட்டது அவனுக்கு.






'.ம்ம்ம்ம்ம்....சொல்லு.........திட்டு....அடி .........அவனுக்கே கேட்காமல் வார்த்தைகள் தயங்கியது .






கடலலைகள் போல கௌரியின் மனதுக்குள் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முட்டி மோதியது.






இந்த விஷயத்தால் என் மனசைச் சிதறிப் போக நான் விடமாட்டேன். ஒரு சிதறிய மனசால எதையுமே சிந்திக்க முடியாது.











சீரா போயிண்டிருந்த என் வாழ்க்கையில் இந்தக் கார்த்திக் .....காதல், கல்யாணம், கணவர்,,,,இத்யாதி எல்லாம் ஒரு பகுதி தான். இதுவே வாழ்க்கையாகி விடாது. இதெல்லாம் இல்லாமலும் நான் எப்பவும் போலவே எனக்காக வாழ்வேன். என்னை இந்தக் காதலோ கார்த்திக்கோ வீழ்த்த முடியாது. நான் கௌரி. எனக்கென்று இலக்கு இருக்கு.







மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்...மெல்ல நிமிர்ந்தாள். கண்களில் நீர் படலம் மெல்ல மெல்ல உள்வாங்கியது.







நல்லவேளை....கார்த்தி நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை...!




தெளிவாக வார்த்தைகளை வீசினாள்.







கார்த்திக்கின் கண்களில் ஒரு அதிர்ச்சி வந்து விலகியது.







சரியோ.....தப்போ.....நீ உன் சொந்தக்காரப் பெண்.....அவள் பேர் என்ன சொன்னே?







லாவண்யா....!







ம்ம்ம்...லாவண்யா ....அவளைக் கல்யாணம் பண்ணீண்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாய்.







அவனது கண்களுக்குள் ஆச்சரியக்குறி...!







ஒருவேளை.....நமக்கு கல்யாணம் ஆன பிறகு இது போல ஒரு இக்கட்டான நிலைமை உனக்கு வந்திருந்தால்...? அவள் நிறுத்தினாள்.




அவன் கேள்விக்குறியோடு அவளைப் பார்த்தான். கௌரியின் முகம் என்றுமில்லாத நிலையில் குழம்பி இருப்பதை புரிந்து கொண்டான்..













அவள் பேசட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தான் கார்த்திக்.













இப்போ நடந்ததற்கு நீ பொறுப்பில்லை. சொன்னாப்போல நீ அந்த நேரத்துல சூழ்நிலைக் கைதியாயிட்டே. ஒரு வேளை இதே போன்ற நிலை எனக்கு வந்திருந்தாலும்.....நீ கூட இதே பெருந்தன்மையோட என்னை விட்டுட்டு போயிடுவே தானே ?







அவனது முகம் அவமானத்தில் திரும்பியது.







பரவாயில்லை கார்த்தி....வாழ்க்கை பயணத்தில் சீரான நெடுஞ்சாலை மட்டுமே இருக்காது. குறுக்குத் தெரு....முட்டுச் சந்து..ஏன்....? விபத்து....இப்படி எது வேணா நடக்கலாம் இல்லையா? நான் அந்த விபத்துலேர்ந்து பிழைச்சுட்டேன்னு நினைச்சுக்கறேன். எந்த ஒரு பெரிய விபத்துலயும் சில சமயம் ஏதோ ஒரு அங்கஹீனம் ஏற்படலாம் இல்லையா? அதே போலத் தான்....எனக்கும் ஒரு நிலை...!







நாம ரெண்டு பேரும் சேர்ந்து பயணம் செய்து ஒரே இடத்தில் இறங்குவோம்னு நான் நினைச்சேன்.....ஆனா... இப்போ நாம பயணமே செய்யப் போறதில்லைன்னு புரிஞ்சுடுத்து.













நிஜமான நேசம்னா என்ன? நாம யாரை நேசிக்கிறோமோ அவரை அவரோட இயல்போட அதாவது அவரோட குற்றம் குறைகளோட நேசிக்கணம். நாம் விரும்பும் மனத்தை வருத்தப் படுத்தக் கூடாது. அப்படியே அவர் நமக்கு துரோகமே செஞ்சாலும் கூட அது அன்பு கொண்ட மனசுக்குப் பெரிசாத் தெரியாது. தான் விரும்பிய மனசின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறணம்ன்னு வேண்டிக்கும். அதுவே தனக்கு மனக்கஷ்டமா இருந்தால் கூட. அதையும் முழு மனசோட ஏத்துக்கணம்..




எந்த ஒரு காரியமும் இன்னொரு காரணமில்லாமல் ஒருத்தரோட வாழ்க்கேல நடக்கறதே இல்லை . எனக்கு அந்தப் பக்குவத்தை கொடுத்ததே




நீ தான் கார்த்தி..!


ஒன் மினிட் ....கார்த்தி இடைமறிக்கிறான்..







பேசிக் கொண்டே போன கௌரி அவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் .




அப்போ......இது ...கார்த்திக்கின் விரல்களின் இடையே அந்த பிரசாத்தின் கடிதத்தை வைத்து பட பட என்று ஆட்டினான் .




எது....? கேட்ட கௌரியின் கண்கள் அகல விரிந்தது .






என்ன....கௌரி...அப்படியே ஷாக்காயிட்டே....இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..?





ஒ...இது.....அந்தக் கடிதம்...பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட.....கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது....ம்ம்ம்....என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப தாங்க்ஸ்...அத இப்படி கொடு...என்று கையை நீட்டுகிறாள்.




இந்தா...என்றவன் கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, இப்போ சொன்னியே ஒரு காரணமில்லாமல் எந்த ஒரு காரியமும் ஒருத்தரோட வாழ்க்கையில நடக்கறதே இல்லைன்னு.....அதுக்கும் இதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா கௌரி..?




இதுக்கும்....எதுக்கும் என்று கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தை மடித்து தனது பர்ஸுக்குள் வைத்துக் கொள்கிறாள்.




அடிக்கடி உன்னோட டெல்லி ட்ரிப், ஏதோ சாக்கு சொல்லிண்டு அங்கயே ரெண்டு நாள் டேரா போட்டது, அந்த ஐ வாஷ் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்...ஏன்...இவ்ளோ பொய்....? அதான் உங்க ஆபீஸ் ஜீவா சொல்லிட்டாரே உங்களுக்கு அந்த டெல்லி ப்ராஜெக்ட் கிடைக்கவே இல்லையாம்....நீ டெல்லி போறதே உன்னோட பர்சனல் விஷயமாத் தான்னு....அத்தோட இந்த லெட்டர் வேற .....இதையெல்லாம் வெச்சுப் பார்த்தால் என் அம்மா..... சொல்றதெல்லாம்,சந்தேகப்படறதெல்லாம் சரிதான்னு தோணறது.இப்பக் கூடப் பாரேன் நீ அந்த பிரசாத் பத்தியோ இந்த லெட்டர் பத்தியோ இது நாள் வரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை...என்னமோ நீ மட்டும் தான் ரொம்ப ரொம்ப நல்லவள் மாதிரியும் நான் உன்னை ஏமாத்தினா மாதிரியும் இப்பப் பேசறே....சம் வாட்.....ஐ டோன்ட் லைக் திஸ்....!




கார்த்திக்கின் ஒவ்வொரு வார்த்தையும் கௌரியின் இதயத்தைச் சாட்டையால் அடித்தது போலிருந்தது.




அப்போ..நீ என்னை சந்தேகப்படக்கூட ஆரம்பிட்ச்சுட்டே..அப்டித்தானே..ஸ்ஸ்ஸ்..இதே வார்த்தையை என்னைப் பார்த்து யார் பேசி இருந்தாலும்...ஏன்..அந்த ஜீவா பேசி இருந்தால் கூட நான் சுத்தமா கேர் பண்ணியிருக்க மாட்டேன்...இல்லைன்னா ஒரு அரை விட்டுட்டு போயிருவேன் ..கேவலம் ஒரு பொறம்போக்கு....அவனோட பேச்சைக் கணக்குல வெச்சுண்டு ..நீ....உன் மனசுல இத்தனை கேள்விகளை சுமக்கறே .....எஸ்...ஐ ஜஸ்ட் கான்ட் டாலரேட் திஸ்...! உன்னோட இது மாதிரியான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை.உனக்கு எப்படித் தோண்றதோ அப்படியெல்லாம் நினைச்சுக்கோ.ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்...!




ஆனால் சில தவறுகள் இதயத்தில் கல்வெட்டு மாதிரி பதிஞ்சுடும். அதைச் சுமந்துண்டு வாழறதே ரொம்பக் கஷ்டம்..! அதை அழிக்கவோ, மறைக்கவோ, திருத்தவோ முடியாது.அது இதயத்தில் தழும்பாக் கூட மாறாது....அப்படியே ரணமாவே இருக்கும்..நீ அதைப் புரிஞ்சுக்கோ கார்த்தி, இப்பவும் சொல்றேன்....நீ பண்ணின காரியத்தை சரிபண்ண என் மேல் தவறான பழியை சுமத்துறியே இது உனக்கே சரியா இருக்கா? அதைத் தான் என்னால ஜீரணிச்சுக்க முடியலை......!




ஒருவேளை நானே உன்னை வெறுத்து ஒதுங்கினால் மட்டுமே உன்னால் லாவண்யாவுக்கு உண்மையாக இருக்க முடியும்ங்கற ஏதோ ஒரு குற்ற உணர்வில் கூட என்னைப் பார்த்து நீ இப்படி சொல்றியா? உனக்கு நினைவு இருக்கலாம்.அன்னிக்கு...என் அம்மாவுக்கு ஒரு துணை வேணும்னு நான் சொன்னதைக் கூட மனசார ஆதரிச்சவன் நீ..! உன்னால எப்டிடா...இப்படியெல்லாம்....பேச முடியறது?




அதான் சொல்றேன்.....உன் அம்மாவுக்கே.... இன்னொரு துணை தேடத் துணிந்தவளாச்சே நீ.....!உனக்கு அந்த பிரசாத் மட்டும்.....எப்படிப்.....




கார்த்தி வார்த்தையை முடிக்கவில்லை....கௌரி வெகுண்டாள்.




ஷட் அப்..அண்ட் மைண்ட் யுவர் டங் ..! இனி..... ஒரு..... வார்த்தை என்கிட்ட பேசாதே நீ...! எவரிதிங் பினிஷ்ட்... கெட் லாஸ்ட்...!




ஐயோ பாவம் லாவண்யா....ஐ பிட்டி ஆன் ஹெர் ...என்னைப் பொருத்தவரையில் நீயும்....அந்த கிரீஷும் ...ஒண்ணு தான். யூ டூ சீட்..! உன்கிட்ட இனிமேல் எனக்கென்ன பேச்சு.




அதுக்காக நீ....நாளைக்கு சன் நியூஸில் "பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி காதல் தோல்வியால் எட்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை " ன்னு ஹெட்லைன்ஸ் எதிர்பார்க்காதே. குட் பை...என்றவள் விருட்டென்று எழுந்து மணலைத் தட்டிவிட்டு அவனை விட்டு விடு விடென்று எட்டி நடக்க ஆரம்பித்தாள் .




"கண்களை மூடினாள் .....

இறைவனிடம் வேண்டினாள் ....




இறைவா...எனக்கொரு...

எனக்கொரு வரம் தா....

அழுதிடும் சின்னப் பிள்ளை

நான்....உந்தன் கையில்

ஏந்திக் கொள்வாய்...!"







சற்று முன்பு ரசித்து முகர்ந்து பார்த்த பஜ்ஜியின் மணம்.....இப்போது அவளை ஒன்றுமே செய்யவில்லை...அங்கிருந்து வந்த பாடல் மட்டும் அவளது இதயத்தில் பட்ட அடியின் வலியால் அவளையும் மீறி கண்களை நிறைத்தது.




இன்னும் விரைப்பாக நிமிர்ந்து நடக்கிறாள் கௌரி....."நான் அழ மாட்டேன்..." வைராக்கியமாகச் தனக்குள் சொல்லிக் கொண்டாள் .கண்களில் ஒரு வெறுமை..ஒரு முறைப்பு...தூரத்தை வெறித்து பார்த்து கொண்டு நடந்தவளை .....எதிரில் ஓட்டமும் நடையுமாக நேருக்கு நேர்....சடார் என்று கௌரியின் மேல் மோதித் தடுமாறி நிற்கிறாள் இளம்பெண் ஒருத்தி.




நிமிட சுதாரிப்பில், தன்னை மோதிய பெண்ணின் தோளை இறுக்கிப் பிடித்தவள் தன் அலுவலக கேன்டீனில் பணி புரியும் பெண் வசந்தி தான் என்றறிந்து வியப்பில்.... வசந்தி....ஏன்...இத்தனை வேகம்..? என்னாச்சு? என்று தடுமாறிய கேள்வியோடு அவளின் கண்களைப் பார்க்கிறாள் கௌரி.




விரக்தி யோடு பார்த்த வசந்தி.....மேடம்...என்னை விட்ருங்க....நான் சாகணும் ....அதான் தற்கொலை பண்ணிக்க கடலுக்குப் போறேன்..." என்று சொல்லி அவளது பிடியிலிருந்து திமிறுகிறாள்.




வசந்தியின் குரலில் இருந்த தீர்மானத்தை உடைக்கத் தெரியாத கௌரி, வசந்தி...என்னோட வா..ரெண்டு பேரும் சேர்ந்தே சாகலாம்...!




திகைப்போடு கௌரியைப் பார்த்தவள் எங்கிருந்தோ குதித்த ஆர்வத்தோடு மேடம்.....நீங்க....என்றவள் அடுத்த நொடி கௌரியின் கால்களை இறுக்கிப் பற்றியபடியே குலுங்கிக் கொண்டிருந்தாள்.




0 0 0 0 0 0 0 0







எதிர்பாராமல் கௌரி எழுந்து சென்றதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் தானும் எழுந்து மணலைத் தட்டிவிட்டு நிமிரும்போது தனக்கு எதிரில் லாவண்யாவும் , கல்யாணியும் கோபத்தோடு முறைத்துக் கொண்டு இடுப்பில் கைவைத்தபடி நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்தவன்..




நீங்க ரெண்டு பேரும்... எப்படி இங்கே? என்று கேட்கவும்...!




ஹங்.......நீங்க சொன்னா மாதிரியே கோவிலுக்குத் தான் வந்தோம்....ஆனால்...அந்த கௌரியோட ஃபைல்ல கையெழுத்துப் போடத்தான் என்கிட்ட வேலை ஜாஸ்த்தி இருக்குன்னு பொய் சொன்னியா...? அதைத் தான் கண்ணால பார்த்தேனே.. இன்னும் இது மாதிரி என்னவெல்லாம் நடக்கப் போறது?....லாவண்யா கார்த்தியைப் பார்த்து கோபமாகக் கேட்கிறாள்.




என்னடா கார்த்திக்...இது....இவ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு...இப்பத் தான் உங்க ரெண்டு பேரையம் சேர்த்து தூரத்துலேர்ந்து நாங்க பார்த்தோம்...நாங்க வரதைப் பார்த்ததும் அவள் எழுந்து வேக வேகமா ஓடிட்டா..இது உனக்கே நன்னாருக்கா .? கல்யாணியும் சேர்ந்து கொண்டு தன் பங்குக்குக் கேட்கிறாள்.




ம்மா...நான் சொல்றதைக் கொஞ்சம் காத்து கொடுத்துக் கேளுங்கோளேன்...கெஞ்சலான குரலில் கார்த்திக் கேட்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் லாவண்யா கண்ணீரோடு அவனைப் பார்கிறாள்.பிறகு அது பொது இடம் என்பதையும் மறந்து அத்தையைப் பார்த்துக் கத்துகிறாள்.




அத்தை....நான் நிஜமாவே தோசைக் கல்லுலேர்ந்து எண்ணெய்ச் சட்டிக்கு விழுந்துட்டேனாக்கும்.இவன் மட்டும் என்ன...? இவனும் ஃபிராட் தான்.... இவனும் சீட் தான்...உங்க பிள்ளை செஞ்சா மட்டும் அது குத்தமில்லையா? இவர் இப்படி இருக்கும்போது இவனை யார் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது....நான் வந்து கார்த்திக் கால்ல விழுந்து அவன் காலைப் பிடிச்சுண்டு அழுதேனா?




ஒரு உண்மையை மறைச்சு எங்களை ஏமாத்தி...நான் பீச்சுக்கு கூப்பிட்ட போது வேலை நிறைய இருக்குன்னு சொல்லிட்டு அந்த கௌரியை கூப்ட்டு கூத்தடிக்க மட்டும் நேரம் இருந்ததா..?




இந்த விஷயம் மட்டும் எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? பொய்யும்...பித்தலாட்டமும்....ஐ கான்ட்...ஐ டோன்ட்....என்று ஆவேசத்தோடு சொன்னவள் அத்தை...வாங்க நாம இங்கேர்ந்து போகலாம்....என்னைக் கொண்டு போய் என் வீட்டில் விடுங்கோ. எனக்கு இந்தக் கல்யாணமும் வேண்டாம்...எந்த வேஷமும் வேண்டாம் என்றவள் சட்டென்று தன் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து கல்யாணியின் கையில் திணித்து விட்டு விடு விடுவென்று நடக்க ஆரம்பிக்கிறாள்..




அதே வேகத்தில் தனது கைபேசியை எடுத்து தன் அம்மாவுக்கும் அழைத்து விஷயத்தைச் சொல்லி " அப்பா...அம்மா...நீங்க ரெண்டு பேரும் நாளைக்கே கிளம்பி வந்து என்னை இங்கேர்ந்து அழைச்சிட்டு போவீங்க தானே...என்று கேவிக் கேவி அழுது கொண்டே சொல்லி முடித்த லாவண்யாவை..அதுக்குள்ளே .என்ன காரியம் பண்றே....? என்று கையை இருக்கப் பிடித்த கார்த்திக்கை......ஓங்கி கன்னத்தில் அறைந்தவள் என் கையை விடுடா.....என்று வெடுக்கென்று பின்னுக்கு இழுக்கிறாள் லாவண்யா.




கல்யாணி அதைக் கண்டதும் திக்பிரமை பிடித்தவளாக அப்படியே நிற்கிறாள்.




அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் ஏதோ டி வி சீரியல் எடுக்கிறார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்த பின்பு அங்கு கேமரா வெளிச்சம் இல்லாததை ஊர்ஜிதம் செய்து கொண்டு இது ரியல் ப்ளே ...என்று வேடிக்கை பார்க்க கூட்டம் போடுவதை உணர்ந்த கார்த்திக் செய்வதறியாது அவமானத்தில் கூனிக் குறுகி "நான் போறேன்...நீங்க எப்படி வந்தேளோ அப்படியே வீட்டுக்கு வந்து சேருங்கோ" என்று சொல்லிவிட்டு விடுவிடென்று திரும்பிப் பார்க்காமல் அவனது பைக்கை நோக்கி நடக்கிறான்.




அவனது மனம் லாவண்யாவை பளார் பளார் என்று அடிக்க வேண்டும் போல

துடித்தது.




அதற்குள் அங்கிருந்த போலீஸ்......"இந்தாப்பா...பொம்பள கிட்ட என்ன தகறாறு...நானும் அப்பாலேர்ந்து நோட் பண்ணிக்கிட்டே வாரேன் ...ராங்கா போறியா நீ....மவனே.....உன்னை உள்ளுக்குளே வெச்சு முட்டிக்கி முட்டி தட்டி....என்று லத்தியை தட்டியபடியே....அவனை வழிமறித்து கேள்வி கேட்கிறார்.




இதைக் கண்ட கல்யாணி அப்படியே அங்கு தலை சுத்தி மயக்கம் போட்டு விழுகிறாள்..







வெகு தூரத்தில் ….கார்த்தி, லாவண்யா ….கல்யாணி இவர்களின் பிரச்சனைப் புயல் மையம் கொண்டதை அறியாத கௌரி, வசந்தியின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி கரையைக் கடந்து அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறியபடியே சுரத்தே இல்லாதா குரலில் ‘விருகம்பாக்கம் போப்பா’…என்றவள் ம்ம்ம்ம்…வசந்தி நீயும் .ஏறிக்கோ ….முதல்ல எங்க வீட்டுக்குப் போகலாம்….என்றதும் வசந்தியும் ஏறிக்கொள்ள ,ஆட்டோ விர்ரென்று கிளம்பி கௌரியின் வீடு நோக்கி வேகம் பிடித்தது .




தாங்க்ஸ் மேடம்…..வசந்தியின் குரலில் நன்றியின் எதிரொலி.




ம்ம்ம்…..பரவால்ல…..இப்ப ஒண்ணும் பேசாதே என்று கண்களால் ஜாடை செய்தவள் மெல்ல வசந்தியை தன் அருகில் சேர்த்துக் கொண்டவள் லேசாக அவளின் தோளில் சமாதானமாகும்படி மெல்லத் தட்டிக் கொடுக்கிறாள். அதில் ஒரு தாயின் பரிவு தெரிந்தது. வீடு வந்து சேரும் வரையில் இருவரின் மனதும் இரு வேறு துருவங்களில் பிரயாணம் செய்தது. ஜில்லென்ற காற்று இருவரின் இதயத்தையும் சமமாக ஆற்றியது.




வீட்டின் முன்பு ஹாரனோடு வந்து நின்ற ஆட்டோவில் வந்து இறங்கிய கௌரியைக் கண்டதும் வேகமாக வந்து கதவைத் திறந்த சித்ரா, ஆட்டோ கிளம்பியதும் ,




ஆமா…லேட்டா வருவேன்னு சொல்லிட்டுப் போனே…..சரிதான்….அதுக்காக இத்தனை லேட்டாவா… ஆகணும்…ஒரு கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணு காலாகாலத்துல வீட்டுக்கு வரலேன்னா, அக்கம் பக்கத்துல இருக்கறவா….என்ன சொல்லுவா…? அத்தனை நேரம் அந்த கார்த்தியோட பீச்சுல போய் கூத்தடிக்காட்டா என்ன வந்தது…? நான் சொன்னாக் கோவம் மட்டும் பொத்துண்டு வரும்..தான் செய்யறது மட்டும் தப்புன்னு ஒத்துக்கவே மனசு வராது….உனக்கு.




அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த பொறுமை அனைத்தும் வார்த்தைகளாக வெடித்துக் கிளம்பியது சித்ராவிடமிருந்து.




கௌரியின் பின்னால் தயங்கியபடி நின்ற வசந்தியைப் பார்த்ததும் முகத்தில் குழப்பத்தை ஏந்தியவளாக……




என்ன இத்தனை நாழி?..ரொம்ப இருட்டிடுத்து…..யாராக்கும்…இந்தப் பொண்ணு…இந்த ராத்திரி நேரத்துல இங்க அழைச்சுண்டு வந்து நிக்கற?




நினைத்ததை அப்படியே சொல்லிவிட்ட அம்மாவை பொய் கோபத்தோடு முறைத்த கௌரி….நோக்கு எப்பவுமே ஒரு இங்கிதம் இருக்காதா? மனசுக்குள்ள நினைச்சதை அப்படியேவா பேசுவா ? என்று நினைத்துக் கொண்டே…இரு வரேன்….என்று சொல்லிக் கொண்டே…உள்ளே வா வசந்தி…இது என் அம்மா தான்….ரொம்ப வெளிப்படையா பேசுவாங்க.ஆனால் மனசுக்குள்ளே ஒண்ணுமே வெச்சுக்க மாட்டாங்க. நீ தப்பா எதையும் எடுத்துக்காதே. என்று சொன்னவள்..




அம்மா…. சித்த சும்மாயிறேன்….என்று சைகை காண்பிக்கிறாள்.




இது வேறயாக்கும்….நான் எதைக் கேட்டாலும், நான் உனக்கு வாயை மூடிண்டு சும்மாயிருக்கணம்…நீதான்.என்னை ஆட்டிப் படைக்க…கண்ணுலயே ரிமோட் கண்ட்ரோல் வெச்சுண்டு இருக்கயே..!




வசந்தி தயக்கத்துடன், மேடம் நான் வேணாக் கிளம்பறேன் என்று தயங்கியபடியே சொல்லவும்.




அம்மா…இவள் வசந்தி…என்கிட்டே ஆபீஸ்ல தான் கேன்டீன் இன் சார்ஜா வேலை பார்க்கிறாள். அவள் குடும்பத்துல என்ன பிரச்சனையோ தெரியலை. திடீர்னு பெசன்ட் நகர் பீச்சுல இவளைப் பார்த்தேன்..




அதுக்காக அவள் குடும்பப் பிரச்சனையை நீ தீர்க்கப் போறியா? இது நோக்கே நன்னாருக்கா? உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து கரை சேர்க்கணமேன்னு நான் இங்க தவியா தவிக்கிறேன்…இதுல அசலாத்து சமாச்சாரம் நமக்கெதுக்கு? நூறோ…..ஐநூறோ கொடுத்து அனுப்பு..யாருக்கு யாரு ஜவாப்தாரி?




அப்படிப் பார்த்தால், நாளைக்கே நம்மாத்து வாசல்ல..நூத்துக் கணக்கா அபலைகள்னு வந்து நிப்பா.கடைசில நீ ரோட்டுக்கு வரணம் …

நான் இப்பச் சொன்னாப் புரியாது நோக்கு.




ம்ம்மா…..ப்ளீஸ் கொஞ்சம் நிறுத்தேன்…..இவளோட நிலைமையைத் தெரிஞ்சுண்டா நீ இப்படியெல்லாம் பேசமாட்டே.




என்ன பெரீய பொடலங்காப் நிலைமை….யாருக்கும் வராத நிலைமை..?




இவள் தற்கொலை பண்ணிக்க கடலுக்கே போனாள் …நோக்குத் தெரியுமா?அதான் சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்தேன்.




என்னது…..!!! தற்கொலையா? கடல்ல விழுந்தா? போச்சுடா சாமி….வேற வினையே வேண்டாம். நாளைக்கு கார்த்தால எத்தனை மீசைக்காரா வந்து நம்மாத்து வாசல்ல கல்லெறியப் போறாளோ? இதெல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் வரை போகும்…இதெல்லாம் நோக்குத் தேவையா? நமக்கே ஆயிரம் பிரச்சனை ….தீர்க்க வழியில்லை.




அம்மா…நீ என்னைக் கொஞ்சம் யோசிக்க விடேன்….இப்ப…இவள் நம்மாத்தில் இருந்துட்டுப் போகட்டும்..நாளைக்குக் கார்த்தால இவளைக் கொண்டு போய் அவாத்தில் நல்லதனமா சொல்லிச் சேர்த்துடறேன். அதுவரை…




அதை இப்பவே செய்…காலம் கெட்டுக் கெடக்கு..உலகம் இருக்கற இருப்பில் .யாரும் யாருக்கும் ஐயோ…பாவம் பார்க்க முடியாது.




ம்ம்மா…..வசந்தி இங்க தான் இருப்பா…….கெளரியின் குரலில் தீர்மானம் தெரிந்தது.




அதற்குள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த வசந்தி சடாரென்று சித்ராவின் காலடியில் விழுந்து “அம்மா…எனக்கு அடைக்கலம் தாங்க…..இல்லாட்டி நான் செத்துப் போறதத் தவிர எனக்கு வேற வழி தெரியலே..” என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.




பாம்பை மிதித்து விட்டவளாக விருட்டென்று காலை இழுத்துக் கொண்டு பின்னாடி நகர்ந்த சித்ரா…”விஷயமெல்லாம் பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்காகிண்டு இருக்கு”….நான் என்ன செய்யறது…வேடிக்கை பார்க்கறேன். அதுக்குத் தானே இந்தாத்தில் இருக்கேன் ..!




எழுந்திரு வசந்தி…அப்படி உனக்கு என்ன தான் பிரச்சனை …இப்பச் சொல்லு..!




குழந்தை….!




என்னது….குழந்தையா….நீ என்ன சொல்றே?




ஆமாம்…மேடம்….எனக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் குழந்தை பொறக்கலை….புகுந்தவீட்டுல அம்புட்டு பேரும் கன்னாப் பின்னான்னு ஏசினாங்க …. இந்தக் கோளாற எப்பிடியாச்சும் மாத்தணும்டு என் தங்கச்சிய மறு கல்யாணம் நான் தான் அவருக்கு செஞ்சு வெச்சேன். அவளுக்கு கலியாணம் ஆன மறுவருஷமே குழந்தை பொறந்துச்சு.ராசாவாட்டம் பையன்…..ஆனா இப்ப….என் தங்கச்சியே அவரோட சேர்ந்து என்னிய ஏசுது. நான் வேண்டாதவளாயிட்டேன். இதே கவலையில என்னை அனாதையா விட்டுபோட்டு என் அம்மா, அப்பாவும் அடுத்தடுத்து செத்துப் போயிட்டாங்க.




அழுது கொண்டே தொடருகிறாள்..




இந்நேரம் பார்த்து நம்ப கம்பெனி கேன்டீன் கான்ட்ராக்ட் கூட முடிஞ்சி போச்சு. உனக்கு இனிமேட்டு இங்க வேலை இல்லையின்னு சொல்லிட்டாரு காண்டிராக்டரு.அது வேற வீட்டுல பிரச்சனை.என் சம்பளம் மொத்தமும் வாங்கிகிட்டு என்னிய ஒரு வேலைக்காரி மாதிரி நடத்துவா..இப்ப அந்த கொழந்தைய என் பக்கத்துல நெருங்கக் கூட விட மாட்டாக..நான் தொட்டுப்புட்டா அம்புட்டுத்தான். வாய்க்கு வந்தபடி கத்தி கூப்பாடு போடுவா. இங்கிட்டிருந்து போ வெளியன்னு சொல்லி என்னைக் களுத்தப் பிடிச்சி வெளிய துரத்தினாங்க. செத்துத் தொலை…இனிமேட்டு இந்த வீட்டு வாசப்படி மிதிக்காதே…கடல்ல விழுந்து உசுரை விட்டுத் தொலை..உன் சம்பளப் பணமும் வேணாம்…நீயும் வேணாம்னு சொல்லிட்டு ..உனக்குப் புண்ணியமாப் போகும்னு கடைசியா கையெடுத்து கும்பிட்டு கேட்டுகிடுச்சு என் கூடப்பொறந்த பொறப்பு. இப்ப நீங்களே சொல்லுங்க. நான் இனிமேட்டு ஏன் வாழணும்? தெனம் செத்து செத்து வாழறதை விட….ஒரேயடியாய்….போயரலாமுண்டு .! கேவினாள்….




இனிமேல் தான் நீ தலை நிமிர்ந்து வாழணம் …! கௌரி தெளிவாக சொன்னதைக் கேட்டு சித்ரா குறுக்கிடுகிறாள்.




வசந்தி….நீ போயி முகம் அலம்பிக்கோ…அதோ உள்ளே போனால் பாத்ரூம் இருக்கு…என்று கௌரி சொன்னதும் வசந்தி வேகமாக எழுந்து போகிறாள்.




பாவம் தான்…கேட்க மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் குடும்ப சமாச்சாரம்….இதுக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு….கோர்ட்டு இருக்கு..சட்டம் இருக்கு.இதையெல்லாம் நீ தலை நுழைக்கக் கூடாதுன்னு நோக்குத் தெரியாதா ? சித்ரா தாழ்ந்த குரலில் சொல்கிறாள்.




தெரியும்மா ….இதுக்காக ஒரு அபலைப் பெண் போலீசுக்கோ, கோர்ட்டுக்கும் போய் நின்னா…அப்பறம் என்னாகும்னும் தெரியும் .!




அதுக்காக…..?




வசந்தி பாட்டுக்கு இப்ப நம்மளோட இருக்கட்டும்.உனக்கும் ஒத்தாசையா…!




எனக்கு எந்த தோசையும் வேணாம்…! நீ சொல்றதுக்கெல்லாம் நான் வேணாத் தலையாட்டுவேன்…நாளைக்கு அந்தக் கார்த்தியை கல்யாணம் பண்ணீண்டு….!




அது….எனக்கு நடக்காது…..ஏன்னா…கார்த்திக்கு கல்யாணம் ஆயாச்சு..




என்னடி சொல்றே….? சந்தடி சாக்குல தலையில கல்லைத் தூக்கிப் போடறே…?




அவனும் இப்படித்தான் என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டான்….என்ன பண்றது….பெண்ணாகப் பிறந்துட்டால் சில கஷ்டங்கள் எல்லாருக்கும் பொது தானே…? இதுல யார் உசத்தி….யார் தாழ்த்தி..




என்னாச்சுடி…….அதான் உன் முகமே சரியில்லையா….எதையோ பறிகொடுத்தவ மாதிரி…….நான் இந்தப் பொண்ணுக்காகத்தான்னு நெனச்சேன்.




ஆமாம்…பறிகொடுத்துட்டேன்…..!




என்னடி உளர்றே…. கலக்கத்துடன் மகளின் முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.




ஒண்ணுமில்லைம்மா…..! நடந்ததெல்லாம் நாளைக்கு சொல்றேன்…அவளுக்கு முன்னால இந்த விஷயம் இப்ப வேண்டாம்.நேக்கு பசிக்கறது…ரெண்டு பேருக்கும் ஏதாவது சாப்பிடத் தரயா ?




இரு….இரு…இட்லி வாக்கறேன். ..என்று சமையலறைக்குள் ஓடியவள் சில நொடிகளில் ஓடிவந்து… சந்தேகத்தோடு மீண்டும், இந்தப் பொண்ணு நல்லவள் தானே கௌரி , உனக்கு நல்ல பழக்கம் தானே…? என்று கேட்க.




நீ கவலைப் படாதே….அதுக்கு நான் காரண்டி….என்றவள் அங்கு வந்து நின்ற வசந்தியைப் பார்த்து நீ எங்கம்மாவுக்குத் துணையா எங்க வீட்டுலயே இருந்துடு …..பார்த்துக்கலாம்….சரியா என்கிறாள்.




அம்மா…நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு தெய்வம்….கண்டிப்பா உங்கள விட்டுப் போட்டு நான் எங்கிட்டும் போயிற மாட்டேன்மா.




முகம் அலம்பிக் கொண்டு பளிச்சென்று வந்து நின்ற வசந்தியை ஒரு சிநேகமான புன்னகையோடு பார்க்கிறாள் சித்ரா….வா..வந்து சாப்பிடு..வசந்தி நீயும் வா..இட்லி ரெடி…சாப்பிட அழைத்தாள் சித்ரா.




மூவரும் அதிகம் எதுவுமே பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தனர்.




முன்புற அறையில் படுத்துக் கொண்ட வசந்தி நிம்மதியில் கண்களை மூடிக் கொண்டாள் .




வசந்தி தூங்கியாச்சோ .? என்பதை நன்கு ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட சித்ரா ஒருவித பரபரப்புடன் கௌரியின் அறைக்குள் நுழைந்து பட்டென்று கதவைச் சார்த்தி தாழ்பாளைப் போட்டவள்….கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்த கௌரியை எழுப்ப முதுகில் கை வைக்கப் போக கௌரி குலுங்கிக் குலுங்கி அழவும்,பதறிப் போனவளாக, கெளரிம்மா….என் தங்கமே….என்னாச்சுடி என் கண்ணம்மா….ஏண்டா செல்லம் அழறியா….? நீ இப்படி அழம்படியா என்னாச்சும்மா..அந்தக் கடங்காரன் உன்னை என்ன செஞ்சான்….? சொல்லித் தொலைச்சுட்டு அழு…!




வெடுக்கென்று .திரும்பிப் படுத்த கௌரி….இப்ப நீ ஏன் இப்படி கத்தறே..? இந்தாத்துல நேக்கு மனசு விட்டு அழற சுதந்திரம் கூடக் கிடையாதா? ஐ நீட் சம் ப்ரைவசி…ப்ளீஸ் லீவ் மீ அலோன் …எல்லாத்துக்கும் உன்னோட பெர்மிஷன் வேணுமா? என்னைக் கொஞ்சம் தனியா நிம்மதியா அழ விடேன்…ப்ளீஸ்…!




அதாண்டி சொல்றேன்…..கௌரி…நீ அழாதே….என் கண்ணம்மா..கம்பீரமா இரு,அதில் தான் உன் அழகும் அறிவும் நிறைஞ்சிருக்கு. எதையும் எதிர்த்து நில்…1 துவளாதே..என்னவாயிருந்தாலும் என்கிட்டே சொல்லு. நோக்கு நான் இருக்கேன்….பக்கத்துணையா….சாஞ்சுக்கத் தூணா….எழுந்திரு….கையை நீட்டிய சித்ராவின் கையைப் பிடித்து எழுந்து உட்கார்ந்து அப்படியே தோளில் சாய்ந்து கொண்ட கௌரியைப் பாசத்தோடு அணைத்துக் கொண்டு தலை கோதிவிட்டு முதுகில் அன்போடு லேசாகத் தட்டிக் கொடுக்கிறாள் சித்ரா.




அம்மாவின் ஸ்பரிசம் பட்ட அதிர்வுகள் கௌரியின் இதயத்தைச் சுற்றி பாச அரண் போல உணர்ந்தவள் இனி நான் எந்த உணர்வுகளுக்கும் என் இதயத்தை நெருங்க விடமாட்டேன்…என்ற உறுதியோடு கண்களை அம்மாவின் மார்பில் முகத்தைத் தேய்த்துக் கொண்டவள் மெல்ல விலகி முகத்தை நேருக்கு நேராக நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தவள் பலவித உணர்வுகள் போட்டி போட்டு முன் நிற்க, உதடுகள் துடிக்க….”அம்மா….நாங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்போம்னு நம்பி நான் இப்போ டெல்லி போறதுக்கு முன்னாடி கார்த்திட்ட நான் என்னை இழந்துட்டேன்……அதுக்கப்பறம் இப்பத்தான் அவனைப் பார்க்கறேன்….லாவண்யாவோட புருஷனா…! பத்தே நாள்ல நினைச்சதெல்லாம் நடக்காதுன்னு புரிஞ்சு போச்சும்மா.! இப்ப நான் என்ன பண்ணணும் ? அழுத்தம் திருத்தமாகக் கேட்கும் மகளைப் பார்த்து




திடுக்கிட்ட சித்ரா, என்னடீ சொல்றே கௌரி…….நீயா..அவன் கல்யாணம் பண்ணிப்பான்னு நம்பி இப்படிப் பண்ணினே ..? இப்படி மோசம் பண்ணிட்டு வந்து இப்ப எங்கிட்ட என்ன பண்ணணும்னு கேள்வியாக் கேட்கிறே ….? என்னமோ…யாருக்கோ….நடந்தது மாதிரின்னா கேட்கிற…?




கார்த்திக்கு அப்படி ஒரு இக்கட்டான நிலைமை வரும், அதற்காக அவன் அப்பேற்பட்ட ஒரு முடிவுக்கு போயி அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான்னு நான் நினைக்கவே இல்லைம்மா.




நான் எத்தனை சொன்னேன்…..இப்படியா பண்ணினான் அந்தக் கடங்காரன். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்..அது மாதிரி உன் மனசுல ஆசையை விதைச்சு…கல் நெஞ்சுக்காரன்…அவா குடும்பமே அப்படித்தான்.




ம்மா….அவாளை ஒண்ணும் சொல்லாதே. அந்த இக்கட்டான நேரத்தில் இதை விட்டால் அவனால வேற ஒண்ணுமே முடியாதோ என்னவோ..!




மண்ணாங்கட்டி……!




மண்ணாங்கட்டியோ….தெருப்புழுதியோ…..இதுக்கப்பறமா அவனுக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு ஆயாச்சு. என்னோட லைஃப்ல இனிமேல் கார்த்தியோட சாப்டர் க்ளோஸ்ட்….! அவனைப் பத்தி இனி எதுவும் என்கிட்டே பேசாதே. நான் இன்னும் நாலு நாள்ல லண்டன் போகணும். மூணு மாசமோ ஆறு மாசமோ…! அதுக்குப் பிறகு நான் இதிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துடுவேன்.எனக்கு ஒரு சேன்ஜ் அவசியம்மா. காதல் மனசுக்குள்ள இருந்துண்டு கனக்கக் கூடாதும்மா…என்னோட இதமான…இறகுபோல லேசான மனசு தொலைஞ்சு போச்சும்மா….நானே தொலைச்சுட்டேன். என்னை நீ கொஞ்சம் எதுவும் சொல்லாதே…ப்ளீஸ். என்னை எனக்காக மட்டும் இருக்கவிடேன். என்னை மன்னிச்சுடு….! கௌரியின் கண்கள் தாழ்ந்தது.




பதில் பேச்சுக்கு இடமே இல்லாத தருணங்கள் மெல்ல நகரத் தொடங்கியது.மெல்ல மெல்ல கௌரியை விட்டு நகர்ந்து அறையை விட்டு வெளியே வந்தவள் “எங்களை இப்படி அனாதையாக்கிட்டு போயிட்டேளே …இந்த அவலத்தையெல்லாம் இருந்து பார்க்க வேண்டாம்னு தான் நீங்க இப்படி அவசரப்பட்டு போயிட்டேளா ..? நம்ப கௌரி பண்ணின காரியத்தை கேட்டேளா? எனக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற சக்தியை தாங்கோ…..அவளுக்கு இப்போ நான் தான் துணையா இருக்கணம்…மகள் படும் வேதனையை அறிந்த தாய்மனம் வேதனையோடு கணவரின் புகைப்படத்தைப் பார்த்து மனம் கலங்கி நிற்கிறாள்.கண்களில் கண்ணீர் உறைந்து காய்ந்தது.




என்னம்மா….அப்பாகிட்ட கம்ப்ளைன்டா….! அவர் புரிஞ்சுப்பார்….நீ என்னைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…..கௌரியின் குரல் முதுகுப் பக்கமாக கேட்கவும் சடக்கென்று திரும்பிய சித்ரா….




நீ இப்போ லண்டன் போகாட்டா என்னவாம்….? ஆமாம்….இப்போ இவளை…இந்த வசந்தியை கொண்டு வந்து வீட்டில் வெச்சுருக்கியே, நீ பாட்டுக்கு எல்லாத்தையும் என் தலைல கட்டீட்டு பறந்து போயிடலாம்னு பார்க்கறியா?




ம்மா…..கூல் ..! வசந்தி உனக்குத் துணை தான்…அது உனக்கு இப்பப் புரியாது. நான் லண்டன்லேர்ந்து வந்ததும் அவளுக்கு ஒரு க்ரச் வெச்சுக் கொடுத்துடறேன்…குழந்தைகளே இல்லைன்னு வாழ்க்கையை தொலைச்சவளுக்கு குழந்தைகளே வாழ்க்கை தரட்டும். நீயும்

அவளுக்கு ஒத்தாசையா இரேன். கஷ்டப் பட்டுச் சிரிக்கிறாள் கௌரி.




நீ சொல்றதை நான் கேட்கறேன்…அப்போ நான் சொல்றதை நீயும் கேட்கணும்.




நிமிர்ந்து பார்க்கிறாள் கௌரி.




ரூமுக்கு வா…என்று மகளை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள், டீ கௌரி…இந்த கார்த்தி தொலைஞ்சது நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கோ ….!.உங்கப்பாவுக்கு அந்த டெல்லி பிரசாத்துக்குத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கடைசியா ரொம்ப ஆசைப்பட்டார். அந்தப் பிரசாத் கூட அவ அம்மாவை அழைச்சுண்டு மறுபடியும் டௌரி ஒண்ணும் வேண்டாம்….ன்னு நம்மாத்துக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்க வந்தாளாக்கும் . அப்பா தான் பேசத் தெரியாமல் ஏதேதோ பேசி அவாளை அப்படியே அனுப்பி வெச்சார். இல்லாட்டா அப்பவே உனக்கும் அவருக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்திருக்குமாக்கும்..ஏன்….இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகலை…..நானே….போய்….




ஆனால்… இப்ப நானே கெட்டுப் போய் நிக்கறேன்…அதுக்கென்ன பண்ணப் போறே ..? கௌரியின் வார்த்தை அம்பாக வந்து சித்ராவைத் தாக்கியது.




கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா...எண்டே குருவாயூரப்பா.....! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் ...டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ ...! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே. நீ ஒண்ணும் கெட்டுப் போகலை. ஏதோ ...அப்படி இப்படி இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு வாழற வழியைப் பாரு. அதுக்காக அதையே நினைச்சுண்டு வேறெந்த முடிவுக்கோ அல்லது இனிமேல் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிண்டோ உன் வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்காதே.




இத்தனை நடந்திருக்கு....அவனே, உன்னோட நல்லவனாட்டமா பழகிண்டு இருந்துட்டு டக்குன்னு ஒரு நிமிஷத்தில் எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொருத்திக்கு தாலியை கட்டலையா ? சூழ்நிலை....சுண்டைக்காயிலைனு....இதே...நீ அப்படி ஒரு காரணங்காட்டி செய்துக்க முடியமா ..?அது என்ன நியாயம் ? கொஞ்சமாவது நீ அவனோட நினைவில் இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா ?




இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து என்கிட்டே அவ்வளவு தைரியமா பேச நோக்குத் தான் அவ்வளவு துணிச்சல் எங்கேர்ந்து வந்தது ? அவன் சட்டைக் காலரைப் பிடித்து நாலு கேள்வி நாக்கைப் பிடுங்கறாப்பல கேட்காம, இப்படி உன்னைத் தொலைச்சுட்டு வந்து இங்க வந்து என்னை மிரட்டி உருட்டறே ? ரொம்ப நன்னாருக்குடீ நீ பண்றது.ரொம்ப நன்னாருக்கு...பெத்த வயிறு அப்படியே குளிர்றது...! சித்ராவின் குரல் ஓங்குகிறது.




இப்ப அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே நீ..? ஐயையோ.....இப்படியாச்சே.....நான் என்ன பண்ணுவேன்னு நேரா இந்த வசந்தியை மாதிரி தற்கொலை பண்ணிக்க பீச் எங்கேன்னு தேடீண்டு ஓடச் சொல்றயா? அவன் தான் அவனோட புத்தியை காமிச்சுட்டான்...அதைப் புரிஞ்சதுக்கப்பறமும் அவனையே நினைச்சுண்டு அவனுக்காக உயிரை விட நான் என்ன பைத்தியமா என்ன ? இல்லாட்டா...என்னை இப்படிப் பண்ணீட்டானேன்னு ...அவனைப் பழி வாங்க அலையணுங்கிறியா ? அவனைப் புரிஞ்சுண்டு அவனோட சங்காத்தமே இனி நமக்கு வேண்டாம்னு நினைச்சுண்டு மனசுலேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டு நகர்ந்து வந்துட்டேன்.




இதுக்கெல்லாம் போய் சாவாளோடீ ?

வேற எதுக்கெல்லாம் சாவாளாம் ..? .நீயே சொல்லேன்..




மானம் போறது...!




மானம் போறதுக்கெல்லாம் சாக நான் ஒண்ணும் கவரிமான் ஜாதியில்ல....கௌரி..! எதையும் எதிர்த்து நின்னு வாழப் பொறந்தவளாககும்.




ம்கும்.....இப்படி உன்னைப் பெத்ததுக்கு நான் தான் எங்கயாவது போய் விழுந்து சாகணம் .




அவ்வளவு கோழையா நீ..! நோ....வே...! என்னைவிட பல மடங்கு தைரியமும், விவேகமும் உன்கிட்ட இருக்கு...ஜஸ்ட்...என்னை...நீ .நான் நினைச்சா மாதிரி வாழ விடு..! அது போதும் நேக்கு.




இப்ப வரைக்கும் நீ நினைச்சா மாதிரி தானே வாழ்ந்துண்டு வந்து இங்க வந்து நிக்கறே....! இன்னும் எங்க போய் நிக்கணும்..?




மேற்கொண்டு பேசப் பிடிக்காத கௌரி மௌனமானாள். இரவின் அமைதி இருவரின் இதயத்திலும் நிறைந்தது. உறக்கமே வராமல் படுக்கையில் படுத்துக் கொண்டதும் அவரவர் மனத்துக்குள் கேள்விகள் எழ ஆரம்பித்தது.




அம்மா....வசந்திக்கு நல்லதா நாலு புடவைகள் வாங்கணும்....அதெல்லாம் நீ கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வரவரைக்கும் அவளையும் கொஞ்சம் பார்த்துக்கோ.




கெடக்கறது கெடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனைல வெய்யின்னு....பத்தாத குறைக்கு அவளை வேற அதான் அந்த வசந்தியை வேற என் தலைல கட்டப் போறியா ? நானே பாட்டியை கூட்டிண்டு வந்து நம்மாத்தில் வெச்சுக்கலாம்னு நினைச்சேன். அம்மாவோட மடிக்கும் ஆச்சாராத்துக்கும் இவள் இங்க இருந்தால் தோதுப்படாது..




நீ சும்மா அவளைப் பத்தியே சொல்லாதே. அவளும் பாவம். வசந்தி நல்ல பொண்ணும்மா. உனக்கு ஒரு பேச்சுத்துணை. பாட்டியை கொஞ்ச நாட்கள் கழித்து அழைச்சிண்டு வந்துக்கோ. இப்ப இருக்கற நம்ம பிரச்சனை கொஞ்சம் ஓயட்டும்.




இதைக் கேட்டதும் சித்ரா எழுந்து உட்கார்ந்தே விட்டாள் ....நீ நேரங்கெட்ட நேரத்தில் லண்டனுக்குப் போய்த் தான் ஆகணுமா? நேக்கென்னமோ அது சரியாத் தோணலை. அதான் அப்பா இருக்கும்போதே ரெண்டு தடவை நீ ஆபீஸ் விஷயமா லண்டனுக்குப் போய்ட்டு வந்தாச்சே...இன்னும் என்ன ? முன்னமாதிரி நேக்கும் உடம்பு தள்ளலை.




சரி...போகலை..உனக்காக..கான்ஸல் பண்றேன்...சந்தோஷம் தானே...? மணி மூணாகப் போறதும்மா. நிம்மதியாப் படுத்துத் தூங்கு.




அடுத்த சில மணி நேரங்களில் பொழுது.புலர்ந்ததும் நாள் பிறந்தது.




வழக்கம் போல விடியற்காலையில் எழுந்து பால் பாக்கெட்டை எடுக்க வாசலுக்கு வந்த சித்ரா ஆச்சரியத்தில் திகைத்தாள்.

அச்சுப் பதித்தது போல அழகான கோலம் 'சித்ரா குட் மார்னிங் ' என்று சிரித்தபடி வாசலை அடைத்திருந்தது..




வசந்தி எங்கே..? என்று சித்ராவின் விழிகள் அவளைத் தேடியது.




பின்புற வராண்டாவில் தோய்த்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள் வசந்தி.




இத்தனை சீக்கிரம் எழுந்து இத்தனை வேலைகள் நீ செய்யணுமா வசந்தி ? காப்பி சாப்பிட்டியோ ...இரு கொண்டு வரேன் என்றபடி சமையலறைக்குள் சென்றவள் அங்கும் சுடச்சுட பால் காய்த்து, டிகாக்ஷன் போட்டு வைத்திருந்ததைக் கண்டதும் , வசந்தியா....ரோபோவா..? என்று வாய்பிளந்து நின்றாள் .




அம்மா....நான் குளிச்சுபோட்டு ஈரபுடவையை கட்டிக்கிட்டுத் தான் பாலைக் காய்ச்சினேன்மா.....என்ற வசந்தியைப் பார்த்த சித்ரா இரு வரேன் என்று உள்ளே போனவள் தனது புடவைகள் உடைகளை எடுத்துக் கொண்டு வந்து இந்தா மாத்திக்கோ....தணுப்புல ஜுரம் வந்துடப் போறது...என்றவள்.....இத்தனை பாந்தமா வேலைகள் பண்றியே ...உன்னைப்போயி உதறித் தள்ள எப்படி அவாளுக்கு மனசு வந்தது?

ஆயிரம் .சொல்லு...நல்லதுக்கும்...நல்லவாளுக்கும்....காலமில்லை...போ..! ஒண்ணு செய்யலாம்...நானே உங்காத்துல இன்னைக்கு உன்னைக் கொண்டு விடவா ?




வேண்டாம்மா....அவங்க என்னைத் தேடவே மாட்டாங்க...! எனக்கு கௌரிம்மான்னா உசுரு...நான் இங்கயே இருந்துக்கறேன்மா. என்னிய அந்த நரகத்துல கொண்டு போய் சேர்த்துடாதீங்க...வசந்தி கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்ததும்.




சரி...சரி.....இரு....கௌரி சொல்றபடியே இருக்கட்டும். என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து காலைக்கடன்களுக்காக நகர்ந்தாள் சித்ரா.
















ஆச்சு....வசந்தி இவர்கள் வீட்டுக்கு வந்து விளையாட்டுப் போல மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அவள் சொன்னது போலவே அவளைத் தேடி இது வரையில் யாருமே வராதது சித்ராவுக்கும், கெளரிக்கும் ஆச்சரியம் தான்.




கௌரியும் வாக்குக் கொடுத்தது போல வசந்திக்கு "அன்பின் வசந்தம்" என்ற மழலையர் காப்பகம் ஒன்றை அவளது வீட்டின் அருகிலேயே ஏற்பாடு செய்து கொடுத்தாள். வசந்தி...உன்னைத் தவிர இந்தக் காப்பகத்தை வேற யாரால சிறப்பாக நடத்த முடியும் ? இது நீ தொழும் ஸ்வாமி உன்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த வரம்...என்று சொன்னதும்,,,,வசந்தி கண்ணீர் மல்க கௌரியின் காலில் விழுந்தாள். கௌரி அவளை எழுப்பி அணைத்துக் கொண்டாள் .




அதே சமயத்தில், இந்த மூன்று மாதத்தில் கௌரியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள். சித்ராவிடம் கௌரி போடும் நித்ய சண்டைகள், முறைப்பது, மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வது வேறு எந்த வாக்குவாதங்கள் செய்வது என்று எதுவும் இல்லாமல் மெளனமாக நாட்கள் நகர்ந்தது.




முன்பெல்லாம் கௌரி வீட்டுக்குள் நுழைந்ததும் கூடவே வீடு முழுக்க பாட்டு சத்தம் அலறும். அத்தோடு கூடச் சேர்ந்து கௌரியும் கத்திக் கொண்டிருப்பாள். மின்சாரம் இல்லாத நேரங்களில் கௌரியின் விசில் சத்தம் வீட்டின் மூலை முடுக்கில் கூட எதிரொலிக்கும். இப்போதெல்லாம் கௌரியின் சுதந்திரமான சத்தங்கள் எதுவும் கேட்காமல் வீடே வெறிச்சென்று இருப்பதைக் கண்டு சித்ரா வசந்தியிடம் அங்கலாய்த்துக் கொண்டே இருப்பாள்.




எப்படி கலகல வென்று இருந்த பொண்ணு இப்படி ஊமைக்கிளியாய் மாறிப்போய்ட்டாளே. முந்தில்லாம் எப்பவும் அந்த ரேவதியோட ஃபோன்ல சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருப்பா...இப்ப அவளும் அமெரிக்கா போய்ட்டாளாம். என் கிட்டயும் மனசைத் திறந்து பேச மாட்டேங்கறா....எதைக் கேட்டாலும்...ம்ம்ம்ம்....ம்ஹும்...தான் பதிலா வரது. அந்தக் கடன்காரன் இப்படித் துள்ளித் திரிஞ்சுண்டு இருந்தவளை சூனியம் பிடிச்சவளா ஆக்கிட்டானே...படுபாவி...என்று ஒவ்வொரு நாளும் மனத்துக்குள் புலம்பிக் கலங்கிக் கொண்டிருந்தாள் சித்ரா.




திடுமென ஒருநாள் வீட்டு வாசலில் புது கார் வந்து நின்றதும், யாராயிருக்கும் என்று சித்ரா கண்ணாடியை சரி செய்து கொண்டு பார்க்கவும், ஓட்டுனர் இருக்கையில் இருந்த கௌரி, இந்த கார் நான் புக் பண்ணியிருந்தேன்....இப்ப வாங்கிட்டேன்...என்று சொல்லி "இந்தா சாவி...என்று சித்ராவின் கைகளில் சாவியைத் தருகிறாள்.




எதுக்குடி இப்ப கார் நோக்கு..? அதான் ஆபீஸ்லேர்ந்து தினம் கார் வரதே....இந்த ஊரு டிராஃபிக்குக்கு..இந்தக் கார் ஒண்ணு தான் கேடு..?

சித்ரா சொன்ன எந்த வார்த்தையும் அவள் காதுவரை கூட எட்ட விடவில்லை.




எனக்குத் துணைக்குத் தான் இந்தக் கார்.... நான் எல்லாம் பார்த்துக்கறேன்...சொன்னவள்....அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.




அமைதியிலும் மௌனப் போராட்டத்திலும் ஏமாற்றத்தால் ஏற்பட்ட வலியிலும் அவனை மறந்து போ மனமே..... என்று சொல்லிச் சொல்லி மனத்தைப் பழக்கிக் கொண்டிருந்தாள் கௌரி. அவள் வாங்கியிருந்த கார் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பாதுகாப்பாக, மனோ தைரியம் தருவதாகவும் உணர்ந்தாள்.




காதல் வாழ்வதைக் காட்டிலும் காதல் தோற்கும் போது தான் அது வாழ்கிறது. ஒரு மாயை மனத்தை ஆக்கிரமித்து ஆள்கிறது...வாழ்கிறது. அதே மாயை ஒரு மனத்தைக் கொன்று சாகிறது.




மனம் தான் தோற்றுவிட்ட அந்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல நகரத் தொடங்கிய போது தான் அவளுக்குள்ளேயே 'அவன்' விஸ்வரூபமாக உருவாகிக் கொண்டிருந்ததன் அடையாளங்கள் 'அவளுக்குள்ளிருந்து' கதவைத் தட்டியது.




கௌரி நாளுக்குநாள் பயந்தாள் ..! உள்ளுக்குள் உறைந்து போனாள் ...! தன்னையே வெறுத்தாள் ....! வேலையிலும் கவனச் சிதறல்கள்...




அடுத்தது என்ன..? நாளாக நாளாக அவளது மனப் போராட்டத்துக்கு விடை தேடினாள் .




யாருக்கும் தெரியாமல் லேடி டாக்டரிடம் சென்று அவள் சந்தேகப் பட்ட விஷயத்தை ஊர்ஜிதம் செயது கொண்டாள். ஒரு பெண் சந்தோஷப் பட வேண்டிய ஒரு விஷயம், தனக்கு மட்டும் கலக்கத்தை தரும் அவலத்தை எண்ணி நொந்து போனாள் .




மனம் சில நொடிகள் கலங்கினாலும், வசந்தி அன்று சொன்ன 'குழந்தை' என்ற சொல் மீண்டும் அவளுக்கு நினைவுக்கு வந்து போனது.




அம்மாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா..?.

நினைப்பதற்கே உள்ளுக்குள் பயம் கவ்வியது. ஊரைக் கூட்டுவாள்....ஒப்பாரி வைப்பாள்.




ஒருவேளை கார்த்திக்கு தெரிஞ்சால்.....?

எந்த விஷயமும் இல்லாத போதே அவளிடம் அந்த கடிதத்தை காட்டி முடிச்சுப் போட்டுப் பேசியவன், இப்போது 'இது' தெரிந்தால் அவன் என்ன சொல்வான்? என்று நினைக்கும் போதே அவள் இதயத்தை திராவகத்தால் நனைத்து எடுத்தது போல துடித்தாள்.




வேண்டாம்....அவனுக்கு எக்காரணம் கொண்டும் இதைத் தெரியப் படுத்த மாட்டேன்..திஸ் இஸ் காட்ஸ்

கிஃப்ட்...ஐ வில் கிவ் பெர்த்....! தீர்மானம் செய்து கொண்டாள். ஆனாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டிய நேரம் இப்ப வந்தாச்சு. சொல்லிடு..சொல்லிடு என்று அவளது உள் மனது பச்சைக் கொடி காண்பித்தது. எப்ப சொல்லப் போறே...? கேள்வி நாவின் நுனியில் காவல் கிடந்தது.




அந்த நேரத்துக்காக காத்திருந்தவள்.....அடுத்த நாள் காலை காப்பி குடித்து முடித்தவுடன், அம்மா....உங்கிட்ட கொஞ்சம் பேசணம்.....




'மலர் போல மலர்கின்ற

மனம் வேண்டும் தாயே...

பலர் போற்றிப் பாராட்டும்

குணம் வேண்டும் தாயே...

வரம் தரும் அன்னையே...

வணங்கினோம்...உன்னையே..."




காலை ஆறுமணி என்று டிவியில் வழக்கமாய் வரும் பாடல் உறுதி செய்தது. வசந்தி வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.




இப்பவாவது என்னை மதிச்சு பேசணம்னு சொல்றியே...சொல்லு...சொல்லு..எதாக்கும் சம்சயம்..?.ஆவலோடு டிவியை அணைத்து விட்டு வந்து கௌரியின் முன் ஆஜரானாள் சித்ரா.




நான் குளிக்கலையாக்கும்......முனகினாள் கௌரி.




பரவாயில்லை....அப்பவே நான் கீஸர் போட்டாச்சு...வெந்நீர் வீணாப் போகும், நானே குளிக்கப் போறேன்..என்னவோ பேசணம்னு சொன்னியே...அது இதுதானா?




ஆமா...நா குளிச்சு மூணு மாசமாசமாச்சுன்னு சொன்னேன். நீ தான் கவனிக்கலை.




திடுக்கிட்ட சித்ரா....அச்சச்சோ.....பகவானே.....ஏண்டி இப்படி காலங்கார்த்தால எழுந்ததும் என் தலைல அக்னியை வாரிக் கொட்டறே..? பதறிவிட்டாள்.




இப்படியாகும்னு நான் நினைக்கலை...நேத்து தான் லேடி டாக்டர்ட கன்ஃபர்ம் பண்ணீண்டேன் ..எனக்குள்ளேருந்து ஏதோ ஒரு பயம் வந்து எட்டிப் பார்க்கறதும்மா.. என்னை...அந்த பயமே பலவீனப் படுத்திடுமோன்னு பயப்படறேன்.




அந்தக் கர்மத்தை அழிச்சுடு...!




அழிச்சுட்டா மட்டும்....!




முதல்ல அந்த துரோகியோட தடயத்தை அழிச்சுடு...! அப்பறமா அடுத்ததை பத்தி யோசிக்கலாம்.




அழிக்கறதைத் தவிர்த்து வேற வழி சொல்லு..ம்மா...குரல் கம்முகிறது கௌரிக்கு.




அப்டியானா.....பெத்துக்கப் போறியா?




ஏன்....ஏன்....பெத்துக்கக் கூடாது? எனக்கும் அவனுக்கும் இந்நேரம் கல்யாணம் நடந்திருந்தா இதே விஷயம் உனக்கு சந்தோஷமாத் தானே இருக்கும்..? இதே ஒரு சாதாரண மஞ்சள்கயிறுக்கு நீ பச்சைக்கொடி காட்டுவே...! இல்லையா..?




ஒரு தப்பை சரியாக்க விதண்டாவாதம் செய்யாதே..! நம்ம சொந்தக்காரா ஒருத்தர் விடாமல் என் மூஞ்சில காறித்துப்புவா...

கௌரியைப் பார்த்தியா முத்தல்ல டௌரி தர மாட்டேன்னு வம்புக்கு நின்னா....அப்பறம்...கல்யாணம் பண்ணிக்காமல் பிள்ளையைப் பெத்துண்டாள்னு....இதுக்கும் மேல வேறென்ன வேணம் ? ஆத்து மானம் ஆகாயம் முட்டும் பறக்கும்...நோக்கு வேணாக் காலம் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்வரைக்கும் தான். சமூகம் இன்னும் முழிச்சிண்டு தான் இருக்கு.




ப்ளீஸ்..அதுக்காக ஒவ்வொரு வீடாக் கதவைத் தட்டி 'இது தான் நடந்தது ' ன்னு சொல்லீண்டு நிக்கச் சொல்றியா? எனக்கு சரின்னு படற விஷயம் அடுத்தவாளுக்கு தப்பாத் தான் படும்...இன்க்லூடிங் யூ ..! எனக்கு ஆயிரம் பேர் சப்போர்ட் பண்ணினா அது தான் சமூகம்...! இனிமேல் அதுவும் நடக்கும். எந்த ஒரு விஷயத்துக்கும் கண்மூடித் தனமா கூட்டம் சேர்ந்துடும்...அதுக்கெல்லாம் பயப்பட முடியாது.

என் மனசாட்சி தான் எனக்கு ஆர்மி.




ஆசையைப் பாரு..! அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாத பட்சத்தில் இந்த தவறை சரியா மாற்ற முடியாது.. இந்தப் பாவத்தை எந்த கங்கையில் முங்கினாலும் கரைக்க முடியாது.




சித்த முன்னாடி நீ 'அழிச்சுடு' ன்னு சொன்னியே...அது தான் கரைக்க முடியாத பாவம்மா... ஆனால்....இது....அப்படியா..? நீயே சொல்லு. என்றவள் சித்ராவின் முகம் பார்த்து கேட்கிறாள்.




அம்மா....அன்னிக்கு உன் தனிமைக்கு ஒரு துணை அவசியமோன்னு நான் தப்புக் கணக்கு போட்டேன்...ஆனால் இப்ப உணர்றேன், வாழ்க்கைத் துணைங்கறது மனசு சார்ந்த விஷயம். காலேஜ் ரூமில் பெஞ்சு மாத்தி உட்கார்ந்துக்கற மாதிரி ஈஸியான விஷயமில்லைன்னு.




மனசு ஒரு விஷயத்தை இது இத்தோட அவ்வளவு தான்னு நகர்ந்து போயாச்சுன்னா, அதுக்கப்பறம் அந்த விஷயத்துக்கு மனசுக்குள்ள பெருசா எந்த விதமான மதிப்புமே இருப்பதில்லை. நாங்க செஞ்சது தப்பு தான். ஒத்துக்கறேன். ஆனாலும் ஒரு பூரணத்தோடு கழிந்துவிட்ட அந்த நாளுக்கு இறைவனே சாட்சி கையெழுத்துப் போட்டிருக்கும் போது..நான் ஏன் .இதைப் ' பாவம்'னு நினைச்சுண்டு கங்கையில் கரைக்க நினைக்கணம். நானும் வாழ்ந்ததற்கு சாட்சியாய் குழந்தையைப் பெத்துண்டு, என் குழந்தையோட கங்கையில் மூழ்கி புண்ணியம் தேடிக்கக் கூடாதா ? மேற்கொண்டு பேச முடியாமல் திணறுகிறாள் கௌரி.




இவளை ஒண்ணுமே தெரியாத சின்னப் பொண்ணுன்னு நான் தான் நினைச்சுண்டு மெத்தனமா இருந்துட்டேன்....எவ்வளவு வித்தாரம் பேசறா..பாரேன் , மனசுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரா தன்னைத் தேற்றிக் கொண்டிருக்கையில் , கௌரி தன்னிலை மறந்து மயக்கமாகிச் சரிவது கண்டு, அச்சச்சோ...என்னாச்சுடி கௌரி , வசந்தி...இங்க வா என்று குரல் கொடுத்தபடியே தாய்மனத் தவிப்போடு ஓடிச்சென்று மகளைத் தாங்கிப் பிடிக்கிறாள்.




என்னசெய்வதென்றே அறியாத சித்ரா , பதட்டத்தில் கௌரி.....கௌரி....என்னாச்சும்மா.....இங்க பாரு..இதோ...இதோ....என்னைப் பாரேன்...கெளரிம்மா...என்று மகளின் கன்னத்தை பட படவென்று தட்டிய சித்ரா பக்கத்திலிருந்த தம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து 'சளக்...சளக்' கென்று கௌரியின் முகத்தில் தெளிக்கவும்....சட்டென்று கண்களைத் திறந்த கௌரி குழப்பமான பார்வையில் "என்னாச்சு".....? என்று கண்களைச் சுழற்றி அறையை பார்வையிட....அருகில் கவலையோடு நின்றிருந்த அம்மாவையும் வசந்தியையும் பார்த்ததும் மேலும் குழம்பினாள். அம்மா...அம்மா....என்று பிதற்றிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள் கௌரி.




கண்ணைத் திறந்து என் நெஞ்சில் பாலை வார்த்தேடி ...! இதை நான் எங்க போய் சொல்வேன்..? பகவானே...சித்ராவுக்கு வார்த்தைகள் நெஞ்சை முட்டிக் கொண்டு நின்றது.




வசந்தி... கொஞ்சம் இவளைப் பார்த்துக்கோ...நான் கௌரிக்கு குடிக்க சூடா ஒரு காப்பி போட்டு எடுத்துண்டு வரேன்...என்று பர பர வென்று அடுக்களைக்குள் போனவள் ஸ்விட்சைத் தட்டி .மைக்ரோவேவில் பாலை வைத்து ஒரு நிமிஷத்தை செட் பண்ணிவிட்டு, பூஜையறைக்குள் நுழைந்தவள் கையில் கிடைத்த பணத்தை மஞ்சள் கரைத்து நனைத்த துணியில் வைத்து வேண்டிக் கொண்டே முடிச்சுப் போட்டு கண்ணீர் மல்க குருவாயூரப்பனைத் தொழுது படத்துக்கு கீழே 'ஒழிஞ்சு'வைக்கிறாள்.மனம் பதபதைக்கிறது. கையும் ஓடலை காலும் ஓடலை என்ற நிலைமை சித்ராவுக்கு.




அடுக்களைக்கு வந்து காப்பியை கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருகிறாள். கௌரி, இந்தாக் காஃபி என்று சிறிது சிறிதாக டம்ப்ளரில் விட்டு கொடுத்தவள், பயப்படாதே ...இதொண்ணுமில்லை ..கவலைப் படாதே, தைரியமாயிரு...என்று ஆறுதலாக் அவள் தலையைத் தடவிக் கொடுத்தவள்....கௌரியின் முகத்தைப் பார்க்கிறாள். சாதாரணமாக இந்த விஷயத்தில் சந்தோஷத்தால் மலர்ந்து புன்னகை ததும்ப வேண்டிய கௌரியின் முகம்.சோகத்தில், பயத்தில் கூம்பிக் கிடந்தது. என்ன தான் வாய் வார்த்தையில் தைரியமாக பேசினாலும் உள் மனம் துவளுவது முகத்தில் நிறைந்திருந்ததை சித்ரா கவனித்தாள்.




தனக்கு மட்டும் இந்த விஷயத்தில் சந்தோஷமா என்ன? அல்லது எப்படி சந்தோஷமாக இதை ஏற்றுக்கொள்வது...?




கல்யாணச் சத்திரம் தேடித் பிடித்து, ஊருக்கெல்லாம் பத்திரிகை வைத்து அழைத்து, கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்து , பட்டுப் புடவைகள், நகைகள், என்று கடை கடையாய் தேடிப்போய் பார்த்துப் பார்த்து வாங்கி மகளை அழகு பண்ணி கல்யாணக் கோலத்தில் மாலையும் கழுத்துமாய் தழையத் தழையத் முஹூர்த்தத்துக்கு மடிசார்ப் புடவை கட்டிண்டு கழுத்து நிறைஞ்ச திருமாங்கல்ய சரடோட பக்கத்துல மாப்பிள்ளையையுமாப் பார்த்து ரசிக்க கனவு கண்டிருந்தவளை, பாலைவனத்தில் நிறுத்தி கதற வைத்தது போல ஒரே நாளில் என்னைப் பார்த்து நீ 'பாட்டி' ஆயாச்சுன்னு சொன்னாக்கா என்னவாக்கும் பண்றது? ஆசையில் மண் விழுந்ததுமில்லாமல் தலையில் இடி விழுந்தால்....!எல்லாம் என் தலையெழுத்து....இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு கல்லூளி மங்கியா மூணு மாசத்தைக் கடத்திட்டு இப்பச் சொல்றா...இப்படி தனியா விட்டுட்டுப் போன அவருக்கு வந்த சாவு நேக்கு வந்திருக்கப் படாதா..? இப்போ இப்படி வாயும் வயிறுமா இருக்கறவளை பரிதவிக்க விட்டுட்டு நான் தூக்குலையா தொங்க முடியும். பாவி மகளே..என்னை இப்படி புலம்ப வெச்சு பைத்தியம் பிடிக்க வெச்சுட்டியே...நான் என்னத்த செய்வேன்..? அக்கம் பக்கம், சொந்தக்காரான்னு இன்னும் எத்தனை இருக்கு....அவா கேள்விக்கும், பார்வைக்கும் என்னவாக்கும் பதில் சொல்றது? மனசு பூராவும் ஆக்ரோஷ அலைகள் அடித்துக் கொண்டே இருந்தது.




கௌரி...என் தங்கமே ....நமக்கு இந்த மாதிரி துரோகியோட குழந்தை வேண்டாம்டி....நல்ல லேடி டாக்டராப் பார்த்து காதும் காதும் வெச்சாப்போல ....ஒத்துக்கோடி . இப்பவும் சொல்றேன்.....அந்த பிரசாத் வீட்டுக்கு போயி அவா கிட்ட உண்மையைச் சொல்லி அவா கையில கால்ல விழுந்தாவது.......




ஸ்டாப் இட் ப்ளீஸ்.....! உனக்கு வேணா கார்த்தி துரோகியாத் தெரியலாம்...ஆனா என்னால அதை ஏத்துக்க முடியலை. அவனோட சூழ்நிலை அப்படி. என்னை அவன் வெறுக்கறா மாதிரி நடிக்கிறான். அது அவனோட சுயநலத்துக்காக. இதை நான் அன்னிக்கே புரிஞ்சுண்டாச்சு. அதனாலத் தான் என்னிக்கு அவனை கடைசியா பீச்சுல பார்த்தேனோ அன்னிக்கே என்னோட ஃபோன் நம்பரைக் கூட மாத்திட்டேன். இது துரோகத்துல உருவான கரு இல்லை... கௌரி அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியது கண்டு, சர்வ நாடியும் அடங்கியபடி இவளிடம் இனி என்னோட எந்த நல்ல வார்த்தையும் செல்லாது...என்பதை உணர்ந்து கொண்டவளாக சித்ரா அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள் .




நடப்பது ஒவ்வொன்றையும் கவனித்து வந்த வசந்தி, தனது சந்தேகத்தையும் சேர்த்து, "அய்யைய.... கெளரிம்மா....மோசம் போயிட்டாங்க போலிருக்கு. எந்த நாசமாப் போறவன் இவங்களைப் போயி இப்படி ஏமாத்தி நாசம் பண்ணீட்டு போனானோ.இம்புட்டுப் படிச்சு பெரிய உத்தியோகத்துல இருக்குற இவங்களுக்கே இந்த நெலமை....இப்படி ஒரு தங்கமான பிள்ளைய நாறடிச்ச அந்த கஸ்மாலம்...நாதாரி...அவன் குடும்பத்தோட நாசமாப் போக என்று முணுமுணுத்துக் கொண்டே விரல்களை நெட்டி முறிக்கிறாள் . மனத்துக்குள் வருத்தமும் கண்ணில் சோகமும் முகம் முழுதும் பரவி இருந்தது.




அடுத்த அறையிலிருந்து வசந்தி மனசுக்குள் புலம்புவதைப் பார்த்த சித்ரா கண்களில் கண்ணீர் மல்க , இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிப்புடாத வசந்தி.....என்று வார்த்தையால் சொல்ல இயலாமல் மெளனமாக சைகையால் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.




அம்மா....இத்தப் போயி நா வெளிய யார்கிட்டயும் சத்தியமா மூச்சு விடமாட்டேன்.நான் கௌரியம்மாவை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறேன். நீங்க கவலைப் படாமே தைரியமா இருங்க..என்று பதிலுக்கு சைகை செய்தவள் ..ஆனால்...இந்தக் குழந்தையை மட்டும் கெளரிம்மா பெத்துக்கிறட்டும். அந்தச் சின்ன உசுரை வெளிய வரவிடுங்கம்மா...! என்று அழுதபடியே ஓடிச் சென்று சித்ராவின் காலடியில் விழுந்து தேம்புகிறாள் வசந்தி.




இதைப் பார்த்த கௌரி, என்னை நம்பி இருக்கும் உயிரை கொல்லும் அளவுக்கு மனசாட்சி இல்லாதவங்க இல்லை. என்னோட இந்தக் குழந்தை பிறக்கும். நீ அழாதே எழுந்திரு வசந்தி. எங்கம்மாவும் நல்லவங்க தான். நான் தான் உனக்கு முன்னமே சொன்னேனே , மனசுக்குள் எதையும் வெச்சுக்க மாட்டாங்க. நெனைச்சதை மறைக்காமல் சொல்லிடுவாங்க.




என்னடி கௌரி....விஷயம் இப்படி கைமீறி அம்பலமாயிண்டு இருக்கே....சித்ரா வாயில் தன் புடவைத் தலைப்பை வைத்து மூடியபடி விம்முகிறாள்.




அதற்குள் வசந்தி வாசலில் வந்து விழுந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டியபடியே...."அம்மா...இங்க பாருங்க ஒரு பொண்ணு பண்ணியிருக்குற காரியத்தை...இதே போலத் தான் ...அவ காதலன் ஊட்டாண்ட போய் உண்ணாவிரதம்னு குந்திக்கிச்சாம்..நீங்க கூட அப்படி செய்து அந்தாள தெருவுக்கு இழுககோணம் , சும்மா விடக்கூடாது..." என்ன சொல்றீங்க..நா சொல்றது கரீட்டு தான...!




போடி பைத்தியம்....அவனைத் தெருவுல இழுத்தால் இவளும் தான் தெருவுக்கு வரணம். அவனுக்கு வேற கல்யாணமே ஆயாச்சாம். அதான் பிரச்சனை. ஆமா உன் குடும்பத்துல நடந்த அநியாயத்துக்கு நீ ஏதாவது இது மாதிரி செய்ய முடிஞ்சதா,அப்படித்தான். இதெல்லாம் போயும் போயும் நம்மாத்துலையா நடக்கணம்....என்று ஓச்சை எடுத்து அழ ஆரம்பிக்கிறாள் சித்ரா.




ச்சே......அம்மா....கொஞ்சம் சும்மா இரேன். இப்ப என்னாயிடுத்துன்னு இப்படி அழுது ஆகாத்தியம் பண்றே ? கௌரியின் கோப முகம் சித்ராவை நோக்கியது. நான் இனிமேல் எதுக்கும் அழ மாட்டேன். அதே மாதிரி, நீ தான் சொல்லுவியே, வாழ்கையில் எந்த கஷ்டமும், சுகமும் நமக்கு மட்டும் முதலாவதா வரது கிடையாதுன்னு. இந்தாத்தில் இனிமேல் யாரோட அழுகைச் சத்தமும் கேட்கப் படாது...புரிஞ்சுதா?




பொறக்கப் போற குழந்தையின் அழுகை சத்தம் கூடவா? சித்ரா சுமுகமான சூழ்நிலைக்கு நிலைமையை மாற்ற நினைத்தவளாக முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்தபடி கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே கேட்கிறாள்.




அம்மா....அம்மா....உன்னை நேக்குத் தெரியாதா ? நான் உன் பொண்ணும்மா.....நீ வெளில தான் பலாப் பழம் மாதிரி முள்ளு முள்ளா....ஆனால் உள்ளுக்குள்ள எத்தனை இனிமையானவள்மா நீ...!உன்னால் யாரோட மனத்தையும் காயப்படுத்த முடியாது. அப்பறம் எதுக்கு வீணா ட்ரை பண்றே ? ஆரம்பத்துலயே விட்டுக் கொடுத்துட வேண்டியது தானே? கௌரி சித்ராவை கட்டிக் கொள்கிறாள்.




அதானே....பார்த்தேன். அப்பறம் நேக்குன்னு இருக்கற பொய் கெளரவம் என்னாறதாம்.? சித்ரா , வாய் வார்த்தைக்கு மகளுக்காக இந்த வார்த்தையைச் சொன்னாளே தவிர உள்ளுக்குள் நெருப்பு கனன்று கொண்டிருந்ததை அவள் மட்டுமே அறிவாள் .




சித்ரா சொன்னதைக் கேட்ட வசந்தியும் குபுக் கென்று சிரிக்கிறாள்.




நீண்ட நாட்கள் கழித்து அவள் சிரிப்பதை அவளே உணர்ந்தவள் கண்களில் பனித்த கண்ணீரை விரல்களால் தட்டிவிட்டு சிறிது பயம் கலந்த வெட்கத்தோடு சித்ராவை பார்க்கிறாள்.




மூவருமே....சூழ்நிலையை மறந்து தனை மறந்து ஏதோ நல்ல காரியம் முடிந்து விட்ட நிறைவில் சிரிக்கிறார்கள். மூவரின் மனமும் லேசாகிறது. , கௌரி....இன்னைக்கு நீ லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோட்டியா.....சாயந்தரமா டாக்டரைப் போய் பார்த்துட்டு வரலாம்...சரியா... என்று கௌரியைப் படுக்க வைத்த சித்ரா ,"வசந்தி...நீ போயி இன்னைக்கு உன்னோட க்ரெச்சை கவனிச்சுக்கோ.

.இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி வேற.....அந்தப் பிள்ளையார் தான் நம்மள இந்தப் பெரிய தர்ம சங்கட நிலைமைலேர்ந்து நிவர்த்தி பண்ணணம்.




வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவும், வசந்தி வாசல்ல யார் வந்திருக்கான்னு கொஞ்சம் போய் பாரேன்..சித்ரா சொன்னதும் வசந்தி,

நேரங்கெட்ட நேரத்தில் தான் இப்படி யாராச்சும் வந்து நிப்பாங்க? நிம்மதியா அளுவக் கூட முடியாது போல....பால்காரன், பேப்பர்காரன், குப்பைக்காரன்,அயர்ன்காரன்னு .....அலுத்துக் கொண்டே சென்று கதவைத் திறந்ததும்.,




வாசற்படியில் இரண்டு பேர்கள் நின்றுகொண்டு, முகத்தில் இவளை எதிர்பார்க்காததால் ஒரு தயக்கத்துடன், நாங்க பக்கத்து வீடு தான். கௌரி இருக்காளா? என்று உரிமையோடு அழைத்ததும் இல்லாமல்...."சித்ரா மாமி இருப்பாளே....எங்கே மாமியை இப்போல்லாம் கண்ல படறதே இல்லை....என்று கண்கள் அலைபாய கொஞ்சம் சத்தமாக கேட்கவும்,




அவளருகில் நின்றிருந்த அவளது கணவர், "கொஞ்சம் மெல்லமாப் பேசுடி கோதை.....நோக்கு அத்தனையும் மறந்து போச்சா...கௌரியோட அப்பா ஈஸ்வரன் தவறிப் போய்ட்டாரோல்லியோ, மாமி கவலைல இருப்பாளேடி" தன் மனைவியின் காதைக் கடிக்கிறார் வந்தவர்.




அதற்குள் வசந்தி உள்ளே போய் சித்ராவிடம் "பக்கத்துவீட்டுக் காரங்களாம்...புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வந்திருக்காங்க ..என்ன சொல்ல....".என்று சித்ராவிடம் கேட்கவும்.




இரு...வரேன்.....என்று வாசல் வராண்டாவரை வந்து...வாங்கோ...வாங்கோ.... கோதையா ...ஆச்சரியமா இருக்கே....? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் மலர்ச்சியை நிரப்பிக் கொண்டவள் சித்ரா , நான் வேற யாரோன்னு நெனைச்சேன்...ஆத்துல எல்லாரும் சௌக்யமா ? ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பார்த்து...சித்ரா குசலம் விசாரித்துக் கொண்டே உட்காருங்கோ....உட்காருங்கோ என்று எதிர் சோபாவில் தானும் உட்காருகிறாள்.




சிறிது நிமிட இடைவெளிக்குப் பிறகு...ஆமா....திடீர்னு என்ன விஷயமா வந்த்ருக்கேள்...?




கௌரியைப் பார்க்கணம் மாமி. வேற ஒண்ணுமில்லை மாமி..இவர் என்னை 'டாட்டா ட்ரிபிள் ஏ இன்ஸ்யூரன்ஸ்' கம்பெனில டெவெலப்மெண்ட் ஆஃபீசரா சேர்த்து விட்டிருக்கார். எங்க கம்பெனில நல்ல நல்ல பென்ஷன் பிளான் , இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்ஸ், டாக்ஸ் பெனிஃபிட் ப்ளான்ஸ் எல்லாம் கூட இருக்கு. அதான் கௌரியைப் பார்த்து அவள் ஆபீசுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு எனக்கு அவ கையால ஒரு பிசினெஸ் கொடுக்கச் சொல்லி கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம். கௌரி புதுசாக் கார் வாங்கிருக்கா போலருக்கே. சூபெர்ப் கலர். சொல்லிக்கொண்டே ஒரு ஃபைலில் இருந்து சில ஃபாரம்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கோதை. கண்கள் கெளரியைத் தேடிக் கொண்டிருந்தது.




அருகிலிருந்த அவளது கணவர்,...'இதெல்லாம் பொம்பளைங்கள் சமாச்சாரம்' என்று தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல , டீபாயிலிருந்து ரீடர்ஸ் டைஜெஸ்ட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தார்.




இதைக் கேட்டதும் சித்ரா, மனசுக்குள் ஏதோ கணக்குப் போட்டவளாக ....ஆமாம் கோதை....புதுசா கார் வாங்கிருக்கா கௌரி..என்னவோ பிரமோஷனாம் ...அது .சரி.. உன்னோட இன்சுரன்ஸ் வேலைக்கு என்னோட வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்.....கௌரி ஏதாவது பிளானில் இன்வெஸ்ட் பண்ணினாலும் பண்ணுவா....நீயே...அப்பறமாஇன்னொரு நாள் வந்து கேளேன்...அவள் இன்னைக்கு தலை வலின்னு நன்னாத் தூங்கிண்டு இருக்காள்.நேக்கு இதொண்ணும் சரியாத் தெரியாது, மழுப்பி பேசி விட்டு மெல்ல எழுந்து இருங்கோ...காப்பி சாப்ட்டுட்டு போலாம் என்றபடி சமையலறை நோக்கிச் செல்கிறாள் சித்ரா.




கௌரி அறையில் இருந்து எட்டிப் பார்த்து வெளியில் வந்தவள், மென்மையான குரலில், சௌக்கியமா ஆன்டி, ? உங்க குரல் கேட்டு வந்தேன். நீங்க பேசினதைக் கேட்டேன்...பட்...இப்போ தான் நான் எங்க ஆஃபீஸ் கொலீக் மூலமா இன்வெஸ்ட்மென்ட் ப்ளானில் கமிட் பண்ணிண்டேன். அதனால எனக்கு இப்ப வேற எந்த ஸ்கீமும் வேண்டாம்...ஐம் சாரி....நான் உங்களை இந்த விஷயத்தில் டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிருந்தா மன்னிச்சுக்கோங்கோ. காஃபி சாப்பிடறேளா ?என்றதும்,




இப்பத்தான் சாப்ட்டுட்டு வரோம்.....சரி...அப்ப நாங்க கிளம்பறோம்...சித்ரா மாமி வரோம்..என்று பொதுவாக குரல் கொடுத்துவிட்டு ஃ பைலில் பேப்பர்களை செருகி விட்டு வேகமாக வெளியேறுகிறாள் கோதை. படியிறங்கும்போதே ....."ம்ம்ம்....கௌரிக்கு கர்வம் ஜாஸ்தியாயிடுத்து...அவ முகத்தைப் பார்த்தாலே எழுதி ஒட்டியிருக்கு....இல்லையான்னா...இனிமேல் இங்க யார் வருவா? " என்ற மனைவியின் சொல்லுக்கு மந்திரமாக "ம்ம்ம்...ம்ம்ம்....." என்றார் அவர்.




இரண்டு தம்ளர் காப்பியோடு வந்த சித்ரா, ஏண்டி.....வந்தவாள ரெண்டே வார்த்தைல அனுப்பிச்சுட்டியா ? ஏதாவது ஒண்ணு எடுத்துண்டு இருக்கலாமோல்லியோ...? நாளப்பின்ன நம்மளப் பத்தி இவா அவதூறாப் பேசமாட்டா இல்லையா? மனுஷா வேணம். ஆனா, நீயும் உங்கப்பா மாதிரியே வீடு தேடி வந்தவாள வெரட்டி அடிப்பதில் கெட்டிக்காரி தான்.




தூக்கமே வராமல் தவிச்சுண்டு இருக்கறவளப் பார்த்து நீ நன்னாத் தூங்கிண்டு இருக்கான்னு சொல்றே.....மணி எட்டாறது....அவா என்ன நினைப்பா..அதும் இந்தக் கோதை மாமிக்கு ஒண்ணுமே இல்லாட்டாலும் வண்டிக் கதை பேசுவாம்மா.....இப்ப ஒண்ணு எடுத்துக்கறோம்னு வெய்யி....தெனம் ஏதாவது சொல்லீண்டு, ஹெல்த் செக் அப், அது இதுன்னு வந்துண்டே இருப்பா. இருக்கற இருப்புல இவா வேற எதுக்கு? அதான்....நீ .விடு. தப்பா நெனைச்சா என்னை மட்டும் தானே நினைப்பா.நெனைச்சுட்டுப் போறா . ஆனால் இவா பிடுங்கலில் இருந்து இப்போ நான் தப்பிச்சேன்.




இதைக் கேட்ட வசந்தியும்....ஆமாம்மா....நான் கூட நெனைச்சேன் வேளை கேட்ட வேளையில இதென்ன தொந்தரவுண்டு, ஆனா கௌரி மேடம் கரீட்டாத் தான் சொல்லி அனுப்பினாக, என்றாள் .




அம்மா....இப்போ எனக்கு கொஞ்சம் தேவலை. நான் பாட்டுக்கு எப்பவும் போல ஆபீஸ் போறேன்.வேலைகள் நிறைய இருக்கு. என்று கிளம்பத் தயாரானாள் கௌரி.




வேண்டாம்டி , நான் சொல்றதைக் கேளு....டாக்டரை வேற பார்க்கணம். இன்னைக்கு மட்டும் லீவப் போடு. நமக்கு மனசுக்கு கொஞ்சம் அமைதி வேணம் கௌரி.




இன்று, வீட்டிலேயே இன்னும் சற்று நேரத்தில் அவர்களது அமைதி மொத்தமாகக் குலைந்து போகப்போவதை அறியாத சித்ரா.




வசந்தி காலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு சித்ரா தந்த டிபனை சாப்பிட்டு விட்டு..."வரேன்மா..."எதுனா இருந்தா சொல்லுங்க ஓடியாறேன்" என்று சொல்லிவிட்டு ஹவாய் செருப்பில் காலை அவசர கதியில் நுழைத்துக் கொண்டவள் கேட்டைத் தாண்டி தெருவரை நடந்து செருப்பைத் தேய்த்து தேய்த்து சரி செய்து கொண்டே நடந்தாள் .




வீட்டினுள் ஒரு அமைதி....படர்ந்து பகலே.... இருளாக இருண்டு கிடந்தது. கௌரியும் சித்ராவும் ஒருவருக்கொருவர் எதையும் பேசிக் கொள்ளாமலும் வேறெந்த வேலைகள் எதுவும் செய்யாமலும் உட்கார்ந்திருந்தார்கள். 'டைமெக்ஸ்' சுவர் கடிகாரம் மணி மூன்றாகிப் போனதை ராகம் போட்டுப் பாடியது.




அப்போது வாசலில் 'இண்டிகா கார்' வந்து ஹாரன் அடித்து நின்றது. சித்ரா கண்ணாடி ஜன்னலைத் திறந்து ஜன்னல் கம்பியூடே முகத்தை அழுத்தி பார்க்கிறாள். "யாராக்கும் நம்மாத்துக்கு வரது?"




அவளது ஆவலில் ஆஸிட் வீசியது போலிருந்தது..அவள் கண்ட காட்சி.




காரிலிருந்து இறங்கியவர்கள் வேறு யாருமல்ல. கல்யாணியும், லாவண்யாவும்....கூடவே இன்னொரு பெண்மணி....லாவண்யாவின் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று முகச்சாயல் முத்திரை ஓட்டுப் பதித்தது.




இவாள்லாம்....இங்க ஏன் வந்திருக்கா..? மனசுக்குள் எழுந்த கேள்வியும், கூடவே...வரட்டும்...நல்லவேளையா வந்து என்கிட்டே மாட்டி யிருக்கா .....கேட்குற கேள்வில...என்று கொண்டே வாசல் கதவைத் திறந்தவள்....பார்வையில், இங்க ஏன் வந்தேள் ? என்ற கேள்வி இருந்தது.




பேச எந்த வார்த்தையும் வராத கல்யாணி......"உங்க பொண் கௌரி, இன்னும் கார்த்தியோட பேசிண்டு இருக்கா...இது நல்லதுக்கில்லை...சொல்லிட்டேன்.....என் பையனுக்கு கல்யாணம் ஆயாச்சுன்னு தெரிஞ்சும்..இது நடக்கறதாக்கும் .." இது கல்யாணி.




கார்த்தியை மாதிரியே நீங்களும் இல்லன்னு பதில் சொன்னா, நாங்க விட்டுடுவோமாக்கும்..அவனே ஒரு ஃப்ராடு " இது லாவண்யாவின் அம்மா.




திமிராக நின்று கொண்டிருந்தாள் லாவண்யா. அவள் முகத்தில் துணிச்சல் துணை இருந்தது.




எங்கே கூப்பிடுங்க உங்க கௌரியை.....இருவரும் சேர்ந்து ஒரே வார்த்தையைச் சொல்லவும்.




சித்ராவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது."என்ன நெனைச்சுண்டு இங்க வந்து இந்த மாதிரியெல்லாம் பேசறேள்....?"

உங்க பையன் என்ன அவ்வளவு பெரிய உத்தமனா? அவனே ஒரு அயோக்கியன். ஒரு பெண்ணோட வாழ்கையை நாசமாக்கிட்டு அவன் வேற எவளுக்கு வாழ்க்கை கொடுத்தா என்ன கொடுக்காட்டா என்ன? என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் தொனியில் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்கிறாள் சித்ரா.




யாரோட வாழ்கையை யாரு கெடுத்தா? கெடுத்தது யாரு...உங்க பொண்ணு தான்....பீச்சுலயும் பார்க்குலயும் பேசிப் பேசி......அவன் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி....இதெல்லாம் உங்களுக்கே நன்னாருக்கா....இன்னும் எழுதவே கூச வைக்கும் வார்த்தைகளைக் கேட்டதும்...




சித்ரா, வெறியோடு சொன்னாள் ....."எல்லாரும் போங்கோ வெளியே..."




இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை...இருந்தாலும் எழுந்தார்கள்..."கூப்பிடுங்க கௌரியை..."




அதற்குள் கௌரியே வெளியே வருகிறாள். முகத்தில் சோகத்தின் சாயல் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு திமிரின் சாயல். கையில் அன்றைய நாளிதழின் பக்கம்.




இந்தாங்கோ....இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கோ...! செய்தித் தாளை முகத்துக்கு நேராக நீட்டினாள் கௌரி.




வேண்டா வெறுப்பாக அதை அவளது கையிலிருந்து பிடுங்கிப் படிக்கிறாள் கல்யாணி.




"திருமணம் முடிக்குமுன் "மூன்று மாதங்கள்" கர்ப்பவதியாக்கிவிட்டு திருமணம் செய்ய முடியாது என்று நழுவிய தன் காதலனின் வீட்டின் முன்பு பட்டதாரிப் பெண் நியாயம் கேட்டு தொடர் உண்ணாவிரதம் "




கொட்டை எழுத்தில் படங்களோடு வந்திருந்தது அந்த செய்தி.




படித்துவிட்டு அந்த செய்தித்தாளை சுருட்டி வீசி எறிந்த கல்யாணி, இதை எதுக்கு என்கிட்ட தராள் ..? கேள்வியோடு மற்ற இருவரின் முகத்தைப் பார்க்கவும்.




நாடு இப்படியெல்லாம் கூட போயிண்டிருக்கு. நான் கார்த்திக்கு கல்யாணம் ஆயாச்சுன்னு தெரிஞ்சதும் அவனை விட்டு விலகியாச்சு. நான் அவனைக் கடைசியா பெசன்ட் நகர் பீச்சுல பார்த்தப்போ அவன் ஏதோ அவசரத்தில் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னான்...அந்தக்ஷணமே நான் கார்த்தியை ." நீ உன் மனைவிக்கு உண்மையா இரு"ன்னு சொல்லிட்டு வந்தாச்சு.




அவன் லாவண்யாவுக்கு ஒரு நல்லது செய்யணம்னு எனக்கு துரோகம் செய்தான். ஆனால் என்ன, அவன் வாழ்க்கை நன்னாருக்கணம்..அதனாலத் தான் நான் அப்படியே ஒதுங்கிட்டேன் .இப்போ என்னோட ஃபோன் நம்பர் கூட அவனுக்குத் தெரியாது.எனக்கும் அவனுக்கும் ஒண்ணுமே இல்லாத போது , உங்க யாருக்கும் என்னோட வந்து பேச ஒண்ணுமேயில்லை ...இனிமேல் இங்கே எதையும் கேட்டுண்டு யாரும் வரவேண்டாம்....ப்ளீஸ்.....என்று சொல்லியபடி வாசலைப் பார்த்து கைகளை நீட்டுகிறாள்.




என்னடி....அவன்...இவன்னு ஏக வசனத்தில் பேசறே..? என்னமோ நீ பெத்துப் பேர் வேச்சாப்பல..திமிர் பிடிச்சவளே....என்றபடியே , வந்தவர்கள் மூவரும் கௌரியின் முகத்தில் அறைந்த வார்த்தைகளில் உறைந்து போய் அவமானத்தில் குறுகி வெளியேறினார்கள்.




சற்றைக்கெல்லாம் அவர்கள் வந்த கார் சிலுப்பிக் கொண்டு கிளம்பிச் சென்றது.




லாவண்யாவின் மனத்திற்குள் மட்டும் நிம்மதி தொத்திக் கொண்டது.




அவர்கள் சென்றதும், சித்ரா, கௌரியைப் பார்த்து பிலு பிலுவென்று பிடித்துக் கொள்கிறாள்.....நீ ஏன் சொல்லலை.....?"




அம்மா...இப்ப இதைச் சொல்றதால என்ன ஆகப் போறது..? அவனே நான் இல்லைன்னு சொல்லிட்டான்னு வெச்சுக்கோ....தன்னை காப்பாத்திக்க என்ன வேணா செய்வான்....இல்லையா? அப்போ எனக்கு மன ஏமாற்றம்....!வேண்டாம் ...நான் இதைச் சொல்லியிருந்தால் வீணாக அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகமாகும்.அவன் கஷ்டப்பட்டு செய்த ஒரு நல்ல காரியத்துக்கு மதிப்பு இல்லாமல் போகும். அதனால் தான்...என் சுமையை நான் சுகமாக சுமந்துட்டுப் போறேன்.எனக்கு இதில் வருத்தமில்லை..இனி எனக்கு அவன் தேவையுமில்லை. கௌரி தெளிவான பதிலில் சித்ரா திகைக்கிறாள்.




அமைதியாக இருந்த வீடு அமர்க்களைபட்டு மீண்டும் அமைதியானது. மனத்தின் அதீத அலுப்பில் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாலும் கௌரிக்கும்,சித்ராவுக்கும் மனசு நிறைந்த கேள்விகள்...அத்தனையும் விடை தெரியாத கேள்விகள்..! புரண்டு புரண்டு படுத்தாலும் புலப்படாத பதில்கள் அவர்களை உறங்க விடாமல் அலக்கழித்தது . இன்னைக்கு கார்த்தால வந்த கோதை மாதிரி இன்னும் நம்ப சொந்தக்காரா....இப்படி இன்னும் எத்தனை பேரை சந்திக்கணமோ...ஒரு நாள் போறதே உம்பாடு எம்பாடா இருக்கே....இன்னும் ஏழு மாசங்கள்...! எப்படித் தான் கழியப் போறதோ..? அதுக்கும் அப்பறம்....?




கௌரி...கௌரி....எழுந்திரு.....கிளம்பு....ஒரு தடவை லேடி டாக்டரைப் பார்த்துட்டு வந்துடலாம்...சித்ரா மகளை எழுப்பிக் கொண்டிருந்தாள்.




இந்தா..இந்த கர்நாடக சில்க் புடவையை கொடுத்து இதைக் கட்டிண்டு வா. முதல் முதலா கார்ல வெளில போறோம்....எல்லாம் சுபமா நடக்கணம்னு பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு அங்கேர்ந்து சத்யம் ஹாஸ்பிடல் போகலாம்...நேக்கு நன்னாத் தெரிஞ்ச டாக்டர் மாலதி அங்க தான் கைனகாலஜிஸ்ட்டா இருக்கா, சீக்கிரமா கிளம்பு கிளம்பு...சித்ரா அவசரப் படுத்தவும் கௌரி எழுந்து கொள்கிறாள்.




சோ ஃ பா மேலே மரகதப் பச்சைக் கலரில் அரக்கு பார்டரில் அழகாக அன்னங்கள் அணிவகுத்து கெளரிக்காக காத்திருந்தது பட்டுப் புடவை.




என்னம்மா நீ....இதையா கட்டிண்டு வரச் சொல்றே...போற இடத்துக்கும் போட்டுக்கற உடைக்கும் பொருத்தம் வேண்டாமா..? எனக்கு சிம்பள் சுடி போதும்.




ஆமா....வேண்டாததுக்கெல்லாம் பொருத்தம் பாரு. பார்க்க வேண்டிய நேரத்தில் கோட்டை விட்டுடு..நீ எதையோ உடுத்திக்கோ...என்று போறபோக்கில் அந்தப் புடவையை அப்படியே மடித்து அலமாரியில் அடுக்கினாள் .




சிறிது நேரத்தில் கார் கிளம்பி கோயம்பேடு வழியாகக் கடந்து குருங்கலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நின்றது. கௌரி அருகில் இருந்த அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடி இறங்கு...கோயில் வந்தாச்சு...என்கிறாள்.




இது லவ குச கோயிலல்லவாடி ....? என்று சொல்லிக்கொண்டே இறங்குகிறாள்.




ம்ம்ம்.....என்ற கௌரி அம்மாவின் கைகளைப் பற்றியபடி நடக்கிறாள்.




கோயில் தரிசனம் முடிந்து கார் நேராக ' சத்யம் மருத்துவமனை' பார்கிங்கில் சென்று மூச்சு வாங்குகிறது.




டாக்டர் ஆப்பரேஷன் தியேட்டரில் இருக்கிறார் கொஞ்ச நேரம் உட்காருங்க என்று ரிசெப்ஷனில் இருந்த பெண் இவர்களிடம் சொல்லிவிட்டு கண்களால் கௌரியை ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள் அவள்.




இனம் புரியாத உணர்வில் நெளிந்த கௌரி...ம்ம்மா...இந்த ஹாஸ்பிடல் நேக்குப் பிடிக்கலை...வா போலாம்...என்று எழுந்திருக்கிறாள்.




அதே நேரம் இறுதியாக கைகளைத் துடைத்தபடியே வந்த டாக்டர் மாலதி, சித்ராவைப் பார்த்து, உன் டாட்டரா ...வா..வா..என்று அறைக்குள் நுழைந்து கொள்ள இருவரும் பின் தொடர்கிறார்கள்.




டாக்டர் மாலதியில் எதிரில் சித்ராவும், அருகில் கௌரியும் அமர்ந்து கொள்ள.,




டாக்டர் கேட்ட கேள்விகளுக்கு கௌரி பதில் சொல்லிக் கொண்டே வர,




ம்ம்...வா டெஸ்ட் பண்ணிடலாம்....என்றவள்...கௌரி அங்க போங்க..என்று அங்கிருந்த வெளிர் நீல நிற திரையின் பின்னால் காண்பிக்கவும்.




கௌரி அங்கு சென்று படுத்துக் கொள்கிறாள்.




கையுறைகளை கழற்றி குப்பை கூடையில் வீசிவிட்டு, சிரித்தபடியே..."கன்ஃபர்ம் " சித்ரா நீங்க பாட்டியாகப் போறீங்க..கங்கிராஜுலேஷன்ஸ்...வாம்மா கௌரி..உட்கார். என்றவள் அவளது சீரியஸான முகத்தைப் பார்த்ததும்.




எனி ப்ராப்ளம்....!




டாக்டர்....இந்தக் கருவை அழிச்சுட முடியுமா உங்களால..? சித்ரா கேட்டதும் கௌரி விருட்டென்று எழுந்திருக்கிறாள்.




வொய் ....?




விஷயங்கள் மெல்ல மெல்லத் தயங்கி தயங்கி வெளியே வருகிறது.....கௌரியின் சம்மதம் இல்லாமல்.




ஐ...ஸீ .....பட் நொவ் திஸ் இஸ் டூ லேட்.. டி & சி வேணாப் பண்ணலாம்...அதுவும் இன்னும் கொஞ்சம் எர்லியா இருந்திருக்கணம். இப்பக் கூட இதே மாதிரி ஒரு கேஸ் தான், முடிச்சுட்டு வரேன். ஆனால் இப்போல்லாம் தைரியமா பெத்துக்கவும் செய்யறாங்க. அதே சமயம் கலைக்கவும் தயாரா இருக்காங்க.அதெல்லாம் அவங்கவங்க மனநிலமை, சிட்டுவஷன் பொறுத்தது. யூ வெயிட் கௌரி.

எனக்கென்னமோ இது ட்வின்ஸ் மாதிரி தெரியுது....எதுக்கும் இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்...கூல் கௌரி...




டாக்டர் மாலதி பேசிக் கொண்டிருக்கும் போதே, கௌரி அந்த அறையை விட்டு வெளியேறி வரும்போது நிறைய பெண்கள் அவரவர் கணவனோடு பாசத்தோடு தங்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தபடி தனக்குள் தலை குனிந்தபடி கார் வரை சென்று சித்ராவுக்காக காத்திருந்தாள்.




கௌரி....கௌரி...என்று அரக்க பரக்க காருக்கு அருகில் வந்த சித்ரா,என்னடி...நீ பாட்டுக்கு எழுந்து வந்துட்டே...அங்க அவ பாட்டுக்கு ரெட்டைக் குழந்தைகள்ன்னு கல்லைத் தூக்கிப் போடறா...அதைத் தெரிஞ்சுண்டு தான் நீ லவ குச கோயிலுக்கு அழைச்சுண்டு போனியா....? வேண்டாம்டி ..இந்த விஷப் பரீட்சை.....சொன்னாக் கேளுடி கௌரி..




ஏறு......! கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கௌரியின் கனமான குரல்.




டப்...டப்....பென்று பெரும் சப்தத்துடன் காரின் கதவுகள் அடித்துச் சாத்தப்பட்டு அசுர வேகத்தில் கிளம்பி வீட்டை நோக்கிப் பறக்கிறது. வழி பூரா நிறைய ஹாரன்கள் .




கௌரி...நான் சும்மாத்தான் அந்த டாக்டரிடம் கேட்டுப் பார்த்தேன்...என்று சமாதான வார்த்தைகள் சொல்கிறாள்.




இப்ப அனாவசியமா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு....சொல்ல ஆரம்பிச்ச...! கௌரி சொல்லியபடியே சித்ராவை பார்க்கிறாள்.




நீ முதல்ல ரோட்டைப் பார்த்து வண்டிய ஒட்டு...இருட்டு வேற..மத்ததை ஆத்துக்கு போய் பேசிக்கலாம்...என்ற சித்ரா. டாக்டர் கிட்ட பொய் சொல்லக் கூடாதுன்னு தெரியாதா?




ஆனால் இந்த சத்யம் ஹாஸ்பிடல் வேண்டாம்...இந்த மாலதி டாக்டரும் வேண்டாம்...மா.




ஏன் கௌரி...?




குழந்தைகளோட கருவை கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் அழிக்கும் இந்த டாக்டரின் முதல் ஸ்பரிசம் என்னோட குழந்தைகள் மேல பட்டுடக் கூடாது. பேரு தான் சத்யம்.....பண்றதெல்லாம் பாவம்...பொய்..!கௌரியின் குரலில் வெறுப்பு மிகுந்தது.




சரிடி....உன்னிஷ்டம்....சித்ரா சீட்டின் பின்புறம் தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.




காருக்குள் எஃப் எம் ரேடியோவில் வாணிஜெயராமின் குரல் கணீரென்று கேட்டது.




"வேறு இடம் தேடித் போவாளோ....

இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ

நூறு முறை இவள் புறப்பட்டாள் ...- விதி

ஊழ்வினையில் இவள் அகப்பட்டாள் ..

வேறு இடம் தேடித் போவாளோ.....! "




பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவின் கண்களுக்குள் நடிகை லக்ஷ்மிக்கு பதில் "கௌரி தெரிந்தாள் "




நீண்ட வருடங்களுக்குப் பிறகு கேட்ட பாடல்.....இசையை மீறி கண்களில் கண்ணீரை வரவழைத்தது அவளுக்கு.




"சிறு வயதில் செய்த பிழை...சிலுவையெனச்

சுமக்கின்றாள்.....இவள் தரவில்லை பெறவில்லை

தனிமரமாய் நின்றாளே ...தரவில்லை பெறவில்லை...

தனிமரமாய் நின்றாளே ...வேறுஇடம் தேடிப் போவாளோ...




பாடிக் கொண்டிருந்த ரேடியோயை டக்கென்று அணைத்தாள் கௌரி.




அதைத் தொடர்ந்து க்ரீச் சென்று ப்ரேக் போட்டு கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. லேசாக தூக்கிப் போட்ட சித்ரா...வந்தாச்சா....? என்கிறாள்.




ம்ம்ம்..வீடு வந்தாச்சு மெல்ல இறங்கும்மா....ன்னு சொன்னபடியே தானும் மெல்லவே காரை விட்டு இறங்கிய கௌரி..வீட்டுக்குள் நுழையும் போது லேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

"இரட்டைக் குழந்தைகள்" டாக்டரின் குரல் அவள் காதில் எதிரொலித்தது. . என் அம்மாவுக்குக் கூட கிடைக்காத பாக்கியம்.ஆனாலும், கண்கள் லேசாகக் கலங்கியது.மனம் கனத்தது அவளுக்கு. அப்பா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.... பாவம் அப்பா...! என்னைப் பற்றி என்னெல்லாமோ கனவு கண்டிருந்தார். நானும் தானே என் லைஃப் ரொம்ப சூபர்பா இருக்கும்னு நினைச்சேன்.இட்ஸ் ஆல் ஃபேட்....! பா.....சாரிப்பா....மானசீகமாக அப்பாவின் ஃ போட்டோவைப் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டு தன் அறைக்குள் நைட் டிரஸ் மாற்ற நுழைந்து
கொள்கிறாள்.

அதற்குள் சித்ரா தனக்கும் கெளரிக்குமாக பசும்பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தவள், நைட்டியில் வரும் தன் மகளைக் கண்டதும், கௌரி..நீ தான் எவ்வளவு அழகா இருக்கே...தெரியுமா ..? ஒரு கல்யாணம் காட்சின்னு ஒண்ணுமேயில்லாமல் இப்படி நீ எவனையோ நம்பி ஏமாந்து போய் வாயும் வயிறுமா நிக்கப் போறேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. பெத்த வயிறு பத்தீண்டு எரியர்து. இந்தா....இந்தப் பாலை குடிச்சுட்டு போய் படு. இந்த உடம்போடு எத்தனை தூரம் வண்டியை ஓட்டிண்டு வந்துருக்கே. ஒண்ணு செய்...நீ தெனம் ஆபீஸ் போறதுக்கு ஒரு டிரைவரை ஏற்பாடு செய்துக்கோ. இந்த டிராஃபிக்குல நீ காரை ஓட்டிண்டு போகண்டா.உனக்கு ஸெல்ஃப் டிரைவிங்கை விட அது தான் சௌகரியம்..சேஃப்டி. டாக்டர் உன்னை பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லி எங்கிட்டச் சொல்லியிருக்காள். வாஞ்சையோடு மகளைப் பார்க்கிறாள்.இப்ப நீ பெத்துக்கறதத் தவிர வேற வழியே இல்லையாம். நானே அதிர்ந்து போயிட்டேன்.

சரி...நாளைக்கு ஒருத்தர்ட்ட டிரைவருக்கு சொல்லி வைக்கிறேன், பாலை உறிஞ்சியபடி சொல்கிறாள் கௌரி.

இன்னிக்கித் தான் நான் சொன்னதை ஒரே வார்த்தையில் சரி ன்னு ஏத்துண்டு இருக்கே. அதிசயம் தான்.! சித்ரா கௌரியிடமிருந்து காலியான தம்ளரை வாங்கிக் கொண்டு நகர்கிறாள்.


இரவு முழுதும் உறக்கமே வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு மனத்துக்குள் தொடர்ந்து எழுந்த எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக விரட்டிக் கொண்டே வந்தாள் கௌரி. நடப்பது நடக்கட்டும், எண்ணிக் கொண்டே தனது வயிற்றை லேசாகத் தடவிப் பார்க்கிறாள். கார்த்தி... விளையாட்டு வினையாகும்னு இதைத்தான் சொல்வாளோ என்னமோ. நீ என் வாழ்க்கையில் விளையாடிய விளையாடினதோட பலனை நான் அனுபவிச்சுண்டு இருக்கேன். ஆனால் என்ன, உன் குழந்தைகளைக் கண்ணாறப் பார்த்துத் தூக்கிக் கொஞ்சும் பாக்கியம் உனக்குக் கிடைக்கப் போவதில்லை. அதே சமயம், என் குழந்தைகளுக்கும் டாடி என்ற பந்தமும் புரியாது. நான் தான் இதன் விளைவுகளை தைரியமா ஃபேஸ் பண்ணணம். புதுமையான உணர்வுகளால் தாக்கப்பட்டு அப்படியே உறங்கிப் போனாள் கௌரி.

அலுப்போடு சலிப்பும் சேர்ந்து கொள்ள படுக்கையில் விழுந்த சித்ராவின் மனம் விழித்துக் கொண்டு அவளை கேள்வி கேட்டுத் துளைத்தது. கௌரிக்கு ரெட்டைக் குழந்தைகளாம்....யாருக்கு வேணம்..? இந்த செய்தியைக் கேட்டு நான் சிரிக்கவா முடியும். இப்ப இந்த ஊரே என்னைப் பார்த்து சிரிப்பாச் சிரிக்குமே.என்ன செய்யப் போறே...? கெட்டகேட்டுக்கு ரெட்டைக் குழந்தைகளாம். வாயிலெடுக்க வரது . எத்தனை பேர் குழந்தைகள் பொறக்கலைன்னு அழறா...அவாளை எல்லாம் விட்டுட்டு இங்க வந்து சேர்த்து கொடுத்து நாடகத்தை ஆரம்பிக்க திரையை விலக்கியிருக்கார் பகவான். நான் தானே புக்காத்தையும் பொறந்தாத்தையும் சந்திக்கணம். நல்ல நாள்லயே நாழிப்பால். இப்போ போதாக் குறைக்கு இந்த விஷயம் வேற. வெறும் வாய்க்கு வெல்ல அவல். போறவா, வரவா எல்லாரும் துக்கம் விசாரிக்கறாப்பலன்னா கேட்பா...! கௌரி கல்யாணத்துக்கு டௌரி தரமாட்டேன்னு ஆரம்பிச்சார் ஈஸ்வரன். அதையும் தாண்டி நீ காதும் காதும் வெச்சாப்பல ஒரு செலவும் இல்லாமல் எப்படி, எங்கே, யாருக்கு கல்யாணம் பண்ணினேன்னு கேட்பாளே..? இது கழிஞ்சா சீமந்தம் பண்ணலையா...? எதுக்குமே கூப்பிடலையே..ன்னு கேட்கறவா கிட்ட நான் எந்த மூஞ்சியைக் காண்பிப்பேன்.

ஆயிரம் வாட்டி சொன்னேன்..ஜாக்கிரதையா இருடின்னு. கேட்டாளோ இவள். என்கிட்டே மறைச்சா. இப்போ வெட்வெளிச்சமாயாச்சு.
கொஞ்ச நாள் முன்னாடி சொல்லியிருந்தாலும் இந்தக் குழந்தையும் வேண்டாம் கோட்டானும் வேண்டாம்னுட்டு காதும் காதும் வெச்சா மாதிரி காரியத்தை முடிச்சிருக்கலாம். இப்போ தான் டாக்டரே சொல்றாளே, மூணு மாசம் முடிஞ்சாச்சு....இனிமேல் அது போல யோசித்தால் கௌரியின் உயிருக்கே ஆபத்து வரும்னு. இந்த வார்த்தையைக் கேட்டதுக்கு அப்பறம் 'அது' எப்படித் தோணும்..? இருந்துட்டுப் போட்டும் போ.

அவள் தான் பாவம்..!இளமைக் காலத்துல பண்ணின தப்பை ஆயுசு பூரா சிலுவையைச் சுமக்கறாப்பல மனசுக்குள்ள சுமந்துண்டு அவஸ்தை படணம் . புதுமை புரட்சின்னு தன்னோட பூரா வாழ்க்கையையும் பணயம் வெச்சு இப்படி ஒரு விபரீத விஷயத்துக்கு விதை விதைக்காட்டா என்ன கேடு ? குழந்தைகளா வயித்துக்குள்ள இருக்கற வரைக்கும் கௌரி மட்டும் கண்ணுக்குத் தெரிவாள். பாசம் கண்ணை மறைக்கும். நாளைக்கே ரெண்டு குழந்தைகளும் வெளியே வந்தாச்சுன்னா, என்னாலத் தொட்டுக் கூடத் தூக்க முடியாது.
கண்டவனோட குழந்தைகளுக்கு நான் என்ன அண்ணாவி.? எதுகளுக்கு நான் பாட்டி? அவளோட அவமானச் சின்னங்களுக்கு நான் எந்த விதத்திலும் உறவு கிடையாது.நேரம் வரும்போது கௌரிட்ட இதைச் சொல்லணம். தொடர்ந்த எண்ணங்களில் தனை மறந்து சித்ராவும் உறங்கிப் போனாள்.

0 0 0 0 0 0 0 0 0 0

நையி ...நையி ..ண்டு எப்பப் பாரு என்ன அழுகை ? என்று மூன்று வயது குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான் மாணிக்கம். கிள்ளிய வலியில் இன்னும் அதிக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது குழந்தை முருகன்.

ஏண்டா மாணிக்கம்....குழந்தையை இப்படிப் போட்டு அடிக்கிறே..? காப்பியை ஆற்றிக் கொண்டே சமையல் கட்டுக்குள் இருந்து வெளியே வந்த வெள்ளையம்மாள், முருகனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்கிறாள்.

அரசன் அன்று கொல்வான் ...தெய்வம் நின்று கொல்லும் ...அது மாதிரி ஒருத்தன் மனசாட்சிக்குத் தெரிஞ்சு செய்யிற தப்புக்கும் கண்டிப்பா தண்டனை அனுபவிச்சே தீருவான். இதெல்லாம் பொய்யே கிடையாது..நான் தான் பாக்குறேனே. வசந்தி , அதும்பாட்டுக்கு அம்புட்டு வேலை செய்யும். அத்தோட சம்பாரிச்சு வேற கொண்டாரும். கொழந்தையின்னா கொள்ளைப் பிரியம் அதுக்கு. எப்பப்பாரு முருகனைத் தூக்கி வெச்சு கொஞ்சும். அத்தப் போயி நீயும், விமலாவும் அடிச்சுத் வெளியத் தொறத்தினீங்க . உங்க சந்தோசம் ஒரு மாசமாச்சும் நெலைச்சிச்சா. உம்மேலேயும் அது தங்கச்சி விமலா மேலயும் எம்புட்டு நம்பிக்கை வெச்சிருந்தா அது அப்படி ஒரு கல்யாணத்தை உனக்கு நடத்தி வெச்சிருக்கும். நான் கூடத் தான் அதைத் தப்பா நெனைச்சேன்.ஆனால் அம்புட்டு வேலையையும் செஞ்சுபோட்டு, வெளில வேற போயி சம்பாரிச்சு நாம எம்புட்டுத் திட்டினாலும் வாயைத் தெறக்காமல் கெடக்கும்.அதைப் பார்த்து நானே மனசு மாறிப் போயிட்டேண்டா மாணிக்கம். நாம அந்த ராத்திரில எந்த சொந்தமும் இல்லாதவளை அப்படி வீட்டை விட்டுத் தொறத்தி அடிச்சி அனுப்பி இருக்கக் கூடாதுடா. அதும் அந்த விமலாவோட பேச்சைக் கேட்டுக்கிட்டு. இப்ப அது எங்கிட்டுப் போயி எப்படி இருக்குதோ...உசுரோடத் தான் இருக்குதோ...இல்லைன்னா அதும் இந்த விமலா மாதிரி செத்துப் போச்சோ என்ன எளவோ. உனக்கு வேணும்டா. உனக்கு நல்லா வேணும். எனக்கும் வேணும். இதோ இப்ப நான் தானே உங்களை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன். ஒரு மனுசியோட அருமை அது இல்லாதப்பத் தான் தெரியும்பாக. நீ வசந்திய வெரட்டின, அந்தக் கடவுள் விமலாவை நெருப்புல கட்டி இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு.
இல்லாட்டி சமச்சுக்கிட்டு இருந்தவ இப்படித் தீப்புடிச்சி கருகிச் சாவாளா.? எல்லாம் விதி. ஒண்ணுக்கு ரெண்டு இருந்தென்ன...? யோக்கியதை தெரிஞ்சா ஒண்ணும் தங்காது.

அம்மா நீ ...காலையிலயே வழக்கம் போல புலம்ப ஆரம்பிச்சுட்டியா.? இப்ப நொந்து என்ன செய்ய? நானும் வசந்தியத் தேடாத எடம் கெடையாது. அது என் கைக்கு அம்புடலை. அவ தெகிரியம் பிடிச்சவ, ரோஷக்காரி... சாகமாட்டா. நீ வேணாப் பாரேன். முருகன் மேல ஆணையா சொல்றேன்...வசந்தி நம்மகிட்ட சீக்கிரம் வந்துடும். பாரேன்.

அடப் போடா புரியாத மவனே.வந்தா என்னிக்கோ வந்திருக்கோணம். அது எங்கேனாக் கடல்ல விளுந்து உசுர விட்டிருக்கும். அதற்குள் புட்டிப்பாலை குடித்து விட்டு தூளியில் தூங்கிப் போனான் முருகன். புள்ளைக்குப் பசிடா மாணிக்கம்...அதான் அந்த அளுகை அளுதிருக்கான்....என்றவள், ஆமா நான் தான் இவனப் கவனிச்சுக்கிறேன்ல நீ எங்கனயாச்சும் வேலைக்குப் போனாத் தான் என்னவாம்? பழைய கெழடிக் கதவத் தெறடின்னு அந்த டிரைவர் வேலைக்காச்சும் போறது.வாழ்நாள் முச்சூடுமா துக்கம் கொண்டாடிக்கிட்டு கெடக்கப்போறே ? அந்த துரைசாமி டிராவல்ஸ் கிட்டப் போயி எதுனா வேலை இருக்குதான்னு கேட்டுகிட்டு வாடா.

அந்தக் காலத்துல நான் இளமையா இருக்க, புள்ளத்தாச்சிக்கு பிரசவம் பார்க்க வீட்டுக்கே அளைப்பாக. இப்பத்தான் தெருவுக்கு நாலு ஆசுபத்திரி வந்து நம்ப பொளப்ப கதி கலங்க வெச்சிருச்சு. இல்லாட்டி இந்தக் கையால எம்புட்டு பிரசவம் பார்த்திருக்கேன்."மருத்துவச்சி மல்லிகான்னா எங்கூருல தெரியாத ஆள் இருக்க மாட்டானுங்க. இன்னும் சீரியஸ் கேசுகள் எங்கனா வந்தா என்னை ஓடியாந்து இட்டுக்கினு போவாங்க. தெரியுமாடா மாணிக்கம் அம்புட்டு பேமஸ் நான்.

இந்தா இந்த முருகன் கூட என் கையாலப் பொறந்தவன் தானே. இப்ப நான் எங்கனா வேலைக்குப் போவணும்னா இவனை யாரு பார்த்துக்குவா..? அதான் என்னால வெளிய போக முடியல. நீனாச்சும் வெளிய போயி எங்கனா வேலை தேடுறது? வேலை வேணுமின்னா நாம தான் போயி கேட்கோணம் . அவுக வந்து கையில வெத்தல பாக்கு வெச்சி அளைக்க மாட்டாக, புரிஞ்சுக்கோ.இப்படி நீ தாடியும் மீசையுமா நிண்டா நல்லாவா இருக்குது. ஆனது ஆயிருச்சி, இனி ஆகப்போறதப் பார்ப்பியா ? குழந்தைக்குப் பால் வாங்கக் கூட கையில காசில்லைடா..வீட்டு வாடகை வேற ரெண்டு மாசம் பாக்கி. இதே வசந்தி இருந்திருந்திச்சுன்னா இப்படி ஆக விடுமா? ம்ம்ம்...யாரைச் சொல்லுறது. எல்லாம் நாம வாங்கிட்டு வந்த சாபம்.

நீ சும்மாப் புலம்பாதே...இன்னிக்குப் போறேன்...நீ புள்ளைய பத்திரமாப் பாத்துக்க, அப்ப நான் கிளம்பறேன்... என்று தன்னிடம் இருப்பதில் ஒரு நல்ல சட்டையாக எடுத்து அதை மாட்டிக் கொண்டே கிளம்பினான் மாணிக்கம்.

ஆவட்டும்...சீக்கிரமா வந்திர்ரா..என்று குரல் கொடுத்தாள். என்னிக்கு அந்த வசந்தியை வெளிய தொறத்தினமோ அன்னிக்கே இந்த வீட்டு லட்சுமியும் கிளம்பிருச்சு. மன்னிப்புக் கேட்டா சரியா வருமா? கொஞ்ச நஞ்சமா ஏசியிருக்கேன். அதுக்கெல்லாம் தான் இப்பக் கெடந்து அல்லாடுறேன். புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

வீட்டைத் தாண்டி "டடக் ..டடக் .." என்று மாணிக்கம் சைக்கிளை மிதித்து தெருவைக் கடந்து செல்வதைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இந்த எடத்துல வேலை கெடைக்கோணம் மாணிக்கத்துக்கு. வசந்தியும் வந்து சேர்ந்துகிச்சுன்னா

அவளது நம்பிக்கை வீண்போகவில்லை.

அன்று மாலையிலிருந்தே கௌரியின் காருக்கு டிரைவராகப் பணியில் சேர்ந்து கொள்ள அவனுக்கு அழைப்பு வந்தது.


0 0 0 0 0 0 0 0 0

எப்படியோ தன் ஆபீசில் ஒருத்தரிடம் நல்ல டிரைவரா இருந்தா எனக்குச் சொல்லுங்க. என்று கேட்டுக் கொண்ட கௌரிக்கு மதியம் லஞ்ச் டைம் போதே , ஒருத்தர் மாணிக்கம்னு இருக்காராம். இப்ப எங்கியும் வேலைக்குப் போகலியாம். நம்பிக்கையான ஆள் தான். அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டு கௌரியின் சரி..அப்ப இன்னிக்கே அவரை என்னைப் பார்க்க வரச் சொல்லுங்க.விசாரிச்சுப் பார்த்துட்டு சொல்றேன். என்கிறாள்.

தகவல் அறிந்த மாணிக்கத்துக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை...அந்த ஆபீஸ்லையா ? அந்த மேடமா...?வசந்தி அங்க தான வேலை செஞ்சிச்சி....அடிக்கடி அந்த மேடம் ரொம்ப நல்லவங்கனு சொல்லுமே..இன்னிக்கு அங்க போய் ஒருவேளை வசந்தியைப் பார்த்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சிறலாம். அதற்குள் அவனது மனசாட்சி "நீ தான் விமலா செத்துப் போன விசயம் சொல்ல வசந்தியத் தேடிக்கிட்டு ரெண்டு தபா இந்த ஆபீஸ் வாசலுக்கு வந்தியே....அங்கன இருக்குற காவலாளிங்க கூட 'இங்க அப்படி யாருமில்லைன்னு' உன்னிய வெரட்டி விட்டாங்களே...மறந்து போச்சா மன்னாரு..." என்றது.

இருந்தாலும் ஒரு நப்பாசையுடன் வேக வேகமாக ஷேவ் செய்து குளித்துவிட்டு நல்ல ஷர்ட்டை போட்டுக் கொண்டவன்,தன்னையே வித்தியாசமாக கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். அம்மா, நான் கிளம்பறேன். நீ சொன்னாப்பல எனக்கு வேலை கெடைச்சிரும்னு நெனைக்கிறேன். என்கிறான்.

நல்லபடியா போயிட்டு, வரும்போது முருகனுக்கு ரெண்டு வாளப்பளம் வாங்கியாடா மாணிக்கம்.

சரி..சரி.....வாங்கியாறேன்....என்றபடி கதவைச் சாத்திக் கொண்டு கிளம்பினான்.




கௌரியின் முன்னே ரொம்ப சுத்தமாகவும் பணிவாகவும் வந்து நின்ற மாணிக்கத்தின் கண்களில் ஏகப் பட்ட சோகம் குமிந்து கிடந்தது. இவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக பதில் சொன்னவன் ..கூடவே.மேடம்...இந்த வேலையை வேற யாருக்கும் தந்திராதீங்க...ப்ளீஸ் என்று கெஞ்சியவன் ...மூணு மாசமா வேலையில்லைங்க...பொண்டாட்டி தீ விபத்துல சிக்கி செத்துப் போச்சு. மவனுக்கு ரெண்டு வயசு..என் அம்மாவுக்கும் வயசாயிப் போச்சு....அவிங்களை நான் தான் பார்த்துக்கிடறேன். பத்து வருஷமா டிராவல்ஸ் கார் ஓட்டறேன் மேடம்.

சரி என்று அவனது லைசென்ஸை வாங்கிச் சரி பார்த்தவள், அவன் கேட்ட சம்பளத்திலிருந்து பேரம் பேசி, சரி இன்னைக்கு ஈவ்னிங் என்னை வீட்டுக்கு கொண்டு விடு மாணிக்கம். அதுக்கப்பறம் வீட்ல போய் பேசிக்கலாம்..சரியா..? என்கிறாள்.

மிகுந்த மகிழ்ச்சியோடு தலையாட்டியவன் வசந்தி இங்க தான் வேலை செய்யிறதாச் சொல்லியிருக்கா...இப்ப அவ இங்க இருக்கக் கூடாதா என்று தேடும் கண்களை ஓட விட்டான் அவன். மாணிக்கத்தின் மனசு சொல்லிக் கொண்டே இருந்தது..."இன்னிக்கே நீ வசந்தியைக் கண்டுபிடிச்சிருவே....." அவன் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மெல்ல விசாரித்து அவன் சொன்ன பதிலில் ஏமாற்றம் அடைந்து திரும்புகிறான்..மாணிக்கம்.


இந்த வீடு தான் நிறுத்திட்டு கேட்டைத் திறந்து உள்ள விட்ருங்க.....கௌரியின் குரலுக்கு பணிந்து உள்ளே நுழைந்து காரை நிறுத்தும் போது, அவன் மனத்துக்குள் ஒரு நிறைவு பரவியது.

கௌரி உள்ளே நுழைவதற்குள் வெளிப்பட்ட வசந்தி, சிரித்தபடியே கௌரியைப் பார்த்து அதுக்குள்ளார டிரைவர் கிடைச்சிட்டாரா..? கேட்டவள், கார் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தவனைப் பார்த்து அதிர்ச்சியோடும் ஆனந்தத்தோடும் திகைத்தபடி கௌரியைப் பார்க்கிறாள் வசந்தி.

கெளரிம்மா, இவரு...இவரு.....என்று ..சொன்னவள்.மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் விடு விடுவென்று வீட்டுக்குள் ஓடுகிறாள்.

ஒன்றுமறியாத கௌரி, மாணிக்கத்திடமிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டவள் , என்னது? என்பது போல புருவத்தை உயர்த்தி அவனைப் பார்க்கிறாள்.

அவன், வசந்தியைப் பார்த்த மகிழ்வு ஒருபுறம் இருந்தாலும்..."பொண்டாட்டி தீ விபத்துல செத்துப் போயிருச்சு"ன்னு இவங்ககிட்ட சொன்னது பொய்யின்னு ஆயிருமே...அதனால் சொல்லத் தயங்கினான்.

எங்கே அந்தக் கடங்காரன் என்று வசந்தியோடு திமு திமு வென்று மூச்சு வாங்க வெளியே வந்த சித்ராவைத் தள்ளிக் கொண்டு ஓடிச் சென்று "என்னங்க, நான் தாங்க வசந்தி..நல்லாருக்கீங்களா , முருகன் நல்லாருக்கானா..நான் இவங்களோடத் தான் இருக்கேன்..தெய்வமா என்னைக் காப்பாத்தினாங்க.." என்றதும்.

வசந்தி....என்னை மன்னிச்சுடும்மா...என்று கண்கள் நிறைந்து வழிந்த கண்ணீரோடு வசந்தியை கட்டிக் கொள்கிறான். மன்னிச்சுடு தாயி .....எங்கள மன்னிச்சுடு...என்றவன். நீ போன பெறவு பத்தே நாள்ல விமலாவும் தீப்புடிச்சி செத்துப் போச்சு. என்று கேவுகிறான்.

வசந்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

கௌரியின் மெமரி சிப் அவளுக்கு வேண்டிய தகவல்களைத் அதிவேகமாகத் தந்து கொண்டிருந்தது. "செஞ்ச தவறை உணர்ந்திருக்கான்"
என்றவள்..வசந்தியின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசட்டும் என்றெண்ணியபடி நீங்க பேசிக்கோங்க என்று உள்ளே செல்கிறாள்.
அம்மா......வாயேன்....அவா பேசிக்கட்டும்..என்று சித்ராவின் கைகளைப் பற்றியபடியே.

ஒவ்வொருத்தர் வாழ்க்கையில் என்னவெல்லாம், எப்படில்லாம் நடக்கறது பாரேன்....இவன் தான் டிரைவரா ? என்ற சித்ரா. எல்லாம் பகவான் நடத்தற நாடகம், எது எப்படியோ இந்த வசந்தி பொண்ணுக்கு அவளோட ஆம்படையான் வந்து சேர்ந்துட்டான் என்று சொல்லிக் கொண்டே அடுக்களைக்குள் நுழைகிறாள்.

பிரிந்த இருவரும் ஒன்று சேர்ந்த அந்த நிமிஷத்தைத் தான் கவனித்ததை கண் முன்னே கொண்டு நிறுத்திய கௌரி, "இந்த இடத்தில் கார்த்தி வந்திருந்தால் ..." என்று நினைத்துப் பார்க்கிறாள்.




....சீ...சீ....என்னவாக்கும் இது....எனக்கேன் இப்படில்லாம் தோணறது..? இந்த மாணிக்கம் மட்டும் என்ன அவள் மேல இருக்குற பாசத்துலையா இப்படி அழறான்..அப்படி இருந்திருந்தால் வசந்தியைப் பார்த்த அந்த வினாடியே சொல்லியிருக்க வேண்டாமோ? ஒரு நிமிஷம் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நின்னுட்டு திடீர்னு எங்கேர்ந்து ஞானோதயம் வந்ததாம்? இவனுக்கு .வீட்டு வேலை செய்ய ஆள் வேணுமாயிருக்கும் ..குழந்தையைப் வேற பார்த்துக்கணம்....பத்தாக்குறைக்கு அவளோட தங்கை வேற செத்துப் போயிட்டாளாம். அதான் வசந்தியைப் பார்த்ததும் முதலைக் கண்ணீர் விடறான். எல்லாம் சுயநலம். நடிக்கறான். எது எப்படியோ, வசந்திக்கு அவளோட வாழ்வு மீண்டது. வசந்திக்கும் அதுல தான் சந்தோஷம் கிடைக்கும். முகம், கைகால்களை அலம்பிக் கொண்டு வந்தவள் 'எப்டி வசந்தி....உன் வீட்டுக் காரரே டிரைவரா வந்து சேர்ந்தது உனக்கு சந்தோஷம் தானே...?' உடனே பெட்டியைக் கட்டு.... கொண்டு போயி விட்டுட்டு வரேன்.


என்ன கெளரிம்மா...அப்டி சொல்லிப்புட்டீங்க...நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா..? எனக்கு இவன் சங்காத்தமே வேணாம்..அன்னிக்கு அடிச்சுத் தொரத்திப்புட்டு இன்னிக்கு வான்னு என்னிய கூப்டடா ....வாரேன்னு நானும் போயிருவேண்டு நெனெச்சீங்களா ...நீங்க. நான் மாட்டேன். என்னியப் பொருத்தவரைக்கும் அவங்களுக்கு நான் என்னிக்கோ செத்துப் போயிட்டேன். எனக்கு உங்களைத் தவிர யாருமே இல்லை.

அப்போ நீ மகிழ்ந்து சிரித்தது..?

ஒரு நிமிட பந்தம்,,,அம்புட்டுத்தான்..அதுக்கு பெறவு அந்த அடியும் உதையும் வார்த்தையும் நெனப்புக்கு வந்துருச்சு. என் தங்கச்சியும் தீ விபத்துல கருகிச் செத்துப் போச்சாமே...? அந்தப் பச்சப் புள்ளைய நெனச்சாத் தான் பாவமாயிருக்குது. என் அத்தையும் பாவம்..வயசு போன காலம்...! சரி அதுங்க எப்படியோ போவுதுங்க. எனக்கெதுக்கு இப்ப நெஞ்சு கெடந்து தவிக்கணம்...நான் பெத்த பிள்ளையா அது..? ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிப்புட்டேன்ம்மா...அவனை நீங்க டிரைவரா வெச்சுக்கிருங்க ...இல்லாட்டி தொரத்திடுங்க...ஆனால் நான் மட்டும் உங்களை விட்டுப்போட்டு எங்கிட்டும் போவ மாட்டேன். என்னிய விரட்டிப் போடாதீங்க.. அது சுயநலம் பிடிச்சது...வான்னு தான் கூப்பிடும். அது பண்ற கொடுமை எனக்குத் தானே தெரியும்.

நானே சொல்லி அனுப்பிட்டேன்....நான் உசுரோட இருக்கேனா...இல்ல செத்துக் கித்துப் போயிட்டேனாண்டு கூட தேட நாதியில்ல...அன்னிக்கி நான் சாகப் போன போது என்னைக் காப்பாத்தி எனக்கு ஒரு தொழிலை செய்து கொடுத்த தெய்வங்க இவங்க. இந்த வீட்டு வாசப்படி மிதிக்கிற யோக்கியதை கூட உனக்கு இல்லே ,,,இனிமேட்டு இந்தப் பக்கம் வந்துராதே....ண்டு சொல்லித் தான் திருப்பி அனுப்பிச்சேன். இனிமேட்டு இந்தப் பக்கம் வராது. நம்ம வேற யாராச்சும் டிரைவரை வெச்சுகிடலாம் . ஊருல வேற ஆளா இல்லே இவர விட்டால்.....

அதானே..அவன் வா ன்னு கூப்பிட்டால் போய் நிக்கணம் ...வெளில போன்னா ...வீட்டை விட்டு இறங்கணமா ? பொம்மனாட்டினா வெறும் ஜடமா? அவாளுக்கு மனசுன்னு ஒண்ணுமில்லையா ...? நீ போகாதே வசந்தி..சித்ரா வசந்தியுடன் சேர்ந்து கொண்டாள்.

ஆனால் உங்களால முடிஞ்சா எனக்கு அந்த முருகனை மட்டும் வாங்கிக் கொடுத்திடுங்கம்மா..புள்ளைய நெனச்சாத் தான் பாவமா இருக்குது.

வேணாம் வசந்தி. கொஞ்சம் பொறு....நிதானமா யோசி. அந்தக் குழந்தைக்காகவாவது நீ அவனோட சேர்ந்து தான் வாழணும் ..கௌரி சொல்வதைப் பார்த்து சித்ரா கௌரியை முறைத்தபடி, அப்பிடியே போனாலும்...உன் பிரசவம் முடிஞ்சு போகட்டும்....என்கிறாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், வெள்ளையம்மாள் குழந்தை முருகனைத் இடுப்பில் இடுக்கியபடி இவர்கள் வீட்டு வாசலில் நிற்பாள் என்று வசந்தி சிறிதும் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்தது.

எலும்பும் தோலுமாக குழந்தை முருகனைப் பார்த்த வசந்தி , அப்படியே கண்ணீருடன் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டவள், ஏன் அத்தை...? இம்புட்டு மோசமாருக்கான்....விமலா எப்படி செத்துப் போச்சு என்று வெள்ளையம்மாளை சேர்த்து கட்டிக் கொண்டு அழுது விட்டு, நான் இங்கன இருக்கேண்டு சொன்னாராக்கும். இந்த நேரத்துல கெளம்பி வந்திருக்க... எனக்கு உசுரப் பிச்ச போட்ட இவங்க தான் எனக்கு எல்லாம். அதனால் இவங்கள விட்டு நான் வரமாட்டேன். என்று நிறுத்தினாள் .

ஆமா....மாணிக்கம் வந்து சொல்லித் தான் எனக்கே தெரியும். அழுதுப்புட்டான்....அவன் என்கிட்டே போகக்கூடாதுன்னு ரொம்ப சொன்னான்.நான் தான் மனசு கேட்காமல் உடனே உன்னியப் பாக்கணம்ண்டு துடியாத் துடிச்சி ஓடியாந்தேன். மாணிக்கம் அங்கன ரெண்டு தெரு தாண்டி நிக்கிது. நான் உன்னியப் பார்த்துபோட்டு போறேன்.எங்கள மன்னிச்சுருடி வசந்தி என்று கண் கலங்கி நின்றாள் வெள்ளையம்மாள்.

வசந்தி....நீ உசுரோடத் தான் இருப்பேன்னு என் மனசு சொல்லிச்சுடி....முருகன நீ பார்த்துக்கடி. நீ எதோ ஒரு இது வெச்சுருக்கியாமே அதுல நானும் உனக்குத் துணையா இருக்கேன். என்று வலுக்கட்டாயமாக தன்னையும் அவர்களோடு நுழைத்துக் கொண்டாள் .

சித்ரா மட்டும்...தலையிலடித்துக் கொண்டாள் ...இதெல்லாம் வேண்டாத்த வேலை. கத்தி போச்சு வாலு வந்ததுன்னு...

வசந்தி இவங்களையும் அந்த வீட்டில் உங்களோட இருக்கவிடேன்....உங்க அத்தை உனக்கு உதவியா இருப்பாங்க..நான் இங்க இருக்கேன்...அந்த மாணிக்கம் உன்கிட்ட வாலாட்ட முடியாது. அடி தடின்னு. ஒரு ரூம்ல நீங்க எல்லாரும் இருந்துக் கிட்டா கூட மத்த இடத்தில் குழந்தைகளை வெச்சுப் பார்த்துக்கலாம்.. எப்டியோ நீயும் நல்லா இருக்கணம் வசந்தி.

வெள்ளையம்மாள் மல்கிய கண்களோடு கையெடுத்து கும்பிட்டு நீங்க மனுச தெய்வங்க ..நீங்க .நல்லாருக்கோணம்...உங்க குடும்பம் பூத்துக் குலுங்கும். ஒரு குடும்பத்தை வாழ வைக்கிற புண்ணியம் உங்க கூடவே வரும்...என்று மனதார வாழ்த்துகிறாள்.

சித்ராவுக்கும் , கௌரிக்கும் மனது நெகிழ்கிறது.


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்த ஈஸ்வரனின் வருஷாப்திய ஸ்ரார்த்தம் எல்லாம் முடிந்ததும் , பாலு வாத்தியார் மெல்ல சமயம் பார்த்து பேச்சை ஆரம்பிக்கிறார்.

சித்ரா மாமி.....ஈஸ்வரன் மாமாவோட வருஷாப்த்திய ஆட்டத்திவசத்தை நல்ல படியா பண்ணி முடிச்சுட்டேள் . அடுத்த வருஷமாவது காசிக்கு போயி பிரயாகைல பண்றதைப் பண்ணிட்டு கயால பிண்டப் பிரதானம் பண்ணிடுங்கோ. ரொம்ப விசேஷம். அதுக்கப்பறம் உங்களுக்கு முடியலைன்னா வருஷா வருஷம் ஹிரண்யமா பண்ணினாக் கூட போதும். ஆமாம்...கேட்கணம்னு நினைச்சேன். கௌரிக்கு எப்போவாக்கும் கல்யாணம் பண்ணேள்? அவாளாப் பார்த்துப் பண்ணீண்டாளா? சீமந்தம் உண்டோல்லியோ? அதுக்காவது கூப்பிடுங்கோ.
நன்னாப் பண்ணி வெக்கறேன். இது எத்தனாவது மாசம்..?

ம்ம்....சரி மாமா..ஆகட்டும் என்று திக்கினாள் சித்ரா...எனக்கு ஒரே ஷீணமாயிருக்கு....விஷயத்துக்கு ஃபோன்ல கூப்பிடறேன்.

ஓ ...பேஷா...அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன் என்று நகர்ந்தார் அவர்.

போச்சு....எல்லாம் அக்கு வேறு ஆணி வேறா கண்டுபிடிச்சாச்சு. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யைத் தேடணம்...என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

இவருக்கெல்லாம் நீ ஏன்மா பயப்படறே...?

யாருக்குமே பயப்படாதவள் நீ...அதான் இப்படியாச்சு.

சரி விட்டுத் தள்ளு.அப்பா போயி அதுக்குள்ளே ஒரு வருஷம் போயிடுத்தே...நம்பவே முடியலை இல்லையா? என்று கௌரி பேச்சைத் திசை திருப்புகிறாள்.

ம்ம்ம்ம்....எதையுமே நம்ப முடியலை...யாரையுமே நம்ப முடியலை...என்று பொடி வைக்கிறாள் சித்ரா.

இதோ....இப்போ வசந்திக்கு அவ புருஷன் காரன் உணர்ந்துண்டு வந்து நின்னானே...அது போல ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் அந்த கார்த்தியும் உன் அருமை புரிஞ்சுண்டு வந்து நிற்பான் ...பார்த்துண்டே இரு...!

இது எந்தானம்மா...அப்பிடியொரு இதொண்ணும் நடக்காது கேட்டோ..நான் கார்த்திய ஒருநாளும் இந்தாத்துப் படி எத்த அனுமதிக்க மாட்டேன்.என்னைப் பொருத்தவரையில் நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் யார் யாரோ.நீ புரிஞ்சுண்டியா. இந்த வசந்திக்கு இருக்கற இது கூட எனக்கு இருக்காதா..?பின்ன ரௌத்ரம் பழகுன்னு எதுக்கு சொல்லியிருக்கு.?

ம்கும்....இந்த வித்தாரமெல்லாம் வாய் கிழியப் பேசு....அது போட்டும் விடு...இன்னைக்கு கோவிலுக்குப் போய்ட்டு வரணம் நாம ரெண்டு பேரும். அப்படியே டாக்டரையும் பார்த்துட்டு வந்துடலாம்.

ஆட்டும்...என்று சொல்லியபடியே சித்ரா மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டு அடக்கிக் கொண்டு லேசாக மென்று திங்க ஆரம்பித்தாள் கௌரி.அப்படியே....அம்மா....இங்க கையை வெச்சுப் பாரேன்...எப்படி குடு குடுன்னு புரண்டு புரண்டு போற மாதிரி இருக்கு தெரியுமா..? ஐயோ...ஐயோ....இதோ...இங்க தான்...இங்க தான்...என்று வயிற்றில் தன் தாயின் கைகளைப் பற்றி அங்கும் இங்கும் தன் வயிற்றில் இழுத்துச் செல்கிறாள் கௌரி.

ஆமா.....ஆமா....வாலுங்க ...இதைத் தான் நாங்க உதைக்கிறான்னு சொல்லுவோம். உனக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டானா ? என்று பிடித்தும் பிடிக்காமலும் வாய் வார்த்தைக்கு சொல்லி வைக்கிறாள் சித்ரா.

இன்னும் எத்தனை மாசம்மா...? நல்ல வேளையா என்னால ஆபீஸ் வேலையை வீட்டில் இருந்தபடிக்கே செய்ய முடியறது. எல்லாருக்கும் இப்படிப் பெர்மிஷன் தர மாட்டார். ஏதோ என் சீனியாரிட்டி திறமைன்னு....என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சிரிக்கிறாள் கௌரி.

ஆமாம்டி...நீ இப்படி சகஜமாப் பேசிச் சிரிச்சி எத்தனை நாளாச்சு தெரியுமா? என்று சித்ரா தன் மகளின் முகத்தைப் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். நாளாக நாளாக நீ ரொம்ப அழகா ஆயிண்டு வரே...வயிறும் ஏகத்துக்குப் பெரிசாயிண்டு வரது . அடிக்கடி செக்கப்புக்குப் போயாகணம் . இன்னும் இப்ப ஏழு மாசமாயாச்சு...இன்னும் அனேகமா ரெண்டு மூணு மாசம் தான் கணக்கு. என்று காலண்டரை எடுத்துப் பார்க்க ஆரம்பிக்கிறாள் சித்ரா. வர கார்த்திகைல பிரசவமாயிடும்....என்று தனக்குள்ளாக சொல்லிக் கொள்கிறாள்.

கார்த்திகைன்னா...? இங்கிலிஷ்ல எந்த மந்த் ...? கௌரி ஆவலாகிறாள்.

இந்தா....நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ என்று காலண்டரை அவளிடம் நீட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் சித்ரா.



0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0




டெல்லியில்......

தனது தாய் கல்யாணியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். வருஷாப்தியத்தை முடித்த பிரசாத், கவலை தோய்ந்த முகத்தோடு
'அம்மா...நீ நினைச்ச எதுவுமே என்னால் நடத்திக் காண்பிக்க முடியலைம்மா' அப்படியே நீ விட்டு வைத்த இடத்தில் அப்படியே இருக்கும்மா...என்று தாயின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே மெளனமாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த வருஷம் முதல் ஸ்ரார்த்தம் நான் பண்ணினதில் உனக்கு ஒரு குறையும் இல்லையேம்மா...என்று மானசீகமாகக் கேட்கவும்.

கல்யாணியின் புகைப்படத்திலிருந்து ஒரு ரோஜாப் பூ விழுந்து பதில் சொன்னது.

அம்மா...அடுத்த ஸ்ரார்த்தம் நம்ம வாத்தியார் சொன்னாப்பல கண்டிப்பா கயால போயி பண்ணிடறேன்மா...என்று அந்த ரோஜா மலரை எடுத்து முகர்ந்து பார்க்கிறான் பிரசாத்.

அம்மா...என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா நான் கௌரியை மீட் பண்ணணும்மா...அதுக்கும் நீ தான் எனக்கு உத்தரவு தரணம்ம்மா.
என்று கல்யாணியின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

பூவும் விழவில்லை. பிரசாத் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை. நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.

சிறிது நேரம் கழித்து பிரசாத்தின் கைகளில் ஈஸ்வரன் இறுதியாக எழுதிய கடிதம் ஃபேன் காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தது.

இந்நேரம் அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்..." மை பெஸ்ட் விஷ்ஷஸ் கௌரி " என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் ஒரு கல்யாணப் பத்திரிகை எனக்கும் அனுப்பியிருக்கலாம்...என்று நினைத்துக் கொண்டே "அதான் நான் கேட்ட கேள்விக்கு அம்மா உத்தரவு தரலை" என்றும் எண்ணிக் கொண்டான்.

கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு "ஈஸ்வரன் சார்...சச் எ நைஸ் ஜெண்டில்மேன் " என்று வாய்விட்டே சொல்லிக் கொள்கிறான். " ஸார் ....நானும் ஜென்டில்மேன் தான்..யார்கிட்டயும் இனி டௌரியும் கேட்கமாட்டேன் .கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்..." என்று விரக்தியில் தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறான் பிரசாத்.

உடனே அவனது கைபேசி அழைக்கிறது.

"ஹமே...தும்ஸே ப்யார் கித்துனா....
ஏ ஹம் நஹி ஜானுதே....
மகர் ஜி நஹி சக்குத்தே
தும்ஹாரே பினா....
சுனா கம் ஜுதாயீ கா ,
உட்டாத்தே ஹை லோக்
ஜானே ஜிந்தகி....."

டக்கென்று கைபேசியை எடுத்துக் காதில் வைத்தபடி....ஐம்...பிரசாத் ஹியர்.....! ஹூ இஸ் காலிங்? "

"குட் மார்னிங் பிரசாத்.....ஐம் கார்த்திக் ஃப்ரம் சென்னை....."

என்றொலித்தது மறுமுனை.


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0





சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்....இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்....யெஸ் ..என்கிறான்.

கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. அதிலிருந்த கைபேசி எண்ணை வைத்து தான் தனது மனத்தின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஃபோன் செய்திருக்கிறான்.



மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு,

நமஸ்காரம்.

அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது தான். எனக்காக என் அம்மாவை மன்னியுங்கள். அவர்கள் சென்ற முறை நாங்கள் பெண் பார்க்க வந்திருந்த போது
எனது விருப்பம் அறியாமல் அவர்களாகவே அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அது இன்னும் தங்களின் மனதை விட்டு அகலவில்லை என்று புரிந்து கொண்டோம்.

அதனால் தான் நான் இந்த முறை...டௌரி எதுவும் கேட்கக் கூடாது என்று என் அம்மாவிடம் பேசி அழைத்து வந்தேன். அதற்கு காரணம் நான் உங்கள் மகள் கௌரியை மிகவும் நேசிக்கிறேன்.

யாரையும் பிடிக்காமல் போவதற்கு மட்டும் காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் ஒருத்தரை பிடித்துப் போவதற்குச் சொல்லக் காரணங்கள் இருக்காது.
அந்த விதத்தில் எனக்கு உங்கள் மகள் கௌரியைப் பார்த்ததும், அவளிடம் எதுவும் பேசாமலேயே அவளை மிகவும் பிடித்துப் போனது. எனது திருமணத்திற்காக நான் அம்மாவுடன் வந்து பார்த்த முதல் பெண் அவள். கௌரி என் வாழ்வின் துணையாக இருந்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்வேன். அந்த எண்ணத்தோடு தான் நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வந்தோம். ஆனால் உங்களுக்குத் தான் என் மனம் புரியவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி என்று புரிந்து கொண்டேன்.

எங்களின் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு மட்டும் கோர இயலும். மன்னியுங்கள். எங்களின் மனங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

எதுவுமே முடிவு இல்லை. அது போலவே எந்த முடிவிலிருந்தும் ஒரு ஆரம்பம் உருவாகலாம்.

உங்களிடமிருந்து என் வாழ்வின் ஆரம்பமாக பதில் கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்போது என் வாழ்கையின் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது.

கெளரியிடம் என் அன்பைச் சொல்லவும்.

இப்படிக்கு
அன்புடன்
பிரசாத்.



சற்றும் சிந்திக்காமல், மிஸ்டர் பிரசாத். அங்கே கௌரி இருக்காங்களா...? நான் அவங்க ஃப்ரெண்ட் ...பட் ரொம்ப நாளா கான்டாக்ட்டுல இல்லை.

ஓ ....ஐ ஸீ .....என்ற பிரசாத்...ஒன்றுமே புரியாமல், ஸாரி ...இங்க அப்படி யாருமில்லை...ராங் நம்பர்..என்று சொல்லி கைபேசியை துண்டித்து விட்டு "யாராயிருக்கும் இவன்...இவன் ஏன் என் கிட்ட கௌரி பத்தி கேட்கிறான் - இடியட்..." சம்திங் ஃபிஷ்ஷி " இன்னும் என்ன சொல்லப் போறான்னு கேட்டிருக்கலாமோ என்ற ஆவல் எழுந்த போதிலும்....எனக்கெதுக்கு....வேண்டாத்த வேலை..? இட்ஸ் கெட்டிங் லேட் நௌ .....என்று மணியைப் பார்த்தபடி துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு குளிக்கப் போகிறான். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல...திடீரென்று கௌரியை இந்தாள் எதுக்கு எனக்கு ஞாபகப் படுத்தினானோ....? மனம் எனும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.



கௌரியின் தொலைபேசி எண் மாறிவிட்டதால், எப்படியும் அவள் இந்நேரம் பிரசாத்தை கல்யாணம் செய்து கொண்டு டெல்லியில் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையில் செய்த இந்த முயற்சியும் வீணானதில் சற்றே ஏமாற்றமடைந்த கார்த்திக் கையிலிருந்த கடிதப் பிரதியை சுக்கு நூறாகக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுகிறான்.

இன்னிக்கு சாயந்தரமா கௌரி வீட்டுக்கு லாவண்யாவோட போய் பார்த்துட்டு வரலாம்....அவள் எனக்கு தேவதையா வந்து வாழ்க்கையில் நல்லது செய்திருக்கா...அந்த நன்றியை நான் மறக்கவே கூடாது. என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டவன்....லாவண்யா..லாவண்யா...என்ற