வெள்ளி, 12 அக்டோபர், 2012

பஸ் ரோமியோக்கள்


Inline image 1

லேசாக தாமரையின் மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின் சுடர் தள்ளாடித் தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

மெழுகு திரியின் ஒளியில் தாமரை குனிந்து உட்கார்ந்து கொண்டு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த பக்கவாட்டு முகம் அந்த ஒளியில் தங்க நிலவாக தக தக வென்று மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி.

காந்தி ஜெயந்தின்னு இன்று காலேஜ் லீவு.அதனாலத் தான் இந்த ஒருநாளாவது அந்த பஸ், அந்தக் கண்டக்கரோட ஜொள்ளுப் பார்வையிலிருந்து தப்பினோம்...எங்க உட்கார்ந்தாலும் வந்து நின்னு பார்த்துக்கிட்டு, காரணம் இல்லாமல் சிரிச்சுக்கிட்டு, வேணுமுன்னே தினம் வந்து பஸ் பாஸை வாங்கிப் பார்த்து திருப்பிக் கொடுப்பது கொடுக்கும்போது வேண்டுமென்றே விரலைத் தொடுவது.. உற்றுப் பார்ப்பது, .அந்தாள் பண்ற லொள்ளுக்கு அளவே இல்லை. அம்மாகிட்ட மட்டும் வந்து சொன்னேன்....அம்புட்டு தான். சரோஜாவா.... கொக்கா...ன்னு அம்மா வந்து பஸ்ஸில் ஊடு கட்டிடும் பெறவு அந்த ஆள் நான் இருக்கும் பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டான்.நினைத்தவுடன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள்.

எப்படியோ இன்னைக்கு தப்பியாச்சு...மறுபடி நாளைக்கு அதே பிரச்சனை தானே இருக்கும். அதுக்குத்தான் இந்த அம்மா கிட்ட ஒரு ஸ்கூட்டி வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கேன், நினைக்கும்போதே மனத்தால் ஸ்கூட்டியை ஒட்டிக் கொண்டு காலேஜ் வரைக்கும் போனாள்..அங்கிருந்த தன் தோழிகளுக்குபெருமையுடன். கையசைத்தாள். எப்படியாவது அம்மா ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துச்சுன்னாப் போதும். யோசித்துக் கொண்டே இருந்தவள். அச்சச்சோ...தப்பாப்போச்சே....என்று நாக்கைக் கடித்து கொண்டு அழிரப்பரை எடுத்து நோட்டில் எதையோ அழிக்கிறாள்.

வெளியில் அந்தி சாய்ந்து வானம் சிவந்து கொண்டிருந்தது.....மாடுகளுக்கு புல்லுக் கட்டை பிரித்து வைத்து விட்டு அங்கிருந்தபடியே தன் மகளின் அழகை ரசித்த சரோஜா . மனதுக்குள் "தாமரை நல்லாக் குதிரை மாதிரி வளர்ந்திருச்சு....கலியாணத்துக்கு நிக்கிது.... என் வவுத்துல வந்து பொறந்த தங்கம். ஆண்டவனா பார்த்துப் போட்ட பிச்சை.இது மட்டும் இப்ப இல்லையின்னா நான் பொறந்த இந்தப் பொறப்புக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போயிருக்கும்..என்று நினைத்துக் கொண்டாள் .இந்த எட்டுப்பட்டி கிராமத்திலயும் என் மவ தாமரைக்கு ஏத்தவன் எவனுமில்லை. இங்க இருந்துக்கிட்டு நான் இவளுக்கு மாப்பிள்ளை தேடினால் சுத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு பய தேறமாட்டானுவ .இன்னும் எம்புட்டுப் பணம் சேக்கணுமோ...?

மோட்டார் ரிப்பேர் மெக்கானிக்கு, பஞ்சர் ஒட்டறவன், எலெக்ட்ரீசியன், காய்வண்டி தள்ளறவன்....இவனுவ தான் வந்து சிக்குவானுங்க.குடிகாரப் பயலுக,இவங்க கண்ணுல இருந்து நழுவி மவள நல்லாப் பெரிய படிப்பு படிக்க வெச்சி... பெரிய ஊருக்குப் போயி ஒரு மாட்டு லோன் தர பாங்கு மேனேஜரா பார்த்து கல்யாணம் கட்டிக் கொடுப்பேன். அதுக்குத் தானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி பணத்தை குருவி சேக்கிராப்பல சேதது வேச்சுக்கிருக்கேன். மொதல்ல படிப்பு முடியட்டும்.பெறவு தான் கல்யாண வேட்டை..!

நினைத்துக் கொண்டே முந்தானையால் முகத்தைத் துடைத்தபடியே வந்து தாமரை அருகில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டு இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்த வெத்தலையை எடுத்து மடியில் துடைக்கிறாள்...சரோசா.


தாமரை...உன் மேல அவுகளுக்கு...அதான் உன்னோட அப்பாருக்குத் தான் எம்புட்டு ஆசை தெரியுமா? நீ இப்படி வளர்ந்து இளங்குமரியா நிக்கிறதப் பார்க்க நான் தான் கொடுத்து வெச்சிருக்கேன். இப்படி அல்பாயுசுல போயி நம்மள அல்லாட வெய்ப்பாகன்னு கனவு கூடக் காணலியே.

தாமரை அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு....ம்ம்...இன்னிக்கு .நீ சொல்லு நான் கேட்கிறேன்...என்று சொல்லிக் கொண்டே எழுதலானாள் .

என் ஆத்தா அன்னிக்கு என் மவ சரோசாவுக்கு டவுனுல தான் மாப்பிளை பார்ப்பேன்னு செவகாசிக்கு இட்டுட்டு வந்து அங்க ஒரு காலண்டர் கம்பெனி அய்யாதுரை கிட்ட சொல்லி வச்சு உன் அப்பனுக்கு என்னிய கட்டி வெச்ததுக்குப் பெறவு தான் முடியாமே....கொள்ளாமே... ஆத்தா மாரடைப்புல செத்துப் போச்சு . சேர்ந்தாப்போல இவிகளும் சிவகாசி வெடி விபத்துல எப்படியோ சிக்கி சாம்பலாகிப் போயிட்டாரு .. அன்னிக்கே என் வாழ்க்கையும் கருகிப் போச்சுது. என்னமோ அன்னிக்கு நீ பச்சக்கொளந்த. இன்னிக்கும் என் கண்ணுக்குள்ளியே நிக்கிறவ.

அதுக்குப் பெறவு தான் அந்த ஊரே வேண்டாம்னு என் அம்மா ஊட்டுக்கே வந்து கெடந்தேன். தெரிந்த சாதி, சனங்க மத்தில கஞ்சித் தண்ணி குடிச்சாக் கூட ஒரு கெவுரவம் தான். என்ன சொல்றே....இப்போ... ..இந்த குச்சு வீடும், கொட்டகையும், பத்து மாடுகளும் ஆடுகளும் தான் நம்ம சொத்தும் சுகமும்...எல்லாமும்...ஒத்தையாளா இப்படி நிமிர்ந்து நிக்கையில மனசுக்குள்ள ஒரு கருவம் வரத்தேன் செய்யிது .என்னாங்கரே ..? என்று வெத்தலையை மடித்து வாய்க்குள் திணித்துக் கொள்கிறாள் சரோசா.

செவகாசியில இருந்து வந்தேனே...இங்க அக்கம் பக்கத்துல ஒருத்தங்களுக்குத் தெரியாது. உங்கப்பாரு செத்துப் போன வெசயம் .எனக்கு நானே போட்டுக்கிட்டேன் முள்ளுவேலி.என் வாயும் வார்த்தையும் தான் என்னோட முள்ளுவேலி.என்னைச் சுத்தி எப்பவும் நெருப்பு கங்கு மாதிரி வார்த்தையை மூஞ்சீல வீசத் தயாரா வெச்சிருப்பேன். ஒரு பய நெருங்க மாட்டான் என்னிய .!

இப்போ நீ....இந்த சரோசா மவ தாமரை..தாமரைப் .பூ கெணக்கா நிமிர்ந்து நிக்கிற..ஊருல இருக்குற கருவண்டு எல்லாம் வந்து காவாலித் தனம் பண்ணி மொய்க்க ஆரம்பிக்கும்...சாக்கிரத...இப்பமே சொல்லிப் புட்டேன். காலேசுக்குப் போனமா..வந்தமான்னு இருக்கோணம். எதாச்சும் வில்லங்கத்தை கொண்டுட்டு வந்து வீட்டாண்ட நிருத்தினே...அம்புட்டுத் தான். பெறவு...ஆத்தாளும் மவளும் ஆவியா அலையுறாங்கன்னு ஊரெல்லாம் கதை சொல்லும்படியா ஆயிறும் .

இதைக் கேட்டதும்..தாமரை நிமிர்ந்து அம்மாவை முறைத்து ஒரு பார்வை பார்க்கிறாள்..!

என்னாத்துக்கு இப்போ அப்படி ஒரு பார்வை பார்க்கிறே.?

ம்ம்....ஒரு தாய் பேசுற பேச்சா பேசுற நீ...?

அடிபோடி....பட்டவளுக்குத்தேன் தெரியும்...தேள் கொட்டின வலி . என் ஆசையை நீ அணைச்சீன்னா....உன்னியவும் நான் அழிச்சுருவேன்னு சொல்ல வந்தேன். எப்படியோ உன் தலைக்குள் இது ஏறணம் ......அம்புட்டுத்தேன்...சொல்லிக் கொண்டே எழுந்தவள்...."இப்படி கரண்டு கொடுக்காம சத்தியாக்கிரகம் பண்ணுறாவுளே .."படிக்கிற புள்ளைங்க எப்படி படிக்கும்? ஒத்தை ஒத்தையா மெழுகு வர்த்தியை எம்புட்டு தான் ஏத்துறது. நேத்துக் கூட நூத்துக் கெணக்கா சனங்க ஒத்தை மெழுகு வர்த்தியை எரியவிட்டுத் தூக்கி புடிச்சுக்கிட்டு "போராடுவோம்...போராடுவோம்" ன்னு கத்திக்கிட்டே போனாங்க....என்ன போராட்டம் நடந்தால் என்ன நிலைமை என்ன மாறியாப் போச்சு.? அங்கன புயல்,இங்கன வெள்ளம் ன்னு சொல்றாப்பல இல்ல இருக்கு இங்க இப்ப இப்படி கரண்ட்டு கட்டு.இந்த இருட்டுக்குள்ளார என்னத்த சமையல் செய்து ....என்னத்த சாப்பிட்டு..! அலுத்துக் கொண்டே போகிறாள் சரோசா.

யம்மாவ்....அம்மா......யம்மாவ்....! என்று தாமரை போனவளைச் சத்தமாக அழைக்கிறாள்.

என்னாடி..இம்புட்டு நேரம் அங்கன தான உட்கார்ந்திருந்தேன்...அப்போ என்ன வாயில கொழக்கட்டையா வெச்சிருந்தே....இங்க வந்ததும் இந்தக் கத்து கத்தறே...!என்னா ...வேணும் .?நானே இந்த இருட்டுக்குல்லாற தடவிகிட்டு நிக்கிறேன்...இதுல இவ வேற...என்று சலித்துக் கொள்கிறாள்.

ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே....பட்டுன்னு கிளம்பிப் போயிட்ட...அதான் கூப்பிட்டேன்...!

அதான்...நீயும் ரோசாத்தோட்டமா வெளியில் நடந்து போறே....உன்னையே நீ பாதுகாத்துக்க வேணும். எவனையும் ஓரக்ககண்ணாலக் கூட ஏறெடுத்துப் பார்த்துப்புடாதே..போக்கிரிப் பயலுக...சாக்கிரத..!..எவன் எந்தக் கேள்வி கேட்டாலும் வாயே தொறக்காதே ...வெளங்குதா? பொழப்பத்தவனுங்க.....அலைவானுங்க....எவ கெடைப்பாள்னு ..! மாட்னா.அம்புட்டுத்தேன் ..ஏப்பம் விட்ருவானுங்க . பொழுதோட வீடு வந்து சேரு ...தெனம் என் அடி வவுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டுத்தேன்....அம்மாந் தொலைவுக்கு உன்னிய படிக்க காலேசுக்கு அனுப்புறேன்.வெளங்குதா.?

போதும்...போதும்....இப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்து என்ன செய்யப் போறே....உனக்குப் புடிச்ச ஒருத்தனுக்கு என்னிய கட்டி வெக்கப் போறே...அந்தாளு மட்டும் என்ன செய்யப் போவுது...? மூணு முடிச்சுப் போட்ட தெம்புல என்னிய அடக்கி வைக்கும்...உன்ன மாதிரியே பொத்திப் பொத்தி வீட்டுக்குள்ளாறயே வைக்கும்..அப்போ நான் எப்போ தான் இந்த உலகத்தைப் பாக்குறது? உன்னிய மாதிரி ரெண்டே ஊரு....குறிஞ்சிப்பாடியும் செவகாசியும் தான் உலகம்னு சொல்ல முடியும்.

எனக்கு நெறைய இடம் பார்க்கணும். நிறைய ஊரைப் பார்க்கோணும்.பலபேரோட பழகணும் ..! இதெல்லாம் என் ஆசை..!

வாயைக் கொஞ்சம் மூட்றியா ..! இந்த ஆசை வந்துச்சுன்னாலே பொட்டப்புள்ள சீரழிஞ்சுதேன் போவா...மொத்தல்ல உன் ஆசையை அடக்கு. அப்பத்தேன்...அம்புட்டும் சரியாவும். பெத்தத் தாய் சொல்லும் சொல்லுல இருக்குற நியாயம் அப்பப்ப வெளங்காது....! என்னிக்காவது அனுபவப்பட்டு அழுகும்போது மனசு இடிச்சு இடிச்சு சொல்லும்...!

ம்ம்ம்...எனக்கு நல்லா வெளங்கிருச்சு...! உன்னோட கூட்டு சேர்ந்தால்...இந்தப் பொட்டல் காட்டைத் தாண்ட மாட்டேன்னு..சொல்லியபடியே...கோபத்தோடு நோட்டை மூடி வைக்கிறாள் தாமரை.

சும்மாப் போனவளை இழுத்து வெச்சு வாயைப் புடுங்கி...இப்போ நீ வம்பு வழக்குறியே..சரோசா இப்போது தாமரையை அதட்டுகிறாள் . என்னமோ சொல்லப் போகுதாக்கும்னு பார்த்தால்...வம்புக்கு நிக்குது...!


யம்மா....நான் ஸ்கூல் படிக்கும்போது அரசு சைக்கிள் கொடுத்துச்சில்ல . உனக்கு தையல் மெஷின் கொடுத்துச்சி ! அதுல தானே நான் பள்ளிக்கூடம் போயிட்டு வந்தேன். இப்போ அரசு...லாப்டாப் கொடுத்துச்சு இல்ல... ஆனால் அதுக்கு இப்போ கரண்டு தான் இல்ல ! தையல் மெஷின் தூங்குது ! லாப் டாப் மேஜைக் கடியில் கிடக்குது. எனக்கு இப்ப ஒரு ஸ்கூட்டி தான் வேணும்......நீ இந்த ரெண்டு மாட்டை வித்துட்டா எனக்கு ஒரு ஸ்கூட்டி வண்டி ரெடி.

என்னத்த விக்க சொல்லுத....மறுபடியும் சொல்லு...கேப்பம்...

அதோ...அந்த ரெண்டு பசு மாட்டையும்...தான் .!சொன்னதும் அவள் மேல் எதிர்பாராமல் சுளீரென்று வந்து விழுந்தது....முருங்கைக் கொம்பு..

முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்த சரோசா....ஆத்திரத்தில்....இலையை உருவியபடியே..."இதுக தான் இப்போ நம்மக் காப்பாத்துதுக...இத்த வித்துப் போட்டு உனக்கு வண்டி...வாங்கி அதுல நீ ஏறி ஒட்டி எங்கே போயி பிச்சை எடுக்கப் போறேங்கறேன்..? பசுவ விக்கணுமாம் . நல்லா வக்கணையா சொல்லுறதப் பாரு..!

நான் தான் காலேஜே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தேன்...நீ தான் பிடிவாதம் பிடித்து சேர்ந்துக்கிட்டே . உனக்கு வர ஆசைக்கெல்லாம் நான் அகலக்காலு வைக்க முடியாது. அதான் பஸ் பாஸ் வாங்கி தாரேனில்ல.... அது போதும் போ. நான் என்ன வண்டியா ஒட்டிக்கிட்டு இருக்கேன்...எங்கிட்டுப் போனாலும் நடந்து போறேன்...தெரிஞ்சுக்க வண்டி வேணுமாம்...வண்டி..பெரிய ஜமீன் வீட்டு வாரிசு....!ஆனையைக் கூட வாங்கிறலாம்...அங்குசம்...அதான் வேளா வேளைக்கு பெட்ரோல் எவ ஊத்தறது...? கொஞ்ச விலையா விக்கிறது பெட்ரோலு . நம்ம வீட்டுல ஒத்தயாளு அதும் பொம்பளயாளு சம்பாத்தியம்டி....அதப் புரிஞ்சுக்கிட்டு பொழப்பைப் பாரு போ...

யம்மா....உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?

வரும்...வரும்...சமஞ்ச பொண்ண உலக வாட்டமே அறியாத மவளை வீட்டுல வெச்சுக்கிட்டு என் மொகரக் கட்டைக்கு நல்ல வார்த்தை அதான்...விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனாப்பல ...! என்று எரிந்து விழுகிறாள் சரோசா.

அடச்சை.....ஆண்டவனுக்குக் கண்ணில்லை...இப்படி திகில் பிடிச்சவ மடியில் என்னைக் கொண்டாந்து போட்டார் பாரு...தாமரை திட்டிக் கொண்டே எழுந்து வாசல் திண்ணைக்கு சென்று உட்காருகிறாள்.

அடியே....வேணும்னா மைசூர் மகாராஜாவுக்குப் பேத்தியா பொறந்திருக்க வேண்டியது தானே....நானா வேணாம்னு சொன்னேன்.....சரோஜாவின் குரல் பின்னாலிருந்து வந்து தாமரையின் தோளைத் இடித்தது..

கிராமத்துக் காற்று...இதமாக குளிர்ச்சியாக வந்து தாமரையின் முகத்தை தடவிச் செல்கிறது....அன்பாக.

தென்றலுக்கு அசைந்து ஆடும் அங்கிருந்த வேப்பமரத்தைப் பார்த்து ...."எனக்கு ஒரு வண்டி வேணும்னு கேட்டதுக்குப் பார்த்தியா....என்ன மாதிரியெல்லாம் பேச்சுக் கேக்க வேண்டியிருக்குதுன்னு .இந்த அம்மாவுக்கு என் மேல பாசமோ, அன்போ இல்லை....எப்பப் பாரு சிடு சிடுன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க....பேசாமல் உன்ன மாதிரி மரமா நின்னிருக்கலாம்...எங்கியும் போகாம ஒரே இடத்தில் நின்னாப் போதும்..." என்று முணுமுணுத்தாள்.

மரமும் சந்தோஷமாகத் தலையாட்டியது. திடீரென்று இரண்டு பச்சைக் கிளிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே...கீ... கீ... கீ... என்று சந்தோஷமாகப் பறந்து சென்றது.

இந்தப் பறவைகள் கூட அது இருக்கும் இடத்தில் எவ்வளவு சந்தோஷமா இருக்கு. எனக்கு மட்டும் ..இந்த வெறிச்சோடிக் கெடக்கும் கிராமம் அலுத்துப் போச்சு...மனசுக்குள் ஒரு தேடலோட எங்கியாவது போயிறலாம் போல இருக்குது.!..அதனாலத் தான் அம்மா மேல கூட கோவம் கோவமா வருது..பாவம் அவுங்க தான் என்ன செய்வாங்க....என்று நினைத்துக் கொண்டே...அம்மா ...அம்மா.....எனக்குத் தூக்கம் வருது..நான் தூங்கப் போறேன். என்று சொல்லிக் கொண்டே பாயை உதறி விரிக்கிறாள் தாமரை.

அவள் அம்மா வாங்கித் தராத ஸ்கூட்டியில் அவள் இரவு முழுதும் ஒய்யாரமாக ஒட்டிக் கொண்டிருந்தாள் கனவில்.

பறவைகளின் ஒலியோடும், சேவலின் "கொக்கரக்கோ" வும்...பசு மாட்டின் கழுத்து மணியின் "கிணி கிணி ..." சப்தமும்.....கூடவே..."ம்ம்மா...ம்ம்மா...என்று கத்தும் குரலுமாக கிராமத்துப் பொழுது புலர்ந்தது.

அவசர கதியில் காலை வேலைகளை முடித்துக் கொண்டு...காலேஜுக்கு கிளம்பும் மகளைப் பார்த்து வெள்ளன வந்துரு.. ..என்று குரல் கொடுக்கிறாள் சரோஜா.

ம்ம்...சரி...சரி..வந்திர்றேன்...தோளில் ஊஞ்சலாடும் புத்தகப் பையோடு கைகடிகாரத்தைப் பார்த்தபடியே "அச்சச்சோ நேரமாயிட்டுதே....பஸ் போயிருச்சோ?...மனம் பரபரத்தபடியே...இந்த ஒரு பஸ் தான் இந்த கிராமத்துக்கு உள்ளே வந்து போகுது. இத்தை விட்டா ரெண்டு மயிலு நடக்கணும்...அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு.இதெல்லாம் ஒரு ஊரு...இதெல்லாம் ஒரு பொழப்பு...இந்த நூற்றாண்டில் கூட இந்த கிராமம் எதுவும் மாறவே இல்லை..இன்னும் என் பாட்டி காலத்து போக்குவரத்து தான்.இங்க இருக்கற வயசானவங்க இன்னும் ரயில் வண்டியைக் கூட பார்த்ததில்லையின்னு சொல்லுவாங்க.எல்லாத்துக்கும் அஞ்சு மயிலு நடக்கணும்....நினைத்துக் கொண்டே எட்டி நடை போடுகிறாள். பனை மரம் தான் பஸ் ஸ்டாப்பு. அதன் அருகில் வந்து நின்று கொண்டு..." ஏய்..உன்னைத் தான் பஸ்சு போயிடுச்சா? என்று கேட்கிறாள்..

பின்பு அண்ணாந்து பார்த்துவிட்டு...இதுக்கென்ன சிரிப்பு வேண்டியிருக்கு...?பண மரமா வளர்ந்து நிக்கிறியே தவிர வாயத் தொறந்து பதிலா சொல்ல மாட்டேங்குற.... என்று அந்த மரத்தை ஒரு தட்டு தட்டுகிறாள் தாமரை.

அவளுக்கென அந்த கிராமத்தில் மரங்கள், குட்டிச் சுவரு, கல்லு மண்ணு, குளம், குருவி..குட்டை..இதெல்லாம் தான் தோழிகள்..அவள் வீட்டு வாசல் மரம் தான் அவளது ஆத்மார்த்தமான தோழி.சந்தோஷமோ , துக்கமோ...அவள் அந்த மரத்தோடு நின்று பேசிக் கொள்வாள்.அதை விட்டால் இந்த பஸ் ஸ்டாப்பு பனை மரம் தான்.

அவசர அவசரமாக இன்னும் சில தெரிந்த முகங்கள்.வருவதைப் பார்த்ததும்..அவளுக்கு ஒரு நிம்மதி..ம்ம்..இன்னும் பஸ்ஸே வரலை...நினைத்தவுடன்...தூரத்தில் உறுமிக்கொண்டு பஸ் வரும் சத்தம் கேட்டதும்..இவளும் ஏறுவதற்குத் தயாரானாள் .

பூதாகாரமாக வந்து இவள் அருகில் உரசிக் கொண்டு நின்றது பஸ்.

இவள் படி ஏறும் போதே..."ம்ம்..ஏறு...ஏறு...ஏறு...என்று சொல்லிக் கொண்டே இவளுக்கு நேராக எதிரே வந்து நின்று கொண்டான் அந்த கண்டக்டர் கமலக் கண்ணன்.அவன் முகத்தில் இவளைக் கண்டதுமே ஒரு பிரகாசம்.ஒரு மந்தகாசப் புன்னகை.

தரையிலிருந்து தாவி வானுக்கு ஒரு வெண்ணிலா ஏறியது போலிருந்தது அவனுக்கு.

பின்பு "போலாம்... ரைட் " என்று நீண்ட விசில் அடித்தவன்..கையோடு சென்று அங்கிருந்த டேப் ரெக்கார்டரை போடுகிறான்...அதிலிருந்து அவளுக்காக அவன் முன்பே செட் பண்ணி வைத்திருந்த பாடல் பஸ்ஸை ஒரு உலுக்கு உலுக்கியது..

"சௌக்கியமா கண்ணே...
சௌக்கியமா....சௌக்கியமா...கண்ணே...
சௌக்கியமா...சௌக்கியமா..."

என்று உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தது. அதன் பின்பு அந்த பஸ் யாருடைய அவசரத்துக்கும் ஓடவில்லை...நடந்து போனது போலிருந்தது அவளுக்கு.

"போச்சுடா...இந்த ஜொள்ளுப் பார்டி கிட்ட இருந்து தப்பிக்கணும்...இவள் இடம் பார்த்துக் கொண்டு நிற்க...உள்ள போ...உள்ள போ..என்று கடமைக்காக குரல் கொடுத்தாலும்...கண்களும், கைகளும் சாடையாக அவளுக்கான அந்த முன்பக்க சீட்டைக் காண்பித்து அங்கே உட்காருங்க...என்றது.

சரி..போனால் போகட்டும் என்று அவன் கை காட்டிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டவள்.ஜன்னல் வழியாகப் பார்வையைத் திருப்பி...இன்னைக்கு என்ன ஆனாலும் இந்தப் பக்கத்தை விட்டுத் முகத்தைத் திருப்பக் கூடாது. ஆளப் பாரு...பாட்டுப் போடறான்...சௌக்கியமா?ன்னு கேட்டு...நேத்து ஒரு நாள் வரலையின்னா...இப்படியா? எல்லாம் குசும்பு.

ஒரு மனது திட்டிக் கொண்டிருந்தது.இன்னொரு மனமோ...


சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி..!

கூடவே பாடிக்கொண்டிருந்தது.

திரும்பவே கூடாது என்ற வைராக்கியம் இருந்தாலும்....பொறுமையை இழந்து...கொஞ்சம்...சீக்கிரமாப் போங்க....காலேஜுக்கு லேட்டாகுது...என்று டிரைவரைப் பார்த்து சொல்கிறாள்.


"சீக்கிரம் போயி எங்க முட்டணும்...காலேஜு தானே எல்லாம் போகலாம்...என்கிறான்...அவன் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு.

திரும்பியவள்..நினைத்துக் கொள்கிறாள்.."இந்நேரம் நம்மகிட்ட மட்டும் ஒரு ஸ்கூட்டி இருந்துச்சுன்னா.. காலேஜுக்கு ரெண்டு வாட்டி கூட போயிட்டு வந்திருப்பேன்...என்ன ஜொள்ளுப் பார்ட்டி இது....வேணுமின்னே பண்ணுதுங்க.

தங்கச்சி........என்ன படிக்கிறாப்புல...? டிரைவர்...ஓட்டிக் கொண்டே இவளைப் பார்த்துக் கேட்க.

நான் தங்கச்சியா இவனுக்கு ? இவன் எப்போ பிறந்தான் என் கூட ?

இவள் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி..."ம்ம்ம்...ஏன்..?" என்று பதில் கொடுக்க.

அருகில் வந்து நின்ற கண்டக்டர் " பாஸ்..பாஸ்...எடு.."என்று அவளிடம் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறான்

இவளும்...குனிந்து புத்தகப் பையில் கையை விட்டுத் தேடும் போது ...

"தலையைக் குனியும் தாமரையே...
உன்னை எதிர்பார்த்து...உள்ளங்கைகள் வேர்த்து..."

என்று ஆரம்பிக்கிறது பாடல்...

அடப்பாவி...இதுக்கும் ஒரு பாட்டா...?அவளுக்குள் பொங்கி வந்தது கோபம்...இருந்தாலும்..அடக்கிக் கொள்கிறாள்.

சே....இன்னும் எத்தனை தூரம் போக வேணும்..அதுக்குள்ளே இவன் பாட்டுப் போட்டே என்னைப் பைத்தியமாக்கிடுவான்..நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு பாட புத்தகத்தை எடுத்து அதில் பார்வையை ஓட விடுகிறாள்..இருந்தும் மனசு அவளை விட்டு வெளியே குதித்து நிற்கிறது.


"பூவாடைக் காற்று...ஜன்னலைச் சார்த்து...
உத்தரவு தேவி...தத்தளிக்கும் ஆவி..."

பாடலோடு சேர்ந்து அவனின் குரலும்...ஒலிக்க.....ஜன்னலருகில் அமர்ந்த இவளுக்கு கோபம் கோபமாக வருகிறது.
"இவன....என்று நற நற வென்று பல்லைக் கடித்துக் கொண்டு "இன்னும் கொஞ்சம் சீக்கிரமாப் போங்க...நேரமாகுது..." என்கிறாள்.

உடனே...கண்டக்டர்...."நீயும் நானும் தான் காலேஜு வாசலை மிதிக்கலை....நீ வண்டி ஸ்டியரிங்கைக் கட்டிக்கிட்ட..நான் தோல்ப் பையைக் கட்டிக்கிட்டேன்...சீக்கிரமாப் போப்பா....என்று குரல் கொடுக்க...பஸ்சுக்கும் ரோஷம் வந்தது போல வேகமாகிறது.

பஸ்ஸில் அமர்ந்த சிலர்...விடலைப் பசங்க கையில் பஸ்ஸைக் கொடுத்தால்....என்னமா.... லூட்டி அடிக்குறானுங்க பாரேன்....இவனுங்க இப்படி இருந்தா....எப்படி விபத்து நடக்காம இருக்கும்..என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

எங்கே கண்டக்டர் காதில் விழுந்துவிட்டால்...பிறகு "எறங்குய்யா..." என்று வனாந்திரத்தில் எறக்கி விட்டுப்புட்டா என்னாவது.. என்ற பயம் தான்.என்ன செய்ய.?..அமைதியாக பஸ் சென்று கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப்பு காலேஜு..வாசல்.....எறங்கு...என்று சத்தம் கொடுத்தபடியே நீண்ட விசிலை அடித்து இவளை ஆசையோடு பார்க்கிறான் அவன். கூடவே பாடலும் மாறி ஒலிக்கிறது.


காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து -
கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்...


அடுத்து....வந்தப் பாடலைக் கேட்டபடியே...எப்படியெல்லாம் மெசேஜ் கொடுக்கிறான் பார்...என்றெண்னியவள் அவளது காலேஜு ஸ்டாப் வந்ததும் இறங்கி நடக்கிறாள்...மனதுக்குள்.."காத்திருப்பானாம்..கமலக் கண்ணன்...."என்று சொல்லிக் கொண்டே பஸ்சின் உள்ளே பார்வையை கொண்டு செல்ல...அந்த ஜன்னல் வழியாக அந்த கண்டக்டரின் கண்கள் இவளையே மொய்த்துக் கொண்டிருந்தது.அவனது ஒரே பருந்துப் பார்வையில் இவள் மனம் பல விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு இதயத்தை இழுத்து இடம் மாற்றி விடுவது போல திடுக்கிட்டாள் தாமரை. இவள் நடக்க நடக்க...இவளது மனத்தைத் தூக்கி கொண்டு அந்த பஸ் தூரத்தில் புள்ளியாக மறைந்தது.

காலேஜுக்குள் நுழைந்ததும்..தோழிகளின் அரட்டை, பாடத்தில் கவனம் என்று பஸ்ஸை சுத்தமாகவே மறந்து போயிருந்தாள். தாமரை. மாலையில் வீடு திரும்பும் நேரம் வர வர....பஸ்ஸின் நினைவும் வந்தது.கூடவே அவனது நினைவும் மெல்ல வந்து எட்டிப் பார்த்தது. "காத்திருப்பான்..கமலக் கண்ணன் ." என்ற பாடல் வரிகள் நெஞ்சோடு வந்து நின்றது.

இப்போ அவருக்கு ட்ரிப் டூட்டி இருக்குமோ.? ..இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் தாமரை.

இன்று காலை வரை கூட அவனது பார்வையில் எரிச்சலானவள்....அவன் அவளைக் பார்வையால் தொடருகிறாள் என்பதை உணர்ந்தவள்....இனிமேட்டு பஸ்சிலே ஏற மாட்டேன்...இந்தக் கண்டக்டர் ஆள் மோசம்....யாரை...யார் பார்த்து ஜொள்ளு விடுவது.? அம்மாகிட்ட சொன்னா அம்புட்டுதேன் பல்லைப் பேத்துருவாங்க...என்றெல்லாம் மனசில் கரித்துக் கொட்டியவள் இன்று மெல்ல மெல்ல அவன் பெயர் என்னவாயிருக்கும்...ஒருவேளை கமலக் கண்ணனோ...? என்று யோசிக்கும் வரை சென்று விட்டாள் .

நாள் ஆக நாள் ஆக இவளின் மனத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே அவனும் இவள் ஏறும் போதெல்லாம் இவளுக்காகவே பதிவு செய்த பாடல்களை ஒலிக்க விட்டு இவளது முக பாவனையை பல பேர் பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான் இவள் முகம் பஸ் ஏறும் போதே பிரகாசத்தை முகத்தில் மாட்டிக் கொள்ளும்..

ஓரக் கண்ணால் பார்ப்பதும்..தலையைக் ...குனிந்து சிரிப்பதும், கொஞ்சல் பார்வை பார்ப்பதும், பஸ் பாஸ் கொடுக்கும் சாக்கில் சாக்கிலட்டு கை மாறுவதுமாக இவர்களது "காதல் கொண்ட மனம்" படும் அவஸ்தைகளை முகம் எழுதி எழுதி அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தது.

இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இதை கவனித்தாலும் கவனிக்காதவர்கள் போலவே ஜாக்கிரதையாக தெரியாமல் கவனிக்கத் தொடங்கி விட்டனர்.அவர்களுக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு.

வழக்கம் போலவே வீட்டுக்குள் வந்து விட்டாலும்...இவள் மனம் மட்டும் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தது.இரவும் பகலும். இன்றும்..அவள் இறங்கும் போது ஒலித்த பாடல் வரிகள் வீட்டுக்கு வந்தும் .....

"மனசு தடுமாறும்...அது நெனச்சா நெறம் மாறும்....
பாறையில.... பூ மொளைச்சு பார்த்தவுக யாரு,,,,?
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..."

என்று வீடு வந்ததும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள் தாமரை.

என்னாதுடி பாட்டு இது.....சாயங்கால வேளையில....வெளக்கு வச்சி சாமிக்கு நாலு பாட்டு பாடாம....எதுக்கு ஆயுசு நூறு...? என்ற சரோஜாவின் கேள்வி தாமரையின் வாய்க்குப் பூட்டு போட்டது.

ஒரு விதத்தில் இந்த இரண்டு வாரத்தில் இவள் மறுபடியும் வண்டி வாங்கித்தா என்று கேட்கவே இல்லை நல்ல வேளை ..

ஒரு வேளை மறந்து போச்சா? இல்ல...அம்மா கஷ்டப் படுதே...ன்னு புத்தி வந்து பேசாமல் இருக்காளா...எது எப்படியோ நாமாக வாயைத் தெறக்க வேண்டாம். இப்பப் போறபடி போகட்டும்...தாமரை இப்பல்லாம் சந்தோஷமாத்தேன் இருக்கா. என்கிட்டக் கூட எந்த வம்பும் வளர்க்கல .



அடியேய்.....தாமர.....நேத்து என்ன நடந்துச்சுன்னு நீ சேதி கேட்டியா..?


என்னவாம்..நான் எதையும் கேட்கலை...சொல்லிக் கொண்டே வேப்ப மரத்தின் அருகில் சென்று நின்று கொண்டாள் . இன்று அவளுக்கு அதோடு பேச நிறைய விஷயங்கள் இருப்பது அம்மாவுக்கு எப்படித் தெரியும்?

உன் வயசு தான் இருக்கும் அந்தப் பொண்ணுக்கு.ராத்திரி கரண்டு வேற இல்லயா... வேலைக்குப் போயிட்டு பஸ்ஸை விட்டு எறங்கி தனியா ஊட்டுக்கு வார வழியில, இருட்டுல ..யாரோ நாலு பயலுவ அவளை மடக்கி கடத்திக் காருல தூக்கிப்போட்டுகிட்டு....வயக்காட்டுக்கு போயி நாசம் பண்ணிட்டானுவுங்க....அத்தோட நிக்காம..இன்னும் ரெண்டு பேரு ஆட்டோல வந்து படு பாவிங்க...ஆறுபேரு சேர்ந்து இந்தப் பச்சை புள்ளைய துவைச்சுப் போட்டுட்டு...வெளில சொன்னே....குடும்பத்தோட வெட்டிப் போடுவேன்னு பயமுறுத்திட்டு போயிருக்கானுங்க..நாசமாப் போறவுனுங்க ...! அந்தப் பொண்ணு வெள்ளன கருக்கலோட வீட்டுக்குப் போயி அழுதிருக்கு...ரெண்டு நாள் செண்டு தான் போலீசுக்குப் போயிருக்கு....எவ்வளவு கொடுமை...பெத்த வயிறு எப்படி துடிக்கும் ?பொம்பளப் பிள்ளைங்கன்னா கிள்ளுக் கிரியாப் போச்சு இவனுங்களுக்கு....என்று ஆத்திரத்தை கொட்டிக் கொண்டிருந்தாள்.

அடியே....நீ சாக்கிரதையா சூதனமா இருந்துக்கடி....உலகம் கேட்டு நாசமாப் போச்சு....பொம்பளப் பிள்ளைக்கு பாதுகாப்பே இல்லை...பெறவு போலீசு வந்து என்னத்த நொட்ட ..?வவுத்துக்கு சோறு போடற எடம் வயக்காடு....அந்தப் புனித பூமியையும் சேத்து சிதைச்சிருக்கானுங்க ....காவாலிப் பசங்க..!பூமாதேவி சும்மா விடுவாளா?


அந்தம்மாவுக்கு என்னா...? தோட்டத்துல வாக்கிங்கு போவும்...இங்க எவ மக சீரழிஞ்சா என்னா..எவன் எவளோட தாலிக்கொடியை அறுத்துக்கிட்டுப் போனா என்னா...இருட்டுல தானே இம்புட்டுக் களவாணித் தனமும் நடக்குது...
ஆனாக் கூட கரண்டு தராம சத்தியாகிரகத்தப் பாரு....எங்க காலத்துல இப்படியா இருந்துச்சு...? படிக்கிற புள்ளங்க அம்புட்டும் ஃபெயிலாயிடும் பாரேன்....!சொல்லிக் கொண்டே மகளைப் பார்க்கவும்...தாமரை வேறு ஏதோ நினைவில்....மரத்தோடு சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

நீ என்னாடி...நான் இம்புட்டு சொல்லுதேன்.....நீ எத்தையோ பறி கொடுத்தவ மாதிரி அங்கன என்னத்த பார்த்துக்கிட்டு நிக்கிறவ ?

மிக அருகில் வந்து அதட்டிய குரலைக் கேட்டு ஆடிப் போனாள் தாமரை...

ம்ம்ம்....சுயநினைவுக்கு வந்தவளாக.....சொல்லுங்க மிஸ்...என்று உதறலோடு சுதாரித்துக் கொள்ள.

அடடா.....காலேசு நியாவவமா...இல்ல அங்கியும் இப்படித்தேன்.....கவனிக்காம இருந்துபுட்டு டீச்சரம்மாட்ட திட்டு வாங்குவியா?

ஒரு ப்ராஜெக்ட் வேலை..ம்மா..உனக்கு சொன்னாப் புரியாது.அத்தப் பத்தி தான் யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன். ச்சே....இப்போ அதெல்லாம் மறந்து போச்சு எல்லாம் உன்னால..!

ம்குக்கும்....இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை...ஆ...ஊ...நா என் தலையில கல்லை ஏத்து.....வயசுப் புள்ளைக்கு என்னாத்துக்கு மறதியும்...சோம்பலும்ன்னேன்.

சரி..நாளைக்கு நானும் டவுனுக்குப் போவோணம்....மாட்டு லோனுக்குப் பணத்தைக் கட்டிப்போட்டு புண்ணாக்கு வாங்கியாரோணம் ...கருக்கல்ல கெளம்பிருவேன்...இப்பமே சொல்லிட்டேன்.

இவளுக்குத் திக்கென்றிருந்தது....என்கூடவா நீ வரப்போறே ? உள்ளுக்குள்ளே திக் திக் என்றது...

வந்தாத்தான் என்னவாம்...? ஆத்தான்னு சொல்ல வெக்கமாருக்காமா..?என்றவள் மேற்கொண்டு பேசாமல் உறங்கிப் போனாள்



அடுத்த நாள் சொன்னது போல பஸ் வந்ததும்...சரோஜா பஸ்ஸில் ஏறும்போது...

ஏய்....கெளவி...சீக்கிரமா ஏறு.....காலேஜு பொண்ணுங்க ஏற வேணாம்...இப்படி எடத்தை அடைச்சுக்கிட்டு ...கண்டக்டரின் குரல்....தாமரைக்கு திடுக்கிட வைத்தது..

க்கும்....கோடாலிக் கொண்டையும்....வாயில வெத்தலையும் கண்டா...உன் கண்ணுக்கு கெளவியாத் தெரியரனாக்கும்....

அச்சச்சோ ..இது என் அம்மா....ன்னு இவருக்குத் தெரியாதே.......! போச்சுடா....இன்னைக்கு இந்த பஸ்சுல என்னக் கூத்து நடக்கப் போவுதோ... பேசாமல் பின்னாடி போயி உட்கார்ந்திரலாம்...என்று எண்ணி நகர்ந்தவளை....

அடியே...தாமரை...இங்க வந்து உடகார்ந்தா என்னா ? என்ற சரோஜாவின் குரலில் கண்டக்டர்..எப்புடி கூப்புடுது பாரு...என்னவோ இது தான் பெத்துப் பேருவச்சா மாதிரி..என்று முணுமுணுக்க ...

இந்தா ....டிக்கெட்டு எடு ...என்று சரோஜாவை அதட்டிவிட்டு அவனின் கண்கள் தாமரையை மொய்த்தது.

இது தான் சாக்கு என்று...தாமரை...இந்தாங்க...இது என் பஸ்பாஸ் ...அப்படியே என் அம்மாவுக்கும் ஒரு டிக்கெட்டு...என்று சொல்லிக் அருகில் சைகை காட்டி காசை நீட்ட...!

ஷாக் அடித்த கண்டக்டர் தூக்கி வாரிப் போட...அன்று தன் "காதல் வாகனத்தை" ரேஸ் குதிரையைப் போல பறக்க வைத்தான்.

பாட்டெல்லாம் பத்திரமாப் போட்டான்..ஜாக்கிரதையாக சரோஜா கண்ணில் பட்டுவிடாமல் தன்னை மறைத்துக் கொண்டான் கண்டக்டர்.கமலக் கண்ணன்.சிறிது நேரத்துக்கு முன்னால் இருந்த சவுடால் எல்லாம் அவனை அம்போ அரோகராவென்று விட்டு விட்டுப் போயிருந்தது .

நிம்மதிப் பெருமூச்சில் தாமரை காலேஜு ஸ்டாப்பில் இறங்கினாள் .அத்தனை நேர இறுக்கம் வெளியில் வந்ததும்....பறந்தது. உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தாள்.



சரோஜா பாங்கு வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டமே இல்லை. என்ன வெய்யில்...என்ன வெய்யில்...இந்தாத்தா கொஞ்சம் நவுந்து தான் உட்காரேன்...அருகில் உட்கார்ந்திருந்தவளை நகரச் சொல்லி நன்றாக உட்கார்ந்து கொண்டவள்...ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்க முடியாமல்...."இந்தப் பாட்டும் பவுசும் யாரு கேட்டா உங்க கிட்ட...அணைங்க தம்பி..பஸ்ஸை விட்டு இறங்கும்போது தலைவலியோட இறந்கோணமாக்கும் ...! சலித்துக் கொள்கிறாள்.

இதுங்களுக்கெல்லாம் பிரச்சனை ஜாஸ்திடா....அதுங்க டேஸ்டே....தனி.என்று டிரைவர் மெதுவாகச் சொல்லவும்...பாட்டு நிறுத்தப் படுகிறது

நீண்ட நேரம் காலியாகக் கிடந்த டிரைவர் அருகில் இருக்கும் எதிர்புற சீட்டில் அடுத்த ஸ்டாப்பில் ஒரு இளவயது பெண் ஏறி அமரவும்...பஸ் வேகத்தை விடுத்து மிதந்தது . சிறிது நேரத்திலேயே அந்த காதல் வாகனத்தில் அவர்களுக்கு மட்டும் புரியும் மௌன பாஷைகள்...அங்கிருந்த சிலருக்கும் புரிய ஆரம்பித்தது.

தனக்கு அருகில் அமர்ந்திருந்தவள் இதை நோட்டம் விட்டு "என்ன ஜன்மங்கள்..பொது இடம்னு கூடவாப் புரியாது....வீட்டில் அம்மா அப்பா கஷ்டப் பட்டு வயசுப் பொண்ணுகளை வேலைக்கும், படிக்கக் காலேஜுக்கும் அனுப்பினா....இதுங்க வசதியா டிரைவர் சீட்டுப் பக்கம் உட்கார்ந்துகிட்டு அவன் இவளைப் பாக்குறதும்...சைகையில பேசுறதும்.ஒரே அலம்பல் பண்ணுதுங்க..அவனுங்களும் பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு கடைசீல ஆளக் கவுத்துருவானுங்க...!

போன மாசம் எங்கூட்டு பக்கத்து ஊட்டுல அவுங்க மக இப்படித் தான் ஒரு கண்டக்டரோட ஓடிப் போயி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிச்சு நல்லாப் படிக்கிற பொண்ணும்மா.இந்தப் பயலுவ.....படிக்காமக் கொள்ளாம....பஸ்ஸை ஒட்டிக்கிட்டு கன்னாப் பின்னான்னு பாட்டைப் போட்டு பொண்ணுங்கள சைட் அடிச்சு, கரெக்ட் பண்ணி...சொகுசா பெரிய எடத்துப் படிச்ச பொண்ணுகளா பார்த்து காதல்...ன்னு சொல்லி ஏமாத்தி கலியாணம் கட்டிக்கிறானுங்க...

இல்லாக்காட்டி எவ இவனுங்களுக்கு படிச்ச பொண்ணக் கொடுப்பா...? ஒழுங்காக் காலேஜுக்குப் போன பொண்ணு நேரா சுவாமி மலையில போயி கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நின்னுச்சாம்..அந்தம்மா ஒரே அழுது புலம்பல்..பாவம் பின்ன கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி இல்ல ஆவுது...இப்போவே இங்க பாருங்க...என்று கண்ணைக் காட்டினாள் .

சரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...யாரோ தன் தலையில் ஆணி அடித்து இறக்கியது போலிருந்தது....கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்...இப்படியா நடக்குது கதை. என்று அந்தப் பெண்ணையே மெளனமாக பார்க்க ஆரம்பித்தவள்...பக்கத்தில் அமர்ந்தவள் சொன்னது சரி தான் என்று புரிந்ததும்...

." இந்தாப்பா...கண்டக்டர்....ஏன்னா டிரைவர் பா இவன்...வண்டில ஏறின பொண்ணப் பார்த்து இந்த சிரிப்பு சிரிக்கிறான்...வண்டியை ஒட்டாமே உருட்டுறான்...என்னாது...லவ்வா..?

நாங்க வயித்தக் கட்டி வாயை கட்டி பொண்ணுங்கள கெராமத்தில இருந்து டவுனுக்கு படிக்கவோ வேலை பாக்கவோ அனுப்பினா போற வழியில இந்த மாதிரி பண்ணி அதுங்க மனசைக் கலைச்சு...பாட்டுப் போட்டு பாட்டுப் போட்டு பயித்தியக் காரியாக்கி...கட்டுனா இவனைத் தான் கட்டுவேன்னு சொல்ல வெச்சு... தலையில் பாறாங்கல்லைப் போட வெக்கிறீங்களே ...

உன் பஸ்ஸு ஓனர் யாரு சொல்லு..அங்கிட்டு போயி புகாரு கொடுக்கறேன்.நானும் வயசுப் பொண்ணு வெச்சிருக்குறவ ... என்று பொல பொல வென்று பிடித்துக் கொண்டு சத்தம் போடுகிறாள்.

பயந்து போன டிரைவர் வண்டியை வேகப் படுத்த...அந்தப் பெண் ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டிக் கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்து கொள்கிறாள்.

பார்த்தீங்களாம்மா..கொடுமையை...நல்லாக் கேட்டீங்க நீங்க இப்படித் தான் கொடுக்கணும் இவனுங்களுக்கு....என்று இவளை மகிழ்வோடு பார்க்கிறாள் அருகில் அமர்ந்தவள்.



சரோஜா பஸ்ஸை விட்டு அவள் இறங்குமிடத்தில் இறங்கி...வீட்டுக்கு நடந்து போகையில் " தாமரை கேட்ட வண்டியை...எப்படியாவது ரெண்டு மாட்டை வித்தாவது வாங்கித் தரோணம்....அவளும் இப்படி பஸ்ஸில் போயி ஏதோ ஒரு தருதலை கண்ணுல பட்டு மனசு கலங்கிப் போவதற்குள் நம்ம மவளைக் காப்பாத்தியாவணும் ..எந்த மாட்டை விக்கலாம்.என்று யோசனையில் நடந்தாள் .

வீட்டுக்குள் நுழைந்ததும்...அவள் போட்டக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று ஒரு நோட்டில் கிறுக்கி வைத்துக் கொண்டாள் .

மாலையில் தாமரை வீடு வந்ததும்...அடியே.உனக்கு ஒரு சந்தோஷமான சேதி....நீ கேட்டாப்புல வண்டி வாங்கி தந்திறலாம்னு முடிவு செஞ்சிட்டேன் கடைக்கு எப்போ போகலாம். ரெண்டு மாட்டை வித்தாப் போதுமில்ல..என்று சந்தேகமாகக் கேட்கவும்...

அதெல்லாம் வண்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்...நான் பஸ்பாஸ் எடுத்தாச்சு...இனிமேட்டு பஸ்சுல தான் போவேன்.எனக்கு பஸ் தான் பிடிச்சிருக்கு ...! யானையைக் கூட வாங்கிறலாம் .அங்குசம் தான் வாங்க காக்கோணம் ....அதான்..பெட்ரோல்...பெட்ரோல்....! என்று தான் சொன்னதையே திருப்பி தனக்கே சொல்லிவிட்டு புழக்கடை பக்கமாக சென்று விட்டாள் தாமரை.

சரோஜாவின் மனதுக்குள் ஒலித்த அபாய சங்கின் ஒலி அவளது இதயஅறையைக் கிழித்துக் கொண்டு செவிப்பறையைத் தாக்கியது. "எந்த பஸ்ஸில் எவன்..?" என்று.

==========================================================================================

திங்கள், 8 அக்டோபர், 2012

ஆண்மீக இச்சை..!


(இது எழுத்துப் பிழை அல்ல....மனத்துப் பிழை...)

வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி தண்ணீர் தழும்பி விழவும்...மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க ..சுதாரித்தவள்....என்னாச்சு...இன்னைக்கு காலங்கார்த்தால இப்படியொரு தடைச் சகுனம்.."இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகப் போணுமே.."

சகுனமே சரியில்லையே....என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க...கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

அழித்து...அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய....கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே...கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே....அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்...என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்... "அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா..." என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன் சொல்கிறான்.

என்னடா பிரவீன் ?...இப்பப் போய் இப்படிச் சொல்றே....இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ....நீ சரியா எழுதணும்..கண்ணா.....இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை....பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப் படி...எல்லாம் மனசில் ஏறும் ....என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற....எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்....! எனக்கு என்னாகுமோ...? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து நடக்க ஆரம்பித்தது...சந்திராவுக்கு.

நல்ல வேளை....நான் .கீழே விழலை...பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே...பால்..."புஸ்" என்று பொங்கிப் படமெடுத்தது.

டேய்..பிரவீன்....சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்....என்று குரல் கொடுத்தவள்....சித்ரா...சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்...ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்...பயப்படறான்.....நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே ... என்றவள்....பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே...? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.

படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா....என்னக்கா...பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? ...என்ன ஐ.ஏ.எஸ்'க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே....டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே...சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..

"ம்ம்ம்...உனக்கும் இந்த சொகுசெல்லாம் இந்த மாசத்தோட கடைசி.... அடுத்த மாசமே...நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்...சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்...நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்...என்னை மாதிரியே...கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ...." சொல்லிக் கொண்டே.

நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்...உரிமையா...அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா....நம்ப அம்மா...பாட்டி பண்ணாததையா நீ பண்றே...?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.

"ஏன்னா.....இங்க கொஞ்சம் வரேளா....இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா...? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

இதோ பாருடா....வேலைக்காரி வீட்டுக்காரரை...வேலை வாங்கறதை...என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.

என்ன சந்திரா...இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்... அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா....? அட....இங்க பாரேன்...நம்ம ரவீந்திர பாரதியில்.இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்.. ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே....இன்னைக்குப் போலாம்'ன்னு நினைக்கிறேன் ? வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் ! கண்கள் சந்திராவை நோக்கவில்லை. ! மனசு ...நீ வரமாட்டே...எனக்கேத் தெரியும் என்றது.,

நானா....? என்ன விளையாட்டா...பிரவீனுக்கு நாளையிலிருந்து கால் பரீட்சை ஆரம்பம்... நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா...? நான் எங்கேயும் வரலை...நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ...நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்...பீன்ஸையும் கத்தியும் கொண்டு வந்து "டொக்கென்று" வைத்தாள்.

ஒ.. ..பரிட்சை இருக்கா....சரி. நான் மட்டும் தனியா எப்படிப் போறது ? அப்போ .... நான்.... சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்...அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்...என்றவர்...கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.

சந்திராவுக்கு நெஞ்சு திக்கென்றது ! என்ன சித்ராவா ? அவள் கல்யாணப் பெண், என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ? இதென்ன அல்பமான ஆசை....இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை...இவருக்கு....கஷ்டம்...கஷ்டம்...என்றது அவளின் மனது.

கல்யாணம் ஆகப் போறவள்....இப்போதான் .நிச்சயம் ஆயிருக்கு...இப்ப வெளியில்...கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?

அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்...எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ...?..எதுக்கெடுத்தாலும்....எப்பப் பாரு...சகுனம்...நாலுபேரு....அது இதுன்னு...சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா இதுக்கெல்லாம் நேர்மாறு.நீயே பாரேன்....நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா...நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்...ஆமா....கொடு...கொடு...பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்...என்று அவசரப்பட்டார்...சபாபதி.

சித்ரா செதுக்கி வைத்த சிலை. பளிங்குப் பதுமை ! பேரழகி ! சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.

சந்திராவுக்குக் கோபம் பொங்கியது. எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன். சித்ரா வேண்டாம். கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.

ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்'ன்னு எனக்கு ஆசை சந்திரா. நீ வர வேண்டாம், அவள் வரட்டும். தப்பா நினைக்காதே !

என்னவோ செய்யுங்கோ ...நீங்களாச்சு...உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?...நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ...அது போதும் நேக்கு.என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா.உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்....கன்னமெல்லாம் வடுக்கள்...இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை...பாவம்..அவர்...! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்...விதி...என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு....என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.

பீன்ஸை நறுக்கிக் கொண்டே...அப்போ...இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்....என்ற மிதப்பில் கிறங்கியபடியே.."பார்த்த முதல்நாளே....உன்னைப் பார்த்த முதல் நாளே..." என்று சீட்டியடித்தபடியே...மனமெல்லாம் சித்ரா வர சம்மதிப்பாளா...? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.

என்னதான் இருந்தாலும்...ஆண்மனம் சபலம் அடையும், மரத்துக்கு மரம் தாவும். கையில் கொய்யாப் பழமிருக்க மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் ! பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு...இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும் நின்றார், பெண் குழைந்தைகளுக்குத் தகப்பனா யிருந்திருந்தால் கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது. வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.

கண்ணருகில்....இளவயதில்....மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்...அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே ஒரு கண்சித்ராவையே தொட்டு விட வட்டமிடும்.

சித்ராவுக்கு "ஹை-டெக்" சிட்டியில் வேலைக் கிடைத்ததும்...அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே...அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்....சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா....இவள் ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்... கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற...அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்...என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள் முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.

அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்...சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம சந்தோஷம்.

டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்... சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.

இல்லக்கா...அவரோட அம்மா...சொன்னாளாம்...அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது...இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம். என்னவோ... பெரிசா....இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா. இவரும்...அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா...? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க...கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே....இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே... எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

அக்கா...உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்... பாரேன்... எனக்குத் தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!.."என் அம்மா சொல்லிட்டாங்க....." என்று வக்களித்துக் காட்டியபடியே....இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்....அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ...?என்றாள் சித்ரா.

அப்படியெல்லாம் சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு...அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்'னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்...எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல் சொல்ல மாட்டா.

அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா...நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்....அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்....அவர்களால் தாங்க முடியாது...எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.

ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ.. அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும் ஒரு பற்றும்..பாசமும்...மதிப்பும் உண்டாகும். எப்பவுமே...உரிமைகளை யாருமே இந்தா... எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில் தருவதில்லை...அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா...? இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.

அக்கா...போதும்...உன் "சந்திரோபதேசம்....". இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ்.
ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்...வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.
அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.

ஆமாம்மாம்...வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே...என்னை மாதிரி "அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல"...இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்...ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்...எப்படி உங்க டப்பா....டான்ஸ் ஆடும்னு...!

சித்ரா...இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்...உன்னையும் அழைச்சிண்டு...போயிட்டு வா.

என்னக்கா...நீ போறது தானே...? நான் என்னத்துக்கு...? நான் அத்திம்பேரோட எங்கியும் போகலை.

பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்...நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்....? அவரே சொன்னார்...சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு...போயிட்டு வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.

ஐயய்யோ... இது என்ன? இல்லக்கா....நான் இவரோட தனியால்லாம் போகலை...சரிபட்டு வராது.

எது சரிபட்டு வராது......? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா...சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட் அப்டீன்னு பெருமை பேசறார்...நீ இப்படி சொல்றே...நானே போயிட்டு வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை...இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி...ரொம்ப நன்னாருக்கும்...மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்...என்று சந்திரா சொன்னதும்..

அம்மாடி...அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்...நானே போறேன்.... நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு...அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.

நேரம் ஆக ஆக...சித்ரா...போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே...போய்ட்டு வரலாம்...என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.

அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்...மணக்க தயாரா வந்து நின்றபோது சந்திராவே அசந்து மயங்கிப் போனாள்.

என்ன அத்திம்பேர்...அசத்தலா கிளம்பிட்டேள்...சுதா ரகுநாதன்னா.... அவ்ளோ இஷ்டமா?...அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க...நினைவு வெச்சுக்கோங்க...என்று கிண்டல் செய்தாள் சித்ரா.

இவரும் சிரித்துக் கொண்டே...மனசுக்குள்....அடி அசட்டுப் பெண்ணே...."மனசுலோனி மர்மம்....தெலுசுகோ....." என்று ராகம் இழுத்தார்..

ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும் ஏறியாச்சு...!

முன்புற கண்ணாடியை சரி செய்தவர்...அப்போ...போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்க,

இவளும்...கண்ணாடியைப் பார்த்தே..."ம்ம்ம்...ம்ம்ம்" என்று பதில் சொன்னாள் சித்ரா."சிரிப்பைப் பாரு..." என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.

ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். "சே...சே...என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி.."நல்லதும்..கெட்டதும் ...நெஞ்சுக்குள்ளே. ." அதை மீறி வெளியே வரவேண்டும்...என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்...சித்ராவின் "யௌவன கர்வம்" பார்ப்பவர்கள் எல்லாம் தவறுபவனாகவே....ஆள்காட்டிக் கொண்டிருந்தது.

அங்கங்கே...சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்...சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்........இதுல...இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா...அட பகவானே...தெரியாமல் போச்சே....என்று தடுமாறி எண்ணியவள்...

அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில் அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.

நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்...இந்த சந்திரா கேட்டால் தானே...போயிட்டு வா....போயிட்டு வான்னு...கட்டாயப் படுத்தி அனுப்பினாள்...இருக்கட்டும் அவளை...வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்....என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்....

அத்திம்பேர்....உங்களுக்கு தான் சிரமம்....இத்தனை தூரம்...ரவீந்திர பாரதி..."சலங்கை ஒலி " சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா...டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே...என்று கேட்க..

ஆமாம்...அதே தான் சித்ரா...அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ...நான்...என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்....இதோ வந்தாச்சு...பிடிச்சுக்கோ....என்று "விர்ரென்று" அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது...அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.

சித்ராவின் மனசுக்குள்....சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும் பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்....என்றும் எண்ணிக் கொண்டாள்.

உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்...அந்த பிரம்மாண்டமான ஹாலில் "ஜில்லென்ற" குளிரில்...மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே....அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.

திடீரென கோரஸாக குரல்கள்....ஏய்...சித்ரா...."ஏன்ட்டி....நூவு...இக்கட....! இதநேனா....நீ காப்போயே... வாரு.."
(என்ன...நீ... இங்க...! இவரா...உனக்கு வரப் போறவர்...?) என்று அருகில் அமர்ந்திருந்த சபாபதியைப் பார்த்து...சிரித்தபடியே கேட்க.....அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.

(இதைக் கேட்டதும் சபாபதி...கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்....அவருக்கு மனசுக்குள் ஆஹா...என்று இச்சையை அதிகமாக்கியது....)

அவர்கள் கண்களில் குறும்பு...ஹேய்...நோ...நோ...நோ..நோ....ஹி இஸ் மை சிஸ்டர்'ஸ் ஹஸ்பெண்ட்" என்று அவசரமாக சொல்ல...!

சாரி...சாரி....வெரி சாரி....ஏமி அனுகக்கு... (ஒன்றும் நினைச்சுக்காதே...) என்று கலைந்து போனார்கள்.

சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க...! என்ன சித்ரா.....தப்பா நினைக்காதே...தெரியாமல் கேட்டிருப்பா....உன் கொல்லீகா...? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே....சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..

அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா....என்னன்னா.... அங்கே பாருங்கோ...அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே....சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..

அட...ஆமாம்...சித்ராவே தான்...அவர்....அவர்....ஏய்...அவர் சபாபதிடி....அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!

இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்...இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது...!
என்ன பழக்கம் இதெல்லாம்...! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல் தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ...?

நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்....தப்புப் பண்ணிட்டோமோ...வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து...என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.

என்ன இது கற்பகம்?....கண்ணால் காண்பதுவும் பொய்...காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..

எனக்கு மூட் போச்சு...கிளம்புங்கோ...ஆத்துக்குப் போவோம்...கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்....என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா...இவர்களை கவனிக்கவும்..... .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து , வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து.....சந்தோஷமாக பேச...அங்கிருந்த மூவரும்...சபாபதியை நோக்கி வர......!

சந்தோஷின் அப்பா...தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்...." இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை...."என்று சீண்டியது.

இவரும் எழுந்து...கைகுலுக்கி....நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை...சர்ப்ரைஸ்...!
என்று சிரிக்க.

சந்திரா வரலையா..?

பையனுக்கு பரிட்சை சார்... சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா...நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு...வந்தோம்...

குட்...நாங்களும்...அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்...அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்...!

சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்...என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல...

கூப்பிடலாமா அவனையும்...என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..

அதற்குள்...நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை...விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க...அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.

அம்மா...நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.

சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்...அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்...என்று நினைத்துக் கொண்டார்.

மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்...சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு "புரிதல்" ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது...சித்ரா தனது கைபேசியை எடுத்து...."உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்...நாம் தான் எடுத்துக்கணும்..." என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
"அம்மா...நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா..." என்று பணிவோடு கேட்கிறாள்.

"சொல்லேன்....அவனும் சந்தோஷப் படுவான்...." என்கிறாள் அம்மா.

இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா...நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்...என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து...அம்மா... அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.

தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.

ஆர்வத்தை அடக்க முடியாமல்...சித்ரா, சந்திராவுக்கும் ஃ போன் செய்து "அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு....இங்கே யார் வந்திருக்கா...தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்...இதோ என் பக்கத்தில் தான்...இருக்கா...பேசறியா...இரு தரேன்..என்று சொல்லி..."அம்மா...சந்திரா....லைன்ல இருக்கா...பேசுங்கோ..." என்று கைபேசியை தரவும்.

"கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா....கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.." என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.

குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல...இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.

சுதா ரகுநாதனின்...வெண்கலக் குரல்...அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.

"நீ....ரஜ...ரமணீ....ய கிருஷ்ணா......தேஹி.....ஜெய...ஜெயா......மாம்பாஹி...."

கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,

ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.

சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி...பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இரண்டு மனங்களோ....இரண்டு குணங்களோ...சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு...அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.

சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி....தெளிவானது.

சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்...கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்...அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சந்திராவின் கணவருக்கும்...தனது உறவின் பங்கும்...பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.

நிகழ்ச்சி முடிந்து அரங்கம் கலைந்ததும்...வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்..." அம்மா...அப்பா...நாங்க போயிடு வரோம்...என்று சொல்லவும்.

எங்கம்மாக் கிளம்பறே...இரு...இரு....எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்...சரியா..என்றனர்.

சபாபதியிடம்...எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்...
இப்போது அவன் அம்மாவே..."சித்ரா...நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்...வந்தாலும் வருவான்...கிரிகெட் முடிஞ்சிருக்கும்.." என்று சொல்லவும்..

அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.

தான் நினைத்தது ஒன்று...நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்....சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள் மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்...மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை உருவாக்கி அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும் அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு ஃ போன் செய்து...அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி....சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி...தன்னுடைய சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

இரவு டின்னர் "கிராண்ட் மினர்வா"வில் பேசியபடியே...இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.நேரம் போவதே தெரியாமல் சிரிப்பும்... மகிழ்வுமாக.

வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்...சந்திரா, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே...குழம்பித் தவிக்க...என்னைக்கும் இல்லாத திருநாளா...இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்.....என்னவாயிருக்கும்...இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?

"சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்... இவர் ஏதாவது அவளிடம் ஏடாக் கூடமாக பேசி இருப்பாரோ...? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ...? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை...? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது...? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே.... இன்னைக்கு கார்த்தால ...கால் இடறியது..."இடறிய கால் இடரும்" ன்னு சொல்லியிருக்கு...அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப் போறதோ...? இன்னும் வரலையே...இத்தனை லேட்டாகிறதே....இன்னைக்கு சகுனமே சரியில்லையே....என்றெல்லாம் கவலைப் பட்டவள்...

வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்

தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத் தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்....போல.....பளிச்சென "நட்சத்திரமாக" மின்னி "நல்லதே நடக்கும்" என்று சொல்வது போலிருந்தது.

அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை எல்லா சகுனங்களையும் புறந்தள்ளி விட்டு வெளியேறியது . அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா ! தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.

சனி, 6 அக்டோபர், 2012


On Sat, Feb 4, 2012 at 2:12 PM, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> wrote:
nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com 
11:44 AM (2 hours ago)

to me 

பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

வணக்கம்

இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன். தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு.

தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

வெள்ளி, 5 அக்டோபர், 2012

வாழ்த்துக் கவி


ஹுஸைன் இப்னு லாபிர்

ஐயா வணக்கம்
தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன்.
பாரதத்தில் உதித்ததனால்
பா ரதம்போல் கவி பொழியும்
பெயர் தனிலே ஜெயம் தாங்கிய
ஜெய பாரத பெருந்தகையே

அகிலத்துக்கும் அண்டத்துக்கும்
அணுவுக்கும் கருவுக்கும்
கிரகங்கள் விண்ணுளவி
கவி தொடுத்து விழங்க வைத்தாய்

சாளரத்து வழி தனிலே
திண்ணையிலே விழி வைத்து
ஈழத்து மாணவன் நான்
பெருந்தகையை அறிந்து கொண்டேன்

அடுக்கௌக்காய் உரை பொழிந்து
படம் வரைந்து விளக்கி வைத்த
ஆசானை வாழ்த்தவென
பேனாவை நானெடுத்தேன்

பெரியோரைப் பாரரிவார்
சிறியோனை யாரரிவார்
இருந்தாலும் உணர்வோடு
கடன் தீர்க்க விளைகின்றேன்

அணுவோடு உறவாடும்
பெருமனது உமக்கைய்யா
வாழ்த்துரைக்க வழிதேடும்
மனதோடு நானிங்கு
தினம் வாழ்த்தி உரைத்திடனும்
மனம் போற்றி புகழ்ந்திடனும்
பார் பார்த்து மகிழ்ந்திடனும்
உன் சேவை தொடர்ந்திடனும்

பெரு மனதில் சிறு இடத்தை
வாழ்த்துரையை வைப்பதற்கு
ஆசானை வேண்டி நின்றேன்
ஆதவனாய்ப் பார்க்கின்றேன்.

ஹுஸைன் இப்னு லாபிர்
மள்வானை
ஸ்ரீ லங்கா
Print Friendly
Share

11 Comments for “ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி”

  • பவள சங்கரி says:
    அன்பின் ஹுசைன் இப்னு லாபிர்,
    வணக்கம். தங்களுடைய தேனினும் இனிய கவிமொழியை, மதிப்புரையை, அப்படியே நானும் வழி மொழிகிறேன். தகுதியான ஒருவருக்கு, தரமான வாழ்த்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    பவள சங்கரி
  • ஜெயஸ்ரீ ஷங்கர் says:
    அன்பின் ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கு,
    ஸ்ரீ லங்காவிலிருந்து ஒரு வாழ்த்துக் கவி…
    கனடா வாழ் விஞ்ஞான கவிஞருக்கு..
    எங்கள் மதிப்பு மிக்க திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு..
    படிக்கும் பொது அகமகிழ்ந்தேன்.,
    திண்ணையில், வல்லமையில், அவரது பல கட்டுரைகள்
    நாடகங்கள், கவிதைகள், வாரா வாரம் படைப்புகளாக
    வெளியிட்டு அவரின் தரத்தை உயர்த்திக் கொண்டே
    இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக எழுதப் பட்ட
    தங்களின் வாழ்த்துப் பாடல் அருமை…!
    தாங்கள் பாராட்டிய திருவாளர். ஜெயபாரதன் அவர்களுக்கு எமது பாராட்டையும்..
    வாழ்த்தையும் தெரிவித்து…..இந்த உன்னத படைப்பைத் தந்து சிறப்பித்த உங்களுக்கும்
    எனது உளமார்ந்த நன்றிகளை..இங்கு பவளசங்கரியோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்ள மகிழ்கிறேன்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
  • S. Jayabarathan says:
    வாழிய வென்று பைந்தமிழ்ப் பாக்களில் பாராட்டி
    ஈழத் தமிழ்த் தோழர் திண்ணையில் என்னைச் சீராட்ட
    தோழியர் இருவர் தமிழகத்தில் இனிதாய் வழிமொழிய
    ஊழியன் பூரித்தேன் கனடாவில் கனிவாக நன்றியுடன்.
    ++++++++++++++++++++
    தமிழ்ப்பா எழுதிப் பாராட்டிய ஹுஸைன் இப்னு லாபிர் அவர்களுக்கும், வழிமொழிந்த பவள சங்கரி அவர்களுக்கும், அகமகிழ்ந்த ஜெயஶ்ரீ ஷங்கர் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.
    சி. ஜெயபாரதன்.
  • கௌதமன் says:
    ஜெயபாரதனின் பாரதி பற்றியக் கட்டுரைக்குப் பதிலாக காவ்யா அவர்கள் சென்ற வாரத்தில் கொடுத்த தகுதியற்ற வசை மொழியால் புண் பட்டிருந்த என் மனத்திற்கு மருந்து போல் அமைந்தது இந்தக் கவிதை. என் உளமார்ந்த நன்றிகள் ஈழத்து நண்பரே. எனக்குக் கவிதை எழுத வராது. ஆயின் உங்கள் கவிதையைப் படித்த பின் பவள சங்கரியின் அதே வார்த்தைகளில் முன் மொழிகிறேன். மீண்டும் நன்றிகள்.
  • சி. ஜெயபாரதன் says:
    வழிமொழியும் நண்பர் கெளதமன் அவர்களுக்கு நன்றி.
    காய்த்துக் கனிகள் தொங்கும் மரத்தில்தான் கல்லடிகள் விழும். ஆனால் வெறும் கல்லடிகளும், சொல்லடிகளும் மரத்தைச் சாய்க்க முடியுமா ?
    என்னை யாரும் இகழ முடியாது. அந்த அவல நிலையைத் தாண்டியவர்தான் திண்ணையில் எழுதத் துணிய வேண்டும்.
    சி. ஜெயபாரதன்.
  • Kavya says:
    சில எழுத்துப்பிழைகளைத்தவிர கவிதை நன்று.
    பெரியோரைப் பாரரிவார்
    சிறியோனை யாரரிவார்
    பாரறிவார், யாரறிவார் என்றுதானே இருக்க வேண்டும்? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.
    ஜெயபாரதன் தமிழ்ப்பதிவுலகில் ஒரு நல்ல படைப்பாளி மட்டுமல்லாமல், கொடையாளியும் கூட. எப்படிப்பட்ட கொடையவை என்பதை கவிதை சொல்கிறது. அதற்கு மாற்றுக் கருத்தில்லை.
    முடிந்தவர்கள் செய்வார்கள்; முடியாதவர்கள் செய்பவர்களைத் தூடணை செய்வார்கள்.
    • Bala says:
      ‘பார்’ என்றால் உலகம் அஃறிணை ஒருமை. ‘பாரறியும்’ (பெரியோர்களை உலகம் அறியும்) என்றுதான் வரவேண்டும்.
    • Kavya says:
      இரண்டாவது, பெரியோரை, சிறியோனை என்பதில் மோனையில்லை. பெரியோரை, சிறியோரை என்று இருத்தல் நலம்.
      சங்கப்பாடல் இதோ:
      யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
      தீதும் நன்றும், பிறர் தர வாரா;
      நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
      சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
      இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
      இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
      வானம் தண் துளி தலைஇ ஆனாது,
      கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
      நீர்வழிப் படூஉம் புனை போல் ஆருயிர்
      முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
      பெரியோரை வியத்தலும் இலமே!
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
      • சி. ஜெயபாரதன் says:
        உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
        அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
        தமியர் உண்டலு மிலரே, முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
        புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுநர் உண்மையானே



        On Sat, Feb 4, 2012 at 2:12 PM, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> wrote:
        nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com 
        11:44 AM (2 hours ago)

        to me 

        பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

        வணக்கம்

        இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன். தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு.

        தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

        என்றும் மாறா அன்புடன்

        நந்திதா