கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மே, 2015

நதியினில் வெள்ளம்...!


"நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
ஏனிந்த சிரிப்பு?"

இந்தப் பாடலை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி மனதையும் பறிகொடுத்திருப்பார்கள். அப்படி என்ன ஒரு விசேஷம் இந்தப் பாடலில்.?...அதெல்லாம் தெரியாது...ஆனாலும் ஒரு முறை கேட்ட பின்பு இதயத்தில் நாள்பூரா எதிரொலிக்கும் வரிகள் அனேகமாக எத்தனையோ பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
அப்போது, என் உலகம் சிறியது. வெளிஉலகத்தைப் பற்றி எதுவும் அறியாத சின்னஞ்சிறு வயது எனக்கு. கூடவே, சிறுமிகளுக்கே உரித்தான இருட்டென்றால் அதீத பயம். இரவு நேரத்தில் பயத்தில் உறக்கம் வராது அடம் பிடிக்கும் வேளையிலே 'டிக் டிக் டிக்' எனும் கடிகாரமுள் நகரும் சத்தம் கூடப் பெரிதாகக் கேட்டு எனது  சின்ன இதயத்தை 'பயம்' விடாது பிறாண்டும்.அப்போதெல்லாம் 'முருகா...முருகா....முருகா' என்று இடைவிடாது மனத்துள் மந்திரம் ஓதும். அது போன்ற பருவத்தில், சில உணர்வுகள் மனத்தை எளிதாகப் பிடித்துக் கொள்ளும். 
அன்றும் அப்படித்தான், ரேடியோவில் ஒலித்த பலமான சிரிப்புச் சத்தம்..அதை தொடர்ந்து ஒலித்த அந்தப் பாடல். சில வினாடிகள் அப்படியே பாடலோடு ஒன்றிப்போய் சலனமே இல்லாத மனத்துள் ஒரு எதிரொலி. கணீரென்ற குரல்...இறுக்கமான ஒரு மௌனத்தில் புரியாத அர்த்தங்கள் கொண்ட பாடல். ஒலித்து முடிந்த பின்பும் கூட காதுக்குள் அதே ராகம். அன்று முழுதும் திரும்பத் திரும்ப என்னோடு பயணித்த அந்த முதல் வரி....'நதியினில் வெள்ளம்' முதல் நான்கு வரிகள் உள்ளத்தோடு வந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற நிலை. வாய் ஓயாது அதையே முணு முணுத்தபடி நடந்து கொண்டிருப்பேன். அப்படி ஒரு ஆளுமை கொண்ட பாடல் வரிகள். என்னெவென்றே சொல்ல இயலாத ஒரு பிடிமானம் எனக்கும் அந்த இசைக்கும் இடையில் நடந்து கொண்டிருந்தது ஏன் என்று இன்றுவரையில் ஏன் என்று புரியவில்லை எனக்கு.

பாடலைப் பாடியவர் யார் என்றும் தெரியாது, இந்தப்பாடல் எந்தத் திரைபாடப்  பாடல் என்றும் தெரியாது, யார் எழுதியது? யார் நடித்தது? என்னும் விவரங்கள் கூடத் தெரியாத, சொன்னாலும் புரியாத வயது. அதிலெல்லாம் அவ்வளவு விருப்பமும் கிடையாது.  ஆனால் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் மனத்துள் இருந்து கொண்டே இருந்தது. அந்தக் காலத்தில் பாட்டுப்புத்தகம் வெளிவந்து கொண்டிருந்த நேரம். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வருகிறது என்று மிகவும் கஷ்டப்பட்டு..! கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பாட்டுப் புத்தத்தை வாங்கிப் படித்துப் பாடிப் பார்த்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் பெரிய விஷயமாகவே இருக்கிறு. ஒருவேளை அதுவே எனக்கும் திரையிசைப் பாடலுக்குமான ஒரு பாலமிட்ட நேரமாகக் கூட இருந்திருக்கலாம். அதன் பின்பு சரியாக தமிழ் படிக்கவே தெரியாத வயதில், பள்ளிக்கூடப் புத்தகப் பையில் 'தேனும் பாலும்' பாட்டுப் புத்தகத்தைப் பார்த்த என் அம்மா 'அடியும் உதையும்' கொடுத்து நான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த பாட்டுப் புத்தகமத்தைக்  கிழித்து வென்னீர் அடுப்பில் தூக்கிப் போட அது சாம்பலானதும், நான் அழுது கொண்டு நின்ற போதும் கூட என் ஆழ்மனத்துள் 'நதியினில் வெள்ளம்' பாடல் தான்  ஆலய மணி போல ஒலித்தது. இதோ.....இன்றும் நாற்பது வருடங்கள் கழிந்தும் நடந்து கடந்த அந்நிகழ்வு அப்படியே நினைவில் நீங்காது உள்ளது.

காலங்கள் பல கடந்த பின்னருமிந்தப் பாடல் வரிகள் மட்டும் படத்தைத் தாண்டியும் வாழும் வரிகளாகவே இருப்பதற்குச் சாட்சியாக  
சமீபத்தில் நான் வடலூர் வள்ளலார் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம், யாரோ இருவர் தெருவில் மிகவும் சத்தமாக இந்தப் பாடல் வரிகளைத் தான் பாடிக் கொண்டு சென்றனர். அதே வரிகள்...மீண்டும்...நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு...! 

ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதுக்குள் இன்னும் வாழுந்து கொண்டிருக்கும் பல பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர்.கண்ணதாசன் அவர்களை மனதார நினைத்து பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த விஷயத்தில் இந்தப் பாடல் திரைப்படத்தையும், காலத்தையும் வென்ற பாடலாகவே நான் நம்புகிறேன். இந்தப் பாடலை ரசித்தவர்கள் என் கருத்தையும் ஏற்றுக்கொள்வார்கள்.

இணையம் வந்த பிறகு காணொளி கிடைத்த பிறகு, நினைத்தபோது நினைத்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு அதிகமான போது ,
இந்தப் பாடல் காட்சியைப் பலமுறை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஒன்று மட்டும் புரிந்தது, எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் நாற்பது வருடங்கள் முன்னமே உள்ளத்தின் உணர்வுகளை பக்குவமாக, ஆழமான வரிகளால் எடுத்துச் சொல்லி அதை காலகாலத்திற்கும் உயிர்ப்போடு வாழவைக்கும் கவிஞர் அவர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் பாடலில் ஒரு வரி வரும். 'தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு  ' என்ற அந்த வரிக்கு ஏதுவாக கவிஞரின் பாடலுக்குக் கட்டுரை எழுதும் இந்த சமயத்தில் நானும் அதே எறும்பின் நிலை போலத் திணறுவதாகத் தான் உணர்கிறேன். எதைச் சொல்ல எப்படிச் சொல்ல.....! திகைப்பு தான்..! எத்தனை அழகான வரிகளுக்குச் சொந்தக்காரர் அவர். கவிதைக்கடல் தான் அவரின் அறிவு.
அந்தக் கடல் எத்தனை ரசிக நதிகளுக்கு கவிதை ஆற்றை வாரி வழங்கி இருக்கிறது. அத்தனை பேர்களும் அந்த இன்ப வெள்ளத்தில் நினைத்த பொழுதெல்லாம் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்பட்ட வரப்பிரசாதம் இது, எனக்கு மட்டுமில்லை....தமிழறிந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், கவிஞர் ஒரு வரம் தான்.

அவர்  எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களும் இந்த பூமிக்கு அவர் பொழிந்த அம்ருதவர்ஷிணி மழை தான். அவரது வரிகளால் தான் திரையுலகமமே பிரகாசமானது. அந்த இசைமழையில் நனைந்த என் மேல் விழுந்த மழைத்தூறல்கள் தான், எனது இதயநதியினில் ஆனந்தவெள்ளமாகப் பெருக்கெடுத்த இந்த உணர்வை இங்கு பதிக்கிறேன். 

உடல், பொருள் , ஆவி என்பது போல...கவிஞர் கண்ணதாசன் எழுதிய எழுத்துக்கெல்லாம் , நடிகர் சிவாஜி கணேசன், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் என இவர்களின் சங்கமத்தில் உயிர் கொடுத்து ரசிகர்களின் உயிர்களைப் இசையால் பிடித்திழுத்த அதிசயமும், அதுவே காலத்தைக் கடந்தும் கேட்கும் போதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆளுமை. எத்தனையோ மனதை நெகிழ்த்தும் பாடல் இருந்தும், எனது இதயம் வருடும் பாடல் என்பதால் இதைக் குறித்து எழுதினேன். நெஞ்சிருக்கும் வரை இந்த வரிகள் நினைவிலிருக்கும், அத்தனை மெல்லிய உணர்வுகளை அமைதியின் ஆழத்தை உணரச்செய்ய இந்தப் பாடல் எவர் எப்போது எங்கு கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும். இதுவே இந்தப் பாடலும் அதன் வரிகளும் பெற்ற வெற்றி. வாழ்கிறார் கவிதைக்கடல் கண்ணதாசன், நதியினில் வெள்ளமாக..!

உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள் இதோ:

நதியினில்   வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏணிந்த சிரிப்பு....

ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...

தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு
இறைவனின் சிரிப்பு...

ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது இதில்
தர்மம் எங்கு போனது?

ஒரு பக்கம் இருட்டு
ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு
இறைவனின் சிரிப்பு...

கவி:கண்ணதாசன்...

படம்: தேனும் பாலும் 
பாடியவர்: டி .எம்.சௌந்தரராஜன், அவர்கள்.

திங்கள், 30 மார்ச், 2015

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

Image result for mgr

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

– ஜெயஸ்ரீ ஷங்கர்.
யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .
இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.
“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …
“வாங்கய்யா வாத்தியாரையா 
வரவேற்க வந்தோமைய்யா “
இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.
பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.
வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.
செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..
பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,
தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.
மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.
அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.
இறைவா உன் மாளிகையில் 
எத்தனையோ மணி விளக்கு 
தலைவா உன் காலடியில் 
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!
இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

சனி, 14 மார்ச், 2015

மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி"

Inline image 1 

மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று இதையெல்லாம் கடந்து ஆடிவீதியில் நடக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளும் தான் இங்கே பிரசித்தம். பல பிரபலங்களின் கதாகாலாக்ஷேபம் ,  கச்சேரிகள், என்று ஆடிவீதி அடிக்கடி களைகட்டும். அலைமோதும் கூட்டத்தின் நடுவில் தென்றல் நுழைந்து செல்லும். தொலைக்காட்சி பெட்டியின் அறிமுகம் கூட அதிகம் இல்லாத அந்த காலகட்டம்.  எனது பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் வேண்டாவெறுப்பாக கோயிலுக்கு 'சொற்பொழிவு' கேட்கச் சென்றேன். அன்றைய தினத்தில் 'திருமுருக கிருபானந்த வாரியாரின்' உரை ஆரம்பமாயிற்று. அவர் பேசப்பேச, என்னோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான தலைகளும் 'மகுடிக்கு ஆடிய அரவம்' போல் அவர் இருக்கும் திக்கைத் தவிர வேறெங்கும் திரும்பாமல் அவர் ஆற்றிய உரைக்குள் உறைந்து போயிருந்தோம் என்று தான் சொல்லவேண்டும். அப்படியொரு அருமையான 'கந்தபுராணம்' பற்றிய சொற்பொழிவு. அன்றைய கூட்ட மிகுதியால் என்னால் அவரது அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்க நினைத்தும் இயலவில்லை. மனத்துள் ஒருவித ஏமாற்றம் சேர்ந்து கொள்ள வீடு திரும்பினேன். அடுத்த நாளே , அரவிந்த் கண் மருத்துவமனையில் டாக்டர்.நாச்சியார் அவர்களோடு 'கிருபானந்த வாரியாரை' மிக அருகில் காணவும், ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எதிர்பாராமல்  எனக்கு அங்கு கிட்டியதையும் இன்றுவரையில் ஒரு வரமாகவே எண்ணுகின்றேன்.

அதுபோலவே, பல ஆண்டுகள் கடந்து, சமீபத்தில் எனது அக்காவுடன் பள்ளி நிர்வாக நிமித்தம் சாத்தூர் திரு.ராஜேந்திரன் அவர்களது இல்லத்துக்கு சென்றிருந்த போது, "இந்த வீட்டிலிருந்து தான் வாரியார் சுவாமிகள் இறுதியாக லண்டனுக்கு சொற்பொழிவாற்ற கிளம்பிச் சென்றார். திரும்பி வரும்போது விமானத்திலேயே உயிரிழந்து விட்டார்...இருபத்தோரு வருடங்கள் இன்னும் இந்த வீட்டிலிருந்து  நகரவே இல்லை என்று அவர் சொன்னதும், அந்த இடத்தில் கனமான மௌனமும் கூடவே வாரியாரின் சுவாசமும் நிழலாக நிலவியது. தனது வாழ்நாள் முழுதும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இடைவிடாது இறையுணர்வோடு பக்தியை உபதேசித்தவர். அந்தத் தீவிர முருக பக்தரைப் பற்றி அறியாதவர் தமிழராக இருந்திடல் முடியாது. தமது வாக்கால் வாழ்ந்த பலருள் முன்னணியில் நின்றவர் வாரியார்.

பெரும் பேறு பெற்ற அவரது அருகாமையில் நின்று, அவரது ஆசியில் வளர்ந்து அவர்காட்டிய பாதையில் சென்று இன்று, தனது வாழ்க்கைப் பிரயாணத்தில் வெற்றிகரமாக பயணிக்கும், மதுரையில் பிறந்த மணிக்குரல் தேச மங்கையர்கரசி மட்டுமே வள்ளல் வாரியாருக்கு பிரசங்க வாரிசாக வளருகிறார் என்றால் அது மிகையாகாது. அதிக இனிய சுவையுடைய மாங்கனியைத் சுவைத்துவிட்டு அதன் சுவையை மீண்டும் நமது சந்ததியர் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் விதையை மறக்காமல் மண்ணில் புதைத்து வைப்போம். . அதைப் போலவே, வாஞ்சையோடு வள்ளல் வாரியாரும் இறை உணர்வை, தேசபக்த சிந்தனையை, தேச மங்கயர்கரசிக்குள் ஞானப் புதையலாக புதைத்து விட்டாரோ என்ற எண்ணம் எழுகிறது.

கதை கேட்பதோ, படிப்பதோ வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பப்படுவது தான் .  அதுவும் விறுவிறுப்பான உண்மை சம்பவத்தை கதையாக படிக்கும் போதே மனத்துள் அந்த ராஜ்ஜியமே உருவாகிவிடும். எண்ணங்களின் ஆதிக்கத்தை எழுத்துக்கள் இழுத்து கண்களுக்குப் படையல் செய்துவிடும். அதை சகஜமாக யார் வேண்டுமானாலும் செய்து விட இயலும். எழுதுவதை ஊறப்போட்டு, ஆறப்போட்டு, சேர்த்து, அடித்து, திருத்தி, இழுத்து, சுருக்கி என்று இஷ்டம்  போல வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். இறுதியாய் பள்ளத்தில் பாயும் நீராக எண்ணங்கள் வடிவெடுக்கும்.அந்த எழுத்தும் வாசகரை கட்டிப் போடும். அதைப் போன்றே 'செவிக்கு உணவு' என்றொரு பதமும் உண்டு. அந்த பதத்தை, கேட்கும் செவிகளுக்கெல்லாம் 'விருந்தாக' தனது வெண்கலக் குரலில் கதை கதையாய் கதைத்துக்  கேட்கும் ஒவ்வொருவரையும் கதைவசம் கவர்பவர் கலைமாமணி தேச மங்கையர்கரசி மட்டுமே.
மற்ற சொற்பொழிவாற்பவர்களைப் போல, அவர்கள்  பேசும்போது கூடவே ஓடிச் சென்று நாம் மூச்சு விடத் தேவையில்லை. எல்லாம் கேட்டு விட்டு என்ன சொன்னார்னு  ஒண்ணுமே புரியலையே என்று தவிக்கவும் அவசியமில்லை.

சரித்திரத்தில் ஐந்து, ஆறு ஔவையார்கள் இருப்பதாக சொல்வதுண்டு. அந்த ஔவையார், தற்போது  மீண்டும் பிறவியெடுத்து  நம்மோடு அதே பரந்த அறிவோடும், ஞானத்தோடும் நடமாடிக் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் தேச மங்கையர்க்கரசி போன்றே இருந்திருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு தெள்ளத் தெளிவோடு வானத்திலிருந்து 'ஜோ' வென்று ஒரே சீராக பெய்யும் மழையைப் போல தன்னிடம் இருக்கும் ஞானத்தை தாராளமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அளிப்பதை 'செவிக்கு விருந்தென்று ' சொல்லாமல் என்னென்பது? சந்தேகமே இல்லாமல் இவரும் ஒரு தெய்வீக ஞானக் குழந்தை தான்.

எண்ணங்களை எழுத்தாணியின் உதவியின்றி தனது சொல்லாதிக்கத்தால் முத்திரை பதிக்க முடிந்தால், இதில் சிலர் தான் வெற்றி பெற முடியும் என்பது எனது அபிப்ராயம். அத்தனை புராணங்களும், இதிகாசங்களும், நாயன்மார் கதைகளும், அடுக்கடுக்காக தனது மூளையில் பதியவிட்டு நிறுத்தி அதை அவ்வண்ணமே தங்கு தடையற்ற வார்த்தை ஜாலத்தில் வெளிக்கொணரும் விதம் காண்போருக்கு வியப்பூட்டும். போட்டிபோடும் எண்ணங்கள் யாவும் அவரது குரலில் ஒரே சீரான ஆலயமணி போலக் கேட்கும். 'பக்தி உலா' தொடரில் அவர் கூறும் ஆலய தரிசனம் நிகழ்ச்சி ஒவ்வொன்றும், கேட்போரை அந்தந்த கோயிலுக்கே  அழைத்துச் செல்லும் பிரமையை ஏற்படுத்தும். பேசுவது ஒரு கலை தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட தலைப்பைச் சுற்றியே கன கச்சிதமாக தங்கு தடையின்றி ஒவ்வொருவரின் நாடி பிடித்துப் பார்ப்பது போல எதார்த்தமான பேச்சு வழக்கில்,மடை திறந்த வெள்ளம் போல கூடவே நகைச்சுவை கலந்து கேட்பவரின் ஆவலை இறுதிவரையில் தூண்டி , 'எப்பொழுது முடியும்' என்று காக்க வைக்காமல், சீக்கிரம் முடிந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தோடு ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதை சொல்பவர் சொல்லரசி தேச மங்கையர்கரசி .

கால காலத்துக்கும் நிலைபெறவேண்டிய  நமது கலாச்சாரங்கள், நீதி,நேர்மை, இலக்கிய புராணங்களை அழியவிடாமல் காத்துவரும் வகையில் தேசபக்த சிந்தனையோடு இவர் பிரசங்கம் செய்வதுவும் தேசத்தொண்டு தான். இவரது சொற்பொழிவுகள் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் கதைகள் சொல்லி எடுத்துரைப்பது தான் இவரது தனிச்சிறப்பு. இந்த உலகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் மிகச் சிலரே சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷத்தோடு வளைய வருகின்றனர். அதில் நாவுக்கரசி மங்கையர்கரசியும் ஒருவர் என்று நினைக்க, மனம் நிறைகிறது.

தற்போது தேசம் தாண்டி இவரது பிரசங்கங்கள் நடைபெறுவது மகிழ்வான  விஷயம். நமது நாட்டிற்குப்  பெருமை தேடித் தரும் 'கலைமாமணி' இவரையும் நமது தமிழ்நாடு அரசு அங்கீகரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவரது ரசிகர்கள் அனைவரின் சார்பாக இங்கே சமர்ப்பிக்கிறேன்.

தான் எடுத்துக் கொண்ட செயலில் முழு முனைப்புடன் ஈடுபட்டால் கிடைக்கும் வெற்றியின் மகத்துவம் அபரிமிதமானது என்பதற்கு கலைமாமணி தேச மங்கையர்கரசி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இவரைப் பற்றி முன்பே அறிந்தவர்கள்  இந்த கட்டுரையையும்  ஏற்றுக் கொள்ளக்கூடும்.இதுவரையில் இவரைப் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு 'விசிட்டிங் கார்டு' போல செயல்படட்டும். இணையத்தில் இவரது சொற்பொழிவுகள் காணொளியில் நிரம்பி வழிகின்றது. வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை கேட்டுத் தான் பாருங்களேன். புதையலாக மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தை அடையாளம் காட்டிய பலன் இந்தக் கட்டுரையைச் சேரட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பெருமை




ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

நன்றி:தமிழ்த்தேர்,



"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்...?" பல ஆண்டுகள் முன்பு பிரபலமான திரையிசைப் பாடல் வரிகளாய் பட்டிதொட்டி எங்கும் ஒலித்ததைக் கேட்ட ஒவ்வொருவரின் இதயத்திலும் இசையைத் தாண்டி காலத்தைக் கடந்து அப்படியே செதுக்கி வைத்தது போல அச்சாகியிருக்கும்.

ஆம், வெறும் நாடு என்று சொல்லிவிடவில்லை கவிஞர். 'திரு நாடு' என்று பாரதத்தின் பெருமையை ஒவ்வொருவர் மனத்திலும் உயர்த்தி வைத்து அழகு பார்த்தார். ஒரு விதத்தில் பார்த்தால், இந்தியாவுக்கு என்றென்றும் பெருமை விவசாயிகள் தான். இந்தியாவை அலங்காரம் செய்து பார்க்கவென்றே அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் காய்ந்தும், நனைந்தும், நிலத்தோடு நிலமாக வெட்டவெளியில் கிடந்து தான் நம்பி விதைத்த பூமி பச்சைப் பட்டு உடுத்த ஆரம்பத்திலிருந்து, தன் மகளைப் போலப் பேணிக் காத்து 'வாரி வழங்கும் கருணைத் தாயாக்கி', உலக மக்களுக்குப் படியளக்கும் தெய்வமாக்கி , அதன் ஒவ்வொரு தருணத்திலும் தன் சுகம் பாராமல், நிலமகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமை பட்டு, விளைச்சல் நிலத்தின் மகசூல் கண்டு மகிழ்ந்து, தனது அத்தனை உழைப்பிற்கும் ஈடாக, வயல் தந்த பரிசை 'சூரியனுக்கு'ப் பொங்கலிட்டுப் படையல் தந்து அவர்தம் நன்றிதனை ஆண்டவனுக்கே அர்ப்பணித்தனர்.

எந்த ஒரு விதத்திலும் தங்களால் தான் என்று தற்பெருமை பட்டுக் கொள்வதில்லை விவசாயிகள். எளிமையும், வலிமையும் தந்த வல்லமை பெரிது. மனிதகுலத் தேடுதலின் 'அச்சாணி'யான பசிக்குப் பக்குவமாக ருசியோடு தந்து கொண்டிருக்கும் விவசாயிகள், கால காலமாக நமது இந்தியாவின் ஆணிவேராக விளங்குவதைக் கண்டு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படுதல் வேண்டும்.

மண்ணோடு மண்ணாக உழலும், பொன் மனிதர்கள், தங்களின் சுகம், சொகுசு,நாகரிக வாழ்க்கை என்று எதைப் பற்றியும் சிந்தனை செய்யாது, சேற்றோடு நடந்து நடந்து நமது பாரதத்தாயின் குழந்தைகளை கௌரவமாக பவனி வரச் செய்யும் 'தியாகிகள்'. வெற்றுப் பூமியோடு போராடி விளையச் செய்து வெற்றி கண்டு , நாட்டின் அந்நிய செலவாணிகளை உயர்த்தித் தரும் கண்ணுக்கு எட்டாத கணக்கர்கள். காலத்தின் எந்த மாறுதலையும் தனக்கென்று ஏற்றுக் கொள்ளாமல், தனக்கான கருமமே கண் எனக் கொண்டு செய்யும் தொழிலை சவாலாக ஏற்று சமுதாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தப் பகுதியின் முன்னேற்றமும் தன் உள்ளத்திலும், உணர்விலும், உடையிலும், வந்து விடாமல் நவீனத்தின் வாசனை எதையும் மனம் நுகராது தன்னைக் காத்துக் கொண்டு மண்ணையும் காக்கும் வீரத்திருமக்கள் இவர்கள். இவ்வாறு இவர்களது பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"...என்ற மஹாகவி பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, நாம் என்றென்றும் உழவுத் தொழிலையும், அதைக் கண்ணாகக் கருதும் விவசாயிகளையும் பெருமைப் படுத்தக் கடமை பட்டுள்ளோம். ஆனால், தற்போது நடப்பது என்ன? விளை நிலங்கள் விலை பேசப் படுகின்றது. விவசாயத்த்திற்குச் சாயம் பூசி அழகு பார்க்க முயன்று கொண்டிருக்கின்றனர் . இதன் விளைவு , உழவுத் தொழில் மெல்ல மெல்ல அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து செல்லும் அபாயம் காத்திருப்பதை உணராமல், நிலங்களுக்கு விதைநெல் இடுவதற்கு மாறாக 'எண்' இட்டு பிரித்து தரிசாக்கிக் காசு பார்க்கும் கனவு காண்கின்ற வேகம், அதிவேகமாகப் பரவுகிறதே. இதன் நிலை அறிந்து நாம் பெருமைப் படவா இயலும்? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்னும் நிலைமையை மாற்றி விடத் துடிக்கும் நவீன சமுதாயம் வெறும் நிலத்தை மட்டும் விலை பேசவில்லை விவசாயத்தையே விலை பேசுகிறார். காலகாலமாகச் செய்து பிழைத்து வந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலகி நகரங்களின் பளபளப்பில் சொக்கி நிற்க ஆரம்பிக்கும் போது, எந்தக் காலத்திலும் மாறாத மனிதனின் பசியைப் போக்கப் போவது இனி யார் என்று நாம் சிந்தித்துப் பார்த்திடல் வேண்டும்.

எந்தப் பெருமைக்கும் தலைநிமிராது, முதுகு வளைந்து குறைந்தாலும், நமது இந்தியாவின் முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கக் காரணமான விவசாயிகளை எண்ணிப் பெருமை கொள்வோம். அவர் தம் தொழிலை அழிந்திடாது காக்க ஆவண செய்வோம். விளை நிலத்தை விலை பேச விடோம். நாட்டில் எத்தனையோ 'பெருமைகள்' பெருமைப்பட வேண்டிய வகையில் இருந்தாலும், கண்ணுக்குக் கண்ணாக விளங்கும் உழவுத்தொழில் தாயகத்தின் உரிமைத் தொழில் என்று பெருமையோடு நிலைநாட்டப்பட வேண்டிய தருணத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

சுயநலப் பேராசையால் ....விவசாயிகளை ஆசைகாட்டி அடிமைகளாக்கி, ஆணிவேரில் வென்னீர் ஊற்றிப் பார்க்காமல்' , விவசாயத்தைப் பெருமை படுத்தும் வகையில், அந்தத் தொழில் புரிபவர்களுக்கு நவீன உதவிகள் செய்து தர வேண்டும். தாயகத்தில் விவசாயம் செழித்து, விவசாயிகளை உயர்த்துவதில் தான் இந்தியன் ஒவ்வொருவரின் கடமையும் அதனால் பெருமையும் .பொங்கி நிற்கிறது.