வெள்ளி, 4 மே, 2012

"தெரியாமையைத் தெரிதல் நன்று"
அனுபவம்......எப்போதோ.. சில நேரங்களில் ஆன்மா புரிந்து கொள்ளும்படியான புது விதமான அனுபவங்களை உணர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் சிலரது வாழ்வில் ஏற்படுவது உண்டு. அந்த விதத்தில் எனக்கும் அது போன்ற பெரும் தவத்தால் பெற்ற வரம் போன்ற இந்த அனுபவத்தை வருடங்கள் பல கடந்திடினும் இதயம் விட்டு அகலாத நினைவாக நித்தம் ஜ்வாலையாக எனக்குள் எரிவதால்....அதை அப்படியே இங்கு பதிக்கிறேன்.

இதைப் பற்றி ஏற்கனவே அறிந்தவரும் உண்டு...இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இதன் மூலமாக அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் உண்டு....என்ற எண்ணத்தில் எனது அனுபவத்தை இங்கே சொல்லுகிறேன்.

என் வாழ்வில் நான் அனுபவித்த இரண்டு வித்தியாசமான சுகானுபவங்களில் ஒன்றை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்...இரண்டாவதும் இனி வரும் வாரத்தில் வரலாம்.

இன்றோடு சரியாக பதினோரு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்....இதே நாள்....மே..4 , 2001.

அறையின் என்னையும் என் அம்மாவையும் தவிர யாரும் இல்லை...நாங்கள் இருவருமே ஆழ்ந்த நித்திரையில் இருந்தோம்...நடுநிசியைத் தாண்டும் வேளையில்.....உறங்கிக் கொண்டிருந்த என்னுள் ஏதோ ஒரு பெரிய மாற்றம்...கனவு போல நிகழ்வதை என்னால் உணர முடிந்தது...அது கனவு இல்லை என்று என் ஆழ்மனம் அழுத்தமாக அப்போதே சொல்லி இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆம்..அது சாதாரண கனவு அல்ல....ஆன்மாவுக்குக் கிடைத்த ஒரு அதிர்ச்சி வைத்தியம்.

கனவு போல் தான் ஆனால் கனவு இல்லை...அப்படி ஒரு விதமான நிகழ்வுகள் .எனக்குள் அறிவின் கட்டளைகளாக பிறக்கின்றது...அனைத்தும் ஆங்கிலத்தில்.....ஏதோ ஒரு ரோபோ பேசுவது போல....electronic voice.....ஒரு அமைதியான கண்ணாடி அறைக்குள் மின்சார அலைகளோடு பேசினால் எப்படி இருக்குமோ...அதே போன்ற ஒலியலைகள்.....எதிரொலிகளாக.....
ஏதோ ஒரு குரல் கட்டளையிடும்....ஒரு பெயரைச் சொல்லி ..."close" என்று..சொல்லி நிறுத்தும்....உடனே...
அதைத் தொடர்ந்து.....ஒரு கதவை அறைந்து சார்த்தியது போன்ற சப்தம் வரும்..."டப்"
மறுபடி....இன்னொரு கட்டளை....அதைக் கேட்டு இன்னொரு "டப்" இப்படியே.....சில கதவுகள் மூடியபடியே...
இந்த நிகழ்வுக்குப் பிறகு....

திடீரென ஒரு மிகப் பெரிய வெளிச்சம்...எனது மூடிய கண்களுக்குள்....ஒளியின் விஸ்வரூபம் என்றே... சொல்லலாம்...சூரியனே..என் இரண்டு கண்களுக்குள் இருந்து உதிப்பது போலிருந்தது என்றும் சொல்லலாம்....ஆனால் குளிர்ந்த சூரியன்.....இரு விழிகளுக்குள்ளும் ஒளி வெள்ளத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை...வெறும் கருப்பும் வெள்ளையும்.....மட்டுமா....வண்
ணம் என்பதே இல்லாத நிலை..எனக்குள் உள்ள எதோ ஒன்று என்னிலிருந்து எழுந்து வெளியேறி என்னையே பார்க்கிறது.....அந்த அறையின் நாலாப்புறமும்...பறந்து பறந்து பறந்து...இதெல்லாம் வெறும் ஒரு சிறு மணித் துளியில் நடந்து முடிகிறது.

அதன் பின்பு ஒரு இருட்டு குகைக்குள் அசுர வேகத்தில் நான் கடக்கிறேன் தூரத்தை..கடக்கிறேன் என்றால் நடப்பது அல்லது பறப்பது இல்லை...அது ஒரு வேகம்...அசுர வேகம்......எங்கே...எதற்காக... நான் இவ்வளவு வேகமாகப் ஒரு வித பயத்தோடு....ஒரு ஏவுகணையின் வேகத்திற்கு இணையாக நான்.!

இங்கு நான் எனும் எதுவும் நினைவில் இல்லை...என்றாலும் அந்த நான் யார்...? ஒரு சிறு புள்ளி...முற்றிலும் குளிர்ந்த ஒரு இருட்டு குகையைக் கடந்து அந்த ஒளியின் மறுபக்கத்தைத் தேடி புறப்பட்டது போல்....எவ்வளவு தூரம் என்றே அறியாமல் கடக்கிறேன்....கடக்கும் நேரம் ஆனந்தமயமாக......சுகானுபவமாக.....எல்லையில்லாத அமைதியோடு ஆனால் வேகத்தோடு தான் கடக்கிறேன்....வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோன்ற வேகத்தில் ஆனால் இலக்கில்லாமல் விழும் இடமும் தெரியாமல்...ஒரு வித குறிக்கோளற்ற வேகத்தில்...!

திடீரென ஒரு அதிர்வு...எதிலோ பட்டுத் தரையை அடையும் ரப்பர் பந்தைப் போல விழும் உணர்வு...என்னுள் ஒரு நடுக்கம். ஏ.சி அறையில் கூட எனக்கு வியர்த்து வியர்த்து கொட்டியபடியே நடுங்கியபடி......மனம் என்று ஏதோ ஒன்று பயம் என்ற ஒரு உணர்வை மட்டும் எனக்குள் புகுத்த... நான்...விழிக்கிறேன்.....பயம்...என்னைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போதும் நான் யார் என்ற உணர்வு எனக்கு வந்த பாடில்லை ...திடீரென விழித்த எனக்கு பயத்தில் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல்....புரியாத ஒரு அலறல்....என்னிடமிருந்து வெளிப்பட...!

என் அம்மா...என்னாச்சு...என்னாச்சு...என்று என்னை உலுக்க...என்னால் பேச முடியவில்லை...ஒரு வார்த்தை....அம்மா என்ற சொல் கூட என் நினைவில் இல்லை.....இந்த உலகம்...அம்மா..கணவர்...நான் உயிராய் நினைத்த என் குழந்தை...என் வீடு..எனது என்று நான் நினைத்து வாழ்ந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை...எல்லாம் ப்ரஹ்மம்...பிரபஞ்சத்தை சுற்றி வந்த உணர்வு...அசதி...அலுப்பு....உடல் முழுதும் ஒரு இனம் புரியாத வலி.....இரவா...பகலா...என்ற உணர்வு இல்லாமை....தேதி....மணி என்ற ஒன்றை மறந்தே போயிருந்தேன் என்றே சொல்லலாம்.

நேரம்...காலம்...இரவு..பகல்....கிழமை...இன்னும் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டிருப்போமோ....அது ஏதும் ஒன்றுமே இல்லாமல் என்னை விட்டு எங்கேயோ போய் விட்டதை உணர்ந்தேன்....அதே வேகத்தோடு ..அருகில் இருந்த அம்மாவிடம்...ஒரு நோட்டு தா...பேனா தா...என்று சைகையால்...அவசர அவசரமாக கேட்க....கையில் எதையோ எடுத்து நீட்டுகிறாள்...என்னாச்சுடி..நோக்கு...அட..பகவானே...என்னமோ ஆயிடுத்து...இவள் இப்படி இருக்க மாட்டாளே...என்று இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்த என் அம்மா....பயத்துடன் தள்ளி நின்று நான் என்ன செய்யப் போகிறேனோ என்று கலக்கத்துடன் பார்க்கிறாள்.

நோட்டையும்... பேனாவையும் திறந்து....என்ன எழுதுவதென்று தெரியாத...நான்...ஏதேதோ கிறுக்கி வைக்கிறேன்....ஒளியின் படம்...இருட்டு குகை.....ஒரு புள்ளி....close...close...close.....close...open....இது போன்ற கட்டளைகள் அந்த நேரத்தில் என் காதில் ஒலித்ததால்...அதை எல்லாம் எழுதுகிறேன்...பின்பு இரண்டு பாட்டில் குளிர்ந்த நீரை ஒரே மடக்கில் குடித்து விட்டு....அமைதியாகிறேன்...உள்ளுக்குள் பயம்...பிறகு தூக்கமே வரவில்லை..
என் அம்மா தூங்கு...தூங்கு என்று சொல்லிக் கொண்டே..தூங்கிப் போனாள். நான் மட்டும் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தவளாக...நமக்கு என்ன நடந்தது? என்று பின்நோக்கி யோசித்து...எனக்குள் நடந்த இந்த வித்தியாசமாக அனுபவத்தை எழுதியபடியே......இது கனவல்ல...நிஜம்...நம்மையும் மீறி ஒரு சக்தி பிரபஞ்சத்தில் இருக்கிறது..என்ற ஏதோ ஒரு உண்மையை கண்டு பிடித்தவள் போல்....அப்போ இந்த உலகம் என்ன...யார் இவர்கள்..
என்றெல்லாம் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தேன்...விடை தெரியாத கேள்விகள்....அதன் பிறகு வருடக் கணக்கில் உறக்கம் வராது...விழித்திருப்பேன்...எனக்குள் உறங்கிக் கிடந்த ஆழ்மனது விழித்துக் கொண்டு என்னை உறங்கவே விடாது...தூக்கம்..கனவு... இதெல்லாம் எப்படி இருக்கும் என்ற உணர்வே மறந்து போனது.

இதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல...எனக்குள் ஏதோ ஒரு பெரிய மாற்றம்.....உடலளவில் தான் நான்..உருவத்தில் அதே பெயரோடு எனது உறவினர்களுக்கு...உள்ளத்தளவில் மிக நல்ல மாற்றம். நானே அறியாத ஒரு மாற்றம்..ஆனால் என்னால் உணர முடிந்தது....கொஞ்சம் கொஞ்சமாக..என் பழைய நான் என்னிடம் இப்போது இல்லை...நானே...இப்போது நானாக இல்லை....என்ற உண்மை மனதுக்குப் புரிய ஆரம்பித்தது.

அதன் சாட்சியாக....என் உணர்வுகள் மாறிப் போனதன் ஒரே சாட்சியாக....சில விஷயங்களை சொல்கிறேன்...
அதன் முன்பு எனக்குள் இருந்த அத்தனை தேடல்களும்...எங்கேயோ போனது...எனக்கு எதுவுமே வேண்டாததாகிப் போனது..நான் என்ன படித்தேன்....என்ன செய்கிறேன்.....வேலை..பணம்...என்ற ஒரு விஷயம் இது போன்ற அனைத்தும் இந்த உணர்வு பூர்வமான அனுபவத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று ஆனது. இந்த உலகமே வீணான ஒன்று என்று தோன்றியது...அடுத்தவருக்கு முக்கியமான ஒன்று எனக்கு வெறும் குப்பையாகத் தோன்றியது.கோபம், அழுகை, இது வேண்டும் அது வேண்டும்..என்ற அத்தனை எண்ணமும் என்னை விட்டு விலகிப் போயிருந்தது.

உணவு...தண்ணீர்...நேரம்..காலம்...கிழமை...குறைந்த பட்சம் .உடுத்தும் உடையில் இருந்த ஒரு ஈர்ப்பு...
எந்த மனிதர்கள் மேலோ உறவினர் மேலோ ஒரு பாசம்..பற்று பந்தம் என்று சகலமும் அற்றுப் போனது. இதை மெல்ல மெல்ல நான் உணர ஆரம்பித்தேன். என்னுள் இருந்த பயம்...கூட ஓடியே போய் விட்டது...என் அறிவும் அகமும் புத்தம் புதிய பலகை போல...நான் படித்த...எதுவுமே எனக்குள் நினைவில் நில்லாது போக...எனக்கு எதுவுமே வேண்டாததாகிப் போனது...இது எனக்குள் மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது....இப்படிக் கூட இருக்க முடியுமா? இதை வீட்டில் சொன்னால் யாருக்கும் புரியவில்லை...நான்..எங்கு சொல்வேன்...என்ன செய்வேன்....? எங்கு போவேன்......நானே தேடலானேன்...என் உலகம் தனியானது.

பிறப்பு..இறப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை...ஆன்மா....அது.... இது என்று தத்துவங்கள் பேச ஆரம்பித்தேன்...
அழகழகான தத்துவங்கள் அமுத சுரபியாக சுரந்து கொண்டே இருக்கும்.....இதன் நடுவில்...நடக்கப் போவது என்னென்ன என்று சில விஷயங்கள்...திடீரென ஒரு சினிமா போல்...பளிச்சிட்டு மின்னும்....அது தெரிந்த அடுத்த நாளில் நான் கண்டது அப்படியே நடக்கும்...வீட்டுக்குள் இருக்கும்..ஒவ்வொரு நிகழ்ச்சியும்...முன் கூட்டியே கண்ணுக்குள் காட்சியாக விரியும்...இவர் இன்று வருவார் என்றால்..அவர் வந்து நிற்பார்...இவரிடம் இருந்து போன் வரும் இப்போது என்று சொல்லி வாய் மூடும் முன்பே போன் வந்து ஆச்சரியப் படுத்தும்...கண்ணை மூடிக் கொண்டு இப்போது இந்த நேரம்..இந்த நிமிடம் இந்த நொடி...என்று திடீர் என்று யாராவது...(என்னை சோதிக்கவே கேட்பார்கள்)
அப்படியே சொல்லி ஆச்சரியப் படுவேன் / படுத்துவேன்.

எல்லாரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள்..அப்போது கதை அல்ல நிஜம் என்று ஒரு நிகழ்ச்சி நடிகை லக்ஷ்மி....தொகுத்து வழங்குவது....அது இரவில் பத்து மணிக்கு மேல் ஒளிபரப்புவார்கள்...ஒரு நாள் அதை பார்த்துவிட்டு முடிந்ததும் தொலைக்காட்சியை அணைத்து விட்டு படுத்ததும்..மூடிய கண்களுக்குள் .தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சி இன்னும் இன்னும் இன்னும் என்று தெரிந்து கொண்டே போனது...இதென்னடா வம்பாப் போச்சு...என்று...எழுந்து உட்கார்ந்தால் தான் புரிந்தது நான் டி.வி..பார்க்கவில்லை...தானே தான் தெரிகிறது என்று....அதை விட ஆச்சரியம்...அடுத்த நாளில் நான் முன்பே என் கண்ணில் கண்ட முகங்கள் வந்ததும்...பயந்து போனேன்....இதற்குப் பெயர் தான்..."ignorance is bliss" ன்னு சொல்வார்களோ....என் நிம்மதி போச்சே..
என்று அங்கலாய்த்தேன்..

ஆன்மா தூய்மையானது....குழந்தை போன்றது....மூளை கண்டிப்பானது.....அந்தக் கண்ணாடி மாளிகையின் ஒரு சின்ன தூசி தும்பு கூட படிய விடாமல் இருக்க எப்போதும் சுறுவென்று இருக்கும்.எந்த ஒரு உணர்வுக்கும் தன்னை அடமானம் வைக்காது..நீதி...நேர்மை...வாய்மை....அது தான் தாரக மந்திரம்.!
ஆனால் மனசு...கள்ளம் நிறைந்தது.....எல்லாவற்றிற்குமே....அசலை விடுத்து...நகல் எடுக்கப் பார்க்கும்....அன்பில் குழையும்...இப்படி எல்லாம் வியாக்கியானம் பேசினால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்....?
இவளுக்கு மனோ வியாதி...இல்லாட்டா மூளை குழம்பிப் போயிடுத்து....!!! அவ்ளோதானே...? அவ்வளவே தான்.

இது ஏதோ மனோ வியாதி என்று அழைத்துப் போன பெரிய பெரிய டாக்டர்களுக்கு என்னால் பீஸ் கிடைத்ததே தவிர எனக்கு பீஸ் கிடைக்கவில்லை. இது தான் என்று யாரும் கண்டுபிடித்து சரி செய்ய இயலவில்லை. மிஞ்சிப் பொனால்...தூக்க மாத்திரைகள்....நரம்பு மாத்திரைகள் வைட்டமின் மாத்திரைகள் கொடுப்பார்கள்...அதற்கெல்லாம் மசியவில்லை...என் ஆழ்மனம்.

மன அழுத்தம் என்றார்கள்.....சி.டி ஸ்கான் எடுக்க சொன்னார்கள்.....MRI....எடுங்கள் என்றார்கள்....எத்தை தின்னால்..
பித்தம் தெளியும் என்று சொன்ன எதுவும் எனக்கு ஒன்றும் இல்லை என்ற முடிவைத் தான் கொண்டு வந்து தந்தது...கோவில் கோவிலாக சென்று வந்தும்....பிரயோஜனம் இல்லை...நான் எனக்குள் மிகத் தெளிவாக இருந்தேன்.. எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு....அதை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..ஒரு தூய ஆன்மா தான் இப்போது வாழ்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு.....நிறைய விஷயங்கள் இதை நோக்கி சிந்தித்துத் கேட்டு, படித்து....புரிந்து கொண்டு தெரிந்து கொண்டேன். எதைப் பற்றிய பயமும்....என்னை ஒன்றும் செய்யாது என்ற ஒரு தைரியம்...என்னுள். உலகத்தின்...மானுடத்தின்....உணர்வுகளின் மறுபக்கத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாக என்னை நான் ஏற்றுக் கொண்டேன்....ஆனால் குடும்பத்துக்குள் தான் குழம்பிப் போனார்கள்.

மெல்ல மெல்ல மெல்ல...காலம் அனைத்துக்கும் மருந்தாகும் என்பது போல....நானும் அந்தக் காலமெனும் அரும்பெரும் மருந்தால்.....அதே ஆனந்தமாக ....இருக்கிறேன். ஆன்மாவுக்குப் பிடித்த மொழி வெறும் மௌனம்...தான்...இது ஒன்று தான் நான் என்னுள் கற்றுக் கொண்ட ஒரு பாடமாக இருந்தது...இப்போது மெல்ல மெல்ல என்னுள் தேடல் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது....என்பது தான் இன்றைய நிஜம்.

ஒரு சராசரி பெண்மணியாக இந்த மாயா உலகத்தின் ஆசை...இச்சை....இதெல்லாம் கடந்து...ஆசை...உண்மை...பொய்....சந்தேகம்... பொறாமை....போட்டி...இது போன்ற அனைத்தும் தாண்டி.....உடலைப் பற்றிய சிந்தனைகள் தவிர்த்து...உள்ளத்தைப் பற்றிய சிந்தனைக் கதவுகள் திறக்க...பெரிய பெரிய மகான்கள்....சித்தர்கள்..யோகிகள்...இவர்களின் அருளுரைகள் கேட்டும், கற்றும், படித்துக் கொண்டும்....உள்ளம் தாமரை இலைத் தண்ணீர் போல் இருந்தாலும்...இந்த உலகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால்...உலக இன்பங்கள் உலக மாயையோடு தொடர்பு கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டும் என்றும்....எனது சிந்தனையை மாற்றிக் கொண்டு....இன்றோடு எனக்கு ஆத்ம வெளிச்சம் கிடைத்து...அனுபவித்து பதினோரு வருடஙகள் கடந்து வந்து விட்டேன். "இணையம் " உலகத்தின் மகாப் பிரசாதம்..!

"அருட்பெருஞ்சோதி.....அருட்பெருஞ்சோதி....தனிப் பெருங்கருணை...அருட்பெருஞ்சோதி..."
வடலூர் வள்ளலார்..சொன்னதன் அர்த்தம்....அது தானோ....."நான் யார்" என்று கேட்ட ரமணர் இதைத் தானோ...?
அந்த நிலைக்கு உந்தப் பட்ட ஒருவரின் "ஆஞ்ஞா" சக்கரம் திறந்ததும்.....தான்...மனிதனின் சுய அஞ்ஞானம் மறைந்து மெய் ஞானம் எட்டிப் பார்க்குமோ.? எது எப்படியோ......இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் ஒரு நல்லுணர்வு கிடைக்கிறது...

இதைப் போன்ற அனுபவங்கள் பெற்ற...எவரேனும் இங்கிருந்தால் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்ளலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக