கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

கல்பனா என்கின்ற காமதேனு…!


தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஜனவரி 2015

கல்பனா என்கின்ற காமதேனு…!

ஜெயஸ்ரீ ஷங்கர்

kalpana- idea star singer winner-1ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்.
“இசையால் வசமாக இதயமெது..?” இந்தப் பிரபலமான பாடலை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலில் மயக்கும் பாடல் அது . இன்னிசையே, இறைவன் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம், நமது இதயம் இசைக்கு இசைவது தான் நமக்கு இறைவன் அளித்த பேரருள். மன ரணங்களுக்கும், மனத்தின் சுகங்களுக்கும் ஆண்டவன் அளித்த கொடை இசை. அந்த இசையை ரசித்து மகிழாதவர் எவரும் மனிதனாக வாழும் தகுதி அற்றவர் எனலாம். மனத்துக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போதே தமை மறந்து பரவசமாகி ஆனந்தக் கண்ணீரை அர்ப்பணிக்கும் இசைப்பிரியர்களும் இவ்வுலகில் சகஜமாக இருப்பதும் உறுதி. இசை எந்த மொழியானாலும் மனத்தைக் கவரும் காந்தம் தான். கர்நாடக சங்கீதமாகட்டும், திரையிசைப் பாடலாகட்டும், தெய்வீகத் துதிகள் ஆகட்டும் ராகம் பிரதானமாகும் போது அதுவே ஆன்மாவிற்கு பிரசாதமாகின்றது. உலகம் முழுவதும் பல பாடகர்கள் அவதானித்து இசைக்காகவே தங்களது ஜீவிதத்தையும் சமர்ப்பணம் செய்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அந்த வகையில், பல முன்னணி பாடகர்கள் இருந்த போதிலும், தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்த கல்பனா அவர்கள் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாக கால்பதித்து, திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராக திரை மறைவில் பணிபுரிந்து, பல பிரபல திரையிசைக் குழுக்களில் மேடைப் பாடகியாகி தனக்குதொழில் “பாடுவது” என்று இறைவன் கொடுத்த அந்த உன்னதப் பரிசை உயரிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் அத்தனை முயற்சியையும் தொடந்து செய்து வருபவர். எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் சரி, இசை மொழிகளைக் கடந்து செல்லும் சக்தி கொண்டது என்பதற்கேற்ப அவர் பாடும் பாடல் ஒவ்வொன்றும் உயிர்ப்போடு இருகின்றது. இவருக்குத் தெரியாத பாடலே இருந்திட முடியாதோ என்று நினைக்கும் வண்ணம் அத்தனை பாடல்களையும் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.எந்தப் பாடலைப் பாடச் சொன்னாலும் அதை அப்படியே பாடி அசத்துவது தான் அவரது தனித்திறமை.திரையில் பல முன்னணி பாடகியர் பாடிய பாடல்களை அந்தந்த பாடகர் பாடும் விதத்தில் பாடுவதில் கல்பனாவுக்கு நிகர் அவரே. கேட்டதும் அப்படிப் பாடல்களைச் சொரிந்து தருபவர் கல்பனா என்ற காமதேனு தான்.
அவர் ஒருவருக்குள் அத்தனை பாடக, பாடகிகளும் அடக்குமோ என்று வியக்கும் வண்ணம் குரல் தனை மாற்றி அவர் பாடும்போது இசையுலகுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாகவே இவர் திகழ்கின்றார். கர்நாடக சங்கீதத்தில் வரும் மிகக் கடினமான ஆலாபனைகள் கூட மலைமீதிருந்து நழுவி விழும் அருவி போல பொங்கிப் புரண்டு சங்கதிகள் விழ, கேட்பவர்களின் காதுகள் கூட பாடுபவர் யார் எனக் காணக் கண்கள் வேண்டும் என்று வேண்டும். இன்னும் இப்பேர்பட்ட ஒரு இசைக்கலைஞரான கல்பனாவுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது.’ மாதவம் செய்து பிறந்திட்ட மங்கையாய்’ கண்முன்னே நமக்குக் காணொளியில் காட்சி தரும் கல்பனாவின் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, ஒருமுனைப்பு ஆகியவை இவரது உடன்பிறப்புகளோ என்ற எண்ணம் இவரை சந்திக்கும் ஒவ்வொருவரின் மனத்திலும் நிச்சயம் எழும். பெரிய பிரபலங்கள், இசை வல்லுனர்கள், பிரபலப் பாடகர்கள் நிரம்பிய அரங்கிலும், திறமைகள் தனக்குள் ஓங்கி இருந்தாலும் மேடையில் அவரது பணிவும், யதார்த்தமாக அவர் பாடல்கள் பாடும் நேர்த்தியும் பிரமிக்கத் தான் வைக்கிறது.கேரளாவில் நடந்த ஏசியாநெட் ஐடியா சீசன் 5 போட்டியில் 2010-இல் கலந்து கொண்டு முதல் பரிசாக 1 கோடி வென்று தனது திறமையால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். தமிழ்த் திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருந்தாலும் அவருக்கு இன்னும் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தோன்றுகிறது. குறிப்பாக ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’ என்னும் ‘மாயாவி’ படத்தின் பாடலைக் கேட்ட யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திட முடியாது. சங்கீத வரங்கள் பெற்று வந்த கல்பனாவின் உடலுக்குள் குருதிக்கு பதிலாக சுருதி தான் ஓடுகிறதோ என்று நம்பும் அளவுக்கு இசையோடு இணைந்த உயிராகவே உலா வருகிறார் என்றாலும் தகும். பிரபல இசைக் குழுவினர் சென்னையில் லக்ஷமன் ஸ்ருதி இவருக்குத் தகுந்த வாய்ப்பு அளிப்பதால் அவர்கள் உலகம் முழுதும் சென்று நடத்தப்படும் பல்வேறு இசை நிகழ்சிகளினால் மட்டுமே அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்திருக்க முடியும், மற்றபடி அசாதாரணத் திறமைகள் கொண்ட இவருக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் கௌரவப் படுத்தி இருக்க வேண்டும் என்பதே அவரது விசிறிகளின் எண்ணம். முன்னணி இசையமைப்பாளர்கள் இவருக்குத் திரைப்படங்களில் பாட அதிக அளவில் வாய்ப்புகள் தந்து கல்பனாவின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே என்னைப்போன்ற இசைப்பிரியர்களின் அவா. எந்தப் பாடலானாலும்,பக்தியோடு அவர் பாடத் துவங்கும் போது கேட்பவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் நேர்த்தி அவரை ஒரு பரிபூரண பாடகியாக் காண்பிக்கும். இந்தப் பிரபஞ்சத்திலேயே இவரைப் போன்று இசைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்து அதை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் நிருபணம் செய்யும் பாடகி வேறு எவரும் இல்லை என்றே கூறலாம். இருந்தும் இவரைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்ற வாரம் வரையில் எனக்கும் இவரைப் பற்றி ஒன்றும் அதிகம் தெரியாது. காணொளியில் ஒரு பாடல் கேட்க முற்படும்போது எதிர்பாராது கிடைத்த காணொளி அறிமுகம் தான், அவரை வாழ்த்தி இந்தக் கட்டுரையும் எழுத வைத்து என்னைப் போலிருக்கும் இன்னும் சிலருக்கு என்மூலம் கல்பனாவை அறிமுகப் படுத்தும் வாய்ப்பாக அமைந்தது. அவரது ஒரு மேடை நிகழ்ச்சியின் காணொளி ஒன்றை இணைத்து அத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்..பாடலை இறுதி வரையில் கேட்ட பின்பு , இதை எழுதத் தூண்டிய உணர்வை நீங்களும் உணருங்களேன்..
https://www.facebook.com/video.php?v=651243908316055
https://www.facebook.com/video.php?v=651243908316055
http://www.yuvog.com/play/Entertainment/Kalpana_Raghavendra_Bhavayami

Series Navigationபெருந்திணை- இலக்கண வளர்ச்சிதொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி
Print Friendly

One Comment for “கல்பனா என்கின்ற காமதேனு…!”

  • Chitra Sivakumar says: It was really a wonderful music presentation. Thanks for sharing. I have already shared with many others.

Leave a Comment






இந்த பகுதியில் மேலும்

ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம் புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு [Read More]
மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
மிஷ்கினின் பிசாசு – விமர்சனம் படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற [Read More]
திரையுலகின் அபூர்வராகம்
திரையுலகின் அபூர்வராகம்   1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ [Read More]
என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?   திரைத் துறையில் வித்தியாசமான முறையில் [Read More]
யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)   எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் [Read More]
காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி Series Navigationஅழியாச் சித்திரங்கள்சுத்த ஜாதகங்கள்5 [Read More]
மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம் -     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் [Read More]

இதழில்

வெள்ளி, 23 மே, 2014

என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

வாணியைச் சரண்புகுந்தேன்
-ஜெயஸ்ரீ ஷங்கர்kannadasan - jayasri

முன்னுரை
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.
எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.
அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!
கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.
”கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக்
 கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”
என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?
ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.
எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.
’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!
ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!
ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!
“நான் படைப்பதனால் என் பேர் இறைவன்“
என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.
அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.
கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.
சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.
கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.
காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!
காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!
’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’
இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.
உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!
அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,
“உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன்,
தெய்வங்கள்
 கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”
இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.
“சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
சொல்லாத
 சொல்லுக்கு விலையேதும் இல்லை“
அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.
கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.
“அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
  இதைத் தான் கேட்கிறேன்“
இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.
இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.
அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.
அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.
குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.
அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.
பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.
மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.
கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.
ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.
முடிவுரை
அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

வியாழன், 6 மார்ச், 2014

சுதந்திர மகளிர் தினம்..!


மகளிர் தினம் ...! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது.அறிவுபூர்வமாகபபார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை.இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம்.தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்? வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் தான் என்ன? மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது.என்று சொல்லிக்கொள்கிறோம். இத்தனை வருடங்களாகியும் மாறாத சூழல் இனி வரும் காலங்களில் மாறிவிடுமா?

சர்வதேச அளவில் கூட இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் பூரண சுதந்திரம் மகளிருக்கு கிடைத்து விட்டதா என்பது கேள்விக் குறி தான். இது போன்ற எண்ணங்களை நாம் பரவலாக கேட்க முடிகிறது.

செய்தித் தாளைத் திறந்தால் கூடவே நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , 2 பெண்கள் கொலை, 5 பெண்கள் வன்முறையால் மானபங்கம் என்று பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நீண்டு கொண்டே போகிறது. நாட்டில், ரோட்டில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், மருத்துவமனையில் என்று அதிகப்படியான பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த மிகவும் சிரமப் படவேண்டியிருப்பது தான் நிதர்சன உண்மை. நாளுக்கு நாள் பெரும்பாலான பெண்கள் மனதாலும், உடலாலும் கஷ்டப் படுகிறார்கள். இன்றைய பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்பது தான் கண்கூடு. இதற்காக இந்த மகளிர் தினம் என்ன செய்யப் போகிறது. அது என்ன ஒரு அமைப்பா..? ஒரு திருநாள். நித்தம் திருவிழா கொண்டாட நினைக்கும் ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தும். சமுதாயத்தில் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட எத்தனையோ பெண்கள் எதுவும் செய்ய இயலாமல் சமூக விலங்குகளால் கைகள், கால்கள், கழுத்து , வாய் என்று பூட்டப்பட்டு இறுகிய நிலையில் இருக்கிறார்களே....அவர்கள் மகளிர் இல்லையா?
அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, அவர்கள் இந்த மாய மான் தோற்றத்தில் மயங்கி 'மகளிர் கொடியை உயர்த்திப் பிடித்தால் தெரியும் 'அவளை அடித்து உரலில் கட்டிப் போட்டு' விடுவார்கள்.

சமத்துவம் ஒங்க வேண்டும். சமுதாயச் சீர்கேடுகள் அழிக்கப் பட வேண்டும். ஆண்களைப் பெண்கள் வாழ விட வேண்டும். பெண்களை ஆண்கள் வாழ விட வேண்டும். இதற்கெல்லாம் சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படல் வேண்டும். திருமணச் சந்தையில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் , பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் ஒரே சமமான நிலையில் பார்க்கப் பட வேண்டும். இது ஒரு சில இடங்களில் மாறி இருந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளிலும், சின்ன டவுன், மற்றும் பல ஊர்களிலும் பழைய சம்பிரதாயப் படி தான் உயர்வு, தாழ்வு என்னும் கண்ணோட்டத்தோடு நடத்தப் படுவது தவிர்க்கப் பட வேண்டும்.இதற்கும் நாட்டில் சட்டம் வர வேண்டும்.
கண்டிப்பாக வரதட்ஷணை முற்றிலுமாக அழிக்கப் பட வேண்டும்.


பெண்கள் தங்கத்தைத் தவிர்த்திடல் வேண்டும். பல அபாயங்களில் இருந்து அது அவர்களைக் காப்பாற்றும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்.


சமுதாயத்தில் உயர் தட்டு பெண்டிருக்கு மட்டுமே இந்த மகளிர் தினம் ரோஜாப்பூவாக இருக்கும். மீதமுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களும் கீழ்தட்டு பெண்களும் அதனருகில் இருக்கும் முட்களாகத் தான் இந்த தினத்தை விமரிசிக்கிறார்கள். மாற வேண்டும். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்றவர், தன் பாசமுள்ள மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அவள் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேரும் வரையில் வயிற்றில் புளி கரைத்து கொண்டு தான் உட்கார்ந்திருப்பார்.வெளியில் சென்ற மனைவியோ, மகளோ, பேத்தியோ, வீடு வந்து சேரும் வரை ரோட்டில் அவளுக்கு பாதுகாப்பு என்பது குறைவு என்ற நினைவு அவருள் ஓடிக் கொண்டு தானே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை தான் தொடர்கிறது.

சமத்துவம் பேசுவதெல்லாம் இங்கே சும்மா.பெண்களின் அதிகப்படியான சுதந்திரத்தை நிர்ணயம் செய்வது அவள் சம்பாதிக்கும் அதிகமான பணம் மட்டும் தான் காரணம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை தான் என்றும் பெண்டிரின் நிலை. தான் பிறந்த வீடும் தனக்கு சொந்தமில்லை. தான் புகுந்த வீடும் அவளுக்கு சொந்தமில்லை...என்று எப்போதும் மனதுக்குள் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அவளது வாழ்வு ஆரம்பிக்கப் படுகிறது.

எத்தனையோ பேர்கள் உடனிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெண்ணுக்கு அளிக்கப்படும் கொடுமையிலும் கொடுமையான 'சதி'யை நீக்கினார்கள். பெண் கல்விக்கு கைகொடுத்தனர். முன்னேற்றப் பாதை வகுத்து காண்பித்தனர். பெண்களுக்கு வழி விட்ட நல்லவர் அனைவருக்கும் இந்த நாளில் நன்றி சொல்லலாம். இன்னும் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது .

மகளிர் சுதந்திரம் எனும் பெயரில் பெண்கள் செய்யும் முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய பெரிய நகரங்களில் அவர்களின் அதி மிகுதியான சுதந்திரப் போக்கால் ஏற்படும் குடும்ப இழப்புகள் நீதிமன்றங்களில் கோப்புக் குவியல்கள் சொல்லும்.

இந்த உலகில் இருப்பது இரண்டு வர்க்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்று வாழும் போது 'அன்பாக' அச்சாணி இருந்தால் போதும்.
அந்த பரஸ்பர நம்பிக்கையை ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.இதை உணர்ந்து உணரச் செய்யுங்கள்.

மகளிர் தினத்தில் முக்கியமாக இன்றைய , இளைஞர் சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதை மாறிப் போகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியல் நியதிகளை கற்றுத் தருவது நமது கடமையும் பொறுப்பும்.நாளைய இந்தியா சிறப்புற இன்றே இவர்களைக் காக்க வேண்டும்.விஞ்ஞானி அப்துல் கலாம் அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்வித்து நல்ல விஷயங்களை மூளைச் சலவை செய்த வண்ணம் இருந்தாலும் தவறில்லை. ஆரோக்கியமான இந்தியா இளைய சமுதாயத்தினரிடமிருந்து உருவாக இன்றைய மகளிர் ஒவ்வொருவரும் ஆவன செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து மதுவும், புகையும் அடியோடு ஒழிக்க மகளிர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் ஒன்று திரள வேண்டும். அது ஒன்று இல்லாவிட்டால் போதும், எத்தனையோ குடும்பங்கள் புத்துணர்வு பெற்று சுவாசிக்கும்.

நாளைய இந்தியா, கிராமப் பகுதிகளில் கூட பெண்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.
சொல்வது போல சமூகத்தில் பல வகையான மனிதர்களை நான்கு பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு இருப்பவர்.
தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் இருந்தால் போதும் என்று மகிழ்வில் திளைப்பவர்
அடுத்தவர் மட்டும் மகிழ்வோடு இருந்தால் போதும் என்றும் நினைப்பவர்
தானும் சரி, அடுத்தவரும் சரி....மகிழ்வாக இருப்பதையே பிடிக்காதவர். இந்த பிரச்சனை பார்ட்டி.

இதற்குப் பின்னால் கதை கூட உண்டு. இதில் நாலாவது வகை முழுதும் முதல் வகையாக மாறி "மகளிர் தினம்" "மானுட தினமாக" மாறி விடும். அதன் பின் யாருக்கும் 'எந்தத் தினம்மும்" தேவையில்லை. தினம் தினம் 'திருவிழா' தானே.

'அக்ஷய திருதியை' எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.

மகளிர் தினமும் அப்படி உள்ளே நுழைந்தது தான்.அப்படி நுழைந்த இந்த நாள் ஒட்டுமொத்த மகளிருக்கும் என்றாவது
சுதந்திர மனப்பாங்கைப் பரவலாகத் தந்தால் அன்று தான் 'மகளிர் தினம்'.அதுவரை அவளது முகத்திரை தான் அவளுக்கு முத்திரை.




நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1


நன்றி: வல்லமை.

தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
 சிதம்பரம்.
எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :
குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,
சொந்த ஊர் : வத்தலக்குண்டு .
பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.
எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.
பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.
ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.
விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.
சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
1. அரியும் சிவனும் ஒண்ணு …!
குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
வெளியான வருடம்:  1968.
முதல் மலராக நறுமணம் வீசும் இந்த “அரியும்  சிவனும் ஒண்ணு ” என்கிற இந்த மலரை கையில் எடுக்கிறேன்.
கதை கிட்டத்தட்ட 45 வருடங்கள் முன்பு மலர்ந்து இன்னும் சிறுகதை உலகில் தாழம்பூவைப் போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
மலரின் ஐந்து இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக ஐந்து இதழ்களாக  சேர்ந்து  மலரின் மணத்தையும் எழிலையும் தென்றலோடு கலந்து பரப்புகிறது.
ஆயிரம் சிக்கலைத் தண்ணீருக்கடியில் வைத்துக் கொண்டு தடாகத்தின் மேலே சிரிக்கும் தாமரையாக காதல் கலையுடன் கொள்ளை அழகு தான்….! இருந்தாலும், அன்பை மட்டும் அச்சாணியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஆன்மாவுக்குள் எழும் போராட்டங்களை, ஒரு குடும்பத்திற்குள் நிகழும் சம்பவங்களை ஒவ்வொரு  இதயத்தின் எண்ணங்களின் வலிமையை, வழியை, வலியைத்  திறம்படக் குறுநாவலாக  எழுதி அதற்கு அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப தீர்வுகளைத் தந்து சிறப்பான, சுவையான  கதைகளைத்  தருபவர் எழுத்தாளக் கதையரசி ஜோதிர்லதா கிரிஜா.
வருடங்கள் பல கடந்தாலும், அன்றும் இன்றும் என்றும் “காதல்” என்ற உணர்வு வீட்டுக்குள் நுழைந்து விட்டால் காதல் வயப்பட்டவருக்குக் “கதவைச் சாத்தடி” என்பது தான்  வாய்ப்பாடு, நிலைப்பாடு, எதிர்ப்பாடு ! அவரைத்  தவிர ஏனையோரின் மன நிலை எப்படி இக்கட்டுக்குள் தள்ளப்படும். அதில் தியாகம் எப்படி பெரும் பங்கை தனக்கென எடுத்துக் கொள்ளும்.. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத ஒருவர் என நாம் நினைத்திருப்பவர் கூட தன்னைத் தியாகம் செய்து அந்தக் காதலை வாழ வைக்க தவிப்பர்.
இந்தக் கதையில் ஐந்து  இதழ்களாக  மீனா, அவளது அப்பா சுப்பராமன், அம்மா அலமேலு , மீனாவின் காதலனாக ராகவன், அந்த வீட்டில் சமையல் செய்து வரும் சொர்ணம்.  மகரந்தமாகக் ‘காதல்’.
கதையின் துன்பியல் கரு :
ஒரு ஐயர் வீட்டு படித்த பெண், ஐயங்கார் வீட்டுப் பையனைக் காதலித்து அவனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளது படித்த பண்டிதரான தந்தை அதை எதிர்க்கிறார். தாய் தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமலும், மகள் ஆசையை நிறைவேற்ற முடியாமலும் தவிக்கிறாள். ஆனால் அந்த வீட்டு சமையல்காரர் அவர்கள் போடும் திட்டத்தைத் தடுத்து எடுத்துச் சொன்னாலும் இறுதியில் பாசத்துக்கும் , நியாயத்துக்கும் கட்டுப்படுகிறார்   .பெண்ணின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவளுக்கும் அவளது காதலனுக்கும் இடையே கடிதத் தூதாகச் சென்று அவர்களது கல்யாணத் திட்டத்தை செயலாக்குகிறார்.
அவர்களின் விருப்பப்படி பெண்ணை அவளது காதலனின் தங்கை  வீட்டுக்கு பழனிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளது காதலன் மட்டும் தான் அதே ஊரில் இருந்து கொண்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்ப வைப்பதற்காக அங்கேயே இருக்கிறான்…..ஒரு மாதம் பெற்றவர்களை தவிக்க வைத்தால் ஒருவேளை இந்தக் கல்யாணத்திற்கு அவர்கள் சம்மதிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் போடும் நாடகமாக இவர்கள் போட்ட திட்டத்துக்கு துணை போக  அவர்களுக்கு உதவுகிறார் சமையல்காரர்.
பிடித்த ஒருவனோட வாழ்வதைத் தடுக்கும் பெற்றோர்கள் தாம்     குறிப்பிடுபவரைத் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு பதிலாக கிணற்றில் விழுவேன் என்று சொல்லும் தான் வளர்த்த மகளின் மனசைப் புரிந்து கொண்டு அவர்கள் திட்டப் படி பெற்றவர்களுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்து பெண் விட்டு வீட்டை விட்டு வெளியேற உதவி செய்கிறார் சமையல்காரர்.
தான் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் ஒருவேளை அப்பாவின் மனசு மாறலாம் என்று மகள் போடும் திட்டத்திற்கு சொர்ணம் (சமையல் காரர் ) கூட இருந்து உதவி செய்தாலும்..இத்தனை கால நம்பிக்கையை முறித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே…தான் செய்தது ..நம்பிக்கை துரோகம் அல்லவா?  என்று தன் மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத அவர்  அந்த குற்ற உணர்வில் நடந்த அனைத்து உண்மைகளையும் எழுதி வைத்து விட்டு , வீட்டு எஜமானிக்கு எந்த பாதிப்பும் வராமல் தன வயிற்று வலியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தனியாக போலீசுக்கும் இன்னொரு  கடிதம் எழுதி வைத்து விடுகிறார்.  தனது இறுதி ஆசையாக, வேண்டு கோளாக, “பெண்ணுக்கு அவள்  காதலித்தவனையே மணம் முடித்து வையுங்கள் ‘ என்று கேட்டுக் கொள்கிறார்.  சமையல்காரர் தற்கொலை செய்து கொண்டதை கடிதம் வாயிலாகக் காட்டி முடிக்கப் படுகிறது கதை.
கதையின் எழில் நடை:
கொஞ்சம் கூட தொய்வில்லாத ராஜ நடை… ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை பத்திரமாக கையாண்டுள்ள விதம் பாராட்டுதலுக்கு உரியது. உணர்வுகளின் கொந்தளிப்பும் அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி படித்துவிட்டு காலேஜூக்குப் போகும் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் “எங்கே தன்  பெண் பெற்றோரை மீறிப் போய்விடுவாளோ ‘ என்ற பயம் உள்ளுக்குள் ஆரம்பித்ததை உணர்த்திய விதம்… இன்றைய  பெற்றோர்களின் மனநிலை…அதையும் தாண்டிய விபரீத பயங்களில் ‘வெளியில் படிக்கப் போன பெண் ‘பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் கவலைப்படும் இன்றைய காலக் கட்டம் அன்று இல்லை..என்பதைக் கதை நன்கு உணர்த்துகிறது.
மலரைப் பன்னீரால் அலசும்போது :
“மீனா என்ன பண்ணிண்டு  இருக்கா?” என்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது கதை.  கேட்கும் போதே ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் கதாசிரியர்.
“அழுது அழுது முகமெல்லாம் கோவைப் பழமாக சிவந்து கெடக்கு”  சொல்லும்போது அந்த வீட்டின் பிரச்சனையே  அவளால் தான் என்று முதல் அட்சதை விழுவதில் புரிகிறது.
அதைப் பொருட்படுத்தாக தந்தை….” அந்தப்  பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ ” – இது அவரது எதிர்ப்பை காண்பிக்கிறது.
“அப்போ அந்த ஐயங்கார் பையனைத் தான் பண்ணிக்குவாளாக்கும் ” – இதுவும் அப்பா தான்.
இப்படி ஒரே பக்கத்திலேயே வந்து விழுந்த நாலு வரியில் அந்தக் கதையைப் பற்றி நம்மால் முழுதும் ஊகிக்க முடிகிறது. ஒரு அய்யர் வீட்டுப் பெண் அய்யங்கார் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்வது கூட அந்த காலத்தில் சிக்கல் தரும் விஷயமாகும் என்பதை தெரியப் படுத்துகிறது இந்தக் கதை.
அதற்கேற்றவாறு கதையின் தலைப்பும் “அரியும் சிவனும் ஒண்ணு …!”  என்று அழுத்தமாக சாம்பலை திருமண்ணோடு  கலந்தது போல தலைப்பைக் கதையோடு பிணைத்து வைத்த விதம் பெருமை.
கதம்ப மாலை :
தந்தை சுப்பராமன் :
சமஸ்கிருதம் படித்தவர் “கௌரி சரித்திரம்”  படித்து குழந்தைகளுக்கு போதிப்பவர், “அரியும் சிவனும் ஒண்ணு : அதையறியாதவன் வாயிலே மண்ணு’ன்னு ” ஊருக்குச் சொல்லிக் கொடுத்தாலும் தன்  வீடு என்று வரும்போது சர்வ ஜாக்கிரதையாக அரியும் சிவனும் வேறடா..எல்லாம் அறிந்தவன் நானடா ” .என்றும்  படிச்சவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற மொழிக்கு ஏற்ப சித்தரிக்கப் பட்ட அப்பா….ஆணாதிக்கமும், அடக்கு முறையும் ,சமயத்தில் மனைவியை குத்திப் பேசுபவராக, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவராக இருந்தாலும் அப்படிப் பட்டவருக்கும் இதயத்தில் ஈரம் இறுதியாய் சுரக்கிறது என்பதைக் காட்டிய விதம் கதைக்கு அழகு செய்கிறது.
அதே சமயம்…ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பைக் கயிறு மேல் நடப்பதைப் போல உணர வைத்திருக்கும் விதம். கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டாலும்….”ச்சே.ச்சே…விளையாட்டுக்கு ஏதோ சொன்னா. அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே ” என்று மனைவியை சமாதானப் படுத்தும் மனசை மிகவும் கண்ணியமாகச் செதுக்கி இருக்கிறார் ஆசிரியர்  .கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அப்பா சுப்பராமன்.
தாய் அலமேலு :
அந்தக் காலத்தில் வெறும் அஞ்சாவது வரை படித்தவள் .இருந்தாலும் சமயோஜித புத்தி நிறைந்த, கணவன் சொல்லே  மந்திரம் என்று பணிவோடு சித்தரித்த தாய்…”மனைவிக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் கணவன் வாய்த்திருந்தாலும் அவரை அனுசரித்துப் போகும் பெண்மை கொண்ட தாய்மையை சித்தரித்த விதம் அழகு. ஒரு பக்கம் கட்டியவர்…இன்னொரு பக்கம் தான்  பெற்றவள் என்று பாசத்தின் நடுவில் தத்தளிக்கும் விதம் பெண்மையைப்  பெருமைப் படுத்துகிறது. கதையில் வாயில்லாப் பூச்சியாக வளைய வரும் அம்மா அலமேலு.
அந்த காலத்து ஆணாதிக்கம் நிறைந்த வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை’வெயிட்லெஸ்ஸாக’ காலிப் பெருங்காய டப்பாக்களாக
அடுப்படியில் வெறும் தராசுத் தட்டுக்களாக காற்றிலாடும்  நிலையையும் கூடவே நம்மால்  உணரவும் முடிகிறது.
“ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப் படுவாள்னு நினைக்காதீங்கோ…” தன் மகளின் உணர்வுகளை மதித்த தாயாக சித்தரிக்கப்  பட்டிருக்கிறார் .
மகளாக மீனா:
காலேஜ் படிக்கும் இளங்குமரி . துணிச்சலும், பிடிவாதமும் கொண்டவள்… காதலில் விழுந்ததால் வைராக்கியமும் கூடவே எழுந்து…
நியாய அநியாயம் பேசும் மன உறுதி அவள் “கௌரி சரித்திரம்” புத்தகத்தைக் கிழித்து தன அப்பாவின் கருத்தை எதிர்க்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. சமையல்காரர் மீது பரிவும், பாசமும், அம்மா மீதும், அப்பா மீதும்…தன்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே  என்ற வருத்தமும் நிறைந்து…இவர்களின் பிடிவாதத்தால் தனது காதலை விடத் துணியாத மனோபலமும் கொண்டவளாக மீனா. எப்படியாவது தனது பெற்றோர்களின் சம்மதம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில், தன காதலன் ராகவன் மீது கொண்ட நம்பிக்கையில் வீட்டை விட்டு ஓடிப் போகவும் துணிந்த  துணிச்சல்காரியாக மீனா காட்டப் படுகிறாள்..
“அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே? அவன் மட்டும்என்னைக் கைவிட மாட்டான்னு என்ன நிச்சயம்? அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேனா, தானே தேடிண்ட ஒருத்தனோட கிளம்பிப் போயிடற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடு வாளா?”…மீனாவின் அனல் பறக்கும் வார்த்தைகள், தான் செய்யத் துணிந்த காரியத்திற்கு நியாயம் சொல்வது போலிருக்கிறது.
காதலனாக ராகவன்:
மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரமாக ராகவன்… .”படிப்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை” என்றும்… தான் நேசிக்கும் பெண்ணே  தனக்கு  துணைவியாக வர வேண்டும் என்ற உந்துதலில்  “ஒரு பெண்ணை வற்புறுத்தி இன்னொருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கிற வழக்கம் என்னிக்குத் தான் நிக்குமோ, தெரியல்லே..ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு ” என்று தன்  ஆற்றாமையை சொல்லும் இடத்திலும் , தனது கண்ணியத்தை ஊர்ஜிதம் செய்ய “அதோ , என் மேஜை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தை சாட்சியா வெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கிறேன்..மீனாவுக்கு சிறு தீங்கும் நேராது ” என்று சொர்ணத்திடம் சொல்லும் போது  நேசத்தின் நிஜம் உணர முடிகிறது. கடிதம் விடு தூது , தூக்க மாத்திரை திட்டம்…எல்லாம் நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்கிறார் ராகவன்.
“ஒரு பொண்ணு மேலே ஒரு ஆணுக்கு ஏற்படற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்…நீ பிரும்மச்சாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டீர்.”  என்று சொர்ணத்தின் மனசுக்குள் அமிழ்ந்திருக்கும் சோகத்தை சுகமாக வெளிப் படுத்தக் காரணாமாக இருந்த ராகவன் “நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யலேன்னா வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது?” என்று கொக்கி போட்டு தன பக்கம் இழுத்த விதம் அருமை. நினைத்ததை முடிப்பவனாக  ராகவன்.
சமையல்காரராக சொர்ணம் :
இவர் தான் இந்தக்  கதையைத் தாங்கும் கோபுரத் தூண் என்று அழுத்திச் சொல்லலாம். முப்பத்தி ரெண்டு வருஷமா ஒரே வீட்டில் சமையல் செய்து அந்த வீட்டில் ஒருவராகவே வளைய வரும் சொர்ணம். மீனாவைத்  தன் மகளாக பாவித்து வளர்த்து வந்த பாசம் பல இடங்களில் வெளிப் படுகிறது. நிறைய படித்திருந்தும் இவர்கள் வீட்டோடு இருக்கும் விசுவாசம், மகளது காதலை எதிர்க்கும் தந்தையைத் தானும் எடுத்துச் சொல்லி அவர் சம்மதிக்க வேண்டுமே என்ற நப்பாசையில் தான் வாங்கிக் கட்டிக் கொள்வது, எப்படியாவது அம்மா, அப்பா மனம் கோணாமல் நடந்து கொள்ள மீனா விடம்  எடுத்துச் சொல்லும் விதம், அவளது காதலன் ராகவனிடம் “இவராவது கேட்க மாட்டாரா “என்று அவர் மனதை மாற்ற ஒரு சந்தர்ப்பமா மீனா கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தூது போவது. அங்கு ராகவன் தன மனதை மாற்றி திருப்பி அனுப்பும் போது  மீனாவிடம் வாதாடுவது கதைக்குப் புத்துயிர் ஊட்டுகிறது.  சிறு கதா பாத்திரமும் செயற்கரிய செயல் செய்து கதைக்கு மெருகூட்ட முடிகிறது.
அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ‘தியாக பூமி’ படமும், அதைத் தொடர்ந்து ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன் அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பத் தான் பார்த்தேன்..” என்று குழந்தை சாரு  கோர்டில் சொன்னதும் சொர்ணம் நினைவுக்குக் கொண்டு வந்து, ‘கடவுளே..! அப்பாவும், பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது “?  என்று வியந்து காலத்தின் படிமத்தைச் சொல்கிறார்.
அதிலும் மீனாவின் அன்பு தான் வெல்கிறது. இறுதியாய், உறுதியாய் அவர்களது நல்ல வாழ்வுக்குத் தன்னால்  உதவ முடியுமோ, அவர்கள் சொன்ன படி இரவு உணவில் தூக்க மாத்திரைகளை சுப்பராமனுக்கும், அலமேலு அம்மாவுக்கும் தெரியாமல் கலந்து கொடுத்து உறங்கச் செய்து விட்டு மணப்பெண் மீனாவை ராகவன் சொன்னபடி அவரது தங்கை வீட்டுக்கு, பழனிக்கு அனுப்பி வைக்கறார்.
ஒரு விதத்தில் மீனாவின் காதலை சேர்த்து வைத்த நிம்மதி இருந்தாலும், இத்தனை காலம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலோங்கி தான் ஒரு கடிதம் எழுதி விட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொள்வது உள்ளத்தைத் தொடுகிறது..
யாரையும்  காட்டிக் கொடுக்காமல் போலீசுக்கும் வேறு மாதிரியாக ஒரு கடிதம் “தனது தற்கொலைக்கு தனது வயிற்று வலி தான் காரணம் ” என்று சொர்ணம் பொய் சொல்லுவதை நாம் மன்னித்து விடலாம்.
தன்  உயிரை விடத் துணிந்தவர் தனது இறுதி வேண்டுகோளாக “மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் “என்று  ஆசீர்வாதமாக எழுதியதைப் படித்ததும் கண்களைக் கண்ணீர் மறைக்க சுப்பராமன் நாற்காலியில் தொப்பென்று விழுவது சொர்ணத்தின் குறிக்கோள் வெற்றியைக் காட்டுகிறது. .
இந்த முடிவு அவர்கள் வீட்டில் விரைவில் ஒரு புரட்சிகரமான திருமணம் வெற்றிகரமாக நடக்கப் போகுது என்பதைச் சொல்வதாக இருக்கிறது.
இந்தச்  சிறு கதையில், பெண்கல்வி,காதலைத் தொடர்ந்து, மன உறுதி, துணிச்சல், முடிவெடுக்கும்  தீர்க்கம், மனவேதனை, காதல் தோல்வி, மகள் மீது கொண்ட நம்பிக்கை, காதலன் மீது கொண்ட நம்பிக்கை, சாதி வெறி, ஆணாதிக்கம், ஏக்கம், தியாகம்..இன்ப முடிவுஎன்று கதை முழுமை அடைகிறது.  ஒரு நிறைவைத் தந்த சிறுகதை.  கதை முழுவதும் நிழலாய், ஆரத்தின் நூலாய் வரும் சொர்ணம்..முடிவில் ஒளிவீசுகிறார்.   உயிர்த் தியாகம் என்ற போது மன வருத்தத்தைத் தந்தாலும் “அரியும் சிவனும் ஒண்ணு” என்பதைச் சொர்ணம் மூலம்  நிலைநாட்டிக் காட்டுகிறார் கதாசிரியர்..  கதையில் வினையூக்கி சிறுபாத்திரம் சொர்ணமே.
ஒரு உயிரின் அழிவில் தான் இன்னொருவரின் வாழ்க்கை ஆரம்பம் என்று அறிந்ததும் ராகவனும், மீனாவும் அவசரப் பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஆஹா…..இந்தத் தாக்கம்  எல்லாம் தான் கதையின் வெற்றி அல்லவா..!

இந்தக் கதையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களைத்  தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். நாற்பத்தி ஐந்து வருடங்கள் பின்நோக்கிச் சென்று படித்து விட்டு நிகழ் காலத்திற்கு வந்த போது  புரிகிறது.  காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் விஞ்ஞான தொடர்புத் துறையில் முன்னேறி இருப்பது போல, மனித மனங்கள் எத்தனையோ விஷயங்களில் பின்நோக்கிச் சென்று விட்டது தான் நிஜம்.
பெண் கல்வி நன்கு வளர்ந்து முன்னேறிவிட்ட நிலையில், காதல் ஜாதியைத் தாண்டி மதத்தையும் தாண்டி குதித்துக் கொண்டு முன்னேறி விட்டது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிர்த் தியாகம் செய்வ தெல்லாம் அந்தக் காலத்தில் நடந்திருப்பதை எண்ணினால்….இப்போது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிரை எடுப்பதில் முன்னேறி இருப்பது தெரிகிறது.
அந்தக் காலத்துக் காதல் தூதுவர்களை அதாவது கடிதம் எழுதி கொடுத்து அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பது, தோற்றுப் போவோம் என்று தெரிந்ததும் தூக்க மாத்திரையைத் தேடுவது.என்று மீண்டும் நீண்ட காலங்கள் கழித்து இவர்களை சந்திக்கும்  ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இப்போது பெற்றோர்களின் சம்மதம் என்பது தேவையற்றதாகத் அவர்களுக்குத் தோன்ற…நான்கு நண்பர்கள் சாட்சிக்கு இருந்தால் ஒரு கல்யாணம் என்ற நிலை கூட பரவி வருகிறது.
முதலில் முப்பத்தைந்து வருடம் ஒரே வீட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளங்கள் இன்றைய கால கட்டத்தில் காண்பது அரிது. தியாகம், பாசம், அன்பு , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்று உயிரை விடவும் துணிவது இதெல்லாம் தற்போது இப்படிக் கதைகளில் படித்தால் தான் உண்டு.
பெரிய திரைப் படங்கள் சுருங்கி சின்னத் திரையாகி விட்டது போல பரந்திருந்த மனிதர்களின் உறவுகளும், உணர்வுகளும் கூட சுருங்கிப் போய் சுயநலத்தின் காப்சூல் ஹார்ட்டாகப்  மாறிக்   கொண்டிருப்பதால் இது போன்ற மனித மனங்களை மேம்படுத்தும் கதைகளைப் படித்தாவது நமது மனத்திற்கு உணர்வுகளுக்கான உரமிடலாம்.
அருமையான தமிழில் நல்ல கற்பனை வளத்தில் எழுதிய சொல்லாடல்களைக் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்தின் சிறப்பைச் சொல்லும் முகமாக என்றென்றும் ஏட்டில் நிலைத்துவிட்ட ஒரு யதார்த்தமான  இந்த சிறுகதை இலக்கியத்தை  அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகத்தின் தலைப்பு: “வித்தியாசமானவர்கள்”
மிக்க நன்றி.
=========================================================================================================================
Share

About the Author

ஜெயஸ்ரீ ஷங்கர்
 has written 10 stories on this site.
எழுத்தாளர்