சனி, 20 ஜூலை, 2013

வாலி என்றொரு வாலிபன்...!

நரை திரை நிறைந்தும்
திரையுலகத் தாரகையாய்
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த
வாலி....நீவிர் நீடூழி வாழி...!
நின் ஆன்மா பறந்தாலும்
பூவுலகில் நீ விதைத்த வித்துக்கள்
ஜீவனோடு வாழும் விந்தை..!
துடிக்க மறந்த இதயமும்
உன் இசையால் அசையும்...!
உன் உயிர்த்துடிப்பு நின்றதெனக்
கேட்ட காதுகள் உனை
இழந்த சோகத்தில் அழும்...!
வாலி எனும் வாலிபனின்
ஜோலியை முடித்த காலனே..
உனைக் கண்டவர் கைது செய்வர்...!
நீ கொண்டு சென்றது ஒன்றல்ல...!
ஓராயிரம் மிஞ்சிய தத்துவங்கள்
கருவிலே உயிர் அழியக்
காலனே நீயே காரணம்...!
அவருக்கில்லை அவசரம்...!
சதம் அடிக்க சிந்தித்த வாலியை
சடக்கென்று வலி கொடுத்து
வலை வீசிப் அடக்கி விட்டாய்..!
சிக்கியது வெறும் உடல்...!
அவர்மனம் உணர்வுகளாய்
பூவுலகில் காற்றோடு ராகமாக...!
ஒவ்வொரு இதய வீட்டிலும்
ராஜாங்கமாக..!
கவிஞனுக்கில்லை சாக்காடு...!
விண்ணுலகில் வாலி
நீ வாழிய நீடு...!
அங்கும் சமைப்பாய் அழகிய சிங்கர்...!
 

திங்கள், 1 ஜூலை, 2013

பிறவி


ஏ ....மரமே...!
ஏன் இப்படி நிற்கின்றாய்?
பதில் தெரியவில்லையா?
சொல்லித் தந்ததை 
மறந்ததற்காக 
மர அடிகோலால் 
பிஞ்சுக் கைகள் 
வெம்பி வெதும்ப 
அடித்தேன்....
அப்போது நான் 
ஆசிரியை...!

மதிய இடைவேளையில் 
"அந்த மாங்கொட்டை டீச்சர்"
அடிச்சுட்டாங்கப்பா ...!
மாம்பழத்தை 
ருசித்து விட்டு 
கொட்டையைப் ஆத்திரத்தில் 
புதைத்தான்..!

அதே பள்ளி....
என் கண் முன்னே 
அதே வகுப்பறை...!
அன்று அழுதுகொண்டே 
நின்ற சிறுவன் 
இப்போது ஆசிரியன்..
நிற்கிறேன்....
நான்....மரம்..!

வெற்றிக் கனி


வெற்றிக் கனி உனக்கு 
கண்ணில் மட்டுமா?
இல்லை கையிலும் 
கிடைக்க வேண்டுமா?

வெற்றிக்கு  எட்டும் போது 
முதலில் கையில் வரும் 
தோல்வி இலை..!
துளியும் துவளாதே...! 

காலைச் சறுக்கி விடும் 
காய்ந்த சருகுகள்...
சாதாரணம் எனத் தவிர்த்துவிடு 

முன்னேற்றக் கிளைகள் 
கூட சமயத்தில் 
முறிந்து போகும்..!
முயற்சியை கைவிடாதே 

நம்பிக்கை வேர்கள் 
கூட ஆட்டம் காணும் 
நேர்மையான உழைப்பை விதை..!

கட்டெறும்புகள் முயற்சியை 
முழுதாய்த்  தின்னும்...
முடியாதென முடங்கிடாதே...!

கனவுகள் கூட 
உதிர்ந்து போகும்
பயம் வேண்டாம்..! 

சோர்ந்து விடாதே 
தளர்ந்து திரும்பாதே 
கனியைப் பறிக்காமல் 
திரும்ப எண்ணாதே...


நம்பிக்கையின் பலனாய் 
வெற்றிக் கனியாக 
உறுதியோடு உனக்காக 
காத்திருக்கும்..!

கருமை...!


மூலை முடுக்கெங்கும் 
இருட்டு வண்ணம் பூச 
அரங்கம் முழுதும் 
கருமை...!

எங்கிருந்தோ மின்மினி 
வெளிச்சத்தை சொல்லிப் 
போக...
ஜாதிக் கருமை விலகும் 
வழி....உண்டோ? 

காற்று அனைவருக்கும் 
பொது..
கடல் யாவர்க்கும் பொது 
வானம் யாவர்க்கும் பொது 
பூமி யாவர்க்கும் பொது 
ஐவவரின் கையில் தூங்கியவன்  

பூமியைக் கீறி கூறு 
போட்டு 
பழகிவிட்டதால் பிறப்பையும் 
கூறு கட்டிப் பிரித்து 
பிரித்ததையும் பிரித்துப் 
பிரித்துப் பிரித்து 
ஆயிரம் பகுதிகளால் 

மனம் பிரிந்து..
விரிந்த பூமியில் 
எண்ணச்  சுருக்குடன் 
ஒரே பூதத்திடம் 
அடிமையாகினான்...!

இந்த ஜாதியை 
யார் வீட்டிலிருந்து 
வீதிக்கு விரட்டுவது?

அழுகைச் சத்தம்....!




நான் உறங்க வேண்டும் 
மனது தவித்தது...!

இரவின் தனிமையில் 
சுவர்க் கோழிகளின்  
தொண  தொணப்பு..!
தூக்கத்தைக் கலைக்கவென்றே 
செய்து கொண்ட ஒப்பந்தம் போல்...!

பகலில் படித்த செய்திகள் 
இரவில் விஸ்வரூபமாய் 
மனத்திரையில் சிவப்பாக...!
ஆயிரம் குரல்கள் 
அவலங்களாய் அலற....

கரைபுரண்ட கங்கைக்குள் 
கைகள்...கைகள்....கைகள்...
இமயம் பாறையாக
இதயம் கங்கையாக 
தொலைந்தவர்களும் 
தொலைத்தவர்களும் 

புண்ணிய யாத்திரையில்  
பாவங்களைத் தொலைக்க 
தொலைக் காட்சியில் 
அருகே கண்ட கண்கள்...! 

என்றோ தானும் இதே போலத் 
தவித்த நேரத்தை நினைவு கூர்ந்து 
அன்று இறைவன் இருக்கிறான் 
என்று நிம்மதி அடைந்த மனம் 
இன்று இறைவன் எங்கே போனான்?

எண்ணங்களில் மூழ்கும் வேளை 
கண்கள் பனித்தது....
உறக்கம் மறந்தது..
நிரந்தரமில்லாத உலகத்தில் 
உயிர்ப்பூக்கள் உதிர....உதிர 
மீண்டும் மீண்டும் 
மொட்டுக்கள் துளிர்த்தபடி
நம்பிக்கையை நிரந்தரமாக்கியது  
அழுகைச் சத்தம்....!

நான் உறங்க வேண்டும்..
மனது தவித்தது..!