ஞாயிறு, 18 நவம்பர், 2012

நாணயம்....! நன்னயம்......!



இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக , மகன் வீட்டுக்குள்ளே நுழைந்து செருப்பைக் கழட்டும் சத்தம் காதில் கேட்டதும், கேட்கிறாள்.

அடச்சே....என்ன மோசமான தலஎளுத்து என்னுது...ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்...மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்..பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்னு....பேரு தான் வீட்டு புரோக்கர்.. தெருத் தெருவா அலைஞ்சு வீடு பாத்துத் தர வரைக்கும் தான் நூறு தடவை ஃபோனைப் போட்டுக் கூப்பிடுவாங்க. வீட்டுக்குள்ளாற நொளஞ்சதும்..இவன் யாருன்னு பாப்பாய்ங்க பன்னாடைங்க ...! .கொஞ்சம் கூட நன்றி கெட்ட சனங்க, ஏமாத்தற சனங்க, இதுங்களுக்குச் செஞ்சு இனியும் கூலி கெடைக்கும்னு நிச்சயமில்லை..தனக்குத் தானேப் புலம்பிய சின்ராசு.....இந்த புரோக்கர் பொளப்ப தூரக் கெடாசிட்டு இனிமேட்டு......!

என்னா செய்யப்போறே...? பெரிய கேள்வி தலையில் குட்டியது..

காலில் சொம்புத் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டிருந்த சின்ராசு...பாயில் சுருண்டு கெடந்த தன் ஆத்தா பாக்கியலட்சுமியைப் பார்க்கிறான்.

என்னடா...பேச்சு மூச்சைக் காணோம்.....அப்பிடியே போய் சேருன்னு சொல்லுதியா? போறேண்டா...போறேன்...நான் போனாத்தான் தெரியும்...உனக்கும் நாதி இருக்காது. அப்போப் புரியும் இந்த ஆத்தாளின் அருமை..

ஆத்தா ...உன்னத்தான்...நானே...நொந்து போயி வந்துருக்கேன்...நீ வேற வெந்த புண்ணுல தீக்குச்சியை எரியவுட்டுக் காமிச்சா எப்புடி? துட்டிருந்துச்சுன்னா....மருந்த வாங்கியாற மாட்டேனாக்கும்...நீயெல்லாம் தேளாப் பொறந்திருக்க வேண்டியவ.....கொட்டியே கொன்னுப்புடுவியே...! பேரு தான் பாக்கிய லட்சுமி....ஒரு பாக்கியத்தையும் காணோம்....எனக்கும் வெச்சுருக்க பாரு....சின்ராசுன்னு ....இப்படி தெருத் தெருவா அலைஞ்சு அலைஞ்சே....நான் சீக்காளிராசாயிருவேன். சொத்து பத்தில்லாம நீங்களே சோத்துக்கு லாட்டரி அடிக்கிற போது உங்களுக்கெல்லாம் புள்ள குட்டி எதுக்குங்கறேன்..? அதுக்குத்தேன் தெருவுல ஏகப்பட்ட நாயிங்க அலையுதே....இதுல நான் வேற.....ராசா.... மந்திரின்னு அலையிறேன். உன் புடுங்கல் வேற...மருந்து எங்கே..?, விருந்து எங்கே? ன்னு..கேட்டுக்கிட்டு, ஒருநாளாச்சும் என்னிய நிம்மதியா ஊட்டுக்குள்ளார நொளயவிடுறியா..?. ...எரிச்சலுடன் பெத்தவளைப் பார்த்து எட்டுக்கட்டையில் குரலை உசத்தி கத்துகிறான் சின்ராசு..

எலேய்... .செத்த பாம்ப அடிக்கிற பார்த்தியா..நீ...! நா .இப்போ என்னா கேட்டுப்புட்டேன்...உன்கிட்ட ..மருந்து எங்கடான்னு கேட்டா....மொகரையக் காமிக்கிறே....நீயெல்லாம் என் பாவத்துக்குப் பொறந்த பயடா. அதான் இப்ப வந்து என் உசுர வாங்க காலடில நிக்கிற .

அழுக்குப் பாயில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்....மகனைத் திட்டி திட்டியே உயிரை வளர்த்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டவளாச்சே.

சின்ன வயசுலேர்ந்து தலையா அடிச்சுக்கிட்டேன்....கூலி வேலை செய்யுற பொம்பள வவுத்துல வந்து பொறந்துபுட்டே...பள்ளியோடம் போயி படி...நீ படிச்சாத்தேன் நாளிக்கு கஞ்சிக்கு யாரு கையையும் பார்க்க வேணாம்னு...கேட்டியா... ? படிக்கிறதத் தவுத்து தெருவுல மேயுற கூத்தாடிக்கெல்லாம் கொடி கட்டி பறக்க விட்டே....இப்பென்னாச்சு...?..அவிங்க ஓங்...கோவணத்தையே பறக்க உட்டுப் போயிட்டைங்க. இப்பவாச்சும் புரியுதா...கூத்தாடிங்க பின்னாடி திரிஞ்சா நிலைமை என்னாவுமமுன்னு . ஒரு கல்யாணம் காட்சி கூட நடக்காது.....வெத்துப் பயல எவ கட்டுவா? பன மரமாட்டமா நின்னாப் போதுமா? சம்பாரிக்கனும்டா...வேலக்கிப் போயி...சம்பாரிக்கோணம்...தருதலை....தருதலை..! என்று தலையில் அடித்துக் கொள்கிறாள்.

........


அமைதியாக கோபத்துடன் சின்ராசு தன் ஆத்தாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்...இன்னம் என்னவெல்லாம் சொள்ளபோவுதுன்னு நானும் பார்க்கிறேன்...!

காலங்கடக்க .பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தக் கூட நாதியில்லாம நிக்கிறே...வவுறு பத்திக்கிட்டு எரியுதுடா..! நாளிக்கி ஒனக்கு எவ கஞ்சி ஊத்துவா...நீயும் கெடக்க வேண்டியது தான்.! காசில்லையாம்...காசு..! எல்லாம் பொய் சாக்கு..டாஸ்மாக்கு பக்கம் போகாமலா வந்திருப்ப..? அதுக்கு மட்டும் தெனம் எங்கிட்டிருந்து காசு கெடைக்குது..உனக்கு..? அதுவா ஓடியாந்து ஒட்டிக்கிச்சா...? கேள்வி கேட்டு சின்ராசை உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தாள்.

............
இதையும் கேட்டுக் கொண்டு வீம்பாக நின்று கொண்டிருந்தான் அவன்.

எலேய்...என்னக் காப்பாத்திக் கொடுல்லே...நீயும் நல்லாருப்பே..நான் நடமாடி நாலு ஊட்டுப் பாத்திர பண்டம் களுவி உன் வவுத்தை நிறைச்சுப்புடுவேன்...! உனக்கு ஒரு கலியாணம் கூட கட்டி வெப்பெண்டா ...என்னிய நம்பு. அவள் குரலில் கெஞ்சல் இருந்தது.

ஆத்தா...நானா...நீ வேணாம்னு நினைக்குதேன்..அதான் அந்தாளு....ஓம் புருசன்...ஓங் கூட வாளப் பிடிக்காமதேன் கரித்துண்டுல கிறிக்கிப்புட்டு வேறொரு சிறுக்கிய இளுத்துக்கினு ஓடிப் போச்சே...அப்பவே நானும் களண்டிருக்கணும் செஞ்சனா....நீயே சொல்லு செஞ்சனா...பெத்த கடைமையின்னு, ஆத்தாளாச்சேன்ன்னு இன்ன வரிக்கும் உம் மவனா நிக்கல..! எகிறிக் கொண்டு வந்தான் சின்ராசு. நீ ஒரு வாட்டியாச்சும் நான் நல்லா இருக்கணுமுன்னு.நெனச்சாத்தேன்.நானும் நல்லாயிருப்பேன்....நீ எங்க நெனப்ப....எப்பப் பாரு....என்ன அவிச்சு எடுத்தாத்தேன் உனக்கு சீரணமாகும்..நா இப்பல்லாம் குடிக்கிறதே இல்ல அதுவாச்சும் தெரியுமா...உனக்கு.? நீதான் என்னிய திருந்தவே உடாம வறுத்துக் கொட்டுவியே..அந்தாள மாதிரி ஓடிப் போயிருக்கோணும்...அப்பத் தெரியும் என் அருமை உனக்கு.! சின்ராசின் குரல் அதிருகிறது.

ம்க்கும்.....அதேன் .....அது என் கழுத்துச் சத்துரு......அத்துகிட்டு எவளையோ பாத்து ஓடிச்சு...நீ என் வவுத்துச் சத்துரு.....இருந்து களுத்த சுருக்குற....எனக்கு ஒண்ணும் பெரிய வித்தியாசம் காணலை....இப்ப என்னாத்துக்கு பளைய கதய பேசுறே...நீ...?

ஹக்....ஹக்....ஹக்....ஹக்....சொல்லிவிட்டு தொடர்ந்து இருமுகிறாள்.

செருமலோட..."உன் உதாருக்கேல்லாம் வேற ஆளப் பாரு...என்கிட்டே எகிறாதல...நான் நெனக்காமதேன் இம்புட்டு வளந்து நிக்குறியாக்கும்"..வெட்டிப் பய உனக்கே வாயி பொடனி வரிக்கும் நீளுதே....! உன்ன வளத்து ஆளாக்கின எனக்கு எம்புட்டு இருக்கும் ?

தோபாரு..ஆத்தா .இன்னொரு வாட்டி இப்பிடில்லாம் சொன்னீன்னா, பொறவு இந்த வீட்டுப் பக்கமே தலையைக் காட்ட மாட்டேன் ஆமா....சொல்லிட்டேன்..

அடப் போடா....சீமான்...கை நிறையக் கொண்டுட்டு வந்து கொட்டுற ...வைக்க எடம் இல்லாம நான் தவிக்கிறேன் பாரு.....நீ வரலையின்னு நான் மூக்கைச் சீந்தவா? எக்கேடோ... கெட்டுத் தொலை..மருந்த வாங்கியாந்தியாடான்னு கேட்டா...அதுக்கு இம்புட்டு வியாக்கியானமா? வெளங்காத பய....நீ வரதும் ஒண்ணுதேன்...தொலையிறதும் ஒண்ணுதேன்..! அனாதப் பொணத்துக்க்கும் நாலு பேருதேன்..போ..!

முனகியபடியே பாயில் படுத்துக் கொள்கிறாள்..படுத்தும் சும்மா இருக்காமல்...."நான் புள்ளேன்னு....நெனச்சு...இவனுக்குப் தொட்டில் கட்டிய நாளுக்கு ஒரு அம்மிக்கல்லை கொத்தி இருந்தா....கூஊகும்........என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க....!

த்தா....நிறுத்து உன் பிலாக்கணத்த....இப்ப இன்னா இங்கன எளவா விழுந்து கெடக்கு.?..நானும் நாயா அலைஞ்சு தான வீடு பார்த்து, பிடிச்சுக் கொடுத்து பிரோக்கர் கமிஷன் வாங்கியாறேன்.இப்போ ஆடி மாசம் என் பிசினெஸ் கொஞ்சம் டல்லு...அதும் போன மாசம் வீடு பிடிச்சிக் கொடுத்த கமிசன் பணம் முள்ளங்கிப் பத்தையா பத்தாயிரம் தரோணும்...இதோ தரேன்..இப்பப் தாரேன் ன்னு சொல்லி சொல்லியே என் செருப்பைத் தேச்சுப்புட்டான்..நானும் நெதம் நாயா அலைஞ்சு தான் கேக்குறேன்....! இன்னும் ஒத்தப் பைசா தரல. அது கண்டிப்பா கெடைக்கும். அம்புட்டையும் கொண்டாந்து ஒன்கிட்ட தாரேன்..போதுமா?

அம்புட்டுப் பெரிய ஊடு...நான் சொல்லும்போது வாயெல்லாம் பல்லா வந்து நின்னாங்க...அந்த ஐயிரும்,மாமியும்.!..பேசி முடிச்சி கொடுத்து குடி வந்து மூணு மாசம் ஆவப் போவுது....பிறவு தாரேன் கொஞ்சம் பொறுன்னு சொல்லிப்புட்டு,.... இப்போ கேட்டா...நீ என்னா....எனக்குக் கடனாக் கொடுத்தியா ?ன்னு வாய் கூசாமே அந்த மாமி கேட்குறா...கேவலம்...ஒரு நூறு ரூபாத் தாள் கூட கையில கொடுக்காமே ஏமாத்திருச்சுங்க,.இவிங்கல்லாம் பெரிய மனுசனுங்க. இத்தனைக்கும் பெரிய பணக்காரங்கன்னு பேரு,

நா என்ன அதுங்க கிட்ட என் மானத்தை உட்டு பிச்சையாக் கேக்க முடியும்..உதார் உட்டா...ஆனதைப் பாருங்குது, பெருசு..!.


வெளில ஒலகம் இப்படி இருக்கேல, பாயில கெடக்குற ஒனக்கு என்னாத் தெரியும் என் பாடு..? எதுக்கும் சாயந்தரம் கடீசியா..இன்னொரு தரம் அங்க போயி கேக்குறேன். தரத வாங்கி மருந்து வாங்கியாறேன். அப்படி இல்லேன்னு வையி...இந்தூட்டுப் பக்கமே வராமே எங்கனா போறேன்...சரி தான.

.......................

என்னாங்கரே, இப்போ நீ? நான் இம்புட்டு சொல்லுறேன்...நீ வாயத் தெறந்து பதில் சொல்லு....!

இம்புட்டுப் பெரிய உலகத்துல ஒனக்குன்னு ஒரு சின்ன வேலை கூடவா கெடைக்க மாட்டேங்குது..சின்ராசு...? புரோக்கராம்...புரோக்கர்....! உழைச்சு பாருடா....காசு கனக்கும்..கையில .தங்கும்..! சொல்லிக் கொண்டே குவளைத் தண்ணீரை எடுத்து மடக் மடக் கென்று குடித்தவள் மறுபடியும் பாயில் சுருண்டு கொண்டாள்.

இதைப் பார்த்ததும் ....ஏனோ சின்ராசுக்கு நம்ம அம்மாவின் இந்த நிலைக்கு தானே தான் காரணம்..முதலில் ஒரு வேலையைத் தேடு என்று மனசாட்சி நெஞ்சில் அறைந்து சொன்னது போலிருந்தது.அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து அவனை உசுப்பியது.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் சின்ராசு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

இந்தப் படிக்காத பரதேசிக்கு என்னா வேலை கெடைக்கும்....? ஆத்தா சொல்லுறது எல்லாம் சரிதானோ ..? மனசாட்சி முதல் முறையாக அவனையே வெறுத்தது...!

கால்கள் தானாக ,அந்த ஊரின் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று நின்றது. .அங்கே "காலணிகளை இங்கே வைக்கவும்.." அந்தப் பலகை அவனைத் தட்டி எழுப்பியது. "கேளுடா சின்ராசு " என்றது.


பக்கத்துக் கடைக்கு சென்று "அண்ணே...நானும் இங்கே ஒரு செருப்ப பாத்துக்கற கவுன்டர் போடலாம்னு இருக்கேன்...கொஞ்சம் உதவி செய் நண்பா..அங்கிருந்த தன் பழைய நண்பனைப் பார்த்து கேட்கிறான் சின்ராசு..! இதுக்கு யாரப் பாத்து பேசணும்னு சொன்னா புண்ணியமாப் போகும்...சின்ராசுவின் குரலில் குழைவு இருந்தது.

நீயாடா...சின்ராசு ?.நல்லதாப் போச்சு...நீ இன்னாத்துக்கு புதுசா கவுன்டர் போடணும்...இதோ...இத்த எடுத்துக்கோ...நான் பக்கத்துல அர்ச்சனைத் தட்டு கடை குத்தகைக்கு எடுத்திருக்கேன்...நீ இத்த எடுத்து பண்ணு தல..!.நானும் பத்து நாளா இத்த மாத்திவுட ஆள் தேடிக்கிட்டே இருக்கேன்....என்று பெரிய மனசு பண்ணி கடைக்கார நண்பன் சொல்வதை கேட்ட சின்ராசுவின் முகம் பிரகாசமாகிறது.

ஏதோ லாட்டரி அடித்தது போல் உணர்ந்தான் சின்ராசு...முதல் முறையாக அந்தக் கோவிலின் கோபுரத்தைத் கையெடுத்து கும்பிட்டு...தொளிலக் கத்துக் குடுண்ணே....பிறகு பாரு.. பாட்டா ஷோரூம் ஒண்ணு வெச்சிபுடலாம் ...என்று சந்தோஷமாக...சொல்கிறான். ஒரு விதத்தில் ஆசை தான் ஆளை உயர்த்தும்.

அண்ணே...!அதுக்கும் மொதல்ல .இத்த... என் ஆத்தா கையில சொல்லிப்புட்டு வந்திர்றேன்..சந்தோசப்படும்.அதுவரைக்கும் வேற யாருக்கும் இந்த வேலையத் தந்திடாதீங்க...என்று உத்திரவாதத்தோடு...அங்கிருந்து பெரிய வேலை ஒன்று கிடைத்து விட்ட நிம்மதியில் கிளம்பினான் சின்ராசு.

ஆண்டவன் கண்ணத் தொறந்துப்புட்டான்..இப்போவே ஐயர் ஊட்டுல கமிஷன் கேட்டா அவரும் தந்துச்சுன்னா ஆத்தாக்கு மருந்துக்கும் ஆச்சு....கைசெலவுக்கும் ஆச்சு...கணக்குப் போட்டபடியே...ஐயாயிரம் தந்தாலும் போதும்...மனசுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டே நடராஜன் ஐயர் வீட்டை நோக்கி விறு விறுவென்று நடந்தான்.மனசுக்குள் ஒரு நம்பிக்கை. நம்ம காசு நமக்கு கெடச்சுடும். உளச்சது ...அலஞ்சு அலஞ்சு பார்த்த வீடு இது...ம்ம்ம்..!

நடராசன் ஐயர் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்துகிறான்.


"ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்....பர்கோ..." அழைப்புமணியின் இசை வீடெங்கும் இசைக்க....

ஏன்னா..... சித்த யாருன்னு பாருங்கோ....கோகிலா பூஜை அறையிலிருந்து குரல் கொடுக்க..

கதவைத் திறந்த நடராஜன்..."வாப்பா...சின்ராசு...நீயா....மாமி சொன்னா...அடிக்கடிக்கு சின்ராசு வந்துட்டுப் போறான்னுட்டு..என்ன விஷயம்...? என்று ஒன்றுமே தெரியாதவர் மாதிரி கேட்கிறார் அவர்.

ம்ம்...ஆமாங்கய்யா.....வீடு நல்லா இருக்கா....எந்தப் பிரச்சனையும் இல்லல....தண்ணி நல்லா வருதா?...அதோட எனக்குத் தர வேண்டிய கமிஷன் பணம் இன்னும் வரலை....அத்தக் கொடுத்தீங்கன்னா.....சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து வாங்கோணம்..பவ்யமாகக் கேட்கிறான் சின்ராசு.

ஒ...அந்தக் கமிஷனா? இரு வரேன் என்பதற்குள்...!

ஏன்னா...தோ ....பாருங்கோ......உங்களுக்கு போன் வந்துருக்கு...ஆஃபீஸ்காரா யாரோ...உங்ககிட்டப் பேசணுமாம்...முக்கியமா....என்று கோகிலா கைபேசியைத் தூக்கி காண்பித்து, அழைக்கிறாள்.

தோ..இருப்பா...என்னன்னு பேசிட்டு வரேன்....என்று வேஷ்டியை..காலால் லேசாக மேலே உந்தித் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டே உள்ளே போகிறார் நடராஜன்.

ஐந்து நிமிஷத்தில் திரும்ப வந்து...ம்ம்..இந்தா..அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னே....வெச்சுக்கோ என்று சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கையில் திணித்து விட்டு....அப்போப் ..பார்க்கலாம்...என்று தலை அசைக்க...."போயிட்டு வாடா.." என்பது போலிருந்தது....சின்ராசுக்கு.

என்னங்க இது..வெறும் அஞ்சு நூறு தாரீங்க ..., ஐயா..இது ..ரொம்ப அநியாயம்....இதெல்லாம் பேசித் தானே...என்று இழுக்க.

இதுவே ரொம்ப ஜாஸ்தி.ன்னு மாமி சொல்றா...ஏதோ நானும் கேட்டேன். நீயும் சொன்னே. மேற்கொண்டு என்ன...? அட்வான்ஸ் தான் குறைச்சலா? இல்லை வாடகை தான் கம்மியா? நீ வீட்டுக் காரன்ட்ட போயி என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ...இனிமேல் என்னைத் தொல்லை பண்ணாதே. மாமி கோவிலுக்குப் போகணுங்கறா...நேரமாறது எங்களுக்கு..சொல்லிக் கொண்டே போற போக்கில் கதவை லேசாக சார்த்தித் தள்ளிவிட்டபடியே.திரும்பி நடக்கிறார்

தூரத்தில் மாமி..தன் பட்டுப் புடவையால் மூக்குத்தியின் வைரத்தை துடைத்துக் கொண்டு...அப்படியே காதில் டாலடிக்கும்வைரக் கம்மலையும் துடைக்கும் பணியில் இறங்க...அவளின் கண்கள் சின்ராசு போயிட்டானா...?.என்பது போல் எட்டிப் பார்க்கிறது..

நிலைப்படியில் நின்றிருந்த சின்ராசு, அய்யா கொடுத்திருப்பாங்க...அந்தம்மா தான்...ஈறு வந்திருக்கு...பேனு வந்திருக்குன்னு போனைக் காட்டி சும்மானாச்சுக்கும் கூப்பிட்டு...கெடுத்துச்சு .ஏமாத்தறதுக்கு இப்படி எல்லாம் கூட வளி கண்டு பிடிச்சு வெச்சுருக்கு...பாரு..! மாமி சாமர்த்தியமான மாமி..எத்தனை ஏழைங்க வவுத்துல அடிச்சுதோ....இப்போ என் வவுறு எரியுது..இந்த எரிச்சலுக்கு பதில் சொல்லித் தான ஆவோணம்...இனி இங்கன நின்னு ஒரு பிரயோசனமும் இல்லை என்று வாசற்படி இறங்கி...மருந்துக் கடையை நோக்கி போகிறான்.

போகும்போது...டாக்டர் சீட்டு இருக்கா என்று சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள, சீட்டு வியர்வை பட்டு நைந்து நாலாக மடிந்து பத்திரமாக அவனது பாக்கெட்டில் இருந்தது., ஐயர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து உள்ளே செருகிக் கொண்டு..பரவால்ல.இப்ப ஆத்தாளோட .மருந்து பிரச்சன தீந்துச்சு...! என்று நெஞ்சைத் தட்டிக் கொள்கிறான்.

நடக்கிறான்......நடக்கிறான்......வழியில்....ஒரு குரல்.

"அண்ணே......சின்ராசண்ணே...நம்ப இளைய தளபதி தீபாவளி புது ரிலீசு "துப்பாக்கி" க்கு புதுசா ஒரு ....கட் அவுட் நிக்க வெக்கிறோம் அதுக்கு ஆயிரத்தி எட்டு துப்பாக்கி வெச்சு மாலை ஒண்ணு கட்டிப் போடப் போறோம்....அதுக்கு கட்ட ஆள் கை குறையுது...கை குடுக்கிறதில்லையா?....வாண்ணே....நீனும் ஒரு கை குடுண்ணே ..என்று கோவிந்தின் குரல்...தான் அது.

இதே...மற்ற நேரமா இருந்திருந்தால் கை வேலையை அப்படியே போட்டபடி......அட..அப்பிடியாடா கோவிந்து .நம்ம இளைய தளபதிக்கா ...நூறு துப்பாக்கியால மாலையா ? என்று வாயப் பிளந்தபடிக்கி ...ஓட்டமா.... ஓடியிருப்பான்...மாலை கட்ட.

ஆனால்...இப்போ!..."போடா...டேய்....பொளப்பத்த பொறம்போக்கு..போயி ஒஞ்...சொந்த பொளப்பப் பாப்பியா...? கட் அவுட் வைக்கணும்....கட்டவுத்து விடணும்னு கூப்பிட்டுட்டு....வேற எவனாவது இளிச்ச வாயனாப் பாரு போ...என்று .எகத்தாளமாக சொல்லிப்புட்டு நகருகிறான் சின்ராசு.

மனசுக்குள் ஒரு பெருமிதம்...நீ இனிமேட்டு பிளச்சுக்குவே...என்றது.

காதருகில் ஆத்தாவின் குரல் "இப்பத் தாண்டா நீ என் மவன்..சபாசு சின்ராசு ." அசரீரியாகக் கேட்டது.

திடுக்கிட்டு ஓட்டமும் நடையுமாக மருந்துக் கடையில் மருந்தை வாங்கிக் கொண்டு அப்படியே கிருஷ்ணபவனில் இட்டிலி பொட்டலமும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான் சின்ராசு....எங்கிருந்தோ ஒரு பாசம் வந்து அவனைக் கவ்விக் கொண்டது.

வீட்டை நெருங்கியதும்....ஆத்தாவுக்கு சரியாகணும்....என்று முருகனிடம் வேண்டிக் கொண்டது மனது.

ஆத்தா...ஆத்தா ..இந்தா, எந்திரி...உனக்கு மருந்து வாங்கியாந்துட்டேன்....இந்தா இந்த இட்டிலிய தின்னுப்புட்டு மாத்திரைய சாப்பிடு..சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான்.

அட...சின்ராசு....என் மவனே...வந்தியாடா என் ராசா...நீ எப்பிடியும் வருவேன்னு நல்லாத் தெரியும்....என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள்....நான் பேசினத எத்தியும் மனசுல வெச்சுக்காதே என் கண்ணு....என்று கண்கலங்கிப் போகிறாள்....தாய் மனம்...அங்கே தள்ளாடி தடுமாறி...பேச்சு சிக்குது.

ஏன் ஆத்தா....நீ ஒண்ணு...நீ கடுமையா சொன்னதாலத் தான்...எனக்கு..புத்தி வந்துச்சு,,, அத்த விடுத்தா...இன்னிலேர்ந்து கோயில் வாசல்ல செருப்பப் பார்த்துக்கற உத்தியோகம்.....போகட்டா....? உன்கிட்ட சொல்லிப்புட்டு இன்னிலேர்ந்து வேலக்கிப் போறேன். அனேகமா சொந்தமாத்தேன்....இது..! சொல்லும்போதே அவனுக்குள் ஒரு பெருமை.

மவராசனா போயிட்டு வா சின்ராசு...அதுங்கூடப் புண்ணியந்தேன்..! நெதம் கோயில் வாசல்ல கெடக்க புண்ணியம் பண்ணியிருக்கோணம். உனக்கு இனிமேட்டு நல்ல காலம்தேன்...என்று மனசார அவனை வாழ்த்துகிறாள் அவள்.

சின்ராசு அவனது ஆத்தாளின் போக்கு மாறியிருப்பதைப் பார்த்து வியந்தபடி....அடப் பார்ரா ..சினிமாவுல தான் இப்படி காமிப்பாய்ங்க, நம்மூட்லயும் நடக்குதே..எல்லாம் என் நல்ல நேரம் தான்.

சந்தோஷமா....குளிச்சு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கோயில் வாசலில் போய் கவுன்டர் பக்கத்தில் டோக்கனை எண்ணிக் கொண்டு நிற்கிறான்.

யார் யாரோ வருகிறார்கள்.....குனித்து நிமிர்ந்து செருப்பை எடுத்து வைத்து டோக்கன் கொடுத்து மும்முரமாக இருந்தவனை....என்னப்பா...சின்ராசு...இந்தத் தொழிலுக்கு எப்போ வந்தே..? என்ற குரல்....நிமிர்ந்து பார்க்க வைத்தது.

நடராசன் ஐயரும்...மாமியும்....மனதில் நிறைந்த அருவெறுப்பு முகத்தில் மின்னலென ஓட....!

ஆமாஞ்சாமி.....யாரும் ஏமாத்த முடியாதுல்ல...என்று வார்த்தை சாட்டையை வீசி விட்டு..அங்க பாருங்க..என்று சைகை காமிக்கிறான்.


"செய்யும் தொழிலே தெய்வம்..." என்ற ஒரு அட்டையும்....அதன் கீழே...


"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"

என்றும் எழுதி இருந்தது.

பதிலே சொல்லாமல் செருப்பைக் கழட்டி போட்டுவிட்டு "எல்லாம் நேரம்.." என்றபடி சென்றவர்களின் செருப்பை எடுத்து ஸ்டாண்டில் வைத்தவனின் மனசு...நினைத்தது. "இறைவன் ஒரு வாசலை மூடினால் ஒரு ஜன்னலைத் திறக்கிறான்" இவர் பத்தாயிரத்தை ஏமாற்றினால் என்ன...கடவுள் நிரந்தரமா ஒரு வருமானத்தை என் உழைப்புக்கு அள்ளிக் கொடுத்திருக்கானே....எண்ணியபடியே..தன் வேலையில் கவனமாக இருந்தான் சின்ராசு.


கோவிலுக்குள் கூட்டம் சேர சேர...இவனது கடை முழுதும் செருப்புக்களால் அடைந்து கிடந்தது.

நேரம் செல்லச் செல்ல...செருப்புகள் குறைந்து கொண்டே வந்தது...கடைசியாக நடராஜன், மாமி இருவரின் செருப்பும் கூட இறங்கியது...குனிந்து சரி செய்து கொண்ட மாமி....அவனுக்கு பத்து ரூபா கொடுங்கோ பாவம்... என்று பெரிய மனது பண்ணி சொன்னாள் மாமி.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.....வெறும் ரெண்டு ரூபா கொடுங்க போதும்.,..என்றதும்...!


இரண்டு ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு சென்றவர்கள் பேசியது சின்ராசுவின் காதில் விழுந்தது.

இந்தத் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...இது மாமி.

ஆம்மாமாம்.... இது அவர்.

இருவரும் ஏதோ சொல்லி முனகிக் கொண்டே விறுவிறென்று நடந்து சென்று வண்டியில் ஏறி மறைந்தனர் ஜாடிகேத்த மூடியாய்.

கடைக்கு வெளியே வந்து நின்ற சின்ராசுவின் காலில் ஏதோ நெருட, கீழே பார்த்தவனுக்கு பகீரென்றது.!..பள பள வென்று வைரங்கள் மின்னி டாலடித்துக் கொண்டிருந்தது.. அது ஒரு .ஒத்தைக் கம்மல்....!

அதைக் கையில் எடுத்ததும் புரிந்து போனது....."அடடா...இது அந்த மாமியோட வைரக் கம்மல் போல் இருக்குதே.." கீழே கழண்டு விழுந்துடுச்சா? அடப் பாவமே.....இது தங்கமா...? வைரமா? கண்ணப் பறிக்குதே ....!அவங்கதா..இல்லை வேற யாருதாச்சுமா...? யோசனையோடு கடையைக் கட்டிவிட்டு ஒரு சிறிய துண்டுக் காகிதத்தில் கம்மலை மடித்து சட்டை பையில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டான்.

காலீலத் தான் அண்ணன்கிட்டக் கேட்டேன்...அண்ணே...ஏதோ எழுதி போட்டுருக்கே..அது என்னாதுன்னு..?

செருப்பு தானேன்னு அசால்டா இருக்கக் கூடாதுடா.....அது பக்தர்களோட சொத்து...அவிங்க வரும்போது பத்திரமா பாதுக்காகிற தொழில் தான நாம செய்யுறோம்....அதனால தான் செய்யும் தொழிலே தெய்வம்...ன்னு எழுதி போட்டு இருக்கேன். சூதானமா இருக்கொணும்டா..சும்மா செருப்பு தானேன்னு அசால்ட்ட இருக்காதே....செய்யும் தொழில தெய்வமா நினைச்சாத்தேன் வாழ்க்கையிலும் முன்னேறலாம் .என்றார் அவர். காலம் கடந்த பாடம்...கற்றது போலிருந்தது....எத்தனைக் காலம் வீணாப் போச்சு.

அப்ப...இது இன்னாது...? இன்னொரு அட்டை...?

அதுவாடா....இது திருவள்ளுவர் சொன்னதுடா. திருக்குறளு..! நமக்கு ஒருத்தன் கெட்டது செஞ்சாலும்..அவனே வெக்கப்படுற அளவுக்கு அவிங்களுக்கு நாம நல்லது செய்யோணம்...முடியுமாடா உன்னால..? அண்ணன் கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது.

முடியும்...! என்று தீர்மானமாகச் சொல்லிக் கொண்டான்.

அவன் மனசுக்குள் "நன்னயம் செய்து விடல்..." என்ற வாக்கியம் வந்து போனது.

கோவிலுக்குச் சென்று நேரே வீட்டுக்கு வந்த கோகிலா...தன அறைக்குள் சென்று புடவை மாத்தும் நேரம்..எதோ மெல்லியதாய்...தோள்பட்டையிலிருந்து நழுவிய உணர்வு தோன்ற...சுதாரித்துக் கொண்டு தேடவும்....அய்யய்யோ..இதென்ன கம்மலோடத் திருகாணின்னா ."அப்போ வைரத்தோடு..கை தானாகக் காதைத் தொட்டுப் பார்த்து தூக்கி வாரிப் போட ." நெஞ்சம் பகீரென்றது.....கண்ணாடி முன்னால் பார்த்ததும் தெரிந்தது...ஒத்தைக் காது மூளியாக இருந்தது...."இது எப்படி , எப்போ கழண்டிருக்கும்...?.." பதறியவள், கைக்கு கிடைத்த புடவையை எடுத்து சுத்திக் கொண்டு..." என்னன்னா....ஏன்னா....என்னோட ஒரு தோட்டைக் காணோம்...." எங்கே விழுந்ததுன்னே தெரியலை..இப்போத்தான் திருகு கிடைச்சுது...என்று அலறிக் கொண்டே அறையை விட்டு வெளியே வருகிறாள்.

என்னடி கோகிலா சொல்றே.....? வைரத் தோடு தொலைஞ்சு போச்சா....! அடிப் பாவி....தோட்டைத் தொலைச்சாச்சா...?
அது வேற ஒண்ணுமில்லடீ...ஒரு ஏழையின் உழைப்பில் கமிஷன் தராமல் ரொம்ப புத்திசாலி மாதிரி ஐடியா சொல்லி அவன் வயித்தில் அடிச்சோமில்லையா...? அதான் இப்போ கைமேல் பலன்.....! கலி காலமடி...! எதுக்கும் காத்துண்ட்ருக்க வேண்டாம்.கார்த்தால பண்ணினா சாயந்தரமே....பலன் .கெடச்சுடும்..! கணவரின் பதில் .

போதும்...போதும்.நிறுத்துங்கோ ....நேரங்காலம் தெரியாமல் எதுக்கும்.... எதுக்கும் முடிச்சுப் போடறேள்...? நான் இங்க தவிக்கிறேன்....உங்களுக்கு நக்கலும் நையாண்டியும் எங்கேர்ந்து தான் வருமோ? கொஞ்சமாவது வருத்தம் இருக்கா..? தொலஞ்சது என்னோட தோடு தானே..? எப்படி வரும்...வருத்தம்...!

இந்த ரோட்டில் எங்கே போயி தேடுவேன்...அது எங்க விழுந்துதோ....இன்னத்த விலைக்கு..அம்பதாயிரம் ரூபாய் விலை இருக்கும்....நெஞ்சு பட படங்கறதே நேக்கு....! பகவானே...உன்னைப் பார்க்க வந்த எங்களுக்கு இந்த சோதனையா.....? என்று அலைபாய..!

இவர் சொல்றா மாதிரி, கார்த்தால அவனுக்கு பத்தாயிரம் தராத பண்ணினேனே...அதுக்கான அஞ்சு மடங்கு தண்டனையா இது? முருகா...தோடு மட்டும் கெடைகட்டும்....சின்ராசை நானே பார்த்து அவனோட கமிஷனைக் கொடுத்துடறேன்...சத்தியமாக் கொடுத்துடறேன்....! என் தோடு கெடைக்கணும்....பகவானே...!அந்தத் தோடு அவளைப் பாவமன்னிப்பு கேட்க வைத்தது.

"ஓம் பூர் புவஸ்ஸுவஹ..தத் ஸ விதுர்வரேண்யம்....பர்கோ..." அழைப்பு மணியின் இசை வீடெங்கும் இசைக்க...இந்த நேரத்தில் யாராயிருக்கும்...?.இருவரும் ஓடிவந்து கதவைத் திறக்கிறார்கள்....!

வாசலில் சின்ராசு. அவன் பார்வை நேராக மாமியின் காதைப் பார்த்தது. அங்கே அவளது இருண்ட மனம் தெரிந்தது. மாமியின் ஒற்றை வைரத் தோடு சின்ன ராசு கண்ணை வெட்டியது. சின்ராசு கைக் காகிதத்தில் இருந்த வைரத்தோடு மாமியின் கண்ணை வெட்டியது.

ஹீரோ


பல்கலைக் கழகத்தில் பிரச்சனை வந்து அனைத்து வெளி மாநில மாணவர்களும் அவரவர் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.


அரவிந்தும் வழக்கம் போல தனது நண்பர்களை கடலூர் வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக செல்கிறான்.


அங்கிருந்த இரண்டாம் நடை மேடையில் இருந்த ஒரு பலகையின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்களாம். ரயில் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்று அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்று.


சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சத்தம்...."அம்மாம்ம்ம்மா ம்மா ம்ம்ம் மா ...என்று தொடர்ச்சியாக கேட்கவே...


இவர்கள் கண்ணுக்கெட்டிய வரை எதுவும் புலப் படாததால்....என்னடா..பக்கத்துல சத்தம் கேட்குது...ஆனா பக்கத்துல ஒண்ணும் இல்லையே....மாடு சத்தம் மாதிரி இருக்குடா....என்று ஒருவன் சொல்ல, இன்னொருவன் ...ஆமாண்டா...பேயில மனுஷப் பேய் மாதிரி மாட்டுப் பேயும் இருக்கும்...." என்று தமாஷ் செய்து கொண்டிருதிருக்கிரார்கள்.


திடீரென..ஒரு வட நாட்டவர்...கையில் ஒரு தடியோடு வந்து...."உஷ்....உஷ்...உஷ்....ஜா..ஜா....ஜா...." என்று நடை மேடையிலிருந்து விரட்டவும்..


இவர்கள் மூவரும் எழுந்து அங்கு சென்று என்ன என்று பார்க்கிறார்கள்.


அங்கே...ஒரு நடுத்தர அளவு பசு மாட்டு கன்று ஒன்று தண்டவாளத்துக்கு அருகின் நின்றபடியே.....மேலே எழும்ப முடியாமல்....எப்படியோ.....சம தளத்திலிருந்து உள்ளே புகுந்து வந்த கன்று...தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டிருந்தது.


இவர்கள் விரட்டினாலும் அது நடந்து போய் மேலே சம தளம் சேர நேரமாகும். என்ன செய்வது.? என்று அறியாமல் நின்றிருந்த இவர்கள் ...குழப்பத்தில் இருந்தார்கள்.


நள்ளிரவு நேரமானதால் யாருமே இல்லை...வெறும் நான்கு பேர்கள் மட்டும் இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது..திடீரென தூரத்தில் பிரகாசம்...ரயில் வருவதற்கான அறிகுறி.


இப்ப என்ன பண்றது...? ரயில் வராப் போல இருக்கே.. நிற்க நேரமில்லாமல்..


அரவிந்த் உடனே கீழே குதித்து அந்த பசு கன்றை அலாக்காகத் தூக்கி நடை மேடை மேலே போட்டதும்...
அது கீழே விழுந்து நொண்டி எழுந்தபடி...சென்று விட்டது.


இவன் கிட்டத் தட்ட நூறு கிலோ எடை கொண்ட அந்த பசுவைத் தூக்கும் பொது அது திமிறி அதன் சின்னக் கொம்பை ஆட்டி இவன் கழுத்தின் வலப் பக்கத்தில் ஒரு இடி இடிக்க....நல்ல வேலையாக மேலே தோல் மட்டும் லேசாகக் கிழிந்தது. ரத்தம் வழிய...இவனும்...அங்கிருந்து எழும்பி மேலே குதித்து ஏறவும்...அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர்களை கடந்து செல்லவும் சரியாக இருந்ததாம்.


உடலெங்கும் புல்லரிக்க அங்கிருந்த நால்வருக்கும் திகில்.


அந்தப் பெரியவர்..."தம்பி...நீ பிழைச்சது பாக்கியம்...நீ அந்த பசுவை பிழைக்க வெச்சது புண்ணியம்" என்று சொன்னாராம்.
இதை வந்து அவன் சொல்லி கழுத்தைக் காண்பித்த போது . " நீ ஒரு உயிரைக் காப்பாத்தி இருக்கே...."
உனக்கு ஒண்ணும் ஆகாது...பகவானின் கருணை என்றும் நம் குடும்பத்துக்கு உண்டு..."
ஒரு காரணம் இன்றி ஒரு காரியம் அமையாது....அந்த பசுவைக் காப்பாற்ற உன்னை கண்ணன் இங்கிருந்து அழைத்திருக்கிறான்..." என்று நினைக்கும் போது ..எந்தன் நெஞ்சமும் நெகிழ்ந்தது.


இது நடந்து நான்கு நாட்கள் ஆகி விட்டது. இப்போது அரவிந்தின் காயம் தேவலை.


ஞாயிறு, 11 நவம்பர், 2012

காலத்தில் அழியாத காவியம் தர வந்த..

காலத்தில் அழியாத காவியம் தர வந்த..

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
ஆண்டு: 1966

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா?

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன்
சொல்லுக்கு விலையாகுமே மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா மகனே என்
அருகினில் இருப்பாயடா

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்http://mp3.tamilwire.com/mahakavi-kazhidas.html

வியாழன், 8 நவம்பர், 2012

வாழ நினைத்தால்....வீழலாம் ...!

(இது ஓர் உண்மைச் சம்பவம்)




காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து “வாழ நினைத்தால் வாழலாம்…வழியா இல்லை பூமியில் ” என்ற பாட்டுக் கேட்கிறது…இவனும் அந்தப் பாடலை முணுமுணுத்தபடியே மகிழ்ச்சியோடு நடக்கிறான். மனதுக்குள் கண்டிப்பா “பாஸ் ஆயிடுவேன்…”என்றும் ஒருதரம் சொல்லிக் கொண்டான்.

பல்கலைக்கழகத்தின் டீன் அலுவலகம் முன்பு என்றுமில்லாமல் ஏகப்பட்ட மாணவர்கள் கூட்டம். இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது செமெஸ்டர் ரிசுல்டுகளை நோட்டீஸ் போர்டில் ஒட்டப் போவதாக வந்த அறிவிப்பு தான் அத்தனை கூட்டத்துக்குக் காரணம். அவனைப் போலவே ஆர்வத்தோடு மாணவர்கள் ஒன்று கூடி காத்திருந்தார்கள். அங்கே சலசலப்புக்கு பஞ்சமில்லை.

டேய்..வைரம்…!..உனக்கு எதுனா பழைய அரியர் இருக்காடா மச்சி….! வைரவனைப் பார்த்து நண்பன் வாசு சத்தமாகக் கேட்கிறான்.

இதுவரைக்கும் இல்லடா…ஆனா இந்த ஆறாவது செம் ல….ஒரு லேப் டெஸ்ட் மட்டும் ஊத்திக்கிடுமோன்னு திகிலா இருக்குடா. அதான் கூட்டம்னாலும் பரவால்லன்னு வந்துட்டேன். ஆமா அங்க எப்படி….? என்று

ஏண்டா என்னிய , டென்ஷன் பண்ணீட்டு…எனக்கு அம்புட்டும் அரியர் தான் விழுவும்….ஆனாலும் ஐயா ஜாலியா இருப்பாண்டா….எல்லாம் கட்டக் கடைசீல பார்த்துக்கலாம்னு தான்…வாசு ரொம்ப ஈஸியா சொல்வதைப் பார்த்து….வைரவனுக்கு என்னவோ போலிருந்தது.

என்னடா மச்சி …! காண்டாயிட்டியா? எங்கப்பா நல்லா விசாரிச்சுட்டுத் தான் இங்க கொண்டாந்து சேர்த்தாரு. ஒரு வேளை எதிலுமே ஐயா பாசாகலைன்னு வெய்யி….கட்டு நோட்டை வெட்டினாப் போதுண்டி …..கைமேல பாஸ் சர்டிபிகேட்டு…இதெப்படி இருக்கு..?

அதில்லடா…நீயெல்லாம் பணக்கார ஊட்டுலேர்ந்து வர….உனக்கெல்லாம் அப்பாவோட பிசினெஸ், தோட்டம், தொறவு..வயலு வாய்க்கா ஏக்கர் ஏக்கரா நஞ்ஜையும் , புஞ்ஜையும் இருக்கு….நீ என்ன படிச்சியா…பாஸானியான்னு கூட யாரும் கேட்க மாட்டாங்க..அதான் நீ எப்பவும் ஜாலியா இருக்க. ஆனால் நம்ம கதை அப்படியா…? வீட்டுக்கு போனதுமே….அம்மா ரொம்பக் கஷ்டப் பட்டு கடன உடன வாங்கி , நகைய வித்து உன்ன என்ஜினீயரிங் படிக்க வைக்றேண்டா…நீ தலையெடுத்து வந்தால் தான் தங்கச்சி சுகந்தியை மேற்கொண்டு படிக்க வைச்சு நல்ல எடத்துல கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியும்…அந்தப் புள்ளைக்கு நீ தாண்டா அண்ணனுக்கு அண்ணனா ஒரு நல்லது செய்யணும்ன்னு கஷ்டப் பத்திரிகை வாசிக்க ஆரம்பிச்சுடுவாங்கடா…..அந்த டென்ஷன் எனக்குத் தாண்டாத் தெரியும்.

உங்கப்பா என்ன ஆனாருடா…?

அப்பா இறந்து போயி நாலு வருஷம் ஆச்சுடா. எங்கம்மா தான் எங்களுக்கு எல்லாம். நான் மட்டும் பாஸாகலைன்னு வெய்யி …வெறகுக் கட்டையைத் தூக்கிறும்..நாங்க…..சரியாப் படிக்கலைன்னா அம்புட்டுக் கோவம் வரும்..அம்மாவுக்கு.

பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு சலசலப்பு அதிகமாகி நோட்டீஸ் போர்டின் அருகே மிட்டாய்க் கடையில் ஈ மொய்ப்பது போல மொய்த்துக் கொண்டு நின்றனர்.
டேய் வாசு நான் போய் என் ரிசல்டைப் பார்த்துட்டு வந்துறேன்…..சொல்லிக் கொண்டே முந்தியடித்துக் கொண்டு தன்னுடைய எண்ணை பதிவாகி இருக்கா என்று தேட ஆரம்பித்தான்…தேட, தேட, தனக்கு முன்னால் இருக்கும் எண்ணும் பின்னால் இருக்கும் எண்ணும் மட்டும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தது.அவனது எண் மட்டும் ஏனோ அவமானத்தில் ஒளிந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது…அப்போ….அப்போ…நான் ஃ பெயிலா…? அதிர்ச்சியில் ஒரு நிமிடத்தில் இறுகிப் போன நரம்புகளோடு எதுல போயிருக்கும், என்று அடுத்த கவலைக்குத் தாவினான். இப்போ என்ன பண்றது? அம்மா கேட்டால் என்ன சொல்றது..தொண்டைக்குள் ஏதோ ஒரு பந்து உருண்டு வந்து அடைப்பது போலிருந்தது. இது வரைக்கும் ஐஞ்சு செம்ல ஒரு அரியர் கூட வைக்கலை…இதென்னது கடைசி வருஷத்தில் இப்படிக் காலை வாரி விட்டுடுச்சே…அவனுக்குள் முதன் முதலாக தோல்வி வந்து குடலைக் குலுக்கி விட்டுப் போனது போல் தோன்றவே…ச்சே….என்று அங்கு மேற்கொண்டு நிற்கப் பிடிக்காமல் விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தான்.



டேய்…வைரம்…நில்லுடா…என்னாச்சு சொல்லு…போச்சா? என்று கேட்டோபடியே வாசு இவனை நோக்கி ஓடி வருகிறான்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் குதூகலமாக விசிலடித்துச் சிரித்து கும்மாளம் போட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆறு டிஜிட் எண் அரை நிமிடத்தில் மனதைத் கரப்பாம்பூசியாக கவிழ்த்துப் போட்டுவிட்டதே.
விரக்தியோடு நடக்கும் வைரவனை வேக நடை போட்டு எட்டிப் பிடித்த வாசு….அவனது தோளில் கையை போட்டு…ஏண்டா இதுக்குப் போய் இவ்ளோ ஃபீல் பண்றே…அடுத்த “செம்”மோட சேர்த்து எழுதிக்க வேண்டியது தானே…டேக் இட் ஈஸி பாலிஸி ….என்று சிரிக்கிறான்.

அடப் போடா…நீயெல்லாம் ஒரு..! போய் உன் ரிஸல்டப் பாருடா…வாசு…!

அதெல்லாம் ஒன்னியும் வேண்டாம்…எனக்கு ..வருவது தானே வரும்…..! உனக்கு இதுவும் கடந்து போகும்..!

வாடா வைரம்…காண்டீன்ல போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்.

எப்டீடா….உன்னாலா..? நீ ஆளவிடுரா….நான் வரல….நீ எங்கியாவது போ..நான் ரூமுக்குப் போறேன்.

வாசுவை அங்கேயே கட் செய்து விட்டு தன்னுடைய ஹாஸ்டல் ரூமுக்குப் போவதற்காக நடக்கிறான் வைரவன். இதென்ன இப்படியாச்சே…. வெண்ணைத் திரண்டு வரும் வேளையிலே தாழி உடைந்த கதை போல….! எப்படி இதை அம்மாவிடம் சொல்வது. தெரிஞ்சால் ரொம்ப வருத்தப் படுவாங்களே ..நாலு அடி அடிச்சால் கூடப் பரவாயில்லை…ஆனால் அடிக்க மாட்டாள்…மனசுக்குள் தானே வருத்தப்படுவாங்க . அம்மாவின் மௌனம் தான் அவனைக் கொல்லாமல் கொல்லும் .

வைரவன் என்ஜினியரிங் தான் படிப்பான் என்று ஒத்தக் காலில் நின்று காலேஜு …..காலேஜா… ஏறி இறங்கி கடைசீல இந்த பல்கலைக் கழகத்தில் இடம் வாங்கி….வைரவனை எலெக்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேர்த்து விட்டுத் தான் சாப்பிடவே செய்தாள். அவ்வளவு வைராக்கிரம் அம்மாவுக்கு.

கடன் பட்டு, இருந்த கொஞ்ச தங்கத்தையும் வித்துத் தான் இந்த வைரத்தைப் படிக்க வெச்சாங்க….நான் இப்படி ஃ பெயில் ஆவேன்னு கனவுல கூட நினைக்கலை. நல்லாத் தான் எழுதி இருந்தேன்..அப்படியும் எப்படிப் போச்சு…திரும்பவும் ரெண்டு விடைத்தாளை மட்டும் திருத்தச் சொல்லலாமா?

நினைத்தவன் நேராக ஆபீஸ் ரூமுக்குச் சென்று அங்கிருந்த அட்மின் ஹெட் கிட்ட விஷயத்தைச் சொல்கிறான். சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. என் அம்மா ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க சார்…அவன் முடிக்கும் முனே…அவர்..

அப்டீன்னா நீ நல்லாப் படிச்சிருக்கணம்…..அதை விட்டுட்டு இப்போ இங்க வந்து முதலைக் கண்ணீர் விட்டா என்ன அர்த்தம் ?

ஸார் நல்லா எழுதின பரிட்சை ஸார் அது..வேணா திரும்பத் திருத்தச் சொல்லுங்க…சார்..கண்டிப்பா பாஸ் ஆயிடுவேன்..என்று உறுதி தொனிக்கும் குரலைக் கேட்ட அவர்..

அப்போ…இங்க நான் வெத்து வேட்டா இருக்கோம்னு சொல்ல வரியா? திரும்பல்லாம் திருத்த முடியாது. அதெல்லாம் அப்பவே நிப்பாட்டியாச்சு. வேணா ஒண்ணு செய்யி..ஒரு பேப்பருக்கு இம்புட்டுன்னு கொடுத்தா….பாஸ் ஆக வாய்ப்பு இருக்கு. ஆனா ரகசியமா இருக்கணும்…

எம்புட்டு சார் செலவாகும்.?

ஒரு பேப்பர் பாசாக இருபதாயிரம்…முடியுமா..?

தூக்கி வாரிப் போட்டவன்……..ஸார்…நாப்பதாயிரம் இருந்துச்சுன்னா நான் படிப்பையே நிறுத்திட்டு பலசரக்குக் கடை வெச்சுருவேன் ஸார்.

எவண்டா அவன் …வாயைக் கெளர வந்து நிக்கிறதப் பாரு..!… போடா…போடா….கடைய வெச்சுக்கோ…இல்ல என்னமோ செய்யி…..வந்துட்டானுங்க..கல்லூரிக்கு ..வெறுங் கையிலே முழம் போட ! .! எரிச்சலானார் அவர்.

என்ன அநியாயம்…இது…? மீளாத எண்ணத்திலிருந்து..இதெல்லாம் ஒரு யுனிவர்சிட்டி….எங்க லஞ்சமும் ஊழலும் இருக்கக் கூடாதோ ….எந்த இடத்தில் உண்மை கற்பிக்கப் படணுமோ…அங்கியே பொய்யும், பித்தலாட்டமும், லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுது. உங்க ஆசைக்கு ஏழைப் பையன்கள் நாங்க தான் கெடச்சோமா ?

இந்தக் காலேஜிலிருந்து நான் நிச்சயம் பாசாகி வெளிய போக முடியாது… ஒவ்வொன்னுக்கு ஒரு விலை போட்டு கறக்காமல் வெளிய விடமாட்டாங்க. இதெல்லாம் அம்மாட்ட சொல்ல முடியுமா…? சொன்னால் ஓடி வந்து யாரதுன்னு…எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமா செஞ்சுப் புடுவாங்க…பெறகு……….என் கதை கந்தல் தான்.மூஞ்சி தெரியாத போதே ஆடிப் பார்க்குறாங்க…இதுல “இவன் தான்னு” தெரிஞ்சுப்புட்டா…படிப்புல கத்தி வெச்சுருவானுங்க.. அத்தோட நிக்காமல் அம்மாகிட்ட ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்து…! இதெல்லாம் வேண்டுமா? பேசாம வாயைத் திறக்காம ரூமுக்கு போய்ச் சேரு .

மனசாட்சி சொன்னபடியே ரூமுக்குப் போய் தொப்பென்று கட்டிலில் விழுகிறான். பசி வயிற்றைக் கிள்ளுகிறது……படிப்புக்குப் பேரமா? வைரவனின் மனசு ஆற்றாமையில் துடிக்கிறது. அம்மாவின் குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எல்லாத்தையும் சொல்லி அழவேண்டும் போல இருந்தது.

கைபேசியை எடுத்துப் பார்க்கிறான்…பாலன்ஸ் இருபது ரூபாய் இருந்தது… அம்மாவுக்கு எண்ணை அழுத்துகிறான்.

ரிங் டோன் நீண்டு கொண்டே இருந்தது…! இவன் பொறுமை இழக்குமுன்பு அம்மாவின் குரல் “ஹலோ” என்றது.

ஹலோ…அம்மா..நான்தான் வைரவன் பேசறேன்…நல்லாருக்கியாம்மா..! தங்கச்சி நல்லாருக்கா..?

சொல்லுடா வைரவா…இன்னைக்கு ரிசல்ட்டுன்னு சொன்னியே… .என்னாச்சு…? பாஸு தானே…நீயி..?

இல்லம்மா வந்து …. அவன் தொண்டைக் குரல் அடங்கியது. வார்த்தை தத்தி தத்தி வந்தது. ரெண்டு அரியர் … வந்திருச்சும்மா…எப்பிடிண்டே தெரியலை….!

என்னடா சொல்றே நீ…ஃ பெயிலா.அதும் ரெண்டு சப்ஜெக்ட்டுலையா…? நல்லாப் படிக்கலையா? எம்புட்டு அடிச்சுக்கறேன்….நம்ம வாழ்க்கைய நிர்ணயம் பண்றதே உன் படிப்பு மேல தான் இருக்குன்னு…எல்லாம் இப்போ செவுடன் காதுல ஊதின சங்கு தானா? நீ அடுத்த வருஷமே கம்புஸ் இன்டர்வியூ ல செலக்ட்டு ஆகி நல்ல வேலைக்குப் போய் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கப் போறேன்னு நான் இங்க கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்….நீ என்னாடான்னா…இப்படி குண்டைத் தூக்கி போடுற..! மனசுல அம்மா எம்புட்டுக் கஷ்டப் படுதுன்னு நெனப்பு இருந்தாத் தான…உனக்கு..!

அம்மா….அப்டில்லாம் சொல்லாதம்மா. உனக்கென்ன தெரியும்? இங்க நடக்குறது…இந்தப் படிப்பு கஷ்டம் தெரியுமா? எண்ணிய ஏன் இதுல கொண்டாந்து சேர்த்தே….இதுல நீ பணத்தைக் கட்டி…என்னை ரேஸ் குதிரை கணக்கா ஓடு….ஒடுன்னா …..நான் எங்கிட்டு ஓடுவேன்… பிடிக்கலீங்கம்மா..நேத்து ஒரு அசைன்மென்ட் சரியா எழுதலைன்னு அந்த லெக்சரர் ஏன்டா சரியா படம் போடல ன்னு கேட்டாரு…”கரண்ட்டு இல்ல சார்ன்னு” காரணம் சொன்னேன்…அதுக்கு பொம்பளப் பிள்ளைங்க முன்னாடி வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாரு…எங்கிட்டாச்சும் ஓடிப் போயிரலாமன்னு இருக்கு…தெரியுமா..?


தப்பெல்லாம் உன் பேர்ல வெச்சுக்கிட்டு வாத்தியாரை குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்டியா…? இத்த எங்கிட்டிருந்து கத்துக்கிட்ட…?



அம்மாவின் இந்தக் கேள்வி சுளீறேன்றது வைரவனுக்கு….சரி என்னான்குறே நீ..? என்று புரிந்துகொள்ளாத அம்மாவிடம் எரிச்சலானான்….

உனக்கு எப்போ காம்பெஸ் இன்டர்வியூ …அதுல உன் ரோஷத்தைக் காட்டி ஜெயிச்சுக் காட்டி வேலையை பிடி…ஆமா சொல்லிட்டேன்…..என்ற டக்கென இணைப்பைத் துண்டித்தாள் அம்மா.

அம்மா எப்பவுமே இப்படித் தான் தான் கோபமாய் இருப்பது போலவே காட்டிக் கொண்டு ஜெயிப்பவள்.அம்மாவின் குணம் நன்கு தெரிந்தும்… அழுகை முட்டிக் கொண்டு வந்தது வைரவனுக்கு. அவனுக்கு ஆறுதலாக ஒன்றுமே இல்லாதது போலிருந்தது…ஆண்மை அழுகையை அடக்கியது. மனதினுள் தோன்றிய வேகம், கோபம் இரண்டும் புதிதாக சேர்ந்து அருகில் இருக்கும் எதையாவது ஓங்கி ஆத்திரம் தீர குத்தி உடைக்க வேண்டும் போல கைகள் துடித்தன…..

சே…என்ன கையாலாகாத தனம்….! கையைக் கட்டி வாயைக் கட்டி, காலைக் கட்டி…..எந்தக் குற்றமும் செய்யாமலேயே…என்னை இறுக்கி எத்தனை விலங்குகள்…? காற்றிருந்தும் எனக்கு மூச்சிழுக்க முடியவில்லை.

வைராக்கியத்தோடு நடந்தான்…”அம்மாவுக்குக் காமிக்கணும்..நான் யாருன்னு…! எப்படியும் இந்த காம்பசில் வேலை கண்டிப்பா கிடைக்கணும்..”
என்று சொல்லிக் கொண்டு அதற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான் அப்பப்போ வாசுவைப் பார்க்கும் போது ஏனோ அவன் மேல் கோபம் கோபமாக வந்தது வைரவனுக்கு. எவ்வளவு சுகவாசியா கவலையே இல்லாமல் இருக்கான்…! உன் தலையெழுத்தைப் பாரு…என்று மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அன்று அவனுக்கு சொல்லியபடியே பெரிய நிறுவனத்தின் காம்பஸ் நேர்முகம்….ஒவ்வொரு கட்டமாக தாண்டி இறுதிக் கட்ட குரூப் டிஸ்கஷன்ல தோற்றுப் போய் வெளியேறிய வைரவனுக்கு.. அதிரடியாய்..அம்மாவின் தொலைபேசி அழைப்பு பயத்தை உண்டு பண்ணியது.
தயங்கியபடியே சொன்னான்…” அம்மா…எனக்கு வேலை இல்லை..நான் தோற்றுவிட்டேன்…சரளமா ஆங்கிலம் பேச வரலை….எப்டியும் அடுத்த கம்பெனில செலக்ட் ஆகிடுவேன்,,,,,” நம்பிக்கையோடு சொன்னான்….



வழக்கமாக அம்மாவின் அர்ச்சனைகள்…..புத்திமதிகள்.., ஆராதனைகள் வேதனை தந்து அவனுக்கு சலிப்பைக் கொடுத்தன.

அதன் பின்பு வந்த இரண்டு நேர்முகத்திலும் முந்தையது போலவே தோற்றுப் போன வைரவன் நிராகரிக்கப் பட்டபோது….ஏண்டா வைரவா…..நீ எந்தப் பொண்ணு பின்னாடியும் சுத்தலையே..? பின்ன ஏண்டா உனக்கு வேலை கெடைக்கலை…? அடுத்த கம்பெனில மட்டும் நீ செலக்ட் ஆகலை…. உன் மூஞ்சியவே நான் பார்க்கமாட்டேன் தெரிஞ்சுக்கோ…. நீ என் மகனே இல்ல ! என் கனவெல்லாம் பாழாயின பாதகா ! நான் யார் முகத்திலும் இனிமேல் விழிக்க முடியாது நீ ஃபெயிலானதால் …. என்று கோபமாக இணைப்பைத் துண்டித்த போது இவனுக்குத் தன் இதயமே துண்டானது போலிருந்தது…

என்ன கேள்வி கேட்டுட்டாங்க அம்மா…இத்தனைக்கும் எத்தனையோ பசங்க ரொம்ப மோசமா இருக்காங்க…நான் எந்த தப்பு தண்டாவுக்கும் போகாத போதே….இங்கு நடக்கிற கொடுமை ஒனண்ணுமே தெரியாம இப்படி பழி சொல்றாங்க….உலகத்துல நல்லதுக்கே காலம் இல்லையோ….நொந்து போன மனதோடு வெந்து போய் புரண்டு, புரண்டு அன்று எப்படியோஉறங்கிப் போனான்…வைரவன்.

அடுத்த வாரமே புகழ்பெற்ற கம்பெனியிலிருந்து நேர்முகத்திற்கு இவன் பெயர் அழைக்கப் பட்டதும்…..வரிசையில் நின்று….காத்திருந்து…காத்திருந்து ..ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி இறுதியாகக் இவன் கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கையில்….இவன் பெயர் நிராகரிக்கப் பட்டதை அறிந்து உள்ளுக்குள் உடைந்து போனான்….ஏதோ இந்த காம்பஸ் இண்டர்வியூ வில் தனது வாழ்க்கையே தொலைந்து போனதைப் போல உணர்ந்தவன்..சென்ற முறை அம்மா திட்டினானாலும் இன்று காலை…நல்லமுறையில் பேசி ஆசி சொன்னது திருப்தியாகத் தான் இருந்தது. இருந்தும் என்னாச்சு…?

இன்டர்வியூவில் ஜெயிப்பது அவ்வளவு கடினமா? தன்னை விடச் சரியாகப் படிக்காதவர்கள் கையில் செலக்சன் லெட்டர் இருப்பதைப் பார்த்து அம்மா சொல்வது சரிதானோ…நான் எதற்கும் லாயக்கில்லாதவனா…? இன்று காலை அம்மா செய்த ஆசிகள் பொய்த்துப் போனது..சென்ற வாரம் ” இனி முன் முகத்தையே பார்க்க மாட்டேன்” என்று கோபத்தில் சொன்ன வார்த்தை எதிரொலிக்கிறது…நல்ல விஷயங்கள் எப்போதும் தோற்றுப் போகுமோ…? இந்த முறையும் நான் தோற்றுவிட்டேன்…எனக்கு வேலை இல்லை… இனிமேட்டு வேற எந்த கம்பெனியும் கூட காம்பஸ் க்கு வராது என்று சொன்னால்…..அம்மா துடித்துப் போவாள்.

வைரவன் கழிவிரக்கத்தில் துவண்டு போனான். அதீதமான விரக்தி அவனை யதார்த்தத்தை மறக்கச் செய்தது. தூரத்திலிருந்து கை அசைக்கும் வாசுவை ஏறெடுத்தும் பார்க்காமல் கால்போன படி காலேஜை விட்டு வெளியேறினான். அத்தனை நேரம் கழுத்தில் இறுக்கிக் கொண்டு தான் பெரிய நிறுவனத்தில் ஆஃபீசர் என்ற நினைப்பைத் தந்த “கழுத்து டையை” கழற்றி உதறித் தூர வீசினான். தன தலையிலிருந்த பாரம் சிறிது காற்றோடு பறந்து போனதாக உணர்ந்தான்.

நடக்க நடக்க…காலேஜ் அவனை விட்டு விலகிச் தூரம் சென்றது. அந்தப் பெரிய அரக்கன் அவனைத் தன் பிடியிலிருந்து அவிழ்த்தது போல சிலிர்த்தான் வைரவன்.

ஆஹா…சுதந்திர மனசு…..மெல்லப் பறக்க ஆரம்பித்தது. ஆனால் என்ன..இந்த சுதந்திரம் தற்காலிகமானது. மீண்டும்…நாளை சிக்க வைத்து சிறைப்படுத்தி விடும்….சுதந்திரம். படிப்புக் கைதி, தாயின் பிடிப்புக் கைதி. அவனுக்கு வேண்டியது இப்போது விடுதலை.

இதை நிரந்தரமாக்க வேண்டும்…! படிப்பு, புத்தகம், ப்ராஜெக்டு, அரியர்ஸ், செமெஸ்டர் , நேர்முகம், வேலை,வாழ்க்கை…இதிலேர்ந்து தப்பிக்கணும்..அது தான் நிரந்தர சுதந்திரம்…நெஞ்சை அமிழ்த்தும் சுமை, மன உளைச்சல் …இதை இங்கேயே இறக்கி வைக்கணும்..இந்த இனம் தெரியாத வழியிலிருந்து என் ஆன்மாவைக் காப்பாற்றியாகணும்…நிம்மதியா தூங்கணும் . மீளாத துக்கத்தில் .!என்னைக் கட்டிப் போட்ட அத்தனை மானசீக விலங்குளையும் தகர்த்து எறியணும்..!

நினைக்கும் போதே வைரவனுக்கு அப்படி ஒரு வாழ்க்கையில் வாழ வேண்டும் போலிருந்தது. அவன் நடந்து நீண்ட தூரம் வந்து விட்டதை அருகிலிருந்த ரயில்வே லெவல் கிராஸிங் நினைவு படுத்தியது.

கை காட்டிக் கம்பத்தில் பச்சைக் சிக்னல் அனுமதி அளித்தது ரயில் வரவுக்கு

“நில்” என்ற சிவப்பு விளக்குகள் அவனை முறைத்துப் பார்த்து நிறுத்த எச்சரித்தன….இவனுக்கு அதைக் கல்லால் அடிக்க வேண்டும் போலிருந்தது.

அதனடியிலிருந்த அபாயக் குறியோடு மண்டையோடு …”இங்கே வா வாழ உனக்கு வழி சொல்றேன்” என்று அழைத்து அபாயங்களை உபாயங்களாக்கிக் கொண்டிருந்தது.

எங்கிருந்தோ திரைப் பாடல்…”வாழ நினைத்தால் வாழலாம்…வழியாய் இல்லை பூமியில் ” என்று அலறிக் கொண்டிருந்தது…..!

தூரத்தில் பெரிய சப்தத்தோடு கட்டுப்பாடின்றி அதிவிரைவாக வந்து கொண்டிருந்தது வைரவனுக்கு எமனாக அந்த எக்ஸ்ப்ரஸ் ரயில்…!

அது லெவல் கிராசிங்கை நெருங்கி வரவும்…”வாழ… நினைத்தால்… வீழலாம்…” என்று வைரவனின் மூளைக்குள் கட்டளைகள் ரயிலை விட வேகமாக விழுந்திட….ஒரே பாய்ச்சலில் அவன் கால்கள் தண்டவாளத்தை முன்னோக்கிப் பதிக்கவும்…!

“ஒதுங்கிப் போடா முண்டமே….” என்று அனாசயமாக எஞ்சின் வைரவனை இரண்டாகப் பிளந்து தூக்கி எறிந்து, அவன் வேண்டிய நிரந்தர விடுதலை கொடுத்து விரைந்தது.

சற்று தூரத்தில் வண்டி பிரேக் போடப் பட்டு திடீரென நின்றது. எஞ்சின் டிரைவர்கள் இறங்கி ஓடி வந்தனர்.

அடுத்த சில நொடிகளில்….அவனை யார்…..?.அவன் பேரென்ன..? என்று அறியும் ஆவலில் அருகிலிருந்த தலைகள் “மொய்க்கும் ஏறும்பாகச்” சூழ்ந்து கொண்டார்கள்.

பல்கலைக் கழகத்தில் அவனது பெயர் கொண்ட ஃபைல்கள் நிரந்தரமாக மூடப் பட்டன.

வைரவனின் அம்மா…! செய்தி கேட்டு துடி துடித்தபடி மகளோடு பறந்து வந்தாள். தான் கடைசியாக அவனிடம் பேசிய வார்த்தையை எண்ணி எண்ணி தன் ”தப்புப் பண்ணிட்டேன்…தப்புப் பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தாள் .

பரீட்சைகள் மாணவருக்கு எமனா ? ஃபெயில் மார்க்குகள் கொடுத்து பணம் கொள்ளை யடிக்கும் கல்லூரி அதிகாரிகள் எமனா ? பாஸ் பண்ணாத பையனுக்கு தாய் தந்தையரே எமனா ? எத்தனை எமதர்மர் வீசும் பாசக் கயிற்றில் தப்பி ஓர் அப்பாவி மாணவன் உயிரோடு வாழ நினைப்பான் ?

ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)


ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ 
.ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் 
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் 
காலத்தைக் காலனை மாற்றிடலாம் ("ஷண்முக) (1) 

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன 
ஆட்டம் அடங்கியவேளையிலே 
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும் 
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே ("ஷண்முக)-(2) 

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன் 
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே 
மிக்குயர்வாம் மலைக் கோட்டையிலே-அருள் 
மேவும் அகத்தியன் பாட்டினிலே ("ஷண்முக)(3) 

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர் 
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே 
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ 
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே ("ஷண்முக)(4) 

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள் 
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே 
ஊழைக்கடப்பவர் பக்தியிலே-தெய்வ 
உண்மையைக் காண்பவர் சக்தியிலே ("ஷண்முக)(5) 

வேதாந்த தத்துவ .ஸாரத்திலே-அலை 
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே 
ஆதார குண்டலி யோகத்திலே-பர 
மாத்மஜீீவாத்ம வைபோகத்திலே ("ஷண்முக)(6) 

அன்பர்க்கியற்றிடும் சேவையிலே-உயர் 
அர்ச்சனையாய் மலர் தூவையிலே 
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும் 
யாவும் ஒன்றென்றுணர் காக்ஷ்ியிலே ("ஷண்முக)(7) 

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி 
ந?த்திரங்கள் இமைப்பினிலே 
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில் 
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே ("ஷண்முக)(8) 


தேகவிசாரம் மறக்கையிலே-சிவ 
ஜீீவவிசாரம் பிறக்கையிலே 
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை 
ஆறு கலந்திடும் பொய்கையிலே- ("ஷண்முக)(9) 


மானாபிமானம் விடுக்கையிலே- தீப 
மங்கள ஜோதி எடுக்கையிலே 
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு 
நாதனை நாடித் துதிக்கையிலே ("ஷண்முக)(10) 

ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள் 
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே 
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக் 
கூப்பிடுவார் மனை வாயிலிலே ("ஷண்முக)(11) 

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர் 
செய்திடும் தேனபிஷேகத்திலே 
உத்தமமானவிபூதியிலே-அதன் 
உட்பொருளாம் சிவ ஜோதியிலே ("ஷண்முக)(12) 

அன்னைமடித்தலப் பிள்ளையவன் 
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன் 
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப் 
பாதனவன் குருநாதனவன் ("ஷண்முக)(13) 

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர் 
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன் 
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய 
வீரனவன் அலங்காரனவன் ("ஷண்முக)(14) 

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத் 
தூயனவன் அன்பர்-நேயனவன் 
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற 
சீலனவன் வள்ளி லோலனவன் ("ஷண்முக)(15) 

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த 
ஆறுமுகப் பெருமானுமவன் 
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த 
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் ("ஷண்முக)(16) 

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி 
மூல ச.தாசிவ மூர்த்தியவன் 
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை 
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் ("ஷண்முக)(17) 

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண 
மாலைகொள் ஆறிருதோளனவன் 
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ் 
ஆகம நான்மறை அந்தமவன் ("ஷண்முக)(18) 

கோலமுடன் காலை மாலையிலும்-இரு 
கோளங்கள் வானில் வரப்புரிவான் 
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன் 
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் ("ஷண்முக)(19) 

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும் 
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ 
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை 
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் ("ஷண்முக)(20) 

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு 
கொண்ட கfானான் தம்பியவன் 
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும் 
ஜோதியவன் பரம் ஜோதியவன். ("ஷண்முக)(21) 
-------------------------------------------------------------------------------------------------------------------


ஸ்ரீ ஷண்முக தியான ஸ்லோகம்.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம் 
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம் 
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரசைன்ய நாதம் 
குஹம் ஸதா சரண மஹம் ப்ரபத்யே.
கல்பத்ருமம் பிரணமதாம் கமலா ருணாபம்
ஸ்கந்தம் புஜத் வயமனாமய மேக வக்த்ரம் 
காத்யாயனீ ப்ரியஸுதம் கடிபத்த வாமம் 
கெளபீன தண்ட தரதக்ஷண ஹஸ்தமீடே.

--------------------------------------------------------------------------------------------------------------------------

உழைப்பின் வலிமை....!



கள்ள ரயில் ஏறி
காசிபட்டில் கால் பதித்து
கண் இருட்டி விழுந்தவனை
"சொர்க்கம் உணவகம்"
ஆதரிக்க. அரை நிஜாரில் கூட 
கால் நிஜார் கிழிந்திருக்க,
மேல்சட்டை அறியாத 
நெஞ்சுக்கூடு.

எண்ணைவாசனை 
தெரியாத பரட்டைத்தலை
உரக்கப் பேச  எழாத நாவு
அடங்கு அடங்கு என 
அடிமைப்பட்டுப் போன 
மனதோடு

"சொர்க்கம் உணவகத்தில்" 
ஒரு நகரத்தில் நரக வாழ்க்கை
எஜமானன் முதுகில் 
தட்டும் ஒவ்வொரு தட்டும்
அவன்  கழுவிப் போடும் 
தட்டில் இறங்க.
தட்டுக்கள் நசுங்கியது

சிறுவன்  மனதுள் தட்டிகொண்ட
தட்டுக்களோ......அவனை 
வெறியோடு உழைப்பின் பின்னால்
நிலை மறந்து ஓட வைக்க..!
ஓடி வந்த பாதையை 
மெல்லத் திரும்பிப்  பார்க்கும்போது 
அவன்  ஓடிய ஓட்டத்தில்.
வருடங்கள் மட்டும் ஓடவில்லை

அவனது   வயதும்.....இளமையும்
சேர்ந்தே ஓடி விட்டன.
அவை ஓடும்போது  விட்டுசென்ற  
அடையாளத்தை
தலை நிமிர்த்திப் பார்க்கும் வேளை 
வானளாவ. உயர்ந்து  நின்று
அவனிப் பார்த்துச்  சிரித்தது
அவன்  தாயின் பெயரில்
"கற்பகம் உணவகம்" 
---------------------------------------------------------------------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்....