கள்ள ரயில் ஏறி
காசிபட்டில் கால் பதித்து
கண் இருட்டி விழுந்தவனை
"சொர்க்கம் உணவகம்"
ஆதரிக்க. அரை நிஜாரில் கூட
கால் நிஜார் கிழிந்திருக்க,
மேல்சட்டை அறியாத
நெஞ்சுக்கூடு.
எண்ணைவாசனை
தெரியாத பரட்டைத்தலை
உரக்கப் பேச எழாத நாவு
அடங்கு அடங்கு என
அடிமைப்பட்டுப் போன
மனதோடு
"சொர்க்கம் உணவகத்தில்"
ஒரு நகரத்தில் நரக வாழ்க்கை
எஜமானன் முதுகில்
தட்டும் ஒவ்வொரு தட்டும்
அவன் கழுவிப் போடும்
தட்டில் இறங்க.
தட்டுக்கள் நசுங்கியது
சிறுவன் மனதுள் தட்டிகொண்ட
தட்டுக்களோ......அவனை
வெறியோடு உழைப்பின் பின்னால்
நிலை மறந்து ஓட வைக்க..!
ஓடி வந்த பாதையை
மெல்லத் திரும்பிப் பார்க்கும்போது
அவன் ஓடிய ஓட்டத்தில்.
வருடங்கள் மட்டும் ஓடவில்லை
அவனது வயதும்.....இளமையும்
சேர்ந்தே ஓடி விட்டன.
அவை ஓடும்போது விட்டுசென்ற
அடையாளத்தை
தலை நிமிர்த்திப் பார்க்கும் வேளை
வானளாவ. உயர்ந்து நின்று
அவனிப் பார்த்துச் சிரித்தது
அவன் தாயின் பெயரில்
"கற்பகம் உணவகம்"
------------------------------ ------------------------------ ---------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக