புதன், 23 ஏப்ரல், 2014

சித்தன் நீ..!

Tag Archives: Ramana Maharshi


உறங்கும் உயிரை 
அசைத்து விட்டாயே..
சிப்பியின் வாயைத் 
திறந்து விட்டாயே..
இதய ஓட்டிற்குள் 
ஒளிந்து கொண்டாயே
உன்னையே உலகமாய் 
எனக்குள் தந்தாயே.....!

வாசற்கதவில் கீதமாய் 
வெள்ளி மணி...
இருட்டுச் சுரங்கத்தில் 
வைரமணி...
உள்ளங்கைகளில் நீளும் 
ஆயுள் ரேகை..
ஆயுசு பூரா....இசைக்குமோ..
ஆனந்த ராகம்...!


பாறை மனதுள் படரும் 
பசுங்கொடியே...
பள்ளிகொண்ட மனதுள் 
ஒலிக்கும் பான்ஜசன்யமே...
சிரிக்க வைத்து  ரசிக்கும் 
சிந்தாமணியே...
உனக்குள் வசிக்கும் அட்சய  
கற்பகத் தருவே...!

ஓங்கி உலகளந்த உத்தம...
பாத மணிச்சிலம்பே.....
ஓயாமல் என்னுள் பேசும் 
மௌன குருவே..ரமணனே...
ஓடும் ஆறும் உன் பெயர் பாடுமே..
ஓரங்க நாடகத்தின் ஒய்யார அரசே..
அண்ணாமலையாரின் 
அற்புத வாரிசே...!


பாடாத தேனீ எனக்குள்ளும்
பாட்டுத் தரும் கலையரசே....
சிற்பி கை நழுவி என் இதயம்
விழுந்த மாய உளியே...மந்திரமே
உன்னோடு நான் வாழ்வதும்..
எனது ஜென்மத்தின் சத்தியமே...

கடல் கண்டெடுத்த 
வலம்புரி சங்கே..
கடல்சிப்பி கண்டெடுத்த 
சிற்ப உளியே..
பவளப்பாறையின் 
மரகத வீணையே..
மந்திர மலைக்குள் 
மகத்தான புன்னகையே...!
மௌனமாய் எழுலகை 
கட்டியாளும் கண்ணனே...!

ஓய்ந்து கிடந்த நெஞ்சத்தில் 
ஓய்வில்லாது பன்னீர் தெளித்து
பட்டாடை கட்டிப் பார்த்த 
பரம புனிதன் நீ...
எழுந்துவிட்ட இதயத்தில் 
இன்ப ஊற்றைத் தேடி
நித்தம் நீராடும் கண்ணனும் நீ...!
கவி தந்து கவி பாடிக் 
கொண்டாடும் சித்தன் நீ..!

மதுரையம்பதிகே 
மகத்துவம் தந்த 
மாணிக்கமே..மரகதமே... 
அங்கு தவழ்ந்த எனை..
சிதம்பரத்தில் சிக்க வைத்து 
பொன்னம்பலத்தானின்..
வெள்ளியம்பல தரிசனம் தந்து
நாடகம் பார்க்கும் ரமணா..
நிந்தன் சேவடி சரணாகதி.

திங்கள், 14 ஏப்ரல், 2014

நட்சத்திர அர்ச்சனைகள்

 
கூப்பிய கரங்கள்
அங்கங்கள் அடக்கி
சிரசின் சகஸ்ரம்
இதழ் குவிக்க
ஆணவம் அடங்கி
அற்புதம் மேலெழ
ஒய்யாரத் தியானம்

உள்ளொளி பெருக்கி
உடளொளி உருக்கி
தன்னொளி மேருவுக்கு
நட்சத்திர அர்ச்சனைகள்

உறைந்தது உயர்வு
உயர்ந்தது உணர்வு
உள்ளம் தள்ளாடுதோ
உலகவலை மயங்கி...!

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சித்தரைப் பெண்


மரகதங்கள் மடி நிறைய ஏந்தியவள்
சித்தரைப் பெண் நீ சிரித்துக் கொண்டே
கேட்டவர்க்கு வேண்டும் வரம் நல்கவென்று
வருடங்கள் தவறாது வந்து நிற்பாய் ...!

இனங்கள் வாழ மனங்கள் வாழ்த்த
மங்கலங்கள் கூடி மங்களங்கள் மகிழ
தேரசைந்து தெருக்களோடு விழாக்கோலம் ...
கோயிலெங்கும் கல்யாண உற்சவங்கள்.

நம்பிக்கை நட்சத்திரமே..ஜயத்தின் சித்திரமே
சித்திரையாய் வருவாய் நீ...முதலாய்
அள்ளிக் கொடுக்கும் அற்புதமே....பைங்கிளிப்
பாவைக்கு சொக்கனைத் தந்த சுந்தரியே..

வீடெங்கும் மணக்கும் மாங்கனிகள்
நாவில் ருசிக்கும் வேம்பின் மலர்
உள்ளம் உவக்கும் வெல்லப்பாகும்
அறுசுவை கண்ட நன்னாளாக்கும்


தோரண மாவிலைகள் தென்றலோடு கூடி
பங்குனிக்கு நன்றி சொல்லிப் பாங்காய்
உனை வரவேற்க வாசலை அடைத்த
சிங்காரச் சித்திரக் கோலங்கள் காண்..

பாரிஜாதமலர் வண்டென நீ நல்ல
சேதி சொல்லிவர கற்கண்டின் இனிமையாய்
சொல்லும் நற்செய்திக்கு மாணிக்கத் தேரைப்
பரிசென இழுத்துச் செல் சித்திரையே...!