சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஆண்-பெண்



ஜோதிர்லதா கிரிஜா


ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியைப் பிரபஞ்சன் அவர்களின் கட்டுரை (புதிய தலைமுறை (23.2.2012) யின் சில பகுதிகள்  எழுப்புகின்றன.  அந்தக் கேள்வியை மட்டுமே தொட்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம் காலமாக மிகப்  பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்! ஆண்களது நட்பு உயர்வானது, நட்புக்கு ஆண்களே அதிகம் உரியவர்கள் என்பதே எனது கருத்து. நட்பைப் பொறுத்த வரையில், பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்த நண்பர்கள் என்பதாய், ‘இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்’ எனும் எனது நூல் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை ஒரு பத்திரிகை ஆசிரியர் எடுத்தெழுதியிருந்ததோடு அது பற்றிய தமது வியப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.  கட்டுரையின் தொடக்கத்தில் இதைக் குறிப்பிட ஒரு பொருத்தமான காரணம் இருக்கிறது.  பெண்ணுரிமைவாதி என்பதோடு, ஆண் எதிர்ப்பாளி என்பதாகவும் நான் அறியப்பட்டு வந்துள்ளதால், எப்போதும் அப்படி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பொருட்டே இது இங்கே குறிப்பிடப்படுகிறது!

ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய்  நான் சொல்லப் போகும் கருத்தை  என்னைப்பற்றிய ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச் சொல்ல இந்தச் சுயத் தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.

ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது.  பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை!  விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படி யெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ‘எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்’ என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ‘ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்’ என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.

ஒரு பெண்ணோடு பழகும் போது ‘இவள் ஒரு பெண்’  என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை. இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டு  வர முடியும்!

இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு.  அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை.  முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு  அவளது பிறப்பியல்பு.  பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக்கொள்ளாத போதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.  தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை.  எதிர்ப்பாலைச் (Opposite sex) சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக் கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது. ஒரு பெண்  இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும் போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை.  எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை.  சண்டை வரும் போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்!)

தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும்  - அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது,  அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்து மீறல்கள் ஏற்படும் போதே, அதைப் புரிந்து கொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள். 

ஆனால், ஆண்  இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்து மீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப் போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் பிரபஞ்சன் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப் போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன். தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய சிறு அத்து மீறல்களைஅவன் செய்ய மாட்டான்! தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.

எனவே, ஒரு  புற்றில் பாம்பு இருக்கிறதா, அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக்  கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (risk). ஆக, (100%) மிக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால்  மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்! மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடே யானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது.  ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் “வழிவது” பற்றிய  கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி,  தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி,  வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் “வழிசல்கள்” உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)

பல்லாண்டுகள்  எந்த விதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணே கூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.  சென்ற ஆண்டு “கல்கி” யில் வந்த துர்வாசரின் “உள்ளும் புறமும்” எனும் தொடர்கதை (நான் பாதியிலிருந்து முடிவுவரை படித்தது) இதைத்தான் மிக அழகாய், மிக இயல்பாய்ச் சொல்லுகிறது.

ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத  தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி   சாபல்யம் அடையுமா என்ன!

பெண்ணையும்  ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை  நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய்! அபத்தத்திலும் அபத்தமான கருத்து!

பெண்களோடு அவர்களைப் பழக விட்டாலும்.  பழகவிடாவிட்டாலும், அவர்கள்  காட்டுகிற இயல்பு ஒன்றுதான்!  அதை மாற்றுவது மிக, மிக.........மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி /கல்லூரி மாணவனோ, சிறுவனோ,  இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில்  வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும்.  நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்!

நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.

வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில்  நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆணகள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்து கொண்ட கொடுமையை என்ன சொல்ல! பொதுவாக இதுதான் ஆண்களின் ‘லச்சணம்’ ! இது போன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை.  ஆனால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில் தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். 

ஆண்களும்  பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல்.  இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும்,  உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட  பிரபஞ்சன் போன்ற சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.

எனவேதான்  நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர் போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.  அவ்வாறு இல்லாத பிற ஆண்களும் கூட இதனை ஆதரிக்கிறார்கள் – ஆனால், வேறு உள் நோக்கத்துடன்.  அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ! அதற்காக!  

 நன்றி - தினமணி 

வியாழன், 21 ஜூன், 2012

"ஞானதீபம்" .!





குழந்தைப் பருவம் பணம் படைத்தவர்களுக்கு, ஆரோக்கியமாகவே அமைந்து விடுகிறது. ஆனால்...பொருளாதாரத்தில் பற்றிக்கொள்ள ஆதாரம் இல்லாமல் நலிவடைந்து போய் அல்லல் படும் குடும்பத்தில் பிறக்கப் படுவதால் மட்டுமே குழந்தைப் பருவத்தில் இருக்கும் எந்த ஒரு இனிய சந்தோஷத்தையும் எட்டிக்கூடப் பார்க்க இயலாத துர்பாக்கியசாலிகளாகிவிட்ட பிஞ்சு மனங்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இன்னும் நம் தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் இருந்து சில மணிநேர பிரயாணத்தை அடுத்தே இருக்கும் சிறு சிறு கிராமங்களின் இன்றைய நிலைமையைக் கண்ணுற்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற நியாயமான எண்ணத்தில் ஒரு உந்துதலாகத் எழுந்த கட்டுரை இது.

இந்த சின்ன அகல்விளக்காக ஏற்றப்படும் சுடர்...... ஒளியால் கடந்து பலரது வாழ்வு ஒளிர வேண்டும் என்ற வேண்டுதலோடு தோன்றியதை எழுதாமல்....அனைத்து மனத்தினை இணைக்கவே இந்த எண்ணத்தினை அனுப்புகிறேன். ஒரு தனி மனித மனத்தின் எண்ணத்தால் எந்த ஒரு எழுச்சியையும் நடைமுறையில் கொண்டு வர இயலாது அல்லவா..? எந்த ஒரு இயங்கு சக்திக்கும் ஒரு உந்துசக்தி தேவைப் படுவதைப் போலவே...ஒரு குடும்பம் நிமிர, உயர, அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் கல்வி அறிவு பெர்ற்றவர்களாக இருக்க வேண்டும். இது நாம் எல்லோருக்மே தெரிந்து, அறிந்த ஒரு விஷயம் தான்...இதில் பெரிதாக ஒன்றும் இல்லை..அதற்குத் தான் அரசாங்கம் என்னவெல்லாமோ செய்கிறதே என்று முன்பு நான் நினைத்தது போலவே..நீங்களும் கேள்வியாகவோ... பதிலாகவோ எழலாம்.. அதுவும் சரிதான்.

கல்வி கற்பதால் மட்டும் தான் ஒரு குடும்பம் தலை தூக்க இயலும் என்று நன்கு அறிந்திருந்தும் இந்த நூற்றாண்டில் கூட இன்னும் பள்ளியின் வாசலை மிதிக்காத சிறுவ சிறுமிகள் வானம் பார்த்த பூமியாக இலவச தொலைக்காட்சி பெட்டிக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு சுயம் அறியாமல் ஏதோ இலவச மாயையில் வளைய வருகிறார்கள்.
அவர்களை சந்தித்துக் கேட்டால்....வெள்ளந்தியாகச் சிரித்து விட்டு "பள்ளியோடம்னா......புச்தொகம்னா....மதியம் சோறு போடுவாங்களே...அங்கியா...." என்று கேட்டுத் தான் தாயின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் எட்டு வயது
நிரம்பிய ஒரு சிறுவனின் கேள்வி...என்னை சிந்திக்க வைத்தது. இந்தியா....நீ...இப்படியா..? என்று ஆச்சரியக் குறி என்னுள் மட்டும் அல்ல இதைப் போல நீங்களும் சந்தித்தால் இதே..கேள்வி தான் உங்கள் மனதிலும் தோன்றும்.

இதில் யாரை நொந்து கொள்வது. ஏழ்மையையா ...? எங்கே...எப்படி சரி செய்ய வேண்டும் என்ற அறியாமையையா...? பார்த்த ஒரு பிள்ளையே இத்தனை கேள்விகளை கேட்க வைத்து விட்டானே....இன்னும் எத்தனை பிள்ளைகள் கண்ணுக்கே தெரியாமல் நித்தம் நித்தம்.....வெறும் நாளாக மட்டும் கடத்திக் கொண்டு...கூலி வேலை செய்யும் தந்தைக்கு வெறும் வாரிசாக..? அவர்களின் எதிகாலம் தான் என்ன...? இப்படியே போனால் இந்தியாவின் எதிர்காலம் தான் என்ன...? ஒரு சாரார் படித்த வர்கம்....படித்துக் கொண்டே போக...இன்னோர் சாரார்...அதே கூலி வேலையில் இருந்து மீளாமல்.....எத்தனை சலுகைகள் அரசாங்கம் அறிவித்தும் என்ன பயன்...? அது சேர வேண்டிய இடத்தில் சரியாகப் போய் சேரவில்லையே...இந்தப் ஒரு பெரிய பொத்தல் கண்ணுக்கே தெரியாமல் ஓரமாய் இருக்கிறது....எந்த அமைப்பு இதை அடைக்கும்..?....சரி செய்யும்.?..காக்கும்...?

பலரின் கைகளும், மனமும், எண்ணமும் சேர்ந்தால் திண்ணமாக இதற்கும் ஒரு வழி வகுக்கலாம்.எத்தனையோ கிராமங்களில் பள்ளிகள் இல்லை...அப்படியே இருந்தாலும்...அது என்னவோ பூதங்களின் இருப்பிடமாக பாழடைந்து கிடக்கிறது. ஒரு கிராமம் விட்டு இன்னொரு கிராமம் செல்ல இயலாமல் படிப்பைத் துறந்து ஒரு அறிவின் திறனை தானே சமாதி ஆக்கிக் கொள்வது தான் இந்த நிலையின் உச்சகட்டம். யாருக்கும் எதற்கும் நேரமில்லை...இதையெல்லாம் சிந்திக்கவும் பொறுமை இல்லை. இருந்தும், மனது வைத்தால் மட்டும் தான் இதயங்களைப் பாலமாக்க்கி ....எண்ணங்களை ஏணியாக்க்கி .பல அமைப்புகள் ஒன்று கூடலாம்...இணைந்த கரங்களின் சக்தி நாமறியாததா...? இன்ன ஜாதி என்று கணக்கெடுப்பு நடத்திக் கொண்டு வருகிறார்களே......அனைத்துக் பிள்ளைகளும் சரியான வயதில் பள்ளிக்கு செய்கிறார்களா என்ற கணக்கெடுப்பு செய்ய ஏன் தவறுகிறார்கள்..?


நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும்....இதும் தலையாயப் பிரச்சனை தானே...அவரவர் தங்களால் இயன்ற முறையில் ஏதாவது செய்யலாம்....பள்ளி இல்லாத இடங்களில் அதற்கான முயற்சி செய்யலாமே.
பணம் என்னும் பகடைக் காயை உருட்டி விளையாடும் சமுதாயத்தின் உயர்ந்த வர்க்கத்தின் நிலை மாறி இந்தியக் குழந்தைகளின் சீர் ஓங்க ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற முறையில் முயற்சித்தால் அதுவே பின்னாளில் ஒரு உயர்ந்த சமுதாயம் உருவாகும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனும் நல்ல அறிவுரைகள் வெறும் காற்றில் கலந்த கற்பூர வாசமாக மறைந்து போகாமல் கடலில் கலந்த உப்பு போல என்றென்றும் நிலைத்து நிற்குமாறு நம்மால் இயன்றதைச் செய்வோம்.
அறிவு என்ற அட்சய பாத்திரத்தை பத்திரப் படுத்தும் முயற்ச்சியில் கல்வி என்ற பெரும் செல்வத்தைக் கடத்து வளர்ப்போம்..எந்தப் ஒரு மாணவனுக்கும் கல்வி உதவி செய்யத் தயங்காமல் நம்மால் இயன்றதை நமது பங்கென சிறிதேனும் அளிக்கலாம் ....சமுதாயத்திற்க்காக சிறிதேனும் சிந்திக்கலாம்.

நாமெல்லாம் ஏற்ற முனைவது "ஞானதீபம்" .! அந்த அறிவுச்சுடர் தனியாகவும் எரியாது....எந்நாளும் அணையாதது..!

நட்புடன்.
ஜெயஸ்ரீ ஷங்கர்.

சனி, 28 ஏப்ரல், 2012

நியாயப் படுத்தாத தண்டனைகள்..!




காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் தௌலத் வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும்?
வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை...அதற்குள் இப்படி...இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே வெச்சுக்காமல் இருந்தேன்...என்னோட இந்த விரதத்துல போன வாரம் தௌலத் தான் கையை வைத்தாள்.. எப்படின்னு கேட்கறேளா...? இருங்கோ...இந்தப் பாத்திரதத் தேச்சுண்டே சொல்றேன்.....கதை கேட்க உங்களுக்கு இஷ்டமோ இல்லையோ...இந்த உண்மையைச்  சொல்ல எனக்கு ரொம்ப இஷ்டம்....! அதோட இல்லாமல் இதக் கேட்டு...எங்கோ ஒரு மூலையில் ஒரு மனம் மாறினாலும்....நல்லது தான்.

பத்து நாட்கள் முன்னாடி....தான் முன்னப் பின்ன தெரியாத அவளை பக்கத்து பிளாக் இல் இருக்கும் பேகம்....அறிமுகப் படுத்தி வைத்தாள்.. இவளுக்கு குடும்பத்தில் ரொம்ப கஷ்டம்....நீங்க வீட்டு  வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு ஐநூறு அறுநூறு கொடுத்தால்....ஒரு குடும்பம் பிழைக்கும். அவள் நிறுத்த...

இல்லங்க....என்னக்கு வீட்டுக்கு வேலைக்கு ஆள் வெச்சுக்கற பழக்கம் இல்லையே....நான் அப்பப்போ ஊருக்கு போய்டுவேன்.....அதெல்லாம் சரிபட்டு வராது...வேண்டாம்...என்று நிறுத்த...

தௌலத் தொடர்ந்தாள்.

" இல்லம்மா...நான் ரொம்பக் கஷ்டப் படறேன்மா....இரண்டு பிள்ளைங்க.....படிக்க வைக்கணும்....புருஷன் சரியில்லை....பத்து நாளைக்கு ஒரு தபா தான் வீட்டுப் பக்கமே வருவாரு....இருக்கியா...செத்தி
யான்னு கூட கேட்காமல்...கையில் கிடைச்சதை எடுத்து அடிச்சிட்டு பணத்தை புடுங்கிட்டு ஓடிடுவாரு...இன்னொரு குடும்பம் வேற அதுக்கு........குடியும்...குடிச்சிட்டு அடியும் தான் எனக்கு கிடைக்கும்......என்னாப் பண்றதும்மா....புள்ளங்களுக்காகத் தான்.....இப்படி...என்று காலில் விழாத குறையாக கேட்க"...என் மனம் விரதத்தைக் கை விட்டது.,

இருந்தாலும்...நான் வேண்டாம்....அப்பப்போ நான் இருக்க மாட்டேனே...வேலை ஒன்னும் அப்படி ஆள் போட்டு பண்ணற அளவுக்கு இல்லையே என்று...சொல்லிப் பார்க்க....
"ஏன்மா....நான் பாய் வீடுன்னு பார்கறீங்களா..? நீங்க....ஏன்னா ஆளுங்க.....? என்று கேட்க...
ச்சே...ச்சே...அப்படி எல்லாம் பார்க்கலை....என்று வாயும்.....வேண்டாம்னா....இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ என்று மனமும்......பேசிக் கொண்டது......".படிப்பது ராமாயணம்....இடிப்பது....." அந்தக் கதையாக இருக்கக் கூடாதே...அதனால்..
சரி...நாளையில் இருந்து வா....கார்த்தால ஏழு மணிக்கெல்லாம் வந்துடு...என்ன சம்பளம் என்று கேட்டதும்....
பாத்திரம் தேய்ச்சு...மெஷின்ல தானே துணி துவைப்பீங்க....அதைக் மாடியில் காயப் போட்டு, பெருக்கி துடைத்து....
ஒரு அறுநூறு ரூபாயைக் கொடுத்துடுங்கம்மா......தயவு பண்ணி....என்றாள்.

சரி.....என்று சொன்னதும்....முகத்தில் ஒரு நிம்மதி.சரிம்மா நாளைக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு புர்காவை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்....தௌலத்.

இந்தப் பத்து நாட்களும்.....எந்தப்  பிரச்சனையும் வராமல் அவள் பாட்டுக்கு வந்து சுவடே தேராமல் சுத்தமாக வேலை செய்து விட்டு சென்றவள்....திடுமென வராமல் இருப்பதன் காரணம் என்னவாயிருக்கும்...?
இதோ...காலிங் பெல் அடிக்கிறது.....பாதி பாத்திரம் தேய்ச்சுட்டேன்...கை அலம்பிண்டு கதவைத் திறக்கப் போறேன்...

இருங்கோ...மீதியும் இருக்கே...!

வாசலில்....தௌலத்.....அவள் முகம்....கவலையில்...!
என்னாச்சு தௌலத் உனக்கு....ரெண்டு வேளை,,,டும்மா.....வர முடியலைன்னா சொல்லிட்டு போயிருக்கலாமே...போன் நம்பர் தான் கொடுத்தேனே...ஒரு போன் பண்ணி சொன்னாக் கூடப் போதுமே...என்றேன்.

இனிமேல்...கதையாக சொல்லவில்லை...நீங்களே நேரில் பாருங்கள்....!

தயக்கத்துடன்......அம்மா...அது வந்து....உங்க பக்கத்து வீட்டு செட்டியாரம்மா....என்னை வாசல்லயே மடக்கி...இனிமேல் இங்க நீ காலடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு மிரட்டினாங்கம்மா...அதான் வந்தவள் திருபப் போயிட்டேன்.......என்றாள்.
"இது நல்லாருக்கே...அவங்க எப்படி அப்படிச் சொல்லலாம்.....? என் வீட்டில் நீ வேலை செய்ய அவங்க பெர்மிசன் நமக்கு எதற்கு...என்று கேட்டேன்.

அதில்லைம்மா...நீங்களே வந்து பேசிப் பாருங்க...முடிஞ்சா ..அவங்க கிட்ட...என்று சொன்னதும்.....எனக்குள் ஏதோ
சுறு...சுறு....வென்று.....சுழல.....நீ வா....அவங்க கிட்டயே...கேட்கறேன்.....இதில் கூடவா ஒருத்தர் தலை இடுவாங்க....சொல்லிக் கொண்டே பக்கத்து பிளாட் வீட்டுக்கு போனேன்...கூடவே தௌலத்தும் வந்தாள்.

அவர்கள் வீட்டின் முன்னால் நான் ஆஜரானதும்...ஜன்னல் வழியாக என்னைப் பார்த்த அந்த ராஜேஸ்வரி அம்மா...
கதவைத் திறந்து...வாங்க என்றவர்....என் பின்னால் நின்ற தௌலத் தைப் பார்த்ததும்...முகம் மாற....நான் வந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவளாக...
"ஏங்க...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க....உங்களுக்கு இவளை விட்டா வேற வேலைக்கு ஆள் கிடைக்கலியா..?
வேணும்னா சொல்லுங்க..என் வீட்டு வேலைக்கார அம்மாவை நான் கேட்கறேன்....."போயும் போயும் பாய் வீட்டம்மாவ வேலைக்கு வெச்சுருக்கீங்க."....என்று எகத்தாளமாக...கேட்டாள்.
"அதனால என்ன..." இது உங்களை எந்த விதத்தில் பாதிக்குது..?என்று நான் கேட்டதை அவர்கள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
நீங்க பிராமின்  தானே..? எந்த பிராமணரும் செய்யாத காரியத்தை நீங்க எப்படி செய்யலாம்....அப்போ நீங்க என்ன பிராமணர்....? நாங்கள் ...உங்கள் வீட்டுக்குள்ளாற இனிமேட்டு வர மாட்டோம்....என்று ஒரே கல்லாகத் தூக்கி ஓங்கி தலையில் போட்டாள்.

இதென்னடா வம்பாப் போச்சு...? நினைத்தாலும்...என்னால் விட்டுக் கொடுக்க முடியவில்லை....
இதோ பாருங்க....நீங்க எப்படி என் வீட்டுக்கு வேலைக்கு வரவளை.....வராதேன்னு சொல்லி திருப்பி அனுப்பலாம்...அப்படியே சொல்லி இருந்தாலும்...என்கிட்டே ஒரு வார்த்தை நீங்க சொல்லி இருக்கணும்.....இது என்ன நியாயம்...என்று கேட்க...

அது சரி..முதல்ல உங்க வீட்டுக்குத் தான் இந்தம்மா வேலைக்கு வருதுன்னு தெரியாமல் இருந்துச்சு...பெறகு தான்
வாட்ச்மேன் சொன்னாரு....அய்யர் ஊட்டுல வேலைக்கு போகுதுன்னு.....எனக்கு நம்ப முடியலை....அது உங்க வூட்டுத் துணிய கொடியிலக் காயப் போடுறேன்னு....ஏங்க வீட்டுத் துணியை எல்லாம் தொடுது....எனக்கு இது கையி.காலு...மேல...படறது எல்லாம் சகிக்காது,,,,இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை...சொல்லிப்புட்டேன்....
ராஜேஸ்வரி அம்மாளின் குரல் உயர.....உயர.......

தௌலத்.....கேவி,,,கேவி அழ ஆரம்பித்தாள்..
தௌலத்....நீ ஏன் இதுக்குப் போயி அழுதுகிட்டு......ஏங்க....ஒரு மனிதாபிமானமே இல்லாமல் இருக்கீங்க....இந்தக் காலத்தில் ....ஜாதி..மதம்...ன்னு பேசி..ஒரு பெண்ணோட மனசைக் காயப் படுத்தறீங்க.....ஒரு பெண்ணாக இருந்துகிட்டு....
நாம ஒவ்வொருவரும்..இந்த ஜாதில தான் நான் பிறக்கணும்னு எழுதி வாங்கிட்டா பிறந்து வந்தோம்....?,,,எனது கேள்வி அவர்களைத் தாக்கியதோ இல்லை...இதற்க்கெல்லாம் நான் அசந்தவள் இல்லை என்று..".உங்களோட எனக்கென்ன பேச்சு.....இந்த அபார்ட்மெண்டில்  எல்லாரும் இந்துக்கள் தான்....நாங்க இந்த பிளாட்டுக்கு ஓனர்ஸ்..
நீங்க வாடகைக்கு வந்தவங்க...இங்க இருக்கற ரூல நீங்க மாத்த முடியாது....இது..இங்க இனிமேல் வேலை பார்க்க வரக்  கூடாது அவ்ளோதான்...சொல்லிட்டேன்.....என்று தௌலதைப் பார்த்து கையை காட்டி விட்டு....கதவைப் பட்டென்று சார்த்திக் கொண்டு உள்ளே போய்விட்டாள்....ராஜேஸ்வரி அம்மாள்.

எனக்குள்...நான் அவமானப் படுத்தப் பட்டேன் என்ற உணர்வு மேலோங்கினாலும்....ஒரு ஆவேசமும்... அத்தோடு சேர்ந்து எழுந்தது. மறுபடி அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி.....
"உங்களுக்கு மனிதாபிமானம் தான் இல்லைன்னு நினைச்சேன்....குறைந்த பட்சம் பணிவு கூட இல்லையே...என்று சொல்லி....உங்க வீடு சொந்த வீடு தான்...ஒத்துக்கறேன்.....ஆனால்...அதை வெறும் உங்க ஜாதிக் காரங்க மட்டும் கட்டியதா? இல்லை...நீங்க பார்த்து வெச்ச ஆளுங்க கட்டி தந்தாங்களா?....
ஹாஸ்பிடல் போயி பாருங்க நீங்க...ஒரு தடவையாவது.....ஜாதி...ஜாதி...மதம்...அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க....எல்லாம்...எந்த ஜாதி இருந்தால் என்ன...எந்த மதமா இருந்தால் என்ன....யாராச்சும் சமயத்துல உதவி செய்ய மாட்டங்களான்னு...காத்துக் கிட்டு இருப்பாங்க....
இதுவே உங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தரவங்க வேற ஜாதியா இருந்தா ஏத்துக்குவீங்க....
அவங்களே ஒரு ஏழையா இருந்தால்....மனசுக்கு தோன்றியதெல்லாம்....பேசுவீங்க.....!
தௌலத் என் வீட்டில் தான் வேலை செய்வாள்....உங்களால் ஆனதை செய்து கொள்ளுங்கள்...சொல்லி விட்டு...
வரும்போது...."கொட்டினால் தான் தேள்...கொட்டவில்லை என்றாள் பிள்ளைப் பூச்சி."...என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.....!
தௌலத் மறுபடி வந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள்....
ராஜேஸ்வரி அம்மாள்....இப்போதெல்லாம் என் வீட்டைக் கடக்கும் பொது..இரண்டடி நகர்ந்து ஏதோ தீண்டத் தகாதவர் வீட்டைத் தாண்டிச் செல்வது போன்ற பாசாங்குடன்.....செல்வதைப் பார்க்கும் பொது...நெஞ்சம் நிறைய சிரிப்பு தான் வருகிறது. ":என்று தணியும் இந்த ஜாதி...மத...பேதம்....?"
இந்தப் பரந்த உலகில் அவரவர்களைச் சுற்றி இருப்பவர்களை சக மனிதர்களாக பார்க்கும் பக்குவம் நம் ஒவ்வொரு வருக்குள்ளும் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்...நம் குழந்தைகளிடத்தில் இந்த விதையை விதைத்தால்....
எதிர்காலமாவது...சாதி மதம் இனம் என்ற கரும்  போர்வை விலகி...வெளிச்சம்...வரும்...
------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 7 ஏப்ரல், 2012

தில்லையில் கள்ள உள்ளம்..



தில்லையில் கள்ள உள்ளம்...!  
சமூகம்: ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி:திண்ணை.
(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..)
மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான்
மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா….என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை
பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு பஸ் ஏற்றி விட்டு..ஜெயா..நீ வந்து அம்மாவை அழைச்சுக்கோ.. ன்னு சொன்னான்.. என் தம்பி.
அதுவும் அம்மாவுக்கோ….என்னைப் பார்க்கும் சந்தோஷத்தை விட சிதம்பரத்தில் சபாநாயக்கர் கோவிலில் நடராஜ தரிசனம் காணும்
ஒரே ஆவலும் …ஆசையும்… தான் அதிகமாக இருந்தது…எனக்கும் தெரியும்.
இதோ..நான் கிளம்பிப் போயிண்டே இருக்கேன்..அம்மாவை அழைச்சுண்டு வர. சொல்லி வைத்தாற்போல் பஸ்சும்
சரியான நேரத்துக்கு சிதம்பரம் வந்தது. பஸ்ஸை விட்டு ஒவ்வொருவராக இறங்க என் கண்களில் பொறுமையின்மை..
அம்மா எங்கே…இன்னும்..? நினைத்த மாத்திரத்தில் அம்மாவின் ஊன்றுகோல் படியின் முன் ஊன்றிக் கொள்ள…
தட்டுத் தடுமாறி அம்மா இறங்கி வந்தாள். எழுபத்தி மூன்று வயது அம்மாவின் உடலெல்லாம் தனது அனுபவத்தை கிறுக்கி
வைத்திருந்தது. கீழே இறங்கி..என் முகத்தைப் பார்த்து….சிரித்தபடியே…நன்னாயிருக்கியா ஜெயா..? என்று கேட்டபோது
வாஞ்சையோடு அருகில் சென்று ஒட்டிக்கொண்டு அப்படியே அம்மாவை அணைத்துக் கொண்டேன். அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்..?
சிதம்பரத்தின் மண்ணை மிதித்த சந்தோஷத்தோடு….கடைசீல வரவழைச்சுட்டாரே….நடராஜர்..னு பரவசமானாள்.
பஸ் வசதியா இருந்ததாம்மா…?.என் கேள்விக்கு..
சொகுசு பேருந்து தானே…ஒரு பிரச்சனையும் இல்லை…சுகம்மா…வந்து சேர்ந்தேன்…என்றாள்.
வீட்டில் நுழைந்ததுமே….சரி..இன்னைக்கே…அரவிந்தன் காலேஜுக்குக் கிளம்பியதும்…நாமளும் .கோயிலுக்குக் கிளம்பிடலாம்..
அவனுக்கு மட்டும் சமையல் பண்ணி கொடுத்து அனுப்பிடு..என்று அவசரப்படுத்தினாள்.
பாட்டியைக் கண்ட சந்தோஷத்தில்… அரவிந்த்..”இனிமேல் இந்த அம்மாவுக்கு ஜாலி தான்…சும்மாவே காலு வீட்டில் தங்காது…..இப்போ உன்னையும் கூட
அழைச்சிண்டு கோயில்…கோயிலா….சுத்தக் கிளம்பிடுவா..பாரேன்…” என்றதும்..
ஆமாம்டா…சும்மா இந்த நாலு சுவற்றுக்குள்ளே…இருந்துண்டு…டீ வி ல வர ஆட்டத்தையும்..அழுமூஞ்சி சீரியலையும் பார்த்துண்டு
அதுவே கதின்னு இருக்க முடியுமா? இந்த வயசில் நாலு கோவில…குளத்தைப் பார்த்தால் தானே….போற வழிக்குப் புண்ணியம்.
மனுஷனுக்கு கையும் காலும் நன்னா இருக்கும்போதே….பகவானைத் தொழணும்…இல்லாட்டா…இப்படித்தான். என்னை மாதிரி..
சின்ன வயசுல எல்லாம் குழந்தைகள்…குழந்தைகள்…னு சம்சார சாகரத்தில் மாட்டிண்டு கிடந்தேன். வீடே கதின்னு….
இப்போ…வயசாச்சு…..தனியா…துணை இல்லாத ஒரு இடம் போக முடியலை. கட்டையும் …கோலுமா…..எடுத்துண்டு நடக்க
வேண்டியிருக்கு. நல்லவேளை…நீயாவது .இங்க…. படிக்கற……நன்னாப் படி..இந்தக் குடும்பம் உன்னை நம்பித்தான் இருக்கு..!
சரி பாட்டி…படிக்கிறேன்…அப்போ நான் வரட்டுமா..?நான் காலேஜுக்குக் கிளம்பறேன்..எனக்கும் நேரமாச்சு.
அட….நீ பாட்டுக்கு உன் காலேஜுக்குப் போற வேலையைப் பாரு..!
அம்மா…இந்தா…காப்பி….இங்க சுந்தரம் காப்பிப் பொடி தான் ரொம்ப பிரபலம்…உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லு..ஊருக்குப் போகும்போது ஒரு கிலோ
வாங்கித் தரேன்.
ம்ம்ம்….பேஷ்…பேஷ்…வாசனையே சொல்றதே….நரசுஸ் தோத்துப் போகுமனு…..ரொம்ப நன்னாருக்கு….வாங்கித் தா…அங்க நல்ல பொடியே கிடைக்காது..
மண்ணாட்டமா…இருக்கும் .வயசாறது இல்லையா…எல்லாத்தையும் சலிப்பாத் தான் சொல்லுவா அம்மா.
மகள் வீட்டுக்கு வந்து விட்டால் மட்டும் இந்த அம்மாக்களுக்குக் எப்படித் தான் இவ்வளவு சக்தி கிடைக்குமோ தெரியலை….எதையாவது
இழுத்துப் போட்டுண்டு செய்து கொடுப்பாள்…சரி..அப்போ..நாம கிளம்பலாம்….வா..
அம்மாவும்..நானும்…இரண்டாவது மாடியில் இருந்து ஒவ்வொரு படியா இறங்கி வந்து ஆட்டோ பிடித்து…கீழ வீதிக்கு வந்து இறங்கியாச்சு.
நான்கு கோபுரங்களையும் சுற்றி வரும் நான்கு வீதிகள் தான் சிதம்பரம்..சின்ன…அழகான ஊர். எப்போதும் பரபரப்பான தெருக்கள்.
கீழ வீதி கோபுரத்தைப் பார்த்து…..கையெடுத்துத் தொழுது .:சிவ..சிவ…ன்னு சொல்லிண்டே உள்ளே செல்கிறோம்..
இருபத்தொரு படிகள் கடந்து செல்கையில்…வேத கோஷங்களும்….மந்திரங்களும்….கம கம வென்று…சாம்பிராணி, சந்தனம்,பன்னீர்,
ரோஜா, மல்லிகை, பச்சைக் கற்பூரம், ஹோமப் புகையின்.. நெய் வாசம்..எல்லாம்…கலந்து எடுத்து வந்த குளிர்ந்த காற்று இந்தா ஒரே மூச்சில் பிடி…
என்று அள்ளிக் கொடுக்க.தெய்வீகப் ..பரவசத்தோடு…நாங்களும் உள்ளே நுழைய…தக தக வென…சூரியக் கதிரால் ஜொலித்துக் கொண்டிருக்கும்
தங்கத் தகடு வேய்ந்த கூரை…அப்படியே மனதை கட்டிப் போடுகிறது. கண்கள் படம் பிடித்துக் கொண்டது.
நடராஜர் சன்னதி முழுக்க முழுக்க தெய்வீகம் நிறைந்து…..நித்தம் ஏதோ உற்சவம் போல இருக்கும்.
அருகில் பெரிய யாகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. “மஹா..ருத்ர ஹோமம்..” அதை ஏற்பாடு செய்திருப்பவர்….
அனைவரும் அயல் நாட்டினர். வட கொரியா வில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னார்கள். புகை மூட்டத்தில்
தாமரைப் பூவுக்கு கை கால் முளைத்தாற்போல…அசப்பில் ஜப்பானியர்கள் போலவே….அமர்ந்திருந்தனர்.பார்க்கவே
மிகவும் அழகாக இருந்தது. அந்த இடத்தை விட்டு நகர மனது இடம் கொடுக்கவில்லை..அதனால் அங்கேயே அமர்ந்தோம்.
பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், பூணூல்…அருகில் இருக்கும் மனைவியும் பட்டுபுடவை, பூச் சரம் அணிந்து..
தீக்ஷதர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்த படியே…அவர்கள் .தப்பித் தவறி அயல்நாட்டில் பிறந்து விட்டவர் போலவே..
தெரிந்தார்கள் எனக்கு.அவ்வளவு பக்தி சிரத்தை. பக்தி தேசத்தைக் கடந்தது….என்ற உண்மை புரிந்தது.
ருத்ரம்…சமகம்..என்று வேதம் சொல்லவே..ஒரு பத்து பேருக்கும் மேலே தீக்ஷதர்கள்..ஹோம குண்டத்தை சுற்றி அமர்ந்து
கணீர் என்ற குரலில்…வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட நேரதிற்குப் பிறகு…பூர்ணாஹூதி ….சமர்பித்து…தீபாராதனை..
முடித்து…அவர்கள்…. தாம்பூலத்தில் அத்தனை வேத விற்பனர்களுக்கும் காணிக்கையாக கட்டுகட்டாக பணத்தை
தந்து சந்தோஷப் படுத்துக் கொண்டிருந்தனர்… !
இது போன்ற யாகங்கள் இந்தக் கோயிலில் அடிக்கடி நிகழ்வதும் உண்டு. தெய்வீக சன்னதியில் இங்கு இறைவன்
ஆனந்தமாக ஆடுகிறான் என்று சத்தியம் செய்து கொண்டிருந்தது போலிருந்தது.
அடுத்து..சொர்ண பைரவர் அபிஷேகம், இரத்தின சபாபதி அபிஷேகம், ஸ்படிக லிங்க அபிஷேகம் என்று பல வகைப் பழங்களால்
வகை வகையான அபிஷேகங்கள்…அற்புதமாக நடந்து முடிந்தது. காணக் கண் கோடி..வேண்டும் என்ற வரிகள் நம்மை அறியாமலே
நினைவில் வந்து மோதும் தருணங்கள். மிகவும் பரவசமான உணர்வு..அதை வார்த்தையால் வெளியிட முடியாது.
கண்டு ஆன்ம பூர்வமாக உணரக்கூடிய இடம் தெய்வத்தின் சன்னதி தான்.
நடராஜரைப் பார்த்ததும் அம்மாவுக்கு….பக்தி பரவசம்….எத்தனை வருடத்திய எண்ணமோ…நெஞ்சம் நெகிழ…
“சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா..தில்லை..” என்று பாட ஆரம்பித்து விட்டாள். அத்தனை நெகிழ்ச்சி.
கண்களில் ஆனந்தக் கண்ணீர். முகத்தில் பரவசம். எனக்குள்ளும் பரவசம்…சந்தோஷம்.
சன்னதிக்கு எதிரில்…ஒரு பெண்…”இடது… பதம் தூக்கி ஆடும்….” என்று அபிநயம் செய்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.
ஆடலரசன் அனைத்தையும் “குனித்த புருவமும்..கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிக்குமாக..இனித்த முடைய எடுத்த பொற்பாதமாக ”
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்று கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால்….நிறைய பேர்கள் தாங்கள் எடுத்து வந்த கேமராவில்..படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
எனக்கும் ஒரு நப்பாசை..நானும் மெல்ல என் கைப்பையில் இருந்த கேமராவை எடுத்து….”பொற்கூரை” யை கிளிக் செய்தேன்…அவ்ளோதான்
அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் போல் ஒரு காவல்காரர் ஓடி வந்து “இங்கல்லாம் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு தெரியாதா..?
குடு…கேமராவை…என்று பிடுங்க வந்தார்…நான் சுதாரித்துக் கொண்டு….”அவங்கல்லாம் எடுக்கறாங்களே..அதனால் தான் நானும் எடுக்கலாமேன்னு
நான் முடிப்பதற்குள்….அவர்…அவங்க ஒரு லட்ச ரூபா கொடுத்து இங்க யாகம் செய்தாங்க…எடுக்கறாங்க…
அதுக்குன்னு கண்டவங்கல்லாம் எடுக்கக் கூடாதுன்னு…சொன்னதும்….எதிர் பாராத இந்த அவமானத்தை உடனே தாங்கும் சக்தியின்றி
சரி மன்னிச்சுக்கங்க ..னு சொல்லிவிட்டு விறு விறு வென கூட்டத்தோடு கலந்தேன். நல்லவேளை…. கேமராவைக் காப்பாத்தினேன்..
அம்மா தான் புலம்பினாள்..இப்படி வந்த இடத்தில் கையக் கால வெச்சுண்டு சும்மா இல்லாத வாங்கிக் கட்டிக்கணுமா..? ன்னு.
பின்ன என்னம்மா இந்தக் கோயிலில் பயங்கர ஊழல் ன்னு நான் சொல்ல….
கொஞ்சம் உன் திருவாயை திறக்காமல் பேசாமல் வா….புண்ணியமா போகும் என்று அம்மா அதட்ட….வேறு வழி இல்லாமல்
கையைப் பிடித்துக் கொண்டு பூனை மாதிரி வந்தேன்…உள்ளம் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது.
அம்மாவுக்கோ இன்னும் பக்தி பரவசம்…மேலே ஏறிப் சென்று நடராஜரை பக்கத்தில் பார்க்க முடியாதோ என்று குறை பட்டார்.
சரி வா…எத்தனை…. பண்ணியாச்சு..இத பண்ணமாட்டேனா என்று..உள்ளே அழைத்துப் போக செல்லும் வழியில் இரண்டு தீக்ஷதர்
அம்மாவிடம்..மாமிக்கு ..எந்த ஊரு?..என்றார்..அம்மாவும்..சந்தோஷமாக பெங்களுர்..என்றார்..நான் “இந்த ஊரு தான் என்று ” சொன்னதை
அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.. அம்மாவிடம் ஒரு நோட்டைக் கொடுத்து..இதில் உங்க பேரும் முகவரியையும் ..நட்சத்திரம்
எழுதுங்கோ…கட்டளை….மாதா மாதம் பிரசாதம் தபாலில் வரும் என்றார்.
அம்மாவும்..நோட்டை வாங்கி தன் கையால்….பேராசை யாரை விட்டது….தன் மூத்த பெண்ணில் இருந்து கடைசி பையன்
வரை..பேரன்கள்..பேத்திகள் வரை நிதானமாக எழுதிக் கொடுக்க..அவரும் அதை பார்த்து…ரொம்ப நல்லது…அருள் உண்டு..
ஒரு ஆயிரம் ரூபா….கொடுங்கோ என்றார்…
மின்சாரம் தாக்கியது போல…நான்..எதுக்கு? என்றேன்…
அப்படியெல்லாம்… கேட்கபடாது…..அம்மா எழுதிருக்காளோன்னோ……! என்றார்..
சரி உள்ளே போகணும்….அனுப்புங்கோ….அம்மா கேட்டாள்..
அர்ச்சனை இருக்கா ? இது தீக்ஷதர்…
அவசரத்தில் தட்டு வாங்கலையே…. இது நான்…
பரவால்ல…பரவால்ல…..எங்கேயே இருக்கு…..மொத்தம் ஒரு ஆயிரத்தி இருநூத்தி அம்பது கொடுங்கோ..என்றார்.
அம்மா..முகத்தைப் பார்த்தேன்….ஈயாடலை….சரி கோயிலுக்குத் தானே என்று குழைந்தாள்.
ஒருவழியாக கொடுத்துவிட்டு உள்ளே சென்று நடராஜரை பார்த்ததும் பக்தியில்..பணம்… மறந்து போனது.
சிதம்பர ரகசியத்தை அம்மா அதிசயமாகப் பார்த்தாள்….அம்மா சந்தோஷமா இருக்காளே..அது போதும் எனக்கு.
வெளியில் பிரசாதம் வாங்க வரும்போது..அதே தீக்ஷதர்…அபிஷேக பஞ்சாமிருதப் பிரசாதத்தை பிளாஸ்டிக்
டம்ளரில் போட்டு வைத்து..கொடுக்கும்போதே..”பத்து.. ரூபா”..”பத்து ரூபா” என்று கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னது போலவே அத்தனை டம்ளரும் பத்து பத்து ரூபாயாக மாறியது..
அதற்கு பெரிய வரிசையும் நீண்டது.அருட்ப்ரசாதம் அல்லவா?
நானும் அம்மாவும் கையில் ஆளுக்கொரு டம்ப்ளரை வைத்துக் கொண்டு ஒரு படியில் அமர்ந்தோம்.
அருகில் ஒரு அம்மையார்…இன்னைக்கு இந்த ஹோமம் முடிச்சாங்களே..பிரசாதம் தருவாங்கன்னு
ஓடியாந்தேன்….என்றாள்…அதே சமயம்..”அபிஷேக பொருளை விக்கிறான் பாரு இந்த ஐயரு…இவிங்களுக்கு
எம்புட்டு வந்தாலும் பத்தாது”..ன்னு என் மனதை படித்தவள் போல் என் முகம் பார்க்க.
.ஆமோதிததபடியே…. இந்தாங்க பிரசாதம் னு சொல்லி ஒரு டம்ப்ளரை கொடுத்தேன்.,பவ்யமாக வாங்கிக் கொண்டவள்
கண்ணில் ஒற்றிக் கொண்டாள்…நடராஜரே தனக்குக் கொடுத்தது போல் முகத்தில் ஒரு பிரகாசம்.
பணம்..பணம்..பணம்…கோவிலுக்குள் அனுமதியில் இருந்து….பிரசாதம் வரைக்கும் பணம் தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறது.
இதை நீயும் பார்த்துக் கொண்டிருக்கிறாயா நடராஜா? என் உள்மனம் கேட்டது.
ஒரு புகைப்படம் எடுத்ததும் ஓடிவந்து கையும் கேமராவுமாக… என்னைத் துரத்தியவர்….இந்த பிரசாத பிசினஸ்-க்கும் தனக்கும் எந்த
சம்பந்தமும் இல்லாதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இது தான் கோயில் தர்மமோ..?
வந்திருந்த பக்தர்கள் அன்னப் பிரசாதத்துக்காக அமைதியா காத்திருந்த வேளையில்…ஸ்டீல் தூக்கு….ஸ்டீல் தூக்காக …சக்கரைப் பொங்கல்,
கேசரி, புளியோதரை..எல்லாம் எடுத்துக் கொண்டு வேக வேகமாக வெளியில் ஒரு வண்டியில் வைத்து விட்டு வந்தார் ஒரு தீக்ஷதர்..
மீதி இருக்கும் தயிர் சாதத்தை பிளாஸ்டிக் கவரில் போட ஆரம்பித்ததும்….அம்மா..வா..போகலாம்..கோயிலைப் பார்த்தாச்சு
இல்லையா..? என் அர்த்தமுள்ள கேள்வியை புரிந்து கொள்ளாமல்..இரு பிரசாதம் வாங்கிண்டு தான் வருவேன்..என்று தயிர் சாதம்
வாங்கிக் கொண்டு மன நிறைவோடு வந்தாள். அதற்கு அவர்கள் எந்த விலையும் வைக்காதது…என்னைக் குழப்பியது. நான் தான் அவர்களைத்
தப்பாக நினைத்துக் கொண்டேனோ….மனசுக்குள் ஒருவிதமான நெருடல் இருந்தது.
பணத்தையே பிரதானமாக…ஒரு நாளில் எவ்வளவு தேறும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கோயிலுக்கு உள்ளேயும்……
பணத்தைக் கொடுத்தால் கேட்ட வரம் அனைத்தும் சித்திக்குமோ என்று கோயிலுக்கு வெளியேயும்…மனங்கள்…!.
நடராஜா…உனக்குத் நித்யம் தொண்டு செய்வோருக்கு…(செல்வம் ) இருக்கும் (மனம்) இடத்திலிருந்து….இவர் இருக்கும் இடத்திற்கே..
அள்ளிக் கொடுக்கும் நின் தாட்சண்யம்..இதுவல்லவோ…இறையருள்.!
இருந்தும்….அளவுக்கு மீறும்போது….கோயிலுக்குள் பக்தி…. வியாபாரம் ஆகும் நிலையும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
ஒவ்வொரு பக்தரும் தான் ஏமாற்றப் படுகிறோம் என்று அறியாமல் பக்திப் பரவசத்தில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
கள்ள உள்ளங்களைக் கண்ட அதிருப்தியில்.. இறைவன் வேண்டுவது..நம் ..மனத்தால், எண்ணத்தால், செயலால் தூய்மையே
தவிர வேறொன்றும் இல்லை. பொருட்செல்வம் வேண்டாமலே… அருட்ச்செல்வம் தருவான்… இறைவன்…!
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்
இறைவ னடிசேரா தார்” – தெய்வப் புலவர் திருவள்ளுவர்.. “இன்பத் தருகத் திறைவன் மலரடி…..”
” பரமபிதாவே…! அவர்களை மன்னியும்..தாம் செய்வது இன்னது என்பதைத் தாமே அறியாது செய்கிறார்கள்..” என்று
இயேசுநாதர் …வேண்டியது போல…..நடராஜரிடம்… முறையிட்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன்.
***********************************************************************************