"ஓம் ஞானவிநாயகா...ஓம் சர்வேஸ்வரா ....ஓம் இயேசுவே....ஓம் முகம்மதுநபியே,,,ஓம் ரமணாய ...ஓம் ஞான முருகனே நமஹ "
இந்த முதல் ஆன்மீகக் கட்டுரையை கருணையோடு இந்த ஆன்மாவுக்கு உடலும் உயிரும் கொடுக்கக் காரணமாகி இந்தப் பூவுலகில் ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு பணிவான வணக்கங்கள் சொல்லிக் கொண்டும்...
இந்த ஆன்மாவை ஞானவழிப் பாதையில் அழைத்துச் செல்லும் தெய்வீக ஒளிக்கு... சிரம் தாழ்த்தி நன்றி கூறி எழுத ஆரம்பிக்கிறேன்.
இந்த எழுத்துக்களையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளும் ஜீவாத்மாக்கள்....நலம் பெருக..!
மெய்ஞானம் என்னும் அமுதைப் பருகும் வண்ணம் இந்த பகுதிகள் பலவும் நமது ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் அமர்ந்து ஜீவித்து உயர் ஞானத்தின் ஒரு துளியையாவது அருந்தத் தருமென்றால்....இந்த ஞான மார்க்க அருள் வழியில் வந்த இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆன்மாவை தொட்டணைத்து.....யோகம் பெறும்.
பக்தி வழி செல்ல நினைத்தும், நன்னெறி புரிந்தும்...கூட ஏனோ...எண்ணியபடி அனைத்தும் அமைவதில்லை. விதி அழைத்துச் செல்லும் பாதை வழியே தான் வாழ்க்கை என்று பயணிக்கிறோம். விதி வலியது தான்..இருப்பினும்..
ஊழ்வினை சிந்தனையோடும் அதிலிருந்து வெளிவரவும் மட்டுமே தெய்வ வழிபாடு என்ற கொள்கையில் துன்பங்களோடு அணுகுவதால்....துயரம் தொடர்ந்து கொண்டே தான் கூட வரும்.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பே தெய்வங்களும்,.முனிவர்களும்,சித்தர்களும்,யோகிகளும்,ஞானிகளும்,
மகரிஷிகளும் மனிதப் பிறவியின் விதி என்பதை.... மெய்ஞானத்தால் மாற்றும் வல்லமை நுண்மதிக்குண்டு என்று வழிவகுத்து சொல்லியிருந்தாலும்...ஏனோ....மனித இனம் அதில் இருந்து தடம் மாறி முற்றிலுமாக விஞ்ஞான வாழ்க்கைக்குத் தங்களைத் தாங்களே முழுதுமாக அர்பணித்துக் கொண்டு விட்டார்கள். விஞ்ஞானம் முன்னேற்றி இருந்தாலும் அது முற்றிலும் மனிதர்களை அடிமைப் படுத்தி ஆட்கொண்டுவிட்டதை உணராத நாம் மேலும் மேலும் நம்மை அதன் பிடிக்குள் திணித்துக் கொண்டே வாழ்கிறோம். எது நம்மை ஆட்கொள்கிறது...அதுவே நாளடைவில் நம்மை அழித்துக் கொள்ளும். இதுவே விதி....இன்று எது மிகவும் முக்கியமானதாக இருக்குமோ அதுவே நாளை வேண்டாததாகி விடும்...எந்த ஒரு பொருளை மிகவும் சிரமப் பட்டு அடைகிறோமோ அந்தப் பொருளும் நாள் செல்லச் செல்ல அதற்காக நாம் பட்ட சிரமங்கள் அனைத்தும் வீண் என்பது போலாகி விடும்.
இதுவும் உலக நியதி..எங்கும் எதிலும் எழுதாத நீதி.
உலகத்தை விஞ்ஞானம் அழுத்தி விடும் விரைவில் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை....அதே போலவே இன்னும் எத்தனை நூற்றாண்டுகளில் பூமி முழுதும் விஞ்ஞானத்தின் சுழலில் சிக்கித் தன சுழற்சியை நிறுத்திக் கொள்ளும் என்றும் திட்டவட்டமாக சொல்ல இயலாது. ஆனாலும் விஞ்ஞானத்தால் தான் உலகம் அழியும் என்று என்று திட்ட வட்டமாகக் கூற முடியும்....இதில் காலத்தின் பங்கு தான் மிதமிஞ்சி இருக்கிறது.
புண்ணிய பூமியாம் இந்தத் திருநிலத்தில் ஞானிகள் சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போக... பல விஞ்ஞானிகள் செய்து முடிப்பதைக் காட்டிலும்...பல மடங்கு அதி அற்புத செயலைச....சகல சக்திகளும் கைவரப் பெற்ற மெய்ஞ்ஞானத்தால் செய்து முடிக்க இயலும் வல்லமை கிடைக்கப் பெறும்.
நாம் எங்கே போகிறோம்...? உலகம் முழுதும் ஒரே கேள்விக்குறி..?
நாம் என்ன செய்ய வேண்டும்..?
உலகம் நிலைபெற்று அமைதிப் பூங்காவாக திகழ ஒவ்வொரு மனிதனின் பங்கு தான் என்ன..?
மனித இனம்....மனிதமாய் வாழ தீய சக்திகள் செயலிழந்து போக....மெய்ஞானத்தின் வழியே விஞ்ஞானத்தையும் போற்றி வாழ வாருங்கள்.
உள்ளத்தின் கேணி ஊறிக் கிளம்பும் ஞான சிந்தனைகள்...வீணாகிப் போகாமல்...எழுந்ததை இங்கே பொக்கிஷமாகப் பரப்பி வைக்கிறேன்... வள்ளலார் சொல்வதுபோல கடைவிரித்தேன்....கொள்வாரில்லை....என்று இதுவும் வீகத் தான் போவது உறுதி. ஏனெனில் வள்ளலார் பெரிய ஞானி....சித்த புருஷர்...அவர் அனுபவித்துச் சொன்ன நல்ல சிந்தனைகள் பலவும் கூட இன்னும் மொத்த ஜனத் தொகையில் வெறும் இரண்டு சதவிகிதம் தான் மக்கள் மனதை எட்டி இருக்கிறது....அவரைப் பின்பற்றி வாழும் அவர் வழி வருபவர்கள் மிகச் சிலரே..! அந்த நிலையில் இந்த ஏழையின் எண்ணம் மட்டும் ஈடேறுமா என்ன..?.இவை எந்த அம்பலமும் ஏறாது எனத் தெரிந்தும் இறைவன் பணித்ததைச் செய்யும் கடமையில் இருப்பதால்....."எண்ணங்கள் வாழும்" என்ற தலைப்பில் இந்தத் தொடரை எனது ஆன்மீக சிந்தனையின் வடிகாலாக....அடிக்கல்லாக ஊன்றுகிறேன்.
முதலில்..தினமும்....அவரவரை ஈன்ற தெய்வங்களை மனதில் பிரார்த்தனை செய்து, இஷ்ட தெய்வங்களை தியானிப்பதும் அவசியமாகும்.
தியானம்.....இதைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொருவரும் இந்த தியானத்திற்கும் ஒவ்வொரு விதமாக பெயர் சொல்லி அழைத்தாலும் ...அதன் ருசி ஒன்று தான்...அதன் ருசியை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணர இயலும். ஆகவே தியானம் செய்யாதவர்கள் இனிமேலாவது செய்ய ஆரம்பியுங்கள். பல சமயங்களில் அவரவர் செய்யும் தொழிலே ஒரு முனைப்போடு செயல் படுவதால் அதுவே தியானமாக ஆகி விடுகிறது.
நமது உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகி..அதன் தன்மையைப் பொறுத்து நமது தீவினைகள் கொஞ்சம் கொஞ்சமாகாதன் வலுவான சக்தியை இழப்பதை கன்ன்கூடாக காண முடியும். தெய்வீக குணங்களான
அன்பு, பாசம், பரிவு, வீரம், ஞானம், சாந்தம்.,சத்தியம், தர்மம், நீதி,நியாயம்,பக்தி ..ஆகிய நல்ல உணர்வுகள் வலுப்பெறவும்...
மிருகக் குணங்களான கோபம், வெறுப்பு, அசூயை, பொறாமை, திருட்டு, பொய் பேசுதல், புறங்கூறுதல்,பழி வாங்கும் எண்ணங்கள், பேராசை போன்ற கீழான உணர்வுகள் தனது சக்தியை இழக்கவும்...
இவ்வாறான பலனால்.... நம் எண்ணங்கள் தெய்வீக சக்தி கிடைக்கப் பெற்று நாம் எண்ணியபடி நல்ல சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ள தியானம் தானே வழி வகுக்கும் என்பது உறுதி.
ஆன்மாக்கள் யாவும் ஒன்றே...அவை மதமாச்சிரியங்களைக் கடந்தது. மிகவும் பரிசுத்தமானது. நம் ஒவ்வொரு உடலுக்குள்ளும் கோயிலுக்குள் உறையும் இறைவனைப் போல குடி கொண்டுள்ளது. நாம் அனைவரும் அறிந்ததே.இந்த தூய ஆன்மாவை நம் ஸ்தூல உடலால் செய்யும் தியானத்தில் எளிதில் கண்டு கொள்ளலாம்.
நம் ஆன்மா....நம் மனதுக்குப் புலப்படும் தருவாயில்....அதைவிட மேம்பட்ட சக்திகள்....சித்தர்கள்..தவமுனிவர்கள்..ஞானிகள் தெய்வங்கள்..தேவதைகள்..மந்திரங்கள்..இவற்றோடு நெருங்கிய தொடர்புகளை நம்முள் இருந்து கொண்டு வரும் சக்தி வாய்ந்தது ஆன்மா.!
அதனால் நம் வாழ்வின் சூட்சுமத்தை எளிமையாக அடைந்து விடலாம்.
மானிடனின் சூட்சுமம் என்ன...?
ஒன்றே ஒன்று தான்...அதுவே....மீண்டும் பிறவாமை...அல்லது ஜீவன் முக்தி.
பிறப்பிற்கும்....ஜீவன் முக்திக்கும் இடையே தான்...மனிதன் என்பவன்..தந்து செயல்களால்..கர்மாக்களின் பலனாக பல பல பிறவிகள் எடுத்து அல்லல் படுகிறான். பாவங்கள் புரியாது...இறை உணர்வோடு கழிக்கும் பொது மட்டுமே குருபலனால்....உயர்ந்த பிறப்புகள் அமையப் பெற்று இறுதியில் முக்தி அல்லது மோட்சம் அடைகிறோம்.
மனிதாங்கப் பிறவி எய்தும்போது..."பிறவாமை" வேண்டும் என்று வேண்டி நின்றாலும்...இந்த உலகத்து மாயையில் சிக்கி அதில் உழன்று.....மீண்டும் மீண்டும் பிறந்து விடுகிறோம். அப்போது நம் பிறப்பின் சூட்சுமம் மறந்து விடுகிறோம். இது மாயா உலக இயல்பு. இந்தச் சக்கரத்தில் இருந்து பிரிந்து வந்து சூட்சுமத்தைக் கடை பிடிக்கும் பொது மட்டுமே நமக்கு இறை சக்தியும் குரு பலமும் கைவல்யமாகின்றது.
அந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல தியானம் கைவரப் பெற்றால்....ஸித்தியின் வழி சுலபமாகத் தெரியும்.
தொடர்ந்த தியானம் மட்டுமே மௌனத்தின் மூலம் பெறக்கூடிய ஆன்ம சக்தியை விரைவில் கொணர்ந்து தந்து ஆன்ம இலக்கை நோக்கி பயணிக்கும்.
இது போன்ற எண்ணங்கள் ஒன்று கூடினால்...நமது ஆன்மா தான் நினைத்துக் கொண்டிருக்கும் சத்திய, நியாய,தர்மத்தை சேர்ந்த வாழ்க்கையை அடைந்து இறையருள் பெற்று...குண்டலினியை எழுப்பும். மூலாதாரத்தில் இருந்து மேல் எழும்பி...ஆக்ஞாவைத் திறக்கும் சக்தி கொண்டது தெய்வீகம். ஆங்கா திறந்ததும் அஞ்ஞானத்தின் வாசல் முற்றிலுமாக மூடிக் கொள்ளும். நசிந்து விடும். மெய்பொருள் விளங்கும். பிறவாமை எனும் ஜீவன் முக்தி கிட்டும் நம்பிக்கை ஆண்பாவுக்குள் பிரவேசித்து ஒளிவிடும்.
இதனால் அதீத நன்மையாக வாழ்வாதாரங்கள் உயரும்...ஆரோக்கியம் கிடைக்கும். குறிக்கோள்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும். எண்ணங்களில் வெற்றி உண்டாகும்.
ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் அதிசய நிகழ்வாக...ஒரு வரப் பிரசாதமாக சந்தர்ப்பங்கள் உருவாகி சிந்தையைத் தெளிவு படுத்தி இன்ப, துன்ப, உலக விஷயங்கள் அனைத்திலும் தாமரை இலைத் தண்ணீர் போல...
சம நோக்கில் மனதைச் செலுத்தும் மாற்றம் தானே உண்டாகும்.
ஆன்மீக சக்தி வீரியத்துடன் எழுந்து...செயலாற்றி மனித நேய , ஆன்மாவின் மேம்பாட்டுக்கு நம்மை கடைதேற்ற
அழைத்துச் செல்லும்.
எனது ஆன்மாவும் அனுபவத்தில் வரமாக "ஒளி" யை கண்கூடாகக் கண்டது.
அதன் பின்பு எண்ணங்கள் தங்களை என்னுள் திணித்துப் பிறந்து..இன்றைய வாழ்வாதார சக்தியைப் புதுப்பித்துக் கொண்டே செல்கின்றதால்....தான்...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றாற்போல...இந்த "எண்ணங்கள் வாழும் " மூலமாக எனது ஆன்மாவின் எண்ணங்களைப் போலவே இதைக் கண்ணுறும் ஒவ்வொருவரும்....சகல நல்லுணர்வுகளை வெளிக் கொணர்ந்து உயர் ஞானத்தின் ஏணிப் படிகளில் ஏற உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்
எனது ஆன்மாவை வேண்டிக் கேட்டுக் கொண்டு.....என் சிந்தனை மாளிகை கட்டி முடிக்க இந்த அஸ்திவாரத்தை ஆழத்தில் மறைக்கிறேன்...
இறையன்போடு.....!
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக