திங்கள், 20 ஜனவரி, 2014

இன்று போய் நாளை வா...!





ஜன்னல் வழியாக அவன் முகத்தைப் பார்த்ததுமே, கமலாவின் கை ஜாடையைப் புரிந்து கொண்டு அவன் அந்த வீட்டைத் தாண்டி வேகமாக நடந்தான்.

யாரது? சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர், 'பதில் தேவையே இல்லை' என்பது போல உப்புச் சப்பிலாமல் ஒரு கேள்வி கேட்டு விட்டு தான்பாட்டுக்குச் சாப்பிடலானார்.அவரது ஆபீஸ் போகும் அவசரம் அவருக்கு.

இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை....பேப்பர்காரன். ஒற்றை வரியில் அவரது கேள்வியை அமுக்கிவிட்டு "ஜீ தமிழில்" பாரம்பரிய சமையல் நிகழ்ச்சியாக அன்றைய 'அஞ்சறைப்பெட்டி' யை ஆவலுடன் பார்க்க சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள் கமலா..

பேப்பர் காரன் என்றால்...."பே.....ப் ....ப.....ரே........ய் ...." ன்னு ஒரு டிரேட் மார்க் சத்தம் வருமே என்ற சந்தேகம் கூடவா வராது இவருக்கு? நினைத்ததும் நமுட்டுச் சிரிப்பு வந்தது அவளுக்கு. நான் என்ன சொன்னாலும் இப்படி நம்பி விடுகிறாரே....எம்புட்டு நல்லவர்...! என்ற சந்தோஷமும் ஒரு பக்கம் கூடவே குதியாட்டம் போட்டது.

அவன் மறுபடியும் வருவானோ? என்று பயந்த கமலா, ஒருவேளை வந்து நின்றால்.....இவர் கண்ணில் பட்டுவிட்டால்...? தனது குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற சந்தேகத்தோடு, ஜன்னல் பக்கமாகப் பார்வையை ஓட விட்டவள்.....இந்நேரம் நாலு வீடு தாண்டி போயிட்டிருப்பான் என்று தனக்குள் சமாதானமடைந்தாள். கூடவே இன்னொரு மனது "சீ....நீ பண்றது ரொம்ப தப்பு.....இத்தனை வயசாச்சு உனக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்..." என்று இடித்தது. 'ப்ச்' என்று கோவை சரளா ஸ்டைலில் மனசாட்சியை உதாசீனப் படுத்திவிட்டு 'அஞ்சரைப்பெட்டிக்குள்' தன்னைத் அடக்கிக் கொண்டாள்.

"முதலில் அடுப்பை ஏற்றி, அதில் வாணலியை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ..." என்று சமையல் குறிப்புகள் வீடெங்கும் கேட்டது.

டீ ......கமலா.....உனக்கென்ன சமையல் தெரியாதா? இனிமேட்டா இதைப் பாத்துக் கத்துக்கிடப் போறே நீ ? எனக்கு இன்னும் கொஞ்சம் பீன்ஸ் கறி போடு. அப்டியே இன்னும் கொஞ்சம் தண்ணி எடுத்து வை. தயிர் சாதம் பிசைந்த கையை விரல் விரலாக வாய்க்குள் விட்டு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அவர்.

நான் ஒண்ணும் பார்த்துப்புடக் கூடாதே...உங்களுக்கு. நான் எதைப் பார்த்தாலும் பொத்துக்கிட்டு வந்துரும் . இத்தை ஏன்...பாக்கறே...? அத்தை ஏன் பார்க்கறேன்னு......இந்த டிவி பெட்டியும் அதுல வர நூறு சானலும் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் சாசனம் எழுதிக் கொடுத்திருக்குறாப்பலல்ல கேட்குறீங்க?

கல்யாணமாகி இந்த இருபத்தைஞ்சு வருஷத்துல எப்பவாச்ச்சும் நான் நினைக்கறதை நீங்க ஏத்துக்கிட்டு இருக்கீங்களா? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். என்னமோ நீங்க மட்டும் கவச குண்டலத்தோட பொறந்த கர்ணன் மாதிரி ரிமோட்டும் கையுமா பொறந்தாப்பல உள்ளங்கைக்குள்ள வெச்சுகிட்டு உங்க நாட்டாமையை நடத்துங்க. கோபத்தோடு எழுந்து டிவியை அணைத்து விட்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

கோபத்தோடே வந்து அவரது தட்டில் 'சொத்' தென்று விழுகிறது பீன்ஸ் கறி. 'டொக்' கென்று பக்கத்தில் தண்ணீரை வைத்து விட்டு அதுவும் பத்தாது என்று பார்வையால் அவரைக் வெடுக்கென்று கொத்திவிட்டு நகர்கிறாள் கமலா.

இந்தா கமலா....இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு நீ இம்புட்டு டென்ஷன் ஆகுற? நாங்க தொலைஞ்ச பொறவு பகலெல்லாம் நீ தானே வீட்ல தனியா இருக்கே. களுத கெட்டாக் குட்டிச் சுவருங்கறாப்பல பொழுதன்னைக்கும் நீயும்...அழுமூஞ்சி .சீரியலுமாத் தானே கும்மியடிப்பீங்க என்கிறார்.

என்னங்க நீங்க...? அப்ப நான் வீட்ல வேற ஒண்ணுமே செய்யுறதில்லையின்னு முடிவு பண்ணி சொல்ல வாரீங்களா? இந்தாங்க பிடிங்க....உங்க டிபன் பாக்ஸு ....என்று கையில் வைத்து அழுத்தித் திணித்து விட்டு. உங்க மூணு பேத்தையும் ஆபீசுக்கு அனுப்பி வெக்கிறதுக்குள்ள நான் படுற பாட்டைத் தான் "அவ்வை சண்முகி" படமாவே பிடிச்சிக் காமிச்சிட்டாங்கல்ல.

ப்ரியா இங்கேர்ந்து அம்பத்தூர் போகணும்.....அதுக்கு ஏழு மணிக்கே கால்ல சக்கரத்த மாட்டிக்கிறணும். நம்ப பிருத்விக்கி வடபழனி போகணும்....அவன் எட்டு மணிக்கி ரெக்கையைக் கட்டிக்கிருவான். நீங்க ஒம்போது.

அடியேய்.........!

இல்ல....ஒன்பது மணிக்கிக் கிளம்பற பார்டின்னு சொல்ல வந்தேன். உங்கள வேற எதாச்சும் சொல்லிப்புட்டு நான் நிம்மதியா இங்க மூச்சு விட்டுற முடியுமா? என்று பெருமூச்சு விடுகிறாள் கமலா. உங்க மூணு பேத்து வயித்துப் பாட்டைப் பாக்குறத்துக்கு நான் நாலு மணிக்கேவுல்ல எழுந்து 'அடுக்குளை நாட்டியமாட' வேண்டியிருக்குது. எனக்கு மட்டும் என்ன மாசம் பொறந்தா சொளையா யாரு அள்ளிக் குடுக்குறா? அன்புக்கு நான் அடிமைன்னு....பெத்ததுங்களுக்கு அடிமையாக் கெடக்கேன்....சலித்துக் கொண்டு சொல்லும் நேரத்தில்,

வாசலில் கேட்டைத் தட்டும் சத்தம் கேட்கிறது.

மூடிய வாசற்கதவுக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னலைத் தள்ளி விட்டு யாரென்று பார்க்கிறாள்.

பால் காசும்மா......! பால்காரப் பையன் பாண்டி நிற்பதைப் பார்த்ததும்.

"நாளைக்கி வாப்பா" சொல்லிவிட்டு ஜன்னலைச் சார்த்துகிறாள் கமலா.

"அம்மா.....நேத்துக் கூட இதே தான் சொன்னீங்க..." அவன் கேட்பது அவனுக்கே போய் சேர்ந்திருக்கும்.

"நாலு தரம் அலைஞ்சா என்ன...? நீ வந்து நின்னதும் நான் எண்ணிக் கொடுத்திடணுமா? மனசுத்துள் சொல்லிக் கொண்டாள்.

கமலா...அப்ப நான் கெளம்பறேன்....கதவை தாழ் போட்டுக்க. ஊரு கெட்டுக் கெடக்கு. எவன் வந்தாலும் தெறக்காத. ஆமாம்...சொல்லிப்புட்டேன். ஆமா....இந்த மாசம் பால்காசு, பேப்பர் காரன் காசு, கூர்க்கா காசு...பூக்காசு எல்லாம் கொடுத்திட்டியா? பொங்கல் காசு கூட ஆளுக்கு நூறு ரூபாய் எக்ஸ்ட்ராவா தரச் சொல்லி கொடுத்தேனே ..குடுத்தியா? என்று கேட்டவர், நான் தான் அம்புட்டு பேத்துக்கும் ஏற்கனவே சொல்லி வெச்சனே.....காசுக்கு காலை வேளையில மட்டும் வாங்கன்னு..? எப்ப வந்தானுங்க....? நீ எப்பக் குடுத்தே?.

எல்லாம் வந்தானுங்க....எல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாச்சு...என்று இவள் அவசரமாகச் சொன்ன அழுத்தமான பதிலைக் காதில் வாங்காமல்,

படியிறங்கி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறார். ஹெல்மெட்டை சரி செய்து விட்டு லேசாக திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ரோபோ மாதிரி விரைத்து உட்கார்ந்து கொண்டவர்.....அடுத்த நிமிடம் காணாமல் போகிறார்.

அவர் தலை மறைந்ததும், டிவியின் குரல் வீடெங்கும் சுதந்திரமாக ஒலித்தது.

வீடு அலங்கோலமாய் அவளை பயமுறுத்தியது. ஒரு நாள் போல தெனம்.....இதே வேலை. அலுத்துக் கொண்டவளுக்கு,
எரிச்சலூட்டுவதாக வந்தான் கேபிள் டிவி காரன்.

"இன்னிக்கி இல்லப்பா...நாளிக்கி வா..."அவனையும் திருப்பி அனுப்பிய திருப்தி கமலத்தின் முகத்தில் அச்சடித்தது போலத் தெரிந்தது.

இப்படித்தான்..மாதத்தின் முதல் தேதியில் கொடுக்கப்பட வேண்டிய தொகையை தெரிந்தே "இன்னிக்கில்ல நாளைக்கி வா.." என்று சொல்லி வந்தவர்களை குறைந்த பட்சம் ஒரு பத்து நாட்களாவது அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக்கி கொண்டது அவளுக்குள் இருந்த வில்லித்தனம்.

மாலையில் வழக்கத்துக்கு மாறாக கணவனும், மகனும், மகளும் கூட வீடு திரும்பவில்லை. நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது.
கமலாவுக்கு வயிற்றில் புளி கரைத்து கொதிக்க ஆரம்பித்தது.

அவள் பார்க்கும் வழக்கமான சீரியல்கள் கூட முடிந்து கொண்டே வந்தன. இந்நேரம் மூணு பேருமே வந்திருக்கோணமே,,,.ஏன் இன்னும் காணலை....யாருக்காச்சும்...ஏதாச்சும் ...? நெஞ்சு படபடத்தது. பூஜை அறையில் காசு எடுத்து முடி போட்டு வைத்து கும்பிட்டு விட்டு வந்து, கைபேசியில் தொடர்பு கொள்ள நினைத்தவள், எண்ணைத் தட்டவும்..."தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்" என்று சொன்ன தகவலையே சொல்லிக் கொண்டிருந்த பெண்ணைத் திட்டித் தீர்த்து விட்டு....வாசல் படியிலேயே காத்திருந்தாள்.


"ஷஷ்டியை நோக்க சரவணா பவனார் " என்று மனசு கவசம் பாடியது.

மணி ஒன்பதை நெருங்கும் வேளையிலே "ஹேய்....நான் தான் ஃபர்ஸ்ட்..என்ற ரீதியில் ..ப்ரியாவின் ஸ்கூட்டி வீட்டைத் தொட்டது.

வாடி.....வயித்துல பால வார்த்தே....என்றவள்....இன்னிக்கி என்னாச்சு..இம்புட்டு சீக்கிரமா வந்துட்டே...என்று கிண்டல் தொனிக்கக் கேட்டவள்,.ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டே....? நான் எம்புட்டு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா? இன்னும் ப்ருத்திவியும், அப்பாவும் கூட வரக் காணோம். அடியே....நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே நிக்கிறேன்...ஒம்பாட்டுக்கு போயிகிட்டே இருக்கியே....என்னாச்சு சொல்லுடி...!

உள்ளே சென்ற ப்ரியா, நேராகச் சென்று பிரிட்ஜைத் திறந்து பாட்டிலை எடுத்து மடக் மடக் கென்று தண்ணீரைக் குடித்துவிட்டு 'அம்மாடி....இப்பத் தான் நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே நேராக இரு வரேன்...வந்து சொல்றேன்...என்று பாத்ரூம் சென்று 'டப்'பென்று கதவை அடைத்துக் கொள்கிறாள்.

அப்போது, வாசலில் கணவரின் ஸ்கூட்டர் உருமும் சத்தம் கேட்கவும், கமலா வாசலுக்கு ஓடுகிறாள்.

என்னங்க...வந்துட்டீங்களா.....? இப்பத்தான் பாப்பா வந்துச்சு. இன்னும் பிருத்வி வரவேயில்லை. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருச்சோன்னு நான் பதறிப் போயிட்டேனில்ல என்கிறாள்.

உள்ளே வந்தவர், ஷர்ட்டைக் கழட்டி கோட் ஸ்டாண்டில் மாட்டியபடியே, "பதறிட்டே கெடக்காத , சூடா காப்பி கொண்டா...." என்றவர் வாஷ்பேஸின் குழாயைத் திறந்து 'சளக் ...சளக் ' என்று தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டு, துண்டால் துடைத்தபடியே.....'ஒரு பார்ட்டிக்கு ரெண்டு மெஷின் சப்ளை பண்ணி...ஆறுமாசமாச்சு...ரெண்டு டியூ தான் கட்டியிருக்கான்....நாலு மாசமா பணமே வரலை....எப்பக் கேட்டாலும், அடுத்த மாசம் சேர்த்துத் தாரேன்னு சொல்லிச் சொல்லி மாசத்தைக் கடத்திட்டு போயிட்டே இருந்தான்....' அதான் இன்னிக்கி எங்க முதலாளி என்கிட்ட 'அங்க போயி பணத்தை வாங்கிட்டுத் தான் நீங்க வீட்டுக்கே போகணுமின்னு சொல்லிட்டார். அதுக்குப் போனவன் தான்...அந்தப் பார்ட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டேன். "நாளிக்கி வாங்க...செக் தரேன்னு சொல்லிப் பார்த்தான்..." செக்கு தானே தரபோறீங்க ,அதை இப்பவே தர வேண்டியது தானேன்னு, நானும் விடாக் கொண்டனா நின்னு அவன்கிட்ட செக்கை வாங்கிட்டு வாரதுக்குள்ளார தாவு தீந்து போச்சு. அதான் லேட்டு. பணம் என்ன கொஞ்சமா? அம்பதாயிரம்....காசோலை...இதுவும் செல்லுமோ செல்லாதோ...! என்றவர் காசோலையைக் காண்பித்து விட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஏன்...பாப்பா...உனக்கு இன்னிக்கி இம்புட்டு லேட்டாச்சு? என்று ப்ரியாவை கேட்டுக் கொண்டே சூடான காப்பியை உறிஞ்சினார்.

ஆசுவாசமாக சோபாவில் சாய்ந்து கொண்ட மகள் பிரியா, "இன்னிக்கி கம்பெனில செமக் கடுப்புப்பா. மூணு மாசம் முன்னால நான் ஒரு 'பிராடக்ட் லாஞ்சு'க்கு ஒரு ஈவென்ட் கான்ட்ராக்ட் ஆர்டர் க்ளோஸ் பண்ணினேன். அவங்களுக்கு நல்ல படியா செஞ்சும் கொடுத்தாச்சு. பாலன்ஸ் பேமெண்ட் இன்னும் அவங்க கிட்டேர்ந்து வரலை. எப்பக் கேட்டாலும், நாளைக்கி...நாளைக்கின்னு சொல்லிக்கிட்டே இழுத்தடிக்கிறாங்க. அதான் இன்னிக்கு நேரா அவங்க கிட்டப் போயி உட்கார்ந்து
பார்த்தேன். கடைசி வரை, வாங்க முடியலையே.நாளைக்கி வாங்க, பார்க்கலாம்னு சொல்லியனுப்பிட்டார். இவனுங்கல்லாம் எதுக்கு பிரமாண்டமா பிராடக்ட் லான்ச் கொடுக்குறாங்க ..?.கெட்ட கேட்டுக்கு ...'ஈவண்ட் ஆர்கனைசிங்' வேற....வரும்போது ரொம்ப பவ்யமா வருவாங்க.....பேமென்ட் கேட்டா மட்டும் காலண்டரைக் காட்டுவாங்க. சலிப்புடன் சொன்னவள்...அம்மா..ரொம்பப் பசிக்குது, சாப்பாடு எடுத்து வெய்யுங்க என்கிறாள்.

'பிருத்திவியும் வந்துடட்டும் என்று சொல்லப்போன கமலா, வாசலில் அவனது 'அப்பாச்சி பைக்,அப்பாடா என்று கண்ணை மூடியதும்'...இதோ அவனே வந்துட்டான்....அவன் என்ன கதை சொல்லப் போறானோ? என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் ஓடினாள் தட்டுக்களை எடுக்க.

என்னாச்சுண்ணா......நீயும் லேட்டு...? நாங்க ரெண்டு பெருமே இப்பத் தான் வந்தோம் என்கிறாள் ப்ரியா.

'கலெக்சன் விஷயமா போயிருந்தேன்..மறுபடியும் நாளைக்குப் போவணும் ....இவன் இருந்தா அவன் இல்ல....அவன் இருந்தா இவன் இல்லன்னு....சாவடிக்கிறானுங்க, லோன் வாங்கும்போது நெறைய பீலா விட்டு வாங்கிட்டு ஓடிடுறாங்க, பணம் திரும்பக் கட்டும்போது மட்டும் என்னவோ மாமனார் வீட்டுலேர்ந்து சீதனம் வந்தா மாதிரி மறந்து போயிறுவாய்ங்க. இன்னிக்கிப் போயி ஒரு பிடி பிடிச்சேன்....எப்டியும் நாளைக்கி பைசல் பண்ணிருவேன். காரணத்தைச் சொல்லி விட்டு 'ம்மா...வெளிலயே நான் புரோட்டா சாப்டேன். படுக்கப் போறேன்....பொதுவாகச் சொல்லிவிட்டு கைபேசியுடன் அவனது அறைக்குள் சென்றான் பிருத்வி.

சாப்பாட்டுக் கடை முடிந்து, அவரவர் படுக்கையில் விழுந்தனர். அலைச்சலும், அலுப்பும் ஒன்று சேர கணவரின் மெல்லிய குறட்டையொலி அவரது தூக்கத்திற்கு தாளம் போட்டது. சுவர்க்கோழி இரைச்சல் போட்டது. கமலாவுக்குத் தூக்கம் வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் காதுக்குள் 'ஊய்ங்....' என்று கேட்டுக் கொண்டிருந்தது. நானும் தான் அம்புட்டு வேலை பண்ணேன் இன்னிக்கு. படுத்தா இப்படித் தூக்கம் வரலியே....ஏன்? பசங்க பாவம்.....வண்டியில நாயாப் பேயா அலையுதுங்க...இந்த வயசுல இவருக்கும் இம்புட்டு அலைச்சல் உடம்புக்கு ஆவாது...தான்...என்ன செய்ய..? மனத்தின் எண்ண ஓட்டத்தை தட்டி நிறுத்தியது 'சத்தம்'.


மேலும் ஒரு முறை கேட்டில் பலமாக இன்னொரு அடி....! 'படீர்' என்று சத்தம்...!

வாசலில் கூர்க்கா.......இவர்களது இரும்பு கேட்டை தனது கட்டையால் ஓங்கித் தட்டிவிட்டு நீண்ட விசில் ஒன்றை அடித்து விட்டு தான் இரவில் ஒழுங்காக டூட்டி பார்க்கிறேன் என்ற அடையாளத்தைச் சொல்லிவிட்டு நகர்கிறான்.

கமலா, காலையில் ஜன்னல் வழியாக அவன் முகத்தைப் பார்த்ததுமே, "நாளைக்கி வா" என்று கை ஜாடை காட்டி அவனை விரட்டியது இப்போது நினைக்கையில் மனதை என்னவோ செய்தது.

பாவம் அவன்.....இரவெல்லாம் தூங்காமல் நடந்து நடந்து 'காலனியைக் காவல்' காத்து விட்டு, காலையிலும் ஒவ்வொரு வீடாகப் போய் நின்று, அத்தனை வீட்டிலும் மாதாந்திரப் பணம் வசூலிக்க மாதம் முழுதும் பகலிலும் நடந்து கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறாள் கமலா.

இனிமேட்டு பால்காரன், பேப்பர்காரன், கேபிள்காரன், காவல்காரன்...என்று யாரையும் 'நாளைக்கி வா" திருப்பி அனுப்பக் கூடாது என்று நினைத்துக் கொண்ட கமலா அப்படியே அமைதியில் உறங்கிப் போகிறாள்.

======================================================================================================================






-

வியாழன், 16 ஜனவரி, 2014

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம்...!

பெறுநர்: vallamai


உட்பொதிக்கும் படங்கள் 1

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம்...!

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" 



தைப்பூசம் என்பது புனிதமான தை மாதத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தை பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஜோதி தரிசன விழா முக்கியமான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

முருகனை நினைத்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார் ராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் இன்றும் விமரிசையாக நடைபெறுகின்றன. 'ஜோதி தரிசனம்' காண மக்கள் அலை அலையாக வடலூருக்கு வருகை தருவார்கள்.

வள்ளலார் என்பவர் யார்..? தைப் பூச ஜோதி தரிசனம் தான் என்ன? இதோ...!

கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும் கிராமத்தில் ராமையா,சின்னம்மை தம்பதிக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக ராமலிங்கம் பிறந்தார்.

தந்தை காலமான பின்பு தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில ஆரம்பித்தார், அடிக்கடி ராமலிங்கம் கந்தகோட்டத்து கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம்வயதிலேயே இறைவன் மீது அனேக பாடல்களை இவர்கள் பாடியுள்ளார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த ராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்து தனது மனைவியிடம் ராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ராமலிங்கம் வீட்டில் தங்கி படிப்பதாக உறுதியளித்தார்.

அவர்களது வீட்டில் ராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

புராண சொற்பொழிவு செய்யும் அண்ணனுக்கு ஒருமுறை உடல்நலம் குன்றியபோது அவர் தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்னபடியே சில பாடல்களை ராமலிங்கம் மனமுருகப் பாடினார். இதன்பின், அவரிடம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அனைவரும் வற்புறுத்தவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்து இரவில் நெடுநேரம் சொற்பொழிவு செய்யவும், அங்கிருந்தோர் அனைவரும் வியந்து போற்றினர். அப்போது ராமலிங்கத்துக்கு ஒன்பது வயது தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பன்னிரண்டாம் வயதில் தினமும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத் துவங்கினார் ராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, தன் இருபத்தேழாவது வயதில், அவரது சகோதரியின் மகள் தனக்கோடியை திருமணம் புரிந்து கொண்டார். எனினும், ராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை வந்தடைந்தார்.

அங்கே கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் ராமலிங்கத்தை சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார் ராமலிங்கம்.

அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

அன்றிரவு, ராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை,எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம் 'சமரச வேத சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்' என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார். 'ஜீவ காருண்ய ஒழுக்கத்தை' கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, மத,மொழி,இன,நிறப்பாகுபாடுகல் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் சேவை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருப்பது ஆச்சரியம் மிக்க விஷயம்.

தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் உபயோகப்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்கு 'சித்தி வளாகத் திருமாளிகை' என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி 'பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றி தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் 'சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை' என்று பெயர் சூட்டினார்.

25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதையே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது.

தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கிச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்' என்று செய்து அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் ராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம். மாதா மாதம் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஜோதிப் பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். "ஜோதி தரிசனம்" என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியை தரிசிக்க முடியும். கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஜோதி தரிசனம் முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படும். திரைகள் விலகியதும் "அக்னி பிழம்பாக ஜோதி தரிசனம்" கண்ணாடியில் கண்டதும் நமது ஆத்மாவின் உள்ளே கண்டிப்பாக ஒரு அதிர்வு ஏற்படும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் உண்டாவது நிஜம்.

அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா தீபமாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் அறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. அந்த தீபத்தின் எதிரொலியே 'ஜோதி' ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.

இதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறை தரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்து விடுவதாக ஐதீகம். அன்று லாரி லாரியாக உணவுகள் தயாரித்து அன்னதானம் செய்விப்பார்கள். பசி என்பதே வடலூரில் இல்லாது செய்தார் வள்ளலார். பிற உயிர்களின் பசிப் பிணி போக்கி ஒப்பில்லாத திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு வேறு எதையுமே இணையென்று சொல்ல முடியாது. இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது..? இவர்கள் அனைவரும் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்றே சொல்ல வேண்டும். வள்ளலார் ஒரு சித்த மருத்துவரும் ஆவார். அவரது மருந்து குறிப்புகள் இன்றும் மக்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக சூழ்நிலையின் காரணமாக சிதம்பரத்தில் வாசம் செய்யும் பாக்கியம் பெற்றேன். அப்போது வடலூரில் வள்ளலாரின் "ஜோதி தரிசனம்' காணும் பேரு பெற்றேன். ஒவ்வொருமுறை அங்கு செல்லும் போதும் மக்களின் கூட்டத்தையும், அங்கு அன்னதானம் நடத்தும் பாங்கும், மூட்டை மூட்டையாக அரிசியையும், பருப்பையும் கொண்டு வந்து குவிப்பார்கள் பக்தர்கள். இதைக் காணும் போது நம்மிலும் அது போலச் செய்யத் தூண்டும். பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகவே எடுத்துக் கொள்ளத் தூண்டும்.

தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபை யை தரிசித்து விட்டு வாருங்கள். அங்கு வள்ளலார் இயற்றிய 'திருவருட்பா' வும் 'மகாதேவமாலை' யும் பளிங்கில் செதுக்கியிருக்கும் அழகைப் பார்த்தால் கண்கள் பனிக்கும் .வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு தானே ஒளியாக நின்ற பெருமான் நமக்கு அருளியிருப்பது பல நல்ல விஷயங்கள். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை'....என்பதைப் பொய்யாக்க்கும் பெரும் பொறுப்பு தற்போது நம்மில் உள்ளது.


தைப்பூச நாளில் காலை 6.30,10.00 மதியம் 1.00 இரவு 7.00, 10.00 மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறும். மானசிகமாகவும் நினைத்துக் கொள்ளலாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.




புதன், 15 ஜனவரி, 2014

காமதேனுவுக்கு சக்கரைப் பொங்கல் வேணுமா?

எமது கிராமங்களில் இருந்து...ஒரு விசிட்

தேரில் ஏறும் முன்னம் ..!



நன்றி:வல்லமை.

