வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாயும் சேயும் ...!


Image result for mother and child indiaஆழ்கடல் மனதோடு அன்பு கடைந்த நுரைமனம் 
பொங்கும் ஆசையை அள்ளி த் தொடுத்த இறைமனம் 
பந்தம் நிறைந்த ஏகாந்தம் என்றும் அவள்வசம் 
ஏந்தும் பொற்கிழியாய் பூரிக்கும் தாய்ப்பாசம் 

கண்ணுக்குள் மரகதம் நெஞ்சுக்குள் மாணிக்கம் 
கைகளிலோ மணிவயிரம் வாயாரப் பாயிரம் 
உண்ணும் மணித்துளி உறங்காதே கருமணி  
எண்ணும் மடிநிறை கண்மணிக் கனவுகள் 

சுழலும் பூமியினுள் ஓயாத உள்ளொளி 
தாராள அன்பினுள் ஏகுதோ  ஏகாந்தம் 
ஆதாரமே தாய்மை காணீரோ குமுதமனம் 
ஈன்றெடுத்த நித்திலம் பெண்மையின் இரத்தினம்

சித்தம் நிறை வளர் பாவை 
நித்தம் குறை கண்டாலும் போகும் 
எத்துணை போற்றிப்  படைத்தாய் 
யாருளர் மேதினியில் இணையாய் துணை?

கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ 
அகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ 
ஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ
புத்துலகம் காணும்  சேய்க்குத் தாயே பரிசு....!

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை பிறந்தாள் .

Image result for vishu kani images

ஹேவிளம்பி வந்ததே 
வாசல் தோறும் தென்றலாய் 
கோலமிட்ட கோதைகள் 
மனம் நிறைந்த ஆவலில் 
அவல் தேங்காய் பாயசம் 
அத்தோடு மாம்பழம் கூட்டவே 
மாங்காய் புளிப்பும் 
தேனின் இனிமையும் 
வேம்பின் பூ கசப்பும் கூட்டிட்ட 
அறுசுவை பச்சடி 
வளமைகள் சேர்ந்திடவே 
சுவையாகச் சமைத்திடுவாள் 
கொண்டவன் குழந்தைகள்
உறவினர் யாவர்க்கும் அன்புடன் 
பகிர்ந்தளிப்பாள் - ஆசைகள் 
தோன்றாத மனத்துள் 
பல்லாண்டு இப்படியே 
வாழ வைக்குமாறு 
மனதார ஆசையாக 
வேண்டிக் கொள்வாள் 
நிறைந்த கனிகள் 
குவிந்த பொற்காசுகள் 
மணம் மிக்க மலர்கள் 
முகம் காட்டும் கண்ணாடி 
கண் திறந்தால் சௌபாக்கியம் 
காலங்கள் கடந்தும் 
இது ஒன்றே சாஸ்வதம்...!

திங்கள், 10 ஏப்ரல், 2017

சுதந்திரப் பறவை

Image result for சுதந்திர பறவைகள்

இன்று வந்த உறவா இது...?
ஜென்மங்கள் பல கடந்து 
இழுத்து வந்த இதயம்..
இளைப்பாறும் நேரம் ஜீவன் 
கண்ட கனவாக கைவல்யம் 
பெற்று உயிர்ச்  சுவற்றில் 
உந்தன் முகத் தடம்...!

பந்தங்களின் வாசனைப் பரணில் 
கண்டெடுத்த கடற்ப்  பவழம்..!
ஆயிரம் உடல்கள் கடந்தும் 
உன்னோடு எந்தன் உறவு 
முற்றுப் புள்ளி ஆகாது...
என்றும் தொடரும் ..!

உயிருக்கு ஒளி தந்து 
உடலுக்குள் விழி தந்தாய் ..!
துணையாய்  வழி சேர்ந்தாய் 
வாழ்வு முழுதும் சிறைப் 
பறவைகள் தான் நாம்..!

இருந்தும்....விரிப்போம்..! பறப்போம்.!
உனக்கென நானும் எனக்கென நீயும் 
நம் இதயத்து வானில் என்றும் 
சுதந்திரப் பறவையாய் ....!

தாயும் சேயும்....!

Image result for தாயும் சேயும்

உடலுக்குள் இரு உயிர்   
ஒரே  உயிரில் இரு உடல்கள் 
இரத்த பந்தத்தில் 
வந்த சொந்தம் 
உறவில் உயர்ந்தது 
நித்தம் வளர்வது 
பாசத்தின் உச்சம் 
பிறப்பெனும் எச்சம்..
தொப்புள்கொடியும் பாசக்கயிறாகும் 
அதிசயத்தின் உச்சம்  
பூஜ்யமான வாழ்வில் 
ராஜ்யத்தை ஆள்வதும் 
அணைப்பதிலிருந்து 
எரிப்பது வரையில் 
கை விலங்காகி 
விளங்காத புதிருக்கு 
புதிதாக மனித விதையை 
நட்டுவைத்து வம்சம் விதைக்கும் 
தாயும் ,,,,, நம்பிக்கை கரங்களை 
அவள் நோக்கியே நீட்டி 
உலகம் படிக்கும் சேயும் 
நிறைந்த உலகமிது 
சூரிய சந்திரன் போல் 
மறைந்தும் வளர்ந்தும் 
புவியாய் சுழலும் வரம்...!


ஜெயஸ்ரீ ஷங்கர்,
ஹைதராபாத் 

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

முகங்கள்...!Image result for முகங்கள்...!


-
வெற்றுக் காகிதம் தான் 
பல உணர்வுகளின் 
வேர்கள் எங்கும்  பரவி 
ஒப்பந்தக் கையெழுத்திட்டு
குழந்தையாய் பயந்து 
இளமையாய் வெட்கி
கம்பீரமாய் நடந்து 
தன்னம்பிக்கைச்  சின்னமாகி 
உருவத்தின் முகவரியாய் 
வசீகர காந்தமாய் 
அனுபவ காலங்கள் 
கடந்து கிழிந்து 
கிறுக்கல் காகிதமாகி 
இளமையைக் கடந்து 
இயலாமையில் தவித்து 
தனிமையில் துவண்டு 
குறுகிக் குனிந்து 
வெளிச்சத்திலும் தடுமாறி 
உருமாறிப் போனதாய் 
நெஞ்சோடு உறவாடி 
தைரியம் குலைந்து 
மௌனத்தை மொழியாக்கி 
மனத்தை ஊமையாக்கும் 
மனித முகங்கள்....!
google-site-verification: googlea3b4104ec255c451.html