ஞாயிறு, 30 ஜூன், 2013

வெள்ளைத் தாள்...!



வெள்ளைத் தாளில் 
புள்ளி வைத்தான் 
சூரியனாய்...!

எழுந்தது ஒளி ..!
வெள்ளையில் 
முளைத்தது பச்சை..
ஆதாரமாய் பூமியைப் 
பற்றியது ஆணிவேர்கள்...!


ஓருயிர் ஈருயிர் என 
ஒவ்வொன்றாய் 
இடத்தை அடைத்துக் 
கொண்டு ஊர்ந்தது 
பறந்தது...தாவியது...
அனைத்தும் அதனதன் 
எல்லைக் கோட்டுக்குள்...!

நடந்தது....மட்டும்...
பஞ்ச பூதங்கள் 
ஆண்ட சராசரம் 
என்றெல்லாம் 
பெயர் பிரித்தது..! 
நடந்தவன்...பிறந்தான்..
ஆறறிவு மனிதன்...
என்று பட்டம் 
சூட்டிக் கொண்டான்...!

இயற்கை....எதிர்பார்த்தது.
எளிதானது அவனுக்கு..
கைவல்யமானது...
அவனுக்கு...
அழித்தான்....வாழ்ந்தான்...
எட்டுத் திசையில் 
ஏடாகூடமாக 
அறிவைத் திணித்தான்..

ஆணவத்தால் 
இயற்கை உலகை 
மாற்றம் செய்தான்...
எதற்கும் மாற்று...!
இறைவன் ஏமாந்தான்...
இயற்கையும் ஏமாந்தது...
ஆக்ரோஷம் கொண்டது....
எதிர்த்தது....
ஒன்று கூடியது...
மெளனமாக மனிதனை 
ஓரிரவில் அவன் உறங்கும்போது 
புரட்டிப் போட்டது....
புவியை ஆவியாக்கியது...!
மீண்டும் வெள்ளைத் தாள்...!

அன்பின் சாஸ்வதங்கள்...!


என்று  நீ என் 
இதயத்துள் நுழைந்தாய் ?
சரியாக நினைவில் இல்லை 
நான் உறங்கிய போது கனவிலா?

மழையில் நான் 
நனைந்து வந்த 
தருணத்தில் வானவில்லாய்
வந்தனையா?

குழந்தை ஒன்று 
என்னோடு ஒட்டிக் கொண்டு 
சிரித்ததே... அந்தச் சிரிப்பின் 
வழி நுழைந்தாயோ?

ஏழு ஜென்மம் முன்பு 
ஏற்கனவே இடம் பிடித்தாயோ?

எனக்கும் உனக்கும்
இடையே இருக்கும் 
இடைவெளிதான் 
நம் நெருக்கம்..!

என் கண்களில் 
படாத உன் முகம் 
கண்ணாடி பிம்பமாய் 
என் இதயத்துள் எப்படி?

உன் கையெழுத்துக்குக் கூட
மூச்சு விடத் தெரியுமா?
உன் மடலைக் காதில் வைத்தால் 
என் காது சூடாகுது 

காலையில் நிமிர்ந்த சூரியன் 
அலைந்து விட்டு கடலுக்குள் 
கால் நனைக்கும்  வரையில்.....
உன் நினைவுகளோடு 
என் வாழ்நாளில் ஒருநாள் 
அந்தி சாய்ந்து சந்திரன் சிரிக்க 
உன் கனவோடு 
என் வாழ்நாளின் ஒரு இரவு...!

பம்பரமாய் சுற்றும் 
காலங்கள் - நமக்கு ஏனோ 
காலமும் தூரமுமாக....
வாரமும் மாதமுமாக..!
காணாமல் கடப்பதால் 
காதல் சாவத்தில்லை...!
தவிக்கும் மனதுக்குச் 
சொல்லித் தருகிறேன் 
காதல் சூத்திரங்கள்...
அன்பின் சாஸ்வதங்கள்...!

இதயம் நிறைந்து வழியும் 
நினைவுகள் யாவும் 
வீணாகாமல் கவிதைப் 
பாத்திரத்தில் பிடித்து வைக்கிறேன்....!
என்றாவது மீண்டும் உன்னைக் 
காணும் தருணத்தில் 
உன் கையில் நிறைத்து மகிழலாம்...

பாடும் போது ராகம் கேட்கிறாய்....
சொல்லாது போனால் என்னை ஏய்க்கிறாய் 
புதிதாகப் பூத்த பூவிற்கு நான் 
அறியாத வாசம் நீ...!
உயிர்ப் பறவை சிறகை விரிக்கத் 
துணைப் பறவை நீ....!

நீ நுழைந்த நேரம் 
நினைவோடு இல்லை..
நீ நுழைந்ததும் என்னுயிர் 
என்னோடு இல்லை..!
மீண்டும் பூமி 
பின்னால் சுழலாதா?
நம்மைத் தடுக்கும் திரைகள் 
தன்னால் விலகாதா ?