வியாழன், 27 செப்டம்பர், 2012

பாடும் மனம்...!
புசிக்கத் தெரிந்த கரமே
உனக்கு சமைக்கத் தெரியாதா?

சமைக்கத் தெரிந்த கரமே 
உனக்கு கொடுக்கத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த உலையே
உனக்கு குக்கர்  தெரியாதா?

எரியத் தெரிந்த அடுப்பே
உனக்கு ப்ரிட்ஜு தெரியாதா?

அரைக்கத் தெரிந்த குழவி 
உனக்கு மிக்சி தெரியாதா?

ஆட்டத் தெரிந்த கல்லே..
உனக்கு கிரைண்டர் தெரியாதா?

ஆவி பறக்கும் இட்டிலி 
உனக்கு பூரி தெரியாதா?

பச்சை காய் கறிகளே.
உனக்கு பழங்கள் தெரியாதா?

படைக்கும் வாழை இலையே...
உனக்கு தட்டே தெரியாதா?

உண்ணத் தெரிந்த கணவா
உனக்கு என்னைத் புரியாதா?

உன்னைப் தெரியும்  தலைவா
எனக்கு மண்ணைத் தெரியாதா..?
களிமண்ணைத் தெரியாதா?
எங்க வீட்டு தங்க ஊசிகள்.மிக்க நன்றி: திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு.

தங்களின் ஒரு கவிதை "நெஞ்சின் அலைகளின்" படித்து..அந்தக் கவிதை ஒரு கதை சொன்னது..
இதோ அந்தக் கவிதையும் அந்தக் கவிதை சொன்ன கதையும். "தங்க ஊசி சொன்ன எங்க வீட்டு தங்க ஊசிகள்"

ஜெயஸ்ரீ ஷங்கர்.

 


தங்க ஊசிகள் …. !

தங்க ஊசிகள் …. ! 
சி. ஜெயபாரதன், கனடா
தங்க ஊசி குத்தினால்
வலிக்காது
தாங்கிக் கொள்வாய் !
குருதி வந்தாலும்
மருந்திட்டுக் கொள்வாய் !
அங்கும், இங்கும்
எங்கும்  தயாராகுது
தங்க ஊசி !
காதறுந்த ஊசி !
காந்தம் இழுக்காத ஊசி !
இரு புறமும் ஊசி முனை !
கடையில் கிடைக்காது
வீட்டுத் தோட்டத்தில்
களை யாக வளர்க்க படுவது !
காளையின்
கொம்பைச் சீவி விடுவது
அம்மா அப்பா !
தையல் யந்திரத்தில் உடை
தைக்காது !
கண்ணைக் குத்தும்
பெண்ணைக் குத்தும்
கையில் குத்தும்
மெய்யில் குத்தும்
பொய் அதற்குத் தேனில் ஊறிய
பொரி உருண்டை !
தங்க ஊசி தனி யாக
இருந்தாலும்
ஈராயிரம் பொன் !
உடைந்தாலும்
ஓராயிரம் பொன் !

தெருவில் "ஊ...ஊ...ஊ....ஊ.....லொள்..லொள்..லொள்...லொள்....ஊ..ஊ..ஊ..ஊ.. " இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின் ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற "டிக் டிக் டிக்.."..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக நகர்வது போல உணர்ந்தவள், கார்த்தால ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டு சீக்கிரமாக் கிளம்பி காலேஜுக்குப் போன அபிலாஷ் பாதி ராத்திரி ஆகியும் இன்னும், வீடு வந்து சேரலை. அவன் கேட்டதும் பைக் வாங்கிக் கொடுத்தது தப்பாப் போச்சு. காலையில் போனவன் திரும்ப வந்து அபியின் முகத்தைப் பார்க்கும் வரை இங்கு நான் தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருகக வேண்டியிருக்கு என்று அங்கலாய்த்தாள் ஜெயந்தி.

ஜன்னல் வழியாக வாசலுக்கு கண்கள் அலைபாய மனதுக்குள் கோபத்தோடு ..அப்பா வேற ஆஃபீஸ் வேலையா பெங்களூர் போயிருக்காரே , வீட்டில் வயசான பாட்டி,அம்மா ,தங்கைன்னு மூணு பொம்மனாட்டிகள் தனியா இருப்பாளேன்னு கொஞ்சம் கூடவா நினைவுக்கு வராது ஒரு பிள்ளைக்கு....அப்படி எங்க தான் போயிருப்பான்? ஒரு ஃபோன் கூடவா பண்ணி விஷயம் சொல்லத் தெரியாது ..? கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லை. வரட்டும், பார்த்துக்கறேன்னு ஒரு மனம் கட்டையை ஓங்கினாலும், சீக்கிரமா நல்ல படியா வந்துடுடா ....என்று ஜெயந்தியின் பெற்றமனம் கெஞ்சியது .முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வழி மேல் விழி வைத்து அபியின் வருகைக்காக காத்திருந்தாள் அவள்.

மறுபடியும் கடைசியா ஒரு தடவை ஃபோன் பண்ணிப் பார்த்துடலாம் ....நம்பரைத் தட்டி கைபேசியைக் காதில் வைத்ததும் ..."நீங்கள் அழைத்த வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால்"... என்று மீண்டும் கொஞ்சியது குரல் ...எரிச்சலோடு ஃபோனை அணைத்தவள் "அபிக்கு ஏதும் ஆகாம பத்திரமா வீடு வந்து சேரணுமே" பயந்த மனசுக்கு l என்னவெல்லாமோ கற்பனைகள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனது ஆள் அரவமற்ற சப்தமே இல்லாத இரவு இதயத்தை நடுங்க வைத்தது . நன்றாகத் தெரிந்த ஸ்லோகங்கள் கூட இந்த நேரத்தில் மறந்து போனது. "சீக்கிரம் வந்துடு...சீக்கிரம் வந்துடு"...என்று மனம் மந்திரமாக ஜெபித்தது.

ஹாலில் வெளிச்சத்தைப் பார்த்ததும் ...அறையின் உள்ளிருந்து மாமியார் பர்வதத்தின் குரல் ஈனமாகக் கேட்டது. "ஜெயந்தி...ஜெயந்தி....அபி வந்தாச்சோ...? நீ இன்னும் என்ன பண்றே, தூங்காமே.. ? என்று தனது சந்தேகத்தை கேள்வியால் படுக்கையிலிருந்தபடியே அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அபி.. அப்பவே வந்தாச்சு..சட்டென ஒரு பொய் சொல்ல, இப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி சமாளிச்சாச்சு.... இப்போ இந்த நட்ட நடுராத்திரில இன்னும் அபி வரலைன்னு சொன்னா...அவ்ளோ தான்...மிச்சம் இருக்கும் நேரம் மொத்தம் வீணாகும்...லபோ திபோன்னு புலம்பித் தீர்ப்பாள். அதுக்கு ஒரு பொய் போதும் வாயை அடைக்க....இதுக்கு முன்னால் பட்ட அனுபவம் பொய் சொல்லவும் கற்றுத் தந்தது...ஜெயந்திக்கு, இனி ஒன்பது பொய்யைத் தேடித் பிடிக்கணும்...இவனால... நேக்கு... என் தங்க மகனால ! என்று அலுத்துக் கொண்டாள். கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தது தப்பாப் போச்சோ?

பின்ன..இல்லையா..?... அவன் ஜெயந்தியின் தங்க மகன் தான் ! வரமிருந்து, தவமிருந்து, விரதமிருந்து எல்லாக் தெய்வத்தையும் வேண்டி பெற்ற சீமந்தப் புத்திரன்..இவன்.

கஷ்டப் பட்டு பெற்றதால் அந்த அருமை தெரிந்து வளர்க்கிறாள்...குழந்தைகளுக்கு ஏதாவது....என்றால் இருவரும் துடித்துப் போவார்கள்...ஆனால் இப்போ குழந்தைகள் இரண்டு பேருமே வளர்ந்து விட்டார்கள்...இன்றும் இவர்களால் கண்டிக்க முடியவில்லை.."ஏன்னா அவனுக்கு இவ்வளவு பணம் தரேள்..? முடியாதுன்னு சொல்லக் கூடாதா..அல்லது கேட்டதில் பாதி தந்தால் ஆகாதா? என்று கேட்டால்...வாசுதேவன் சொல்வார்...."போடி பைத்தியம்....நானெல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு பத்துக்காசு கையில் இல்லாமல் காலேஜ் போயிட்டு வந்தேனாக்கும். நேக்குத் தான் தெரியும் அந்தக் கொடுமை...பூராப் பூரா தரித்திரம் தாண்டவமாடும்,. அன்னைக்கு நான் பொறந்த குடும்பத்தில் கஷ்ட ஜீவனம்....இப்போ நாம அப்படியா...ஏதோ பகவான் புண்ணியத்தில் ஷேமமா இருக்கோம்..நாம நம்ம குழந்தைகளுக்கு அதே நிலையை எதுக்குத் தரணும்ங்கறேன்...இவாளாவது நம்ம வயித்தில் பொறந்ததுக்கு சௌக்கியமா இருக்கட்டும் பணத்துக்கு கஷ்டப் படாமல்.! இன் ஃபாக்ட் நீயே நினைச்சுப் பாரேன்..இவா பிறந்ததுக்கு பிறகு தானே நம்ம நிலைமையில் இப்படி உயர்ந்து வந்தோம்..? நான் யாருக்காக உழைக்கிறேன்...கண் முன்னாடி நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்....அதைப் பார்த்து நானும் சந்தோஷமா இருக்கணும்...இது போதுண்டி ஜெயந்தி....என்று சொல்லி விடுவார். இவளும் ஆமாம்னா நீங்க சொல்றது நிஜம் தான் என்று சமாதானமாவாள்.

நாய்... ஏன் இப்படி ஊளையிடறது......? இப்போ தான் இவன் வந்தானா? என்று அடுத்த கேள்வி அறையிலிருந்து தொடர...!

நாயைத் தான் போய் கேட்கணும்..மனதுக்குள் நினைத்து எரிச்சலானவள்.....தெரியலைம்மா.!நாழியாச்சே..உங்களுக்கு ...நீங்க இன்னுமாத் தூங்கலை...? என்று அறைக்குள் எட்டிப் பார்க்கிறாள் ஜெயந்தி.

எங்க தூங்கறது..? எல்லாம் உன் தங்கப் பிள்ளையைப் பத்தினக் கவலை தான்...ரெண்டும் தங்க ஊசிகள்....தறுதலைகள்... என்று ஆரம்பிக்க....ஜெயந்தி மெல்ல அங்கிருந்து நகர்கிறாள்..!

பேரன் நல்லது செய்தால் எல்லாம் அவன் அப்பா மாதிரி என்று சொல்லிப் பெருமைப் படுபவள்....அவன் செய்யும் விஷமங்கள், சேட்டைகள் எல்லாத்துக்கும் ஏகபோக உரிமையோடு உன் பிள்ளை என்று தனியாக பட்டியல் போட்டு தன் பக்கம் திரும்பிச் சொல்வதைக் கேட்டுக் கேட்டு "எல்லா....அம்மாக்களுக்கும் இது மட்டும் தான் மாமியாரிடம் கிடைக்கும் போனஸ் பாயின்ட்" என்று எண்ணிக் கொண்டவள்....இந்தப் பிள்ளை என்னை இப்படிப் படுத்தறானே.....நேரா நேரத்துக்கு வீட்டுக்கு வரத் தெரியாதோ..? அம்மாங்கற பயமோ, பாசமோ இல்லையா..என்ன..?அப்படி என்ன ஃபிரெண்ட்ஸ் வேண்டிக் கிடக்கு...? அவள் மனது ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தது. எல்லார்டையும் நேக்கு கெட்ட பேர் வாங்கித் தந்துடுவான் போல இருக்கே...என்று கவலைப் பட்டாள்.

வெளில சுத்தறவாளுக்கு என்ன ஜாலியாத் தான் இருக்கும். பைக் என்ன பச்சைத் தண்ணிலையா ஓடறது..? வீட்டுக்குள் இருக்கறவா எப்படி பயப்படுவான்னு தெரிய வேண்டாம் ...அவர் வரட்டும் ..."நீங்க கொடுக்கற செல்லத்தில் தான் இவன் இப்படி உருப்படாமப் போறான்னு " சொல்லி கண்டிக்க வைக்கறேன் ...மீண்டும் ஜன்னல் வழியாக "சீக்கிரம் வரமாட்டானா" என்று எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்கிறாள் ஜெயந்தி..

அவள் வயிற்றில் பாலை வார்த்தது போல அபிலாஷ் வருவது தெரிந்தது. இவள் உடனே ஓடிப் போய் அவசர அவசரமாக கதவை மெல்லத் திறந்து "சீக்கிரம் உள்ளே வா.. வாடா .. என் தங்க மகனே ! .பாட்டி முழிச்சிண்டு தான் இருக்கா...என்று சைகை காண்பிக்க திருட்டுப் பூனை மாதிரி உள்ளே வரும் மகனைச் சத்தமாகத் திட்ட முடியாமல் ஜெயந்தியை பாட்டியிடம் சொன்ன பொய் தடுக்க, அதே பொய் அவனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

கதவைச் சத்தம் வராமல் மெல்லத் தாழிட்டவள்...." ஏண்டா இத்தனை லேட்டா.திருடன் மாதிரி வரே.." என்று ரகசியமாகக் கேட்க, அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அபிலாஷும் "மம்மி......கார்த்தால சொல்றேன் என்னாச்சுன்னு.." என்று சைகை காண்பித்துவிட்டுப் அவனது அறைக்குள் நுழைந்து கதவை சார்த்திக் கொண்டான்.

அச்சச்சோ ....சாபிட்டானோ என்னவோ ..சாப்பிடுன்னு ஒரு வார்த்தை கூடச் சொல்லலையே... நான் என்று நினைத்தவள்... ஓடி வந்து அறைக்கதவைத் தட்டிப் பார்க்க ."ஒண்ணும் வேண்டாம் நான் தூங்கறேன்....என்று அபியின் குரல் மட்டும் வந்தது....."நன்னாக் காயட்டும் ...கார்த்தால பார்த்துக்கலாம் ..எல்லாம் வெளில கொட்டிண்டு தான் வந்திருக்கும் ....கோபத்தோடு லைட்டை அணைத்துவிட்டு இவளும் போய் அக்கடான்னு படுக்கையில் விழும்போது மணி இரண்டை எட்டிப் பிடித்திருந்தது. எங்கிருந்தோ ஒரு நிம்மதி..".நல்லவேளையா பத்திரமா அபி வந்து சேர்ந்தான்" என்று அணைக்க பெருமூச்சோடு உறங்கிப் போனாள் ஜெயந்தி.

"கௌசல்யா...சுப்ரஜா...ராமா... பூர்வா ....சந்த்யா...ப்ரவர்த்ததே...உத்திஷ்ட..." சுப்ரமாதமாய் எம்.எஸ்ஸின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. வீடெங்கும் பீபரிக்காப்பிக் கொட்டையின் டிகாக்ஷன் மணம் ஜெயந்தியை சுறு சுறுவென்று இயங்க வைக்க தலையில் ஈரத்துண்டோடு...அங்கும் இங்கும் நடந்து காலை வேளைகளில் மும்முரமாக, அவள் வாய் மட்டும் எம்.எஸ்ஸோடு கூடவே பாடிக் கொண்டிருந்தது.

திடீரென வந்த மின்வெட்டு அத்தனையையும் அணைத்து நிசப்தத்தை வாரி இறைத்தது காலங்கார்த்தாலயே நினைவுக்கு வந்துடும் இவாளுக்கு..எப்போடாப் பொழுது விடியும்னு காத்துண்டு இருப்பாப் போலிருக்கு கரண்டைக் பிடுங்க ...! காலை ஆறுமணிக்கே இப்படி ஒரு அழிச்சாட்டியமா...? இதுக்கு எப்போ ஒரு விடிவு காலம் வரப் போறதோ..?

இந்த "அம்மா" ஆட்சியில் புரட்சி காலையிலேயே கண்ணைக்கட்டி களைகட்ட ஆரம்பிச்சாச்சா. கரன்ட்டோட....கோவிந்தா கோவிந்தா ...! ஜெயந்தி அலுத்துக் கொண்டாள்.

பெண்ணை எழுப்ப வேண்டுமே...என்று அறைக்குள் நுழைந்து எட்டிப் பார்க்கிறாள்...அங்கே...
மகள் ஐஸ்வர்யா இன்னும் கனவுலகில் மிதந்தபடி மெத்தைக்குள் புதைந்து கிடந்தாள்...ஏய்...ஐசு...ஐசு.. எந்திரி.... எந்திரி.... நாழியாச்சு..இன்னும் என்ன தூக்கம்,,,? காலேஜுக்கு இன்னைக்கும் லேட்டா ? எந்திரிடி ராஜாத்தி...!

மம்மி.......ப்ளீஸ்...எழுப்பாதே...இன்னைக்கு நான் காலேஜுக்கு லீவு விட்டாச்சு...தூங்கப் போறேன்,,

அடிப்பாவி....நேத்துக் கூட லீவு தானே எடுத்தே..? யாரைக் கேட்டு எடுத்தே ? இப்படி ஆயிரம் ஆயிரமா ஃபீஸ் கட்றது எதுக்கு?...இப்படி வீட்டில் படுத்துத் தூங்கறதுக்கா...? நன்னாருக்குப் போ...!

உஷ்ஷ்,,,,,,நாளைக்கு கண்டிப்பா போவேன்...விடேன்...! சிணுங்கியவள்...இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்.

என்னவோ போ....உங்களுக்காக பெரிய காலேஜில் சேர்த்தால் நீங்க அதோட கதவை எப்படா இழுத்து மூடலாம்னு இருக்கேள்..இன்னைக்கு போயிட்டு நாளைக்கு அப்பா வந்ததும் வேணா நீ லீவு எடுத்துக்கோ...சொன்னாக் கேளு...எழுந்துரு....ஜெயந்தி கெஞ்சிக் கொண்டிருந்தாள் மகளிடம்.

மம்மி......ப்ளீஸ் மம்மி ...தூக்கம் தூக்கமா வரது...கொஞ்சநேரம் தூங்க விடேன்.பாதிக் கனவிலே என்னை நீ எழுப்பிட்டே !!! ரொம்பத் தூக்கம் வருது மம்மி...ப்ளீஸ் என்றவள் போர்வையால் முகத்தை மூடிக் கொள்கிறாள்.

ஏன் வராது...தூக்கம்..?..ராத்திரி பதினோரு மணி வரைக்கும்....செல் ஃபோனை வெச்சு நோண்டிண்டு இருந்தால்...கார்த்தாலத் தூக்கம் தான் வரும்..அப்படி என்ன தான் இருக்கோ உனக்கும் உன் அண்ணனுக்கும் அதுக்குள்ளே....?

ஐஸ்வர்யா ஏதோ நினைவு வந்தவளாக, அருகில் இருந்த செல் ஃபோனை எடுத்து ஆன் செய்யவும்...

இப்பத் தானே சொல்லிண்டே இருக்கேன் ...அதுக்குள்ளே அதை எடுத்து அதுக்குள்ளே என்னத்தைப் பார்க்கிற..? ஜெயந்தி மகளின் கையில் கைபேசியைப் பார்த்ததும் டென்ஷன் ஆகி குரல் உச்சத்துக்கு எகிற கத்துகிறாள்.

மம்மி ...ஏன் இப்படிக் கத்தற...? பின்னே...செல் ஃபோனை சுவாமி அலமாரில வெச்சு பூஜை போடவா...வாங்கிருக்கேன்.,..காலங்கார்த்தால உன்னோட அர்ச்சனை...நாள் பூரா என் .மூடையே ஸ்பாயில் பண்ணிடும்மா..இனி நான் தூங்கினா மாதிரி தான்....என்று அலுத்துக் கொண்டே எழுந்து செல் ஃபோனோடு பாத்ரூமுக்குள் நுழைகிறாள் ஐஸ்வர்யா.

ம்ஹும்..இது தேறாது...தனக்காத் தெரியாது நான் சொன்னா உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லும் அதிகப் பிரசங்கி...இதுகிட்ட நான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கணும்....எல்லாம் மெத்தப் படிச்ச மேதாவிகள்.... அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுட்டு இங்க வந்து நிக்கறேன் பாரு என்னைச் சொல்லணும்.

தனக்குத் தானே பேசிக் கொண்டே அடுத்த அறைக்குள் நுழைகிறாள்...ஜெயந்தி..

அபிலாஷ் ....அபிக்கண்ணா....நீயாவது எழுந்திருடா.....? காலேஜுக்குப் போடா...... !

மச் ....என்ன மம்மி ...நீ...நான் லேட்டா தானே வந்தேன்..தூங்க விடேன்.

மணி ஏழாகப்போறதுடா......காலேஜ் இருக்குடா...கண்ணா எழுந்திருடா...!

மம்மி .....நான் இன்னைக்குக் காலேஜ் போகலை....! நேக்கு முடியலை....காலங்கார்த்தால டென்ஷன் பண்ணாதே.....இன்னும் தூங்கணும்..சொன்னவன் தலையணை அடியில் இருந்து கைபேசியை எடுத்து பார்க்க ஆரம்பிக்க...

அடப்பாவிகளா....எழுந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் செல்ஃபோன் தரிசனம் தானா? அடுத்த மாசம் பில்லு கட்டமாட்டேன்...நீருள்ள மட்டும் தான் மீன் துள்ளுமாம்...! கனேக்ஷன் கட் ஆனால் அப்போ புரியும். ராத்திரி வந்தது...லேட்டு....அதுக்கே எனக்கு இன்னும் நீ காரணம் சொல்லலை....இரு... இரு அப்பா வரட்டும்....!
உன் காதை முறுக்க.

ம்ம்....மம்மி ...நிறுத்தேன்..அப்பா வந்ததும் பார்த்துக்கலாம்...என்னை இப்போ தொல்லை பண்ணாதே...தூங்கணும் என்று சொன்னவன் போர்வையை இழுத்து முகத்தோடு மூடிக் கொண்டு திரும்பிப் படுக்கிறான்.

இனிமேல் இங்க நிற்பதும் வேஸ்ட்....நினைத்தவள்....இப்படி ஒரு நாளைப் போல கார்த்தால டென்ஷன் கொடுத்தால் நான் என்னத்துக்கு ஆவேன்....? என்னப் பத்தி யாருக்கென்ன கவலை.,..? எனக்கும் செல்போன் இருக்கு....பேச ஆளும் இருக்கு....சொல்லிக் கொண்டே சமயலறைக்கு ஓடி...தோசையை வார்த்தபடியே கைபேசியில் வாசுதேவனை அழைத்து, " என்னன்னா..உங்க ரெண்டு தங்கப் பிள்ளைகளும் காலேஜ் போகலை இன்னைக்கு....முடியலன்னு சொல்லி லீவு எடுத்துண்டு தூங்கறதுகள்...எனக்குத் தெரியாது...எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான்..என் பேச்சை, என்னை , ஒரு மனுஷியாவே மதிக்க மாட்டேன்னு அடம் பண்றதுகள்...போங்கோ...நீங்களாச்சு உங்கச் செல்லக் குழந்தைகளாச்சு..."

நீ ஏண்டிம்மா ..கோச்சுக்கரே...கொழந்தைகள் கிட்ட கொஞ்சம் அன்பாத்தான் பேசேன்....இன்னைக்கு லீவு எடுத்தா எடுத்துக்கட்டும்...நீ டென்ஷன் ஆகாதே..நான் நாளைக்கு வந்துடுவேன்.,.,.கொழந்தைகள் எல்லாரும் அப்படித் தான்மா...கண்ணா...அவாளைக் கொஞ்சம் ஜாலியாத் தான் இருக்க விடேன்...வயசுப் பசங்க...அப்பறம்......நேத்து கூட ரெண்டு பேருக்கும் ஐபேட் வாங்கியிருக்கேன்.... சர்ப்ரைஸ் கிஃப்ட்...நீ சொல்லிடாதே...முந்திரிக் கொட்டை மாதிரி...என்ன...!

நன்னாருக்கு போங்கோ....என்னால உங்க மூணு பேரையும் மேய்க்க முடியாது....போங்க...இப்போ இவாளுக்கு என்ன குறைச்சல்னு ஐ பாடும் கீ பாடும் ....! இதுகள்ட்ட நான் படும் பாடு நேக்குதான் தெரியும் !! நேத்து ராத்திரி உங்க அருமை அபி வந்த நேரம் என்ன தெரியுமா ? ராத்திரி ஒன்றைரை மணி..! நம்மள இவன் எங்க கொண்டு போயி நிறுத்தப் போறானோ தெரியலை...எல்லாம் நீங்க கொடுக்கிற வளம் தான்...பைக்கை எடுத்துண்டு ஊரைச் சுத்தறான். அம்மான்னா ரெண்டு பேருக்கும் கிள்ளுக்கீரை..!அப்பான்னா செல்லம்..!

ஏன்மா... செல்லம் ..நீ இப்படி மனசு கஷ்டப் படறே..வயசுப் பசங்க.....எல்லாம் அப்படி இப்படித் தான் இருக்கும்..நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்...ரெண்டு பேரும் நன்னாப் படிக்கறா தானே..அது போறாதா நமக்கு....? நாளைக்கு கார்த்தால அங்க பறந்து வந்துடுவேன்.,....எங்கே சிரி பார்க்கலாம்....உனக்கும் ஒரு சர்ப்ரைஸ்.....இருக்கு....உனக்கு இல்லாமலா....என்று கொஞ்சிச் சிரிக்கும் கணவனை....திட்ட மனமில்லாமல் ...சரி..நீங்க ஜாக்ரதையா வந்துடுங்கோ...காத்துண்டு இருப்போம் என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள்.

பின்னாலிருந்து பர்வதம் யாரு ஃபோன்ல...வாசுவா....எப்போ வரானாம்...? என்ன சொன்னான்...? சிவ சிவ...என்று சொல்லிக் கொண்டே ஜபமாலையை உருட்டிக் கொண்டே நிற்க...

இந்தாங்கோம்மா காப்பி. அவர் நாளைக்கு வந்துடுவாராம்.. இன்னைக்கு இங்க அபியும் ஐசுவும் காலேஜுக்குப் போகலையாம் அதைத் தான் சொல்லிண்டு இருந்தேன் .....இப்படி ரெண்டும் காலேஜுக்கு மட்டம் போட்டுட்டு பத்து பணியானால் அந்த டி வியைப் போட்டு பாடாய் படுத்துமே..இன்னைக்கு வீடு குருஷேத்ரம் தான். ஒரு ரிமோட் கண்ட்ரோலை வெச்சுண்டு சண்டை போட்டு வீட்டையே ரணகளம் பண்ணுங்கள்..ரெண்டும்., உங்களுக்கும் கஷ்டம்.

வாசுதேவன் ஊரில் இல்லையோன்னோ....ரெண்டும் தலை விரிச்சாடும்...ரெண்டையும் எப்படியாவது பத்தி விடு காலேஜுக்கு. என்றவள் என்ன நினைத்தாளோ, குழந்தைகள் இஷ்டம்...உன் இஷ்டம் நான் எதுக்கு நடுவில்...என்று ஜபமாலை உருட்ட ஆரம்பித்தாள்..மனதுக்குள்...இன்னைக்கு நல்ல சினிமா வீட்டிலயே நேரில் பார்க்கலாம் என்று மனசுக்குள் மகிழ்ச்சி எழுந்தது. பாட்டிக்கு இதெல்லாம் ஒரு அல்ப சந்தோஷம் தான். வயசான காலத்தில் இதெல்லாம் கூட பொழுது போக்குதான்.

ஏண்டா நீ நேத்து ராத்திரி லேட்டா வந்தே,,,? ஜெயந்தி அபிலாஷைப் பார்த்துக் கேட்கிறாள்.

அதுவா மம்மி ...என் பிரெண்ட் கார்த்தி வீட்டுக்கு போயிருந்தேனா...அங்கே இன்டர்நெட் பார்த்துண்டு இருந்தோம்.....வர லேட் அவ்ளோதான்.

இந்த பதிலில் நம்பாமல்....ஏன்...அங்க போயி தான் இன்டர்நெட் பார்க்கணுமா? நம்மாத்தில் தான் அதுக்குன்னு மாசா மாசம் ஆயிரம் ரூபாய் தனியா அழறேனே....தண்டத்துக்கு...! அவாத்திலே புதுசா என்னடா வருது இன்டர்நெட்லே ? பொய் சொல்றே ! சினிமாவுக்குப் போனியா..? இல்ல பணம் வெச்சு சீட்டு ஆடினியா..? சொல்லு...ஜெயந்தியின் கேள்வியில்....

வெகுண்ட அபிலாஷ் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கிச் சுவரில் எறிந்தபடியே...நீ ரொம்ப ஓவராக் கேட்கறே.....? விடேன்.....உனக்காக ஒப்புக்கு ஒரு பொய் காரணம் எல்லாம் என்னால் தேடிண்டு இருக்க முடியாது அப்படித் தேடி ஒரு பொய் காரணம் சொன்னால் நீ தாங்கமாட்டே...ஆமா...

என்னாடா..இது புதுசா...டம்ப்ளரை வீசி எரியரே..? திமிரா..? எஞ்சினியரிங் படிக்கிற பையனாட்டமாவா பேசறே.....! படிச்சு பாஸ் பண்ணி அடுத்த வருஷம் நீ வேலையில் உட்காரணம் இப்படி காலேஜ் போகாமல் எப்படிடா பாஸ் பண்ணுவே ? என்றவளை.

ஜெயந்தி.....உன் பேரைச் சரியாச் சொன்னேன்னா...?அடுத்த வருஷமும் நான் படிக்கத் தான் போறேன்....அதுக்குள்ளே என்னை சம்பாதிக்க அனுப்பிச்சா எப்படி....? என்று நக்கலாகக் கேட்கும் மகனைப் பார்த்து வாயடைத்துப் போய்...தனக்குள் "கண்ட்ரோல்...கண்ட்ரோல்.."என்று வாயை மூடிக் கொண்டாள்...ஜெயந்தி.

அதையும் மீறி ஏதாவது கேட்டால்..உனக்கு ஒண்ணும் தெரியாது ..? உனக்குத் தெரிஞ்சதெல்லாம் "குட்மார்னிங் ....மை நேம் இஸ் ஜெயந்தி ..." எதுக்கு உனக்கு இப்போ இந்த மாதிரி பெரிய பெரிய ஆசை..மகன் வேலைக்குப் போகணும்னு .? என்று கேலி செய்வானே..வடிவேலு ஸ்டைலில்..! பிறகு அதுவே வாய் சண்டை வரைக்கும் கொண்டு போகும்.

இந்தக் காலத்தில் என்ன தான் நாம பெத்த பசங்களா இருந்தாலும் ஒரு வார்த்தை அதிகம் சொல்ல முடியலையே....ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை எதிர்த்து எதிர்த்து பேசும்....தினம் தினம் நியூஸ் பார்க்கும்போது ஒவ்வொரு விஷயம் காதில் விழறதப் பார்த்தால் பயம்மா இருக்கு.... என்ன பண்றது?
அளந்து பேச இங்கேர்ந்து தான் நானேக் கத்துக்க வேண்டியிருக்கு...என்ன செய்ய? ஜெயந்திக்கு பாதி நேரம் மனம் தான் பேசும்.

வர வர இவனோட செய்கை எதுவும் சரியில்லை...நேரங்கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வருவது ..சில நாட்கள் நைட் அவுட் ன்னு வராமலே இருப்பது...ஏதாவது கேட்டா எகத்தாளமா பதில் சொல்றது...
சில நாட்கள் சாப்பிடாமல் படுப்பது....கேள்வி கேட்டால் சரியா பதில் சொல்லாமல் போவது...

இதுக்கெல்லாம் யாரு காரணம்....? கேட்டதும் விடை சொன்னது மனசாட்சி,,,நீயே தான் வேற யாரு...?
ஆரம்பத்தில் இருந்து கஷ்டத்தை கத்துக் கொடுத்து அடக்கி, அடிச்சு வளர்த்திருக்கணும்...அதீத செல்லம் கொடுத்து கொடுத்து இப்போ குட்டிச் சுவராப் போயாச்சு..இப்போ நீ தான் எதாவது குட்டிச் சுவத்துலே போய் முட்டிக்கோ என்று சிரித்தது.

எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டறேன்....மனம் நொந்தபடியே சமையல் ஏனோ தானோவென வெந்து கொண்டிருந்தது அவள் மனநிலை போல.

மம்மி...என்று அருகில் நைட்டியோடு வந்து நின்றவள்....பசிக்குது...என்ன சமைச்சே...! இது ஐஸ்வர்யா

நன்னாருக்கு போ....கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் இப்போ நான் பாட்டியாகி இருப்பேனாக்கும்...நீ என்னடான்னா...இன்னும் குழந்தை மாதிரியே....சோம்பேறியா இருக்கே நாளைக்கு உன் புக்காத்தில் எனக்கு என்னெல்லாம் பேர் வாங்கித் தரப் போறியோ...? அபி தான் அப்படி தெண்டரதுன்னா......நீயும் அவனுக்கு சரிசமமா இருக்கேடி...நான் என்னத்த செய்வேன்...?

அம்மா....நான் அண்ணா மாதிரியா இருக்கேன்..அவனும்... நானும் ஒண்ணா....? நான் லேட்டா வரேனா? ஊரைச் சுத்தறேனா? நீயே சொல்லு...இங்க பாரு..ஒரு விஷயம்...காதைக் காமி....அவன் "தம்" அடிக்கறான்.....தெரியுமா நோக்கு? நான் சொன்னாத் தான் இதெல்லாம் தெரியும். இல்லாட்டா யாரு வந்து சொல்லுவா உன்கிட்ட...என்று பெரிய சாதனை செய்தவள் மாதிரி பார்க்கிறாள்.

இது எப்போலேர்ந்து டீ..?

ஒண்ணும் சொல்ல மாட்டேன் போ..நீயே போயி கேட்டுத் தெரிஞ்சுக்கோ..உன் அருமை புள்ள கிட்ட...ரொம்ப பிகு செய்து கொண்டவள்...சரி மம்மி...நேக்கு பசிக்கறது..என்ன இருக்கு...சாப்பிட..?

அப்டியா சங்கதி...துரை அந்த அளவுக்கு வளர்ந்தாச்சா? நான் என்னமோ இன்னும் இது சின்னப் பையன்னு நினைச்சுண்டு, நம்பீண்டு இருக்கேன். எனக்கு ஒண்ணுமே தெரியாதே...இதென்ன கூத்து...? இவன் படிக்கப் போறானா இல்ல....வேறெதுக்கும் போறானா தெரியலையே...? பகவானே..பேசாம பி.ஏ சேர்த்திருக்கலாம். இவன் படிக்கற லட்சணத்துக்கு என்ஜினீயரிங் வேற..கையில் காசு கிடைக்காமல் செஞ்சால் எல்லாம் சரியாகும்..என்றவள்..சரி..சரி..
நீ போயி குளிச்சுட்டு வா சாப்பிடலாம். இனிமேல் குளிக்காமல் உனக்கும் ஒண்ணும் கிடையாது..இனிமேல் எல்லாம் ரூல் தான்..சொல்லிட்டேன்...என்று புதிதாக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தாள் ஜெயந்தி.,

எங்கிருந்தோ மணி அடிக்க...ஐஸ்வர்யா ஓடி போய் கைபேசியை எடுத்து...ஹலோ...நான் இன்னைக்கு வரலப்பா....என்று ஆரம்பித்தவள் சோபாவில் சாய்ந்தபடியே நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டே இருந்தாள். பசி போன இடம் அவளுக்கே தெரியவில்லை....குறுக்கே வந்து நின்ற ஜெயந்தியை " இரு...இரு...ஒரு நிமிஷம் " என்று சைகை காண்பித்து....பேசிக் கொண்டே இருந்தாள்.

ஜெயந்திக்கு அவள் கையிலிருந்து அந்த கைபேசியை அப்படியே பிடுங்கித் தூக்கி போட வேண்டும் போல கை பரபரத்தது...ஆனால் செய்ய முடியுமா...? அப்படி செய்து விட்டு அன்று அமைதியாக... நாள் தான் போகுமா...? ஐஸ்வர்யாவின் சுயரூபம் அப்போ தான் வெடிக்கும்.

மம்மி...மம்மி.....நாங்க இன்னும் ரெண்டு நாள்ல ஒரு டூர் போறோம்...அதுக்கு ஒரு ஆறாயிரம் ரூபாய் வேணும்...ரெடியா வெச்சுக்கோ.. இப்போவே சொல்லிட்டேன்.

இத்தனை நேரம் ஃபோன்ல அதைத் தான் சொன்னாளா.....? நீயெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்.எங்க போணமோ... நாங்களே அழைச்சுண்டு போறோம்..ஜெயந்தி உறுதியாகச் சொல்ல.

உங்களோட யாரு வருவா....? நாங்க ஃ பிரெண்ட்ஸோட போறோம்..அதுதான் குஷி.அதுவும் எங்கே தெரியுமா? கொடைக்கானல்...நான் கண்டிப்பா போறேன்.....போவேன்..இவளும் தீர்மானமாகச் சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அந்த நாள் நினைத்ததை விட அதிகமான விறுவிறுப்புடன் நகர்ந்தது பாட்டி பர்வதத்திற்கு வெல்லப்
பாயசம் சாப்பிட்டா மாதிரி இருந்தது,. ஜெயந்திக்கோ தலைவலி வந்து வாட்டியது. ஒரு நாள்... ஒரே ஒரு நாள் வீட்டில் ரெண்டு பேரையும் வெச்சுண்டு இருக்க முடியலை...உங்க ரெண்டு பேருக்கும் படிக்க ஒண்ணுமே இல்லையா.?..பேசாமல் எங்கேயாவது வெளில போயிட்டு வாங்க...வீட்டுக்குள்ளேயே இருந்து தொல்லை பண்ணாமல்....என்று ஒரு வழியாக துரத்தியும் பார்த்தாள்.

காலையில் தன் மகன் வாசு வந்ததும் சொல்ல நிறைய செய்திகள் கிடைத்த திருப்தி பர்வதம் பாட்டிக்கு. குழந்தைகளா வளர்த்திருக்கா...ரெண்டும் வளர்ந்து நிக்கறதே தவிர....ரெண்டுங்கெட்டான்கள்..இதே... சந்தியாவோட ரெண்டு பெண்களும் எவ்ளோ சமத்து தெரியுமா? வீட்டில் இருக்கற சுவடே தெரியாது....அவ்வளவு அமைதி..என்று ஜெயந்தியின் நாத்தனார் குழந்தைகளைப் பற்றி புகழ் பாட..இவளுக்கு காதிலிருந்து புகை கிளம்பும்.

காலையில் வந்திறங்கிய வாசுதேவனுக்கு நான்கு புறமும் அடி ....அபியும் , ஐசும் ...அப்பா வாங்கி வந்த ஐபேட் பார்த்து ஆனந்த தாண்டவம் ஆடாத குறை தான் வீட்டில். ஜெயந்திக்கு கிடைத்த மைசூர் சில்க் புடவை அதுவும் மரகதப் பச்சை வண்ணத்தில் அவளை மயக்கிக் கொண்டு போனது . பர்வதம் பாட்டிக்கு தன் மகன் வாங்கி வந்த மடக்கும் கைத்தடி மிகவும் பிடித்தது...நன்னாருக்கேடா...என்ன விலை ..? என்று திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

டாடி...டாடி.....நாங்க எங்க காலேஜில் டூர் போறோம் நாளைக்கு....ஆறாயிரம் ரூபாய் வேணும்....அம்மா டூர் அனுப்ப மாட்டேங்கறா டாடி..- இது ஐஸ்வர்யா....கூப்பாடு !.

டூர் தானே...போய்ட்டு வா...என்ஜாய்...என்று சொன்னதும் ..."டாடின்னா டாடி தான் ".என்று ஜெயந்தியைப் பார்த்து ஒரு லுக் விட .அதில் "நீயும் இருக்கியே...மம்மி....டம்மி..." என்று தகவல் வந்தது.

அடுத்து அவள் "ஹையா.." என்று சந்தோஷமாக டூருக்கு போக வேண்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ள தன் அறைக்கு ஓடினாள்.

குளித்துவிட்டு வெளியே வந்த அபிலாஷின் வெறுங் கழுத்தைப் பார்த்த ஜெயந்திக்கு திக்கென்றது ! ..டேய் அபி.....நில்லு....நில்லு....உன்னோட மைனர் செயின் எங்கே காணோம்.,..? .அச்சச்சோ எங்கேடா உன் பூணூல்...? . அதிர்ச்சியோடு கேட்க...

ம்ம்ம்...கொஞ்சம் சும்மாருக்கியா...? செயின் எங்கேயோ விழுந்துடுத்து...ரெண்டு நாளா... நானும் தேடறேன்,,காணோம்,,,பூணூல் நான் தான் வேண்டாம்னு கழட்டி வெச்சேன்,,,அதுக்கென்ன இப்போ..என்று அசால்டாக சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திக் கொள்கிறான்,...அபி.

இது காதில் விழுந்ததும் பர்வதம்...அங்கே ஆஜராகி..."என்ன புள்ளையாண்டாண்டா... இவன்....கம்மனாட்டி..கம்மனாட்டி....பூணூலைக் கழட்டி வெக்கவா லட்ச லட்சமாச் செலவு பண்ணி பூணூல் கல்யாணம் பண்ணினோம்,,.? தங்கம் விக்கற விலையில் கழுத்துச் சங்கிலியைத் தொலைச்சானாம்...நம்ப முடியறதா? தருதலை....தருதலை.. என்று அவள் பாணியில் பேரனுக்கு ஆரத்தி காட்ட ஆரம்பிக்க..

ஜெயந்தியும்....வாசுதேவனும்..சேர்ந்து அச்சச்சோ...இதெல்லாம் அவன் காதில் விழுந்தால் இன்னைக்குப் பிரளயம் தான்...இந்த அம்மா வேற வாயைத் திறந்தால் மூட மாட்டாளே..என்று பயந்தபடியே "அம்மா நீ சித்த சும்மா இரேன்,,நான் பார்த்துக் கேட்கறேன்...." என்று அம்மாவை அமைதி படுத்தி விட்டு ஜெயந்தி நீ ஒண்ணும் அவனைக் கேட்காதே..எல்லாம் நான் பார்த்துக்கறேன்...என்று சொன்னவர்....மெல்ல அவனது அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திக் கொள்கிறார்..

ம்ம்...இவர் நம்ம வாயை அடைப்பதில் தான் வல்லவர்...அங்க இவரால ஒண்ணும் நடக்காது..என்று சொன்ன ஜெயந்தி...இனிமேல்..கல்யாணத்துக்குக் கூட இவனுக்கு செயின் கிடையாது. என்று சொல்லிக் கொள்கிறாள். மனம் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தது வழக்கம் போலவே.

வெளியே வந்த வாசுதேவன்...நான் சொல்லியிருக்கேன்...பூணூல் போட்டுண்டான்...என்று புன்னகையோடு சொல்லிவிட்டுப் வாசல் பக்கம் நைசாக வெளியேற ..அந்தப் புன்னகையில் எதையோ ஜெயித்து விட்ட திருப்தி இருந்தது,.

அப்போ...மைனர் செயின்...என்னாச்சாம்,,,..? ஜெயந்தி பின் தொடர்ந்தாள்..

கிடைக்கும்..கிடைக்கும்....தேடலாம்.,..என்றவர் மௌனமானார். அவரது நிலைமை இப்போ ஊமை கண்ட கனவு போலத் தான்... இருந்தது.

என்னன்னா...என்று பின்னாலேயே கேட்டுக் கொண்டு வந்த ஜெயந்தியை...என்னைக் கொஞ்சம் இப்போ ஒண்ணும் கேட்காதேயேன்...எல்லாம் சரியாகும் கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும்...என்று சொன்னபடியே கேட்டைப் பிடித்து தெருவை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தார் வாசுதேவன்.

என்னடா வாசு என்னாச்சு.? சங்கிலியைத் தொலைச்சுட்டானா? என்று அம்மாவும் ஓடோடி சென்று அருகில் நின்று கொண்டார்.

நீ இதிலெல்லாம் தலையிடாதேம்மா...இந்தக் காலத்தில் வயசுப் பசங்களை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்னு நோக்குத் தெரியாது. நான் என்னமோ செல்லம் கொடுக்கறேன்னு தான் நீங்க ரெண்டு பேரும் நினைச்சுண்டு இருக்கேள். ஆனால், நாம் நம்ம குழந்தைகள்ட்ட பாசமா இருந்து .சின்ன விஷயங்களை பெரிசு படுத்தாமல் விட்டுக் கொடுத்துண்டு போனால் மட்டும் தான் அவாளும் நம்மகிட்ட கொஞ்சமாவது உரிமையோட பயமில்லாமல் நடந்துப்பா ..சில விஷயங்களை மனசு விட்டுச் சொல்வா. நம்ம கிட்டயே மறைக்க ஆரம்பிச்சாத் தானே கஷ்டம்.? அதுக்கு நமக்கும் பசங்களுக்கும் நடுவில் அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக்கணும்..இல்லையா?

இப்போல்லாம் வீட்டில் பெரிய பெரிய பிரச்சனை எல்லாம் யாரால் வரதுங்கறே...எல்லாம் வயசுப் பசங்க இருக்கும் வீட்டில் தான்..... பல வீடுகளில் இதுவே பெரிய தலைவலியா இருக்கு அது தெரியுமா நோக்கு.? அதான் சொல்றேன்..நீ இதில் தலையிடாமல் விலகி இருந்து வேடிக்கை பாரு..சரியா..என்றார்.

என்னமோடா.வாசு.....நானும் ஐந்து பிள்ளையப் பெத்து இப்போ நீங்கள்லாம் பெரிய பெரிய உத்தியோகத்தில் காரும் பங்களாவுமா இல்லையா? நான் ஒரு நாளாவது இந்த மாதிரி எதுக்காவது கவலைப் பட்டிருப்பேனா.?.அதான் நேக்கு இந்த வயசிலையும் சக்கரையோ ...ரத்தகொதிப்போ கிடையாது..ஆனா பாரேன்..இப்பவே ஜெயந்திக்கு சுகர் வந்துடுத்து...எல்லாம் இந்தக் குழந்தைகளாலத் தான். நீ தான் விட்டுப் பிடிக்கணும்...தொட்டுப் பிடிக்கணும்னு பூச்சி பூச்சின்னு பயந்துண்டு நிக்கறே. அன்னிக்கே முதுகுல நாலு வெச்சு வளர்த்திருந்தால் பசங்க நில்லுன்னா நிக்கும் சொன்னபடி கேட்கும். நானும் அடிச்சுத் தான் வளர்த்தேன். இன்னைக்கு நீ என்மேல பாசமா இல்லையா? என்ன அதிசயப் பிள்ளை....உன் பிள்ளை...? தங்க ஊசிங்கறதாலே..கண்ணைக் குத்திக்கவா முடியும்..?

அபியும், ஐசும் தான் நோக்கு.தலைவலி...இப்பவே கண்ணுல விரலை விட்டு ஆட்டறதுகள்...இன்னும் எத்தனை இருக்கு.....? நேக்கென்னமோ....பயம்மா இருக்குடா...நீ இன்னும் கொஞ்சம் கண்டிப்பாகவே இருந்திருக்கலாம். குழந்தைகள் . கண்ணுல பார்த்ததை, கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காட்டி ரெண்டு பேரையும் கெடுத்து வெச்சுருக்கே..... இனி திருந்தாது என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள் பர்வதம் அம்மா.

ஜெயந்தி அந்தக் கார் சாவியை எடேன்..கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்...என்ற வாசுதேவனைப் பார்த்து...

இப்போ நீங்க எங்கேயும் போக வேண்டாம் பேசாமல் உள்ளே வாங்கோ போறும், என்றாள் ஜெயந்தி.

ஐஸ்வர்யா டூருக்கு கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் ஆகிய நிலையில்...அன்று நடு ராத்திரி வாசுதேவனின் கைபேசி அலறியது.

என்னன்னா இது நட்டநடு ராத்திரியில் யாரது உங்களுக்கு ஃபோன் பண்றது? எடுக்கலாமா வேண்டாமா?

அந்தப் ஃபோனை எடேன்.....யாருன்னு பாப்போம்...! ஐசு வேற வெளியூரில் இருக்கா...

யாராயிருக்கும் இந்த நேரத்தில்...குழப்பத்தில் "ஹலோ" என்றதும்..

சார்...உங்க மகன்..."பேரென்னடா..." என்று அருகில் கேட்டுவிட்டு..."அபிலாஷு" வீட்டில் இருக்கானா?
கொஞ்சம் பாருங்க...நாங்க நைட் ரோந்து போலீஸ் பேசறேன்...

தூக்கிவாரிப் போட்டு எழுந்து கொண்ட வாசுதேவன்...ஏன் சார்?..என்னாச்சு?..அவன் இங்க தான் வீட்டில் தான் தூங்கறான்.......என்று திணறியபடியே சொல்லிக் கொண்டு அவனது அறைக்கு எழுந்து சென்று கதவைத் தள்ளித் திறந்து விளக்கைப் போட்டதும்...


அங்கே..அபிக்கு பதிலாக மூன்று தலையணைகள் மட்டும் போர்வை போர்த்திக் கொண்டு இருந்தது.

அச்சச்சோ என்னாச்சு... அபிக்கு? ...நீங்க யாரு? எங்கேர்ந்து பேசறீங்க..? பதட்டம் ஜாஸ்தியாக..

நிலைமையை உணர்ந்து கொண்ட ஜெயந்தி விரைந்து சென்று வாசல் கதவைத் திறக்க முயல அது வெளியில் இருந்து பூட்டப் பட்டிருந்தது..இவளுக்கு எல்லாம் புரிந்தது. வாசலில் போர்டிகோ விளக்கைப் போட்டதும் தான் தெரிந்தது...."காரையும் காணோம்...அபியையும் காணோம்..." அடப் பாவி....சொல்லாமல் கொள்ளாமல் வீட்டையும் பூட்டிவிட்டு எங்கே காரை எடுத்துண்டு தொலைஞ்சான்? அவனுக்கு டிரைவிங்கும் தெரியாது...லைசன்ஸும் கிடையாதே......பதட்டத்தில் பட படத்தாள் ஜெயந்தி...

அதற்குள் ஷர்டைப் போட்டுக் கொண்டு வந்த வாசுதேவன்...குசு குசுவென்று ஜெயந்தி காதில் ஏதோ சொல்ல...அவள் அப்படியே வாயை அழுத்தமாகப் பொத்திக் கொண்டு...இப்போ என்ன பண்றது...?
ஏதாவது விபத்தில் மாட்டீண்டானா? பகவானே இந்தப் பிள்ளைக்கு ஏன் இப்படி புத்தி போச்சு? பகலில் காரைக் கேட்டால் தரமாட்டாரா டாடி..? இப்படித் திருட்டுத் தனமா எடுத்துண்டு...! இந்தப் பிள்ளைய வெச்சுண்டு நான் என்ன செய்வேன்....? ஐஸ்வர்யாவோட ஸ்கூட்டரை எடுங்கோ...உங்கம்மா காதில் விழப் போறது..சத்தம் போடாமல் வெளில வண்டியை எடுங்கோ...ம்ம்..சீக்கிரம்...


பகவானே.....ஒண்ணும் ஆகாமல் இருக்கணமே...!

ஜெயந்தி சொன்னபடியே ஒருவழியா அந்த போலீஸ் சொன்ன அந்தத் தெருமுனைக்கு வந்தாச்சு..

அங்கே...இவர்கள் காரும் ஐந்து பசங்களும் இரண்டு போலீசும்...ஏதோ பேசிக் கொண்டு நின்று கொண்டிருக்க..

"நான் அபிலாஷோட அப்பா...இது என்னோட கார் தான்.." என்று ஏதோ அடையாள அட்டையை அங்கிருந்த போலீசிடம் பவ்யமாக வாசுதேவன் தரவும்..

அடக்க முடியாத கோபத்தில் அபியைப் பார்த்து ..."எத்தனை துணிச்சல் இருந்தால் நீ இப்படி ஒரு காரியம் பண்ணுவே...ன்னு.. முறைத்தபடியே ஜெயந்தி அதட்ட....

அவன் பயந்து போயிருப்பது அவனது மருண்ட பார்வையில் தெரிந்தாலும்....வெளிக்காட்டிக் கொள்ளாமல் திண்ணாக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்.

டாடி....நாங்க சும்மா...நைட் டிரைவ் பண்ணலாம்னு தான் வண்டியை எடுத்தோம்...அதக்குள்ள இவர்கள் தான் ஏதோ கேஸுன்னு சொல்லி பிடித்து விசாரிச்சு...என் கைபேசியை வாங்கி உனக்கு ஃபோன் போட்டு...என்று அபி படபடப்புடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

உன்கிட்ட சொல்லிருப்பேன் டாடி...நீங்க தூங்கிண்டு இருப்பேளே....ன்னு தான்.என்று இழுத்தான் அபிலாஷ்.

உங்கப்பாவுக்கும் சொல்லாமத் தானே காரை ஒட்டியாந்துருக்கே.?...திருட்டு பயலுக...போலீசுன்னு கூடப் பார்க்காமே...எதிர்த்து வேற பேசறான் சார்...உங்க மவனா...? வெளங்கிருவான்...என்று ஆசீர்வாதம் செய்தவர்...... நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க சார்....வந்து ஒரு கையெழுத்து போட்டுட்டு போங்க...நாளைக்கு நாங்க எப்போ கூப்பிட்டாலும் நீங்க, இவனுங்களோட வர வேண்டியிருக்கும்...என்ன செய்யுறது..? இது போலப் பிள்ளைங்களைப் பெத்தால் போலீஸ் ஸ்டேஷன் தான் உறவு...என்று கட்டைக் குரலில் சொன்னவரைப் பார்த்து..கூனிக் குறுகிப் போனார்கள் இருவரும்.

படிக்கிற பசங்க...ஏதோ தெரியாமல் பண்ணிபுட்டாங்க...விட்டுடுங்க...என்று கெஞ்சவும்..

இப்படிச் சொன்னால் எப்படி.? ...ஏதாவது வெட்டினா....விட்டுட்டுப் போகப் போறோம்...!இப்போ நாங்க மட்டும் பிடிச்சு உங்களுக்குத் தகவல் சொல்லாமல் இருந்தால்...உங்களுக்கு இதுக என்ன செய்துன்னு தெரிஞ்சிருக்குமாக்கும்...?
என்று சொன்னதன் அர்த்தம் புரிந்து...பர்ஸில் இருந்ததை இடம் மாற்றவும்...அவர்கள் பர்ஸில் கனம் ஏறியதும் ஒன்றுமே நடக்காதது போல அந்த இடத்தை விட்டு நகரவும் வியப்பாக இருந்தது ஜெயந்திக்கு.

அவங்களுக்கு எட்டாம் இடத்தில் குரு..! அதான்..சந்தோஷமாப் போறா......நமக்குத் தான் ஏழுல சனி..வாரி வாரி அழறோம்..எல்லாம் இவனால வந்த வினை....சனியனே...வீட்டுக்கு வா உதைக்கறேன்....என்று சிடு சிடுத்தாள் ஜெயந்தி.

ஏன் டாடி..பணம் தரீங்க...அவங்களே டுபாக்கூர் போலீசோ என்னவோ...என்ற அபியைப் பார்த்து..

போறும்...வாயை மூடு...நீ பேசாதே...ரொம்ப நல்ல பேரு வாங்கித் தந்திருக்கே...நீ..!...மற்ற பசங்களைப் பார்த்து..நீங்கள்ளாம் கூட கிளம்புங்கப்பா...பண்றது தப்பு..இதில் உனக்கு வாய் வேறயா...? டுபாக்கூர் போலீசாம்...நீ தான் டுபாக்கூர்..! யாருக்கும் சொல்லாமல் வீட்டையும் பூட்டிட்டு காரையும் எடுத்துண்டு.....உன்னை.....ராஸ்கல்..! இது ஒண்ணு போதும்....நேக்கு....! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமாம்..! கொஞ்ச நேரத்தில் இப்படிக் கலங்கடிச்சுட்டியேடா..எங்களை..! இன்னும் என்னவெல்லாம் வருமோ..? கோபத்தோடு காரை ஓட்டினார் வாசுதேவன். அருகில் இருந்த ஜெயந்தி கலங்கினாள்..அவன் கிட்டயே விட்டுட்டு வந்திருக்கணும் இவனை....என்று முறைத்தவள்.....ஏண்டா அபி இப்படிப் பண்ணினே.? என்று கண்களினால் கெஞ்சினாள்.முன் கோபம் பின் இறக்கம் அவள் சுபாவம்.

வீட்டுக்குள் நுழைந்து யாரும் எதுவும் பேசவில்லை...அவரவர் அறைக்குள் நுழைந்து படுத்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு மனதுக்குள் மகனைச் சபித்தார். தங்கத் தாம்பாளத்தில் மகனை ஏற்றி வைத்தது தப்பாப் போச்சோ..? என்று வருத்ததோடு நினைத்துக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே....

நீ சொல்றாப்பல இவனது சேர்க்கை சரியில்லைடி...நாம் கவனிக்கணும்...இப்போ தானே பார்த்தோம்...எல்லா தடி மாடுகளையும்....நானும் குழந்தை குழந்தைன்னு நினைச்சேன்...இன்னைக்குப் பண்ணின வேலையைப் பார்த்தால்..நான் தான் தப்பு பண்றேன்னு புரியறது, ஜெயந்தி. சமயத்தில் நீ சொல்றது தான் சரின்னு தோணறது நேக்கு, என்றார்.

இப்போ நடந்ததை மட்டும் உங்க அம்மாட்ட சொல்லிடாதேங்கோ, . அப்பறம் ...அபியைப் பத்தி சன் செய்திகளில் நியூஸ் வாசிக்கறா மாதிரி வீடு வீடா சொல்லிண்டு இருப்பா...நம்ம பையன் நம்ம பேரை இப்படிப் பறக்க விட்டா மாதிரி உங்கம்மா அவன் பெயரை தெருவெல்லாம் பறக்க விடுவா...இது தேவையா?.அப்புறம் நேக்கே கோபம் வரும்...சொல்லிட்டேன். அபி இப்போ கொஞ்சம் பயந்தா மாதிரி தான் இருக்கான்..சூடு கண்ட பூனை இனி அடுப்படிக்குப் போகாது. பாருங்கோ... இனி அவன் எந்தத் தப்பும் செய்ய மாட்டான்னா..!

ஜெயந்தி....அவன் சிகரெட் வேறப் பிடிக்கறாண்டி.....! வண்டில சிகரெட் பாக்கெட்டும் லைட்டர் இருந்தது....என்னாச்சுடி அவனுக்கு? நான் அப்படியா நினைச்சு வளர்த்தேன்...இப்படித்தான் ஒண்ணொண்ணா எல்லாக் கழிசடையும் உள்ளே நுழையும்...பிறகு அவன் கிட்ட இருக்கற எல்லா நல்ல குணமும் வெளி நடப்பு செய்யும். மனசு இன்னைக்குத் தான் வேதனையா... இருக்குடி..அவன் சங்கிலியைக் கூட வித்துருக்கான்....தொலைக்கலை...என்கிட்டே சொன்னான்...ரெண்டு நாள் முன்னாடி இவன் யாரோட கார்லயோ போய் இடிச்சிருக்கான்,.அவா சும்மா இல்லாமல்...வண்டியை மடக்கி,...உடனே நஷ்ட ஈடா.. பத்தாயிரம் எடுத்து வைன்னு சொன்னதும்,...வேற வழியில்லாமல் சங்கிலியை வித்து பணத்தை செட்டில் பண்ணியிருக்கான்...நீ கூட ராத்திரி லேட்டா வந்தான்னு ஃபோன்ல சொன்னியே...அன்னைக்குத் தான்..என்றவர் மௌனமானார்..

ஓ...அப்படியா சேதி....என்றவளைப் பார்த்து....

ஜெயந்தி, நீ இதைத் தெரிந்தது போல காட்டிக்காதே...என்கிட்டே மட்டும் சொல்லி உனக்கு தெரிய வேண்டாம்னு சொல்லியிருக்கான்;..

இதெல்லாம் என்னன்னா....புதுப் பழக்கம். சரி..நான் காட்டிக்கலை...ஆனாலும் சங்கிலி எங்கேன்னு கேட்டுண்டே இருப்பேன்..தங்கம் விக்கற விலையில்...இந்தக் கடன்காரன் இப்படி எல்லாம் நமக்கே தெரியாமல் விக்கற அளவுக்கு பெரிய மனுஷனாயிட்டானா..? இனிமேலாவது யாராவது ஒருத்தர் கொஞ்சம் கண்டிப்பா இருக்கணும் இவனிடம் என்றவள்...நான் கவனிச்சுக்கறேன் அவனை.....சரி..நீங்க .தூங்குங்கோ....நாழியாறது...விடிஞ்சா ஆஃபீஸ் போகணும்...என்றவள் அவரை ஆதரவாக தலையைக் கோதிவிட்டு அணைத்தபடியே உறங்கிப் போனாள்.

அவர் மனசுக்குள் இன்னும் இவனால் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகுதோ? இவன் படிச்சு முடிப்பானா..? நாளைக்கே யாராவது நல்ல ஜோசியராப் பார்த்து பரிகாரம் கேட்டுச் செய்யணம் என்று நினைத்தபடியே....தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார்.

காலங்கார்த்தால அழைப்பு மணி....வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஓடிய ஜெயந்தி...வாசலில் ஐஸ்வர்யா நிற்பதைக் கண்டு..என்னடி ஒருநாள் முன்னாடி வந்துட்டே....நன்னாத் தானே இருக்கே...என்று கட்டிக் கொண்டாள்.

நன்னா இருக்கேன்மா..என்றவள்..ஒரு ஃ பிரெண்ட் முன்னாடி கிளம்பினான் அவன் கூட வந்துட்டேன்.,.
என்றவள்...மம்மி....கொடைக்கானல் சூபெர்ப்...தெரியுமா? என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள் ஐஸ்வர்யா. அவளிடம் ஒரு துள்ளல்...ஒரு முக மலர்ச்சி..ஓரிளமை முதிர்ச்சி...ஒரு வித்தியாசத்தை கவனிக்கத் தவறவில்லை ஜெயந்தி. இருந்தாலும் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியால்..ஜெயந்திக்குத் தான் எதையும் ரசித்துக் கேட்கும் மனசே இல்லை.

அவள் உள்மனம் சொல்லியது...."இவள் எங்கேயோ...யார்கிட்டயோ மாட்டிண்டு இருக்கா... கவனி..கவனி..என்றது. அந்த ஃபிரெண்ட் யாரு? கேட்க நினைத்தவள்.....அவளாச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள்.

அதே போல....ஐஸ்வர்யாவின் தினப்படி நடவடிக்கைகளின் ஏகப்பட்ட மாறுதல்கள். கார்த்தால சீக்கிரம் எழுந்திருப்பதாகட்டும் , வாசல் தெளித்து கோலம் போட்டு, சுவாமி விளக்கேத்தித் தொழுது....சமயலறையில் ஜெயந்திக்கு கூடமாட உதவி செய்து பாட்டியோட உட்கார்ந்து பேசிக் கொண்டு...நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டு....விழுந்து விழுந்து வீட்டை அழகு படுத்தி...விடாமல் தினம் சொல்லாமலே காலேஜுக்குக் கிளம்பிக் கொண்டு என்று ஜெயந்தியைத் திணற அடித்துக் கொண்டிருந்தாள் தனது செய்கைகளால் ஐஸ்வர்யா.

பாட்டி கூட ஜெயந்தியிடம் பேச்சோடு பேச்சாகச் சொன்னாள்..." நம்ம ஐஸ்வர்யாவுக்கு திடீர்னு இவ்ளோ... நல்ல புத்தியும் பொறுப்பும் எப்படி வந்தது...? காலாகாலத்தில் ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடு சூட்டோடு சூடா என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

இதுக்கெல்லாம் காரணம் வேறு என்று பாவம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏண்டா...அபி....செமஸ்டர் ரிசல்ட் வந்தாச்சோ...? ஜெயந்தி தான் கேட்டாள்..

ம்ம்...ம்ம்ம்...ரெண்டு சுப்ஜெக்ட் போச்சு....என்று கூலாகச் சொன்னார் அபிலாஷ்.

நீ படிச்சிருந்தால் தானே பாஸாக முடியும்...அலமாரியில் இருக்கும் புஸ்தகமா போய் உனக்கு பதிலா பரீட்சை எழுதும்...ரொம்ப சந்தோஷம்டா கண்ணா.....எல்லாத்தையும் சேர்த்து வெச்சுண்டு நன்னாத் திண்டாடு..நீ உருப்பட மாட்டே.

டாடி...டாடி....என்னமோ நான் மட்டும் ஃபெயில் ஆனா மாதிரி...வேணும்னே ஃ பெயில் பண்ணி விடறாத் தெரியாதா?
இந்த யுனிவர்சிட்டி யில் அம்பதாயிரம் கொடுத்தால் என்னோட ரெண்டு சுப்ஜெச்டும் நான் பாஸ்...அது தெரியுமா உங்களுக்கு...? தரேளா....? பாஸாகறேன்...!

ம்ம்ம்...இப்போ தான் மனி பிளான்ட் செடி பால்கனியில் வெச்சுருக்கேன்....அது பணமா முளைக்கட்டும்....அப்போ தரோம்....என்று சொல்லி அபியை அடிக்க கையை ஓங்கினாள்.....ஜெயந்தி.

சரி...விடு..ஜெய்யும்மா...என்று சமாதானப் படுத்தியவர்...மகனிடம்...என்னடாது...என்று மெல்லப் பேசலானார்.

அபியின் கண்களில் நம்பிக்கை ஒளி பிறந்தது. அது மீண்டும் வாசுவின் பணபலத்தை தான் மீது கொண்ட பாசத்தால் சாதகமாக்கி கொள்ள வழி காட்டியது.

அடுத்த சில தினங்களில்....அம்மா...நானும் பாஸாயிட்டேன் என்று சொன்ன போது..ஜெயந்தியால்...அதை ஏற்க முடியவில்லை..என்ன நடந்திருக்கும் ? பணம் கொடுத்து மகன் பாஸாவதா ?..கணவனிடம் சண்டை போட்டு கோவித்துக் கொண்டு...பேசாமல் கூட இருந்தாள். அபியின் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்து வந்தாள் கோபத்தோடு.
ஒரு நாள்...ஐஸ்வர்யா...இந்த வருஷம் உன் படிப்பு முடிஞ்சா கையோடு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்கறோம்..... என்று ஜெயந்தி மகளிடம்

அவ்ளோதான்...யோசிக்கறோம்னா...? அப்போ என்னோட சம்மதம்..தேவையில்லையா ? என்று கொக்கி போட்டாள் ஐஸ்வர்யா...அதே சமயம் மம்மி....மம்மி என்று தயங்கி இப்போ சொல்லட்டுமா ? கோபப் படக் கூடாது ! .... நான் ... நான்....ஒருத்தரோட பழகறேன்....அவர் பெயர் தேவன் ., அதாவது மகாதேவன் ....அவர் நம்ம ஜாதி இல்லே ! சீக்கிரமா நீ அவரை மீட் பண்ணுவே..என்று மட்டும் சொல்லி இவள் தலையில் ஒரு பாறாங்கல்லை தூக்கிப் போட்டாள் ! என்ன சொன்னாய் என்று தாய் அதட்டுவதற்குள், அவள் காலேஜுக்கு ஓடி விட்டாள்.

ஜெயந்தி தான் பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்து கொண்டிருந்தாள். இதைக் கேட்டதிலிருந்து எந்த வேலையும் ஓடவில்லை..இந்தக் கொடுமையை நான் யார்ட்டப்போய் சொல்வேன்...இனி இது எப்படில்லாம் வெடிக்குமோ....?

மாலையில் இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவராலும் அலசப்பட்டு.....முடிவு எடுக்க முடியாத நிலையில் ஆளாளுக்கு ஒண்ணொண்ணு பேச...ஜெயந்தி...தான் "நான் உயிரோட இருக்கற வரைக்கும் இந்தக் கல்யாணம் நடக்காது." நடக்கவும் விட மாட்டேன்.....நான் அன்னிக்கே தலையால அடிச்சுண்டேன்....டூரும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு...இவர் கேட்டால் தானே...இப்போ அங்கேர்ந்து உங்களுக்கு மாப்பிள்ளை அழைச்சுண்டு வந்திருக்கா உங்க செல்ல மகள்....கல்யாணம் நடத்தி வையுங்கோ...நான் போறேன்....என்று ஆவேசமாகக் கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

வாசு...இதென்னடா.... கிணறு வெட்ட பூதம் கிளம்பறது...ன்னு பாட்டி வருத்தப் பட்டாள். நேத்து கூட நியூஸ் ல சொன்னான்....பொண்ணக் கல்யாணம் பண்ணித் தரமாட்டேன்னு சொன்ன அம்மாவைக் கத்தியால குத்திட்டு அந்தப் பெண் மேல ஆஸிட்ட வீசி விட்டு எரிச்சுட்டானாம்..அவனும் அந்தப் பெண்ணையும் சேர்த்துத் தானும் அவளைக் கட்டிப் பிடிச்சுண்டு எரிஞ்சு செத்துப் போனானாம்....நேக்கென்னமோ பயம்மா இருக்குடா....வாசு உன் பொண்ணு காதலிக்கறது வேற ஜாதியாம்..நமக்கு இதெல்லாம் ஒத்து வருமா...? அதான் ஜெயந்தி கோச்சுண்டு போறா...பாவம்....காலம் கலிகாலம்...இல்லாட்டா நம்மாத்தில் இப்படி நாடகம் எல்லாம் நடக்குமா? போய்ப் பாரு ஜெயந்தி ஏதாவது செஞ்சுக்கப் போறா....அவமானம் தாங்காமல்..என்று ஜோசியம் சொன்னாள் வாசுவின் அம்மா.

அம்மா... நீ கொஞ்சம் வாயை மூடேன்...? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுண்டு.....என் தலையெழுத்து....பெரிசு...தத்தாரியா சுத்தறது...சின்னது வம்பை விலைக்கு வாங்கீண்டு வந்திருக்கு... ரெண்டு பேரும் எங்கியோ தொலைஞ்சு போங்கோ..எனக்குக் குழந்தைகளேப் பொறக்கலைன்னு நினைச்சுக்கறேன். உங்களால .எனக்கு நிம்மதியே போச்சு..உங்களுக்காக ஓடி ஓடி சம்பாதிச்சதெல்லாம் வேஸ்ட்...எத்தனை அசதி இருந்தாலும் படுத்தால் நிம்மதியா தூக்கம் கூட வர மாட்டேங்கறது. பாசம் பாசம்னு....கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததற்கு...நன்னாத் தான் இருக்கு..நீங்க ரெண்டு பேரும் வளர்ந்து நிக்கற விதம் சொல்லிக் கொண்டே ஜெயந்தி...ஜெயந்தி....கதவைத் திற....வெளில வாம்மா...ஜெயந்தி...எனக்காக வெளில வா...உன்னோடு பேச வேண்டும் ..வாம்மா.......என்று தட்டுகிறார்.

பாட்டி ஐஸ்வர்யாவைப் பார்த்து முறைக்கிறாள். இத்தனை நாட்கள் ரொம்ப நல்லவள் மாதிரி நடந்துண்டியே அதெல்லாம் இதுக்குத் தானா? நீயெல்லாம் ஒரு பொண்ணா..?கள்ள மனம் துள்ளும்னு சரியாத் தான் சொல்லியிருக்கா....!

என்ன டாடி நீங்க...படிக்க வைக்கறேள். வேண்டியதெல்லாம் வாங்கித் தரேள். கல்யாணம்னு வந்தால் மட்டும் என்னமோ உங்க இஷ்டப்படி பார்க்கறேள்..அது எங்கள் வாழ்கையில்லையா? எதில் எங்களுக்கு முழு சுதந்திரமும் உரிமையும் தரணுமோ...அந்த நேரத்தில் உங்களோட ஆளுமையைக் காட்டறேள். இது எப்படி பாசமாகும். இங்கேயும் சுயநலம் தான். எனக்கு விருப்பமில்லாத வாழ்கையை நீங்க எப்படி என்னை வற்புறுத்தி வாழ வைக்க முடியும்? என் லைஃபை டிசைட் பண்ண எனக்குத் தெரியாதா என்ன?

நீங்களும் தான் ஆஃபீஸ் போறேள்..எல்லாரும் ஒரே ஜாதியாவா இருக்கா? இந்தக் காலத்தில் போய் ஜாதியும்... கீதியும்.... பார்த்துண்டு....நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்கோ....நான் கல்யாணம்னு பண்ணீண்டா தேவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன். இல்லன்னா லெட் மீ ஃபோர்கெட் அபௌட் மை மேரியேஜ்..! இப்போ நிம்மதியாத் தூங்குங்கோ....என்று சொல்லிவிட்டு டிவி யை போட்டுக் கொண்டு ரிமோட்டால் ஆத்திரத்தோடு ஒவ்வொரு சானலாக மாற்றிக் கொண்டே சென்றாள் ஐஸ்வர்யா. அதிலிருந்து வந்த சத்தம் அந்த நேரத்துக்கு எரியும் நெருப்பில் நெய்யை விட்டது போலிருந்தது. .

இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்தி.ஆவேசமாகக் கதவைத் திறந்து ஓடிவந்து...மகளின் முதுகில் பளார் பளார் என்று வைக்கிறாள்....எவ்வளவு தைரியம்....நேற்றுப் பார்த்தவன் அவ்வளவு முக்கியமாப் போனானா? முதல்ல நீ வீட்டை விட்டுக் கிளம்புடீ சொல்றேன்.....எங்களுக்கு நீ வேண்டாம்..எப்போ எங்க வார்த்தைக்கு உன்கிட்ட மதிப்பில்லையோ....அப்போவே நீ யாரோ..நாங்க யாரோ.....போ..அவன் வீட்டுக்கு...அங்கேயே இருந்துக்கோ...இங்க வராதே..உனக்காக இனி நாங்கள் இந்த வீட்டில் ஒரு பிடி சாதம் போட மாட்டோம்...என்று அவளைப் பிடித்துத் தள்ளுகிறாள்...இன்னியோட உனக்கும் எங்களுக்கும் இருக்கும் பாசம், பந்தம், எல்லாம் அறுந்து போச்சு...ஓடிப் போ...நாயே...! இனி எங்க முகத்தில் முழிக்காதே...அப்பாவைப் பார்த்து ஒரு பெண் பேச்சும் பேச்சா இப்போ நீ ஏதாவது பேசினே....!தொலைச்சுடுவேன்...தொலைச்சு.... இனி இங்கு உனக்கு ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது...போ முதல்ல வெளில....என்று வாசலை நோக்கி கையை நீட்டுகிறாள் ஆவேசத்துடன் ஜெயந்தி.

தெருவில் இறங்கி நடுத்தெருவில் நின்னாத் தான் பெத்தவா அருமை புரியும்..இவளுக்கு. பெத்த வயிறு பத்திண்டு எரியறது..... ஏன்னா.... நாம இத்தனை வருஷங்களா பாம்புக்கு பால் வார்த்திருக்கோம். ஜெயந்தியின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் இருந்தது. இந்த இருபது வருஷமா உங்க ரெண்டு பேருக்கும் நாங்க அம்மா அப்பாவா நடிச்சதா நினைச்சுண்டு மனதைத் தேத்திக்கறோம். ரெண்டு பேரும் தொலையுங்கோ...என்று கத்துகிறாள்.

கண்ணே ..மணியேன்னு இத்தனை நாட்கள் கொஞ்சிக் கொண்டிருந்த ஜெயந்தியா... தன் மகளைப் பார்த்து இப்படி பேசுகிறாள் என்று வாயடைத்தபடி அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பர்வதம்.

அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா அறையின் கதவைப் படார் என்று அறைந்து சார்த்திய சத்தம் ஹாலில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.இதோ இப்போதிலிருந்து ஆரம்பித்தது ஐஸ்வர்யாவின் உண்ணாவிரத போராட்டம்...ஜெயந்தியின் அனுபவம் எச்சரிக்கை விடுத்தது.

வாசுதேவனும், ஜெயந்தியும் அவர்கள் ஆசையாய் பொத்தி பொத்தி செல்லம் கொடுத்த சுதந்திரக் கிளிகள் இவர்கள் ! "எங்க வீட்டுத் தங்க ஊசிகள்" என்று கலங்கினாள் ஜெயந்தி ! இன்று அவர்களின் கண்களைக் குத்திக் குருடாக்கி மீளாத இருட்டில் அவர்களைத் தள்ளி விட்டதை போல உணர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டு சோபாவில் பொத்தென்று சாய்ந்தனர்...நான் அப்போவே சொன்னேனே கேட்டியா...ஜெயந்தியின் மனசாட்சி....சொல்லிச் சிரித்தது.

ஆமாம் ஜெயந்தி...நமக்கு இது ஒரு பெரிய பாடம் தான்...ஆனால் என்ன இதுக்கு நாம கொடுத்த விலை தான் ரொம்ப அதிகம்...இருபது வருடங்கள்..! என்று தனக்குள் பேசிக் கொண்ட கணவரைப் பார்த்து..

குழப்பத்துடன்...என்னாச்சுன்னா..உங்களுக்கு....? என்ன சொல்ல வரேள் என்று கலக்கத்துடன் கேட்க..

இல்லம்மா....குழந்தைகளை எப்படி வளர்க்கக் கூடாதுன்னு புரிஞ்சுக்கற அனுபவம் நமக்குக் கிடைக்க இந்த இருபது வருடங்கள் ரொம்ப ஜாஸ்த்தின்னு சொல்ல வந்தேன். நான் சின்னவனா இருந்தப்போ ஒண்ணுமே கிடைக்காது ஆனால் எனக்கு எதுவும் தேவையும் இருக்காது...அதே போல எப்பவுமே குழந்தைகளுக்கு எந்தத் தேவையும் இருக்காது..சும்மாக் கேட்டுப் பார்ப்பா...அவ்ளோ தான்..நாம அன்னைக்கே முடியாதுன்னு எடுத்து புரியும்படியாச் சொல்லியிருந்தால்...அதையும் ஏத்துண்டு இருந்திருப்பா....நாம் தான் அந்தப் பிஞ்சு மனசை இப்படிக் கெடுத்து வெச்சு இன்னைக்கு அவாளை தப்பு சொல்லிண்டு அழறோம்..அப்போல்லாம் அவாளுக்கு நிம்மதி தரோம்னு நினைச்ச விஷயம் இப்போ நம்ம நிம்மதியே குலைஞ்சு போச்சே...இதுக்கு நாம் தானே முழுக் காரணம்.பெற்றோர்களே...தாய்மார்களே.... தங்க ஊசிகளை நாம் தான் பாசத்தால் தயாரிக்கிறோம்....தங்க ஊசிகளாக எங்கும் தாமாகப் பிறப்பதில்லை..! எங்களின் இந்த துயர அனுபவம் தான் உங்களுக்கும் ஒரு அறிவுரை.

புதன், 19 செப்டம்பர், 2012

ஆரோக்கியமே ஆத்ம பலம்.!

 


பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். 

இந்த  ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
 
 
துவர்ப்புச் சுவை (Astringent)
இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet)


மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
 
புளிப்புச் சுவை (Sour)

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
 
 
காரச் சுவை (Pungent)

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
 
கசப்புச் சுவை (Bitter)

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
 
உவர்ப்புச் சுவை (Salt)

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன் செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்னும் வரும் ஆரோக்கியம்....! ஆரோக்கியமே ஆத்ம பலம்.!

திங்கள், 17 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி இந்துக்களின்  முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது  ஆவணி  மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்வார்கள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே / ஏரியில்/ கடலில் இறக்கி கரைத்து  விடுவார்கள்.

பிள்ளையாரை களிமண்ணால் செய்தது ஆற்றில் கரைப்பது தான் விசேஷம்.


(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 11 அல்லது 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

இனி  நைவேத்யங்கள்  பற்றி :( குறைந்தது பன்னிரண்டு முதல் இருபத்தொரு எண்ணிக்கையில்)
அப்பம்
பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
பிடி கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
உருண்டை கொழுக்கட்டை

இதோ உங்களுக்காக:
என்னடா.....இவள் இவ்வளவு வகை எழுதி இருக்காளேன்னு பார்கிறேளா?  மேல்மாவு ஒன்று தான். பூரணங்கள் தான் மாறுபடும். எளிமையாக செய்து விடலாம்.
முடிந்ததை, செய்ய முடிவதைச் செய்யுங்கள்..செய்ததை...பக்தியோடு
பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யுங்கள்..அருள் பெருகட்டும்.

அப்பம் - 

இது ரொம்ப நல்ல நைவேத்யம் . இதை கரைத்தும், அரைத்தும் செயலாம் .  நெய்யில் செய்தால் சுவை கூடும்.

தேவையானவை: 
கோதுமை மாவு 1 கப் 
அரிசி மாவு 3/4 கப் 
வெல்லம் 1 கப் 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன் 
சோடா உப்பு 1 சிட்டிகை 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் 
பொரிப்பதற்கு  நெய் 
பூவன் வாழை பழம் 2 

செய்முறை: 

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும். 
வாழை பழத்தை துருவவும். 
அதில் போடவும். 
ஏலப்பொடி போடவும் 
சோடா உப்பு போடவும் 
வெல்லத்தை துருவி போடவும். 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும் 
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும். 
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும். 
பால் வேண்டுமானாலும் விடலாம். 
தோசை மாவு படத்தில் இருக்கணும். 
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும். 
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும். 
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் எடுக்கவும்.  பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும். 
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். 

இதோ.....கொழுக்கட்டை:

இதெல்லாம் வாங்கி ரெடியா வெச்சுக்கோங்க:
1. அரிசி மாவு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10

இப்படித்தான் செய்ய வேண்டும் கொழக்கட்டை..:
1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.
4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.

பூரணம் செய்ய:
1. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.
2. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.
3.அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.
4. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.
5.இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.
கொழுகட்டை அச்சில் செய்ய:
பிளாஸ்டிக் மற்றும் இன்டாலியம் வகைகளில் கொழுக்கட்டை-கடைகளில் கிடைக்கும் அச்சை உபயோகிக்கலாம். இதை நன்றாக அலம்பி, நல்லெண்ணெய் தடவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, தட்டை போல தட்டி, அச்சில ஓட்டினார்போலவைக்கவும்.
இதில் சிறிது பூரணம் (சின்ன நெல்லிக்காய் அளவு) வைத்து மூடவும். அச்சின் ஓரத்தில்அதிகப்படியாக இருக்கும் மாவை வழித்து எடுத்து விடவும்.
இதை இட்லி குக்கரில் வேக விடவும்.

1.தேங்காய்ப் பூரண கொழுக்கட்டை

இப்ப பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்போம்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 1/2 கப் (தேவையானால் 3/4 கூட போடலாம் )
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்
தேவையானால், பூரணத்தில் முந்திரி துண்டுகள் சேர்க்கலாம்

செய்முறை:
வாணலியில் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தைப் போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
சொப்பு செய்து அதன் உள் இதை வைத்து கொழுக்கட்டை செய்யவும்.
ஆவியில்   வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான 'தேங்காய்  பூரண கொழுக்கட்டைகள்' நைவேத்தியத்துக்கு தயார் 
====================================================================================

2.  கடலை பருப்பு பூரணம் ( இனிப்பு பூரணம் )
தேவையானவை: கடலை பருப்பு 1/2 கப் 
வெல்லம் 1/2 கப் 
ஏலப்பொடி
1/2 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 
கடலை பருப்பை களைந்து, மட்டாய் தண்ணீர் விட்டு குக்கரில்  வேகவைக்கவும்.
ஆறினதும், மிக்ஸியில் வெந்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், ஏலப்பொடி, வெல்லம் போட்டு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் நெய்விட்டு, அரைத்ததை போட்டு நன்கு கிளறவும்.
'மொத்தமாக' உருண்டு வந்ததும், இறக்கவும்.
ஆறினதும், சின்ன சின்னஉருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
சொப்பு செய்து,  அதனுள்ளே இந்தப் பூரணத்தை  வைத்து மூடவும்.
ஆவியில்  வேக வைக்கவும்.
கடலை பருப்பு பூரணக் கொழுக்கட்டை ரெடி  
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

3.மணி கொழுக்கட்டை
இது மேல் மாவு மீந்து போனால் செய்யக்கூடியது. 
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த உருண்டைகளை போட்டு கிளறவேண்டும்.
அடுப்பை சின்னதாக்கவும் .
தோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்
'மணி கொழுக்கட்டைகள்' தயார் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
4.உளுந்து (கார) கொழுக்கட்டை

தேவையானவை:


உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
இஞ்சித் துண்டு சிறியது
உப்பு
கறிவேப்பிலை சிறிது
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்,இஞ்சித்துண்டு, பெருங்காயம், உப்பு போட்டு கர கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கரில்  இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் )
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
ஆறினதும், நீள் உருண்டைகள் பிடித்து வைக்கக்வும்.
சொப்பு  செய்து, இந்த நீள் உருண்டைக ளை அதில் வைத்து, ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.
தித்திப்பு மற்றும் கார கொழுக்கட்டைகளை பிரித்து காட்டவே இந்த வித்தியாசம்  
ஆவியில்   வேக வைத்து எடுக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்
========================================

4.கார உளுந்து கொழுக்கட்டை 2

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது.

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சித் துண்டு பெருங்காயம், உப்பு போட்டு கர கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கரில்  இட்லி போல் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலியில் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில்  பூரணத்துடன் போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்
------------------------------------------------------------------

5,எள்ளுப் பூரண  கொழுக்கட்டை

தேவையானவை:
எள் 1/2 கப் ( நன்கு சுத்தம் செய்யவும்)
வெல்லம் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து  வாணலியில்  வறுக்கவும்.
நன்கு வெடித்ததும் இறக்கவும்.
மிக்ஸியில் வறுத்த எள், வெல்லம், ஏலக்காய் போட்டு பொடிக்கவும்.
இது தான் எள் பூரணம்.

இதை கொழுக்கட்டை சொப்பு செய்து, அதனுள் வைத்து ஆவி இல் வேக வைக்கக்வும்.'எள் கொழுக்கட்டை 'தயார்.
===================================================================


வியாழன், 13 செப்டம்பர், 2012

நம்ம பாரதி யார்..?


தீர்க்கதரிசி....!

"கடவுளின் தூதர்களான மகான்கள் மக்களுக்கு நன்மை செய்யவே தோன்றுகிறார்கள். தங்கள் பணி இவ்வுலகத்தில் முடிந்தவுடன் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்..." என்று சொன்ன பாரதியார், "நாம் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்துவிட்டோம். நம் கருத்துக்களை மக்கள் நானூறு வருடங்கள் கழித்து ஒப்புக்கொள்வார்கள்" என்று நம் நாட்டு மக்களின் மனப் பாங்கினை அன்றே தீர்க்கதரிசி போல சொல்லிவைத்தார்.

வறுமையிலும் வள்ளல்...!

பல சமயங்களில் போதிய பண வசதி இன்றி பாதிக்கப்பட்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தவர் பாரதியார்.
அந்த நிலையிலும் கருணை உள்ளத்தோடு வாழ்ந்தவர் தான் பாரதியார். பல நாட்களை பட்டினியால் கழித்தவர். யாராவது அவரின் மேல் கருணை கொண்டு பணம் உதவி செய்தாலும் அன்றே அந்த பணம் முழுதும் செலவழித்து விடுவார். கிடைத்த பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர். வறுமை என்றுமே அவரைச் சிதைத்ததில்லை.தன் சிந்தனைப் பெட்டகத்தை கவிதைகள் கொண்டு நிரப்பி நிறைவோடு மகிழ்ந்தவர்.

அவரது இல்லத்திற்கு வந்து கையேந்தி பிச்சை கேட்ட ஒரு வயதானவருக்கு தனது கையில் பணம் ஏதும் இல்லாத நிலையில் அவரை வெறும் கையேடு அனுப்ப மனமின்றி தான் உடுத்தியிருந்த வேட்டியை கழட்டித் தந்து, தன் மனைவியிடம் அந்தக் கிழவன் எவ்வளவு மகிழ்ச்சியோடு போரிறான் பார் என்று தான் வெறும் கோவணத்தோடு நின்று பரவசப்பட்ட காருண்ய மனம் கொண்ட தயாபரி.

அஞ்சாதவர்...!

பாரதியாரை அறிஞர் வ.ரா. (அறிஞர் வ.ராமசாமி ஐயங்கார்) காணச் சென்று அவருடன் கலந்துரையாட விரும்பினார். பாரதியாரைப் பார்த்ததும் வ.ரா வணக்கம் தெரிவித்தார்.முதன் முதலில் அவரைப் பார்த்து பாரதியார், யார் நீங்கள்? என்று கேட்டாராம்.

வ.ரா. ஆங்கிலத்தில் தம்மைப் பற்றிக் கூறினார். ஆங்கிலப் புலமையைப் பாரதியாரிடம் காண்பிக்க வ.ரா.அவ்வாறு ஆங்கிலத்தில் பேசினாராம்.

பாரதியாரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. தனது அருகில் இருந்த நண்பர் பாலுவை அழைத்தார்.
"அடே..பாலு..! வைத்தவர் ஆங்கிலேயர் மொழியில் பேசுகிறார். அவரிடம் நீ வேண்டுமானால் பேசு..எனக்கு வேலை இல்லை" என்று உரக்க சொல்லிவிட்டு வெளியேறினாராம்.

அவரே கம்பீரம்...!

பாரதியார் தம் இலக்கிய வாழ்வில் முதன் முதலில் புனைந்து கொண்ட புனைப் பெயர் "ஷெல்லிதாசன்" என்பதாகும். முதலில் மிஸ்டர்.சி.சுப்ரமணிய பாரதி என்று தான் தம் பெயரை வெளியிட்டிருக்கிறார். பின்பு "காளிதாசன்" "சக்தி தாசன்" என்ற புனைப் பெயரிலும் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.புனைப் பெயரில்லாமல் எழுதும்போது ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி என்று குறிப்பிடுவாராம்.

மூன்றிலிருந்து முதன்மைக்கு..!

திருநெல்வேலியில் இருந்த தம்ழிச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் பாரதியார் கலந்து கொண்டு ஒரு கவிதையை எழுதி அனுப்பியிருந்தாராம்.அவருடைய கவிதையைப் படித்த நடுவர்கள் அவருக்கு மூன்றாவது பரிசைத்தான் அளித்தார்களாம். மூன்றாம் பரிசு வென்ற அந்தப் கவிதை "செந்தமிழ் நாடெனும் போதினிலே " என்னும் கவிதையாகும். இன்றும் "பொதிகை"த தொலைக் காட்சியில் முதன் முதலில் ஒலிக்கப் பெறுவது செந்தமிழ் நாடெனும் போதினிலே" தான்.

விடாமல் பதினொன்று...!

பாரதியார் பிறந்தது 11 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1882 ஆம் ஆண்டு.

பாரதி "சின்னப் பயல்" என்ற கவிதையைப் பாடி "பாரதி என்னும் பட்டப்பெயர் பெற்றது அவரது 11 ஆம் வயதில் தான்.

பாரதியார் நம்மை எல்லாம் விட்டுச் சென்றது 11 ஆம் தேதி செப்டெம்பர் மாதம் 1921 ஆம் ஆண்டு.

அமரகவியை மரணம் என்ன செய்யும்...?

இயேசு, ஷெல்லி, கீட்ஸ்,பைரன், மன்னர் அலெக்சாண்டர்,கணித மேதை ராமானுஜம், விவேகானந்தர், மார்ட்டின் லூதர் கிங்..ஆகியோர் தங்களது நாற்பது வயதைக் கடக்கும் முன்பே...காலனால் கவர்ந்திழுக்கப் பட்டவர்கள்.
"நான் அமரன், எனக்கு மரணமில்லை..என்றும் உயிர்வாழ்வேன், எப்பொழுதும் சத்தியமாவேன், எப்பொழுதும் களிப்புடன் இருப்பேன், நான் கடவுள். ஆதலால் "சாகமாட்டேன்" இத்தகைய திடமான நம்பிக்கையுடன் உறுதியாக வாழ்ந்தார்.


ஆனால் காலனால் 40 வயதை அடையும் முன்னே மரணம் அவரைத் தழுவிற்று. நூறு வருடங்கள் வாழ்ந்து சாதிக்க வேண்டியதை முன்பே அறிந்தோ என்னவோ....பகவத் கீதைக்கு உரை வரைக்கும் எழுதி வைத்து உயிரை உகுத்துவிட்டார்....ஆனாலும் என்ன...இன்னும் வீட்டுக்கு வீடு, இதயத்திற்கு இதயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அந்த அமரகவி பாரதியார்.


George Michael - Careless Whisper (never gonna dance again) with Lyrics


திங்கள், 10 செப்டம்பர், 2012

அடித்தாரைச் சொல்லி அழு!

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

தூங்காத குழந்தை:

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!