உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 மே, 2014

அவள் மனது பூ..!



அதிகம் பரிச்சயமில்லாத ஒரு குரல், நான் இருக்கும் வீட்டிற்குக் கீழ் வீட்டிலிருந்து அடிக்கடி ஒலித்ததும், யாராக இருக்கும்? என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அதற்குக் காரணம் அந்தக் குரலில் இருந்த ஒரு வித்தியாசம் தான்.அந்தக் குரலைக் கேட்கும் போது ஏனோ மனசுக்குள் ஒரு சோகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.அன்று மதியமே அந்தக் குரலுக்குரிய பெண்ணைப் பார்க்கும் சந்தர்ப்பம் தானே நிகழ்ந்தது.


எனக்கு ஏனோ 'மாயாவி' என்ற தமிழ் படத்தில் வரும் பாடல், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு நினைவில் வந்து மோதியது. நான் இதுவரையில் சொல்லி வந்ததும், இப்போது சொல்வது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்.2006 -இல் பெங்களூருக்கு என் அக்கா, அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயத்ரி, நான் மூவரும் (என் அக்காவின் காலேஜ் விஷயமாக ஒரு மீட்டிங் சென்ற போது குழந்தையைப் பார்த்துக் கொள்ள நானும் ) சென்றோம். பெங்களூரில் இருக்கும் கிறிஸ்டியன் காலேஜ். அங்கு வளாகத்தில் இருந்த அறை எங்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. கையில் ஒரு சின்ன டேப் ரிகார்டர் மட்டும் எடுத்துச் சென்றிருந்தோம். கேசட்டுகள் ஒன்றுமில்லை. பெங்களூரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன். அன்று பகல் பொழுது முழுவதும் அறையில் அடைந்து கிடைக்காமல் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினேன். அருகில் இருந்த அய்யனார் கோயிலுக்குச் சென்று வரும்போது, ஒரு கடையில் கேசட் ஏதும் இருக்கா? என்று கேட்டதும், அங்கிருந்தவர் எடுத்து பட்டென்று வைத்தார்...அதில் 'மாயாவி' என்று எழுதி இருந்தது. வாங்கிக் கொண்டேன்.

அவ்ளோதான்..அந்த கேசட்டைப் போட்டதும், இந்தப் பாடல் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு...' கல்பனாவின் குரல்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..என்று நான் நினைத்துக் கொண்டேன். அத்தனை அற்புதமான வரிகள். மென்மையான இசை. இதைவிட என்ன வேண்டும். காட்சிகள் இல்லாவிட்டாலும் பாடல் இனிமை. அந்தப் பாடல் முடிந்து 'காற்றாடி...என்று வரும்...குழந்தை..உடனே..அந்தப் பழைய பாட்டை மட்டும் போடு என்று தொடர்ச்சியாக அடம் பிடிப்பாள். நானும் அந்த ஒரு பாட்டை மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த கிட்டத்தட்ட நான்கு நாட்களும் இந்த ஒரு பாட்டை மட்டும் தான் கேட்டபடி இருந்தோம். அப்படி என் மனசுக்குள் நுழைந்து கொண்ட பாடல். அதன் பின்பு பெங்களூரை விட்டு வந்ததும் அந்த இடத்தோடு அந்தப் பாடலையும் மெல்ல மறந்து போனேன்....காலங்கள் 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. அதன் பின்பு அந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இப்போது விஷ்ணுப் ப்ரியாவைப் பார்த்ததும் என் மனசுக்குள் அந்தப் பாடல் ஒலித்தது. 'பூமியில்..பூமியில்..எனக்கேதும் குறைகள் கிடையாது'...ஆஹா.....எவ்வளவு சந்தோஷமாக சிரித்துக் கொண்டு வளைய வருகிறாள்..என்றும் நினைத்துக் கொண்டேன்.


சின்னப் பெண்ணுக்குரிய தோற்றம்.அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். பார்த்ததும் நம்பவே முடியவில்லை. அவளே குழந்தை..அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளா? இறைவா....உனது கருணை தான் என்ன? உனக்குத் தெரியாதா?யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று. இந்தப் பெண்ணுக்கு நீ ஒருவேளை,பெண் குழந்தைகளைக் கொடுத்திருந்தால், அந்தக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் இந்தப் பாழும் சமூக அமைப்பிலும், சிந்தனையிலும் சங்கடங்கள் வந்து சேரலாம். அனைத்தும் அறிந்தவன் நீ..உனது தீர்ப்பில் நீ என்றுமே கெட்டிக்காரன்.

அவளது இரண்டு குழந்தைகளும், மணி மணியாக இருந்தனர். அவர்களது கொண்டே இருக்கலாம் போலிருந்தது. குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பூரா பூரா அவளது அம்மா தான். "அம்மம்மா..அம்மம்மா.." என்று இரண்டு பேரும் அவர்களைத் தொந்தரவு செய்யும் போதும் பொறுமையாக அவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் நேர்த்தி, எனக்குள்..இன்னும் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது இந்த உலகத்தில்...கற்றுக் கொள் ...இவர்களிடமிருந்தே ஆரம்பி...என்ற மனவொலி என்னுள் அதிகாரம் செய்யும்.

உங்க பேர்என்ன சொல்லுங்கோ....?

நான் பெரியவன்...என் பேரு அர்ஜுனா...
உடனே....
நான் சின்னவன், என் பேரு ஆர்யா...
குழந்தைகள் முந்திக் கொண்டு பேர் சொன்னது.
நான் சிரித்துக் கொண்டேன் ...'நல்ல நல்ல பேர் ரெண்டு பேருக்கும்'
எங்கம்மா பேர்...எங்களோட பேரை விட நல்ல பேர் தெரியுமா?
தெரியாதே....?
"விஷ்ணுப் ப்ரியா "
'ஓ ....ரொம்ப நல்ல பேரு தான்...எனக்கும் பிடிச்சிருக்கு'
அப்போ...உங்க பேரு என்ன சொல்லுங்கோ..." மழலைகள் கேட்டனர்.
"ஜெயஸ்ரீ"
நாங்க 'ஜெயா ஆன்டி 'ன்னு கூப்பிடறோம்...
ரொம்ப சந்தோஷம்....நிஜமாகவே ரொம்ப சந்தோஷமான தருணங்கலளாகத் தான் இருந்தது. அந்தக் கடந்து போன சில நிமிடங்கள். அதற்குள்,

'அர்ஜுனா.....ஆர்யா...என்ற குரல் கீழிருந்து வந்ததும், இருவரும் நான் கொடுத்த ஜூஸை வேகமாகக் குடித்து விட்டு மறக்காமல் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த 'ஹோலி கன் 'னை (அது ஒரு ஹோலி பண்டிகை சமயம்) எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

குழந்தையும் தெய்வமும், கொண்டாடும் இடத்திலே....ன்னு மனசுக்குள் ஒரு சந்தோஷம். அதே சமயம் குழந்தைகளின் தைரியம், சுறுசுறுப்பு இதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் எழுந்தது.
சிறிது நேரத்தில் அவள் என் வீட்டுக்கு வந்தாள் .
"குழந்தைகள் உங்களைப் படுத்தினார்களா"..? அவள் இந்த ஒரு வார்த்தையைப் பேசி முடிப்பதற்குள் எனக்குள் ஏகப் பட்ட வேதனை. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,அவள் இதைத் தான் சொல்லியிருப்பாள் என்று உணர்ந்து புரிந்து கொண்டு..'இல்லையே' என்றேன்.

அவர்களுக்கு இங்க வர ரொம்ப பிடிச்சிருக்காம்....மீண்டும் அதே வேதனை என்னுள். ஏனென்றால் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் பேசுகிறாள். அந்த வேதனை அவளது தொண்டையின் அசைவில் தெரிகிறது. மேலும் அவ்வளவு கஷ்டப்பட்டு பாதி வார்த்தை தான் வெளியில் கேட்கிறது,. இது எவ்வளவு கொடுமை....தெரியுமா.

சரி..நீங்க கஷ்டப் பட்டு பேசாதீங்க...சொல்ல வார்த்தை துடித்தன..ஆனாலும் அவள் பேசட்டும்....அவளது உணர்வுகள் இங்கு வந்து கொட்டப் படட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

அடுத்தடுத்த அவளுடைய வருகையில், எனக்கு அவளது பேச்சை எளிதாகப் புரிந்து கொள்ள இயன்றது..ஒரே தடவையில் சற்றும் சிந்திக்காமல் அவளுக்கு பதில் சொல்ல முடிந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அதே சமயம், இது இறைவன் கொடுத்த வரம்...என்று நினைத்துக் கொண்டேன்.அவனை விட என்னை வேறு யார் புரிந்து கொள்ள முடியும்?

நானும் நிறைய விதமான மாற்றுத் திறனாளிகளைப் பார்த்துப் பழகி இருக்கிறேன்.
அப்போதெல்லாம் கூட மனதுக்குள் சோகம் எழும், அழும்.
அப்படி நான் நெருங்கி அமர்ந்து பேசிய மூவரில் மனதைப் பிழிந்து இறைவன் மேல் கோபம் வந்தது அந்த மூவரையும் பார்த்துத் தான் . முதலில், அம்ருதா ...(நாடோடிகளில் நடித்தவர்) நடிகர்.திரு.குமார் அவர்களின் புதல்வி.
அப்போது அவர் நாடோடிகள் நடித்து வெளிவந்த புதிது. அவருக்குத் தெரிந்த உறவினரும் எங்கள் குடும்ப நண்பரும் ஒருவரே என்பதால் அம்ருதாவின் அண்ணன் கல்யாண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். 2009 என்று நினைவு. ஹைதராபாத்தில் அவர்கள் 'தாரனாக்கா "என்ற பகுதியில் வசிப்பவர்கள். அங்கு ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அந்த விழாவில் ஓடியாடி ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் வீடியோப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார் அம்ருதா . அவரை நான் அதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் பரிசு பெற்ற பெண் இவர்தான் என்றார்கள்..நான் அதிகம் தொலைகாட்சி நிகழ்சிகள் பார்ப்பதில்லை என்பதால் அதுவும் எனக்குத் தெரிந்திருக்க அன்று வாய்ப்பில்லை.இருந்தாலும் ,அவர்களிடம் சென்று வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வரலாம் என்று அருகில் சென்று, எனது வாழ்த்தைச் சொன்னேன். அவர்கள் பேசியது இன்றும் எனது காதில் ஒலிக்கிறது. அந்த மொழிக்கு வார்த்தை இல்லை.
அரை ஓசை தான். வெறும் காற்றோடு லேசான அதிர்வு. தனது பெயரை எனக்குப் புரிய வைக்க இயலாமல் திணறினார். ஆனால் நான் பேசுவதை எந்த பிரச்சனையும் இன்றி சரியாகப் புரிந்து கொண்டு சிரித்தார். அவர் சிரிப்பில் அத்தனை தெய்வீகம். அவர் முகம் சாந்தம் தவழும் நளின முகம். காது கேட்காது.வாய் பேச முடியாது என்ற உண்மை என்னுள் ஆயிரம் வாட்ஸ் ஆக அடித்தது.அன்று அங்க சாப்பிடவும் முடியவில்லை. அன்று உறக்கமும் வரவில்லை. இறைவா....உனது படைப்பின் ரகசியம் தான் என்ன? அத்தனை அழகைக் கொட்டிக் கொடுத்து விட்டு வேண்டியி இரண்டைப் பறித்துக் கொண்டாயே....என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..என்று வாதிட்டேன். வரை அவரைச் சுற்றியுள்ள சொந்தம் மொத்தமும் , இறைவனிடம் இப்படித் தான் சண்டை போட்டிருக்கும்.

இப்போது இரண்டாவதாக , ராஜி என்னும் ராஜேஸ்வரி. (இரண்டு கண்களும் தெரியாதவர்) வாழ்வது. திண்டிவனம். ஆசிரியை.

2012இல் நடந்த ஆசிரியர் தேர்வு எழுத அவர்களும் பாண்டிச்சேரி வெற்றி வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு நான் எனது அக்கா (அப்போது அவர் அங்கு முதல்வர்) வுக்கு உதவிக்குச் சென்றிருந்தேன். பரீட்சை துவங்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்த சமயம் பார்த்து , 'ஒரே ஒருத்தர் இரண்டு கண்களும் பார்வையற்றவர், தேர்வெழுத வந்துள்ளார்.அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என்றார்கள். என் அக்கா என்னிடம், நீ செய்கிறாயா? நீ கேள்வியை வாசித்தால் போதும், சிறிது நேரம் கொடுத்ததும் அவர் சொன்ன பதிலில் மை கொண்டு நிரப்பி விடு. வெறும் 100 கேள்விகள்...காலை மாலை இரண்டு வேளை மட்டும் தான் ஆசிரியர் பரீட்சை. என்றார்.நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.


தேர்வெழுத வந்திருந்தவர் ராஜலக்சுமி என்கிற ராஜி. அவர்களுக்கு கண்கள் தெரிவதில் மட்டும் தான் குறைபாடு. கற்பூர புத்தி. கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் டாண் டாண் என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல் பதில் சொன்னார் பாருங்கள். மனசுக்குள் மிகுந்த சந்தோசம் எனக்கு. நானும் கேள்வியைக் கேட்டுவிட்டு இதற்க்கு என்ன பதிலாக இருக்கும் என்று தெரியாமல் யோசிப்பேன். அவர் ஆணித்தரமாக பதில் சொல்லிவிடுவார். அது எனக்கு ஒரு புதுவித ஆபவமாக இருந்தது. அவரோடு அன்றைய நாள் முழுதும் கூடவே இருந்தேன். எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து ஒரு நட்பு எங்களுக்குள் உருவானது. 'எனக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு , இன்னும் குழந்தையில்லை...' என்று வருத்தப் பட்டார். கண்டிப்பா கூடிய சீக்கிரம் நல்ல தகவல் சொல்லுவீங்க...என்றேன்...அப்படியா? என்று சொல்லிவிட்டுப் போனார். நடுவில் அடிக்கடி என்னை அழைத்துப் பேசுவார்.அவரது கணவர் திரு.ரமேஷ் அவர்களும், லெக்ச்சரர் , வள்ளுவன்பார்வையில் (இணைய குழுமம்)இருப்பவர். ராஜி, அவர் எழுதிய பரிச்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப் படுத்தினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு நாள் தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்லிச் சிரித்தார். பின்னொரு நாளில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அவர்கள் இருவருமே பார்வை இழந்தவர்கள் தான். என்றாலும் அவர்களது அகத்தின் பார்வை சூரிய ஒளியை மிஞ்சிவிடும் என்று தன சொல்ல வேண்டும். இன்றும் ராஜியின் குரல் எனக்கு ஒரு வைட்டமின் மாதிரி ஊக்கமளிக்கும்.


இப்போது இவர்..விஷ்ணுப்ரியா.:


இரண்டாவது முறை வந்ததும், தரையில் தண்ணீர் கொட்டிக் கிடந்ததைப் பார்த்து விட்டு தானே வேகமாக உள்ளே சென்று ஒரு துணியைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்தாள் .

ஹேய்...என்ன பண்றேள்? வேண்டாம்...நானே துடைக்கிறேன், என்று ஒரு பதட்டத்தில் நான் அவரது கைகளைப் பிடிக்க.


ஆன்டி ...உங்க பொண்ணா இருந்தா நீங்க இப்படிச் சொல்வேளா ?


எனக்கு ஒரு கணம்....என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எத்தனை நல்ல உள்ளம்....ஒரு சொந்தமாக என்னைக் கொண்டாடிய விதம் என்னை சிலிர்க்க வைத்தது.


சரி....நீயே துடை...என்று ஒருமையில் சொன்னேன். என் பெண்ணாக இருந்திருந்தால் இப்படி வாங்கோ போங்கோன்னு சொல்ல மாட்டேன் இல்லையா? என்றேன்.


அவளது மலர்ந்த சிரிப்பில் ஒரு நிறைவிருந்தது.


அதன் பின்பு தினமும் வரத் துவங்கினாள். அவளுக்கு சொல்ல வேண்டியது நிறைய இருப்பது போல பேசிக் கொண்டே இருப்பாள். நானும் அதற்கு சரியான பதிலைச் சொல்லிவிடுவேன். அப்போதெல்லாம் அவளது புத்திசாலித்தனம் வியந்திருக்கிறேன். நல்ல நல்ல விஷயங்களைப் பேசுவாள். கேட்டுத் தெரிந்து கொள்வாள்.


என்ன ஆன்டி ...ஜாஸ்தி நேரம் ..கணினி முன்னாடி தான் இருக்கேள்?


ஏதோ கொஞ்சம் எழுதுவேன். அதான்.


என்னவெல்லாம் எழுதுவேள் ? கேட்டுக் கொண்டே எனது மடல் பெட்டியைப் பார்த்தாள். எனக்குத் தமிழ் படிக்க வராது ஆன்டி ..வெறும் இங்கிலீஷ், ஹிந்தி தான்.நீங்க தமிழ் சொல்லித் தாங்கோ.


அதுக்கென்ன சொல்லித் தரேன். என்று நான் சொன்னதும் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு 'கொஞ்சம் இருங்கோ வரேன்' என்று கிளம்பிவிட்டாள்.


அடுத்த ஐந்து நிமிஷத்தில் கையில் ஒரு புத்தகம்...'இது என் தோழன் எழுதியது..குமரன்...நான் கும்கி ன்னு கூப்பிடுவேன்' இந்தாங்கோ..இதையும் படிங்கோ..சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள்.


அட்டைப் படத்தில் சக்கர நாற்காலில் குமரன். அந்தப் புத்தகத்துள் அவர் அதுவரையில் வாழ்ந்திருந்த வாழ்கையின் பதிவுகள், அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என்று...வாழ்கையின் புதிய கோணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.


ஆச்சு..அதன் பின்பு இரண்டு நாட்கள் அவள் மேலே என் வீட்டுக்கு வரவேயில்லை. அதன் பின்பு ஒரு நாள் வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனாள் . நானும் அவளது வரவுக்காக ஆவலுடன் காத்திருந்ததால் நிறைய பேசினோம்.

என்னிடம் சொன்னாள் , நீங்கள் என்னை பற்றியும் 'biography ' எழுத வேண்டும். எனது வேண்டுகோள் என்றாள்.

'சரி' என்று சொல்லி வைத்தேன்.


அந்தப் புத்தகம் படிச்சாச்சா? என்றாள் .



ஒவ்வொரு வரியும் அழகாக எழுதி இருக்கிறார் குமரன். பாதி படித்து விட்டேன்.இன்னும் பாதி இருக்கிறது..படித்து முடித்ததும் தருகிறேன். இன்று இரவு முடித்து விடுவேன் என்றேன்.


சரி..என்று சிரித்தாள். கிளம்பிச சென்றாள்.


அவள் வீட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு சமயமும் ஒரு நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். தேவையான அத்தனை விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருந்தாள்.கணினி, மின் உபகரணத்தின் வேலைப்பாடுகள், ஐ பாட் , டேப்லெட், ஜூயூக் பாக்ஸ் என்று நிறையவே பேசினாள் ,

அன்றிரவு அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பாதியைத் தாண்டியதும் தான் அந்த ஆச்சரியம் காத்திருந்தது.


தான் 'கும்கி' என்று குமரன் எழுதிய புத்தகத்தில், விஷ்ணுப்ரியா தனது தோழி என்றும், 'மாயாவி என்ற திரைப் படத்தில், 'கடவுள் தந்த அழகிய வாழ்வு; பாடலில் புகழ்ந்து எழுதி இருந்தார். மேலும், ஐஸ்வர்யா என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்தவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. எனக்குள் ஆச்சரியம்.

ப்ரியா, சினிமாவில் நடித்தாளா...? திரைப்படம் பார்க்காததால் தெரியவில்லை.

மேலும்,அன்று அந்தக் கேசட்டின் அட்டைப் படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யாவின் படங்கள் தானே இருந்தது..என்று நினைவுக்குக் கொண்டு வந்தேன்.


இணையத்தில், மாயாவி என்ற தலைப்பில் யூ ட்யூப் போட்டுப் பார்த்ததில், அந்தப் பாடல் காணொளியாக விரிந்தது. நான் பல முறைகள் கேட்ட பாடலை முதல் முறையாக படமாகப் பார்த்ததும், அதில் விஷ்ணுப்ரியா..! ஆம்...அவளே தான்...!

அந்தக் குரலுக்கு நடித்துக் கொண்டிருந்தாள். எனக்குள் மௌனம் கரைந்தது.

கண்கள் பனித்தது. 'ஆம்......கடவுள் தந்த அழகிய வாழ்வு..." என் ஆத்ம கீதத்தின் கதாநாயகி, நான் ரசிக்கும் குரலுக்குச் சொந்தமான கல்பனா..என்று பாடல் மீண்டும் என்னைத் தொற்றிக் கொண்டது.


அடுத்த எனது சந்திப்பில், என்ன ப்ரியா....சொல்லலை...ரொம்ப இனிமையான அதிர்ச்சி தந்திருக்கே...என்றேன்.


மலர்ந்து சிரித்துக் கொண்டாள் .யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன் ஆன்டி என்றாள்.


எங்கள் நட்பு தொடருகிறது. இது தான் ஆண்டவனின் ஆசை என்பதும் புரிகிறது.

- ஜெயஸ்ரீ ஷங்கர் -

வெள்ளி, 7 மார்ச், 2014

அம்மா....எனும் பெண்..!



அட்சர லட்சப் படைப்பில்
அம்மா...உயிர்ப்பின் படைப்பு
உறவுகளுக்கு ஆணிவேர் நீ
அன்பாய் அனைவரையும்
சேர்த்து அணைக்கும்
ஆலத்தின் கிளை நீ
ஆயிரம் வார்த்தைகளுள்
உனக்கே முதலிடம்
இருந்தும் ஏனோ
உனக்கென்று ஓரிடம்
இதயத்தில் இருக்காமல்
இல்லத்தில் இருத்தினார்.

நெஞ்சு கொள்ளாத
பாசம் உனது...
புரிந்து கொள்ளாத
பிள்ளைகள் ஏனோ
கடமையைக் கூட
காசுக்குள் கணக்கெடுத்து
கருவறை தந்தவளைக்
கணவரைப் பிரிந்திட்டாலோ
கல்லறை செல்லுமுன்னே
உன் அறை அதுவென்றே
அனுப்பி வைப்பார்

இலவசங்கள் பல கிடைத்தும்
அவள் வசம் ஏதுமில்லை..
உடலுருக்கிச் பணிந்ததெல்லாம்
உயிர் செதுக்கும் வேளையிலே 
மனித இடிதாங்கியோ வலி
தாங்கும் தாய் இனமே
குடி செய்த கோலம் பல
கொண்டவள் செய்த ஜாலம் பல
திரும்பிப் பார்க்காத
இதயம் பல வென்று
காரணங்கள் இதிலுண்டு..!

வைரத் தோடும்
அட்டிகையும்
பொன் வளையும்
புதுப் பட்டுமாகத்
வளைய வந்த உனக்கும்
கூலிக்கு மாரடித்து
கூழுக்குத் தனை வகுத்து
பேருக்குப் பிள்ளை
வளர்த்த அவளுக்கும்
காலன் வரும் முன்னே
காத்திருக்கும் கனச் சுவர்கள்
ஊருக்கு வெளியே தான்..!

பாசத்தில் பந்தத்தில்
முன்னமே தோற்றுப்போன
அன்னையரே உங்களுக்கு
ஆலயங்கள் தேவையில்லை
ஆறுதல் ஒன்றே தேவை...!
அறிந்ததால் தானோ ஏனோ

அன்னையர் தினம் பிறந்தது.
அன்னையர்கள் கூடும் கோயில்
கைகுலுக்க வலுவில்லாத
பஞ்சடைத்த கண்களைப்
பார்த்த போது ...!
வாயடைத்துப் போனேன்...
நானும் தாய் தானே...!



கேளுங்ளேன் இதயத்தை...!
தாய்க்கென இடம் உன்
இதயமாய்  இருக்கும் போது
அவளிருக்க வேறிடமும்
இங்கெதற்கு?
தேட வேண்டாம்..
உள்ளவர் உள்ளவரை
சுமந்தவளைச் சுமக்கும்
சுகம் தான் அலாதி..!
அது தானே ஆத்ம நீதி..?
 


திங்கள், 3 டிசம்பர், 2012

வாயுள்ள கன்றும் பிழைக்கும்...!



அம்மா….இங்க பாரேன்..யாரோ ஒரு விஜய் ரசிகன் தன் கையை பிளேடால கீறி இரத்தத்தால விஜய் கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்றான் , இன்னொரு ரசிகன் பாலால அபிஷேகம் பண்றான்….அதோட இல்லாம ஒரு ரசிகன் தன்னோட உள்ளங்கையில கற்பூரத்தை எரியவிட்டு ஆரத்தி வேற காட்டினான். எப்படி இருந்தது தெரியுமா? எல்லாம் என் மொபைல் ல போட்டோ எடுத்திருக்கேன்..இதோ… என்று காண்பித்த அரவிந்த், தீபாவளி ரிலீஸ்…”இளைய தளபதி விஜய் ” படம் ” துப்பாக்கி ” பார்த்துட்டு வந்த கதையை வரி வரியாகச் சொல்லி என் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.

இதென்ன புது தினுசா இருக்கு…?.நாளுக்கு நாள் பசங்களோட பைத்தியக்காரத்தனம் ஜாஸ்தியாப் போச்சு…இதை விஜய் நேராப் பார்த்தால் கூட ஏத்துக்க மாட்டான். இப்படி செய்யுங்கன்னு இவங்க கிட்ட கேட்டானா?சினிமாவில் நடிக்கிறது தான் அவன் தேர்ந்தெடுத்த தொழில். அவனோட வாழ்வாதாரம். அதை அவன் சிறப்பாகச் செய்யறான்.வாழ்க்கையிலும் ஜெயிச்சுட்டான்..இதைக் கூடச் சரியாப் புரிஞ்சுக்காமல் ரசிகன்ன்னு நீங்களே உங்களுக்கு முத்திரை குத்திக்கிட்டு எதைச் செய்தாலும் அது பைத்தியக்காரத்தனம் தான்.

அந்தப் பிள்ளை, ரசிகன்னு சொல்லிண்டு தனது கையைக் கீறிக் கொண்டதை பார்த்தால் அவனைப் பெத்தவங்க எவ்வளவு வேதனைப் படுவாங்க தெரியுமா? இரத்தம் என்ன காப்பியா..? , டீயா ..?.ஈஸியா கடையில் கிடைக்கறதுக்கு..? இரத்தத்தால ஒரு உயிரை கொடுக்கவும் முடியும், குடிக்கவும் முடியும் . இதைப் போயி போட்டோ எடுத்துண்டு வந்து என்கிட்டே காமிக்கிறியே உனக்கு எங்க போச்சு புத்தி…? அவன் தான் அறிவு கெட்டத்தனமா செஞ்சிருக்கான்….அதை வேடிக்கை பார்க்கிற ஒருத்தனுக்குமா ரத்தத்தோட அத்தியாவசியம்…என்னன்னு தெரியலை..?.நீங்கள்லாம் என்னத்தப் படிச்சு…! இவனுக்கு எப்போ புத்தி வந்து…!

உருப்படாத ஜென்மங்கள்….! நீயே பாரு… ஒருத்தன் செஞ்சால் அதையே தொடர்ந்து ஆயிரம் பேரு செய்வாங்க….எதுக்கு , ஏன் செய்யறோம்னு கூட யோசிக்காமல்..இதுதான்…..ஹீரோ வொர்ஷிப்……! என்னோட இந்த பதிலில் விஜய் ரசிகன் அரவிந்துக்கு கோபம் மூக்கை கிழித்துக் கொண்டு முன்னுக்கு வந்தது.

அம்மா….என்னை நீ என்ன வேணாச் சொல்லு…என்….தளபதி விஜய்-யை ..அவரை நீ அவர்…இவர்ன்னு தான் சொல்லணும்…என்று அதிகாரமா குரலை எழுப்ப..

“துப்பாக்கி” படத்தில் என்னமா நடிச்சிருக்கார் தெரியுமா? அவரோட படத்துக்கு ப்ளாக்கில் டிக்கெட் ….நூறு ரூபாய் டிக்கெட்டு நானூறு ரூபாய்…உட்காரக் கூட இடம் கிடைக்கலை…நின்னுண்டே தான் படம் பார்த்தேன்….அவ்ளோ கூட்டம்..

சரியாப் போச்சு…! நினைச்சேன்….வீட்டுல அடங்காத பிள்ளையை ஊரு அடக்கிடுமாம்…அது மாதிரி இருக்கு நீ சொல்றது.அப்படி பணத்தைக் கொடுத்து பனிஷ்மென்ட் வாங்கிட்டு வராம இருந்தா என்ன. ? பண்டிகை நாளும் அதுவுமா….தலையெழுத்து நன்னாத்தானிருக்கு. போ. அலுத்துக் கொண்டே கவலையுடன் நகர்ந்தேன். அவரு…. இவருன்னு சொல்லணுமாம்…இத யார்ட்ட போய் சொல்வேன்.

நீ தான் லூசு..நானும் அவரு இவருன்னு சொன்னேன்னு வெய்யி….நானும் லூசோடா அம்மா லூசுன்னு ஆகாதோ ?….எனக்கே இதைச் சொல்லிவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நேத்து உன் மொபைலில் நீ விஜய்யின் துப்பாக்கி ஸ்டில்லை காண்பித்து அவன் போட்ட மாதிரியே ஷர்ட் வாங்கித் தான்னு சொல்லி..நானும் அப்பாவும் கடை கடையா ஏறி இறங்கி அந்த ஸ்டில்லை ஒவ்வொரு கடையிலும் காட்டி…இது போல ஷர்ட் இருக்கான்னு.? கேட்டுக் கேட்டு…….”கஷ்டம் ….கஷ்டம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு… கடைக்காரனே எங்களைப் ஒருமாதிரி பார்க்கிறான்.

ஸார்….நிறைய காலேஜு பசங்க இந்த வாட்டி…இதே வேலையா அலையறானுங்க…… அப்படி என்ன தான் “துப்பாக்கியோ”. துப்புக் கெட்ட பசங்க….ன்னு…நான் சொல்லலை….கடைக்காரர் சொன்னார். என்து அவனது முகம் போன போக்கைப் பார்த்து நான் சொல்லி சமாளித்துக் கொண்டே….அவர் சொன்னதைக் கேட்டு . எங்களுக்கே ஒருமாதிரி போச்சு.தெரியுமா?

நான் அந்த ஷர்ட்டைக் கேட்டதும்..பரவாயில்லைடா..நாங்க வாங்கித் தரோம்ன்னு சொல்லிட்டு இப்பச் சொல்லிக் காட்டறேளே ..! இருபது வயது இளரத்தம்..சூடேறுகிறது.

எப்போ தான் இந்த தமிழ்நாடு, சினிமாக்காரனோட வலையில் இருந்து மீண்டு சுயமா சிந்திப்பானுங்களோ.?…இந்த சினிமா மயக்க மருந்துப் புகையில் தான் இங்கே எல்லாரும் சுவாசிக்க வேண்டி இருக்கு. தளபதி…தளபதின்னு அடிச்சுக்கறியே…ஒரு தடவையாவது அஷ்டபதி சொல்லேன்…. அருளாவது கிடைக்கும். என் ஆதங்கம் வெடித்தது..

இருபது வயசில நீங்க மட்டும் என்ன பஜனையா பண்ணினேள்.? இப்போ..மட்டும் என்ன…எப்பபாரு …இன்டர்நெட்…! என்று அவனது குற்றப் பத்திரிகையை என்னை நோக்கித் திறக்க ஆரம்பித்ததும் நான் அங்கிருந்து ” எஸ்கேப்” பட்டனைத் தட்டினேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்….அது போலத் தான் இருந்தது இதுவும்.. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. பல்கலைக் கலக மூடுவிழா !!! கல்லூரியில் எழுந்த ஆசிரியர்கள் பிரச்சனை மாணவர்களுக்கு விடுமுறையைக் கால வரையறையின்றி வாரி வழங்கியது…! சிலருக்குக் கொண்டாட்டம் ! பலருக்குத் திண்டாட்டம் !

செமஸ்டர் நடந்து கொண்டிருந்த நாள், முதல் நாள் இரவு இரண்டு மணி வரைப் படித்து விட்டு , அடுத்த நாள் பரீட்சை எழுதப் போகும் பயத்தில்…படித்தது வர வேண்டும் என்ற எதிர்பார்பில் சென்று…கேள்வித் தாளைப் பார்த்து… “ஆஹா…இந்த செம்ல கண்டிப்பாப் …பாஸாயிடலாம் ” அதான்..கேள்வியே ஈஸியா இருக்கேன்னு சந்தோஷத்தோடு எழுதும் போது தான் பூஜை வேளையில் கரடி புகுந்தது போல…. “போதும்டா நீங்க எழுதினது….இந்த செமெஸ்டர் செல்லாது….யாரும் உங்க விடைத்தாளைத் திருத்த மாட்டோம்…”ஸ்ட்ரைக்” என்று அறிவித்த போது விடை தெரியாமல் முழித்தவர்களுக்கெல்லாம் தெய்வம் வந்து வரம் தந்தது போல.. போட்டது போட்டபடியே வெளியே ஓடிக் கொண்டிருந்தனர். எழுதிக் கொண்டிருந்தவர்களும்..காரணம் ஏதும் அறியாமலே. .வேறு வழியே இல்லாமல்…. அரை மனதோடு வெளியேறினர்.

அடுத்த அரை மணி நேரங்களில் அவரவர் வீடுகளுக்குச் செல்ல தயாராக. வளாகத்தில் தங்கிப் படிக்கும் வெளி மாநில மாணவர்கள் மூட்டை முடிச்சோடு அடுத்தது என்ன? என்ற கேள்வியோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்படுகின்றனர். சிலருக்கு தம் ஊருக்குப் போகப் பிரயாணத்திற்கு டிக்கெட் வாங்கக் கூட கையில் பணமில்லை. அங்க இங்க கடனை வாங்கி கையிலிருந்த மொபைல் ஃபோனை விற்று பணம் சேர்த்து கொண்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.

அரவிந்தின் நெருங்கிய தோழர்கள் கன்னையாவும், மாதவனும் வாரணாசிக்குச் செல்ல வேண்டும். சிதம்பரத்தில் இருந்து கடலூர் சென்று அங்கிருந்து இரவு ரயிலைப் பிடித்து வேறு ரயிலில் மாறிச் சென்று விடலாம் என்று முடிவு செய்தனர்.

டேய்..அரவிந்த்…நீயும் எங்களோட ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து எங்களை ரயில் ஏற்றி விட்டுட்டுப் போயேன்….கூட வாயேன்..என்று அழைக்கவும்..வீட்டிற்கு விஷயத்தை ஃபோனில் சொல்லிவிட்டு அங்கிருந்து நேரே கடலூர் சென்று விட்டான் அரவிந்த் சரி..சீக்கிரம் வந்துடு…என்று சொல்லி வைத்தேன்.

இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பாதவனை எண்ணி கைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னாச்சு..? இத்தனை நேரமா உனக்கு ரயில் ஏற்றி விட? இப்போ எங்கே இருக்க…? என் கேள்விகளுக்குத் தயக்கமுடன் அவனது ஒரே பதில்.

இன்னும் நாங்கள் கடலூர் ரயில் நிலையத்தில் தான் இருக்கோம் .. காலையில் அவங்களை ஏற்றி விட்டு நான் வந்து விடுவேன்மா. விடியற்காலை மூணு மணிக்குத் தான் ரயில் வருமாம். அது வரை இங்கே தான்….நாங்க …பிளாட்பாரத்தில் ரெஸ்ட்…இங்கயே தூங்கறோம்….! என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

காலையில் அரவிந்த் வீட்டுக்குள் வந்த கோலத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன்…அவனது சட்டைக் காலரில் ரத்தக்கறை. முகத்தில், கண்ணில் ஒரு இனம் தெரியாத பயம். உடலில் நடுக்கம் ! ஏதோ மலையைப் புரட்டிய களைப்பு ! இரவெல்லாம் தூங்காமல் ஒரு மணி நேரம் வண்டி பைக்கை ஓட்டி வந்ததால் முகத்தில் சோர்வு.

என்னாச்சுடா…அரவிந்த்? எங்கியாவது சண்டைக்கு… கிண்டைக்கு… போனியா…? ஏன் இங்கே….ரத்தக்கறை ? என்னுள் எழுந்தது படபடப்பு. துடிப்பு. நேத்து நீ “துப்பாக்கி” பார்த்துட்டு வந்து அந்தக் காட்சியை எனக்கு உன் மொபைல்ல ஃபோட்டோ பிடிச்சுக் காட்டினியே…அப்பவே எனக்குள்ளே பயம் வந்தாச்சு.. சொல்லு அர்விந்த் என்னாச்சு..? என்று பதற்றத்தோடு நான் குடிக்கத் தண்ணீரோடு நீட்டிய டம்ப்ளரை வாங்கி மடக் மடக் கென்று குடித்து விட்டு..நீ நினைக்கறா மாதிரி ஒண்ணுமில்லை..நான் பண்ணின காரியத்தை கேட்டால்… நீ நிச்சயம் இப்படித் துடிக்க மாட்டே…இன்ஃபாக்ட் சந்தோஷப்படுவே..தெரியுமா…? என்று பீடிகை போட்டான்

ராத்திரி நீ ஃபோன் பண்ணும்போது எத்தனை மணியிருக்கும் …?

ம்ம்….ஒரு பதினோரு மணி இருக்கும்….அப்போ நன்னாத்தானே இருந்தே…பிறகு என்னாச்சு?

சொல்றேன்…அப்போ பிளாட்பாரத்தில் யாரும் இல்லை…நானும் கன்னையாவும் மாதவனும் தான்…கொஞ்சம் தள்ளி ஒரு குஜராத்தி குடும்பம் இருந்தது. ரயில் வர மூணு மணியாகும்னு சொன்னதும் நாங்களும் அங்கியே படுத்துண்டு தூங்கிப் போயிட்டோம்…!

ஒ…யாராவது வந்து அடிச்சாங்களா? எனக்குத் தெரியும்…வயசுப் பசங்க நட்ட நடு ராத்திரில ரயில்வே ஸ்டேஷன்ல தனியா இருந்தா….ஏதோ கேஸ்ன்னு நினைச்சு…ரோந்து போலீஸ் பிடிச்சுண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி….அதுக்குத் தான் நீ எங்கியும் போகவேண்டாம்னு சொன்னேன்…புரிஞ்சுதா…? நமக்கேன் வீணா வம்பு….சொல்லிக் கொண்டே என் கண்கள் அவனது முழங்காலைப் பார்த்தது. வேற எங்கியாவது அடி பட்டிருக்கோ….கண்கள்….தேடியது…நல்லவேளையாக ஒண்ணும் தென்படலை.

உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? என்னைச் சொல்ல விடேன்

சரி சொல்லித் தொலை சீக்கிரம்….அப்பறம்…என்னாச்சு ?

திடீர்னு ஒரு சத்தம்…..ரொம்பப் பக்கத்துல…”அம்ம்மா…ம்ம்ம்மம்மா….அம்மம்மா…ன்னு” தொடர்ந்து கேட்டுண்டே இருந்தது. நாங்க மூணு பேருமே முழிச்சுண்டோம்..

டேய்…அரவிந்த்…எங்கேர்ந்துடா இந்த சத்தம்….?

பசு மாட்டுக் கன்றோட குரல்டா…இது….ஆனா எங்கேர்ந்து வருது.. புரியலையே…!

பக்கத்துல வேற ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியலை…ஆனா குரல் மட்டும் கேட்கிறது…எப்படி?…இவ்ளோ ஸ்பஷ்டமா… எனக்கு பயம்மா இருக்குடா…!

ம்ம்ம்….ஆமாண்டா…கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஏதும் இல்லை…நாலு பக்கமும் வெறிச்சுன்னு கெடக்கு..பிளாட்பாரம் வெளிச்சத்தைத் தவிர மற்ற இடங்களில் ஒரே கும்மிருட்டு வேற. டேய்…கன்னையா …மனுஷப் பேய் கேள்விப் பட்டுருக்கோம்…..மாட்டுப் பேய் கேள்விப் பட்டிருக்கியாடா..?

அடப் போடா…நீ வேற…இந்த நேரத்துல …பேய், பிசாசுன்னு சொல்லிக்கிட்டு. இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கும் போதே…மறுபடியும் அதே குரல்….அபயக் குரல்….கேட்டுக் கொண்டே இருந்ததாம்.”அம்மா….ம்ம்ம்மம்ம்மாமா….” என்று.

டேய்…மூணு பேரும் கண்ணை இறுக்க மூடிக்குவோம்டா…இது எங்கேர்ந்து வருதுன்னு புரியலை…ரொம்பப் பக்கத்துல ஒண்ணுமே இல்லாத இடத்தில் இப்படி சத்தம் மட்டும் எங்கேர்ந்து வரும்? அவர்கள் நடுங்க ஆரம்பித்து கண்களை மூடிக் கொண்டார்கள்.இளங்கன்றுகள் அன்று பயமறிந்தது.

திடீரென ஒரு ஆள் நடமாடும் அரவமும் அதைத் தொடர்ந்து…”ஹை ..ஹய்…உஷ்…உஷ்…..ஜா..ஜா…ஜா..” என்று கைத்தடியால் தட்டும் சத்தம்….கேட்கவும் இவர்கள் நிம்மதியில் இவர்கள்…ஆஹா மனிதக்குரல் என்று எழுந்து நிற்கவும்..

தூரத்திலிருந்த அந்த குஜராத்திக்காரர் தனது கைத்தடியால் பிளாட்பாரத்தின் விளிம்பில் நின்றபடி….குனித்து தண்டவாளத்தின் அருகில் தட்டிக் கொண்டிருக்க….. இவர்களும் ஆவலுடன் அங்கு ஓடிச் சென்று பார்க்க அங்கே ஒரு பசுங்கன்று தண்டவாளப் பள்ளத்திலிருந்து மேலே பார்த்துக் கத்திக் கொண்டிருந்தது.

நடை மேடையின் இறுதியிலிருந்து அது தண்டவாளத்தின் நடுவில் நடந்து உள்ளே வந்து விட்டது…புரிந்தது. இப்போது அதனால் மேலே ஏறவும் இயலாது. இன்னும் அந்த பிளாட்பாரம் முழுதும் கடந்தால் தான் சமதளத்திற்கு அதனால் வரவும் முடியும் அதற்குள் எந்த ரயிலும் வராமல் இருக்க வேண்டும்….

இவர்களுக்கு இப்போது எல்லாம் புரிந்தது. கீழே பார்த்தால் அந்தக் கன்றின் கண்களில் காருண்யம். “என்னை மேலே தூக்கி விடேன்….பயம்மா இருக்கு…” என்பது போல.

மேலே இருந்து வா…வா…என்றால் வருமா? சற்றும் யோசிக்காமல் அரவிந்த் கீழே குதித்து விட்டான்.. பசுங்கன்று பயத்தில் உறைந்து அங்கேயே நின்று விட்டதாம்.

அதே நேரத்தில் தூரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பூதம் போல் உறுமி கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்ததாம்.

பரபரப்புடன் எதையும் யோசிக்காமல்…அரவிந்த் அந்த பசுங்கன்றை அலாக்காகத் தூக்கவும்… அது ஒரு நூறு கிலோ எடை இருக்குமாம் அது திமிறவும்…. ஒரே கட்டாகக் கட்டி நடைமேடையில் தூக்கி மேலே போட்டுவிட்டு…தான் சுதாரித்துக் கொண்டு எம்பிக் குதித்து மேலே ஏறி நின்றதும்.அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்டேஷேனைக் கடக்கவும் சரியாக இருந்ததாம்.

அவன் இதைச் சொல்லச் சொல்ல திக் திக் கென்று இருந்தது எனக்கு. அப்போ அந்தக் காயம்…எப்படி. வந்தது? குழம்பினேன் நான்.

ம்ம்ம்.. அதை நான் தூக்கியதும் திமிறி முகத்தை பலமாக பயத்தில் ஆட்டியது…அதுக்கு நல்ல வேளையா சின்னக் கொம்பு தான் முளைச்சிருந்தது. அப்படியும் அது குத்தி லேசா தோல் கிழிஞ்சிடுத்து..அதான் ரத்தம்..ஆனால் தோள்பட்டையில் ஒரே வலி… மேலே ஏறினவுடனே…ரயில் க்ராஸ் பண்ணிச்சு…..எனக்குள் அடி வயிற்றிலிருந்து ஒரு பயம்..ஒரு சுருட்டல்…..நடுக்கம்…உடம்பெல்லாம் அப்படியே புல்லரிச்சுப் போச்சு….அந்த உணர்வை எப்படி சொல்றதுன்னே தெரியலைம்மா….ஆனா ஒரு இனம் புரியாத வேதனைன்னு சொல்லலாம்.

அச்சச்சோ…என்று அந்தக் காயத்தைப் பார்த்தேன்…சரி …இதனால் ஒண்ணுமில்லை….பகவான் ஒரு காரணம் இல்லாமல் ஒரு காரியத்தை நடக்க விட மாட்டார் அரவிந்த்…உன் ஃப்ரெண்டு மாதவன் கூப்பிட்டதால் தானே அங்கே போயிருக்கே. வாயுள்ள கன்று பிழைச்சிடுத்து. நீ இப்போ செய்திருக்கிற காரியம் ஒரு உயிரைக் காப்பாற்றிய உத்தம காரியம். இதற்காக நீ சிந்திய ரத்தம் சில துளியாக இருந்தாலும் அது உன்னத செயலுக்காக சிந்தியது.

ஆமாம்மா…அந்த குஜராத்தி காரர் சொன்னார்…தம்பி நீ உயிர் பிழைச்சது பாக்கியம்…. அந்த பசுங்கன்றைக் காப்பாற்றியது புண்ணியம்…ன்னு

நீ செய்திருக்கிற இந்த தீரச் செயல் தான் உண்மையான ஹீரோ செய்கிற ஒரு காரியம். இது பெத்தவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் இன்னொரு வாயில்லாத பிராணியை காப்பாத்தத் துணிஞ்ச உன்னைப் பார்க்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா.

வார்த்தையால் சொல்லிவிட்டேன்….ஆனால்…மனசுக்குள் ஒரு உணர்வு.. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்றாப் போல…..ஒரு வாரமா ஜுரத்தில் கிடந்தேன். தற்போது அரவிந்தின் காயமும் ஆறிபோச்சு. என் காய்ச்சலும் தீர்ந்து போச்சு !

ஆனால்..விஜய் ரசிகன் எல்லாரும் அப்படித் தான்…..சமயத்தில் சமயோஜிதமா நடந்துப்பாங்க தெரியுமா? அவன் முகத்தில் மந்தகாசம்.

தான் பெற்ற மகன் தன் உயிரைப் வைத்து ஒரு நல்ல காரியம் செய்து விட்டு வந்திருக்கிறான்…அவனுக்குப் பிடித்தவனைப் புகழ்ந்து பேசி அவனை மகிழ்விக்க நினைத்தேன்.

ஆமாண்டா….அர்விந்த்……இனிமேல் விஜய் ரசிகர்கள் எல்லாரும் அவா அவா பெத்தத் தாயை அன்பா கவனிச்சுப்பாங்க. ..இல்லையா…? அதான் எங்கே பார்த்தாலும் அவங்களோட ஹோர்டிங்க்ஸ் விளம்பரம் இருக்கே. நீ சொல்றபடி பார்த்தால் விஜய் என்கிற அந்த “சக்தி” உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் தான்…..நான் ஏத்துக்கறேன். யாராயிருந்தால் என்ன ? நல்ல விஷயம் நடந்தால் சரி…இதை நான் சொன்னதும் அரவிந்துக்கு ஏற்பட்ட சந்தோஷம் ஒரு தாயாய் இனம் கண்டுகொள்ள முடிந்தது.

அம்மா…..எலெக்ட்ரிசிட்டி பில்லைக் கட்டணும்னு சொன்னியே…தா…போய் கட்டிட்டு வரேன்…சொல்லிவிட்டு “கூகுள் …கூகுள் …பண்ணிப் பார்த்தேன் உலகத்துல…உன்னைப் போல ஒரு அம்மா எங்கும் பிறக்கவில்ல…..” சந்தோஷமாகப் பாடிக் கொண்டே போகிறான் ரசிகனாக அரவிந்த்.

நான் விஜய்யைப் பாராட்டியதில் அதிக மகிழ்ச்சியடைந்த ஹீரோ அரவிந்தைப் வியப்புடன் பார்க்கிறேன்.

வெகு சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் மனதை நெகிழ்வடையச் செய்தது.



Previous Topic: ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
Next Topic: ரூபம்


One Comment for “வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!”
பவள சங்கரி says:
November 26, 2012 at 6:43 am

அன்பின் ஜெயஸ்ரீ,

மனம் நெகிழ்ச் செய்த கதை. ஹீரோ ஒர்ஷிப் என்று இனி யாரும் மட்டமாகப் பேச வேண்டியதில்லை. எதையும் நாம் எந்த விதத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் எல்லாமே. நல்ல கதை.

“உயிரைப் பனயம் வைத்து” என்று வர வேண்டும் இல்லையா. ஒரு வார்த்தை விட்டுப்போயிருக்கிறது என்று நினைக்கிறேன். நன்று ஜெயஸ்ரீ, வாழ்த்துக்கள். வழ்க்கம் போல அருமையா நடை!

அன்புடன்
பவள சங்கரி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஹீரோ


பல்கலைக் கழகத்தில் பிரச்சனை வந்து அனைத்து வெளி மாநில மாணவர்களும் அவரவர் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.


அரவிந்தும் வழக்கம் போல தனது நண்பர்களை கடலூர் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக செல்கிறான்.


அங்கிருந்த இரண்டாம் நடை மேடையில் இருந்த ஒரு பலகையின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்களாம். ரயில் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்று அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்று.


சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சத்தம்...."அம்மாம்ம்ம்மா ம்மா ம்ம்ம் மா ...என்று தொடர்ச்சியாக கேட்கவே...


இவர்கள் கண்ணுக்கெட்டிய வரை எதுவும் புலப் படாததால்....என்னடா..பக்கத்துல சத்தம் கேட்குது...ஆனா பக்கத்துல ஒண்ணும் இல்லையே....மாடு சத்தம் மாதிரி இருக்குடா....என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன் ...ஆமாண்டா...பேயில மனுஷப் பேய் மாதிரி மாட்டுப் பேயும் இருக்கும்...." என்று தமாஷ் செய்து கொண்டிருதிருக்கிரார்கள்.


திடீரென..ஒரு வட நாட்டவர்...கையில் ஒரு தடியோடு வந்து...."உஷ்....உஷ்...உஷ்....ஜா..ஜா....ஜா...." என்று நடை மேடையிலிருந்து விரட்டவும்..


இவர்கள் மூவரும் எழுந்து அங்கு சென்று என்ன என்று பார்க்கிறார்கள்.


அங்கே...ஒரு நடுத்தர அளவு பசு மாட்டு கன்று ஒன்று தண்டவாளத்துக்கு அருகின் நின்றபடியே.....மேலே எழும்ப முடியாமல்....எப்படியோ.....சம தளத்திலிருந்து உள்ளே புகுந்து வந்த கன்று...தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டிருந்தது.


இவர்கள் விரட்டினாலும் அது நடந்து போய் மேலே சம தளம் சேர நேரமாகும். என்ன செய்வது.? என்று அறியாமல் நின்றிருந்த இவர்கள் ...குழப்பத்தில் இருந்தார்கள்.


நள்ளிரவு நேரமானதால் யாருமே இல்லை...வெறும் நான்கு பேர்கள் மட்டும் இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது..திடீரென தூரத்தில் பிரகாசம்...ரயில் வருவதற்கான அறிகுறி.


இப்ப என்ன பண்றது...? ரயில் வராப் போல இருக்கே.. நிற்க நேரமில்லாமல்..


அரவிந்த் உடனே கீழே குதித்து அந்த பசு கன்றை அலாக்காகத் தூக்கி நடை மேடை மேலே போட்டதும்...
அது கீழே விழுந்து நொண்டி எழுந்தபடி...சென்று விட்டது.


இவன் கிட்டத் தட்ட நூறு கிலோ எடை கொண்ட அந்த பசுவைத் தூக்கும் பொது அது திமிறி அதன் சின்னக் கொம்பை ஆட்டி இவன் கழுத்தின் வலப் பக்கத்தில் ஒரு இடி இடிக்க....நல்ல வேலையாக மேலே தோல் மட்டும் லேசாகக் கிழிந்தது. ரத்தம் வழிய...இவனும்...அங்கிருந்து எழும்பி மேலே குதித்து ஏறவும்...அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர்களை கடந்து செல்லவும் சரியாக இருந்ததாம்.


உடலெங்கும் புல்லரிக்க அங்கிருந்த நால்வருக்கும் திகில்.


அந்தப் பெரியவர்..."தம்பி...நீ பிழைச்சது பாக்கியம்...நீ அந்த பசுவை பிழைக்க வெச்சது புண்ணியம்" என்று சொன்னாராம்.
இதை வந்து அவன் சொல்லி கழுத்தைக் காண்பித்த போது . " நீ ஒரு உயிரைக் காப்பாத்தி இருக்கே...."
உனக்கு ஒண்ணும் ஆகாது...பகவானின் கருணை என்றும் நம் குடும்பத்துக்கு உண்டு..."
ஒரு காரணம் இன்றி ஒரு காரியம் அமையாது....அந்த பசுவைக் காப்பாற்ற உன்னை கண்ணன் இங்கிருந்து அழைத்திருக்கிறான்..." என்று நினைக்கும் போது ..எந்தன் நெஞ்சமும் நெகிழ்ந்தது.


இது நடந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது. இப்போது அரவிந்தின் காயம் தேவலை.


திங்கள், 25 ஜூன், 2012

ஆயிரத்தில் ஒருவனையா...நீ..!





சிறுகூடல்பட்டி விட்டு
சிகாகோ வரை காற்றுக்
கோடிழுத்த கவியரசர் ....நிந்தன்
மூலக்கனல் கண்ட யாவும்..
ராகங்கள் பாடியதே...!


ஏழ்மையின் வலிகளுக்கு
வரியால் மயிலிறகாக்கி
மருந்த்திட்ட மருந்த்துவனே..!
இயற்கையை மூட்டைகட்டி
முத்துக் கடலுள் பொக்கிஷமாய்
புதைத்த முத்தையனே...!
திரைக்கதைக்கு மாயாவியாக
திரவியங்கள் சேர்த்தாய்..
சோம்பித் திரியும்
மனங்களுக்கு உற்சாக பானமாய்..!
உற்சாக உள்ளங்களுக்கு
உந்து சக்தியாக..
செவித் திறன் இழந்தவர்
விழிகளால் கேட்டார்...
விழித் திறன் இழந்தவர்
செவிகளால் பார்த்தார் !
மொழித் திறன் இழந்தவர்
இதயத்தால் இசைத்தார் !
ரசனை பெற்றவர்....
தம்மையே இழந்தார் !
ரசிக்கா திருந்தவர்...
நிறைவை இழந்தார்...!

எழுத்தாணியே வாய்ப்பாக
அமைந்ததனால்....ஒவ்வொரு
இதயத்தையும் எழுத்தால்
தட்டிச் சென்றாய்....!

அத்தமுள்ள இந்துமதம்
விழிகளுக்கு ஒளியானது...!
பகவத் கீதை படைத்து
பாதைகள் காட்டிட..
வனவாசமும், மனவாசமும்
உமது விலாசத்துக்கே
இழுத்துச் சென்றது..!
 

திரைவானில் மலர் வாசம்
வீசச்செய்த கவிச்செம்மல்...
சென்ற பாதை வேறாகினும்
நீ வகுத்த சாலையில் தான்
இன்னும் எங்கள் பயணம் !
ஒரே புகழ்க் கொடி ஏந்திச்
சுற்றும் இந்த பூமி.....ஏங்கும்
மனமெல்லாம் உந்தன்
மண்வாசம் சாமி..!

புதன், 20 ஜூன், 2012

கண்களை தானம் செய்வோம்....!


பூவுலகின் உதயத்திலே.....
ஓர் உயரம்
கண்டு விட்டோம்
உலகம் பார்த்து
வியந்த உள்ளம்...
உள்ளம் பார்க்க
விரைந்து வா....!


இருட்டில் வாழும்
இதயங்களே....
இறைவன் வாழும்
இதயங்களாம்...!
நாம் பார்த்த உலகம் தனை
அவரும் பார்க்க
வாய்ப்பளிப்போம்...!


இறைவன் தந்ததை
மீண்டும் அவருக்கே...
பதிந்து தந்திடுவோம்...!
நாமாக இருந்து
பேசிய விழிகள்
நமக்குப் பின்பும்
பார்க்கட்டுமே....!


இன்று நம் நெஞ்சினில்
இரக்கம் இருந்தால்....
நாளை..இன்னொரு
முகத்தில் இணைந்திடும்
ஜீவனாக விழிகள்..!


வண்ண உலகைப்
பார்த்த உயிர்கள்
நம்முயிரை வாழுத்துமே...
பிறந்த பயன் கிட்டிடுமே..!

ஞாயிறு, 10 ஜூன், 2012

விழுதுகள்.....வித்துக்கள்....


குயில் கூட கூவ மறுத்து
ஊமையானதே...
காகம் கூட கரைய இங்கு
நேரம் பார்த்ததே..
இலைகள் அசையாமல்
அடம்பிடித்ததே..
இயற்கை அன்னை கண்ணை
மூடி தவமிருந்ததேன்..?

பரந்த இடம்...பரந்த மனம்... 
இங்கு மட்டும் தான்..! எங்கும் 
அலைபாய்ந்த கண்களோடும் 
வினாத்தொடுக்கும் இதயத்தோடும்
நுழைவாயில் சேரும் முன்னே..

கைவிரல்கள் கணக்கெடுத்தது...!
காலணி  வரிசைகளை..!
நூற்றுக்கும் மேற்பட்ட இதயங்கள்
இயங்கும் கோயிலடா.... அங்கே...!
அமைதியும் நிசப்தமும்
இறைவனாகக்   குடிகொள்ள..!

கண்களாலும்.... கைவிரல்களாலும்...
ஊமை பாஷை  பேசிய குழந்தைகள்..!
நீங்கள் இருப்பது விடுதியல்ல....
மாதுளை ஓட்டுக்குள் மாணிக்கமாய்
மின்னும் மாதுளை வித்துக்கள்..

நாளைய ஆலம்விழுதுகள்..
பேசாத நாவோடும்...
கேளாத செவியோடும்...
அன்போடும் ஒன்றாகச்
சேர்ந்து நின்ற போது...
உங்களின் பலம் பார்த்தேன்..!

செலவழித்த நேரத் துளிகள்....
எனக்குள் உறைய..!
திரும்பியவளுக்கு
ஆச்சரியம்..!!
தன் மனசு தனக்கே
போட்டதே  தாழ்....?
பேரமைதியும் ......ஈரவிழிகளும் 
அதற்கு நன்றி சொன்னது..!
=======================================================

ஞாயிறு, 13 மே, 2012

கம்பிமேல் நடக்கும் வாழ்வு..!

 
 மேகம் போல் மாறி 
மாறி மனதின் நிலை 
 விழாமல் தடுமாறி...!

புதைந்து போன உண்மைகள்
மெல்ல  உயிர்த்தெழும்...
உணர்வுகள் புதைந்திடும்..!

ஒவ்வொரு இதயத்துள்ளும்
இதே போராட்டம்..
பாசத்தில் இருந்து பதவி வரை..

அறியாமல் நடந்திடும்
மனம் நித்தம் கம்பி மேல்...
விழுவதும் அடைவதும் ..வாழ்வு..!

தெரிந்தும் கடக்கிறோம்..
அடைந்து விடும் ஆர்வத்தில்
விழமாட்டோம்... நம்பிக்கையில்...!

கூத்தாடி வாழ்வு தான்..!
மனிதர்கள் எங்கும்..
மனதுக்குள் என்றும்..!

கலியுகக் கருணா...!

வங்கிக்கொரு 
கடன் அட்டையாம்... 
வீடு தேடி வந்த 
மகாலட்சுமி....
நீ தானோ..!
கைப்பையில் 
காசே  வேண்டாம்..
தோல் பைக்குள்
பத்திரமாய்...நீ.. 
இருந்தால்....!

அளவு தெரிந்தும்...
தெரியாமலும்
வேண்டியதும் 
வேண்டாததும்...
இன்னும்..இன்னும் 
லிமிட் இருக்குன்னு...
அளவைத் தாண்டி ..
நீ தேய...தேய...
அட்சய பாத்திரம் நீ...!
ரகசியமாய் என்னைப் 
பிச்சைப் 
பாத்திரமாக்கினாய்...!

கலியுகக் கர்ணா..
ஆபத் பாந்தவா...
நீ இருக்கையில் 
எத்தனை தீபாவளி...
எத்தனை பொங்கல்.. 
வந்தாலும்..தாங்கும் 
என நான்..!
அற்புத விளக்காய் 
உன்னை தேய்க்க..
புதியவை எல்லாம் 
வீட்டுக்குளே....
கடனை ஏறியது....
தலைக்குள்ளே...!

மூன்றாம் நாளே....
வட்டி குட்டி போட்டு..
பாய்போல்....
கணக்கு வர...!
எனக்கோ...
மயக்கம் வர...!
அளவைத்  
தாண்டியதால்..
அழுத்தம்.... 
கூடிப்போய்..
கர்ணன் இல்லை....
கலியுகத்தில்..
கடன்  அட்டை.....
வழுக்கு மரம்...!

சாண் ஏறி 
முழம் சறுக்கி...
கட்டக் கட்ட...
கடலில் கரைத்த 
பெருங்காயமாய்..!
வாசலில் வந்து 
நிற்காத 
ஈட்டிக் காரனாக...!
மூன்றங்குலம்....
கழுத்தை இறுக்க..
கனவிலும்... 
கடன் தொல்லை...!
மாற்று வழியறியாது....
பல்லாங்குழியாடி..
அட்டையை 
மொட்டையாக்கி...... 
மூச்சுவிட்டேன்...!

கைபேசியில் புது.... அழைப்பு...
"பொங்கல் சலுகையாய்"....
கடன் அட்டைத் திருவிழாவாம்....
பதிவும் இல்லை..
கட்டணமும் இல்லை..
ஒரு லட்சம் ஆரம்ப அளவில்....
இலவசமாய்..
உங்கள் வீடு தேடி வரும்........
எப்போ அனுப்பி வைப்பது..?
சிணுங்கியது மணிக் குரல்...!
...........................................................................
...........................................................................
எனக்குக்..  கைபேசியே... 
வேண்டாம்......!
இணைப்பை துண்டித்து 
தப்பிவிட்டேன் என 
பெருமூச்சு விட்டேன்..!
================================================