Wednesday, January 15, 2014, 5:30
ஜெயஸ்ரீ ஷங்கர்
த்ரீஃபோர்த் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டும், காதிலிருந்து  கழுத்துவரை தொங்கியபடி ஊஞ்சலாடியது தங்கச் சங்கிலி. பச்சை ஜேட் ஜெம் மாலை கழுத்தைப் பிடித்து இழுக்காத குறையாக கனத்தது.  தலை முடியை மொத்தமாகத் தூக்கி பனானா கிளிப் போட்டும் சில முடிகளை உதிரியாக பறக்க விட்டும் புதுமையான ஹேர் ஸ்டைலில் அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி. மஞ்சள் முகத்தில் இரண்டு கரு வண்டுகளும் ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு குறி வைத்துக் காத்திருப்பது போல முகமே சொன்னது.  ’விளம்பர மாடல்’ அழகியாகக் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன் நின்று டச் அப் செய்து கொண்டேஅதன் வழியாக ரேனுவைப் பார்த்தவளின் கண்களில் குறும்பும், வெட்கமும் ஒன்று சேர,
என்னடி ப்ரீத்தி….’சண்டே’யும் அதுவுமா இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷல்..? இப்படிக் கிளாமரா எங்கடி கிளம்புற? சம்திங் ராங்… என்கிட்ட சொல்லேன்….சந்தோஷப் பட்டுட்டுப் போறேன்…ப்ரீத்தியைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்கிறாள் ரேணுகா.
‘டேட்டிங்’……என்று சொல்லிவிட்டு உதட்டைக் குவித்து மெல்லிய விசிலடித்தபடியே கஷ்டப்பட்டுத் திரும்பிப் பின் அழகையும் பார்த்து திருப்திப் புன்னகை தவழ ரேணுகாவை நோக்கி புயலென வந்தவள் தொப்பென்று அவளருகில் உட்கார்ந்து கொள்கிறாள் ப்ரீத்தி.
யாருடி.அது?..புதுக்கதையா இருக்கு…உங்க வீட்டுல தெரிஞ்சா…’டின்னு’ கட்டிடுவாங்க, தெரியுமொன்னோ? “ஊரு விட்டு ஊரு வந்து…..காதல் கீதல் பண்ணாதடீ …பேரு கெட்டுப் போகும்படி…ஆப்பு உனக்கே வைக்காதடி…” என்று கட்டைத் தொண்டையில் பாடிக் காண்பிக்கிறாள் ரேணு.
சீ….லூஸு  லூஸு …..உன் தகர ‘வாயை வெச்சுகிட்டு சும்மா இருடி’….! என்று பதிலுக்கு ராகம் பாடிவிட்டு, ரேணுவின் அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு….” விஷ்ணு, அதான் அந்த ‘மலையாள மம்மூட்டி’…..இந்த சண்டே டேட்டிங் போகலாம் வரியான்னு கூப்பிட்டான்….அவனுக்கு என் மேலே ஒரு கண்ணு இருந்ததை விட எனக்கு அவன் மேலே ரெண்டு கண்ணும் மனசும் இருந்தது….அதான்.. சும்மாப் போய் அப்படி என்ன தான் இருக்கு இந்த டேட்டிங்குலன்னு பார்த்துட்டு வந்துடலாம்னு போறேன்.
எங்க போகப் போறே..? சொல்லித் தொலைச்சிட்டுப் போ….! ஆனா….நீ இப்படிப் பண்றது எனக்குப் பிடிக்கலை. அவனே ஒரு அம்மாஞ்சி மாதிரி இருப்பான்….உனக்கும் அவனுக்கும் செட்டே ஆவாது…விட்ரு. போயும் போயும் நீ தான் அந்த ட்யூப் லைட்ட….சைட் அடிக்கிறே…!
வம்புக்கிழுத்தாள் ரேணு.
போதும்….உன்னோட ஜோசியம்…! உனக்கு பொறாமை வந்திருச்சு…? ப்ரீத்தி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்..
அதெல்லாம் ஒரு மண்ணும் கெடையாது…..நீ எவன் கூட வேணா டேட்டிங்,போட்டிங் எங்க வேணாப்  போ….உங்க வீட்டுல தெரிஞ்சி உன்னை ஷூட்டிங் பண்ணினா அதுக்கு  நான் பொறுப்பில்ல…! என்னை நம்பி அனுப்பிச்சிருக்காங்க ஞாபகம் இருக்கட்டும், என்ற ரேணுகா தலையணையைக் கட்டிக் கொண்டு நான் இன்னிக்குப் பூரா நல்லாப் படுத்துத்  தூங்கப் போறேனே…என்னைக் கடிக்கிற எறும்பு இன்னிக்கு ஊர்கோலம் போகப்போவுதாம்…. என்று கவிழ்ந்து படுத்துக் கொள்கிறாள். ப்ரீத்தி கிளம்பத் தயாராகிறாள்.
ஏய்….ரேணு….உன் ‘கைனியை’ எடுத்துட்டுப் போவா…என்று அவளது ‘கைனெடிக் ஹோண்டா’ வின் சாவியை எடுக்கப் போனதும், துள்ளிக் குதித்து எழுந்த ரேணு….அதத் தொட்டீன்னா பாரு…..! ஏன்…விஷ்ணுவுக்கு வாகனம் ஒண்ணும் இல்லியா? வெச்சிருப்பானே…..ஒரு தகர டப்பா …! அதை உருட்டிட்டு வரச்சொல்லி  வந்து கூட்டீட்டு போய்ட்டு கொண்டு வந்து விடச் சொல்லு…சுத்த மக்காயிருக்கியே..நேத்துத் தான் நான் என் வண்டிக்கு  ’டாங்க் ஃபுல்’ பண்ணினேன்….அம்மாடி…! நீ எடுத்துட்டு போய் மொத்த சிட்டியை சுத்தி உரிஞ்சிட்டு கடைசீல காய்ஞ்ச கூடா கொண்டு வந்து நிப்பாடிடுவ…..அனுபவம் பேசுதும்மா ..அனுபவம் பேசுது..! என்று விவேக் ஸ்டைலில் சொல்லிவிட்டு சாவியை எடுத்துத் தலையணை அடியில் வைத்துக் கொள்கிறாள் ரேணுகா.
அல்பம்…அல்பம்…..என்று திட்டிய ப்ரீத்தி…..நாளைக்கு ப்ராஜெக்ட்ல ‘இது டௌட்டு’ன்னு என்கிட்டே வருவேல்ல …அப்புடு சூடு…! என்று ஷூவில் காலை நுழைத்துக் கொண்டே…..”பை..டி அல்பம்….என் வண்டியவே எடுத்துட்டுப் போறேன்….என்ன..! அதுக்கும் என்னை மாதிரியே பிரேக் இல்லை…!…எங்கியாச்சும் முட்டி…..என்று ப்ரீத்தி முடிக்கவில்லை….
இந்தா…..தொலை….மனசு கேட்கலை….என்று சாவியைத் தூக்கி ப்ரீத்தியிடம் வீச, அவள் லபக் கென்று பிடித்தவள்….உன்கிட்ட  செண்டிமெண்ட் பிட்டு தான் வொர்க் அவுட் ஆகுது…! நல்லபடியாக் கேட்டால்…..கொடுக்க மாட்டே…அனாவசியமா இன்னிக்கு என்னைப் பொய் சொல்ல வெச்சுட்டே…ம்ம்ம்..எனிவே ….. பை…என்று கதவைச் சார்த்தி விட்டு மறைந்தாள் ப்ரீத்தி.
னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா …ப்ரீத்தி,  பாடிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியது ரேணுவுக்கும் கேட்டது.அதைத் தொடர்ந்து கைனி  உறுமிவிட்டு மறைந்தது.
அறை திடீரென வெறிச்சோடியது போலிருந்தது ரேணுவுக்கு. ப்ரீத்தியும் ரேணுவும் பல வருடப் பழக்கம். ஒரே பள்ளி, ஒரே காலேஜ் என சேர்ந்து கும்மி அடித்து விட்டு…கேம்பஸ் இண்டர்வியூல  ரெண்டு பேரும் சேர்ந்து செலெக்ட்  ஆன விஷயம் தெரிஞ்சதும்…ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டாடி….சென்னையிலிருந்து பெங்களூருக்கு வேலைக்கு வந்தவர்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
எட்டு மாதங்கள் ஒழுங்கா ஓடின வண்டி….இப்பத் தான் தடம் மாற ஆரம்பிச்சுருக்கு…அதுவும் ப்ரீத்திக்கு. அவங்க வீட்டுல அவளுக்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் ரேணுவுக்கும் தெரியும்.இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப் போகுதோ? என்று எண்ணியவள், “சீக்கிரமா வந்து சேரு”. என்று ப்ரீத்திக்கு ஒரு மெசேஜ், அடித்து அனுப்பி விட்டு, எழுந்து அறையைப் பூட்டி விட்டு உறங்கிப் போனாள் .
தூக்கம் ரேணுகாவை கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றது.வித விதமான ஆடையில் ப்ரீத்தி விஷ்ணுவுடன் ஆடியபடி கூடவே கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. எத்தனை மணி நேரம் தூங்கினாளோ, புரண்டு படுத்தவளை சாம்சங் ”
“அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே… ” என்று அழைத்தது…
மின்னிய கைபேசியை எடுத்து…..ராட்ஷசி ….வந்துட்டா போலிருக்கு….நினைத்துக் கொண்டே….எழுந்து கைபேசியை மூடி வைத்துவிட்டு கதவைத் திறக்கிறாள்.
காலையில் பனிமலர் போலப் போனவள் ப்ரீத்தி வரும்போது அலைந்து திரிந்து அலுத்துப் போய் கசங்கிய காகிதமாய் நின்றிருந்தாள் .
அவளது அந்தக் திருக்கோலத்தைப் பார்த்த ரேணுகா….னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா….என்று பாடியவள்,,
வா…வா… ப்ரீத்தி….ஒரே நாள்ல இப்படித் தேய்ஞ்சு போய் வந்திருக்கே….என்னாச்சுடி ? ரேணுவின்  அதிர்ச்சி  அவள் குரலாக பேசியது.
ஹப்பாடி…..! என்ற ப்ரீத்தி அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் . கனவெல்லாம் கலைஞ்சு போச்சு…ஆனால் ரொம்ப நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே, அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மனம் விட்டு, வாய் விட்டு கல கலவென்று பெரிதாகச் சிரித்தாள்
என்ன ஒரே நாள்ல இப்படி மந்திரிச்சி விட்டுட்டானே அவன்…? படுக்குறா…புரளுறா …..சிரிக்கிறா….இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…ப்ரீத்தி சத்தமாகப் பாடினாள்.
என்னாச்சுடி உனக்கு? காதல் கிறுக்கு பிடிச்சிருச்சா? போச்சு போ..நீ விழுந்துட்டே…இனிமேல் அவ்ளோதான். இத்தனை நேரமா எங்கெல்லாம் போனீங்க?
நேரா பானர்கட்டா ரோட்ல இருக்குற ‘கோபாலன் இன்னோவேஷன் மால்’ தான் போனோம்….விஷுக்கு அங்க போகணும்னு ரொம்ப நாளா ஆசையாம். எனக்கும் பார்க்கணும்னு தான் இருந்துச்சு, சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
ஒரே நாள்ல விஷ்ணு உனக்கு விஷுவாகிப் போனானா? சரி..அந்த ‘ஜெயதேவா ஃப்ளை ஓவர்’ பக்கத்துல இருக்கே அதுவா..? வாய் பிளந்தவள், அங்கெல்லாம் போனா நம்ம சொத்தை எழுதி வாங்கி நடுத்தெருவுல விட்டுருவாங்கடி…அவ்ளோ டெம்ப்டிங்கா இருக்குமே…..நானும் வந்திருப்பேன்…என்று அலுத்த குரலில் மெல்லச் சொல்கிறாள் ரேணுகா.
நடந்து நடந்து செருப்பு ரெண்டு இன்ச் தேஞ்சு போச்சு.  ’கார்டை’ இழுத்து இழுத்து ‘கத்தையும்’ கரைஞ்சு போச்சுடி …! ‘ஸ்வைப் பண்ணும்போது மஜாவா இருந்துச்சு…..வெளில வந்து மனசுக்குள்ள கணக்குப் போட்டதும், ‘பகீர்’ னுச்சு .
க்ரெடிட்டா ….டெபிட்டா …?
ஆத்திரத்தை  மூட்டாதடி….நானே……ஹி ……ஹி ……ஹி …….ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …!
என்னடிது  பிரகாஷ் ராஜ் ஸ்டைல்ல…..சிரிக்கிற…? அவரு தான் டென்ஷன் வந்தா இந்த மாதிரி சிரிப்பாரு…உனக்கும் அது தொத்திக்கிச்சா என்ன..? கட்டிப்புடி வைத்தியம் தான் பண்ணணுமா …..? இல்ல பண்ணியாச்சா..?
தேவுடா…தேவுடா…எழுமல தேவுடா…சூடுடா..சூடுடா…இந்தப் பக்கம் சூடுடா…! கட்டை தொண்டையில் பாடியபடியே  ரேணு…இன்டக்ஷனை  ஆன் பண்ணி பாலைச் சூடு செய்தாள். ” காலேல ஒன்பது மணிக்குப் போன பொண்ணு இப்படி ராத்திரி பத்தரைக்கு வந்து நின்னு,,பைத்தியமட்டமா சிரிச்சா….நான் எங்கிட்டுப் போவேன்…டீ …..பயமுறுத்தாதடி …பொழுது விடிஞ்சா டூட்டிக்கு போகணும். இப்படிச் சிரிச்சு கூத்தடிக்கும்படிக்கு அப்படி என்ன தான் ஆச்சு உன் டேட்டிங்கு…? கேள்வி கேட்டா இந்தச் சிரிப்பு சிரிக்கிற…?
ஆஃபீஸ்ல அந்த விஷ்ணு உன்னை லோ லோன்னு  ஃபாலோ  பண்றான்னு எனக்கும் தெரியும்….நீயும் கண்டும் காணாத மாதிரி மனசுக்குள்ள ‘பல்பை’ எரியவிட்டுட்டு ரெக்கையெல்லாம் கட்டிக்கிட்டுப் பறந்து பறந்து உள்ளுக்குள்ளே புழுங்குறதும் எனக்குத் தெரியும்.அவன் சரியான ‘ட்யூப்’ டி. ப்ரீத்தி..! ஆமா…ஷாப்பிங் பண்ணினியே ஒரு கவரையும் காணோம்….எங்கியாச்சும் சிரிச்சுட்டே விட்டுட்டு வந்துட்டியா என்ன? என்னெல்லாம் வாங்கித் தந்தான் உன் விஷ்ணு?
இதைக் கேட்டதும்…மறுபடியும் ஹி ஹி ஹி ஹி ஹி  என்று விட்டு நிறுத்தியவள்…..’உட்லண்ட்ஸ் ஷூ’… ‘ரெய்ட் & டேலர்’ல ரெண்டு செட் ஃபார்மல்ஸ் , கோபாலன் சினிமாஸ்ல போய்  ’நோ ப்ராளம்” ஹிந்தி மூவி பார்த்துட்டு, ‘சாய் சிவ சாகர்ல’ ‘சவுத்  இந்தியன் ஃபுட்’ ஒரு கட்டு கட்டிட்டு , ‘பாஸ்கின் ராபின்ஸ்ல’ டெசெர்ட்….ம்ம்ம்…அமேசிங்….என்று ரேணுகாவின் வயிற்றில் நெய்யை ஊற்றினாள் ப்ரீத்தி.
அடடா….அடடா…..என்று பாலை ஆத்திக்கொண்டே… எங்கே ஷூவைக் காமி..பாக்கறேன் ..! நீ ரொம்ப லக்கிடி..ப்ரீத்தி. சந்திச்ச முதல் நாள்லயே…லக்கி ப்ரைஸ் அடிச்சாப்பல இத்தனை வாங்கிட்டு வந்திருக்கே..? விஷ்ணு ரொம்ப நல்ல ஆள்டி …அவனை  கை நழுவ விட்டுடாதே. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் எல்லாம் வொய்ஃ ப்புக்கு எது வாங்கணும்னாலும் கணக்குப் பார்க்குறாங்களாம். எங்க அண்ணி சொல்லி வருத்தப்பட்டுச்சு. சரி நீங்க என்னென்ன பேசினீங்க…சொல்ல விருப்பப்பட்டா சொல்லு இல்லாட்டி வேண்டாம்…எனக்குத் தூக்கம் வருது….பிகு  பண்ணிக் கொண்ட ரேணுகா ”ய்ஷ்ஷ் ஷ் ஷ் ‘என்று டம்ப்ளரை உதட்டோடு வைத்து க் கொண்டு முகத்தை உயர்த்திக் கடைசி சொட்டுப் பாலை உறிஞ்சிக் குடித்தாள் .
பேசினோம்….நிறைய….பேசினோம்….!அதாவது, அவங்களுக்கு கேரளாவுல திரிச்சூர் பக்கத்துல ‘சாலக்குடி’ ல ஒரு ஒட்டு வீடு சொந்தமா இருக்காம். கூடவே ரெண்டு தங்கச்சிகளாம். அப்பா இல்லியாம்…அம்மா மட்டும் தானாம். அம்மா ஒரு ஹார்ட் பேஷன்டாம்…தங்கச்சி ரெண்டு பேருக்கும் படிப்பு வராமால் பத்தாவதோட நிப்பாட்டி இப்போ வரன் பார்த்துண்டு இருக்காங்களாம்.வீட்டுல ரெண்டு பலா மரம், நாலு மாமரம், ஆறு தென்ன மரம், ஒரு சந்தன மரம் கூட இருக்காம்…!
ரெண்டு நாய்….ஒரு டஜன் பூனை, பாம்பு….தேளு …இதெல்லாம் இருக்கறதா சொல்லவே இல்லியா…? இடைமறித்த ரேணு…நான் தான் சொன்னேன்ல….அவன் ஒத்து வரமாட்டான்னு….நீ சொல்றதைக் கேட்கும்போதே ஆஸ்பத்திரி வாடை வருது…பேசாமே கழண்டுக்க…!
நீ அவுங்க வீட்டுக்குப் போனேன்னு வெய்யி…உன்னியும் சந்தன மரம் கணக்காத் தான் பார்ப்பானுங்க…அப்டியா விஷயம்….ஆளு நல்லா எடை போட்டுத் தான் வெரட்டிருக்கான்.
கொஞ்சம் உன் ஸ்பீக்கரை மூட்றியா ?  அவன் அவனோட குடும்பத்தைப் பத்தி உண்மையைத் தான சொன்னான்….அப்படி இப்படின்னு பொளந்து கட்டி அளந்து பொய் சொல்லலியே. அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.
போச்சுடா…….! நீ கண்டிப்பா அக்மார்க் லூஸு தான்னு அவன் நினைச்சிருப்பான்டி .
அப்பறம்?
ம்ம்ம்ம்..என் குடும்பத்தைப் பத்திக் கேட்டான்..
ஹோஹோ…..நீயும் சொல்லிருப்பியே…எங்கப்பா பெரிய டாக்டர், அம்மா ஒரு காலேஜ்ல பிரின்சிபால், நான் என் ஆத்துல ஒரே பொண்ணு,சென்னையில சொந்தமா போரூர்ல ரெண்டு பங்களா இருக்கு. பத்தாததுக்கு அப்பாவுக்கு ஒரு நர்சிங் ஹோம் வேற இருக்கு, நான் எஸ் ஆர் எம் காலேஜுல  என்ஜினீயரிங் ஐ.டி  முடிச்சுட்டு நேரா இங்க வேலைக்கு சேர்ந்தாச்சு…எடுத்த எடுப்புல முப்பதாயிரம் சம்பளம்…நீயும் இப்படில்லாம் ‘பீலா’ விட்டியா?.அப்டியே என்னைப் பத்தியும் சொல்லி வெச்சியா?
போடி…இப்படியெல்லாம் சொன்னால் நான் ஏதோ என்னைப் பத்திப் பீத்திக்கிறேன்னு நினைச்சிட மாட்டானா..? அதனால அதெல்லாம் ஒண்ணுமே  சொல்லலை.
அப்பறம்..?
நானும் சாதாரண குடும்பத்துலேர்ந்து தான் வரேன்னு சொல்லி வெச்சேன்.
இப்பத் தான் நீ புத்திசாலியா யோசிச்சிருக்கே..அவன் நினைச்சா மாதிரி நீ வசதியா இருக்கலைன்னு நினைச்சி இப்ப ஐயா கழண்டுக்கப் பார்த்திருப்பானே.
அது தான் இல்லை…..”அம்மா….ரொம்ப நல்லதாப் போச்சு”ன்னு மட்டும் சொன்னான்.
அப்பறம் என்ன தாண்டி நடந்துச்சு….?
ரெண்டு பேருமா மூவி போனோமா, அங்கே ….
அங்கே….?
உன் மூஞ்சி….நெனைப்பைப் பாரு…இவ்ளோ கியூரியஸா…?
படம் ‘ரொம்ப போர்’ன்னு சொன்னான். உடனே நானும், சரி…வா போகலாம்…எனக்கும் பிடிக்லைன்னு படத்துல பாதீலயே  கிளம்பிட்டோம். வெளிய வந்ததும், ஆயிரம் ரூபாய் தண்டம்…ன்னு சொல்லிண்டான். நானும் நினைச்சேன்..என்னோட ஒரு நாள் சம்பளம் கோவிந்தா….ன்னு. என்றாள்  ப்ரீத்தி.
அவனோட காசு தானே..போட்டும்…இப்பவே நீ ஏன் கவலைப் படறே? .விடு.
கடுப்பக் கிளப்பற பார்த்தியா….அம்புட்டும் என் துட்டுடி….! அவன்  பர்ஸையே தொறக்கலை. உன்னை மாதிரியே அவனும் அல்பம்…!
சொல்ல மாட்டே…என் வண்டில பெட்ரோல் கீதா….இல்ல எம்டியா? அல்பத்துக்கே ஆப்பு வெய்க்கிறவ நீ..! சரி இது கிடக்கட்டும் நீ சொல்லு…நம்ம ஹீரோ பத்தி.
அதான் சொன்னேனே…சுத்த ஜீரோ ன்னு..! அவன் ஷாப்பிங்ல ஒண்ணுமே வாங்கலை. இருந்தும் நான் தான் உனக்கு இது நல்லா இருக்கும்னு சொல்லி  இதை வாங்கிக்க….அதை வாங்கிக்க…ன்னு வாங்கினேன்…! விஷு வேண்டவே  வேண்டாம்னு தான் சொன்னான்.
நீ…சுத்த ஏமாளி டீ …என்ன ஒரு பத்தாயிரத்தைப் பந்தாடியிருப்பியா?
பாக்கியை யாரு ஆடுவா….? மொத்தம் இருபதாயிரம் ஆச்சு…!
இந்த மாசம் வாடகையை முழுசும் நீயே கட்டிடு….! என்று வம்புக்கு இழுத்தாள் ரேணுகா..!
எலி ஏரோப்பிளேன் ஓட்டச் சொல்லுதாக்கும்…? ப்ரீத்தி ரேணுகாவைப் பார்த்து கிளியின் குரலில் பேசினாள்.
கேக்குறவ கேனையா இருந்தா, எலி கூட எலிகாஃப்டர் ஒட்டிச்சுன்னு சொல்லலாம்னு  தான் சொல்லுவாங்க…ம்ம்..அப்பறம் என்னாச்சுடி….எனக்குத் தூக்கம் வருது. சீக்கிரம் போன கதையைச் சொல்லி முடி.
ரேணு……எப்படியும் எங்க வீட்ல எனக்கு ரொம்ப மும்முரமா மாப்பிள்ளை பார்க்குறாங்க, இல்லையா, இந்த நேரத்துல நானே விஷ்ணுவைப் பத்தி எங்க ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறான்னு சொல்லி விஷயத்தைச் சொன்னால் , எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரிசா எதிர்ப்பு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கு நாள் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.சரிதானே நான் சொல்லுறது?
ஆமாம்…..கரெக்ட் தான்…ஆனால் நீ இப்படி ஊரைச் சுத்தினா….?
வீட்ல பார்க்குற மாப்பிள்ளை கிட்டக் கூட கொஞ்சம் தனியாப் பேச அனுமதி கொடுப்பாங்க. அந்த நிமிஷத்துல நம்மால அவரைப் பத்தி என்னத்தப்  பெரிசா கண்டு பிடிச்சிட முடியும்?  அதனால தான் நானே விஷ்ணுவைத் தெரிந்தெடுத்தேன், ஆனாலும் எனக்கொரு டௌட்.
அவனோட கொஞ்ச நாள் பழகிப் புரிஞ்சுண்டா நாளைக்கே ஃபியூச்சர்ல எந்தப்  ப்ராப்ளம் வந்தாலும் அதுக்கு நானே பொறுப்புன்னு சொல்லிக்கலாம்.அதனால தான் இந்த டேட்டிங்க்கு நானும் சரின்னு கிளம்பினேன்.
ஆனா…
விஷு எதுக்குமே ஒரு காசு கூட செலவு செய்யலைடி …ஒரு கிஃப்ட் கூட வாங்கி இந்தான்னு தரத் தோணலை. என்னைப் பத்தி எதுவுமே சரியாக் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. பூரா பூரா அவன் வீட்டுப் புராணம் தான். நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்…இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு.  இதுல ஒரு ஜோக் என்ன தெரியுமா?
ம்ம்ம்……என்ன?
கிளம்பும்போது சொல்றான்….’என் தங்கையோட ஷாப்பிங் வந்த ஒரு ஹாப்பினெஸ் இருக்குன்னு’ அப்படியே,  தாங்கியூ  ஃபார் யுவர் கிஃப்ட்ஸ்…ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.
அடப்பாவி…! ரேணுகா திறந்த வாயை மூடாமல் நின்றாள். வெச்சானா உனக்கு சரியான ‘ஆப்பு’.
நல்ல வேளை ……விஷுவைப் பத்திப் புரிஞ்சுண்டேன்….இல்லாட்டி அவன் பாக்குறான்…பாக்குறான்னு …ஒரு ‘இது’ வை டெவெலப் பண்ணிக்கிட்டு பிரச்சனையில் விழறதுக்கு முந்தி,  நல்லவேளை தப்பிச்சேன். இப்பக் கூட அவனைப் பாக்கும்போது அவன் கடைசில சொன்ன வார்த்தை மட்டும் தான் மனசுல நிக்கும்…சொல்லிக் கொண்டே….. னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா..என்று சந்தோஷமாகப் பாடும் ப்ரீத்தியுடன் இணைந்து ரேணுவும் பாடுகிறாள்.
தனது அறையை நோக்கி வண்டியில் சென்று  கொண்டிருகந்த விஷ்ணுவுக்கு மனசுக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தது.
“எத்தர தான் நன்னாயிட்டுச் சம்பாதிச்சாலும், இப்படியா செலவு செய்வா? பணத்தைப் பத்தின ஒரு பிரக்ஞையே இல்லாமே கண்டதெல்லாம் வாங்கி பணத்தை தண்ணியா செலவு செய்து, அம்மா, தங்கைகள், நான் கூட இப்படி எல்லாரும் நம்மாத்தில் ஒருமிச்சு ரொம்ப சிக்கனமா இருக்கச்சே.இவள் மாத்ரம்  இப்படி ‘தூம்தாம்’ பண்ணினா, கண்டிப்பா பிற்பாடு பல பிரச்சனை தானாத் தேடி வரும்.நல்லவேளையா, ரூம்மேட் ராகுல் கொடுத்த ஐடியாப் படி ‘இந்த முதல் சந்திப்புலயே’ டீசண்டா கழண்டுக்க முடிஞ்சது. ரூமுக்குப் போனதும் அம்மாவுக்கு கடுதாசி, சிக்கனமா இருக்கத் தெரிஞ்ச ஒரு பொண்ணைச் சீக்கிரமாப் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி  எழுதி வைக்கணம், என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறான்.
ஜெயஸ்ரீ ஷங்கர்
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அனைவரின் மகள்....!




சூரியன்  எம்பி நின்று 
முகம் காட்டிச் சிரித்த  போது 

பச்சைப் புடவையில் மஞ்சள் தலை குனிந்து 
வெட்கித்த போது 

குருத்து இஞ்சி கூடவே கை பிடித்து 
அணைத்த போது 

எண்ணங்க ளெல்லாம் வண்ண உருவெடுத்து 
வாசலில் நின்று கோலமான போது 

மாவிலைத் தோரணங்கள் காற்றிலாடி 
உறவை வரவேற்றபோது  

கரும்புக் கண்கள் கட்டவிழ்ந்து 
கடைத்தெருவில் காத்தருந்த போது 

மடிகனத்த காராம் பசுக்கள்  
மனம் நுரைத்துப் பொங்கிய போது 

வெற்றுக் காகிதங்கள் வண்ணக் காகிதங்களாக 
வால் வைத்து சிறகுகட்டிப் பறந்த போது 

பச்சரிசியும் மணக்கும் பாகும் ஏலரிசியோடு  
ஒன்றாய்க் கொதித்து வழிந்த போது 

பொங்கலோ பொங்கல் என்று 
வீதி வரை கரகோஷம் கேட்ட போது

அவரவர் கண்களில் நம்பிக்கை நட்சத்திரம் 
மின்னி ஜொலித்த போது.....

வழி வழியாய் வந்த நல் வார்த்தையை 
மனமும் சொல்லும் சேர்ந்து சொன்ன போது..

அனைவரின் மகளாகத்  "தை பிறந்தாள் " 

ஆத்மாவின் கோலங்கள் ..!