வியாழன், 30 ஜூலை, 2015

இது சத்தியம்..!

துன்பவியல் சூழ்ந்த நாடு
'அத்தனையும்' வென்று
'அத்தனையும்' கடந்து
துன்பியல் வாழ்க்கைக்
கடலில் துணிவுடன்
வெற்றி கொண்டு
கரைமீண்ட பிரமாண்ட
கப்பல் வாழ்வே உமது..
இது சத்தியம்..!


தோல்விகள் தொடராமல்
வெற்றிக்கனி பறிக்கவில்லையே
நீங்கள்..!
தோல்விகள் தழுவிய
வேதனைகள் அறிந்ததாலோ
அனைவர்க்கும் அகத்திருள்
நீக்கி ஆறுதல் மருந்திட்டு
ஆக்கும் தெளிவு கற்பித்த
அற்புத ஆசிரியர் ஆனீர்
இது சத்தியம்..!


எளிமையில் பெருமை கண்டு
கருணையில் கனிவு கொண்டு
திறமையில் உயர்வு கண்டு
உழைப்பில் வெற்றி கொண்டு
உலகயே இந்தியாவைத்
திரும்பிப் பார்க்க வைத்த
மெய்ஞான ஞானி
விஞ்ஞானி அல்லவா நீவிர்
இது சத்தியம்..!


அறிவுக் கடலில்
நீந்தி நீந்தியே
குடும்பக்கடலை விட்டு
தூரம் கடந்தவர்..!
"எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்"
வாக்குப் பலிக்க
வாழ்ந்து காட்டிய
வாழ்ந்து பார்த்த
கருணை தெய்வம் ..!


இமயத்தையொத்த
நி
ன்தன் மனத்தின்
எண்ணங்கள் அத்தனையும்
ஒவ்வொரு இளைஞனுக்கும்
நீங்கள் அளித்திட்ட
வாழ்நாள் பரிசல்லவா..!
நின்தன் நிழல்தொட்டுத்

தொழும் இளம் உள்ளங்கள்
இனி நிஜத்தில் உந்தன்
கனவுக் கோட்டைக்கு
முகவரி தருவார்..
இது சத்தியம்...!


"கோடி மரங்களை நட்டுவிடு "

ஆணையிட்டு சென்றாலும்
அத்தனையும் வேர் பிடிக்க
வேகமான விவேக்கை
விவேகமாக்கி ஊக்கத்துடன்
ஊரே பிடிக்கவைத்த
இந்தியத் தேர் வடம்
இழுக்க வைத்த
விஞ்ஞான பிரம்மாவும்

நீறன்றோ ..இனி
இந்தியாவில் புதிதாய் எழும்
அத்தனை மரங்களும்
கிளை விரித்தழும்
உங்களைக் காண..
இது சத்தியம்...!


தனித்துவத்தை மட்டுமே
நெஞ்சம் முழுதும் சுமந்த
நிந்தன் வாழ்வே தனித்துவம்
கண்டது..எண்ணம் போலே
வாழ்வு என்பதம் வென்றது..!
இந்தியாவே நின் மௌன
முகம் கண்டு உறைந்தது.
இது சத்தியம்...!


நிந்தன் மனமொழி அறிந்த
இறைவன் வரம் அளித்த
'நேரம்' தான் தவறானதோ?
காலன் காலம் பார்க்கத்
தவறியதால் காலமானீரோ?
சம்பவத்தையும் சரித்திரத்தையும்
வரைபடமிட்டது போல் நிந்தன்
சகாப்த வாழ்கை..மனித
சகாப்தத்தின் ஒரே வழிகாட்டி..
இது சத்தியம்...!


வந்த... வாழ்ந்த... சென்ற...
ஆத்மாக்கள் கோடி கடந்தாலும்
கோடிப் புண்ணியம்
செய்தால் மட்டும்
கிடைத்திட்ட அதிசயப்
பிறவியை அல்லவா
உந்தன் ஆத்மா கண்டது...!
வாழ்ந்தால் உங்களைப்
போன்ற மனத்துடன்
வாழவேண்டும்.
'அப்துல் கலாம்' எனும்
எளிய மெழுகுவர்த்தி....
ஏற்றி ஏற்றி ஏற்றி....
சளைத்திடாமல்
ஏற்றும் போதே
தானும் கரைந்து
காற்ற்றோடு கலந்தாரே...
இது சத்தியம்...!


நீங்கள் ஏற்றி வைத்த
தீபங்கள் அணையாத
தீபங்களாகி இந்தியாவை
இருள் சூழ்ந்திடாமல்
எந்நாளும் ஒளிசூழும்..
இது சத்தியம்..!


எத்தனையோ சகாப்த
சாதனையாளர்களுக்கு
முன்னோடியும்
முன்னணியுமாய்
நீங்கள் மட்டுமே
மனித சகாப்தத்தின்
இலக்கண விதிமுறையில்
சகாப்த முகவரி...
இது சத்தியம்..!


கோடி நட்சத்திரங்களுக்கு
மத்தியில் நீங்கள் ஒளிரும்
விசித்திர நட்சத்திரம்..!
இயற்பியல் நின்தன்
இறப்பை ஜீரணிக்க
முடியாமல் இனி
இடிந்தே போகலாம்...
இது சத்தியம்...!


பற பற பற ..உனக்குள்
சிறகுகள் உண்டென
இளம் உள்ளகளுக்கு
பறக்கக் கற்றுக் கொடுத்த
அதிசய பறவை நீர்..!
பறக்கும் கனவிலேயே
வாழ்நாள் முழுதும்
பறந்ததால் தானோ
உந்தன் உயிர் பறந்த
பின்பும் உடலும்
பறந்தே வந்தது...
இது சத்தியம்...!


நீங்கள் வகுத்தளித்த
வாழ்வின் ரகசியங்கள்
அத்தனை உள்ளத்துள்ளும்
பாதைவகுக்க எங்கள்
வழி நெடுகிலும்
தங்களின் மனத்தடங்கள் ..!
விவேகானந்தரின் வழியில்
அவர்தம் கனவுகள்
தங்களுக்கு வசப்பட
தங்களின் கனவுகளை
மெய்ப்படுத்த தங்களின்
ஆத்ம வாரிசுகளாய்
என்றும்...எங்கும்... உங்கள்
இந்திய வாரிசுகள்..!
இது அஞ்சலியல்ல..
இது சத்தியம்...!

1 கருத்து: