கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாயும் சேயும் ...!


Image result for mother and child india



ஆழ்கடல் மனதோடு அன்பு கடைந்த நுரைமனம் 
பொங்கும் ஆசையை அள்ளி த் தொடுத்த இறைமனம் 
பந்தம் நிறைந்த ஏகாந்தம் என்றும் அவள்வசம் 
ஏந்தும் பொற்கிழியாய் பூரிக்கும் தாய்ப்பாசம் 

கண்ணுக்குள் மரகதம் நெஞ்சுக்குள் மாணிக்கம் 
கைகளிலோ மணிவயிரம் வாயாரப் பாயிரம் 
உண்ணும் மணித்துளி உறங்காதே கருமணி  
எண்ணும் மடிநிறை கண்மணிக் கனவுகள் 

சுழலும் பூமியினுள் ஓயாத உள்ளொளி 
தாராள அன்பினுள் ஏகுதோ  ஏகாந்தம் 
ஆதாரமே தாய்மை காணீரோ குமுதமனம் 
ஈன்றெடுத்த நித்திலம் பெண்மையின் இரத்தினம்

சித்தம் நிறை வளர் பாவை 
நித்தம் குறை கண்டாலும் போகும் 
எத்துணை போற்றிப்  படைத்தாய் 
யாருளர் மேதினியில் இணையாய் துணை?

கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ 
அகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ 
ஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ
புத்துலகம் காணும்  சேய்க்குத் தாயே பரிசு....!

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை பிறந்தாள் .

Image result for vishu kani images

ஹேவிளம்பி வந்ததே 
வாசல் தோறும் தென்றலாய் 
கோலமிட்ட கோதைகள் 
மனம் நிறைந்த ஆவலில் 
அவல் தேங்காய் பாயசம் 
அத்தோடு மாம்பழம் கூட்டவே 
மாங்காய் புளிப்பும் 
தேனின் இனிமையும் 
வேம்பின் பூ கசப்பும் கூட்டிட்ட 
அறுசுவை பச்சடி 
வளமைகள் சேர்ந்திடவே 
சுவையாகச் சமைத்திடுவாள் 
கொண்டவன் குழந்தைகள்
உறவினர் யாவர்க்கும் அன்புடன் 
பகிர்ந்தளிப்பாள் - ஆசைகள் 
தோன்றாத மனத்துள் 
பல்லாண்டு இப்படியே 
வாழ வைக்குமாறு 
மனதார ஆசையாக 
வேண்டிக் கொள்வாள் 
நிறைந்த கனிகள் 
குவிந்த பொற்காசுகள் 
மணம் மிக்க மலர்கள் 
முகம் காட்டும் கண்ணாடி 
கண் திறந்தால் சௌபாக்கியம் 
காலங்கள் கடந்தும் 
இது ஒன்றே சாஸ்வதம்...!

திங்கள், 10 ஏப்ரல், 2017

தாயும் சேயும்....!

Image result for தாயும் சேயும்

உடலுக்குள் இரு உயிர்   
ஒரே  உயிரில் இரு உடல்கள் 
இரத்த பந்தத்தில் 
வந்த சொந்தம் 
உறவில் உயர்ந்தது 
நித்தம் வளர்வது 
பாசத்தின் உச்சம் 
பிறப்பெனும் எச்சம்..
தொப்புள்கொடியும் பாசக்கயிறாகும் 
அதிசயத்தின் உச்சம்  
பூஜ்யமான வாழ்வில் 
ராஜ்யத்தை ஆள்வதும் 
அணைப்பதிலிருந்து 
எரிப்பது வரையில் 
கை விலங்காகி 
விளங்காத புதிருக்கு 
புதிதாக மனித விதையை 
நட்டுவைத்து வம்சம் விதைக்கும் 
தாயும் ,,,,, நம்பிக்கை கரங்களை 
அவள் நோக்கியே நீட்டி 
உலகம் படிக்கும் சேயும் 
நிறைந்த உலகமிது 
சூரிய சந்திரன் போல் 
மறைந்தும் வளர்ந்தும் 
புவியாய் சுழலும் வரம்...!


ஜெயஸ்ரீ ஷங்கர்,
ஹைதராபாத் 

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

முகங்கள்...!



Image result for முகங்கள்...!


-
வெற்றுக் காகிதம் தான் 
பல உணர்வுகளின் 
வேர்கள் எங்கும்  பரவி 
ஒப்பந்தக் கையெழுத்திட்டு
குழந்தையாய் பயந்து 
இளமையாய் வெட்கி
கம்பீரமாய் நடந்து 
தன்னம்பிக்கைச்  சின்னமாகி 
உருவத்தின் முகவரியாய் 
வசீகர காந்தமாய் 
அனுபவ காலங்கள் 
கடந்து கிழிந்து 
கிறுக்கல் காகிதமாகி 
இளமையைக் கடந்து 
இயலாமையில் தவித்து 
தனிமையில் துவண்டு 
குறுகிக் குனிந்து 
வெளிச்சத்திலும் தடுமாறி 
உருமாறிப் போனதாய் 
நெஞ்சோடு உறவாடி 
தைரியம் குலைந்து 
மௌனத்தை மொழியாக்கி 
மனத்தை ஊமையாக்கும் 
மனித முகங்கள்....!




திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அவர்களும் நானும்..!

11911066_876881972366003_724950865_n


இந்தக் கதவுகளைப்  
போலவே 
மனப்பேதங்கள் 
அவர்களிடத்தும்...!

நித்தம் நித்தம் 
காற்றில் இடிக்கும்  
கதுவுகளாய் 
வார்த்தைகள் ..
அவர்களின் 
பரிமாற்றங்கள்..!

பாதுகாப்பாய் இணைத்திட 
அங்கே தாழ்பாள் இல்லை 
பூட்டுமில்லை 
சாவியுமில்லை...!

பாதுகாக்கப் பட 
வேண்டிய...நான் 
வீட்டு வாசலில்...!

அவர்களோ...
திறந்த கதவுகளாய் 
மன விடுதலைக்காக 
கோர்ட்டின் வாசலில்..!

=+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=


இரட்டைச் சம்பளமும்   
குறைவு தானாம்...!
குடும்பமாய் வாழ மட்டும்   
ஒற்றைக் குழந்தை 
கூட அதிகமாம் ..!

பாட்டியும் தாத்தாவும் 
ஆளுக்கொரு 
முதியோர் இல்லத்தில்
தனித் தனியாக...!
உறவுகள்  எதுவும் 
ஒட்டாத தனிவீடிது..! 
பள்ளி திரும்பியதும் 
பூட்டு தான் 
சிரித்து வரவேற்கும் 
விரல்பிடித்து..விளையாடும் 
நித்தம் என்னோடு...!

ஆறுமணி வந்துவிட்டால் 
அலுத்துவிடும் பூட்டெனக்கு..
காற்றைக் கட்டிக் கொண்டு 
கண்களில் தேடலோடு 
அம்மா வரும்வரையில்  
நானும் நிற்கிறேன் 
அனாதையாய்..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வீட்டுக் காவலுக்கு  
இங்கே நான் .!
சங்கிலி கட்டாத 
நாய்குட்டியாக 
கைகளைக் கட்டி 
நிற்கிறேன்...!
பூட்டே..பூட்டே..!
திறந்திடு சீஸே ..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சனி, 1 ஆகஸ்ட், 2015

மன்னித்தருள்வீர்..!







எழுந்து வாருங்கள் 
கல்லறை உடைத்து 
இயேசுவிற்குப் பிறகு 
உயிர் கொண்டெழுந்த 
உத்தமப் பெயரை 
நீங்களும் நிலைநிறுத்த 
உடனே எழுந்து வாருங்கள்...!

'கலாம்' இல்லை 
எனும்  தைரியத்தில் 
ஊடகத்தை ஒட்டகமாக்கி 
உமைப் பற்றியே அவதூறு 
முட்களைத் தூவி
மகிழ்ச்சிப் பயணம் 
செய்து மகிழும்  
வீண் விலங்குகள்..!

தங்கள் முகத்திரை 
கிழித்து முத்திரை 
பதிக்கும் அவலங்கள் 
நல்ல மனங்களை 
நிமிடா நிமிடங்கள் 
பாதிக்கின்றதே தமிழா...!

செத்த பாம்பை 
அடித்து அவார்டு 
வாங்கியே பழக்கப்பட்ட 
அற்ப ஜீவன்கள் 
பேனா பிடித்துவிட்டால் 
பித்தலாட்ட எழுத்துக்களும் 
காவியம் படைக்குமென  
தலைக் கனத்தில் 
உனது பொன்னுடல் 
பூமிக்குள் புதையவே 
காத்திருந்தார்ப்போல் 
காலம் நேரம் 
அறியாது கட்டவிழ்க்கும்
வஞ்சகக் கயவர்கள்..!

மாணவர் நலனே 
முழு மூச்சென நாடி 
உந்தன் கோடி 
மூச்சை நிறுத்திக் 
கொண்டாய்...!
அறிய ஞானி 
நின்புகழ் வான்புகழாக 
அவர்தம் காதுகளுக்கு 
காய்ச்சிய ஈயமாகி 
உம்மேலும் மேலும் 
களங்கப் பத்திரிகை 
வாசிக்க எத்தனித்த 
பித்தர்களும் எத்தர்களும் ....!

இங்கே அவர்களை 
நிறுத்தச் சொல்ல 
எவருமே இல்லையா?
இத்தனை ஆண்டுகள் 
சேகரித்த உழைப்பின் 
பலன்கள்  வீணாவதேன் ..?
தேன்கூட்டை அழிக்கலாம்....!
நம்பிக்கைக்  கூட்டை 
சிதைக்கலாமா?
உம்மை  நம்பியவர்கள் 
அனைவரும்  நடுத்தரமாம் 
தானே  உயர்தரம் 
என்றெண்ணி கொண்டே 
கீழ்த்தரம் குறைக்கிறது..!

உத்தம தமிழன் 
நீங்கள் வரமாட்டீர்கள் 
இந்தப் பொல்லாத 
நாட்டிற்கு உழைத்த
நேரங்கள் அத்தனையும்  
விழலுக்கு இறைத்த நீர்
தானோ... ?

ஆன்மா அடங்கியதும் 
அராஜகத்தின்  ஆக்கிரமிப்பு 
ஆச்சரியம் தருகிறது..!
ஊடகத்தை பொய்மூட்டை 
ஏற்றி உலாவரும்  
ஒட்டகமாக்கி உலகெங்கும் 
ஓட விரட்டினால் 
தாங்குமா எங்கள் நெஞ்சம்...?

புதிய ஏற்பாட்டில் 
சிலுவை சுமந்த 
இயேசு சொன்னது 
போல் தாங்களும் 
இவர்களை மன்னித்து 
அருள் செய்வீர் 
நம்புகின்றோம் ..!

வியாழன், 30 ஜூலை, 2015

இது சத்தியம்..!

துன்பவியல் சூழ்ந்த நாடு
'அத்தனையும்' வென்று
'அத்தனையும்' கடந்து
துன்பியல் வாழ்க்கைக்
கடலில் துணிவுடன்
வெற்றி கொண்டு
கரைமீண்ட பிரமாண்ட
கப்பல் வாழ்வே உமது..
இது சத்தியம்..!


தோல்விகள் தொடராமல்
வெற்றிக்கனி பறிக்கவில்லையே
நீங்கள்..!
தோல்விகள் தழுவிய
வேதனைகள் அறிந்ததாலோ
அனைவர்க்கும் அகத்திருள்
நீக்கி ஆறுதல் மருந்திட்டு
ஆக்கும் தெளிவு கற்பித்த
அற்புத ஆசிரியர் ஆனீர்
இது சத்தியம்..!


எளிமையில் பெருமை கண்டு
கருணையில் கனிவு கொண்டு
திறமையில் உயர்வு கண்டு
உழைப்பில் வெற்றி கொண்டு
உலகயே இந்தியாவைத்
திரும்பிப் பார்க்க வைத்த
மெய்ஞான ஞானி
விஞ்ஞானி அல்லவா நீவிர்
இது சத்தியம்..!


அறிவுக் கடலில்
நீந்தி நீந்தியே
குடும்பக்கடலை விட்டு
தூரம் கடந்தவர்..!
"எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்"
வாக்குப் பலிக்க
வாழ்ந்து காட்டிய
வாழ்ந்து பார்த்த
கருணை தெய்வம் ..!


இமயத்தையொத்த
நி
ன்தன் மனத்தின்
எண்ணங்கள் அத்தனையும்
ஒவ்வொரு இளைஞனுக்கும்
நீங்கள் அளித்திட்ட
வாழ்நாள் பரிசல்லவா..!
நின்தன் நிழல்தொட்டுத்

தொழும் இளம் உள்ளங்கள்
இனி நிஜத்தில் உந்தன்
கனவுக் கோட்டைக்கு
முகவரி தருவார்..
இது சத்தியம்...!


"கோடி மரங்களை நட்டுவிடு "

ஆணையிட்டு சென்றாலும்
அத்தனையும் வேர் பிடிக்க
வேகமான விவேக்கை
விவேகமாக்கி ஊக்கத்துடன்
ஊரே பிடிக்கவைத்த
இந்தியத் தேர் வடம்
இழுக்க வைத்த
விஞ்ஞான பிரம்மாவும்

நீறன்றோ ..இனி
இந்தியாவில் புதிதாய் எழும்
அத்தனை மரங்களும்
கிளை விரித்தழும்
உங்களைக் காண..
இது சத்தியம்...!


தனித்துவத்தை மட்டுமே
நெஞ்சம் முழுதும் சுமந்த
நிந்தன் வாழ்வே தனித்துவம்
கண்டது..எண்ணம் போலே
வாழ்வு என்பதம் வென்றது..!
இந்தியாவே நின் மௌன
முகம் கண்டு உறைந்தது.
இது சத்தியம்...!


நிந்தன் மனமொழி அறிந்த
இறைவன் வரம் அளித்த
'நேரம்' தான் தவறானதோ?
காலன் காலம் பார்க்கத்
தவறியதால் காலமானீரோ?
சம்பவத்தையும் சரித்திரத்தையும்
வரைபடமிட்டது போல் நிந்தன்
சகாப்த வாழ்கை..மனித
சகாப்தத்தின் ஒரே வழிகாட்டி..
இது சத்தியம்...!


வந்த... வாழ்ந்த... சென்ற...
ஆத்மாக்கள் கோடி கடந்தாலும்
கோடிப் புண்ணியம்
செய்தால் மட்டும்
கிடைத்திட்ட அதிசயப்
பிறவியை அல்லவா
உந்தன் ஆத்மா கண்டது...!
வாழ்ந்தால் உங்களைப்
போன்ற மனத்துடன்
வாழவேண்டும்.
'அப்துல் கலாம்' எனும்
எளிய மெழுகுவர்த்தி....
ஏற்றி ஏற்றி ஏற்றி....
சளைத்திடாமல்
ஏற்றும் போதே
தானும் கரைந்து
காற்ற்றோடு கலந்தாரே...
இது சத்தியம்...!


நீங்கள் ஏற்றி வைத்த
தீபங்கள் அணையாத
தீபங்களாகி இந்தியாவை
இருள் சூழ்ந்திடாமல்
எந்நாளும் ஒளிசூழும்..
இது சத்தியம்..!


எத்தனையோ சகாப்த
சாதனையாளர்களுக்கு
முன்னோடியும்
முன்னணியுமாய்
நீங்கள் மட்டுமே
மனித சகாப்தத்தின்
இலக்கண விதிமுறையில்
சகாப்த முகவரி...
இது சத்தியம்..!


கோடி நட்சத்திரங்களுக்கு
மத்தியில் நீங்கள் ஒளிரும்
விசித்திர நட்சத்திரம்..!
இயற்பியல் நின்தன்
இறப்பை ஜீரணிக்க
முடியாமல் இனி
இடிந்தே போகலாம்...
இது சத்தியம்...!


பற பற பற ..உனக்குள்
சிறகுகள் உண்டென
இளம் உள்ளகளுக்கு
பறக்கக் கற்றுக் கொடுத்த
அதிசய பறவை நீர்..!
பறக்கும் கனவிலேயே
வாழ்நாள் முழுதும்
பறந்ததால் தானோ
உந்தன் உயிர் பறந்த
பின்பும் உடலும்
பறந்தே வந்தது...
இது சத்தியம்...!


நீங்கள் வகுத்தளித்த
வாழ்வின் ரகசியங்கள்
அத்தனை உள்ளத்துள்ளும்
பாதைவகுக்க எங்கள்
வழி நெடுகிலும்
தங்களின் மனத்தடங்கள் ..!
விவேகானந்தரின் வழியில்
அவர்தம் கனவுகள்
தங்களுக்கு வசப்பட
தங்களின் கனவுகளை
மெய்ப்படுத்த தங்களின்
ஆத்ம வாரிசுகளாய்
என்றும்...எங்கும்... உங்கள்
இந்திய வாரிசுகள்..!
இது அஞ்சலியல்ல..
இது சத்தியம்...!

ஞாயிறு, 10 மே, 2015

அம்மாவை வணங்காது உயர்வில்லையே..!


 Image result for indian mother

பெற்றவள் நீ எனக்கென்றும்
நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம்

நினைவு தெரிந்த நாளாய்
என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்

கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த 
உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம் 
ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து 
செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்
பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும்
சூரியகிரணமாய் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம்
அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே 
காட்டி அம்மையப்பனாகத் மாறும் சாத்தியம்..
பசியையும் துன்பத்தையும் காணவிடாது
உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம்

கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல்
நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்

நாங்கள்  வண்ண ஆடையில் வலம்வர 
உந்தன் எண்ணம்  எங்களோடு  உலாவரும்
ஆனந்தமோ ஆர்ப்பரிப்போ ஏதுமின்றி
கிடைத்ததை ஏற்று வாழும் நீயே வெற்றியின் வடிவம்
பருவகாலங்கள் கடந்து செல்ல எங்களின்
நிகழ்கால மாற்றங்களைத் தாங்கும் நீ அன்புமேகம்
பார்த்திருந்தபோதே தலையுயர்ந்து நின்றபோதிலும்
குழந்தையாய் எண்ணி நேசிப்பது நீ மாத்திரம்

கூட்டைவிட்டு  நாங்கள் ஆனந்தமாய் பறந்திட
தனிமையில் அழுமே ஏக்கத்தில் உன்னிதயம் 

அன்போடு சோறூட்டியே  பழக்கப்பட்ட நீ 
ஊட்டிவிட எவருமின்றி சோர்வாய் பாவம் 

இன்றாவது  இவள்  வருவாள்  என்று வழிமேல்
வைத்த விழியாய் காலம் நோக்கும் கர்மயோகம்

கைபேசி என்றொரு மந்திரப்பாவை
இல்லையேல் நான்  வெறும்  நடமாடும் எந்திரம்

வாழைபோல் உந்தன்  இயல்பு இனி
யார் பெறுவார் இதுபோல் அருமருந்து
தாயெனும் சொல்லுக்குள் இத்தரணியே
அடங்கிடும் அதிசய ஆகர்ஷண மந்திரம்
வளர்ந்த பின்னே பிரிந்திட்டாலும்
எண்ணத்தில் எந்நாளும் வாழவாழ்த்தும் இருதயம்

என்பெயர் அழைத்தே மறந்து போனதுன்  
பெயரை நீயறியாது அழைக்கும்  எனதுள் மண்டபம்

மூப்பும் திரையும் உன்னை மென்று விழுங்கினாலும்
உந்தன் குரல் சொல்வதெல்லாம் அனுபவ வேதாந்தம்

கற்க வேண்டும் நான் கூடு விட்டுக் கூடு பாய
ககன மார்க்கத் தந்திரங்கள் உனக்காக மாத்திரம்

அம்மா அம்மா எனவே காகமெனக் கரையும்
மனமிங்கு தேடுது வாழ்வின் ஜீவாதாரம்

இமைக்கும் விழிக்குமான தூரம் நமது
இருந்தும் காணத் தடுக்குது இகபரம்

காலத்தால் நானும் ஓர் தாய் ஆயினும்
உள்ளத்தில் உன் காலடியில் உருகும் மனம்
உருளும் பூமியில் மாறிவரும் பிறவிகளில்
மறுபடி உனக்குள்ளே எடுப்பேன் தேகம்
தோன்றியதை எழுதியதில் ஆணித்தரம்
சரியென்றால் நீ தருவாய் தலையசைப்பில் சம்மதம்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

தாய்மை



 தாய்மை க்கான பட முடிவு


தாய்மை தாங்கும் அச்சாணி 
வெறும் கவிதைக்குள் 
அடங்கி விடுமா தாய்மை…?
உதிரம் பகிர்ந்த உறவுகளின் 
உணர்வை ஆணிவேராக 
இதயம் புகுந்து ஊன்றி 
விழுதுகள் மண் தொடும் 
நங்கூரம் தாய்மை..!
இளமையில் இனிமையானது 
முதுமையில் தனிமையானது 
கடமையில் மேன்மையானது 
பொறுமையில் பூமியானது 
தூய்மையான கருணையே தாயானது..!
சுழலும் பூமிக்கு அச்சாணி 
தவிக்கும் இதயத்தின் தோணி 
இலக்கில் உயர்த்தும் ஏணி..
குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!
மேன்மை கண்ட தாய்மை 
மென்மை கொண்ட பதுமை 
வறுமை இடத்தும் பெருமை 
கொள்ளும் அவள் அருமை 
மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!
கொட்டிக் கொடுத்தாலும் 
கிட்டாத சிம்ஹாசனம் 
அடையாளம் இல்லாத 
ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!
வெடித்த பாறையில் பச்சிலை போல் 
விரிந்த வானத்தின் கார்மேகம் போல் 
பொங்கும் கடலின் தொடர் அலைபோல் 
இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!
உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும் 
உருவுக்குள் அடங்கி விடாது 
உணர்வுக்குள் முடங்கி விடாது 
கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!
உயிருக்குள் உயிராக 
உலகுக்கே உயிராக 
பெருஞ்ஜோதியின் வரமான 
பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

வியாழன், 8 ஜனவரி, 2015

புவன ஞானி



 


 வாய்மையொன்றே வாழும் குகைக்குள்
பொய்யொன்றே பேசி ஆளும் மன்னன்
நான்கு விரற்கடை நீளத்தில் உலகையே
ஆள்பவன் அளப்பவன் கதையளப்பவன்


பாசத்தைப் பணயம் வைத்து பகடை ஆடுபவன்
ஈர நெஞ்சத்திற்கும் வீர நெஞ்சத்திற்கும்
பேதமின்றி கள்ளத்தனத்தை பங்கு வைப்பவன்
அசந்த போது அடிமனதை அசைத்து விடுபவன்

நெஞ்சத்துள் வஞ்சத்தை அடக்கி வைப்பவன்
புன்னகையில் விஷத்தைக் கூட விருந்தாய் வைப்பவன்
நண்பனையும் சுயநலமாய் சந்தேகிப்பவன்
கண்ணிருந்தும் இதயக்குருடன் ஊமையானவன்

ஏழுலகம் இயங்கும் இதயஅன்பு அச்சாணி
மனங்கள் உயரத்தானே உயரும் அன்பு உச்சாணி
புரிந்திடாமல் வாழும் புவன ஞானி யாரிவன்?
வாள் ஏதுமின்றி குத்திக் கொல்லும் நாக்கு தானவன்.

கவிதையும் கற்பனையும்...!



ரிஷிமூலம் நதிமூலம்
தேடுதல் போல்
முட்டைக்குள் கோழியா ...?
விதைக்குள் விருட்சமா ..?
ஆராய்ந்து அறிவைச்
சொறிந்து சொறிந்து
சீ...போ  இந்தப்பழம் புளிக்கும்
நரியின் உணர்வை
முகத்தில் நிரப்பி
வெற்றுக் காகிதத்தில்
உணர்வை நிரப்ப
அறியாது தவித்தவளை
கவிதை நாயகி
திருப்பாவை  கோதையவள் 
கேட்டு நின்றாள்
ஒன்றுமேவா ஓடவில்லை..?

எழுந்தது அறிவுக்குள்
ஆக்ரோஷம்...  கவிதை என்ன?
கற்கண்டா கமர்கட்டா
கடலைஉருண்டையா?
பத்துக் காசுக்கு 
பக்கத்துக் கடையில்
வாங்கி வருவதற்கு ...!
எரித்த பார்வைக்கு
ஏகத்துக்கு எகிறி நின்றாள்
நாரணன் நங்கையும்..!
எண்ணத்தில் அடுத்து
மீரா வந்து மிரட்டுமுன்னே
கவிதையைத்  தோண்ட
கற்பனை மண்வெட்டியைக்
கையெடுக்க சிந்தனை
ஊற்று வழிசொல்லலாச்சு..1
கோடி கோடியாகக்
கொட்டிக் கொடுத்த
எண்ணங்கள் யாவும்
கற்பனைக் குதிரையைத்
தட்டிய கவிஞரவர்
கற்பனைத் தாயின்
அற்புதக் குழந்தைகள்
நெஞ்சத்துக்  கனவுகள்
இன்பத்துத் தனிமையில்
உணர்வுகளின் உலகமாகி
காவியக் குழந்தைகளாய்
பெற்றெடுத்த கவிதை
மகளின் அன்புத்தாயே
கற்பனை தானே..!
கடலுக்குள் ஓடி
மறையும் நதியென
கற்பனைக் கடலுள் 
நீந்தி மகிழும் 
கவிதை அலைகள்...!


ஜெயஸ்ரீ ஷங்கர்
ஹைதராபாத்

வியாழன், 1 ஜனவரி, 2015

மாய முகமூடி

 
 
 Mahavatar Kriya Babaji Nagraj
 
 
மூச்சுக்கு முடிச்சு
மாய முகமூடியாய்
கனவான நனவுக்கும்
நனவாகும் கனவுக்கும்
இடையே நசுங்கி
வாழ்வின் எல்லை
மூச்சை கர்மாவின்
கடை நிலையில்
கணக்குப் பக்கங்கள்
யாவும் சரியானால்
கிழித்திடலாம்
முகத்திரையை ..!

மாய உலகின்
மந்திர மயக்கத்தில்
மதி பிறண்டு
வழி மறந்து
மாய வலைக்குள்
சிக்கி மகிழ்ந்தால்
ஆசையின் தூபம்
ஆணவத்தின்
ஆதிக்கம்
கைகுலுக்கி
உள்ளத்தைக்
கள்ளமாக்கி
உயிருக்குள்
பாரமேற்றி....

இரண்டு வழிப்
பாதையில்
முக்தியின்
கதவுகள்
மூடும் போது..
மீண்டும்......
பிரபஞ்சச் சிறை....
குடும்பச் சிறை
உடல் சிறை..
அதனுள்......
உயிர்ச் சிறை...!

மாய பூமியை
கனவாக்கி
சத்திய பாதையை
சரியாக்கி..
ஜீவிதம் கடந்திடின்
ஜீவன் முக்தி பெறும்
காலச் சக்கரம்
சுழன்றாலும்
மாயை சூழ்ந்தாலும்
சூட்சும மனிதனுக்கு
மரணம் கூட
வருவதில்லை...!



ஜெயஸ்ரீ ஷங்கர்

திங்கள், 15 டிசம்பர், 2014

இலக்கு..!




உயரப் பறக்கும் பருந்தின்

கண்களுக்கு பஞ்சாரக் கோழியின்

குஞ்சுகளே இலக்கு..!


வழியறியாது  அருவியாய் மலை

இறங்கிவிட்டாலும் காட்டாறுக்கு

பொங்கும் கடலே இலக்கு..!


நாண் இல்லாமல் வண்ணவில்லை

வான் எறிந்து தோற்றாலும்

பூமியே மேகத்துக்கு இலக்கு..!


வில்லை  இழக்கும் அம்பிற்கும்

சுதந்திரச் சிறகுகளை

சிதறடிப்பதே இலக்கு..1


இலக்குகள் அற்ற மனங்கள் இருளில்

தீட்டும் ஓவியமாம்  உணர்வுகளையும்

உருவாக்கி உயிர்ப்பித்திடும் இலக்கு..!



வீழ்ந்து விட்டதாய் சோர்ந்திடாமல் நண்பா

எழுவதற்கான  கனவொன்று இருக்கு

இமயத்தின் உயரமே உனக்குள் இலக்கு..!



தோல்வித் துயரங்கள் தொடர்ந்தாலும்

துணிவைத் துடுப்புகளாக்கி தொடர்ந்து

வெற்றியை காண்பதுவே இலக்கு...!



ஆயிரம் சூழ்ச்சிகள் முன்னிலையில்

வெற்றியின் சூத்திரங்கள் உன்மனதில்

வீழ்ச்சிகள் கடந்திடுவாய் அதுவே இலக்கு...!



இலக்கு எனும் மந்திரச் சொல் செய்திடும்

மனத்துள் தந்திரங்கள் - ஆயின் உலகம்

ஓங்கிட  அன்பு ஒன்றே இலக்கு...!


இலக்கு எனும் அச்சில்  சுழலும் பூமி

இலக்கு அச்சாணியில் இயங்கும் இயற்கை

இலக்கு என்ற தேடலில் வாழும் மனிதம்

இலக்கு சற்று விலகினால் தவறிடும் கணக்கு...!


பூமியின் வளங்கள் அனைத்தும்

இலக்கின்றி தகர்க்கும்போது பொறுமையின்

எல்லைக்கு பூகம்பமே இலக்கு...!


அல்லும் பகலுமென கருமவினைக் கணக்கெடுத்துப்

படைத்துப் பெருக்கும்  ஆக்கும்

தொழில் நிறுத்துவதே பரமனின்  இலக்கு..!

வியாழன், 11 டிசம்பர், 2014

பூவுலகு பெற்றவரம்....!

 



பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
ஒய்யார முண்டாசுக்குள்
ஓயாத  எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால் வானத்தில்
கார்மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல் கவிதை
ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப்போட்டு நகைப்பவன் 

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
சங்கம் முழக்கியவன்

இறுக்கிச் சுற்றிய முண்டும்
கரு மீசையும் கனல் கண்களும்
கன ஆடையில் அச்சத்தின்
முகவரி  தந்தாலும் அச்சமில்லை
என்று இச்செகத்திற்கு
கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் ஒடுங்கிக் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டெழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன் பாதை மாறாமல்
கவிதை போதைக்குள் மூழ்கியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்தும்
எண்ணத்திலிருந்தும் விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி வணங்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்ன தீ ..!
பாரதி உந்தன் பார்வை தீ...!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விடவா பிறந்து வந்தாய்...!
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயன்றோ பூவுலகு பெற்றவரம்....!


ஜெயஸ்ரீ ஷங்கர்

பாரதி நீயே எங்கள் வரம்....!

 
 
 
பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
முன்டாசுக்குள் ஒய்யார
எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால்
வானத்தில் மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல்
கவிதை ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப் போட்டுச் சிரிப்பவன்

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
அடிமையாய் அழுதவன்

உயர் முண்டும் கரு மீசையும்
கனல் கண்களும் கன ஆடையில்
அச்சம் தந்தாலும் அச்சமில்லை
என்று கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டேழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்து
விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்னவன் நீ..!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விட்டுச் சென்றுவிட்டாய்
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயே நாங்கள் பெற்ற வரம்....!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சின்னங்கள் ...!




 




பொங்கும் ஆசைகள்
பூம்புனல்  மனசுக்குள்
வானமென விரிந்த
கண்கள் கொண்ட
ஞாபகப்  பொக்கிஷங்கள்


அனைத்து உணர்வுகள்
சுமந்த உயிர் மூச்சுக்கள்
பாசி படிந்த சங்குகள்
மண் படிந்த சிப்பிகள்
கடல் நுரையின் பூக்கள்
நட்சத்திர மீன்கள்

கண் முழிக்கும் சோழிகள்
பவழப் பூங்கொத்துக்கள்
உல்லாசச் சுற்றுலாவில்
உன் பாதம் பட்டு நகர்ந்ததும்
என் உள்ளங்கையில்
சிக்கிய  கூழாங்கற்கள்
 

பட்டாம் பூச்சியின்
ஒற்றை இறக்கையின்
இறைவன் வரைந்த
அழகோவியம்
'குட்டிபோடும்' நம்பிக்கையில்
மயிலிறகின் ஒற்றைக்கம்பி

அரச மரத்தின் காய்ந்த இலை
காக்காப்பொன்னு
கலர்கலரா குமரிமண்ணு
நானிருக்கும் வரை
என்னோடிருக்குமென
நான் புதைத்து வைத்த
சின்னங்கள் ...!

என்று என் வாழ்க்கை
பாதைமாறிப் பயணித்ததோ
ஆழ்கடல் மனசில் இருந்தவை
அலைகடலுக்குள் அஸ்தியெனக் 
கலந்து விட
என்றாவது எங்காவது
கரையோரம் கால் நனைக்கும்
உன் பாதங்களில்
சிக்கும் இந்த 
வெண்சங்கு ..!




செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அருவி ...!

 
 

மலையரசி பெற்ற மகள்
பொங்கு மனம் கொண்ட மகள் 
ஆழ்கடலை ஆளவென்றே
கொஞ்சச்  சிலிர்த்தவள்
அன்னை மடி தழுவி
அன்பின் பிடி
நழுவிச்
சிரிக்கும் செல்வமகள்
தாயகம்  கடந்து
சிறுமலை பொழியும்
அருவியாய்
வனங்கள் கடந்து
வளங்கள் சுமந்து
தாயின் கனவை
நனவாக்கும் தேடலில்
தொலைந்து
தரை விழுந்து
துடித்து நெளிந்து 
ஆற்றின் வழி கண்டு
மகிழ்ச்சி வெள்ளமாகி
ஏற்றமும் தாழ்வும் இலக்கை அடைவதன்
இலக்கணத்தைச் சொல்லிக் கொண்டே
உயரத்தின் ரகசியத்தை
ஆழத்தில் பகரும் வேகம்
வரவேற்கும் கடலலைக்குள்
சங்கமித்தவள்
அன்பில் மூழ்கியே
ஓலைதனை அனுப்புகிறாள்...முத்துக் கடல் காண
வானம் விட்டு 
பொழிய வேண்டுமென

மேகத்திற்கு...!

----------------------------------------------


வெள்ளி, 12 செப்டம்பர், 2014

அச்சமில்லை அச்சமில்லை

 
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது?
உனது வீர வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
தமிழகத்தின் நீங்காத வரலாறாக
வாழும் போது ...!

நின் எண்ணங்கள் யாவும் இளமைக் 
கவிதையாய் நித்தம் உலா வரும்
ஒளி வெள்ளமாக ஒய்யாரம்
பெறும் போது ...!

உன்னைச் சிறப்பித்து ஆனந்தமடையும் 
தமிழ் நெஞ்சங்கள் துடிப்புடன்
தமிழைத் தாலாட்டிய தலைவன்
உனை நேசிக்கும் போது ..!

வண்ண மலர் மாலைகளிட்டு
உனை வணங்கிப் பாராட்டி
போட்டிகள் பல வைத்து
சந்ததிக்குச் சொல்லும் போது ..!

பிறந்த குழந்தைகட்கு
ஆணென்றும் பெண்ணென்றும்
பாராமல் ஆனந்தத்தில்
உன் பெயரே வைக்கும் போது ..!

உலகத்தின் இறுதி எல்லையிலும்
தமிழ் வாழும் எந்த மூலையிலும்

உன்னைச் சொந்தம் கொண்டாடி
அழைக்கும் போது ..!

நீ தந்த படைப்புகள் யாவுமே
நீ விட்டுச் சென்ற வெறுமையை
விரட்டி 'பாரதியென' 
என்றும்  உயிர் வாழும் போது ..! 

முண்டாசுக் கவி உன்னைக்
கொண்டாடிப் பார்க்கும்
திருநாள்  என்றென்றும்
"தாயின் மணிக்கொடி" பாடும் போது ..!

தாய்ப்பாலோடு தாரக மந்திரமாம்
"அச்சமில்லை அச்சமில்லை"
என்றூட்டி தலைமுறை
வளர்க்கும் போது ..!

ஆண்டுகள் உருண்டோடினாலும்
உந்தன் கவிதைப் பொக்கிஷங்களை
தூசி தட்டத் தேவையில்லை...நித்தம்
தங்கமுலாம் பூசும்போது..!
நீ இங்கு இல்லையென்று யார் சொன்னது..?