வெள்ளி, 11 மே, 2012

அம்மாப் பொண்ணு நான்..!



அம்மா.....உனக்கான
திருநாளாம்...இன்று...
நினைத்துப் பார்க்கிறேன் 

நான்
 உன்னை இன்றும்...!

பத்துத் திங்கள் சுமந்த

பாரம் பத்தாதென்று...
அன்பெனும் பாடத்தை
அரிச்சுவடியாய் பாலோடு புகட்டி..!

பதனிட்டு வளர்த்து....
பண்பை....புகட்டி..
..
அன்றிலிருந்து இன்றுவரை 
பாசத்தோடு தாங்கி...!

உன் முகவரி தேய்ந்தாலும்...
தளராது..எங்களுக்கு..
முகவரிகள் பெற்றுத் தந்தாய்...!

தாயுள்ளம் தயாளம்

என்ற இலக்கணத்தில்
வலம் வருபவள் நீயம்மா..!
முப்பது வயதில்...
ஐவருக்குத் தாயுமானாய் ....

அத்தோடு முத்தாய்ப்பாய்

"கைம்பெண்" ஆனாய்...
அன்றிலிருந்து எங்களுக்கு
தந்தையுமானாய் ......நீ..!

உன் தலையெழுத்து
தவறென்று உன் சுற்றும்
தூற்றுகையில்...துணிந்து
"தடம்" மாறாமல்
எங்கள் தலைகளை
நிமிர்த்தியவள் நீ..!

சந்தித்த துயரங்கள்

மனதில் கரைய....
எங்கள் முகம் பார்த்து
வாழும் மங்கலத்  தாய் நீ...

நீ பெற்ற மக்கள் இன்று
ஆலம்விழுதுபோல்
ஆங்காங்கே ....வேர் ஊன்றி.....
உன்னை அணைத்துத் தாங்க...
நிமிர்ந்த உன் முகத்தில் தான்
எத்தனை வெற்றிவேர்கள்...!

நீ அடையா... கல்வி தகுதி

உவந்த தாய் நீ.....
உவந்தாய் நீ..!

அனைத்தையும்  எமக்காய் ஈந்து.........
ஈவதில் இன்பம் பெற்றவளே..
எழுபது வயது தாண்டியும்
எமகிணையாய்.....வளைய வரும்
நின் அழகு கண்டு நாமே வியந்ததுண்டு..

எங்களுக்கில்லையம்மா...
உன் போல் பொறுமை....
நீ இறைவன் எமக்களித்த  வரம்...
வானமே உன் மனமாய்....

உன் தியாகத்தின் எல்லைக்கு
விளிம்பு ஏது ?
நீ தேக்கி வைத்த
ஆசை ஏதேனும்  சொல்..
நிறைவேற்றுவோம்....நாம்..!

விட்ட குறை...தொட்ட குறை
உலகம் இது....இனியொரு பிறப்பில்
மறுபடி இணைய நேர்ந்தால்...
நீயே எந்தன் சேய் ஆக வேண்டும்....
நான் உனையே சீராட்ட வேண்டும்.....!

அம்மா....இது உனக்கு....
வெறும் கவிதை அல்ல....
நீ கொடுத்த உணர்வுகளுக்கு
நான்
 தரும் உணவு...!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக