பார்க்கிங் ஃப்ளோரில் வந்து லிஃப்ட் நின்றதும்..குஷியோடு வெளியே வந்தவளுக்கு அப்பாடா...என்று நிம்மதியாக இருந்தது. செக்யூரிட்டி லெட்ஜரில் தன் கையெழுத்தை கிறுக்கியவள் அவளது கனத்த பால் வடியும் மனம் வீட்டில் இருக்கும் பால் வடியும் முகத்தை நினைத்துத் தவித்தது.
அடுத்த சில நொடிகளில் பார்க்கிங் ஸ்லாட்டில் காத்திருந்த மஞ்சள் நிற 'நானோ' காரில் ஏறி ரிவர்ஸ் எடுத்து ஒரே ஸ்பீடில் மேலே ஏறி... விர்ரென்று அவளது அலுவகலத்தை விட்டு வெளியுலகத்துக்கு வந்து சிக்னலின் சிகப்பு விளக்குக்கு ப்ரேக் போட்டு.மூச்சு வாங்கினாள் .
"எஃப் எம் " ரேடியோ மிர்ச்சி....."செம ஹாட் மச்சி " என்று கடி ஜோக்கு சொல்லி வழிந்து கொண்டிருந்தது.ஏதேதோ வேண்டாத வசனங்கள் பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்து அவளிடம் தோற்றது.
ஆர்த்தியின் கண்கள் சிவப்பு எப்போது பச்சையாக மாறும் என்று ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டு காத்திருக்க, கண்கள் .மெல்ல வானத்தைப் பார்த்து சிலிர்த்தாள். இத்தனை நேரச் செயற்கை வெளிச்சத்தை இந்த வானம் அவள் கண்ணிலிருந்து கலைத்து நான் தான் நிஜம் என்றது. ஆம்...நீ தான்....நிஜம்...என்று மனதோடு சொல்லிக் கொண்டு பச்சை விழுந்ததும் பாயும் பந்தயக் குதிரையாகத் தாண்டிப் போனாள் ஆர்த்தி. மனசெல்லாம் "ஆதி... ஆதி...."என்று அடித்துக் கொண்டே நகர்ந்தது..
பெண்களின் மனம் என்றும் ஒரே நிலையில் இருப்பதில்லை.. கல்யாணத்திற்கு முன்பு வரை அம்மா அம்மா என்று சுற்றிக் கொண்டிருந்த அதே மனசு தான் பின் ஒரு சமயம் காதல் கணவனின் பெயரை ஜபித்துக் கொண்டே ஏங்கிக் கொண்டிருக்கும். இப்போ குடும்பம் என்றானதும் குழந்தையிடம் மனம் தாவியாச்சு. ஆர்த்திக்கு வீடு சீக்கிரம் அருகில் வராதா என்று ஏக்கமாக இருந்தது. எத்தனை சிக்னல்கள்...எத்தனை மேம்பாலங்கள் எத்தனை ஸ்பீட் பிரேக்கர்ஸ் ...எல்லாத்தையும் ஒவ்வொண்ணா கடந்து வீடு போய் சேருவதற்குள் சிறுகதைச் சிற்பி 'ஜோதிர்லதா கிரிஜா'வாக இருந்திருந்தால் அவர் கண்ட காட்சியை வைத்தே ஒரு நாளைக்கு ஒரு கதை எழுதித் தள்ளியிருப்பார்.அத்தனை விஷயங்களைக் கண்கள் பார்த்துக் கடந்தால் தான் வீடே வரும் ஆர்த்திக்கு.
ஆர்த்தியின் மாமியாருக்கு பேரன் ஆதர்ஷ் பிறக்கும் வரையில் கதைப் புத்தகங்கள் தான் ஒரே பொழுது போக்கு. அதிலும் ஜோதிர்லதா கிரிஜாவின் கதைகள் என்றால் ஒரு தனி பிரியம். அதைப் புரிந்து கொண்டு எங்கு சென்றாலும் அவரது கதைகளைக் கேட்டு வாங்கிக் கொடுத்து மாமியார் கல்யாணியை மனம் குளிரச் செய்வதில் ஆர்த்திக்கு அலாதிப் பெருமை..
வீட்டின் அலமாரி நிறைய அவரின் புத்தகங்கள் தான் கதை கதையாய்ப் பேசிக் கொண்டிருக்கும். அறுபது வயதான நிலையில் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் பந்தயக் குதிரையாக ஓடி ஓடிக் களைத்து இப்போது தான் தனக்கென ஒரு நிம்மதியான வாழ்வை வாழ ஆரம்பித்திருக்கிறாள். மாமியாரின் கொடுமைகள் ஒரு பக்கமும் கணவரின் அடி ஒரு பக்கமாக உரலில் அகப்பட்ட உளுந்தைப் போல உளுத்துப் போவதற்குள் கணவனை விட்டுப் பிரிந்து தனி மரமாக நின்று வாழ்கையில் போராடி ஜெயித்தவள்.அமைதியாக வாழ முடிந்தாலும் ஏன் சிலர் வாழ்க்கையை போராட்டமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதற்கு பதிலே கிடைக்காமல் தனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று சுருண்டு கிடந்தவளுக்கு பேரன் ஆதர்ஷ் தான் மீண்டும் தனது வாழ்க்கைக்கு புது அர்த்தமும் பிடிப்பும்.
காலையில் ஆரத்தி வேலைக்குப் போனதில் இருந்து அவள் ஆபீஸ் விட்டு வீடு வரும் வரையில் ஆதர்ஷை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதில் தான் தனது இன்பத்தின் எல்லை இருப்பது போலிருக்கும் கல்யாணிக்கு. தன் பேரன் ஆதர்ஷை மருமகள் ஆர்த்தி வந்ததும் ஒப்படைக்கும் போது கல்யாணிக்கு எங்கிருந்தோ ஒரு நெகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும்.
சிவாவும் ஆர்த்தியும் ஒரே கால்சென்டரில் வேலை செய்து...காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள். கல்யாணத்துக்குப் பிறகும் சிவாவிடம் போட்ட ஒப்பந்தப்படியே வேலையை விடாமல் பகல் ஷிப்டில் ஆர்த்தியும் இரவு ஷிப்டில் சிவாவுமாக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்க... குழந்தை ஆதர்ஷை மாமியார் கல்யாணியிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியுடன் வேலைக்குச் செல்வாள் ஆர்த்தி.
ஆர்த்திக்கும் சிவாவுக்கும் ஒரே வயது தான். இருவரும் ஒரே காலேஜில் படித்து காம்பஸ் நேர்முகத்தில் தேர்வு செய்யப்பட்டு ஒரே இடத்தில் ஒரே ப்ளோரில் வேலை செய்யும்போது....பல வருட நட்பும் புரிதலும் சிவா மனதில் ஆர்த்திக்கான கதவு திறந்ததும் ஆசையாசையாக ஆர்த்தியிடம் சொல்லப் போக.."இதெல்லாம் நான் ஏற்கனவே எதிர் பார்த்தது தான்....நீ தான் ரொம்ப லேட்..." இருக்கட்டும் சிவா...அதுக்கும் முன்னாடி நான் உங்க வீட்டில் உங்க அம்மாவைப் பார்த்துப் பேசணுமே...உன் வீட்டு அட்ரெஸ் தா..என்று கேட்டு வாங்கிக் கொண்டவள் ஆர்த்தி.
இடுப்பில் அழுது காலை உதைத்துக் கொண்டு நழுவும் ஆதர்ஷை இறுக்கிப் பிடித்தபடியே அவனுக்கு பாலை டம்ப்ளரில் கலந்து கொண்டிருந்தாள் கல்யாணி. இன்னைக்கு என்னமோ தெரியலையே உங்கம்மாவுக்கு வீட்டுக்கு வரதுக்கு நேரமாறது...உனக்கோ பசி....இரு இரு..பாலைக் கலந்து தரேன்...ச் ..ச் ....ச் ....ச் ....என்று ஒன்பது மாதக் குழந்தையோட பேசிக்கொண்டே பாலை கலந்து ஒத்தை கையால் பாட்டிலில் விட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அப்படியே...."டேய்....சிவா.....இங்க வா....ஆர்த்திக்கு ஒரு ஃபோன் பண்ணு.இன்னும் வர எத்தனை நேரமாகும்னு ஒரு வார்த்தை கேளேன்...ஆதிக்கு ரொம்பப் பசிக்கறதுன்னு சொல்லு,,, எந்த சிக்னல்ல மாட்டிண்டு இருக்காளோ? இருடா கண்ணா...அம்மா வந்துடுவா...என்று குழந்தையை சமாதானப் படுத்தி மடியில் கிடத்தியபடியே பாட்டிலை வாயில் திணிக்கிறாள்.குழந்தை வெடுக்கென பாட்டிலைக் கவ்வி லபக் லபக் கென தன் பசியாறுகிறது .
கல்யாணி மெல்ல குழந்தையின் தலையைக் கோதி விட்டு...பாவம் ரொம்பப் பசி.."உங்கம்மா வந்தால் என்னைக் கத்தப் போறா...நான் வரதுக்குள்ளே நீங்க ஏன் பாட்டில் பாலைக் கொடுத்தேள்னு ...அவளுக்குத் தெரியுமா உன்னோட பசி ?...இல்லை உனக்குத் தான் தெரியுமா அவள் வேதனை. இந்த வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கோன்னு சொல்லவும் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுண்டு தானே கல்யாணத்துக்கு ஒத்துண்டேள்னு கேள்வி கேட்டால் நான் என்ன செய்யறது? நானும் ஒரு காலத்தில் இதுக்காக வாதாடியவள் தானே...என்று நினைத்துக் கொள்கிறாள் கல்யாணி..அவளின் மனது பின்நோக்கி செல்கிறது.
ஒரு புதன் கிழமை காலையில் அழைப்பு மணி அடிக்கவும் கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியம். அழகான புன்சிரிப்பில் கையில் ஒற்றை ரோஜாவுடன் வாசலில் நின்றிருந்த பெண், சிறிதும் தயக்கம் இல்லாது நான் உள்ளே வரலாமா? நீங்க தானே சிவாவோட அம்மா...அதான் முகஜாடையே சொல்றதே..அப்ப இந்த ரோஜா உங்களுக்குத் தான் என்று நீட்டியபடியே...ரொம்ப இயல்பா கிடைத்த சிறிய இடைவெளியில் உள்ளே நுழைந்து ஹாலில் உட்கார்ந்தபடியே வீட்டை சுற்றிலும் கண்களால் நோட்டம் விட்டாள் .
மாறாத ஆச்சரியத்துடன் நானும் மெல்ல "..ம்ம்ம்....தேங்க்ஸ்...." என்று வழி விட்டேன்.
மாமி....நான் ஆர்த்தி. என்னை சிவா, அதான் உங்க பிள்ளை லவ் பண்றேன்னு சொல்றான். எனக்கும் அவன் மேல் இஷ்டம் தான் இருந்தாலும் என்னைப் பத்தி அவனுக்கு நன்றாகத் தெரியும்...ஆனால் என்னைப் பற்றி உங்களுக்கும் தெரிந்து விட்டால் நாளைக்கு நமக்குள்ளே உங்க கிட்ட சொல்லிட்டு ...
என் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியத்தை பற்றி அவளுக்குக் கவலைப் படாதவளாக இருந்த ஆர்த்தியைப் பார்த்து...என்ன சொல்ல வந்திருக்கே நீ?
உங்க ஒரே பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு...ஐ மீன் இந்த வீட்டு மருமகளாக.நான் வரணும்னு சிவாவுக்கு ஆசையாம்..எனக்கும் தான்...சொல்லிவிட்டு வீட்டைச் சுற்றி கண்களை ஓட விட்டாள் ஆர்த்தி..
அதுக்கு உங்க அம்மா அப்பா சம்மதிப்பாளா? - இது நான்.
அதுக்கும் முன்னால் சிவாவோட அம்மா அப்பாவைப் பார்த்து நான் சம்மதம் வாங்கணும்..எனக்குத் தோணித்து...அதான் நேரா இங்க வந்து உங்களைப் பார்த்தப் பேசிட்டு...என்று இரத்தின சுருக்கமாக வந்ததன் நோக்கத்தை சொன்னாள் .
சிவாவுக்கு நான் தான் அம்மா அப்பா எல்லாமே..
அப்போ ப்ராப்ளம் சால்வ்ட் ...! அப்போ சொல்ல வந்ததை உங்க கிட்டயே சொல்லிட்டு போய்டறேன்....!
ம்ம்...சொல்லு...! கேட்கிறேன்..என்று நானும் ரொம்ப சுவாரசியத்தோடு நிமிர்ந்து உட்காரவும்...அவள் பேச ஆரம்பித்தாள் .
நான் வேலைக்குப் போவேன்.. சுதந்திரம் யாராலும் தடை படுவதை நான் விரும்ப மாட்டேன்.
அதை ஏன் என்னிடம் சொல்றே?
கல்யாணத்துக்கு அப்பறமும்.
ம்ம்ம்...
எனக்கு தெய்வம். கடவுள் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. விளக்கேத்தறது, கோலம் போடறது, எண்ணெய் தேய்த்து குளிக்கிறது.....ம்கும்..ஏன்.மஞ்சள் பூசி தாலி கட்டிண்டு...நோ நோ...இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மஞ்சள் கயிறைக் கட்டி என்னை அடிமைப் படுத்தறதுக்கு நான் உடன் படமாட்டேன்னு சொல்ல வந்தேன்.
எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு, அவனுக்கு என்னைப் பிடிச்சிருக்கு.... கல்யாணம் பண்றதுன்னா ஒரு ரெஜிஸ்டர் மேரேஜ் போதும். அதுக்காக செலவு செய்து பந்தல் போட்டு, ஊரைக் கூட்டி விருந்து வைக்கிறது இதெல்லாம் அவசியமாத் தோணலை எனக்கு.கஷ்டப் பட்டு சம்பாதிக்கிற ஒவ்வொரு காசையும் ஒரே நாளில் கல்யாண சூதாட்டத்தில் தொலைக்க விரும்பலை. அதே சமயம் என் அப்பா அம்மாவுக்கும் கஷ்டம் தர விரும்பலை.
மாசா மாசம் என் சம்பளம் முழுதும் உங்க கையில கொண்டு வந்து தர தயாரா இருக்கேன். நான் சேர்க்க நினைப்பதை நீங்கள் சேர்த்து வையுங்களேன். பளிச்சென்ற பேச்சில் என்னை வெகுவாகக் கவர்ந்தாள்.
இவள் யாரு? நான் தான் இவளா? நான் சொல்லத் தவறியதை எல்லாம் இப்போது இவள் சொல்லிக் கொண்டிருக்கிறாளா? இப்பவே இவ்வளவு தெளிவாக சிந்திப்பவள் மேலும் பக்குவப் பட்டால் அவள் எடுக்கும் அத்தனை முடிவுகளும் தவறில்லாமல் இருக்கும். நான் செய்து விட்ட எந்தத் தவறையும் இவள் செய்து விட மாட்டாள்.சிவாவுக்கு ஏற்றவள் என்று சொல்வதை விட இந்த வீட்டுக்கு ஏற்றவள் என்று தான் சொல்ல வேண்டும்.மனசு உள்ளுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தது. முதல் சரி முற்றிலும் சரி....!
கல்யாணம் ஆன கையோடு உங்களுக்கு ஒரு நமஸ்காரம் என் அம்மா அப்பாவுக்கு ஒரு நமஸ்காரம். அவாளோட ஆசீர்வாதம் மட்டும் போதும்.
நானா சிவாவை என்னிக்கும் கண் கலங்க விட மாட்டேன்...அவன் என்னை கண் கலங்க விட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். போராடுவேன்..ஜெயிப்பேன்..அவளது இந்தக் குரலில் தீர்மானம் தெரிந்தது.
ஆமா...இதையெல்லாம் நீ ஏன் என்கிட்டே வந்து சொல்லிண்டு இருக்கே ஆர்த்தி....அதானே உன் பேரு? என்று கேட்கவும்.
ம்ம்ம்ம்ம்...சரியான கேள்வி நான் கார்பரேட்ல வேலை செய்யறேன்.. அதுக்காக நிறைய டிரைனிங் எல்லாம் எடுத்து கஷ்டப் பட்டு ஒரு நிலைக்கு வந்திருக்கேன். அதில் திறமையா இருந்தால் தான் பேங்க் பாலன்ஸ் ஏறும்.யாருக்கோ லாபம் சம்பாதிக்க நிறைய கஷ்டப் படறேன் இல்லையா?
என் வாழ்க்கையின்னு வரும்போது நான் தானே எல்லா நாலையும் யோசிக்கணும். அப்போதான் நாளைக்கு நான் என்னைப் பொறுப்பு சொல்லிக்க முடியும்.
ம்ம்ம்...ம்ம்ம்...
அப்பறம் ...உங்களை மாதிரி நான் தான் என் குழந்தைக்கு அம்மாவும் அப்பாவும்...ன்னு டையலாக் எல்லாம் பேச மாட்டேன். !
வாட்?
ஐ மீன் இட்.....என் குழந்தைக்கு ஆதாரப் பூர்வமாக எப்பவும் அப்பா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா இருப்பேன்னு சொல்ல வந்தேன்.
ஒரு குடும்பத்துக்குள்ள நுழைவதற்கு முன்னால் போடற ஒப்பந்தம் மனசுக்குள் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கத் தான் இதெல்லாம்.. முதல்ல உங்களுக்கும் எனக்கும் கூட புரிதல் வேண்டும். இல்லையா? என்று பாயிண்டைப் பிடித்தாள் .
முதல்ல நீங்க என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க...உங்களுக்குப் பிடிச்சிருந்தால் சிவாட்ட சொல்லி அனுப்புங்க. என் மொபைல் நம்பர் இது...எப்போ வேணா நீங்க பேசலாம் உங்க பேர்..சொல்லுங்கோ..?
கல்யாணி.
அப்போ நான் வரேன் கல்யாணி அம்மா....எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு....! சிவாவுக்கு ஒரு நல்ல அம்மா....! எனக்கும் தான் என்று கண்ணைச் சிமிட்டி சொல்லிவிட்டு சிரித்தபடியே கையசைத்தபடி காரில் ஏறிச் சென்று விட்டாள் . நான் பித்துப் பிடித்தவள் மாதிரி நின்று கொண்டிருந்தேன்...ஆர்த்தியின் வெள்ளை மனது அவளது கண்ணில் தெரிந்தது.
இவள் மருமகளா? பெண்கள் இவ்வளவு துணிச்சலானவாளா? காலம் மாறிப் போச்சா? அடடா...தெரியாமல் போச்சே...நானும் இன்னும் ஒரு அம்பது வருஷம் கழித்துப் பொறந்து தொலைச்சிருக்கணுமோ? ஒரு சின்னப் பெண்ணுக்கு இருக்கும் தெளிவைப் பாரேன்...மனம் "பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக அவளை நினைத்தது".
அவள் சாப்பிட்டு வைத்துப் போன பாதி காப்பி அப்படியே டேபிள் மேலே இருந்தது. அதை எடுக்கும் போது மனசுக்குள் ஒரு சந்தோஷம் எட்டிப் பார்த்தது. இப்படி நமக்கு ஒரு பெண் இருந்திருந்தால்.....என்று தோன்றிய அடுத்த நொடியே...."இவளே நமக்கு பெண்ணாக வரப் போறவள் தானே என்று சமாதானம் கொண்டது. சிவா...நீ அதிர்ஷ்டக்காரன்டா . எந்தப் பெண் வெளிபடையா நியாயமா தயக்கமில்லாமல் பேசறாளோ அவளை தாராளமா நம்பலாம்.
நல்ல துடுக்கான பெண் தான் ஆர்த்தி. அவள் கொண்டு வந்து கொடுத்த ஒற்றை ரோஜா கம்பீரமாக என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தது. இவள் தான் இந்தாத்து மருமகள்...அவள் சொல்வது போலவே இருக்கட்டும் என்று மனசு ஆனந்த சங்கு ஊதியது.
ஆனால் கல்யாணம் ஆனதும் சிவாவை இழுத்துக் கொண்டு தனிக் குடித்தனம் வைத்தால் என்ன ஆவது என்று இவளது உள்ளிருந்து சாத்தான் மனசு கலங்கினாள். அடுத்த சில மாதங்களில் வீட்டில் நாதஸ்வரம் கேசட் ஒலிக்க மெட்டி ஒலி இல்லாமல் ஒரேயொரு பெட்டியை எடுத்துக் கொண்டு என்னையும் "அம்மா" என்று உரிமையோடு அழைத்தபடி மறு மகளாக நுழைந்தாள் ஆர்த்தி.பெரியவர்கள் சம்மதத்தோடு கல்யாணம் தாண்டி இப்போது குடும்பம் என்ற அந்தஸ்தையும் அடைந்து முழுமை பெற்றது.
ஆச்சு.....வருடங்கள் வழக்கம் போல உருண்டோடியது.. ஆதர்ஷும் இந்த மூன்று வருடத்தில் குடுமத்தில் புது வரவாகி என் வாழ்வில் புது உறவாகிப் போனான். இன்று வரையில் குடும்பத்தில் எந்த ஒரு சிக்கலோ வழக்கோ இல்லாமல் அன்பால் உரிமையால் அவள் கேட்ட அதே புரிதலோடு குடும்பச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
குழந்தை ஆதர்ஷின் பிஞ்சு முகம் ஆர்த்தியின் மனக்கண் முன் வந்து நின்று "ம்மா...ம்ம்மா....ம்மா.." என்பது போல தோன்றியது. மனசுக்குள் இதோ வந்துட்டேண்டா கண்ணா..என்றவள்
அதற்குள் அவளது ப்ளு டூத் காதில் மணி அடித்து மின்னியது. ம்ம்ம்ம்....வந்துட்டே இருக்கேன் சிவா.........என்று ஒரே வார்த்தையில் சொல்லி பேச்சை துண்டித்தவள் சிக்னல் வழி விட்டதும் சீறிப் பாய்ந்தாள் . இரண்டு பாலங்கள் கடந்து ஒரு வளைவில் நெளிந்து இரண்டு தெருவைக் கடந்து ஹார்ன் அடித்தபடியே அவள் வீட்டின் கேட்டின் முன்பு வந்து நிறுத்தவும் இரும்பு கேட் அவளது காருக்கு வழி விட்டுத் திறந்து கொண்டது. அதன் பின்னால் நின்ற சிவா.....இன்னிக்கென்ன உனக்கு இவ்ளோ லேட் ...கொஞ்சம் சீக்கிரமா வரக் கூடாதா? என்று கேட்கவும்.
கார் கதவை அறைந்து சாத்தியவள் உன் ஃ ப்ரெண்ட் மாதவன்ட்ட போயி கேளு....ஏண்டா இவ்ளோ நேரம் கழிச்சு ஆர்த்தியை வீட்டுக்கு அனுப்பினேன்னு....? பதில் சொல்லுவான்..என்று சொன்னவள்...அவன் சரியான பிடுங்கல்...இதைக் கொண்டு வா...அதைக் கொண்டு வா...இது ஏன் இங்க இப்படி இருக்கு..? இதை கொஞ்சம் முடியேன் ..ன்னு நிமிஷா நிமிஷம் அவனுக்குத் தோணினதை எல்லாம் என் தலையில் ஏற்றி...எனக்கு இன்னிக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்...இவனை எல்லாம் நீ எப்டிடா சமாளிக்கறே ...? ஒரே நாள்ல தாவு தீந்து போகுது எனக்கு....இன்னைக்கு அவனால தான் லேட் ....நீ போய் அவனை ஒரு பிடி பிடி...ஆமா சொல்லிட்டேன் என்றவள்....அம்மா...அம்மா...நான் வந்தாச்சு....என்றவள் கல்யாணியின் இடுப்பில் இருந்த ஆதர்ஷைப் பார்த்து "ஹேய்...ஹேய்....ஜூ ...ஜூ ...ஜூ ....ஜூ ....செல்லக் குட்டா....அம்மா வந்தாச்சாம்.....ஒரு குளியல் போட்டுட்டு ஓடி வந்து உன்னைத் தூக்கிப்பேனாம்..." என்றவள் குழந்தையின் கன்னத்தை செல்லமாக தொட்டு விட்டு...,ம்ம்மா இதோ வரேன்...சிவா...நீ எப்போ கிளம்பப் போறே..? கேள்வி கேட்டபடியே...பாத்ரூமுக்குள் நுழைய தாழிடும் சத்தம் கேட்டது.
பத்து நிமிடங்களில் பனி மலர் போல வெளிப் பட்ட ஆர்த்தி, நேரே சமையல் அறைக்குச் சென்று..." அம்மா....குட்டனைக் குடுங்கோ...என்றவள்..குழந்தையை வாங்கிக் கொண்டு ஆசை தீர முத்தமிடுகிறாள்...."என் ராஜா....என் தங்கம்...என் பட்டுக் குஞ்சலம்..என் செல்லக் குட்டி...." கன்னங்கள் மாறி மாறி முத்த மழை பொழிந்து விட்டு..." இனிக்குப் பாட்டியைப் படுத்தினியா"?..என்றவள்
என்னம்மா...இன்னிக்கும் உங்களை டிரில் வாங்கினானா...? குரலில் கரிசனத்தோடு கேட்டுக் கொண்டே அவர் கையிலிருந்த காப்பியை வாங்கி ஒரு உறிஞ்சு உறிஞ்சுகிறாள்.
ஆஹா......ம்மா....நீங்களும் கலந்துண்டு எடுத்துண்டு வாங்கோ...என்றவள்... குழந்தை ஆதர்ஷைதரையில் பாயில் கிடத்தி விட்டு தானும் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறாள்.அவள் கையில் கிலுக்கா ...."ஹேய் ஆதி...இங்க பாரு...இங்க பாரு.." என்று கிலுக்காவை அங்கும் இங்கும் மாற்றி மாற்றி காட்டி குலுக்கி சப்தப் படுத்த குழந்தை மாறி மாறி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
சிவா கையில் எதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூம் செல்வதைப் அங்கிருந்தே பார்த்தவள் ...." ஹேய்.....கிளம்பு கிளம்பு....உனக்கு நேரமாச்சு.....பாத்ரூமுக்குள்ள போயி என்ன படிப்பு வேண்டியிருக்கு? எத்தனை சொன்னாலும் கேட்கறதில்லையா? என்று சிணுங்கினாள் ஆர்த்தி.
இந்தப் புத்தகத்தை அங்க தாண்டி உட்கார்ந்து படிக்கணும்.லூசு..என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு உள்ளே சென்று தாழிடவும்...
கல்யாணி ...கஷ்டம் கஷ்டம்...என்று தலையில் அடித்துக் கொண்டதைப் பார்த்த ஆர்த்தி..." அம்மா....உங்க தயாரிப்பைப் பார்த்தேளா....?"
எல்லாம் ஏட்டிக்குப் போட்டி...என்று கேலி செய்கிறாள் .
ம்கும்.....நானும் தான் பார்க்கப் போறேனே...உன் தயாரிப்பு எப்படி இருக்கப் போறதுன்னு....இப்பவே இதுக்கு வால் நீளம்....பத்து மாசக் குழந்தையாவா இருக்கான்...இப்பவே இவனுக்கு டிவி ல சரவணன் மீனாக்ஷி கேட்கறது....7G ...பார்க்கனுங்கறான்..."கண்ணா லட்டு திங்க ஆசையா ன்னு கேட்டால்....." பவர் ஸ்டார் மாதிரியே சிரிக்கிறான்..."ம்ம்...ம்ம்..ன்னு கையையும் காலையும் அசைத்துக் கொண்டு......என்று அடுக்கிக் கொண்டே போகிறாள் கல்யாணி.
இதற்குள் பாத்ருமை விட்டு வெளியே வந்த சிவா, தான் குளித்து விட்டதன் அடையாளமாக "கம கம" வென்று யூடிகோலன் வாசனையோடு வெளியே வருகிறான்
அடுத்த சில நிமிடங்களில் அம்மா..."டின்னர்...என்ன பண்ணிருக்கே..? என்று டைனிங் டேபிளில் தாளம் போட்டபடியே வந்து உட்கார்ந்தான் சிவா.
ஹேய்...சிவா....இன்னைக்கு அங்க ஆஃபீஸ்ல நல்ல டின்னர் மெனு.உனக்குப் பிடிச்சது.....இங்க ஸ்கிப் பண்ணு...அங்க போயி ஒரு வெட்டு வெட்டு..என்று சிரித்தவள் உனக்குப் பிடிச்ச வெஜ் புலாவ் ஷாஹி பன்னீர் குருமா.....ம்ம்ம்ம்ம்ம் என்று மூச்சை உள்ளுக்கு இழுத்தவள் எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை...நீயாவது அனுபவி...என்று சொன்னதும்....சிவா ஒரு டம்பளர் தண்ணீரைக் குடித்துவிட்டு ஆதர்ஷைத் தூக்க வரவும்...
ஐயையோ....அவனுக்கு நான் டயாபர் போடலை....தூக்காதே சிவா...அப்பரும் உனக்கு லேட் ஆகும்..என்றவளாக ஆதர்ஷை அவன் கையிலிருந்து இவள் வாங்கவும் இவளது நைட்டியை அவன் நனைக்கவும் சரியாக இருந்தது.
இதுக்குத் தான் சொன்னேன் என்று சிரித்தவளை ....நீ சொல்லற எல்லாத்துக்கும் பின்னால ஒரு ரீசன் இருந்துண்டே இருக்கு...அதான் பெண் புத்தி பின் புத்தி....என்று அவளது கன்னத்தை ஒரு கிள்ளு கிள்ளி விட்டு சிவா கிளம்புகிறான்.
சமயலறையில் இருந்து தட்டில் சப்பாத்தியோடு வெளி வந்த கல்யாணி இதைப் பார்த்து "இன்னைக்கும் அங்க தான் சாப்பாடா" சரி இந்தா நீ இதைச் சாப்பிடு என்று சிரித்துக் கொண்டே...ஆர்த்தியிடம் தட்டை நீட்டவும்....ஆர்த்தி அம்மா நீங்க சாப்பிட்டு படுங்கோ...எனக்குப் பசி இல்லை. நான் ஆதி யைத் தூக்கம் பண்ணிட்டு வரேன் என்று சொன்ன படி படுக்கையறைக்குள் நுழைகிறாள்.
போன் மணி யாரிடமிருந்தோ அடித்து ஓய்கிறது. யாராயிருக்கும்? குழப்பத்தோடு என்று எழுந்து வந்தவள், ' அம்மா யாராயிருந்தாலும் எடுக்காதீங்க ' என்று சொல்லிவிட்டு போகிறாள்.
கல்யாணி சப்பாத்தியை சாப்பிட ஆரம்பிக்கிறாள் அவள் மனம் பின்னோக்கி அவள் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை மெல்ல ஆரம்பிக்கிறது.
இனிமேல் என்னால் வேலைக்குப் போக முடியாது. வீட்டிலும் ஆபீசிலும் என்னால் வேலை செய்ய முடியலை.நான் வேலையை ரிஸைன் பண்ணலாம்னு நினைக்கறேன்....பண்ணிடட்டுமா? நீங்க என்ன சொல்றேள்...? என்று ஆவலுடன் கேட்டு வைக்கிறாள் கல்யாணி.
ஆமா...நீ வாக்கப் பட்டு வந்த இடம் சரபோஜி மகாராஜாவோட பரம்பரை.....அத்தோட இல்லாமல் உன் பொறந்தாத்துல ஏக்கர் ஏக்கரா நஞ்சையும் புஞ்சையும் தூக்கிக் கொடுத்து மூணு போகம் விளைச்சல்லே வீடே நெறைஞ்சு கிடக்கு....பாரு..நானே தங்கை ராதிகா கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்க மூச்சு முட்டி முழிகள் பிதுங்கிண்டு நிக்கறேன்..இதுல நீ வேற குண்டைத் தூக்கிப் போடு..வேலையை விடறேன்....வெங்காயத்தை விடறேன்னு.....அப்பறம் சோத்துக்கு லாட்டரி தான் அடிக்கணும்.புரியுமோன்னோ. வாயை மூடிண்டு படு...நீ வேலைக்குப் போறதனாலத் தான் உன்னையே நான் கல்யாணம் பண்ணிடு இருக்கேன்....அதைப் புரிஞ்சுக்கோ முதல்ல...என்றவர் ஆமா வேலையை விட்டுட்டு என்ன செய்யப் போறதா உத்தேசம்...? அக்கடான்னு டிவி யில் மெகா சீரியலாப் பார்த்து தள்ளிண்டு உங்கம்மா இதைச் சொன்னா...உங்கம்மா அதைச் சொன்னான்னு நான் வேலை விட்டு வந்ததும் கண்ணைக் கசக்கிக் கிண்டு குற்றப் பத்திரிகை வாசிக்கணுமா ? நீ வேலையெல்லாம் விடப் போறதில்லை....மாசம் பொறந்தால் பத்தாயிரம் முள்ளங்கிப் பத்தையா வேலையை விட்டால் எவன் தூக்கிக் கொடுப்பான் ? என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு படுக்கையை விட்டு எழுந்து பால்கனியில் நின்று கொண்டு சிகரெட் பற்ற வைத்து இழுத்த இழுப்பில் அறையெல்லாம் ஒரே புகை மண்டலம்...நாற்றம்.
இந்த நேரத்தில் இப்படி உதித் தள்ளாட்டா என்ன ?எனக்கும் இந்த நாற்றம் பிடிச்ச புகை பிடிக்கலை...குழந்தைக்கும் ஆகாது...என்று கல்யாணி சொன்னதும்.
எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...நாத்தம் கீத்தம்னு சொல்லாதேன்னு சொல்லிக் கொண்டே வந்தவர் எரிந்து கொண்டிருக்கும் சிகரட்டை வைத்து கல்யாணியின் கையில் ஒற்றி அணைக்க...அந்தச் சூடான கங்கு பட்டுத் துடித்துப் போனவள்...." நீங்கள்ளாம் மனுஷ ஜென்மத்திலயே சேர்த்தியில்லை.....உங்களுக்குப் புருஷன்னு வேற பேரு..." என்று தனை மறந்து வேதனையில் வார்த்தையை விட அவனுக்கு அதுவே போதுமாயிருந்தது.
எங்கே...சொல்லுடி...இன்னொருவாட்டி.....சொல்லுடி...சொல்லுடி....என்று அந்த ராத்திரி பூரா இதையே சொல்லிச் சொல்லி கல்யாணியின் கனவை கிழித்து ரணமாக்கி இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து அருகில் படுத்துக் கொண்டிருந்த குழந்தை சிவாவையும் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்தி.....அவரது இயலாமையை ஆணாதிக்கத்தில் இணைத்து கல்யாணியைக் கசக்கிப் பிழிந்த போது புரிந்து கொண்டாள் இவர்களுக்குத் தான் வெறும் கறவை மாடு மட்டும் தான் என்று.
உங்கம்மா நீங்க இல்லாத போது என்னை ரொம்பப் படுத்தறா. நம்ம பிள்ளை சிவாவை கொஞ்சம் கூட பிடிக்கலை அவருக்கு. அதாவது புரியுமா உங்களுக்கு...
என்னடி சொல்றே நீ? அம்மா சொல்றது சரி தான் சம்பாதிக்கறோம்னு திமிர் உனக்கு....அதான் இப்படி எல்லாம் பேசச் சொல்லுது.
இஷ்டம் இருந்தால் இரு...இல்லாட்டா உன் பொறந்தாத்துக்குப் போ....கை இறங்கியது கன்னத்தில்.சிவந்தது.
மாமியார் எங்கிருந்தோ இதைப் பார்த்து ரகசியமா சிரிப்பது போலிருந்தது இவளுக்கு.
சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் விஸ்வரூபமாய் உரு எடுத்து... அதிலிருந்து புகை கிளம்பி சந்தேகத்தில் கொண்டு போய் விடிந்து வார்த்தைகள் தடிக்க கல்யாணி மனதுக்குள் வைத்திருந்த விஷயத்தை வெளியில் கொட்டினாள் .
ஒரு நாள் அது நடந்தே விட்டது.
நான் போறேன். நீங்க அவளோடயே இருந்துக்ங்கோ.
எவளோட?
அதான்...ஒருத்தியோட எப்பப் பாரு பேசிண்டே இருக்கேளே....போன்ல...அவளோடத்தான்.என்று கோபத்தில் வார்த்தைகள் உதிர்ந்தது.
அடிச்சக்கை....நீ கடைசீல இப்படித் தான்னு ஆரம்பத்திலேயே புரிஞ்சுக்காம போனேன் பாரு...என் புத்தியை ஜோட்டால அடிச்சுக்கணும்
முதல்ல உனக்கு யாரோட தொடர்பு இருக்குன்னு சொல்லிட்டுப் போ...அதை விட்டுட்டு என் மேலே பழியை போட்டுட்டு தப்பிக்கப் பார்காதே..!
ஒரு அண்ணன் தங்கை கிட்டப் பேசறதைக் கூட தப்பாப் பேச யாருடி சொல்லிக் கொடுத்தார் உனக்கு என்று தர்ம அடிகள்.
உடலில் அசிங்கம் பட்டது போலத் துவண்டவள் என்ன மனுஷர் நீங்க என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டேள்..உங்களைச் சொன்னாள் மட்டும் எப்படி பொத்துக் கொண்டு வருது ...என்று தவித்தவளாக மனதுக்குள் "கல்யாணி....இந்த நரகம் எனக்கு இனி வேண்டவே வேண்டாம்"..வாழற வரையில் கொஞ்சம் நிம்மதியா வாழணும் உங்களுக்கு கண்ட நேரத்தில் போன் வருது..நீங்க தான் போன்ல சிரிச்சு சிரிச்சு பேசறேள்..ஆனால் என்னைக் கண்டதும் மட்டும் முகமும் இறுகுது. இதெல்லாம் நான் பார்க்க மாட்டேனா? நம்ம ராதிகாவா இருந்தா எனக்குத் தெரியாதா என்ன? நான் என்ன பச்சைக் குழந்தையா? எனக்கு யோசனை பண்ணத் தெரியாதா ? என்று தைரியமாக வாய் கொடுக்க.
அன்று கணவரிடம் கையால் வாங்கிக் கட்டிக் கொண்டவள்...மனசுக்குள் திட்டம் தீட்டி குழந்தை சிவாவுடன் எப்படி இந்த வீட்டை,இவரை விட்டு வெளியேறுவது என்ற ஒரே சிந்தனையில் இரவும் பகலும் சிக்கினாள் கல்யாணி.
மாமியார் என்ற செங்கோல் இறங்கியது..கணவனின் கொடுங்கோல் நிமிர்ந்தது. அட்டூழியம் தன்னை யாரும் கேட்க முடியாது என்ற ஆணவம்....நீ போனால் போ என்ற தெனாவெட்டு...அனைத்தும்..."உனக்கு நான் வேண்டாம்னு சொன்னியே...அப்போ உனக்கு வேற யாருடி இருக்கா? இந்த ஒரே கேள்வியை அஸ்திரமாகப் பயன்படுத்தி கல்யாணியைக் கட்டுக்குள் வைக்க அவளை எங்கேயும் நகர விடாமல் வைத்திருந்த மூர்க்கம்.
ஆனால் கணவன் என்ற கோதாவில் தான் மட்டும் இஷ்டத்துக்கு இருந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே குடியும், அடியும் நுழைந்த போது கல்யாணி வெகுண்டாள்.
குழந்தை சிவாவுக்கு எட்டு மாசத்திலேயே ஆஸ்துமா வந்து அவதிப்பட ஆரம்பிக்கவும்....அதைச் சிறிதும் கவனிக்காமல் இருக்கும் தனது கணவனின் போக்கும்....தான் கல்யாணியை அதிகம் பாதித்தது. நம்ம குழந்தைக்காகவாவது நீங்க இனிமேல் சிகரெட்டைத் தொடக் கூடாதுன்னு இவள் கூப்பாடு போட்டாள் . இதோ பாருங்கோ..உங்களாலத் தான் நம்ம குழந்தைக்கு "ஆஸ்துமா" வந்திருக்கு...டாக்டரே சொன்னார்...மூச்சு விட எப்படித் தவிக்கிறான் பாருங்கோ உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? நீங்க அந்தச் சனியனை விட்டு ஒழிக்கலைன்னா நான் இந்தப் பக்கம் தலை வெச்சுக் கூடப் படுக்க மாட்டேன்..நானும் என் குழந்தையும் எங்காவது போய்டுவோம். ஆமாம் ..இப்பவே சொல்லிட்டேன்...என்கிறாள் அழுத்தமாக.
நீ பெத்த இந்த சீக்காளிக்கெல்லாம் என்னால் நர்த்தனம் ஆட முடியாது... உனக்கு இஷ்டம் இருந்தால் இங்க இரு...இல்லாட்டி நீ பெத்த இந்த "இழுப்பாண்டி"யை இழுத்துண்டு எங்க போறியோ..என் கண் காணாத இடத்துக்குப் போய்டு.....கடைசியா கணவர் என்ற முறையில் சொன்ன இந்த ஒரே வார்த்தையை இறுக்கப் பற்றிக் கொண்டு கிளம்பினவள் தான் கல்யாணி. தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிறைவு அவளுக்குள் இருந்தது.
எல்லாம் கையில் வேலை இருக்கும் தைரியம்...அழுத்திப் பிடித்துக் கொண்டு வேலைக்கு போவது தான் எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து சிவாவை நல்ல விதமா உருவாக்கணும்..அதற்கு இந்த இடம் தோது பட்டு வராது என்று தீர்மானமாக கணவனை விட்டு விலகுவது என்று முடிவெடுத்து ஒருவழியாகப் பிரிந்து செல்லத் துணிந்தாள்.
கல்யாணச் சிக்கலில் இருந்து மீண்டவள் சுதந்திரக் காற்றை அனுபவித்து சுவாசிக்க விரும்பினாள் கல்யாணி...எல்லாம் கனவு போல் தனக்கு கல்யாணம் ஆனது, புக்ககம் புகுந்தது, அது கசந்தது எல்லாம். தன்னை அம்மா என்று சொல்ல ஒரு பிள்ளை கிடைக்கத்தானோ என்னவோ என்ற நிம்மதியில் மகனை மனம் போல வளர்த்து தந்தையுமானாள் கல்யாணி.
இதோ....இன்று அவன் மகன் பெயர் சொல்ல ஒரு மகனைக் கையில் தந்திருக்கும் போது வாழ்வில் வெற்றி பெற்றவள் நான் தானே...நினைத்துக் கொண்டிருக்கும் போதே சப்பாத்தி காலியாகி வெறும் தட்டைத் துளாவுவதைப் பார்த்த ஆர்த்தி..என்னம்மா...நீங்க...ஏதோ யோசனையில் இருக்கீங்க போலத் தெரியுதே...இன்னொரு சப்பாத்தி போடவா? என்று கேட்டுக் கொண்டே வந்தாள் .
வேண்டாம் ஆர்த்தி நான் சாப்டாச்சு..போதும் நீயும் நேரத்தோட சாப்பிடு..என்றவள் எழுந்து கையலம்பச் சென்றாள் .
அம்மா இன்னைக்குன்னு ஆபீஸ்ல ஒரே வேலைம்மா...அதான் இந்த சிவாவோட தோஸ்து இருக்கானே..அவன் தான் இப்போ எங்கள மேய்க்கிறவன் படாத பாடு படுத்துவான்..பார்த்துக்கங்க என்று அன்று நடந்த கதைகளைச் சொல்லத் தொடங்கினாள் ..அப்படியே "ஆதி ரொம்பப் படுத்தரானாம்மா..உங்களை ? என்றும் கேட்டாள். இன்னும் ஆறு மாதம்பொறுத்துக்கோங்கோம்மா ஒரு நல்ல டே கேர் இருக்கான்னு விசாரிக்கறேன்...ஆதியை அங்க போடலாம்...என்றவளைப் பார்த்து.
நோ.நோ...நோ..நோ.....என் பேரனை நான் தான் வளர்ப்பேன்...எனக்கு அவன் இருப்பது எவ்ளோ சுகமா இருக்கு தெரியுமா ?நீ தான் அவனை ரொம்ப மிஸ் பண்றே..அந்த குறும்பு..அவனோட சேஷ்டை எல்லாம் உனக்குத் தான் பார்த்து ரசிக்க கிடைக்காது...அது தான் என்னோட வருத்தம்..ஒரு வேளை நீ வேலைக்கு முழுக்குப் போட்டால் அதெல்லாம் கிடைக்கும். ஆனால் நீ வேலையை விடுவியா? கல்யாணி ஆதங்கத்தோடு கேட்கிறாள்.
என்னம்மா நீங்க....! நீங்க தானே சொன்னேள்...சம்பளத்தை அப்படியே குழந்தை பேரில் போட்டு வை என்று...இப்போ இருக்கிற விலை வாசிக்கும் படிப்பு செலவுக்கும் ரெண்டு பேர் சம்பாதிச்சாலும் போறாதுன்னு. அதான்...இன்னும் கனிசமா கொஞ்சம் பணம் சேரட்டும் நானே வேலையை விட்டுடறேன். ஆதி பேச ஆரம்பிச்சவுடன் நான் வேலையை விட்டுடலாம்னு நினைக்கறேன்மா.
சரி சரி...எனக்கொன்னும் கஷ்டமில்லை எல்லாம் உன் சௌகரியம். கல்யாணிக்கு தன் மருமகளை அவள் இஷ்டப் படி விடுவதில் தான் அத்தனை சந்தோஷம். நான் கஷ்டப் பட்டேன் அதனால் வீட்டு வாழ உந்த உன்னையும் கஷ்டப் படுத்திப் பார்க்கணும்னு என்று நினைக்காமல்...நான் தான் கஷ்டப் பட்டுட்டேன் நீயாவது சந்தோஷமா சுதந்திரமா இரு என்று அன்போடு உரிமையும் கொடுப்பதில் உயர்ந்து நின்றாள் கல்யாணி.
சிவாவுக்கும் அதில் தன் அம்மாவின் மேல் அளவு கடந்த மரியாதை. ஆர்த்திக்கு தான் நல்ல கணவனும், குடும்பமும், பெற்றவள் போல் பாசம் தரும் மாமியாரும் கிடைத்ததில் நெஞ்சம் கொள்ளாத மகிழ்ச்சி.
அம்மா....இன்னைக்கு எங்க ஆபீஸ்ல ஒரு' மறுவாழ்வு மையம்' ஒன்றைத் தத்து எடுத்து அங்கிருக்கும் பலருக்கும் சிகிச்சைக்கு உதவலாம்னு அங்க போயிருந்தோம். அதில் ஒருத்தரைப் பார்த்தால் ரொம்பப் பரிதாபமா இருந்ததும்மா...இப்போ தான் ரீசண்ட்டா வந்து சேர்த்திருக்கார். அங்கே இருக்கும் அனைவருமே ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்கையை இழந்து தவிப்பவர்கள் தான்...எத்தனை பேர்கள் தெரியுமா ?செயின் ஸ்மோகிங், லிக்கர், கஞ்சா, அபின், ஈவன் சின்னப் வயசுப் பசங்க கூட இங்க வந்து ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு நன்னாத் திரும்பிப் போறாளாம்.. அங்க ஒருத்தர் ரொம்ப பாதடிக் கண்டிஷன் . இதோ , இவரைத் தான் எங்க சென்டர் தத்து எடுத்துக்கிட்டு இவரோட ட்ரீட்மெண்டுக்கு ஆகும் முழு செலவையும் நாங்களே ஸ்பான்சர் பண்ண ஏத்துண்டிருக்கோம்.
ஆமா.....வீட்டில் மனைவி குழந்தைகளைப் பார்க்காமல் போதைக்கும் குடிக்கும் சிகரட்டுக்கும் தங்களை அடமானம் வைத்து விட்டு திமிரோடு அலையும் இவர்களுக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்துக் காப்பாற்றணும் ..அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அதே தப்புச் செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் அதற்கு பதிலா படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்குப் படிப்புக்காக உதவி செய்யலாம். பணத் திமிரில் போதையில் சீரழிந்தவர்களை சீராக்கி என்ன புண்ணியம்? எனக்கு இதில் உடன்பாடே இல்லை ஆர்த்தி...என்று சமயலறையில் ஏதோ காரியம் செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி.
இதோ...அம்மா இவர் பெயர் பரணி...! யாருமே இல்லையாம்....வேலை, சொத்து, பெண்டாட்டி, குழந்தைகள் என்று எல்லாமே இவரை விட்டுப் போன நிலையில் கூடப் பிறந்த தங்கை யாரோ ராதிகாவாம் வந்து போன வாரம் இங்க கொண்டு வந்து சேர்த்து விட்டு "எங்களால் இது போன்ற நிலையில் இருக்கும் என் அண்ணாவைப் பார்த்துக் கொள்ள முடியாதுன்னே சொல்லி விட்டுட்டு போனார்களாம். எப்படி இருக்கு பாருங்க....?என்று யதார்த்தமாக சொன்ன ஆர்த்தியின் வார்த்தையை கவனித்த கல்யாணிக்குத் தூக்கி வாரிப் போட்டது..கைவேலையை அப்படியே போட்டு விட்டு புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்துக் கொண்டே எங்கே காமி ஆர்த்தி.....என்று ஆவல் மீறிட வந்து அவளது ஐபாடைப் பார்க்கிறாள்....நிச்சயமா இது அவர் தான்...சிவாவோட அப்பா...பரணீதரன்....! அச்சச்சோ...என்று அதிர்ந்தவளாக தனது கைகள் நடுங்க வாங்கிப் பார்த்தவள் கண்கள் பனிக்க "ஆர்த்தி என்னை இவரிடம் அழைச்சுண்டு போறியா?"என்று மெல்லிய குரலில் கேட்கிறாள் கல்யாணி.அந்தக் குரல் உடைந்து போயிருந்தது.
என்னாச்சும்மா...உங்களுக்கு..? எனிதிங் ராங்? என்ற ஆர்த்தி அம்மாவின் முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறாள். கல்யாணியின் கண்கள் கலங்கி இருந்தது.
ச்சே...ச்சே...அழாதீங்கோ....இப்போ தானே சொன்னேள் நீங்களே...இவர்களை எல்லாம் காப்பாற்றி என்ன ஆகப் போகிறதுன்னு....? ஆமா....இவரைப் பார்த்ததும் உங்க கண்கள் ஏன்....அப்போ...அப்போ...உங்களுக்கு இவரைத் தெரியுமாம்மா...? ஆர்த்தி ஆச்சரியத்தில் கேட்டாள் '
ம்ம்ம்...இவர் தான் சிவாவோட அப்பா...உன் மாமனார்....என் கணவர். என்று நிறுத்தினாள். அதைத் தொடர்ந்து கனத்த மௌனம் இருவரையும் தாக்கியது
இவர் இப்படியாவார்னு நான் நினைச்சே பார்க்கலை ஆர்த்தி. பெத்த பிள்ளை தான் முக்கியம்னு நினைச்சேன்....அதைத் தந்த கணவர் அதை விட முக்கியம்னு என் மரமண்டைக்கு அப்போ புரியலை. ஒரு விதத்தில் இவர் இப்படியானதற்கு நானும் தான் காரணம். விட்டுக் கொடுத்து வாழாமல் விட்டுட்டு வந்திருக்கக் கூடாது..
கண்டிப்பா நாளைக்கு நாம மூன்று பேருமே போகலாம்..என்றவள்...சாரிம்ம்மா...இந்த நேரம் பார்த்து உங்க மனசுக்கு நான் இவ்ளோ கஷ்டம் தந்திருக்கக் கூடாது...என்று கவலைப் பட்டாள் .
பரவாயில்லை ஆர்த்தி...நாளைக்கு போகலாம்...என்றவளுக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை மீண்டும் மீண்டும் தன் கணவன் பற்றிய நினைவாகவே இருந்தது அவளுக்கு. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.
மறுநாள் காலை கல்யாணி எழுந்திருக்கும் போதே இன்று அவரைப் பார்க்க போகிறோம் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே எழுந்தாள் . எத்தனை வருடங்களாச்சு கிட்டத் தட்ட 25 வருடங்கள் கழிந்து மீண்டும் இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. சிவா தெரிந்தால் என்ன சொல்வானோ? என்று பல விதக் குழப்பத்தில் காலைப் பணிகளை முடித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.
அடுத்த சில மணி நேரத்தில் மறுவாழ்வு மையத்தில் இவர்களின் கார் சென்று நின்றது. இறங்கி உள்ளே செல்லும் வழி எல்லாம் இங்கே எங்காவது அவர் இருக்காரோ என்று கண்கள் அலைபாய உள்ளே சென்று ஆபீஸ் ரூம் நாற்காலியில் அமர்ந்தார்கள் . குழந்தை ஆதி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது நல்லதாயிற்று.
ஆர்த்தி அங்கிருந்தவரிடம் ஏதோ சொல்லவும் அவரோ .வாங்க...வாங்க..என்று அழைத்தபடியே இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் செல்கின்றனர்.
அங்கே கல்யாணி கண்ட காட்சி "உடம்பே உருக்கி உருக்குலைந்து போன தன கணவன் பரணீதரனை பார்த்து .."அட பகவானே..இவருக்கா இந்த நிலை...ஆஜானுபாகுவாக..எழுந்து நின்றால் நாலு பேர்கள் நடுங்குவார்களே ...இப்ப இவராலயே எழுந்து நிக்க முடியாமல் நடுங்குறாரே ...இதென்ன சோதனை? எத்தனை சொல்லியிருப்பேன்...தலையால அடிச்சுண்டேனே....அப்போவே கேட்டிருந்தால் இப்போ இந்த கதி வந்திருக்குமா?
எண்ணியபடியே..." நான் தான் கல்யாணி வந்திருக்கேன்..." என்னை நினைவிருக்கா - இப்படிக் கேட்கும்போது கல்யாணிக்கு மனசு கழண்டு தனியே விழுந்தது போலிருந்தது.
பரணீதரனின் கண்களில் ஒரு புத்தொளி.....மின்னியது. "கல்யாணி.....கல்யாணியா...நீயே வந்துட்டியா..? என்னைப் பார்க்க நீயே வந்துட்டியா? என் நினைவு உன்னை இங்க கொண்டு வந்து செர்த்துடுத்தா? என்னை மன்னிச்சுடு கல்யாணி...என்னை மன்னிச்சுடு...எனக்கு கண் சரியாத் தெரியலை..ரொம்ப புகை மண்டலம் மாதிரி மங்கலாத் தான் தெரியறது..எனக்கு உன்னைத் தெரியலையே...."நான் பாவி...நான் பாவி.." என்று தன முகத்தில் "படீர்..படீர் "என்று தன் கைகளால் அடித்துக் கொள்வதைத் தடுத்து..."வேண்டாம்...வேண்டாம்...எல்லாம் சரியாகும்..என்று கதறியவளாக கல்யாணி குலுங்கிக் குலுங்கி கதறிக் கொண்டிருந்தாள்.
உங்களை நான் இந்த நிலையில் சந்திப்பேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்க்கலையே . எவ்வளவு சொன்னேன்...அந்தப் பாழாப் போன சிகரெட்டும் குடியும் வேண்டாம்னு.....இப்போ அது உங்களைக் குடிச்சு இப்படி உருத் தெரியாம உறிஞ்சிடுத்தே....குடும்பத்தை குலைத்து , குணத்தைக் கெடுத்து ,
உடம்பைக் கெடுத்து உங்களை இந்த நிலையில் பார்க்க என் நெஞ்சே வெடிச்சுடும் போலிருக்கே. நான் என்ன செய்வேன்? நான் அப்படி உங்களை விட்டு குழந்தையைத் தூக்கிண்டு போயிருந்திருக்கக் கூடாது...நான் தான் தப்பு பண்ணினேன்..எனக்கு மன்னிப்பே கிடையாது. என்னை நீங்க தான் மன்னிக்கணும் என்று கல்யாணி விசும்பலினூடெ சொல்லிக் கணவனைத் தேற்றிக் கொண்டிருந்தாள் கல்யாணி.
மொபைலில் சிவாவை அழைத்து விஷயத்தைத் தெரியப் படுத்தி விட்டு அவனை நேராக உடனே இங்கு வரச் சொல்லிவிட்டு அம்மாவையும் அவரையும் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தாள் ஆர்த்தி. பிரிந்த மனைவியும் மகனும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டு இப்போது பேரனோடு குடும்பம் கிடைத்து விட்டால் அவர் மிக விரைவில் குணமாகி விடுவார் என்று அவளது மனம் சொல்லி ஆறுதல் அடைந்தது. இது போலக் கூட வாழ்வில் மாற்றம் நிகழுமா? இதற்கெல்லாம் யார் காரணம்....? இதைத் தான் இறைச் செயல் என்று சொல்வார்களா....புரியாத புதிர்களாக அவள் மனதில் பல வினாக்கள் விடைக்காணத் தவித்துக் கொண்டிருந்தது.
கோபத்தில் ஒரு காரியம் செய்து விட்டு அதற்காக ஆயுசு மொத்தம் தனிமையில் துன்பப் படும் வேதனையை இருவரும் கண்ணீரால் கழுவி பிராயச்சித்தம் செய்து கொண்டிருந்தார்கள். தெய்வ பக்தி இல்லை என்று மனம் போன போக்கில் இருக்கிறேன். இப்போது இவர்களை மீண்டும் சேர்த்து வைத்ததை தெய்வம் இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? தன மாமியார் தன கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டத்தைப் பார்த்ததும் ஆர்த்தி தனது வெற்றுக் கழுத்தை ஒரு நிமிடம் தடவிப் பார்த்துக் கொள்கிறாள். என்னதான் மனதோடு நீ இருக்கிறாய் சிவா...தாலி எல்லாம் வேண்டாம் என்று வாய் வார்த்தையாகச் சொல்லிக் கொண்டாலும்..முதன் முதலாக அதன் உன்னதத்தை உணர்ந்தாள் ஆர்த்தி.தனக்கும் பாதுகாப்பு உணர்வு வேண்டுமென உணர்ந்தாள் ஆர்த்தி.
பல வருடங்கள் தன்னைத் தேடாத கணவனை கண் கண்டதும் உருகும் பெண்ணின் மனம் எண்ணி வியந்தவளாக, தன் கணவன் கஷ்டப் படும் சமயத்தில் அவன் செய்த வஞ்சனைகளை நினைக்காது வாஞ்சையோடு பாசத்தைக் காண்பிக்கும் தனது மாமியார் தான் நிஜத்தில் தனது கண்ணைத் திறந்து வைத்த தெய்வம் என்று எண்ணினாள் ஆர்த்தி.
அடுத்த அரை மணி நேரத்தில் சிவா ஓடோடி வந்து அம்மாவையும் அப்பாவையும் ஒரு சேரப் பார்த்து கண் கலங்கி நின்றான். வரும் வழியில் அவன் மனம் இதைப் பேசு அதைப் பேசு என்று சொல்லிக்கொண்டே வந்த எதுவும் அப்போது அவனது நினைவின் விளிம்பில் கூட நில்லாமல் காணாமல் போனது.
ஒரு அமைதி, இறுக்கம் முகத்தைச் சூழ..."அப்...பா...!.என்று முதல் முறையாக வார்த்தையின் ஒலியில் ஒரு புது உறவை அழைத்த நெகிழ்ச்சியில்...
"என் அம்மா மாதிரி ஒரு தேவதை...உங்கள் வாழ்கையில் நீங்கள் செய்த ஏதோ புண்ணியம்பா....யாருக்குமே இரண்டாவதா இது போல ஒரு சான்ஸ் கிடைக்காது....உங்கள் வாழ்க்கையில் கிடைச்சிருக்கு..நீங்க அதை உணர்ந்துண்டாப் போதும் எங்களுக்கு...என்றவன் அவரின் கைகளைப் பற்றி நான் உங்கள் பிள்ளை சிவா....ப்பா....! என்கிறான்...பாசத்துடன். அந்த அழுத்தத்தில் உங்களை நாங்கள் பரிபூரணமா ஏற்றுக் கொண்டோம் என்ற வாக்கு மறைந்திருந்தது .
தட்டித் தடுமாறி அவனது பற்றிய கைகளை இறுக்கிக் கொண்டவராக ....சிவா...சிவா.....சிவா...என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே...."எனக்குப் பிராயச்சித்தமே இல்லைடா...." தெய்வம் நின்று கொல்லும் என்பது என் விஷயத்தில் உணர்ந்து கொண்டேன்...நல்லா புரிஞ்சுண்டேன்..குடும்பம் தான் சொர்க்கம்.மனைவியும் குழந்தையும் தான் ஒரு தனி மனிதனின் பாதுகாப்புக் கவசம் என்பதை நான் நன்னாவே உணர்ந்து கொண்டேன்..சிவா நீயும் என்னை மன்னிச்சுடுப்பா...! பரணீதரன் கண் கலங்கியபடியே தான் பெற்ற மகனின் தோளில் முதன் முறையாகச் சாய்ந்து கொண்டார்.
மையத்தின் தலைவர் இருந்து சிகிச்சை பெற்றுச் செல்லவும் என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பரணீதரன்..."அதெல்லாம் இனி எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம்...என் குடும்பத்தோட என்னை போக விடுங்கள். அன்பே என் மனசுக்கு பெரிய சிகிச்சை ...அதுவே போதும் எனக்கு என்று மகனின் கையைப் பிடித்தபடியே வெளியேறுகிறார்.
குடும்பம் மீண்டும் கிடைத்த குதூகலமும், செய்த தவறுகளின் பிராயச்சித்தமாக நல்லவனாக வாழ வேண்டும் என்ற வைராக்கியமும்...கல்யாணியின் அன்பும்....அனுசரணையும் பரணீதரனை மிக விரைவில் புது மனிதனாக மாற்றியது. மகன் சிவாவும் மகள் ஆர்த்தியும் பேரன் ஆதியின் ஸ்பரிசமும் அவரது ஆரோக்கியத்தைத் திரும்பித் தந்தது போலிருந்தது. மகனை வளர்க்கத் தவறிய அப்பா தன் பேரன் ஆதியை ஆசையோடு தூக்கிக் கொஞ்சலானார்.
ஒரு நல்ல நாளில் கண் அறுவை சிகிச்சையும் எளிதில் முடிந்து வீடு திரும்பினார் பரணீதரன்.
புதுக் கண்ணொளியோடு உலகத்தையே புதிதாகக் கண்ட திருப்தியில் தன்னையே நம்ப முடியாமல் மகிழ்வில் கல்யாணியைக் கட்டிக் கொண்டு பரவசமானார்.. புதிய கண்ணொளி, இரண்டாம் பிறப்பு, மீண்ட இல்வாழ்வு, ஆம்......இவை இறைவன் கொடுத்த வரம் பரணீதரனுக்கு ..! யாருக்கு இப்படிக் கிடைக்கும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக