அதுபோலவே, பல ஆண்டுகள் கடந்து, சமீபத்தில் எனது அக்காவுடன் பள்ளி நிர்வாக நிமித்தம் சாத்தூர் திரு.ராஜேந்திரன் அவர்களது இல்லத்துக்கு சென்றிருந்த போது, "இந்த வீட்டிலிருந்து தான் வாரியார் சுவாமிகள் இறுதியாக லண்டனுக்கு சொற்பொழிவாற்ற கிளம்பிச் சென்றார். திரும்பி வரும்போது விமானத்திலேயே உயிரிழந்து விட்டார்...இருபத்தோரு வருடங்கள் இன்னும் இந்த வீட்டிலிருந்து நகரவே இல்லை என்று அவர் சொன்னதும், அந்த இடத்தில் கனமான மௌனமும் கூடவே வாரியாரின் சுவாசமும் நிழலாக நிலவியது. தனது வாழ்நாள் முழுதும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இடைவிடாது இறையுணர்வோடு பக்தியை உபதேசித்தவர். அந்தத் தீவிர முருக பக்தரைப் பற்றி அறியாதவர் தமிழராக இருந்திடல் முடியாது. தமது வாக்கால் வாழ்ந்த பலருள் முன்னணியில் நின்றவர் வாரியார்.
பெரும் பேறு பெற்ற அவரது அருகாமையில் நின்று, அவரது ஆசியில் வளர்ந்து அவர்காட்டிய பாதையில் சென்று இன்று, தனது வாழ்க்கைப் பிரயாணத்தில் வெற்றிகரமாக பயணிக்கும், மதுரையில் பிறந்த மணிக்குரல் தேச மங்கையர்கரசி மட்டுமே வள்ளல் வாரியாருக்கு பிரசங்க வாரிசாக வளருகிறார் என்றால் அது மிகையாகாது. அதிக இனிய சுவையுடைய மாங்கனியைத் சுவைத்துவிட்டு அதன் சுவையை மீண்டும் நமது சந்ததியர் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் விதையை மறக்காமல் மண்ணில் புதைத்து வைப்போம். . அதைப் போலவே, வாஞ்சையோடு வள்ளல் வாரியாரும் இறை உணர்வை, தேசபக்த சிந்தனையை, தேச மங்கயர்கரசிக்குள் ஞானப் புதையலாக புதைத்து விட்டாரோ என்ற எண்ணம் எழுகிறது.
கதை கேட்பதோ, படிப்பதோ வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பப்படுவது தான் . அதுவும் விறுவிறுப்பான உண்மை சம்பவத்தை கதையாக படிக்கும் போதே மனத்துள் அந்த ராஜ்ஜியமே உருவாகிவிடும். எண்ணங்களின் ஆதிக்கத்தை எழுத்துக்கள் இழுத்து கண்களுக்குப் படையல் செய்துவிடும். அதை சகஜமாக யார் வேண்டுமானாலும் செய்து விட இயலும். எழுதுவதை ஊறப்போட்டு, ஆறப்போட்டு, சேர்த்து, அடித்து, திருத்தி, இழுத்து, சுருக்கி என்று இஷ்டம் போல வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். இறுதியாய் பள்ளத்தில் பாயும் நீராக எண்ணங்கள் வடிவெடுக்கும்.அந்த எழுத்தும் வாசகரை கட்டிப் போடும். அதைப் போன்றே 'செவிக்கு உணவு' என்றொரு பதமும் உண்டு. அந்த பதத்தை, கேட்கும் செவிகளுக்கெல்லாம் 'விருந்தாக' தனது வெண்கலக் குரலில் கதை கதையாய் கதைத்துக் கேட்கும் ஒவ்வொருவரையும் கதைவசம் கவர்பவர் கலைமாமணி தேச மங்கையர்கரசி மட்டுமே.
மற்ற சொற்பொழிவாற்பவர்களைப் போல, அவர்கள் பேசும்போது கூடவே ஓடிச் சென்று நாம் மூச்சு விடத் தேவையில்லை. எல்லாம் கேட்டு விட்டு என்ன சொன்னார்னு ஒண்ணுமே புரியலையே என்று தவிக்கவும் அவசியமில்லை.
சரித்திரத்தில் ஐந்து, ஆறு ஔவையார்கள் இருப்பதாக சொல்வதுண்டு. அந்த ஔவையார், தற்போது மீண்டும் பிறவியெடுத்து நம்மோடு அதே பரந்த அறிவோடும், ஞானத்தோடும் நடமாடிக் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் தேச மங்கையர்க்கரசி போன்றே இருந்திருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு தெள்ளத் தெளிவோடு வானத்திலிருந்து 'ஜோ' வென்று ஒரே சீராக பெய்யும் மழையைப் போல தன்னிடம் இருக்கும் ஞானத்தை தாராளமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அளிப்பதை 'செவிக்கு விருந்தென்று ' சொல்லாமல் என்னென்பது? சந்தேகமே இல்லாமல் இவரும் ஒரு தெய்வீக ஞானக் குழந்தை தான்.
எண்ணங்களை எழுத்தாணியின் உதவியின்றி தனது சொல்லாதிக்கத்தால் முத்திரை பதிக்க முடிந்தால், இதில் சிலர் தான் வெற்றி பெற முடியும் என்பது எனது அபிப்ராயம். அத்தனை புராணங்களும், இதிகாசங்களும், நாயன்மார் கதைகளும், அடுக்கடுக்காக தனது மூளையில் பதியவிட்டு நிறுத்தி அதை அவ்வண்ணமே தங்கு தடையற்ற வார்த்தை ஜாலத்தில் வெளிக்கொணரும் விதம் காண்போருக்கு வியப்பூட்டும். போட்டிபோடும் எண்ணங்கள் யாவும் அவரது குரலில் ஒரே சீரான ஆலயமணி போலக் கேட்கும். 'பக்தி உலா' தொடரில் அவர் கூறும் ஆலய தரிசனம் நிகழ்ச்சி ஒவ்வொன்றும், கேட்போரை அந்தந்த கோயிலுக்கே அழைத்துச் செல்லும் பிரமையை ஏற்படுத்தும். பேசுவது ஒரு கலை தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட தலைப்பைச் சுற்றியே கன கச்சிதமாக தங்கு தடையின்றி ஒவ்வொருவரின் நாடி பிடித்துப் பார்ப்பது போல எதார்த்தமான பேச்சு வழக்கில்,மடை திறந்த வெள்ளம் போல கூடவே நகைச்சுவை கலந்து கேட்பவரின் ஆவலை இறுதிவரையில் தூண்டி , 'எப்பொழுது முடியும்' என்று காக்க வைக்காமல், சீக்கிரம் முடிந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தோடு ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதை சொல்பவர் சொல்லரசி தேச மங்கையர்கரசி .
கால காலத்துக்கும் நிலைபெறவேண்டிய நமது கலாச்சாரங்கள், நீதி,நேர்மை, இலக்கிய புராணங்களை அழியவிடாமல் காத்துவரும் வகையில் தேசபக்த சிந்தனையோடு இவர் பிரசங்கம் செய்வதுவும் தேசத்தொண்டு தான். இவரது சொற்பொழிவுகள் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் கதைகள் சொல்லி எடுத்துரைப்பது தான் இவரது தனிச்சிறப்பு. இந்த உலகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் மிகச் சிலரே சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷத்தோடு வளைய வருகின்றனர். அதில் நாவுக்கரசி மங்கையர்கரசியும் ஒருவர் என்று நினைக்க, மனம் நிறைகிறது.
தற்போது தேசம் தாண்டி இவரது பிரசங்கங்கள் நடைபெறுவது மகிழ்வான விஷயம். நமது நாட்டிற்குப் பெருமை தேடித் தரும் 'கலைமாமணி' இவரையும் நமது தமிழ்நாடு அரசு அங்கீகரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் அனைவரின் சார்பாக இங்கே சமர்ப்பிக்கிறேன்.
தான் எடுத்துக் கொண்ட செயலில் முழு முனைப்புடன் ஈடுபட்டால் கிடைக்கும் வெற்றியின் மகத்துவம் அபரிமிதமானது என்பதற்கு கலைமாமணி தேச மங்கையர்கரசி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இவரைப் பற்றி முன்பே அறிந்தவர்கள் இந்த கட்டுரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடும்.இதுவரையில் இவரைப் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு 'விசிட்டிங் கார்டு' போல செயல்படட்டும். இணையத்தில் இவரது சொற்பொழிவுகள் காணொளியில் நிரம்பி வழிகின்றது. வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை கேட்டுத் தான் பாருங்களேன். புதையலாக மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தை அடையாளம் காட்டிய பலன் இந்தக் கட்டுரையைச் சேரட்டும்.
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக